(அன்னதோ ரவுணர்)
அன்னதோ ரவுணர் கோமான் அன்றுதொட் டசல மாகித்
துன்னெறி அவுணர் யாருந் துவன்றிய அரண மாகி
நென்னலின் முதனாள் காறு நின்றனன் அனையான் தன்னை
என்னையா ளுடைய நீயன் றியாவரே அடுதற் பாலார். ......
1(பைந்தமிழ் முனி)
பைந்தமிழ் முனிவன் வான்றோய் பனிவரை யதனை நீங்கிக்
கந்தரஞ் செறிபொற் கோட்டுக் கடவுளர் வரைச்சா ரெய்தி
அந்தம தடைந்தோர்க் கங்கண் அருளினால் தனது மூல
மந்திரம் உணர்த்தும் முக்கண் வானவன் காசி புக்கான். ......
2(கங்கைசென் றொழு)
கங்கைசென் றொழுகுங் காசிக் கறைமிடற் றகில நாதன்
பங்கய அடிகள் தாழ்ந்து பரவல்செய் தாண்டு நீங்கித்
துங்கதை கொண்ட விந்தத் தொல்வரைக் கொருசா ரேகி
அங்கதன் நிலைமை நோக்கி அறிவன்ஒன் றியம்ப லுற்றான். ......
3(சேயுயர் நிவப்பி)
சேயுயர் நிவப்பிற் றாகிச் சேண்புகும் விந்த மென்னும்
மாயிருங் குவடு கேண்மோ மற்றியாம் பொதிய வெற்பில்
போயிருந் திடவே உன்னிப் போந்தனம் அதனுக் கின்னே
நீயொரு சிறிது செல்லும் நெறியளித் திடுதி யென்றான். ......
4(எறிகதிர் மதியி)
எறிகதிர் மதியி னுக்கும் ஏகருந் திறத்தால் வான
நெறியினை யடைத்துத் தொல்லை நெடியமால் போன்று நின்றேன்
குறியநிற் கஞ்சி யாறு கொடுப்பனோ எனது தோற்றம்
அறிகிலை மீண்டு போகென் றவ்வரை மொழிந்த தன்றே. ......
5(கேட்டலும் அதனை)
கேட்டலும் அதனைச் சீற்றங் கிளர்ந்திட நகைத்து நாதன்
தாட்டுணை யுன்னித் தொன்னாட் சதமகன் வேண்ட ஆழி
மாட்டுறச் செறித்த கையை மலரயன் பதத்தின் காறும்
நீட்டினன் தவமே யன்றி நெடும்பொருள் பிறவு முண்டோ. ......
6(அற்புதம் அமரர்)
அற்புதம் அமரர் கொள்ள ஆற்றவுங் குறியோன் விந்த
வெற்பின தும்பர் தன்னில் மீயுயர் குடங்கை சேர்த்தி
வற்புற வூன்ற வல்லே மற்றது புவிக்கட் டாழ்ந்து
சொற்பிலம் புகுந்து சேடன் தொன்னிலை அடைந்த தன்றே. ......
7(அள்ளலை யடை)
அள்ளலை யடைகின் றோரில் அரம்புகும் அடுக்க லஞ்சி
வள்ளலை யருளிக் கேண்மோ மற்றுனை வழிப டாமல்
எள்ளலை யிழைத்து மேன்மை இழந்தனன் தமியன் குற்றம்
உள்ளலை எழுவ தெஞ்ஞான் றுரையெனக் கூறிற் றன்றே. ......
8(அன்னதோர் பொழு)
அன்னதோர் பொழுது தன்னில் அலைகடல் செறித்த அங்கை
முன்னவன் விந்த வெற்பின் மொழியினை வினவி யான்போய்
இந்நெறி யிடையே மீளின் எழுதியால் நீயு மென்னா
நன்னகை யோடு சொற்றான் நாரதன் சூழ்ச்சிக் கொப்ப. ......
9(வன்புலப் புவிக்குள்)
வன்புலப் புவிக்குள் விந்தம் மறைதலும் அறிவின் நீராற்
புன்புலப் பகையை வென்றோன் கரத்தைமுன் போலச் செய்து
துன்புலப் புற்ற சிந்தைச் சுரர்கள்பூ மாரி தூர்ப்பத்
தென்புலப் பொதிய வெற்பிற் செல்வது சிந்தை செய்தான். ......
10(ஆயிடை விந்தம்)
ஆயிடை விந்தம் பார்புக் கழுந்திட அகல்வா னத்துத்
தேயம்வெள் ளிடைய தாகத் தினகரன் முதலாந் தேவர்
பாய்சுடர் விளக்கம் யாண்டும் பரந்தன சிறையை நீங்கி
ஏயென அளக்கர் நீத்தம் எங்கணுஞ் செறியு மாபோல். ......
11(அதுபொழு தலரி)
அதுபொழு தலரி யாதி அமரர்கள் அகத்தி யன்பாற்
கதுமென அடைந்து போற்றிக் கைதொழு தெந்தை செய்த
உதவியார் புரிவர் நின்னால் உம்பரா றொழுகப் பெற்றோம்
பொதியமேல் இனிநீ நண்ணி இருத்தியெம் பொருட்டா லென்றார். ......
12(என்றலும் விழுமி)
என்றலும் விழுமி தென்னா இசைவுகொண் டமரர் தம்மைச்
சென்றிட வானிற் றூண்டித் தெக்கிணந் தொடர்ந்து செல்லக்
குன்றமர் குடாது தேயங் குறுகும்வில் வலன்வா தாவி
அன்றுயிர் இழப்ப நின்றார் அகத்தியன் வரவு கண்டார். ......
13ஆகத் திருவிருத்தம் - 3018