(கண்டனர் இவனே)
கண்டனர் இவனே போலுங் காய்சினத் தவுணர் ஆவி
கொண்டனன் வேலை முன்னங் குடித்துமிழ் கின்ற நீரான்
அண்டரை யருள்வா னாங்கொல் அடைந்தனன் அவனுக் கின்னே
உண்டியை யுதவி ஆவி கொள்ளுதும் ஊனொ டென்றார். ......
1(என்றிவை புகன்ற)
என்றிவை புகன்ற பின்னர் இளவல்வா தாவி யென்போன்
குன்றதன் புடையில் ஓர்சார் கொறியுருக் கொண்டு போந்து
மென்றழை புதலின் மேய வில்வலன் என்னு மேலோன்
ஒன்றிய புலத்தின் மிக்கோர் உருவுகொண் டுற்றான் அன்றே. ......
2(மீதுறு சடையும்)
மீதுறு சடையும் நீறு விளங்கிய நுதலும் வேடங்
காதணி குழையின் சீருங் கண்டிகைக் கலனும் மேற்கொள்
பூதியுந் தண்டுங் கையும் புனையுரி யுடையு மாக
மாதவ வேடந் தாங்கி முனிவனேர் வல்லை சென்றான். ......
3(மெய்தரு புறத்து)
மெய்தரு புறத்துக் காமர் வியனுருக் கொண்டு தன்னுட்
கைதவங் கொண்டு செங்கேழ்க் காஞ்சிரங் கனிபோல் மேய
மைதிகழ் மனத்தன் நேர்போய் வண்டமிழ் முனிவற் போற்றி
ஐதென வணங்கி முக்கால் அஞ்சலி செய்து சொல்வான். ......
4(அடிகள்நீர் போத)
அடிகள்நீர் போத இந்நாள் அருந்தவம் புரிந்தேன் இன்று
முடிவுற வந்தீர் யானும் முனிவர்தம் நிலைமை பெற்றேன்
கொடியனேன் இருக்கை ஈதால் குறுகுதிர் புனித மாகும்
படியென உரைத்துப் பின்னும் பணிந்தனன் பதங்கள் தம்மை. ......
5(பணிதலும் ஒருதன்)
பணிதலும் ஒருதன் கையிற் பரவையம் புனலை வாரி
மணிபடு பதுமம் போல வாய்க்கொளும் முனிவன் தீயோன்
துணிவினை யுணரா னாகித் துண்ணென வுவகை தோன்ற
இணையறு தவத்தின் மிக்கோய் எழுதியென் றிதனைச் சொற்றான். ......
6(ஆறெதிர் எண்)
ஆறெதிர் எண்ம ராகும் ஆயிர முனிவர் தம்பால்
வேறுள தவத்தர் தம்பால் மிக்கநின் னியற்கை தன்னில்
கூறுசெய் அணுவின் காறுங் குணமில சரதம் ஈது
தேறுதி இருக்கை யேது செல்லுதும் வருக வென்றான். ......
7(என்றருள் முனியை)
என்றருள் முனியை நோக்கி ஈதென துறையுள் என்னச்
சென்றனன் முடிவான் வந்த தீயவன் அவற்கொண் டேகி
மன்றதன் இருக்கை யுற்று மரபுறு தவிசிற் சேர்த்திப்
பொன்றிகழ் அடிகட் கேற்ற பூசனை புரிந்து சொல்வான். ......
8(எந்தைநீ யானும்)
எந்தைநீ யானும் ஏனை என்குலத் தவரும் உய்ய
வந்தனை போலும் இந்நாள் மற்றென திருக்கை வைகி
வெந்திடு புற்கை யேனும் மிசைந்தனை எனக்குச் சேடந்
தந்தருள் புரிந்து போதி தவத்தரில் தலைவ என்றான். ......
9(சொல்வல முனிவர்)
சொல்வல முனிவர் மேலோன் சூர்முதன் மருகா யுள்ள
வில்வலன் மாற்றங் கேளா விழுமிது பரிவின் மிக்கோய்
ஒல்வதோர் உணவு நின்பால் உவந்தியாம் அருந்திப் பின்னர்ச்
சொல்வது கடனா மென்று செப்பினன் தீமை தீர்ப்பான். ......
10(மேலவன் இதனை)
மேலவன் இதனைக் கூற வில்வலன் வணங்கி எந்தாய்
சீலமோ டடிசில் செய்வன் சிறிதுபோ திருத்தி யென்று
காலையங் கதனில் ஆண்டோர் கயப்புனல் படிந்து மூழ்கிச்
சாலவும் புனித னாகி அடுவதோர் சாலை புக்கான். ......
11(அத்தலை நிலத்தை)
அத்தலை நிலத்தை நீரால் ஆமயம் பூசி யாண்டுஞ்
சித்திரம் உறுத்தி யாவுந் தேடிவால் வளையின் சின்னம்
ஒத்ததண் டுலமா சேக ஒண்புன லிடையே இட்டு
முத்திறம் மண்ணி மற்றோர் முழுமணிக் குழிசி உய்த்தான். ......
