(அன்னவ ருடன்)
அன்னவ ருடன்வந்தாள் அசமுகி எனுநாமம்
மன்னினள் ஒருவன்றன் மனையெனும் முறையில்லாள்
தன்னிறை தவிர்கின்றாள் தருமம திலள்வானோர்
பன்னியர் தமைமுன்னோர் படர்புயம் உறவுய்ப்பாள். ......
1(ஆள்வினை புரியுள்ள)
ஆள்வினை புரியுள்ளத் தவமுனி வரர்ஆற்றும்
வேள்விநை யுறும்வண்ணம் வெந்தொழில் புரிகின்றாள்
நீள்வினை வடிவானாள் நிருதர்கள் குலமெல்லாம்
மாள்வினை யெனயாண்டும் வைகலும் உலவுற்றாள். ......
2(கட்டழ குளதாகுங்)
கட்டழ குளதாகுங் காளையர் தமைநாடிக்
கிட்டினள் புணர்கிற்பாள் கேளிரை இகழ்வோரை
அட்டனள் நுகர்கின்றாள் அனையவள் ஒருவைகல்
முட்டினள் துருவாச முனியுறு தனியெல்லை. ......
3(அந்தநன் முனிதன்)
அந்தநன் முனிதன்னை ஆயிழை அவள்காணாச்
சிந்துவன் இவனின்னே செய்தவம் அஃதன்றி
மைந்தர்கள் பெறுவேனால் வல்லையில் இவண்என்னாப்
புந்தியில் நினைவாயே போய்அவன் எதிருற்றாள். ......
4(உறுதலும் முனிநாடி)
உறுதலும் முனிநாடி ஒண்டொடி தனியேநீ
குறுகிய தெவன்மாதோ கூறுதி யெனலோடும்
மறுவறு முனிநின்பால் மனமகிழ் வொடுமேவிச்
சிறுவர்கள் பெறவந்தேன் செப்புவ திதுவென்றாள். ......
5(என்றலும் முனிசூர)
என்றலும் முனிசூரற் கிளையவள் எனநாடி
வென்றிகொள் மடமாதே மேலுறு தவமெல்லாங்
குன்றிடும் உனையின்னே கூடுவ னெனின்நீயும்
நின்றிடல் பழியல்லால் நீதியும் அலவென்றான். ......
6(முனியிது பகர்வேலை)
முனியிது பகர்வேலை மொய்குழல் மடமானாள்
இனியுனை மருவாதே ஏகலன் ஒருவிப்போம்
மனநினை வொழிகென்றே வன்மையி னொடுபுல்லி
அனையவன் இதழூறல் ஆரமு தயிலுற்றாள். ......
7(ஆடெனு முகவெய்)
ஆடெனு முகவெய்யாள் அனையனை வலிதாகக்
கூடினள் அதுபோழ்தில் குறுகினர் இருமைந்தர்
ஈடுறு வலிமிக்கார் இன்னவர் தமையன்னை
மாடுற வருகென்றே மகிழ்வொடு தழுவுற்றாள். ......
8(தழுவினள் பரிவோடு)
தழுவினள் பரிவோடுந் தன்புதல் வரைநோக்கி
மழகளி றனையீர்காள் வல்லவு ணரில்வந்தீர்
விழுமிய தவமாற்றி மேவுதிர் வலியென்ன
அழிதரு நிறைகொண்ட அசமுகி உரைசெய்தாள். ......
9(தாயின துருவாயு)
தாயின துருவாயுந் தந்தைதன் உருவாயும்
ஏயின இருமைந்தர் வில்வலன் வாதாவி
ஆயதொர் பெயர்பெற்றோர் அன்னைதன் உரைகொண்டே
தூயதொர் குரவோன்றன் துணையடி பணிகுற்றார். ......
