Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

previous padalam   12 - திக்குவிசயப் படலம்   next padalamthikkuvisayap padalam

Ms Revathi Sankaran (7.12mb)
(1 - 70)Ms Revathi Sankaran (6.78mb)
(71 - 136)
(குணங்கள் பற்பல)

குணங்கள் பற்பல உணர்த்திய குரவன்றன் கழல்கள்
     வணங்கி வாளரி முகனொடு விடைகொண்டு வயமான்
          அணங்கு வைகிய திறலுடைச் சூரர்கோன் அவுணர்
               இணங்கு தானையங் கடலிடைப் புக்கனன் இமைப்பில். ......    1

(சேனை யின்றலை)

சேனை யின்றலை புகுதலுந் தாரகன் சென்று
     கோனை வந்தனை செய்துதன் முன்னவற் குறுகி
          ஆன பான்மையின் வணங்கிமுன் னின்றிட ஆசான்
               போன எல்லையிற் புகன்றன பரிசெலாம் புகன்றான். ......    2

(ஆவ தாகிய பரி)

ஆவ தாகிய பரிசெலாங் கேட்டுணர்ந் தவனுந்
     தாவி லாததன் மனங்கொடு நன்றிது தலைவ
          மேவ லார்களை யாமினி வென்றிட விரைவில்
               போவ தேகடன் என்றனன் அன்னதோர் பொழுதின். ......    3

(அந்தி வார்சடை)

அந்தி வார்சடைக் கண்ணுதற் கடவுள்தன் அருளான்
     மைந்தர் மூவரும் பெற்றதொல் வரங்களும் வலியுஞ்
          சிந்தை யுள்ளுற நாடியே யளியொடுஞ் சேணில்
               வந்து தோன்றினள் தொல்லைநாள் நோற்றிடு மாயை. ......    4

(தோன்று மெல்லை)

தோன்று மெல்லையின் முந்துறக் கண்டுவெஞ் சூரன்
     ஆன்ற தம்பியர் தம்மொடும் அசமுகி யோடும்
          ஊன்றும் அன்பொடு பணிதலும் அன்னைதன் உள்ளம்
               ஈன்ற ஞான்றினும் உவந்தனள் ஆசிகள் இசைத்தாள். ......    5

(ஆசி கூறியே)

ஆசி கூறியே வேள்வியிற் செய்கையும் அதனுக்
     கீசன் நல்கிய வரங்களுங் கேட்டனன் ஈண்டு
          நேச மோடுமைக் காணிய வந்தனன் நீவிர்
               வாச வன்முத லோர்தமை வெல்லுதிர் வலியால். ......    6

(வென்ற பின்னர்)

வென்ற பின்னர்எவ் வுலகமும் புரந்துமே தினியில்
     என்றும் வாழுதிர் மாயைகள் வேண்டிடின் என்னை
          ஒன்றும் அன்புடன் உன்னுதிர் உன்னிய பொழுதே
               சென்று வெஃகிய தன்மைகள் செய்தியான் முடிப்பேன். ......    7

(ஈத லால்உமை)

ஈத லால்உமைப் பிரியலன் பன்முறை யானே
     காத லோடுமைக் காணிய செல்குவன் கலந்து
          பேத நீரற இருத்திரால் ஈண்டெனப் பேசி
               மாதும் ஏகினள் மைந்தர்கள் மூவரும் வணங்க. ......    8

(தோடு லாவிழி)

தோடு லாவிழிப் பொற்றொடி ஏகலுஞ் சூரன்
     கோடி தேருடன் தானவர் தங்களைக் கூவி
          நீடு நம்பெருந் தானைகள் நிதிபதிக் கேகப்
               பாடல் மாமுர சறைமினோ கடிதெனப் பணித்தான். ......    9

(அரசன் ஏவலும்)

அரசன் ஏவலும் அவுணர்கள் அன்னவா றறைந்து
     முரசம் எற்றினர் கேட்டலும் அத்திசை முன்னி
          உரைசெய் நான்முகன் உறங்குழிப் புவிகொள ஒருங்கே
               திரைசெய் வான்கடல் சென்றெனச் சென்றது சேனை. ......    10

(பத்து நூறுடன்)

பத்து நூறுடன் ஆயிர மாதியாய்ப் பலவாங்
     கொத்து நீடிய சென்னியர் கொடுமைசேர் குணத்தோர்
          மெத்து பல்படை ஏந்திய கரத்தினர் விறலோர்
               கத்து வார்கடல் ஆர்ப்பினர் அவுணர்தங் கணத்தோர். ......    11

(விண்ணிற் பாய்வன)

விண்ணிற் பாய்வன இரவிதேர் பாய்வன வேலைக்
     கண்ணிற் பாய்வன திசைகளிற் பாய்வன கனல்மேற்
          பண்ணிற் பாய்வன வரைகளிற் பாய்வன பரவை
               மண்ணிற் பாய்வன புரவிகள் அளப்பில மாதோ. ......    12

(பாறு சென்றிட)

பாறு சென்றிடக் கொடியினஞ் சென்றிடப் பலபேய்
     வேறு சென்றிடப் பாரிடஞ் சென்றிட விண்மேல்
          மாறு சென்றிடப் பிளிறொலி சென்றிட மதநீர்
               ஆறு சென்றிடச் சென்றன யானையின் அனிகம். ......    13

(மேருச் சையமுங்)

மேருச் சையமுங் கயிலையும் அல்லது வேறு
     நேரற் கொத்திடு கிரிமிசைச் செல்வன நீலக்
          காரிற் செல்வன விண்மிசைச் செல்வன கடல்சூழ்
               பாரிற் செல்வன செல்வன ஆழியம் பஃறேர். ......    14

(மூன்று கோடியோ)

மூன்று கோடியோ சனையதாய் நாற்றிசை முற்றும்
     ஆன்ற வெல்லையின் அவ்வகைத் தாகிய அனிகம்
          ஏன்று சென்றன சென்றதோர் அளவையின் இனன்போல்
               தோன்று பொன்சுடர் அளகையை அடைந்தன தூசி. ......    15

(பூதம் ஐந்தினும்)

பூதம் ஐந்தினும் மிகவலி யுடையது பொலன்சேர்
     ஆத வன்றனித் தேரினுஞ் சிறப்புற்ற தவனில்
          சோதி பெற்றது பேருணர் வுள்ளது தொல்சீர்
               மாதி ரங்களை அகற்சியான் மறைப்பது மன்னோ. ......    16

(என்று மேயழி)