12(தாக்குறு திறலின்)
தாக்குறு திறலின் வெய்ய தழல்பொதி கருவி யான
ஆக்கிய செய்த தொன்றில் அழலினை அதனுள் மூட்டித்
தேக்ககில் ஆர மாட்டிச் சீருணத் தசும்ப ரொன்றில்
வாக்கிய வுலைப்பெய் தேற்றி மரபில்வால் அரியுள் ளிட்டான். ......
13(பதனறிந் துண்டி)
பதனறிந் துண்டி யாக்கிப் பாலுற வைத்துப் பின்னர்
முதிரையின் அடிசி லட்டு முன்னுறு தீம்பால் கன்னல்
விதமிகும் உணாக்கள் யாவும் மேவுற அமைத்துக் கொண்டு
புதுமணங் கமழுந் தெய்வப் புனிதமாங் கறியுஞ் செய்தான். ......
14(ஆற்றலால் மேடம்)
ஆற்றலால் மேடம் போலாய் ஆரிடர் உயிரை யெல்லாம்
மாற்றுவான் அமைந்து நின்ற இளவலை வலிதிற் பற்றிக்
கூற்றமே போல மேவும் முனிவன்முற் கொணர்ந்து கையில்
ஏற்றகூர்ங் குயத்தாற் காதி இருதுணி யாக்கி னானே. ......
15(அணிப்படு போர்வை)
அணிப்படு போர்வை நீக்கி அங்கமும் அகற்றி வாளால்
துணிப்பன துணித்தும் ஈர்ந்துஞ் சுவைத்திடும் உறுப்பூன் எல்லாங்
குணிப்பொடு குட்ட மிட்டுக் குழிசிகள் பலவிற் சேர்த்தி
மணிப்புனல் கொண்டு முக்கால் மரபினால் மண்ணல் செய்து. ......
16(உரைத்தவக் கறிக்கு)
உரைத்தவக் கறிக்கு வேண்டும் உவர்முதல் அமைந்த நல்கி
வருத்துறு கனன்மேற் சேர்த்தி வாலிதிற் புழுக்கல் செய்தே
அரைத்திடு கறியின் நுண்தூள் ஆதிதூய் இழுது பெய்து
பொரிப்பன பொரித்திட் டாவி போந்திடா வண்ணம் போற்றி. ......
17(கறியினுண் பொடியும்)
கறியினுண் பொடியும் ஏனைக் கந்தமார் துகளும் அந்நாள்
வறையல்போ குற்ற தூய வாலரிப் பொடியும் நீவி
உறைகெழு துப்பும் வாக்கி யொழுகுபல் காயங் கூட்டித்
திறனொடும் அளாவி யாங்கோர் சிற்சில பாகு செய்து. ......
18(பின்னரும் பலகால்)
பின்னரும் பலகால் வேண்டும் பெற்றியிற் கரித்துச் செம்மி
முன்னுற அளிக்க நின்ற முதிரையின் புழுக்கல் அட்டுச்
செந்நல நீடுங் கன்னல் தீம்புளிங் கறியுஞ் செய்யா
அன்னதோர் தொடக்கம் யாவும் அருளினன் அருளி லாதான். ......
19(ஆசினி வருக்கை)
ஆசினி வருக்கை யாதி அளவையில் கனிகள் கீறித்
தேசமர் கன்னல் தீந்தேன் சேர்தரச் சிவணி யேனை
வாசமும் மலரும் இட்டு வரம்பில அமைத்துப் புத்தேள்
பூசனைக் குரிய அன்பாற் பொருக்கெனக் குவவு செய்தான். ......
20(குய்வகை யுயிர்ப்பின்)
குய்வகை யுயிர்ப்பின் மாந்திக் குவலயம் விரும்பு கின்ற
ஐவகை உணவும் ஆறு சுவைபட அளித்துப் பின்னும்
எவ்வகை யனவுந் தானே இமைப்பினில் அமைத்து வல்லே
கவ்வையி னோடுஞ் சென்று கடமுனி கழல்மேல் தாழ்ந்தான். ......
21(எந்தைநீ இன்ன)
எந்தைநீ இன்ன காலை இரும்பசி யுடற்ற ஆற்ற
நொந்தனை போலும் மேனி நுணங்கினை தமியேன் ஈண்டுத்
தந்தனன் உணவி யாவுந் தளர்வற நுகரு மாறு
வந்தருள் என்று வேண்ட மற்றதற் கியைந்து போனான். ......
22(அட்டிடு சாலை)
அட்டிடு சாலை மாட்டே அகத்தியற் கொடுபோய் ஆங்கண்
இட்டதோர் இருக்கை தன்னில் இருத்தியே முகமன் கூறி
மட்டுறு தூநீர் கந்த மலர்புகை தீபங்கொண்டு
பட்டிமை நெறியிற் பூசை புரிந்துபின் பதநேர் குற்றான். ......