10(மூண்டிடு வெகுளி)
மூண்டிடு வெகுளித்தீ முனிவரன் அடிதன்னைப்
பூண்டிடு திறன்மிக்க புதல்வரை யெதிர்நோக்கி
வேண்டிய தெவனென்ன வெய்யவள் தருமைந்தர்
ஈண்டுன தவமெல்லாம் யாம்பெற அருளென்றார். ......
11(ஆற்றிடு தவமெல்லாம்)
ஆற்றிடு தவமெல்லாம் அருளெனின் அவைதாரேன்
வீற்றொரு பொருளுண்டேல் வினவுதிர் எனமேலோன்
சீற்றம துளராகிச் சிறுவர்கள் இவன்ஆவி
மாற்றுதும் இவண்என்னா வல்லையின் எழலுற்றார். ......
12(இறுதிசெய் திடவு)
இறுதிசெய் திடவுன்னி இகலுடன் எழுகின்ற
சிறுவர்கள் செயல்நாடிச் சினமொடு முனிநீவிர்
மறுவறு தவருக்கே வைகலும் இடர்செய்வீர்
குறுமுனி நுமதாவி கொள்ளுக இனியென்றான். ......
13(இனையது முனிசொற்)
இனையது முனிசொற்றே எமையடு வர்களென்னா
மனமுறு தனிவிஞ்சை மாயையின் மறைபோழ்தில்
தனயர்கள் இருவோருந் தந்தைத னைக்காணார்
அனைதனை விடைகொண்டே யாயிடை ஒருவுற்றார். ......
14(வேறொரு வனமெய்தி)
வேறொரு வனமெய்தி மெய்த்தவர் குழுவெல்லாங்
கோறலை மனமுன்னிக் குமரர்கள் இருவோரும்
தேறிய வுணர்வோடுந் திசைமுக வனைநோக்கி
ஈறகல் பகலாக எரியத னிடைநோற்றார். ......
15(செந்தழ லிடைநோன்பு)
செந்தழ லிடைநோன்பு செய்யவும் அயன்அங்கண்
வந்திலன் அதுநாடி மற்றொரு செயலுன்னி
வெந்திறல் இளையோனை வில்வல னெனும்வெய்யோன்
சுந்தர மணிவாளால் துணிபட எறிகுற்றான். ......
16(கையன துடல்கீறி)
கையன துடல்கீறிக் கறையொடு தசையெல்லாம்
நெய்யுடன் அவியாக்கி நீடிய கனலூடே
வையகம் அருள்தாதை மந்திர முறையுய்த்து
வெய்யவன் ஒருவேள்வி விரைவொடு புரிகுற்றான். ......
17(தவமொடு மகமாற்ற)
தவமொடு மகமாற்றச் சதுர்முகன் அதுகண்டே
அவனியின் மிசைவந்தே அரியதொர் செயல்செய்வாய்
எவனருள் பரிசென்ன இணையடி தொழுதேத்தி
அவுணர்கள் வடிவாம்வில் வலன்இவை அறைகின்றான். ......
18(வன்னியில் அவியூ)
வன்னியில் அவியூணாய் மாண்டிடும் ஒருபின்னோன்
மெய்ந்நிறை வடிவோடும் விரைவுடன் வரல்வேண்டும்
என்னலும் வாதாவி எழுகென அயன்ஓத
அன்னதொர் பொழுதின்கண் ஆர்த்தவன் எழுந்திட்டான். ......
19(ஆங்கனம் அசுரேசன்)
ஆங்கனம் அசுரேசன் அதிசய முளனாகித்
தீங்குடன் ஒருசூழ்ச்சி சிந்தையி னிடையுன்னிப்
பூங்கம லத்தோனைப் போற்றிசெய் தடியேனுக்
கீங்கொரு வரம்எந்தாய் ஈகென உரைசெய்வான். ......
20(புல்லயின் மறியே)
புல்லயின் மறியேபோற் பொலிவுறும் வாதாவி
ஒல்லையின் இனிமேலும் உடல்துணி படுவானேல்
எல்லையில் பரிவால்யான் எம்பியை எழுகென்னத்
தொல்லையில் வடிவோடுந் தோன்றிமுன் வரல்வேண்டும். ......
