(அந்தப் பொழுத)
அந்தப் பொழுதத் தளிகொண் டுடையோர்
சிந்தைக் கெளிதாஞ் சிவன்மெய் யருளான்
முந்துற் றுணர்நா ரதமா முனிவன்
விந்தக் கிரிமுன் னுறமே வினனால். ......
1(மேவிப் பலஆ)
மேவிப் பலஆ சிவிளம் புதலுந்
தேவப் படிவங் கொள்சிலம் புதொழா
ஆவற் புதம்வந் ததெம்மண் ணலென
ஏவப் படுபான் மையிசைத் திடுவான். ......
2(மேருத் தனிவெற்)
மேருத் தனிவெற் புவிதிக் கரியோன்
மூரிச் சிலையா கியமொய்ம் பதனால்
தாரித் துலகீன் றவள்தன் மரபாற்
பேரற் பொடுவந் துபிறக் கையினால். ......
3(குன்றுக் கிறை)
குன்றுக் கிறையாய் உறுகொள் கையினால்
என்றைத் தொடவிண் ணிலெழுந் துறலால்
இன்றிப் புவியா வையும்நித் தன்அடும்
அன்றைப் பகல்கா றும்அளித் திடலால். ......
4(ஓரா யிரமாம்)
ஓரா யிரமாம் முடியுள் ளதனால்
காரார் களன்மே யகவின் கயிலை
சாரா வொருசார் வுறுதன் மையினால்
சூரான் அவனால் தொலைவில் லதனால். ......
5(தாழுங் கதிருந் தகு)
தாழுங் கதிருந் தகுமேல் நெறியில்
வாழுஞ் சசியும் மலிதா ரகையும்
ஏழென் றிடுகோ ளுமியா வர்களுஞ்
சூழும் படிநின் றிடுதொன் மையினால். ......
6(கொன்னே இமை)
கொன்னே இமையோர் குடிகொண் டதனால்
பொன்னேர் கொடுயர்ந் துபொருந் துதலால்
பன்னே மிகள்சூழ் வருபான் மையினால்
தன்னேர் இலையென் றுதருக் கியதே. ......
7(பரந்தும் பர்நிமிர்)
பரந்தும் பர்நிமிர்ந் திடுபைம் பொன்வரை
பெருந்தன் மைமதித் திடுபெற் றியைநீ
தெரிந்தில் லைகொல்அன் னசெயற் கையெலாம்
விரைந்துன் னொடுசெப் பியமே வினனே. ......
8(என்றான் முனி)
என்றான் முனிவோன் இதுகேட் டிடலும்
ஒன்றா கியதே வுருவாய் எதிரும்
வன்றாழ் கிரிமா மறமுற் றுயிரா
நன்றால் இஃதென் றுநகைத் தறையும். ......
9(இல்லா யுளதொல்)
இல்லா யுளதொல் லிறுமாப் பகலப்
பல்லார் இகழப் பகரும் விதியான்
அல்லா ரெனவே நனிநா ணமுறா
வில்லா கிவளைந் ததுமேன் மையதோ. ......
10(பொன்னார் இமவான்)
பொன்னார் இமவான் புரிநோன் பதனால்
அன்னான் இடைவந் தமர்வுற் றனளால்
மன்னா குமவன் மகளா யினளோ
எந்நா ளுமியா ரையுமீன் றருள்வாள். ......
11(பாங்குற் றிடுபா ரினை)
பாங்குற் றிடுபா ரினையாற் றுவனென்
றோங்குற் றனன்எவ் வுலகும் பரியா
ஆங்குற் றனவோ பலஅன் னவையுந்
தாங்குற் றதுகண் ணுதல்சத் தியதே. ......
12(விற்சூழ் கதிரோன்)
விற்சூழ் கதிரோன் முதல்விண் ணவர்கள்
தற்சூழ்ந் தனர்அல் லதுசந் ததமும்
எற்சூழ்ந் திலரோ எழுதீ வுளவாங்
கற்சூழ்ந் திலரோ கடல்சூழ்ந் திலரோ. ......
13(பன்னிற் குவடும்)
பன்னிற் குவடும் பலவுண் டெனவே
உன்னுற் றிடுமோ உயர்கள் ளிகளின்
சென்னித் தொகையைத் தெரிசிக் கின்அயன்
தன்னொத் திலனோ தலைநான் குளவே. ......
14(கடிதா கியசூர்)
கடிதா கியசூர் இதுகல் லெனவே
அடரா மல்விடுத் தனன்அன் றுதனை
நெடிதே யதுவுன் னிலன்நீள் பரிதிப்
படையா னினும்ஆற் றல்படைத் துளனோ. ......
15(தண்ணுற் றிடுபொன்)
தண்ணுற் றிடுபொன் மைதயங் குருவம்
நண்ணுற் றனமென் றுளநா டினனோ
எண்ணுற் றவன்நல் லுணர்வெய் திலனான்
மண்ணிற் புனைபா வைவனப் பதுவே. ......