என்று மேயழி வில்லது மேருவோ டிகலுங்
     குன்று போலுவ தகிலமும் இமைப்பினிற் குறுகிச்
          சென்று மீள்வது குறிப்பினிற் செல்வது சிதையா
               ஒன்று கோடிய வாம்பரி பூண்டுள தொருங்கே. ......    17

(அழிவி லாப்பல)

அழிவி லாப்பல சாரதி உள்ளதங் களப்பில்
     விழுமி தாகிய படையெலாங் கொண்டது மேவார்
          ஒழிய அன்னவர் தேர்மிசைச் செல்லுவ துருமேற்
               றெழிலி அச்சுறப் பன்மணி கறங்குவ தென்றும். ......    18

(பாரை நேர்தரு)

பாரை நேர்தரு பரப்பின துலகெலாம் படைத்த
     நாரி பாதியன் அளித்தருள் இந்திர ஞாலத்
          தேரின் மால்வரை மிசையுறும் வயப்புலி செலல்போல்
               சூரன் ஏறியே போந்தனன் அவுணர்கள் தொழவே. ......    19

(ஆண்டவ் வெல்லையில்)

ஆண்டவ் வெல்லையில் ஆயிர மாயிரம் யாளி
     தாண்டு வெம்பரி ஆயிர மாயிரந் தடந்தோள்
          நீண்ட பாரிடம் ஆயிர மாயிர நிரலே
               பூண்ட தேர்மிசை ஏறியே அரிமுகன் போந்தான். ......    20

(காலும் உள்ளமும்)

காலும் உள்ளமும் பின்னுற முன்னுறு கவனக்
     கோல மாப்பதி னாயிரம் பூண்டதோர் கொடிஞ்சிச்
          சால மார்தரு வையமேற் புகுந்துதா ரகனும்
               ஆல மென்பது சென்றென நடந்தனன் அன்றே. ......    21

(அன்ன தாரக)

அன்ன தாரக வீரனும் அரிமுகத் தவனும்
     மன்ன னோர்இரு பாங்கரு மாயினர் வந்தார்
          துன்னு தானவத் தானையந் தலைவர்கள் தொலையாப்
               பொன்னின் மாமணித் தேரொடும் ஏகினர் புடையில். ......    22

(விரவு கின்றதோர்)

விரவு கின்றதோர் ஏனையர் சேனையின் வீரர்
     கரியெ னுங்கடல் மீதினுங் கலினமார் கவனப்
          பரியெ னுங்கடல் மீதினும் முதல்வனைப் பரவி
               இரும ருங்கினும் போயினர் கூற்றனும் இரங்க. ......    23

(அடல்செ றிந்திடும்)

அடல்செ றிந்திடும் ஒன்பதிற் றிருவகை யாகும்
     படைக ளேந்தியே அளவிலா அவுணர்கள் பரவிக்
          கடல்கி ளர்ந்தவண் சூழ்வன போன்றுகா வலர்தம்
               புடையில் வந்தனர் அசனியும் அச்சுறப் புகல்வார். ......    24

(இன்ன தன்மையி னாற்)

இன்ன தன்மையி னாற்படை சூழ்தர இதன்பாற்
     துன்னு தேரென உள்ளவுந் துரகமுள் ளனவும்
          பன்னெ டுங்கரி உள்ளவும் அவுணர்கள் பலரும்
               மன்னி வந்திட நடுவுற ஏகினன் மன்னன். ......    25

(வயங்க ளார்த்திடு)

வயங்க ளார்த்திடு தானவ ரோதையும் மான்தேர்
     அயங்க ளார்த்திடு மோதையும் அன்னவை அணித்தாய்க்
          கயங்க ளார்த்திடு மோதையுங் கண்டையின் கலிப்பும்
               இயங்க ளார்த்திடு மோதையும் மிக்கன வெங்கும். ......    26

(அரியெ னுந்திறல்)

அரியெ னுந்திறல் அவுணர்கள் அங்கையி லேந்தும்
     உரிய வெம்படை முழுவதும் ஒன்றொடொன் றுரிஞ்ச
          எரிபி றந்தன செறிந்தன எம்பிரான் முனிந்த
               புரமெ னும்படி யாகிய வரைகளும் புவியும். ......    27

(நிரந்த தானவர்)

நிரந்த தானவர் எழுந்திடப் பூழிகள் நிலமேற்
     பரந்து வானகம் புகுதலும் அனையது பாரா
          விரிந்து போவதை நீங்கியே அவைதனை எய்தக்
               கரந்து வைகினன் ஆழியந் தேருடைக் கதிரோன். ......    28

(பூந டுங்கின)

பூந டுங்கின பணிக்குலம் நடுங்கின புரைதீர்
     வான டுங்கின மாதிரம் நடுங்கின வரைகள்
          தாந டுங்கின புணரிகள் நடுங்கின தறுகட்
               டீந டுங்கின நிருதர்கோன் பெரும்படை செல்ல. ......    29

(இனைய தன்மையிற் சேனை)

இனைய தன்மையிற் சேனைகள் தம்மொடும் இறைவன்
     தனதன் மாநகர் வளைந்தனன் அன்னதோர் தன்மை
          வினவி யோடியே தூதுவர் இயக்கர்கோன் மேவுங்
               கனக மாமணிக் கோநகர் சென்றனர் கடிதின். ......    30

வேறு

(சென்றிடும் ஒற்றர்)

சென்றிடும் ஒற்றர் தங்கோன் சேவடிக் கமலந் தாழ்ந்து
     வன்றிறற் சூர பன்மன் மாநகர் வளைந்து கொண்டான்
          இன்றினி யழியும் போலும் ஈண்டுநீ யிருத்தல் சால
               நன்றல அனிகத் தோடு நடத்தியால் அமருக் கென்றார். ......    31

(தூதுவர் உரைத்தல்)

தூதுவர் உரைத்தல் கேளாத் துன்புகூர் துளக்க மெய்தி
     ஏதமில் அவுணர் தம்மை யாம்வெலற் கரிது முக்கண்
          ஆதிதன் வரங்கொண் டுள்ளார் அவர்ப்புகழ்ந் தாசி செய்வான்
               போதுதல் கடனே யென்னாப் பொருக்கென எழுந்து போனான். ......    32

(போயினன் அளகை)

போயினன் அளகை அண்ணல் புட்பக மீது சென்று
     தூயதோர் இயக்க ரோடுஞ் சூரனைத் தொழுது போற்றி
          ஏயின ஆசி கூறி யான்நுமக் கடிய னென்ன
               நீயினி திருத்தி யென்றே விடுத்தனன் நிருதர் போற்ற. ......    33

