(பொன்னார் கழல்கள்)
பொன்னார் கழல்கள் அருச்சித்திடப் போது கொய்யுங்
கைந்நாக மாலை நினைந்தே கராவொன்று கௌவ
என்னா யகனே எனத்தன் கையெடுத் தழைப்ப
அன்னான்அங் கெய்தி விடுவித்த தறிகி லாயோ. ......
1(பூவார் கமலத் தயன்)
பூவார் கமலத் தயன்நல்கிய பூவை தன்மேல்
தூவா மயலாய்க் கிளியாகித் தொடர்ந்து செல்லக்
காவாய் பரனே எனலோடுங் கலங்கல் என்றே
தேவாதி தேவன் அருள்செய்தது தேர்கி லாயோ. ......
2(சத்தார் பிருகு தன)
சத்தார் பிருகு தனதில்லைத் தடிந்த வெல்லை
இத்தா ரணியில் அளவில்பிறப் பெய்து கென்ன
அத்தா அருளென் றரிநோற்றுழி ஐயன் வந்து
பத்தாக என்று நிறுவுற்றது பார்த்தி டாயோ. ......
3(தேவர்க் கெனினும்)
தேவர்க் கெனினும் நிலத்தின்கட் செறிந்து வாழ்வோர்
ஏவர்க் கெனினும் ஒருதுன்புறின் எய்தி நீக்கல்
காவற் குரியார் கடனாம்அக் கடமை தூக்கின்
மேவற் கரிதாந் தனிமுத்தியின் மேல தன்றோ. ......
4(தெள்ளத் தெளிந்த)
தெள்ளத் தெளிந்த மறைக்கள்வனைச் செற்ற மீன்போல்
அள்ளற் கடலை ஒருநீ அகன்கை யடக்கிக்
கள்ளத் தவுணன் நிலைகாட்டிநங் கண்ணில் வைத்த
கொள்ளைக் கருணை உலகெங்கணுங் கொண்ட தெந்தாய். ......
5(விந்தக் கிரிநாரதன்)
விந்தக் கிரிநாரதன் சூழ்ச்சியின் மேரு வெற்போ
டிந்தப் பொழுதத் திகல்கொண் டுலகெங்கும் ஈறாம்
அந்தத் துயருங் கயிலைக்கிணை யாவ லென்றே
சிந்தித் ததுகொல் எழுந்திட்டது சேண தெல்லாம். ......
6(மண்ணுற்ற வெல்)
மண்ணுற்ற வெல்லை அளவிட்டிடு மால்கொ லென்றே
எண்ணுற் றெவரும் வெருக்கொண்டிட ஈண்டை விந்தம்
விண்ணுற்ற அண்டத் துணையாய்மிசைப் போவ தையா
கண் ணுற்ற நோக்கம் விடுத்தேயிது காண்கி லாயோ. ......
7(மல்லற் கிரிவிண்)
மல்லற் கிரிவிண் ணெறிமாற்றலின் மற்றெ மக்குஞ்
செல்லற் கரிதாயது பாருடைத் தேய முற்றும்
எல்லைப் பொழுது மயக்குற்ற இவற்றை நீக்க
ஒல்லைக் குறியோய் வரல்வேண்டுமென் றுன்ன லுற்றார். ......
8வேறு(உன்ன லோடும் உலக)
உன்ன லோடும் உலகம் நனந்தலைப்
பொன்னின் மேருப் புடையொர் பொதும்பரின்
மன்னி நோற்றுறை வண்டமிழ் மாமுனி
தன்னு ளத்தில்அத் தன்மைகண் டானரோ. ......
9(மேக்கு யர்ந்திடும்)
மேக்கு யர்ந்திடும் விந்தத்தின் ஆற்றலை
நீக்கி வான நெறியினைத் தொன்மைபோல்
ஆக்கி அண்டர் குறையும் அகற்றுவான்
ஊக்கி னான்முன் உததியை உண்டுளான். ......
10(துள்ளி கண்ணிடை)
துள்ளி கண்ணிடைத் தூங்குறக் கைதொழ
உள்ளம் என்பொ டுருகவு ரோமமார்
புள்ளி பொங்கப் புகழ்ந்து புரிசடை
வள்ளல் தன்னை மனத்திடை முன்னினான். ......
11(முன்னும் எல்லை)
முன்னும் எல்லையில் மூரிவெள் ளேறெனும்
மின்னு தண்சுடர் வெள்ளிவெற் பின்மிசைப்
பொன்னின் மால்வரை போந்தெனப் புங்கவன்
துன்னு பாரிடர் சூழ்தரத் தோன்றினான். ......
12(ஆதி யுற்றுழி அச்ச)
ஆதி யுற்றுழி அச்சமொ டேயெழீஇ
மூது ரைத்தமிழ் முற்றுணர் மாமுனி
கோதை யுற்றிடக் கொம்பொடு வாங்கிய
பாத வத்திற் பணிந்தனன் பன்முறை. ......
