Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

previous padalam   19 - புதல்வரைப் பெறுபடலம்   next padalampudhalvaraip perupadalam

Ms Revathi Sankaran (2.64mb)




(அதுபொழு தவுணர் கோ)

அதுபொழு தவுணர் கோமான் ஆற்றிய தவத்தின் சீரால்
     பதுமகோ மளையென் றோதும் பாவைதன் உதரம் போந்து
          புதுமதிக் குழவி யேபோல் பொற்பொடு பொலிந்து முன்னம்
               மதலையங் கொருவன் வந்தான் மறலிக்கு மறலி போல்வான். ......    1

(வந்ததோர் மதலை)

வந்ததோர் மதலை தன்னை மன்னவர் மன்னன் காணூஉ
     அந்தமில் மகிழ்ச்சி பொங்க அவுணர்தங் கிளைஞர்க் கெல்லாம்
          நந்திய வெறுக்கை தன்னை நலத்தக வீச லுற்றான்
               இந்திரன் முதலி னோரும் யாவரும் இடுக்கண் எய்த. ......    2

(வீசிய பின்றை)

வீசிய பின்றை வானோர் மெல்லியர் அவுணர் மாதர்
     ஆசிகள் புகன்று போற்றி அன்னதோர் மைந்தன் தன்னைக்
          காசொடு வயிர முத்தங் கதிர்பொலந் தொட்டில் சேர்த்தார்
               மாசகல் மதிய மேபோல் பைப்பய வளர்தல் உற்றான். ......    3

(கட்டழ குடைய)

கட்டழ குடைய மைந்தன் கம்பலங் கொண்ட செம்பொன்
     தொட்டிலில் துயிலு மெல்லை ஒருபகல் சுடரின் என்றூழ்
          விட்டதோர் நூழை தன்னால் மேவியே அனையன் மெய்யிற்
               பட்டதங் கதனை நாடிப் பரிதியைச் சுளித்துப் பார்த்தான். ......    4

(பார்த்திடு கின்ற)

பார்த்திடு கின்ற மைந்தன் பன்மணித் தொட்டில் நின்றுஞ்
     சீர்த்தெழுந் தண்டம் பாய்ந்து செங்கதிர்ச் செல்வற் பற்றிக்
          கார்த்திடு புயங்கங் கவ்வும் படித்தெனக் கரத்திற் கொண்டு
               பேர்த்துமோர் இறையில் வந்தான் தவத்தினும் பெரிதொன் றுண்டோ. ......    5

(தானுறை இருக்கை)

தானுறை இருக்கை தன்னில் தகுவர்கோன் தனயன் சாரா
     ஆனதோர் செம்பொற் றொட்டில் அணிமணிக் காலி னூடே
          பானுவை வலிதிற் கட்டிப் பண்டுபோல் துயின்றான் அங்கண்
               வானவர் அதனை நோக்கி மனம்வெரீஇ மறுக்க முற்றார். ......    6

(பரிதிவிண் சேறல்)

பரிதிவிண் சேறல் இன்றிப் பிழைத்தலும் பார்தந் துள்ளோன்
     கருதியிந் திரனே ஏனைக் கடவுளர் யாருஞ் சூழ
          நிருதர்கோன் தன்பால் வந்து நீடிருட் பகைவன் தன்னைத்
               தருதிநின் மைந்தன் செய்த தனிச்சிறை நீக்கி யென்றான். ......    7

வேறு

(மறைபு ரிந்தநான்)

மறைபு ரிந்தநான் முகன்இவை புகறலும் வானத்
     திறைபு ரிந்திடும் இரவியை என்மகன் இன்னே
          சிறைபு ரிந்ததை உணர்கிலேன் அவனது செய்யக்
               குறைபு ரிந்ததென் பகர்தியென் றுரைத்தனன் கொடியோன். ......    8

(சொற்ற வாசக)

சொற்ற வாசகங் கேட்டலும் ஆருயிர்த் தொன்மை
     முற்று நாடிய நான்முகன் நின்மகன் முகமேல்
          அற்ற மில்சுடர் ஆதபந் தீண்டிய ததனால்
               பற்றி வெய்யவற் சிறைபுரிந் தானெனப் பகர்ந்தான். ......    9

(மகவு தன்செயல்)

மகவு தன்செயல் கேட்டலுஞ் சூரபன் மாவாந்
     தகுவர் கோன்மிக மகிழ்ந்துநீர் என்மகற் சார்ந்து
          மிகவும் நன்மொழி கூறியே ஆங்கவன் விடுப்பப்
               பகல வற்கொடு போதிரால் ஈண்டெனப் பகர்ந்தான். ......    10

(கேட்ட நான்முகன்)

கேட்ட நான்முகன் நன்றென விடைகொண்டு கிளர்பொன்
     நாட்டின் மேனகை முதலினோர் பாடலின் நலத்தால்
          ஆட்டு பொன்மணித் தொட்டிலின் மிசையுறும் அண்ணல்
               மாட்டு மேவிநின் றளவையில் ஆசிகள் வகுத்தான். ......    11

