(இப்படி அவுணர்கள்)
இப்படி அவுணர்கள் இனையர் ஏனையோர்
செப்பரு முனிவரைத் தேவர் தங்களை
ஒப்பறு நரர்தமை ஒறுப்ப மாயைதன்
வைப்புறு காதலன் அரசின் மன்னினான். ......
1(ஆயிரத் தெட்டெனும் அண்டம்)
ஆயிரத் தெட்டெனும் அண்டம் யாவையுஞ்
சேயுயர் இந்திர ஞாலத் தேர்மிசை
ஏயெனும் அளவையில் ஏகி வைகலும்
நாயக முறையினை நடாத்தி நண்ணினான். ......
2(ஒருபகற் பாதல)
ஒருபகற் பாதலத் தூடு வைகிடும்
ஒருபகல் மாதிரம் உலவிச் சேர்தரும்
ஒருபகல் விண்பதந் தோறும் உற்றிடும்
ஒருபகல் அயன்பதத் துன்னி மன்னுமே. ......
3(தண்ணறுந் துளவி)
தண்ணறுந் துளவினான் தனது தொல்பதம்
நண்ணிடும் ஒருபகல் நாளு மிவ்வகை
எண்ணரும் உலகுதோ றேகி மாலையில்
துண்ணென மீள்வனால் சூர பன்மனே. ......
4(அவ்வகை யால்அர)
அவ்வகை யால்அர சாற்றும் எல்லையில்
எவ்வமில் சூர்முதல் இந்தி ரன்னெனுந்
தெவ்வினை வன்சிறை செய்து தேவியை
வவ்விய வுன்னினன் வருவ தோர்கிலான். ......
5(உன்னிய தீயவன்)
உன்னிய தீயவன் ஒருதன் தானையின்
மன்னனை விளித்துநீ வாச வன்றனை
இன்னதோர் பொழுதினில் எய்திப் பற்றியென்
முன்னுற விடுகென முன்னம் ஏவியே. ......
6(நீடிய தன்பெரு)
நீடிய தன்பெரு நிலயங் காப்பவர்
கோடுறு நிசிசரர் குலத்துள் தோன்றினார்
கேடகம் வாள்அயில் கெழுவு கையினார்
பாடவ மடந்தையர் பவங்கள் போன்றுளார். ......
7(ஒன்பது கோடியர்)
ஒன்பது கோடியர் தம்மை ஒல்லையில்
அன்புடன் விளித்துநீர் அமரர் தம்மிறை
இன்புறு தேவியைப் பற்றி யீமென
வன்பொடு போக்கினன் மன்னர் மன்னனே. ......
8(போக்கலும் அவரெ)
போக்கலும் அவரெலாம் பொன்னின் நாட்டின்மேல்
ஊக்கம தாகியே உருத்துச் சேறலும்
நோக்கிய தூதுவர் நொய்திற் போகியே
மாக்கிளர் இந்திரன் மருங்கு நண்ணினார். ......
9(வந்தனர் அவுணரும்)
வந்தனர் அவுணரும் வயங்கொள் மாதரும்
அந்தமில் படையொடும் அடல்செய் நீரர்போல்
சிந்தனை யாவதோ தெரிந்தி லோமென
இந்திரன் வினவுற இசைத்து நிற்கவே. ......
10(பொம்மென அவர்)
பொம்மென அவர்தமைப் போக்கித் தீயினும்
வெம்மைகொள் நெஞ்சினார் வினைய முன்னியே
அம்மனை மனைவியோ டகன்று மாயையான்
இம்மென இப்புவி தன்னில் ஏகினான். ......
11(ஏகிய வெல்லையின்)
ஏகிய வெல்லையின் இகல்வெஞ் சூர்விடப்
போகிய மாதரும் பொருவில் வீரரும்
நாகர்தம் மிறையமர் நகரை நண்ணினார்
ஆகர முதலிய இடந்தொ றாய்குவார். ......
12(வினைவயிற் சென்ற)
வினைவயிற் சென்றிடும் வீரர் யாவருந்
துனைமகத் திறைவனைத் துருவிக் காண்கிலர்
மனைவியைக் காண்கிலர் மாதர் யாவரும்
நினைவயர்த் துள்ளுறு கவலை நீடினார். ......
13(நாயகன் இவ்விடை)
நாயகன் இவ்விடை நம்மைக் கூவியே
ஏயின செயலினை ஈறு செய்கிலம்
போயினன் சசியொடும் புலவர் கோனெனா
ஆயவன் நகரெலாம் ஆய்வுற் றாரரோ. ......
14(சுற்றினர் நகரெலா)
சுற்றினர் நகரெலாந் துருவித் தேவரைப்
பற்றினர் விலங்கலின் பகைவற் காட்டென
எற்றினர் புலோமசை யாண்டை யாளெனக்
குற்றினர் வாய்தொறுங் குருதி பாயவே. ......