வேறு

(அன்னது கண்டுழி)

அன்னது கண்டுழி அவுணர் மாப்படை
     மின்னவிர் முகிலினம் வெருவ ஆர்த்தன
          துன்னுறும் இனையவ ரோடுஞ் சூரனாம்
               மன்னவன் அவ்வழி மகிழ்ச்சி எய்தினான். ......    34

(அதுபொழு தவுணர்கள்)

அதுபொழு தவுணர்கள் அளகை யூடுபோய்
     நிதிகளும் மணிகளும் நீடு மானமுஞ்
          சிதைவறு படைகளுந் தேரும் மாக்களுங்
               கதிகெழு களிறுடன் கவர்ந்து மேவினார். ......    35

(மைம்மலி தானவர்)

மைம்மலி தானவர் வலிந்து வவ்வலாற்
     பொய்ம்மையில் பெருவளம் யாவும் போக்கிய
          செம்மையில் அந்நகர் திருவும் நீங்கிய
               கைம்மைதன் வடிவெனுங் காட்சித் தாயதே. ......    36

(ஆறலை கள்வரின்)

ஆறலை கள்வரின் அவுணர் யாவருஞ்
     சூறைகொண் டந்நகர் தொலைத்துப் போதலும்
          ஊறுகொள் நிதிபதி உள்ளம் நாணியே
               வீறகல் அளகையின் மீண்டும் ஏகினான். ......    37

(ஆண்டுறு தனத)

ஆண்டுறு தனதனை அடித்தொண் டாற்றுவான்
     மாண்டனன் இவனென மனத்தி லுன்னியே
          ஈண்டிய தானையொ டிமைப்பிற் பாகரைத்
               தூண்டுதிர் தேரெனச் சூரன் போயினான். ......    38

(அளகையை நீங்கி)

அளகையை நீங்கியே ஆசைக் கீறதாய்
     உளநகர் எய்தினன் ஒளிரு நீலமார்
          களனுரு வெய்திய கடவுள் வைகிய
               வளநகர் ஈதென மன்னன் உன்னினான். ......    39

(அந்தமா நகரை)

அந்தமா நகரைவிட் டவுணர் கோமகன்
     முந்துதன் படையொடு முனிந்து கீழ்த்திசை
          இந்திரன் நகர்புக இதனை நாடியே
               வெந்துயர் அமரர்கோன் விண்ணிற் போயினான். ......    40

(போயதை நாடி)

போயதை நாடிஅப் புரத்தை முற்றவுங்
     காயெரி கைக்கொளக் கடிதின் நல்கியே
          ஆயிடை அனிகமோ டகன்று வெய்யசெந்
               தீயுறு நகரிடைச் சேறல் மேயினான். ......    41

(சேறலும் நாடிய)

சேறலும் நாடியத் தீயின் பேரினான்
     ஈறகல் வெஞ்சினம் எய்தி ஆயிர
          நூறெனுங் கோடியர் நொய்திற் சூழ்தர
               மாறிகல் புரிந்திட வந்து நேர்ந்தனன். ......    42

(நேர்தலும் அங்கிதன்)

நேர்தலும் அங்கிதன் நீடு தானையுஞ்
     சார்தரும் அவுணர்தம் படையுந் தாமுறாப்
          போர்தலை மயக்குறப் பொருத எல்லையிற்
               சூர்தரு கனல்படை தொலைந்து போயதே. ......    43

(தன்படை உடைத)

தன்படை உடைதலுந் தழலின் பண்ணவன்
     துன்படை மனத்தனாய்த் தொல்லை ஊழிநா
          ளின்படை உலகெலாம் ஈறு செய்திடு
               வன்படை பேருரு வல்லை தாங்கினான். ......    44

(சிறந்திடும் அவுணர்)

சிறந்திடும் அவுணர்கோன் சேனை மாக்கடல்
     வறந்திட இப்பகல் மாய்ப்பன் யானெனா
          நிறைந்திடும் அவுணமா நீத்தம் எங்கணுஞ்
               செறிந்தனன் வளைந்தனன் சிதைத்தல் மேயினான். ......    45

(கடல்கெழு சேனை)

கடல்கெழு சேனையைக் கலந்து பாவகன்
     சடசட முதிரொலி தழங்கப் புக்குலாய்
          அடலுறு மெல்லையில் அதுகண் டாழிவாய்
               விடமென உருத்தனன் வீரன் தாரகன். ......    46

(உருத்திடு தாரகன்)

உருத்திடு தாரகன் ஒருதன் தேரொடு
     மருத்தினும் விசையுற வந்து தானையை
          எரித்திடும் அங்கியை எதிர்ந்து செங்கையில்
               தரித்திடு கார்முகந் தன்னை வாங்கினான். ......    47

(வானவர் தமையும்)

வானவர் தமையும்இவ் வன்னி தன்னையும்
     ஏனையர் தம்மையும் முடிப்பன் இன்றெனாத்
          தேனிவர் இதழியந் தேவன் மாப்படை
               ஆனதை எடுத்தனன் அருச்சித் தேத்தியே. ......    48

(எடுத்திடு மெல்லை)

எடுத்திடு மெல்லையில் எரிகண் டிங்கிது
     தொடுத்திடின் உலகெலாந் தொலைக்கும் என்னையும்
          முடித்திடும் நான்முகன் முதலி னோரையும்
               படுத்திடும் இன்றெனப் பையுள் எய்தினான். ......    49

(சுடுங்கனற் கடவுளு)

சுடுங்கனற் கடவுளுஞ் சுருக்கித் தன்னுரு
     ஒடுங்கினன் ஆகுலம் உற்றுச் சிந்தையும்
          நடுங்கினன் தாரகன் முன்னர் நண்ணினான்
               கடுங்கதி அதனொடுங் கரங்கள் கூப்பியே. ......    50

(தோற்றுவித் துல)

தோற்றுவித் துலகெலாந் தொலைக்கும் எம்பிரான்
     மாற்றரும் படைக்கலம் மற்றென் மேல்விடப்
          போற்றினை எடுத்திஎப் புவனத் துள்ளவர்
               ஆற்றலும் உயிர்களும் அதன்முன் நிற்குமோ. ......    51

(கழிதரு சினங்கொள)

கழிதரு சினங்கொளல் கடவுள் மாப்படை
     விழுமிய தன்னதை விடுத்து ளாயெனின்
          அழிதரும் உலகெலாம் அதுவும் அன்றியே
               பழிபெறும் அன்னதோர் படையின் வேந்துமே. ......    52

