(மற்றவ் வீர மகே)
மற்றவ் வீர மகேந்திரம் நண்ணியே
உற்று நாடியவ் வும்பர்தங் கம்மியன்
கற்ற விஞ்சை வியந்து களிப்புறீஇக்
கொற்ற நீடுதன் கோயிலை நண்ணினான். ......
1(நண்ணு கின்று)
நண்ணு கின்றுழி நான்முக னாதியாம்
விண்ணு ளோர்கள் வியன்முடி சூட்டுதும்
அண்ண லுக்கென் றவற்றிற்கு வேண்டிய
எண்ணில் பல்பொருள் யாவுமுய்த் தாரரோ. ......
2(கோவில் நண்ணிய)
கோவில் நண்ணிய கொற்றவன் மற்றொரு
தாவில் பீடிகை தன்மிசை வைகியே
மாவு லாவிய மால்கடல் தெண்புனல்
தேவர் ஆட்டச் சிறப்புடன் ஆடினான். ......
3(ஆடி யம்பொனின்)
ஆடி யம்பொனின் ஆடையு டீஇமலர்
சூடி ஒண்கலன் தூயன பூண்டுபின்
பீடு சேர்தரு பின்னவர் பால்வர
நீடு காதல் நிருதர் புகழ்வே. ......
4(நிகரி லாத நிருதர்)
நிகரி லாத நிருதர்க் கிறைதொழப்
புகரு மாமுனி வோரும் புகழ்ந்திட
மிகந டுங்கிய விண்ணவர் போற்றிட
மகப திக்கு மனந்தளர் வெய்தவே. ......
5(வந்து சீய மணி)
வந்து சீய மணித்தவி சேறினன்
அந்த வெல்லையில் அச்சுதற் காமெனும்
இந்தி ரத்திரு மாமுடி ஏந்தியே
சுந்த ரத்தொடு நான்முகன் சூட்டினான். ......
6(கண்டு தானவர்)
கண்டு தானவர் காசிபன் காதலன்
புண்ட ரீகப் பொலன்கழல் தாழ்ந்தெழா
அண்டொ ணாமகிழ் வால்அடுந் தேறலை
உண்டு ளாரின் உளங்களிப் பெய்தினார். ......
7(அன்ன வேலை அமரர்)
அன்ன வேலை அமரர் முனிவர்கள்
பொன்ன வாநறும் போது கரங்கொடே
மன்னர் மன்னன் மணிமுடி யின்மிசை
முன்னி வாழ்த்தி முறைமுறை வீசினார். ......
8வேறு(பாங்குறு தவிசின்)
பாங்குறு தவிசின் பாலில் துணைவர்பங் கயன்மால் தம்மை
ஈங்கினி திருத்திர் என்ன இருந்தனர் ஏவ லாலே
ஓங்கிய மகவான் கொண்டான் களாசிஒண் ணிதியின் கோமான்
தாங்கினன் அடைப்பை மற்றச் சமீரணர் கவரி கொண்டார். ......
9(நிருதர்தங் குரிசி)
நிருதர்தங் குரிசி லான நெடுந்தகை யுடைவாள் கொண்டான்
பரிதியும் மதியும் அங்கட் பனிக்குடை நிழற்றி நின்றார்
வருணனும் மகாரும் ஆல வட்டம்வீ சினர்யாழ் வல்ல
கருடர்கந் தருவர் சித்தர் கானமங் கிசையா நின்றார். ......
10(முத்தலை அயில்)
முத்தலை அயில்வே லேந்தி முறைநெறி ஆற்றுங் கூற்று
மெய்த்தழற் கடவுள் தானும் வேத்திர மேந்தி யாண்டும்
எத்திறத் தவரும் நீங்க எரிவிழித் திடியி னார்த்துப்
பத்தியின் நிறுவிச் சூரன் பல்புகழ் பரவி நின்றார். ......
11(குரைகழல் நிருதி)
குரைகழல் நிருதி என்போன் கோடிக மதுகைக் கொண்டான்
இருமைசேர் குரவர் தாமும் எல்லைதீர் முனிவர் யாருந்
திரைகெழு கங்கைத் தூநீர் செம்பொனங் கலசஞ் சேர்த்துத்
துருவையின் மறையால் வாங்கித் துவலைதூர்த் தாசி சொற்றார். ......
12(அரம்பைமே னகை)
அரம்பைமே னகையே மிக்க உருப்பசி யாதி யாகி
வரம்பறும் அமரர் மாதர் வரன்முறை விதியின் நாடி
நரம்பியல் சுருதி பாடல் இயத்தொடு படிந்து நண்ணித்
திரம்பயில் நடனம் மூன்றுஞ்*
1 செவ்விதிற் புரிய லுற்றார். ......
13(இத்திறம் அமரர்)
இத்திறம் அமரர் யாரும் ஏனையர் தாமும் ஈண்டித்
தத்தம துரிமை தன்னைத் தவாநெறி தலைக்கொண் டாற்ற
மைத்தகு சூர பன்மன் மடங்கலந் தவிசின் மீதே
மெய்த்திரு நிகழ மன்னிப் பின்னிவை விளம்ப லுற்றான். ......
14ஆகத் திருவிருத்தம் - 2787