15(விண்ணவர் யாவரும்)
விண்ணவர் யாவரும் வேந்துந் தேவியும்
நண்ணிய துணர்கிலம் நாங்கள் எங்களைத்
துண்ணென வருத்தலிர் துயர்கின் றோமெனாத்
தண்ணளி வருநெறி தளர்ந்து சாற்றவே. ......
16(விட்டனர் தேவரை)
விட்டனர் தேவரை விண்ணை நீங்கினர்
முட்டினர் மகேந்திர முதிய மாநகர்
கிட்டினர் வேந்தனைக் கிளர்ந்து வானிடைப்
பட்டது புகன்றனர் பழிகொள் நெஞ்சினார். ......
17(போயினர் இருவரும்)
போயினர் இருவரும் புறத்த ராயென
ஆயவர் மொழியவே அவுணர் மன்னவன்
தீயென வெகுண்டனன் தேடொ ணாததோர்
தூய்மணி இழந்திடும் அரவின் துன்புளான். ......
18(ஒற்றரிற் பலர்தமை)
ஒற்றரிற் பலர்தமை யொல்லை கூவியே
பொற்றொடி அணங்கொடு பொன்னின் நாட்டவர்
கொற்றவன் இருந்துழிக் குறுகி நாடியே
சொற்றிடு வீரெனச் சூரன் தூண்டினான். ......
19(தோடவிழ் தெரிய)
தோடவிழ் தெரியலான் தூண்ட ஒற்றர்கள்
ஓடினர் வீற்றுவீற் றுலக மெங்கணும்
தேடினர் காண்கிலர் திரிகுற் றார்இனி
நீடிய பொன்னகர் நிகழ்ச்சி கூறுகேன். ......
20வேறு(செல்லெனும் ஊர்தி)
செல்லெனும் ஊர்தி அண்ணல் தேவியுந் தானும் நீங்கச்
சொல்லருங் ககனம் பூத்த சோமனும் உடுவும் போன
எல்லியம் பொழுது போன்றே யாதுமோர் சிறப்பும் இன்றாய்ப்
புல்லென லாய தன்றே பொருவில்பொன் னகர மெல்லாம். ......
21(அழிந்தன வளங்க)
அழிந்தன வளங்க ளெல்லாம் ஆகுல மயங்கிற் றின்பம்
ஒழிந்தது வானோர் உள்ளம் ஒடுங்கிய துலக மெங்கும்
எழுந்தது புலம்ப லோதை யாவர்தங் கண்ணுந் தெண்ணீர்
பொழிந்தது சுவர்க்கம் ஆவி போனவர் போன்ற தன்றே. ......
22(இன்னனம் நிகழும்)
இன்னனம் நிகழும் முன்னர் இந்திரன் இளவ லாகி
மன்னிய உபேந்தி ரன்றான் வானவர் உலகை நீங்கி
முன்னைவை குண்டம் புக்கான் முனிவரர் கலிக்கா வஞ்சிக்
கன்னிகை நோற்று மேவுங் காஞ்சியை யடைந்த வாபோல். ......
23(சேண்பதந் தன்னை)
சேண்பதந் தன்னை நீங்குஞ் சிறியதோர் தந்தை தன்னைக்
காண்பது கருதிப் போந்து கடவுளர்க் கிறைவன் மைந்தன்
தூண்புரை கின்ற செம்பொற் றோளுடைச் சயந்தன் என்போன்
மாண்பொடு சிறிது வைகல் வைகுண்டத் திருந்தான் அன்றே. ......
24(இருந்திடு சயந்தன்)
இருந்திடு சயந்தன் என்போன் இந்திரன் இறைவி யோடுங்
கரந்துடன் போந்த வாறுங் காமரு துறக்கந் தன்னில்
விரைந்துவந் தவுணர் தேடி மீண்டிட விண்ணு ளோர்கள்
அரந்தையோ டுற்ற வாறும் அங்ஙனந் தேர்ந்தான் அம்மா. ......
25(தந்தைதன் மெலிவு)
தந்தைதன் மெலிவு காணில் தங்குடித் தலைமை யெல்லாம்
மைந்தர்கள் பரித்துக் கோடல் வழக்கதாம் அறனும் அஃதே
எந்தையு மில்லை யான்போய் என்னகர் காப்ப னென்னாப்
புந்தியி லுன்னி மைந்தன் பொன்னகர் தன்னில் வந்தான். ......