(அன்பின் மைந்தனை)

அன்பின் மைந்தனைப் புகழ்ந்துமுன் நிற்றலும் அனையான்
     என்பெ றும்பரி சுமக்கென இன்னதோர் இரவி
          துன்பு றுஞ்சிறை அகற்றுதி என்றலுந் தொல்லோய்
               உன்பெ ரும்படை தருதியேல் விடுவனென் றுரைத்தான். ......    12

(உரைத்த மைந்த)

உரைத்த மைந்தனுக் கயன்றன தகன்படை யுதவ
     நிரைத்த செங்கதிர்ச் செல்வனை விடுத்தனன் நிருதன்
          விரைத்த பங்கயக் கிழவனும் புதல்வனை வியந்து
               பரித்தி யாலென உதவினன் மோகவெம் படையே. ......    13

(படைய ளித்தலும்)

படைய ளித்தலும் பகலொடு பங்கயத் தவற்கு
     விடைய ளித்தனன் தாதையத் தன்மையை வினவி
          நடைய ளித்தனன் புதல்வனுக் கன்னதோர் நன்னா
               ளிடைய ளித்தனன் பானுகோ பன்எனும் இயற்பேர். ......    14

(பானு கோபனென்)

பானு கோபனென் றொருபெயர் பெற்றஅப் பாலன்
     மானை நேர்விழி மங்கையர் மதனென மயங்க
          ஆன பேருரு வெய்தியே அம்புயத் திருவின்
               கோனொ டேபொரு தவன்றனைப் பெருந்திறல் கொண்டான். ......    15

(பரிதி யின்பகை)

பரிதி யின்பகை யாமிவற் பெற்றபின் பரிவால்
     நிருதர் காவலன் அங்கிமா முகத்தனை நிறஞ்சேர்
          இரணி யன்றனை வச்சிர வாகுவை எழிலார்
               மருவு லாங்குழற் பதுமகோ மளைதர மகிழ்ந்தான். ......    16

(மைத்த கூர்விழி)

மைத்த கூர்விழி ஏனைய தேவியர் மகிழ்வால்
     உய்த்து நல்கிடச் சூரனாம் வெய்யவன் ஒருங்கே
          பத்து நூறுள மும்மைசேர் பாலரைப் பயந்தான்
               இத்தி றத்தவர் தம்முடன் அங்கண்வீற் றிருந்தான். ......    17

வேறு

(சீற்ற முற்றிடு)

சீற்ற முற்றிடு சிங்க முகன்கணே
     தோற்றி னான்அதி சூரன்என் றோர்மகன்
          வீற்று நூற்றுவர் மேவினர் அன்னவர்
               ஆற்றல் யாவர் அறைந்திட வல்லரே. ......    18

(அந்த நாளில் அவன்)

அந்த நாளில் அவன்றன் இளவலாந்
     தந்தி மாமுகத் தாரகன் தன்னிடை
          முந்து செய்தவ மொய்ம்பினொர் மாமகன்
               வந்து தோன்றினன் வான்கதிர்ப் பிள்ளைபோல்*1. ......    19

(ஆமி வன்அசு ரே)

ஆமி வன்அசு ரேந்திரன் என்றவற்
     கேம மான குரவன் இசைப்பஅந்
          நாமம் எய்தி நலம்பெறு காளையாய்க்
               காமன் என்னக் கவின்றனன் யாக்கையே. ......    20

(ஓத ருங்கலை)

ஓத ருங்கலை யாவும் உணர்கினும்
     ஏத மாவதோர் விஞ்சை இயற்றிடான்
          பாத கம்புரி யான்பழி பூண்கிலான்
               நீதி யன்றி எவையும் நினைகிலான். ......    21

(வீறு கொண்டிகல்)

வீறு கொண்டிகல் வீரம் புகன்றெதிர்
     மாறு கொண்டவர் உண்டெனின் மற்றவர்
          ஈறு கொண்டிட ஏற்றுர மேற்படை
               ஊறு கொண்டிட உன்னுந் தகைமையான். ......    22

(சிகரம் எண்ணில)

சிகரம் எண்ணில சேட்படு கள்ளிதான்
     அகரும்*2 நல்கி அமர்ந்தென அன்னதோர்
          மகனை நல்கி வளங்கெழு மாயமா
               நகர வாழ்க்கையின் நண்ணினன் தாரகன். ......    23

ஆகத் திருவிருத்தம் - 2856




*1. வான் கதிர்ப் பிள்ளை = பாலசூரியன்.

*2. அகர் = அகில்;
   பல அகில்களில் சதுரக்கள்ளி வைரமாகிய அகிலும் ஒன்று.



previous padalam   19 - புதல்வரைப் பெறுபடலம்   next padalampudhalvaraip perupadalam

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]