21(இப்படி வரமொன்றே)
இப்படி வரமொன்றே யான்பெற அருள்கென்றே
மெய்ப்படும் உணர்வில்லா வில்வலன் உரைசெய்ய
அப்படி பலகாலம் அதுமுடி கெனநல்கிச்
செப்பரு மறைவேதாச் சேணுடை நெறிசென்றான். ......
22(சேறலும் அதுகாலை)
சேறலும் அதுகாலைச் சிறுவர்கள் இருவோரும்
ஏறென அமர்சூர்முன் ஏகியுன் மருகோர்யாம்
வேறல எனவோதி மேதினி முனிவோரைக்
கோறல்செய் பெருவன்மை கொண்டதும் உரைசெய்தார். ......
23(மன்னவன் அவர்தம்)
மன்னவன் அவர்தம்மை மகிழ்வொடு நனிபுல்லி
என்னுழை மருகீர்காள் இனிமையொ டுறுமென்ன
அன்னவர் சிலவைகல் ஆயிடை தனில்வைகிப்
பின்னுற இருவோரும் பெருநில மிசைவந்தார். ......
24(நவைதவிர் குடகின்)
நவைதவிர் குடகின்கண் நால்வகை நெறிகூடுங்
கவலையின் வளமல்குங் கானக விடைதன்னில்
அவுணர்கள் தாம்அங்கோர் ஆச்சிர மஞ்செய்தே
எவரெவ ரும்வெஃகும் எப்பொருள் களுமுய்த்தார். ......
25(அன்னதொ ரிடை)
அன்னதொ ரிடைதன்னில் ஆரிட ராயுள்ளோர்
இன்னுயிர் கொளவுன்னி இருவருள் இளமைந்தன்
பொன்னிவர் திரிகோட்டுப் பொருதக ராய்நிற்க
முன்னவன் விரதஞ்செய் முனிவரின் இனிதுற்றான். ......
26(வில்வலன் எனவோதும்)
வில்வலன் எனவோதும் வெய்யவன் அவ்வெல்லைச்
செல்வதோர் முனிவோரைச் செவ்விதின் எதிர்கொண்டு
வல்விரை வொடுதாழ்ந்து மற்றும தடியேன்றன்
இல்வரு வீரென்னா இயல்பொடு கொடுசென்றே. ......
27(இப்பகல் அடிகேளு)
இப்பகல் அடிகேளுக் கிவ்விடை உணவென்னா
ஒப்பறு நெறிகூறி ஓதன வகையெல்லாம்
அப்பொழு தினிலட்டே அயமெனும் இளையோனைத்
துப்புறு கறியாகத் துண்டம துறுவித்தே. ......
28(உள்ளுறு குறியாகும்)
உள்ளுறு குறியாகும் ஊன்முழு வதும்நாடி
வள்ளுறு சுடர்வாளால் வகைவகை படவீர்ந்தே
அள்ளுறு கறியாக அட்டபின் அவரவ்வூண்
கொள்ளுற நுகர்வித்தே கூவுவன் இளையோனை. ......
29(கூவிய பொழுதின்)
கூவிய பொழுதின்கட் கொறியெனும் உருவானோன்
ஆவிமெய் யுளனாகி அன்னவர் உதரத்தை
மாவலி யொடுகீண்டே வருதலும் இருவோருஞ்
சாவுறு முனிவோர்தந் தசையினை மிசைவாரால். ......
30வேறு(வீடுறு முனிவர்ஊன்)
வீடுறு முனிவர்ஊன் மிசைந்து தொன்மைபோல்
ஆடென முனியென அனையர் மேவியே
நாடொறும் இச்செயல் நடாத்தி யுற்றனர்
கேடறு முனிவர்தங் கிளைகள் மாளவே. ......
31ஆகத் திருவிருத்தம் - 2887