(பொன்றிகழ் வரை)
பொன்றிகழ் வரையின் நின்றுங் குறுமுனி புவியே ஆறாத்
தென்றிசைக் கேகு மெல்லைத் திறலரிக் கிளவல் வாழ்க்கை
வன்றிறல் மாய மூதூர் வந்தெய்த ஆண்டை வைகும்
அன்றிலம் பேர்பெற் றுள்ள அவுணன்அத் தன்மை கண்டான். ......
1(வானுயர் உலகந்)
வானுயர் உலகந் தன்னை வசுந்தரை யாக்கும் பாரை
ஏனைய ககன மாக்கும் எறிதிரைப் பரவை தன்னை
மேனிமிர் பிறங்க லாக்கும் வெற்பினைப் புணரி யாக்கும்
பானுவை மதிய மாக்கும் மதியினைப் பகலாச் செய்யும். ......
2(அணுவினை மேரு)
அணுவினை மேரு வாக்கும் அன்னதோர் மேரு வெற்பை
நுணுகிய அணுவே யாக்கும் நொய்தெனப் புவனி தன்னைப்
புணரிய தாக்கும் நேமிப் புணரியைப் புவன மாக்கும்
இணருறு நேமித் தீயை எல்லைநீ ராகச் செய்யும். ......
3(கன்னலின் அயுத)
கன்னலின் அயுதத் தொன்றிற் கடவுளர்க் கேனும் நீத்தோர்
என்னவர் தங்கட் கேனும் எனைப்பல மாயஞ் சூழ்ந்து
பன்னெடுங் காலஞ் செல்லப் படுத்திடும் என்னின் அம்மா
அன்னவன் வன்மை யாவும் ஆரறிந் துறைக்கற் பாலார். ......
4(அத்தகு தகுவர்)
அத்தகு தகுவர் கோமான் அடற்கிர வுஞ்சன் என்போன்
மெய்த்தமிழ் முனிவன் செல்லும் வியனெறி விந்த மேபோல்
கொத்துயர் குவடு மல்கிக் குன்றுருக் கொண்டு தன்பால்
உய்த்திடு மாறு போக்கி உறுதலுங் குறியோன் கண்டான். ......
5(காண்டலும் வியந்து)
காண்டலும் வியந்து நன்றிக் கடிவரை நடுவ ணாக
ஈண்டிதோ ரத்தம் உண்டால் இவ்வழி நடத்தும் என்னா
ஆண்டத னிடையே போக அந்நெறி குரோச வெல்லை
மாண்டலும் இலதே யாக மற்றொரு சுரமுற் றன்றே. ......
6(அந்நெறி கண்டு)
அந்நெறி கண்டு தொன்னூல் அறைமுனி ஏக லோடுஞ்
சென்னெறி மேலின் றாகத் திரும்பினன் செல்லுங் காலை
முன்னுள நெறியுங் காணான் முனிவரன் மயங்க ஓர்சார்
பின்னொரு வட்டை கண்டு பேதுற லோடும் போனான். ......
7(ஆறது செல்லு)
ஆறது செல்லுமெல்லை அடலெரி கனைந்து சூழச்
சூறைகள் மயங்க மங்குல் துண்ணென மாரி தூவ
மாறகல் உருமுச் சிந்த வல்லிருட் படலை சுற்ற
வீறகல் மாயை சூழ்ந்தான் எறுழ்வலி அவுணர் கோமான். ......
8(மட்டுறு குறிய)
மட்டுறு குறிய செம்மல் மற்றது நோக்கித் தீயோர்
பட்டிமை யொழுக்கீ தென்னாப் பயின்றிடு போத நீரால்
உட்டெளி பான்மை நாட ஊழ்த்திறந் தெரித லோடுங்
கட்டழல் என்னச் சீறிக் கரதலம் புடைத்து நக்கான். ......
9(நன்றுநன் றவுணன்)
நன்றுநன் றவுணன் கொல்லாம் நமக்கிது புரியு நீரான்
இன்றிவன் வன்மை நீப்பன் யானென அவுண வெய்யோன்
குன்றுரு வதனிற் குற்றிக் குறுமுனி பாணித் தண்டால்
துன்றிரும் பூழை யாக்கிச் சூளிவை புகல லுற்றான். ......
10(மாண்மதி பெறாத)
மாண்மதி பெறாத வெய்யோய் மற்றுநின் தொன்மை நீங்கி
நீண்மலை யாகி ஈண்டே நின்றுதீ யவுணர்க் கெல்லாம்
ஏண்மிகும் இருக்கை யாகி இருந்தவத் தோர்க்கும் ஏனைச்
சேண்மலி கடவு ளோர்க்குந் தீத்தொழில் இழைத்தி பன்னாள். ......
11(மாற்படு நமது)
மாற்படு நமது பாணி வலிகெழு தண்டால் உன்றன்
பாற்படு புழைகள் யாவும் பற்பல மாயைக் கெல்லாம்
ஏற்புடை இருக்கை யாக எம்பிரான் உதவுஞ் செவ்வேள்
வேற்படை தன்னிற் பின்னாள் விளிகுதி விரைவின் என்றான். ......
12(பழிதரும் இனைய)
பழிதரும் இனைய சாபம் பகர்ந்துதன் சிரகந் தன்னில்
உழிதரு புனலை வாங்கி உளங்கொள்மந் திரத்தால் வீசி
அழிதர மாயை நீக்கி ஆண்டொரீஇ மீண்டு தென்பால்
வழியது செவ்வன் நாடி வண்டமிழ் முனிவன் போனான். ......
13ஆகத் திருவிருத்தம் - 3005