26(பொன்னகர் புக்க)
பொன்னகர் புக்க மைந்தன் புலம்புறு சுரரைக் கண்டு
தன்னுயிர் போலுந் தந்தை தாய்தனைக் காணா னாகி
இன்னலங் கடலின் மூழ்கி ஏக்கமோ டிரக்க மிக்குப்
பின்னொரு செயலு மின்றிப் பித்தரே போல வுற்றான். ......
27(உற்றிடு மெல்லை தன்னில் உம்)
உற்றிடு மெல்லை தன்னில் உம்பர்கோன் மதலை யுள்ளந்
தெற்றெனத் தெளிப்ப வுன்னி நாரதன் என்னுஞ் சீர்சால்
நற்றவ முனிவன் செல்ல நடுக்கமோ டெழுந்து தாழ்ந்து
மற்றொரு தவிசு நல்கி இருத்தியே மருங்கு நின்றான். ......
28(நின்றிடு சயந்தன்)
நின்றிடு சயந்தன் சொல்வான் நித்தலும் வருத்தஞ் செய்யும்
வன்றிறற் சூரற் கஞ்சி மற்றெனைப் பயந்த மேலோர்
சென்றனர் சென்ற வெல்லை தெரிந்திலேன் எமக்குத் தீமை
என்றினி யகலுங் கொல்லோ எம்பிரான் இயம்பு கென்றான். ......
29(தருக்கினை இழந்து)
தருக்கினை இழந்து நின்ற சயந்தன்இத் தன்மை கூறப்
பொருக்கென முனிவன் ஓர்ந்து பொங்குபே ரருளால் நோக்கித்
திருக்கிளர் கின்ற தாங்கோர் செழுமணித் தவிசின் மீதில்
இருக்கென இருத்திப் பின்னர் இன்னன இசைக்க லுற்றான். ......
30(தீங்குவந் தடை)
தீங்குவந் தடையு மாறும் நன்மைதான் சேரு மாறும்
தாங்கள்செய் வினையி னாலே தத்தமக் காய அல்லால்
ஆங்கவை பிறரால் வாரா அமுதநஞ் சிரண்டி னுக்கும்
ஓங்கிய சுவையின் பேதம் உதவினார் சிலரும் உண்டோ. ......
31(இன்பம தடைந்த)
இன்பம தடைந்த காலை இனிதென மகிழ்ச்சி எய்தார்
துன்பம துற்ற போதுந் துண்ணெனத் துளங்கிச் சோரார்
இன்பமுந் துன்பந் தானும் இவ்வுடற் கியைந்த வென்றே
முன்புறு தொடர்பை ஓர்வார் முழுவதும் உணர்ந்த நீரார். ......
32(வறியவர் செல்வ)
வறியவர் செல்வ ராவர் செல்வர்பின் வறிய ராவர்
சிறியவர் உயர்ந்தோ ராவர் உயர்ந்துளோர் சிறிய ராவர்
முறைமுறை நிகழும் ஈது முன்னையூழ் வினையே கண்டாய்
எறிகதிர் வழங்கும் ஞாலத் தியற்கையும் இனைய தன்றோ. ......
33(ஆக்கமும் வறுமை)
ஆக்கமும் வறுமை தானும் அல்லலும் மகிழ்வு மெல்லாம்
நீக்கமில் உயிர்கட் கென்றும் நிலையெனக் கொள்ளற் பாற்றோ
மேக்குயர் கடவுட் டிங்கள் வெண்ணிலாக் கதிரின் கற்றை
போக்கொடு வரவு நாளும் முறைமுறை பொருந்திற் றன்றே. ......
34(ஆதலின் உமது)
ஆதலின் உமது தாழ்வும் அவுணர் தம்உயர்வும் நில்லா
ஈதுமெய் யென்று கோடி இந்நகர் தணந்து போன
தாதையும் பயந்த தாயும் தம்முருக் கரந்து போந்து
மேதினி வரைப்பி னூடு மேவினர் போலு மன்றே. ......
35(மைந்தநீ தோற்று)
மைந்தநீ தோற்று முன்னம் வானவர்க் கலக்கண் செய்த
தந்தியின் முகங்கொண் டுற்ற தானவன் துஞ்சும் வண்ணம்
அந்தநாள் உனது தந்தை முயன்றனன் அதனைப் போல
இந்தவெஞ் சூரன் மாயம் இன்னமும் முயல்வன் கண்டாய். ......
36(என்றிவை பலவுங் கூறி)
என்றிவை பலவுங் கூறி இன்னினி வெஞ்சூர் தானும்
பொன்றிடும் உமது துன்பும் பொள்ளென அகன்று போகும்
நன்றிது துணிதி யென்றே நாரத முனிவன் தேற்றிச்
சென்றனன் சயந்தன் அங்கண் இருந்தனன் தெட்ப மெய்தி. ......