(பொறுத்தியென் பிழை)

பொறுத்தியென் பிழையெனப் போற்றி நிற்றலும்
     கறுத்திடு மிடறுடைக் கடவுள் மாப்படை
          செறுத்தவன் மீமிசைச் செல்ல விட்டிலன்
               மறுத்தனன் சினத்தினை மகிழ்ச்சி எய்தினான். ......    53

(எற்றிடும் எற்றிடும்)

எற்றிடும் எற்றிடும் இவனை வல்லையிற்
     செற்றிடுஞ் செற்றிடுந் தீயன் சாலவுங்
          குற்றிடுங் குற்றிடு மென்று கூறியே
               சுற்றினர் அவுணர்கள் தீயைச் சூழவே. ......    54

(தானவர் யாரையும்)

தானவர் யாரையும் விலக்கித் தாரகன்
     நீநம தேவலின் நிற்றி நின்னுயிர்
          போனதை உதவினம் போதி போதிநின்
               மாநக ரிடையென வல்லை கூறினான். ......    55

(விடுத்தனன் அங்கி)

விடுத்தனன் அங்கியை விடுக்கு முன்னரே
     அடுத்திடு தானவர் அவன்றன் ஊர்புகா
          மடுத்திடு வளனெலாம் வாரி வாரிமீன்
               படுத்திடு கொலைஞர்தம் பரிசின் மீண்டனர். ......    56

வேறு

(மீண்டனர் அவுணர்)

மீண்டனர் அவுணர் அங்கி வெள்கியே தன்னூர் புக்கான்
     ஆண்டவண் அகன்று போனான் தாரகன் அவ்வா றெல்லாங்
          காண்டலுஞ் சூர நென்போன் கலினமான் தேரைப் பாக
               தூண்டுதி நடுவன் மேவுந் தொல்லைமா நகரத் தென்றான். ......    57

(கடவுதி தேரை)

கடவுதி தேரை என்னக் கைதொழு தைய நொய்தின்
     அடுதொழில் அவன்பால் உய்ப்பன் அன்னது காண்டி யென்னாப்
          படர்தரும் வலவ ரோடும் பலிங்கன்என் றுரைக்கு மேலோன்
               சுடர்மலி கதிரும் நாணத் துண்ணெனத் தூண்டி ஆர்த்தான். ......    58

(ஆர்த்தன படரு)

ஆர்த்தன படருஞ் சேனை அதிர்ந்தன முரச மெங்கும்
     போர்த்தன கரிதேர் வாசி புகுந்தன பூழி வேலை
          தூர்த்தன துவசம் விண்ணைத் தொடர்ந்தன தூசி யென்னுந்
               தார்த்தொகை முன்ன மேகித் தண்டனூர் உடைந்த வன்றே. ......    59

(அடைதலும் நடுவன்)

அடைதலும் நடுவன் தன்பால் ஆங்கொர்தூ தெய்தி நந்தங்
     கடிநகர் கலந்த அந்தக் காசிப முனிவன் மைந்தர்
          கொடியவெஞ் சேனை யென்னக் கூற்றெனுங் கடவுள் கேளா
               இடியுறும் அரவம் என்ன ஏங்கினன் இரங்கு கின்றான். ......    60

வேறு

(முன்னுறு தனதனும்)

முன்னுறு தனதனும் முளரித் தேவனும்
     மன்னனை யெதிர்கொளா வழுத்திப் போயினார்
          அன்னது புரிவதே அழகி தாமென
               உன்னினன் நடுவனும் உணர்வி னும்பரான். ......    61

(தேற்றமொ டெழு)

தேற்றமொ டெழுந்துதன் மகிடஞ் சேர்ந்தனன்
     ஏற்றமில் படைஞரும் ஈண்ட ஏகியே
          கூற்றுவன் இமைப்பினிற் குறுகிச் சூரனைப்
               போற்றினன் தொழுதனன் புகலும் ஆசியான். ......    62

(திருத்தகு மறலிதன்)

திருத்தகு மறலிதன் செய்கை நோக்கியே
     அருத்தியின் மகிழ்வுறும் அவுணன் நம்பணி
          பரித்தனை யீண்டுநின் பரிச னத்தொடும்
               இருத்தியென் றனையனை ஏவிப் போயினான். ......    63

(இறுதியை இயற்று)

இறுதியை இயற்றுவான் இருக்கை யென்பதோர்
     மறிகடல் அதனிடை வளங்கொள் வாரியைத்
          திறலுறும் அவுணர்தஞ் சேனை சென்றரோ
               முறைமுறை கவர்ந்தன முகிலின் தன்மைபோல். ......    64

(கூற்றுவன் பெருவலி)

கூற்றுவன் பெருவலி குறைந்த வண்ணமும்
     போற்றினன் போயதும் புந்தி உன்னியே
          ஆற்றவும் மகிழ்வுறீஇ அனிக மோடுதென்
               மேற்றிசை நிருதிமேல் விரைவின் ஏகினான். ......    65

(நிருதியும் இஃதெலாம்)

நிருதியும் இஃதெலாம் நேடி யாமிவர்ப்
     பொருவதும் அரியதாற் போரி யற்றினும்
          வருதிறல் இல்லையால் வசைய தேயெனாக்
               கருதினன் அவரொடு கலத்தற் குன்னினான். ......    66

(உன்னினன் தானை)

உன்னினன் தானையோ டொருங்கு மேவியே
     மன்னவன் எதிர்புகா வழுத்தி மற்றவன்
          தன்னடி வணங்கியுன் தமரி யானெனாப்
               பன்னினன் தாரகன் பாங்கர் ஏகினான். ......    67

(அருகுற வருதலும்)

அருகுற வருதலும் அவுணர் கோமகன்
     நிருதியின் நகரினை நீங்கி யேகலும்
          வருணனும் மருத்துவும் வாரி தன்னினும்
               இருள்செறி உலகினும் இமைப்பிற் போயினார். ......    68

(போதலும் அவரவர்)

போதலும் அவரவர் புரத்தைச் சூறைகொண்
     டேதம தியற்றுவித் தெழுவ கைத்தெனும்
          பாதல வுலகினிற் படர்ந்து தானவ
               ராதியர் போற்றிட அருள்செய் தேகினான். ......    69

(உற்றனன் நாகர்)

உற்றனன் நாகர்கோன் உலகில் அன்னவன்
     செற்றமொ டேசெருச் செய்யத் தானையால்
          வெற்றிகொண் டேயவன் வியந்து போற்றிட
               மற்றவன் இருக்கையோர் வைகல் வைகினான். ......    70

