(அரசு செய்தலும்)
அரசு செய்தலும் அந்தர நாதனுஞ்
சுரரு மேனை முனிவருந் தொக்குறீஇ
வரைசெய் மாட மகேந்திர மாபுரத்
தொருவன் ஏவலின் முன்னம் ஒழுகுவார். ......
1(கொலைவல் சிங்க)
கொலைவல் சிங்க முகன்பதி குஞ்சரத்
தலைவன் மாப்பதி சார்ந்தவர் தம்பதி
பலவு மேகிப் பணித்தன ஆற்றியே
உலைவர் வைகலும் ஊசலின் நீர்மையார். ......
2வேறு(ஊனமுற்றோர் போலி)
ஊனமுற்றோர் போலிவ்வா றுலைகின்ற காலத்தில் ஒருநாட் சூரன்
வானகத்துத் தலைவனையும் அமரரையும் வருகவெனா வலித்துக் கூவித்
தானவர்க்குத் தம்பியர்நீர் அவர்பணிநும் பணியன்றோ தரங்க வேலை
மீனனைத்துஞ் சூறைகொண்டு வைகலுமுய்த் திடுதிரென விளம்பினானால். ......
3(உரைக்குமொழி யது)
உரைக்குமொழி யதுகேளா அனையரெலாம் உள்நடுங்கி உயங்கி வெள்கித்
திரைக்கடலின் மீன்றனக்குத் தருகென்றான் இதற்கினிநாஞ் செய்வ தேதோ
விரைக்கமலத் தனிக்கடவுள் இப்படியும் நந்தலையில் விதித்தான் என்னா
இரக்கமொடு மறுத்தலஞ்சி அத்திறமே புரிதுமென இறைஞ்சிப் போனார். ......
4(போகின்ற நெறி)
போகின்ற நெறியின்கண் இமையவரும் புரந்தரனும் பொருமி யேங்கி
ஆகின்ற தெமக்கேயோர் பழியன்றோ அனையதுவந் தணுகா முன்னர்ச்
சாகின்ற தேமிகவும் இனிதாகும் எமக்கதுவுஞ் சாரா தந்தோ
வேகின்ற சிந்தையினேஞ் செய்வதெவன் எனப்புலம்பி வேலை புக்கார். ......
5(அவ்வேலை இமை)
அவ்வேலை இமையவர்கோன் வருணனெனுங் கடவுளைநின் றழையா இந்த
மைவேலை தனக்கிறைவன் நீயன்றோ நின்னினுமோர் வலியா ருண்டோ
கைவேலைப் பணியியற்றித் திமிங்கிலமே முதலாய கணிப்பின் மீன்கள்
இவ்வேலை ஏற்றுதியேல் இடர்வேலைக் கரையிலெமை யெடுத்தி யென்றான். ......
6(வெள்ளைவா ரண)
வெள்ளைவா ரணக்கடவுள் உரைசெய்த மொழிகேட்டு விண்ணு ளோர்க்கு
வள்ளல்நீ இரங்குதியோ அத்தொழில்யான் புரிவனென வருணன் கூறி
அள்ளல்வே லையுட்புகுந்து தனதுபெருங் கரதலத்தால் அலைத்து வாரி
யுள்ளமீன் குலங்களெல்லாந் தடங்கரையில் வரையேபோல் உயர்த்த லுற்றான். ......
7(தடக்கடலின் வேலை)
தடக்கடலின் வேலைதனில் வருணர்பிரான் ஒல்லைதனில் தந்த மீனத்
தடுக்கல்முழு வதுநோக்கிக் கடவுளரை விளித்திவற்றை ஆற்ற லாலே
எடுப்பதுநுந் தொழிலென்றே இந்திரன்றான் விளம்புதலும் இமையோ ரெல்லாம்
நடுக்கமுடன் உளம்பதைப்ப விழிபனிப்பக் கரங்குலைத்து நாணுக் கொண்டார். ......
8(சின்னைதிமிங் கில)
சின்னைதிமிங் கிலகிலமீ னாதியமீன் அடுக்கலினைத் தென்பால்வைகும்
மன்னனுயிர் தனைவாங்கச் செங்கதிரோன் பெரும்புனலின் வடிவை வாட்டப்
பன்னகரா கியதிறத்தாற் பிணித்திடும்அச் சுமையதனைப் பகட்டின் வேந்தன்
இன்னலுறு வானவர்பால் எடுத்தவவர் கொண்டேகி இரங்கு கின்றார். ......
9வேறு(பன்னும் புகழ்ச்சூர)
பன்னும் புகழ்ச்சூர பன்மனெனுந் தீயவனான்
முன்னுந் துயர்க்கடலின் மூழ்கி முரணழிந்தேம்
துன்னும் பழியாந் தொழிலிதுவுஞ் செய்தனமால்
இன்னும் படுவதொழில் ஏதோ உணரேமே. ......
10(பேர்கின்ற நீல)
பேர்கின்ற நீலப் பிறங்கல்அனை யான்பணியால்
ஆர்கின்ற தின்றோ ரலரே அஃதுயிரை
ஈர்கின்ற தந்தோ விதியே எமக்கிதுவுந்
தீர்கின்ற காலம் உளதோநீ செப்பாயே. ......