23வேறு(தெள்ளுஞ் சுடர்)
தெள்ளுஞ் சுடர்ப்பொன் இயல்கின்ற தட்டை திருமுன்னர் வைத்து நிரையா
வள்ளங்கள் வைத்து மிகுநாரம் உய்த்து மரபில் திருத்தி மறையோன்
உள்ளங் குளிர்ப்ப அமுதன்ன உண்டி யுறுபேதம் யாவும் உதவா
வெள்ளம் படைத்த நறுநெய்ய தன்கண் விட்டான்தன் னாவி விடுவான். ......
24(முறைவைப்பு நாடி)
முறைவைப்பு நாடி முதன்மைக்கண் மேவு முதிரைப் புழுக்கல் மறியின்
கறிவர்க்கம் ஏனை யவைசுற்றின் மேய கவினுற்ற கிண்ண மிசையே
உறவிட்டு நீட மதுரித்த யாவும் உடனுய்த் தொழிந்த வளனுஞ்
செறிவித்து மேலை முனிகைக்குள் நீடு சிரகத்தின் நீரு தவினான். ......
25(பெருநீர் அடங்கு)
பெருநீர் அடங்கு சிறுகையி னூடு பெறவுய்த்த தோயம் அதனை
இருபான்மை உண்டி யதுசூழும் வண்ண மிசையோடு சுற்றி யதுதான்
ஒருகால் நுகர்ந்து பலகாலி னுக்கும் உதவிப்பின் உள்ள படியும்
அருகாது செய்து மிகவே விரும்பி அயில்வான் தவங்கள் பயில்வான். ......
26(அடுகின்ற உண்டி)
அடுகின்ற உண்டி கறிவர்க்க மேனை அவையன்பி லாத அசுரன்
இடுகின்ற தேது முடிவெய்து காறும் இனிதுண்டு பின்றை முனிவன்
கடிகொண்ட நாரம் அனையன் கொணர்ந்து கரமுய்ப்ப நுங்கி யெழுவான்
பொடிகொண்டு தன்கை மலர்நீவி மிக்க புனல்கொண்டு மண்ணல் புரியா. ......
27(மைக்காரின் மெய்)
மைக்காரின் மெய்யன் அருள்கின்ற நாரம் வாய்க்கொண் டுமிழ்ந்து பலகால்
முக்காலின் நுங்கி வாய்பூ சறுத்து முறைநாடி அங்க மெவையும்
மிக்கானுமூறு புரியாவ தன்றி வேறுள்ள செய்கை பலவும்
அக்காலை யங்கொர் புடையுற் றியற்றி அவண்வீற் றிருக்கும் அளவில். ......
28(வேதா அளித்த)
வேதா அளித்த வரமுன்னி யேவில் வலனென்னும் வெய்ய அசுரன்
போதா விருந்த முனியாவி கோடல் பொருளாக நெஞ்சின் நினையா
வாதாவி மைந்த இளையாய் விரைந்து வருகென்று கூற முனிவன்
தீதார் வயிற்றின் இடையே எழுந்து திறல்மேட மாகி மொழிவான். ......
29வேறு(எண்ணாம லேமுன்பு)
எண்ணாம லேமுன்பு கடலுண்ட தேபோல எனதூனும் உண்ட கொடியோன்
உண்ணாடும் உயிர்கொண்டு வலிகொண்டு குறிதான உதரங் கிழித்து வருவன்
அண்ணாவில் வலனேயெ னக்கூறி ஏதம்பி அரிபோல் முழங்கி யிடலும்
மண்ணாடர் புகழ்கும்ப முனிதீயர் செய்திட்ட மாயந் தெரிந்து வெகுள்வான். ......
30(ஊன்கொண்ட கறி)
ஊன்கொண்ட கறியாகி நுகர்வுற்ற வாதாவி உயிர்போகி யுண்ட இயல்பே
தான்கொண்டு முடிகென்று சடரத்தை யொருகாலை தமிழ்வல்ல முனித டவலுங்
கான்கொண்ட எரிமண்டு சிறுபுன் புதற்போன்று கடியோ னுமுடி வாகவே
வான்கொண்ட லெனஅங்கண் முன்னின்ற வன்தம்பி மாய்வுற்ற துன்னி வருவான். ......
31(மெய்க்கொண்ட தொன்)
மெய்க்கொண்ட தொன்னாள் உருக்கொண்டு முனிதன்னை வெகுளுற்றொர் தண்ட மதனைக்
கைக்கொண்டு கொலையுன்னி வருபோழ்தில் முனிவன் கரத்தில் தருப்பை ஒன்றை
மைக்கண்டர் படையாக நினைகுற்று விடவில் வலன்றானு மடிவெய்தலும்
அக்கண்ட கக்கள்வர் உறையுற்ற இடம்நீங்கி அப்பால் அகன்ற னனரோ. ......
32ஆகத் திருவிருத்தம் - 3050