(திண்டிறன் மாயை)
திண்டிறன் மாயையின் செம்மல் இத்திறம்
அண்டர்தந் துறக்கமேல் அடைந்த காலையிற்
பண்டிமை யோர்களாற் படருந் தானவர்
கண்டனர் மகிழ்ந்தனர் களிப்பின் மூழ்கினார். ......
1(ஆயவன் வருவதை)
ஆயவன் வருவதை அவுணர் தம்பெரு
நாயகற் கொற்றர்போய் நவில அன்னவன்
தூயநல் லமுதினைக் கிடைத்துத் துண்ணென
மேயின னாமெனக் களிப்பின் மேயினான். ......
2(தானையம் படை)
தானையம் படையொடு தகுவர் கோமக
னானவெஞ் சூர்பெறும் அளப்பில் ஆக்கமுங்
கூனலம் பிறைதவழ் குடுமிச் செஞ்சடை
வானவன் கருணையும் மனங்கொண் டேகினான். ......
3(அன்னவன் புகர்)
அன்னவன் புகர்தனை யடைந்து நங்குல
மன்னனை உற்றிட வல்லை செல்லுவன்
முன்னுற ஏகியெம் முறையுஞ் செய்கையும்
பன்னுதி யென்றுமுன் படர்வ தாக்கினான். ......
4(அன்னதோர் காலையில் அவு)
அன்னதோர் காலையில் அவுணர் தேசிகன்
முன்னுற மானமேல் முடுகி ஏகலுந்
தன்னுறு கிளைஞருந் தானும் ஆங்கவன்
பின்னுற மன்னவன் பெயர்ந்து போயினான். ......
5(மாசறு பேரொளி)
மாசறு பேரொளி மான மீமிசைத்
தேசிகன் விரைவொடு செல்லும் எல்லையில்
காசிபன் அருள்மகன் கண்டு சேணிடை
ஈசனை யெதிர்ந்தென எதிர்கொண் டேகினான். ......
6(அஞ்சலி செய்தனன்)
அஞ்சலி செய்தனன் அவுணன் அத்துணை
நெஞ்சக மகிழ்வொடு நின்று தேசிகன்
விஞ்சுக திருவொடு விசயந் தானெனா
எஞ்சலில் ஆசிகள் எடுத்துக் கூறினான். ......
7(ஆயது காலையில் அனை)
ஆயது காலையில் அனையன் பாங்கரின்
மேயின அரிமுகன் வேழ மாமுகத்
தீயவன் இருவருந் தேரொ டேகியே
தூயதோர் புகர்அடி தொழுது போற்றினார். ......
8(ஏத்திடும் அவர்தம)
ஏத்திடும் அவர்தமக் கியலு ஆற்றினால்
மீத்தகும் ஆசிகள் விளம்பி வேந்தனைப்
பார்த்தனன் உனக்கியாம் படுத்து கின்றதோர்
வார்த்தையுண் டன்னது வகுத்துங் கேட்டிநீ. ......
9(பங்கமில் காசிபன்)
பங்கமில் காசிபன் பன்னி யாகிய
நுங்கையைப் பயந்துளான் நுனித்த கேள்வியான்
சங்கையற் றிருந்ததா னவரைத் தாங்கினான்
எங்களுக் கோர்துணை யென்னுந் தன்மையான். ......
10(ஈண்டையில் வாச)
ஈண்டையில் வாசவன் எதிர்ந்து பற்பகல்
மூண்டிடு வெஞ்சமர் முற்றி வீரத்தைப்
பூண்டனன் ஆதலிற் புழுங்கி மாரிநாள்
மாண்டிடு கதிரென மாழ்கி வைகினான். ......
11(அத்தகு மேலை)
அத்தகு மேலையோன் அவனி மீமிசை
வித்திடு நாறுசெய் விளைவு காணுறா
எய்த்திடு நிரப்பினன் என்ன நின்னையே
நித்தலும் நோக்கினான் சிறுமை நீங்கவே. ......
12(தவங்கொடு முந்து)
தவங்கொடு முந்துநீ தழலை வேட்டதுஞ்
சிவன்புரி வரங்களுஞ் செப்பக் கேட்டனன்
உவந்தனன் ஆகுலம் ஒழித்து வைகினான்
நிவந்தன ஆங்கவன் நெடிய தோள்களே. ......
13(பற்றலர் புரமடு)
பற்றலர் புரமடு பரமன் ஈந்திடப்
பெற்றதோர் வரத்தொடு பெயர்ந்தி யாரையும்
வெற்றிகொண் டிவண்வரும் மேன்மை கேட்புறா
மற்றுனை அடைந்திட வருகின் றானெனா. ......