11(பூவுலகந் தன்னில்)
பூவுலகந் தன்னில் பொருந்துகின்ற மானுடரும்
பாவமென நூலில் பகருகின்ற இத்தொழிலை
ஏவர்புரி கின்றார் எமக்கோவந் தெய்துமதோ
தேவ கதியின் நிரயஞ் சிறப்புடைத்தே. ......
12(தக்க துணராத)
தக்க துணராத தானவர்கள் தங்களினும்
மக்களினுந் தாழ்வாம் வலைஞர்தொழில் செய்தனமால்
இக்ககன வாழ்வை விரும்பியே யாஞ்செய்த
மிக்க தவமும் வினையாய் விளைந்ததுவே. ......
13(வேத நெறியை)
வேத நெறியை விலக்கினேம் மிக்குள்ள
போத நெறியாம் அதற்குப் புறம்பானேம்
தீதுடைய வெஞ்சூரன் சீற்றத்தாற் செப்புகின்ற
வேதநெறி செய்வேமேல் எம்மினுயர்ந் தாரெவரே. ......
14(தேனுலவுந் தாரு)
தேனுலவுந் தாருத் திருநிழற்கீழ் இன்பமுறும்
வானவர்க ளென்றே மதிக்குந் தகைமையினோம்
ஈனமொடு மீன்சுமந்தே எல்லோர் களும்நகைக்கத்
தானவர்முன் செல்வதிலுஞ் சாதல்மிக நன்றுநன்றே. ......
15(என்னு மொழிகள்)
என்னு மொழிகள் இயம்பிப் புலம்புற்றுத்
துன்னு நிருதர்புகழ் சூரன் திருநகரின்
மன்னுதிசை யாளரொடும் வந்தனரால் அவ்வளவில்
அன்னசெயல் கண்டே அவுணர்உரை செய்குவார். ......
16(மாதோயந் தன்னை)
மாதோயந் தன்னை வயிறலைத்து மற்றிவர்தாம்
ஈதோ சிலமீன் தருகின் றனரென்பார்
மீதோ டியபரிதி வெய்யோன்முன் னுண்டவெறுங்
கோதோ எமக்குக் கொணர்கின்றார் என்றுரைப்பார். ......
17(தாங்கடற்குள் மீன)
தாங்கடற்குள் மீனந் தலைக்கொண்டு மேவுகின்றார்
ஈங்கிவர்க்கு நாணம் இலையோ சிறிதென்பார்
தீங்கிழைக்கின் யாரேனுஞ் செய்யாத தேதென்பார்
மூங்கையொத்து ளாரோ மொழியார் இவரென்பார். ......
18(முந்துற்ற தொல்லை முழு)
முந்துற்ற தொல்லை முழுநீரின் வேலைதொறும்
பந்தத் துடன்வாழ் பரதவரே செய்கின்ற
இந்தத் தொழிலும் இவர்க்குவரு மோவென்பார்
சிந்திப்ப தென்னோ விதியின் செயலென்பார். ......
19(வேத நெறிமுறை)
வேத நெறிமுறைமை விட்டார் வினைசெய்யும்
பேதை நெறியே பிடித்தார் இவரென்பார்
கோதுபடா நந்தங் குலத்தை மிகநலிந்தார்
ஏதுபடார் இன்னம் இமையோ ரெனவுரைப்பார். ......
20(மண்ணோர் களு)
மண்ணோர் களுமிகழும் வன்பழிதன் பால்வரவும்
விண்ணோர்க் கிறைவன் விரைவினுயிர் விட்டிலனாற்
கண்ணோ பெரிது கருத்தோ சிறிதென்பார்
பெண்ணோ அலிதானோ பேடோ வெனவுரைப்பார். ......
21வேறு(இந்த வாறு பலரும்)
இந்த வாறு பலரும் இயம்பிடப்
புந்தி நொந்து புலம்புபுத் தேளிர்கள்
தந்தி யூருந் தலைவனை முற்கொடு
வந்து தீயவன் வாய்தலுற் றாரரோ. ......
22(பரிதி வேந்தன்)
பரிதி வேந்தன் பணிமுறை நாடியே
வருதிர் ஈண்டென்று வாயிலர் கூறிடப்
பொருதி ரைக்கடல் மீன்கொடு போய்ச்சுரர்
ஒருத னிப்பெருங் கோயிலுள் உய்த்தனர். ......
23(எளித்தல் எய்தும்)
எளித்தல் எய்தும் இமையவர் உய்த்தமீன்
துளித்த தேன்றொடைச் சூர்முதல் காணுறீஇக்
களித்து வந்து கடவுளர் வைகலும்
அளித்தி ரென்ன அழகிதென் றேகினார். ......
24(என்றும் ஆங்கவர்)
என்றும் ஆங்கவர் இச்செயல் ஆற்றியே
பொன்றி னாரின் புலர்ந்து புலம்புறீஇத்
துன்று கின்ற துயர்க்கடல் மூழ்கியே
ஒன்றும் வேத வொழுக்கமற் றாரரோ. ......
25ஆகத் திருவிருத்தம் - 2833