(அத்தலை உரகர்)

அத்தலை உரகர்கோன் அமரர் தந்திட
     வைத்திடும் அமுதினை வலிதின் வாங்கியே
          மெய்த்தகு தம்பிய ரோடு மேன்மையால்
               துய்த்தனன் அகன்றனன் சூர பன்மனே. ......    71

(ஏனைய பிலந்தொறும்)

ஏனைய பிலந்தொறும் ஏகி அவ்வயின்
     மேனதோர் விருந்தினை வியப்பின் நாடியே
          மானவர் படையொடும் வல்லை மீண்டனன்
               போனதோர் நிலைதொறும் புகழை நாட்டினான். ......    72

வேறு

(பூவுல கிடையே)

பூவுல கிடையே போந்து புணரியொன் றகன்று மற்றைத்
     தீவினை யொருவிச் சூரன் சேனைமா நீத்தஞ் சூழ
          மாவொடு புவனி போற்ற வரியரா அணையின் நேமிக்
               காவலன் துயில்கூர் பாலின் கடலிடைக் கடிது புக்கான். ......    73

(புக்கதோர் வேலை)

புக்கதோர் வேலை யன்னான் போர்ப்படை அவுணர் யாரும்
     மைக்கடன் மேனி மாயோன் மன்னினன் ஈண்டை யென்னா
          அக்கடல் அதனைத் தொன்னாள் அமரர்கள் கடைந்த தேபோல்
               மிக்கதோர் ஆர்ப்பி னோடும் விரைவுடன் கலக்க லுற்றார். ......    74

(ஆர்த்திடு முழக்க)

ஆர்த்திடு முழக்கங் கேளா அம்புயத் திருவும் பாரும்
     வேர்த்துடல் பதைப்ப அஞ்சி வெருக்கொடு கரிய மேனித்
          தீர்த்தன தகலத் தூடு சேர்ந்தனர் தழுவ அன்னோன்
               பார்த்தனன் அஞ்சல் என்று பகர்ந்தனன் துயிலை நீங்கி. ......    75

(இம்மெனப் பணி)

இம்மெனப் பணியின் மீதும் எழுந்தனன் இறுதி செய்யும்
     வெம்மைகொள் கடவுட் டீயும் வெருவர உருத்துச் சீறி
          நம்மையும் பொரவுந் தீயோர் நண்ணினர் போலும் அன்னார்
               தம்வலி காண்டும் என்னாத் தடக்கைகள் புடைத்து நக்கான். ......    76

(சிந்தையில் உன்னும்)

சிந்தையில் உன்னும் முன்னந் திறல்மிகும் உவணர்கோமான்
     வந்தனன் அவன்பொற் றோள்மேல் மடங்கலே றென்னப் புக்குச்
          சந்திரன் அனைய சங்கஞ் சக்கரங் கதைவாள் சாபம்
               ஐந்தெனும் படையும் ஏந்தி அவுணர்தம் படைமுற் சென்றான். ......    77

(கோட்டினன் சார்)

கோட்டினன் சார்ங்க மென்னுங் குனிசிலை யினைநாண் ஓதை
     காட்டினன் அவுணர் உள்ளங் கலக்கினன் கொண்ட செற்றம்
          வீட்டினன் தானை யாவும் விலக்கினன் பகழி மேன்மேற்
               பூட்டினன் சோனைக் கொண்மூ வாமெனப் பொழித லுற்றான். ......    78

(பொழிந்திடு கின்ற)

பொழிந்திடு கின்ற காலைப் போர்கெழும் அவுணர் தானை
     அழிந்தன தேரும் மாவும் ஆடலங் கரிகள் தாமும்
          ஒழிந்தன விறலும் போரின் ஊக்கமும் படையு மெல்லாங்
               கழிந்தன சூறை யுற்ற காரெனல் ஆய வன்றே. ......    79

(சூழ்ந்திடும் அவுணர்)

சூழ்ந்திடும் அவுணர் சென்னி துணிந்தன தோளுந் தாளும்
     வீழ்ந்தன கரங்கள் சிந்தி விரவின குருதி நீத்தம்
          ஆழ்ந்திடு புணரி யெல்லாம் ஆயின அவனி தானுந்
               தாழ்ந்தன பிணத்தின் குன்றந் தகைந்தன தபனன் தேரை. ......    80

(ஒடிந்தன இரதம்)

ஒடிந்தன இரதம் ஆழி உருண்டன கவனப் பாய்மா
     மடிந்தன களிறு நொந்து மாண்டன வயவர் பல்லோர்
          முடிந்தனர் குருதி நீத்தம் மூடின அதனுள் மூழ்கிப்
               படிந்தன அலகை ஈட்டம் பாரிடம் பரந்த வன்றே. ......    81

(சுடர்கெழு நேமி)

சுடர்கெழு நேமி அண்ணல் துயிலுறு பாலின் வேலை
     இடையொரு சிறிது மின்றி எங்கணும் எருவை யாகி
          அடைவது கடவு ளாடும் ஆரழல் அதனை உண்ணக்
               கடையுகம் விரவு கின்ற காட்சியைப் போன்ற தம்மா. ......    82

(விண்ணுலாம் படிவ)

விண்ணுலாம் படிவ மாயோன் மேதகும் உவணத் தோடு
     மண்ணுலாம் கடலா மென்ன அவுணரை வளைந்து சுற்றி
          எண்ணிலா உருவங் காட்டி யாவரும் போகா வண்ணம்
               அண்ணல்வாம் பகழி சிந்தி அமர்செய்தான் அமரர் ஆர்ப்ப. ......    83

(அடுசமர் புரியும்)

அடுசமர் புரியும் எல்லை ஆங்கவை உருத்து நோக்கி
     உடைவதோர் அனிகந் தன்னை யொன்றுநீர் அஞ்ச லென்னா
          வடவரை யனைய ஆற்றல் மாபெருந் தனுவொன் றேந்தி
               இடியுறழ் கலிமான் தேர்மேல் தாரகன் இமைப்பின் வந்தான். ......    84

(வானில மளவு)

வானில மளவு செய்த மலர்ப்பதத் தண்ணல் முன்னந்
     தானெதிர் புகுந்து வெய்யோன் தன்பெருந் தனுவை வாங்கி
          மேனகு சரங்கள் கண்ணன் மிசையுற வேலை மீதில்
               சோனைவிண் பொழிவ தென்னத் துண்ணெனத் தூவி ஆர்த்தான். ......    85

(ஆர்த்திடும் அளவை)

