(களித்திடு ஞிமிறும்)
களித்திடு ஞிமிறும் வண்டுங் கலந்திட நறவம் பொங்கித்
துளித்திடு துழாய்மால் தன்னைச் சூரனாம் அவுணன் பாரா
அளித்தவன் தன்மூ தாதை யாயினை அதனால் நின்னை
விளித்திடு மெல்லை தோறும் விரைந்திவண் மேவு கென்றான். ......
1(செங்கம லத்தின்)
செங்கம லத்தின் மேவுந் திசைமுகத் தொருவன் தன்னைத்
துங்கமோ டரசு செய்யுஞ் சூரனாம் வீரன் பாரா
இங்குநின் மைந்த ரோடும் என்னிடந் தன்னி லேகி
அங்கம்ஐ வகையும் நாளும் அறைந்தனை போதி யென்றான். ......
2(அறத்தினை விடுத்த)
அறத்தினை விடுத்த தீயோன் அருக்கனை நோக்கி நம்மூர்ப்
புறத்தினில் அரண மீதாய்ப் போகுதல் அரிது கீழ்மேல்
நிறுத்திய சிகரி யூடு நெறிக்கொடு புக்கு வான்போய்
எறித்தனை திரிதி நாளும் இளங்கதிர் நடாத்தி யென்றான். ......
3(அறைகழற் சூர)
அறைகழற் சூர பன்மன் அவிர்மதி தன்னை நோக்கிப்
பிறையென வளரு மாறும் பின்முறை சுருங்கு மாறும்
மறைவொடு திரியு மாறும் மற்றினி விடுத்து நாளும்
நிறைவொடு கதிரோன் போல்இந் நீள்நகர் வருதி யென்றான். ......
4(பொங்கழல் முதல்)
பொங்கழல் முதல்வன் தன்னைப் புரவலன் விரைவின் நோக்கி
இங்குநம் மூதூர் உள்ளோர் யாவரே எனினும் உன்னின்
அங்கவர் தம்பா லெய்தி அவர்பணி யாவும் ஆற்றிச்
செங்கம லம்போல் யாவர் தீண்டினுங் குளிர்தி யென்றான். ......
5(சுடர்முடி யவுணர்)
சுடர்முடி யவுணர் செம்மல் தொல்பெருங் கூற்றை நோக்கிப்
படிமுழு துயிரை நாளும் படுப்பது போல நந்தங்
கடமத கரியை மாவைக் கணிப்பிலா அவுணர் தம்மை
அடுவது கனவும் உன்னா தஞ்சியே திரிதி யென்றான். ......
6(அண்டரும் உலவை)
அண்டரும் உலவை யானை அவுணர்மாத் தலைவன் பாரா
எண்டரு நம்மூ தூரில் யாவரும் புனைந்து நீத்த
தண்டுளி நறவ மாலை தயங்குபூண் கலிங்கஞ் சாந்தம்
நுண்டுக ளாடு சுண்ணம் மாற்றுதி நொய்தின் என்றான். ......
7(காவலன் வருணன்)
காவலன் வருணன் தன்னைக் கண்ணுறீஇ நம்மூ தூரில்
நாவிவெண் பளிதஞ் சாந்தம் நரந்தமோ டளாவித் தீம்பால்
ஆவியின் வெளிய நொய்ய அரும்பனி நீரிற் கூட்டித்
தூவுதி இடங்க டோறுங் காற்றது துடைக்க வென்றான். ......
8(வாசவன் றன்னை)
வாசவன் றன்னை நோக்கி மால்கெழு திருவின் மேலோன்
தேசுறு துறக்கம் வைகுந் தேவர்தங் குழுவி னோடும்
ஆசையங் கிழவ ரோடும் அருந்தவ ரோடும் போந்து
பேசிய பணிகள் ஆற்றித் திரிமதி பிழையேல் என்றான். ......
9(இந்நெறி சூர பன்மன்)
இந்நெறி சூர பன்மன் யாவர்க்கும் வீற்று வீற்றாத்
தன்னுறு பணியின் நிற்பான் சாற்றலும் அனையர் அஞ்சி
அன்னது செய்து மென்றே அனையவா றொழுக அன்னான்
மன்னினன் அரசில் பின்றை மணஞ்செய உன்னி னானால். ......
10(மதிமுகத் திருவே)
மதிமுகத் திருவே போல்வாள் வானவர் புனைவன் தந்த
பதுமகோ மளைஎன் றோதும் பாவையைப் புகரோன் நாடிச்
சதுர்முகன் முதலாந் தேவர் தானவர் பிறரும் போற்ற
விதிமுறை வதுவை செய்து விழைவொடு மேவி யுற்றான். ......