16(தன்கண் ணுறுவா)
தன்கண் ணுறுவா னவர்தாம் பலரும்
என்கண் ணமரா மல்இகழ்ந் தனரோ
நன்கண் ணுதல்நா யகனார் கயிலை
யின்கண் அருகுற் றிலதெக் கிரியே. ......
17(திருவைத் தவர்கண்)
திருவைத் தவர்கண் டுயில்செங் கண்அரா
மருவித் தனைமுந் துமறைத் திடுநாள்
விரைவிற் படரூ தைவெகுண் டுபறித்
தொருமுத் தலைகொண் டதுணர்ந் திலனோ. ......
18(கிளர்ப்புற் றிடுசி)
கிளர்ப்புற் றிடுசிம் புளொர்கே சரிமுன்
அளப்பற் றிடுதன் னுருவண் டமெலாம்
வளர்ப்புற் றிடுஞான் றொர்மணிப் பரல்போல்
குளப்புற் றனன்ஈ துகுறித் திலனோ. ......
19(வரபத் திரைகேள்)
வரபத் திரைகேள் வன்மறம் புரியுஞ்
சரபத் துருவுற் றுழிதாழ் சிறையின்
விரவிப் படரூ தையின்மின் மினிபோல்
திரிகுற் றனன்அன் னதுதேற் றிலனோ. ......
20(அறியுற் றிடுபா)
அறியுற் றிடுபா ரதமா னவெலாங்
குறியுற் றிடுதோல் முகர்குஞ் சரன்மேல்
எறியுற் றமருப் பினிலே டெனலாய்ப்
பொறியுற் றிடுமென் பதுபொய்த் திடுமோ. ......
21(தானோர் வரையல்)
தானோர் வரையல் லதுதா ரணியுண்
கோனோ அலன்அல் லதுகோ கனத
வானோன் அலன்வா சவன்அல் லன்அவன்
ஏனோ தனைமே லெனவெண் ணியதே. ......
22(என்னா வடவெற்)
என்னா வடவெற் பையிழித் துரையா
அந்நா கம்வியக் கும்அகந் தையினை
நன்னா ரதநீக் குவன்நா டுகெனா
முன்னா வுருநீத் ததுமொய் வரையே. ......
23வேறு(எண்டரு முகுந்தர்)
எண்டரு முகுந்தர் கோடி எல்லையின் மாயை யாக்கை
கொண்டனர் திரண்டு நீண்டு குலாய்நிமிர் கொள்கைத் தென்ன
விண்டொடர் விந்த மாங்கோர் விஞ்சையால் அகன்று சேண்போய்ப்
புண்டரி கத்தன் மேய புரத்துணை நிமிர்ந்த தன்றே. ......
24(உருக்கிளர் விந்த)
உருக்கிளர் விந்த மென்னும் உருகெழு பிறங்கல் மேல்போய்ப்
பரக்கம தாகி அம்பொற் பனிவரை காறும் ஆன்று
நெருக்கிய தனைய பான்மை நிலமுழு தளந்த மேலோன்
திருக்கிளர் பொன்னந் தூசு புனைந்தெனத் திகழ்ந்த தம்மா. ......
25(விந்தமிந் நெறியால்)
விந்தமிந் நெறியால் ஆன்று மேக்குறக் கிளர்ந்து போகி
அந்தர நெறியை மாற்ற அலரிவெண் டிங்கள் சேயோன்
புந்திபொன் புகரே காரி புயங்கநாள் பிறரும் நோக்கிச்
சிந்தையில் துணுக்க மெய்தி இனையன செப்ப லுற்றார். ......
26(தானவர் செயலோ)
தானவர் செயலோ என்பார் தருமமில் அரக்க வெய்யோ
ரானவர் செயலோ என்பார் அல்லவேல் அயன்மா லென்னும்
வானவர் செயலோ என்பார் மாயமீ தாகும் என்பார்
மேனிமிர் பிறங்க லின்றி வெள்ளிடை இலைகொல் என்பார். ......
27(என்னிது வென்று)
என்னிது வென்று போதத் தெம்பிரான் அருளால் நாட
அன்னது தெரித லோடும் ஆமிது விந்த மேருத்
தன்னுடன் இகலொன் றுண்டாய்த் தராதல வரைப்பில் வானில்
சென்னெறி விலக்கிற் றென்று சிந்தனை செய்து தேர்வார். ......
28(செம்பொன்மால் வரை)
செம்பொன்மால் வரையின் பாங்கிற் சிவனடி யுன்னி நோற்றே
அம்புரா சியைமுன் னுண்டோன் அமர்ந்தனன் அவனீண் டுற்றால்
உம்பர்போய் நின்ற விந்தம் ஒடுங்கும்என் றியாரும் ஓர்ந்து
கும்பமா முனியை யுன்னி இனையன கூற லுற்றார். ......
29ஆகத் திருவிருத்தம் - 2964