ஆர்த்திடும் அளவை தன்னில் அச்சுதன் அயில்வே லென்னக்
     கூர்த்திடும் உலப்பில் வாளி கொடியதா ரகன்றன் மேனி
          தூர்த்தனன் தேரும் பாகுந் தொலைத்தலுஞ் சோர்வி லாதான்
               பேர்த்தொரு தடந்தேர் உற்றுப் பெருஞ்சிலை வாங்கி னானால். ......    86

(உற்றிடும் அவுணன்)

உற்றிடும் அவுணன் மால்மேல் ஒராயிரம் பகழி ஓச்சி
     அற்றமில் கருடன் மீதும் ஆயிரம் விசிக முய்ப்ப
          மற்றவை அவன்பால் தீய மாசுணம் பலவுந் தங்கள்
               பற்றலன் தன்னை வவ்வும் பரிசெனச் செறிந்த வன்றே. ......    87

(ஆயிடை உவணர்)

ஆயிடை உவணர் கோமான் அலக்கணுற் றதனை நோக்கி
     மாயவன் உலப்பி லாத வடிவினை யெய்தி அந்தத்
          தீயவற் சூழ்ந்து வெம்போர் செய்துழி அவனுந் தங்கள்
               தாயருள் மனுவை உன்னித் தானுமந் நிலைய னானான். ......    88

(தாரக வசுரன் தானு)

தாரக வசுரன் தானுந் தணப்பில்பல் லுருவங் கொள்ளா
     ஈரிரு வைகல் காறும் இந்திரை கேள்வ னோடு
          பேரமர் புரிந்த வெல்லைப் பிதாமகன் இதனை நோக்கி
               யாரிவன் எதிர்நிற் பாரென் றதிசய நீர னானான். ......    89

(எல்லையங் கதனி)

எல்லையங் கதனின் மாயோன் எறுழ்வலி அவுணன் ஏறுஞ்
     சில்லியந் தேரும் மாவுந் திறன்மிகு வலவன் தானும்
          வில்லொடு துணிந்துவீழ விசிகமோர் கோடி உய்த்தான்
               ஒல்லையின் அதனை நாடி உம்பர்கோன் உவகை பூத்தான். ......    90

(திண்டிறற் பரியு)

திண்டிறற் பரியுந் தேருஞ் சிலையொடு வலவன் தானுந்
     துண்டம தடைத லோடுஞ் சூரனுக் கிளைய தோன்றல்
          தண்டமொன் றெடுத்துக் கீழ்போய்த் தலைபனித் தமரர் அஞ்ச
               அண்டமுங் குலுங்க ஆர்த்தங் கரிதனை யெதிர்ந்து சென்றான். ......    91

(எதிர்வரும் அவுணன்)

எதிர்வரும் அவுணன் தன்மேல் எண்ணிலாப் பகழி மாரி
     விதியினை அளித்த மாயன் வீசலும் அவற்றை யெல்லாங்
          கதைகொடு விலக்கிச் சிந்திக் கனன்றுமுற் கடிதிற் செல்ல
               அதுதனை நோக்கி மாலும் ஆழியம் படையை உய்த்தான். ......    92

(ஓரிமை யொடுங்கு)

ஓரிமை யொடுங்கு முன்னர் உலகெலாந் தொலைக்குந் தன்மைப்
     போரயில் நேமி தானும் புராரிதன் வரத்தாற் சென்று
          தாரக வசுரன் கண்டந் தன்னைவந் தணுகிச் செம்பொன்
               ஆரம தாயிற் றம்மா தவத்தினும் ஆக்க முண்டோ. ......    93

(பணியுறு கடவுள்)

பணியுறு கடவுள் நேமிப் படையுமாங் கவுணன் கண்டத்
     தணியதா யிருத்த லோடும் அரனருள் வரத்தை யுன்னித்
          தணிவிலற் புதத்த னாகித் தாரகன் வலிய னென்னா
               மணிகிளர் மேனி மாயோன் மற்றிது புகலல் உற்றான். ......    94

(அயனொடு ததீ)

அயனொடு ததீசி யென்னும் அருந்தவத் தோனும் வெம்போர்
     முயலுறும் அவுணர் யாரும் மொழிந்திடின் உனக்கொப் பல்லார்
          செயலுரை யின்றி உண்டாற் சிறுவிதி மகத்தைச் செற்ற
               வயமிகு கழற்கால் வீரன் மற்றுனக் கிணையா மென்றான். ......    95

(வன்றிறற் கடவு)

வன்றிறற் கடவு ளாழி மணிப்பணி யாயிற் றென்றால்
     வென்றியும் உனதே யன்றோ வேறினிப் போரும் உண்டோ
          உன்றிறம் இதுவே என்னின் உனக்குமுன் னவராய் அங்கண்
               நின்றவர் பெருமை தன்னை யாவர்கொல் நிகழ்த்தற் பாலார். ......    96

(சங்கரன் மகிழும்)

சங்கரன் மகிழும் ஆற்றால் தழல்மகம் பன்னாள் ஆற்றி
     உங்களின் வலிபெற் றுள்ளார் அவுணரில் ஒருவர் இல்லை
          இங்குமை வெல்வார் யாரே எமக்குநீர் தமரே யென்னா
               மங்கல மரபின் ஆசி வரம்பில புகன்று போனான். ......    97

(பார்த்தனர் அனை)

பார்த்தனர் அனைய தெல்லாம் பாயிருள் கான்ற மேனி
     நீர்த்திரை அனைய செங்கை நிருதராம் புணரி யாயோர்
          ஆர்த்தனர் அமரர் யாரும் அகன்றனர் அஞ்சி அங்கம்
               வேர்த்தனர் விளிவோ ரென்ன மெலிந்தனர் விழுமத் துள்ளார். ......    98

(மாதவன் அகன்ற)

மாதவன் அகன்ற காலை மற்றுமோர் வையத் தேறித்
     தாதவிழ் தொடையல் வாகைத் தாரகன் தம்முன் நேராய்ப்
          போதலும் அவனு மீண்டு புகுந்தவா றுணர்ந்து புல்லி
               ஆதர மகிழ்ச்சி எய்தி அனிகமோ டகன்றான் அப்பால். ......    99

(ஆழியங் கிரியின்)

ஆழியங் கிரியின் காறும் அகலிட வரைப்பு முற்றச்
     சூழுற நாடிப் போந்து தொல்லிரு விசும்பின் ஏகித்
          தாழுறு நிலையிற் செல்லுந் தபனனே முதலோர் யாரும்
               வாழியென் றாசி கூற வானுயர் துறக்கம் புக்கான். ......    100