11(அன்னதன் பின்னர்)
அன்னதன் பின்னர் வானோர் அசுரர்கந் தருவர் சித்தர்
கின்னரர் இயக்கர் நாகர் கிம்புரு டாதி யானோர்
கன்னியர் அளப்பி லாரைக் கடிமணஞ் செய்து கூடித்
துன்னுபன் மலர்த்தேன் உண்ணுஞ் சுரும்பென இன்பந் துய்த்தான். ......
12(அரிமுகத் தவுணர்)
அரிமுகத் தவுணர் வேந்தற் கந்தகன் மகளா யுள்ள
திருமிகு விபுதை தன்னைச் சீர்மணஞ் செய்து நல்கி
நிருதிதன் புதல்வி யான நேரிழை சவுரி தன்னைக்
கரிமுக இளவல் சேரக் கடிமணம் புரிவித் திட்டான். ......
13(இவ்வகை மணஞ்செய்)
இவ்வகை மணஞ்செய் பின்றை இருதுணை வரையும் நோக்கி
மெய்வளம் பெறநுங் கட்கு விதித்திடும் மூதூ ரேகி
அவ்விரு கோடி வெள்ளம் அனிகமோ டிருத்தி ரென்னாத்
தெவ்வடு சூரன் அன்னோர் செல்லுமா றேவி னானால். ......
14(ஏவியே தனது)
ஏவியே தனது தானைக் கிறைவரில் பலரை நோக்கி
நீவிர்கள் இரண்டு கோடி நீத்தமாம் அனிகத் தோடு
தீவுக டோறும் ஆழி இடந்தொறுஞ் செய்த மூதூர்
மேவுதிர் விரைவின் என்னா அனையரை விடுத்தான் மன்னோ. ......
15(மாறிலாத் திசை)
மாறிலாத் திசைக ளெட்டும் வானுல கேழும் இப்பாற்
கூறுபா தலங்கள் யாவும் ஒழிந்தவுங் குறுகி யேதன்
ஈறிலா ஆணை போற்ற எல்லையில் அவுணர் தம்மை
ஆறெனுங் கோடி வெள்ளத் தனிகமோ டேகச் செய்தான். ......
16(விட்டிடு காலை)
விட்டிடு காலை தானே விண்ணுமண் ணுலகுந் திக்கோர்
எட்டொடு பிலனோ ரேழும் ஏனைய வரைப்பு மாகிக்
கிட்டின செறிந்து மொய்த்த கேடில்சீர் அவுணர் தானை
மட்டகல் வானம் பூத்த உடுக்களின் மலிந்த அன்றே. ......
17(எங்கணுந் தனது)
எங்கணுந் தனது தானை இடையறா தீண்ட லோடுந்
துங்கவெஞ் சூர பன்மன் தானுறை தொன்மூ தூரில்
அங்கணோ ரிலக்கம் வெள்ளத் தவுணர்தந் தானை தன்னை
மங்கல இருக்கை தோறும் மரபுளி இருத்தி மன்னோ. ......
18(கரிபரி யாளி எண்)
கரிபரி யாளி எண்கு கடுவயப் புலியே ஏனம்
அரிமரை முகத்து வீரர் அவுணர்தந் தலைவ ரானோர்
இருவகை நான்மை யோர்க்கும் எண்டிசை நகரும் ஈந்து
வருபடை அயுதத் தோடும் மகேந்திரங் காக்கச் செய்தான். ......
19(ஞாயில்கள் செறிந்த)
ஞாயில்கள் செறிந்த நொச்சி நாற்பெருந் தகைமைத் தான
வாயில்க டோறும் நாப்பண் வளநகர் இஞ்சி தோறும்
கோயிலின் இருக்கை தோறுங் குணிப்பிலா வீரர் தம்மை
நீயிர்கள் காமின் என்னா நிலைப்பட நிறுவி யிட்டான். ......
20(துர்க்குணன் தரும)
துர்க்குணன் தரும கோபன் துன்முகன் சங்க பாலன்
வக்கிர பாலன் தீய மகிடனே முதலோர் தம்மைத்
தொக்கமந் திரிக ளாகத் துணைக்கொடே சூர பன்மன்
மிக்கவா னவர்கள் போற்ற வீற்றிருந் தரசு செய்தான். ......
21ஆகத் திருவிருத்தம் - 2808