37(வருந்திய அமரர்)
வருந்திய அமரர் தம்மை மனப்படத் தேற்றி நாளுந்
திருந்தலன் பணித்த ஏவல் செய்திடத் தூண்டி வான்மேல்
இருந்தனன் சயந்த னென்போன் இருநிலத் திடைமுன் போன
புரந்தரன் செய்த தன்மை யானினிப் புகலு கின்றேன். ......
38(மெய்த்தரு நீழல்)
மெய்த்தரு நீழல் வைகும் வெறுக்கையை வெறுத்துப் பாரில்
சித்திர மனைவி யோடுந் தெக்கிண தேயம் புக்குப்
பத்துடன் இரண்டு நாமம் படைத்ததொல் காழி நண்ணி
இத்தல மினிதே யென்னா இருந்தனன் இமையோர் கோமான். ......
39(அந்தநல் லிருக்கை)
அந்தநல் லிருக்கை தன்னில் அயர்வுயிர்த் திறைவி யோடும்
இந்திரன் இருந்த பின்னர் என்றுநாம் இறைவற் போற்றிப்
புந்திகொள் மகிழ்வாற் பூசை புரிதுமென் றுன்னி யாண்டோர்
நந்தன வனத்தை வைப்பான் நாடியே இனைய செய்வான். ......
40(சந்தகில் பலவு)
சந்தகில் பலவு தேமாச் சரளமே திலகந் தேக்குக்
கொந்தவிழ் அசோகு புன்கு குரவொடு நாளி கேரம்
நந்திய கதலி கன்னல் நாகிளம் பூகம் வன்னி
முந்துயர் காஞ்சி வேங்கை முதலிய வேலி கோலி. ......
41(சாதியே கோங்கு)
சாதியே கோங்கு நாகஞ் சண்பகம் இதழி ஞாழல்
பாதிரி வழையே குந்தம் பாரிசா தஞ்செ ருந்தி
போதுறு நரந்தம் வில்வம் பொலிகர வீரஞ் செச்சை
கோதறு மயிலை மௌவல் கொழுந்துசெவ் வந்தி முல்லை. ......
42(இவைமுத லாகி)
இவைமுத லாகி யுள்ள தருக்களும் புதலு மெல்லாம்
நவையறந் தெரிந்து வைத்தோர் நந்தன வனத்தைச் செய்ய
அவைமிக மலர்ந்த அம்மா அம்மலர் கொண்டு நாளுஞ்
சிவனடி அருச்சித் தங்கட் டேவியோ டிறைவன் உற்றான். ......
43(உற்றிடு மெல்லை தன்னில் உல)
உற்றிடு மெல்லை தன்னில் உலகினில் அவுணர்க் கெல்லாங்
கொற்றவன் விடுத்த ஒற்றர் குவலயந் துருவிச் செல்ல
அற்றது தெரிந்து வல்லே அமரர்கோன் துணைவி யோடு
மற்றவண் வேணு வாகி மறைந்துநோற் றிருந்தான் மாதோ. ......
44(வேணுவின் உரு)
வேணுவின் உருப்போல் நின்று மெலிவொடு நோற்று நாளுந்
தாணுவை வழிபட் டங்கட் சதமகன் சாரும் நாளிற்
காணிலர் ஒற்றர் போனார் கருமுகில் அவுணர் தங்கள்
ஆணையிற் பெய்யா தாக அவ்வனம் வாடிற் றன்றே. ......
45(நீடிய காமர் பூங்கா)
நீடிய காமர் பூங்கா நெருப்புறு தன்மைத் தென்ன
வாடின நீரின் றாகி மற்றது மகத்தின் கோமான்
நாடினன் கவன்று தொன்னாள் நான்முகத் தவனும் மாலுந்
தேடரும் பரனை யுன்னி இரங்கினன் செயல்வே றில்லான். ......
46(திருந்தலர் புரமூன்)
திருந்தலர் புரமூன் றட்ட சேவகற் பரவ லோடும்
பொருந்தலா பூங்கா வாடிப் போயின எனினும் பொன்றா
இருந்தலம் இதனில் யாறொன் றெய்துமால் மகவான் இன்னே
வருந்தலை என்றோர் மாற்றம் வானிடை எழுந்த தன்றே. ......
47(எழுவதோர் செஞ்)
எழுவதோர் செஞ்சொற் கேளா எம்பிரான் அருளீ தென்னாத்
தொழுதனன் போற்றி மேனி துண்ணெனப் பொடிப்பச் சிந்தை
முழுவதும் மகிழ்ச்சி பொங்க மொய்ம்பொடே இருந்தான் அங்கண்
அழகிய நதியொன் றுற்ற வரன்முறை அறைய லுற்றேன். ......
48ஆகத் திருவிருத்தம் - 2935