14(வன்றிறல் அவுணர்)
வன்றிறல் அவுணர்கோன் வருதல் காட்டியே
புன்றொழில் படுத்திய புகரு ரைத்தலுந்
துன்றிய கனைகழற் சூர னென்பவன்
நின்றனன் உவகையால் நிறைந்த நெஞ்சினான். ......
15(ஆர்ந்ததொல் கிளை)
ஆர்ந்ததொல் கிளையொடும் அவுணர் காவலன்
சேர்ந்தனன் சூரனைச் செங்கையால் தொழாப்
பேர்ந்திடும் ஆவியைப் பிரிந்த தோருடல்
சார்ந்திடு கின்றதோர் தன்மை என்னவே. ......
16(ஆயிடை வெய்ய)
ஆயிடை வெய்யசூர் அவுணர் கோவினை
நீயினி திருத்திகொல் என்ன நீயுளை
தீயன அடையுமோ சிறுமை எய்துமோ
மேயநுங் குலமுறை விளங்கத் தோன்றினாய். ......
17(என்றிவை நயமொழி)
என்றிவை நயமொழி இயம்பி யேபுடை
சென்றன மாயையின் செய்ய காதலன்
துன்றிய தகுவர்தம் அனிகஞ் சூழ்தர
வென்றியொ டவனிமேல் விரைவின் மீளவே. ......
18வேறு(மண்ணுல கத்தில்)
மண்ணுல கத்தில் வெஞ்சூர் வந்தனன் எனுஞ்சொற் கேளா
அண்ணலங் கமலத் தேவும் அமரர்கோ மானும் ஏனை
விண்ணவ ராயுள் ளோரும் வியத்தகு முனிவர் யாருந்
துண்ணென வந்து மாயோன் துயில்கொளுங் கடலிற் புக்கார். ......
19(கொய்துழாய் அலங்கல்)
கொய்துழாய் அலங்கல் மோலிக் குழகனைக் குறுகி நின்று
கைதொழு திறைஞ்சித் தாங்கள் கனைகழற் சூரன் தன்னால்
எய்திடு சிறுமை யெல்லாம் இயம்பினர் இனிமேல் யாங்கள்
செய்திடு கின்ற தென்கொல் செப்புதி பெரும வென்றார். ......
20(அன்றவர் உரைத்த)
அன்றவர் உரைத்த மாற்றம் அச்சுதக் கடவுள் கேளாப்
புன்றொழில் தக்கன் வேள்வி புகுந்திடுந் தீமை தன்னால்
இன்றிது பொருந்திற் றம்மா யாரிது விலக்கற் பாலார்
ஒன்றினிச் செய்யுந் தன்மை கேண்மின்என் றோத லுற்றான். ......
21(பண்டெயின் மூன்று)
பண்டெயின் மூன்றும் அட்ட பராபரன் வரம்பெற் றுள்ளான்
அண்டமெங் கெவையும் வென்றான் ஆதலால் நம்மால் வென்றி
கொண்டிடு திறத்தான் அல்லன் கொடியவச் சூரன் தன்னைக்
கண்டுசென் றிடுதும் ஈதே காரியம் போலு மென்றான். ......
22(செங்கம லத்தோ)
செங்கம லத்தோ னாதி தேவரும் முனிவர் யாரும்
இங்கிது கரும மென்றே இசைந்தன ராகி நிற்ப
அங்கவ ரோடு மாயோன் அரவணைப் பள்ளி நீங்கித்
துங்கம துடைய தொல்சீர்ச் சூரனைக் காண வந்தான். ......
23(மருத்துழாய் மவுலி)
மருத்துழாய் மவுலி யாதி வானவர் முனிவர் யாருந்
திருத்தகு சூரன் நேரே சென்றுநின் றாசி கூறி
அருத்திய தாகப் போற்ற அவர்களுட் பதினோர் கோடி
உருத்திரர் தொகுதி யானோர் ஒருங்குடன் நிற்பக் கண்டான். ......
24(கண்டிடும் அவுணர்)
கண்டிடும் அவுணர் தங்கள் காவலன் இமையா முக்கண்
அண்டர்தம் பெருமான் என்ன அமைந்ததொல் வடிவ முள்ளார்
எண்டரு தொகையின் மிக்கார் ஈங்கிவர் யாவ ரென்னத்
தண்டுள வலங்கல் மோலிப் பண்ணவன் சாற்றல் உற்றான். ......
25ஆகத் திருவிருத்தம் - 2733