வேறு

(இந்தவா றவுணர்)

இந்தவா றவுணர்கோன் துறக்கத் தேகலும்
     முந்திய ஒற்றரில் சிலவ ரோடியே
          வந்தனன் சூரனாம் வலியன் தானெனா
               அந்தர நாயகன் அறியக் கூறவே. ......    101

(அஞ்சினன் உயிர்)

அஞ்சினன் உயிர்த்தனன் அலந்து தேம்பினன்
     துஞ்சின னேயென உணர்வு சோர்ந்துளான்
          எஞ்சலில் வன்மைய திகந்து தன்னுடை
               நெஞ்சினில் இனையன நினைத்தல் மேயினான். ......    102

(அவ்வயிற் போந்தி)

அவ்வயிற் போந்திடும் அவுணன் தன்னெதிர்
     செவ்விதிற் சென்றியான் செருவில் நேர்வனேல்
          இவ்வுயிர்க் கிறுதியாம் இருப்ப னேல்இடர்ப்
               பவ்வமுற் றிறந்திடாப் பழியில் மூழ்குவேன். ......    103

(புன்செய லாய்)

புன்செய லாய்இவட் புகுந் திடுஞ்செயல்
     என்செய லால்வரும் இயற்கை யல்லது
          பின்செயல் ஒன்றிலை பிறர்செய் கின்றதுந்
               தன்செயல் என்பரால் சார்பின் மேலையோர். ......    104

(திருவுறு கின்று)

திருவுறு கின்றுழி மகிழ்ந்துந் தீர்வுழிப்
     பருவரல் எய்தியும் பாசந் தன்னிடை
          அரிதுணர் கேள்வியர் அழுங்கு வார்கொலோ
               வருவது வரும்அது மறுக்க லாகுமோ. ......    105

(ஆதலின் அமர்)

ஆதலின் அமர்இழைத் தாவி நீங்கலன்
     பேதுறு கின்றிலன் பீழை யுற்றுளோர்
          ஓதரு மகிழ்ச்சியும் உறுவர் ஆங்கது
               தீதுசெய் அவுணர்தந் திறத்துக் காண்பனால். ......    106

(நாணொடும் ஒன்ன)

நாணொடும் ஒன்னலர் நகையுங் கொள்ளலன்
     தூணம துறழ்புயச் சூர பன்மனைக்
          காணுவன் என்னினுங் கறுவு சிந்தையான்
               ஏணுறு தளையிடும் எனையென் றெண்ணினான். ......    107

(இம்முறை வாசவன்)

இம்முறை வாசவன் எண்ணி யேயெழீஇக்
     கொம்மென மனையுடன் குயிலு ருக்கொடே
          விம்முறு பீழையன் விண்ணிற் போயினான்
               தெம்முனை அவுணர்கள் தேடிக் காண்கிலார். ......    108

(ஒன்னலர் நாடு)

ஒன்னலர் நாடுவ துணர்ந்து வானவர்
     மன்னவன் ஆக்கமும் மாயும் போலுமால்
          என்னினிச் செய்வதென் றிரக்க மெய்தியே
               பொன்னகர் எங்கணும் பொலிவு மாய்ந்ததே. ......    109

(பிடித்தனர் அமரரை)

பிடித்தனர் அமரரை அவுணர் பேதுற
     அடித்தனர் குற்றினர் அனையர் தானையால்
          தடித்திடுந் தோள்களைத் தமது கைகளால்
               ஒடித்தன ராமென ஒல்லை வீக்கினார். ......    110

(தண்ணளி யாவு)

தண்ணளி யாவுமின் றாய தானவர்
     விண்ணவர் தங்களை விழுமஞ் செய்திடா
          அண்ணலந் திருவுறும் அரசன் முன்னுறத்
               துண்ணென உய்த்தலுந் தொழுது போற்றுவார். ......    111

(அவுணரில் உதித்த)

அவுணரில் உதித்தனை ஆற்று நோன்புறீஇச்
     சிவனருள் பெற்றனை திசையி னோர்முதல்
          எவரையும் வென்றனை என்னின் இங்கெமை
               நவைபடச் செய்வதே நன்று போலுமால். ......    112

(மறலியும் இருக்கு)

மறலியும் இருக்குமோ மற்றை மாதிரத்
     திறைவரும் இமையவர் யாரும் உய்வரோ
          இறுதியின் றாகுமே உலகம் ஈங்கொரு
               சிறிதுநீ வெஞ்சினஞ் சிந்தை செய்யினே. ......    113

(இற்றையிப் பகல்)

இற்றையிப் பகல்முதல் என்றும் எங்களுக்
     குற்றதோர் கடவுள்நீ ஓம்பும் வேந்துநீ
          பற்றுள தமரும்நீ பலரும் யாம்இனி
               மற்றுன தேவலை மரபிற் செய்துமால். ......    114

வேறு

(என்றிவை புகன்று போற்று)

என்றிவை புகன்று போற்றும் இமையவர் தம்மை நோக்கி
     நன்றுநுஞ் செய்கை யென்னா நகைசெய்து யாப்பு நீக்கி
          மன்றநம் பணிமேல் கொண்டு வைகுதிர் இனிநீ ரென்னா
               அன்றவர் தம்மை விட்டான் அழல்மகத் தாவி விட்டான். ......    115

(வாசவன் வளத்தை)

வாசவன் வளத்தை யெல்லாம் அவுணர்கள் வவ்விச் செல்லப்
     பேசரு மகிழ்ச்சி கொண்டு பின்னவர் பாங்கர் ஏகக்
          காசிபன் அளித்த மேன்மைக் காதலன் அனிகஞ் சூழ
               ஓசைகொள் மறைகள் ஆர்க்கும் உயர்மக லோகம் புக்கான். ......    116

(கற்றுணர் கேள்வி)

கற்றுணர் கேள்வி யான்மார்க் கண்டேய னாதி வானோர்
     உற்றிடும் பதமாந் தொல்பேர் உலகமே முதல மூன்றும்
          மற்றவர் பரவ நீங்கி மலரயன் பதத்திற் போகத்
               தெற்றென அதனைத்தேர்ந்து திசைமுகன் துணுக்க முற்றான். ......    117

வேறு

(வசையில் நோன்பு)

வசையில் நோன்புடை வாலறி வுள்ளோர்
     இசைகொள் வேதம் இயம்பினர் சூழ
          நசையி னீரொடு நான்முக வேதா
               அசுரர் கோனைய டைந்தன னன்றே. ......    118

(ஆழி மால்கடல் அன்ன)