13(சென்னி பாரில்)
சென்னி பாரில் திளைத்திடத் தாழ்ந்துபின்
முன்னர் நின்று முறைபட போற்றலும்
மின்னு லாஞ்சடை விண்ணவன் வெஃகிய
தென்னை மற்ற தியம்புதி யாலென்றான். ......
14(விந்த மால்வரை)
விந்த மால்வரை மேருவை மாறுகொண்
டந்த ரத்தை யடைத்த ததன்வலி
சிந்த என்கட் சிறிதருள் செய்கெனாச்
சந்த நூற்றமிழ்த் தாபதன் கூறினான். ......
15(அக்க ணத்துன)
அக்க ணத்துனக் காற்றல் வழங்கினாம்
மிக்க விந்தத்தை வேரொடும் வீட்டிஅத்
தெக்கி ணஞ்சென்று சீர்ப்பொதி யத்திடைப்
புக்கு வைகெனப் புங்கவன் செப்பினான். ......
16(என்ற லுந்தொழு தேத்தி)
என்ற லுந்தொழு தேத்திநின் பூசனை
நன்று செய்ய நளிதடங் கூவலும்
நின்றி டாப்புனல் நீடவுந் தென்றிசைக்
கொன்றொர் தீர்த்தம் உதவுகென் றோதினான். ......
17(அனைய காலை அருங்)
அனைய காலை அருங்கயி லாயமேல்
இனிது வைகிய ஏழ்நதி தன்னுளும்
புனித மாகிய பூம்புனற் பொன்னியைப்
பனிம திச்சடைப் பண்ணவன் முன்னினான். ......
18(அந்த வேலை அஃது)
அந்த வேலை அஃதுணர்ந் தேவெரீஇச்
சிந்தை பின்னுறச் சென்று திருமுனம்
வந்து காவிரி வந்தனை செய்தலும்
எந்தை நோக்கி இதனை இயம்புவான். ......
19(தீது நீங்கிய தென்றி)
தீது நீங்கிய தென்றிசைக் கேகிய
கோதி லாத குறுமுனி தன்னொடும்
போதல் வேண்டும் பொருபுனற் காவிரி
மாது நீயென மற்றவள் கூறுவாள். ......
20(திண்மை ஐம்பொறி)
திண்மை ஐம்பொறி செற்றுளன் ஆயினும்
அண்ண லேயிவன் ஆண்டகை யாகுமால்
பெண்ணி யானிவன் பின்செலல் நீதியோ
எண்ணின் ஈதும் இயற்கையன் றென்னவே. ......
21(திரிபில் சிந்தையன்)
திரிபில் சிந்தையன் தீதுநன் கிற்படா
ஒருமை கொண்ட உளத்தன்நம் மன்பருள்
பெரியன் ஈங்கிவன் பின்னுறச் செல்கெனா
அருள்பு ரிந்தனன் ஆல மிடற்றினான். ......
22(ஆங்க தற்கிசை)
ஆங்க தற்கிசைந் தந்நதி யின்றியான்
தீங்கி லாத முனியொடு பின்செல்வன்
ஓங்கல் மேய வொருவ இவன்றனை
நீங்கு காலத்தை நீயருள் கென்னவே. ......
23(நன்று நன்றிது)
நன்று நன்றிது நங்கைநின் காரணத்
தென்று நோக்கி இவன்கரங் காட்டுவன்
அன்று நீங்கி அவனியின் பாலதாய்ச்
சென்று வைகெனச் செப்பினன் எந்தையே. ......
24(செப்பு மாற்றஞ்)
செப்பு மாற்றஞ் செவிக்கமு தாதலும்
அப்பெ ரும்புன லாறவன் பின்செல
ஒப்ப லோடும் உயிர்க்குயி ராகியோன்
தப்பின் மாமுனிக் கின்னது சாற்றினான். ......
25(நீடு காவிரி நீத்த)
நீடு காவிரி நீத்தத்தை நீயினிக்
கோடி உன்பெருங் குண்டிகைப் பாலென
நாடி யத்திறஞ் செய்தலும் நன்முனி
மாடு சேர்ந்தனள் மாநதி யென்பவே. ......
26(ஆய காலை அக)
ஆய காலை அகத்திய தென்றிசைத்
தேய மேகெனச் சீர்விடை நல்குறாப்
பாயு மால்விடைப் பாகன் மறைந்தனன்
போயி னான்செறி பூதரி னத்தொடும். ......
27வேறு(அத்தனங் கொரு)
அத்தனங் கொருவ அன்னான் அருளடைந் தங்கண் நீங்கி
மெய்த்தகு மதலை வேண்டி விதர்ப்பர்கோன் பயந்த லோபா
முத்திரை தனைமுன் வேட்டுமு துக்குறைத் திண்மை சான்ற*
1 சித்தனை யளித்த வள்ளல் தென்றிசை நோக்கிச் சென்றான். ......
28ஆகத் திருவிருத்தம் - 2992