ஆழி மால்கடல் அன்னதொர் சேனை
     சூழ வேவரு சூரனை யெய்தி
          வாழி வாழிய வைகலும் என்னாக்
               கேழி லாசி கிளத்திய பின்னர். ......    119

(மன்ன நீயிவண்)

மன்ன நீயிவண் வந்திட மேனாள்
     என்ன நோன்பை இயற்றின னோயான்
          அன்ன வாறுண ரேன்சிவன் அல்லால்
               உன்னி நாடி யுணர்ந்துளர் யாரே. ......    120

(கற்றை வார்சடை யான்)

கற்றை வார்சடை யான்கழல் பேணி
     அற்றம் நீங்கி அருந்தவம் ஆற்றி
          மற்றிவ் வாறு வளத்தியல் யாவும்
               பெற்று ளாய்பெரு வன்மை பிடித்தாய். ......    121

(பொன்னை மேவு)

பொன்னை மேவு பொலன்கெழு மார்பன்
     தன்னை வானவர் தங்களை யெல்லாம்
          இன்ன நாள்இளை யோற்கொடு வென்றாய்
               உன்னை நேருள ரோவுல கத்தில். ......    122

(காத லான்மிகு)

காத லான்மிகு காசிபன் மைந்தன்
     ஆத லால்அவு ணர்க்கிறை நின்மூ
          தாதை யான்சர தம்மிது நின்சீர்
               ஏதும் என்புகழ் யான்பிறன் அன்றே. ......    123

(என்று பன்முக)

என்று பன்முக மன்கள் இசைத்தே
     நின்று தம்பியர் தங்களை நேர்ந்து
          பொன்றி டாதபொ லஞ்சிலை திண்டேர்
               ஒன்று தன்படை யும்முத வுற்றான். ......    124

(வெருவ ரச்சுரர்)

வெருவ ரச்சுரர் வீற்றுறு பான்மை
     இருவ ருக்கும் அளித்தலும் யாரும்
          பரவு கொற்றவன் அன்னது பாராப்
               பெரும கிழ்ச்சிகொள் பெற்றியன் ஆனான். ......    125

(அருத்தி யெய்தி)

அருத்தி யெய்தி அயன்றனை யங்கண்
     இருத்தி மாயைமுன் ஈந்தருள் மைந்தன்
          மருத்து ழாய்முடி மன்னவன் வைகுந்
               திருத்த கும்முல கத்திடை சென்றான். ......    126

(அந்த வேலையில் ஆண்)

அந்த வேலையில் ஆண்டுறும் மாலோன்
     வந்து சூரபன் மாவினை யெய்தி
          நந்தல் இல்லதொர் நாளொடு வாழ்கென்
               றந்த மில்பல ஆசி புகன்றான். ......    127

(ஆசி கூறினன்)

ஆசி கூறினன் ஆற்றவும் இன்சொற்
     பேச வேபெரு மாமகிழ் வெய்தி
          மாசில் அவ்வுல கெங்கணும் வல்லே
               பாச னத்தொடு பார்த்தனன் அன்றே. ......    128

(பார்த்த பின்பணி)

பார்த்த பின்பணி யின்மிசை வைகுந்
     தீர்த்தன் ஆண்டு திகழ்ந்துற நல்கிக்
          கார்த்தி லங்குறு கந்தர முக்கண்
               மூர்த்தி வைகிய மூதுல குற்றான். ......    129

வேறு

(அரியயன் முதலா)

அரியயன் முதலா வுள்ள அமரர்கள் யார்க்குந் தத்தம்
     உரியதோ ராணை யெல்லாம் உலப்புறா துதவி வைகும்
          பரமன துலகம் நண்ணிப் பரிசனம் யாவும் நீங்கிச்
               சுரர்புகழ் சூர பன்மன் துணைவர்க ளோடு போனான். ......    130

(போந்தனன் அமலன்)

போந்தனன் அமலன் கோயிற் புறங்கடை வாயில் நின்றே
     ஆய்ந்திடு நந்தி யெந்தை அருள்முறை உய்ப்பச் சென்று
          காந்தளை யனைய செங்கைக் கவுரியோ டுறையும் முக்கண்
               ஏந்தல்முன் அணுகி ஆர்வத் திறைஞ்சியே ஏத்தி நின்றான். ......    131

(கண்டநஞ் சுடைய)

கண்டநஞ் சுடைய அண்ணல் கருணைசெய் தினிநீ யேனை
     அண்டமுஞ் சென்று நாடி ஆணையால் அகிலம் யாவும்
          எண்டிசை புகழும் ஆற்றால் இறைபுரிந் திருத்தி யென்னப்
               புண்டரீ கத்தாள் போற்றி விடைகொண்டு புறத்து வந்தான். ......    132

(புறந்தனில் வந்து)

புறந்தனில் வந்து சூரன் பொம்மெனத் தானை யெய்திச்
     சிறந்திடு கின்ற அண்ட கோளகை சேர்த லோடு
          மறந்தரு ஞமலி மேலோர் உருத்திரர் வரம்பி லோர்கள்
               உறைந்தனர் அனைய ரெல்லாம் உமாபதி யருளுட் கொண்டார். ......    133

(பாங்குறும் அண்ட)

பாங்குறும் அண்டஞ் செல்லும் பான்மையில் வாயில் காட்டி
     ஆங்கவர் விடுப்ப மற்றை அண்டத்துச் சூர பன்மன்
          ஓங்கிய தானை யோடும் ஒல்லையிற் போகி யாண்டும்
               ஈங்கிது போல நாடி யாரையும் வென்று போனான். ......    134

(ஏனையண் டங்க)

ஏனையண் டங்க ளெல்லாம் எம்பிரான் கணமா யுள்ளோ
     ரானவர் அருளிற் போகி அகிலமும் நாடி அங்கண்
          வானவர் தம்மை வென்று வளமெலாங் கவர்ந்து தன்பால்
               தானவர் பலரை அங்கண் தன்னர சளிப்ப உய்த்தான். ......    135

(இத்திறம் வீற்று)

இத்திறம் வீற்று வீற்றா எல்லையில் அண்டந் தோறும்
     மெய்த்தம ராகி யுள்ள அவுணரை வேந்த ராக
          வைத்தனன் துணைவ ரோடு மீண்டனன் மற்றிவ் வண்டப்
               பித்திகை அதனுட் சென்று பெறலருந் துறக்க முற்றான். ......    136

ஆகத் திருவிருத்தம் - 2708previous padalam   12 - திக்குவிசயப் படலம்   next padalamthikkuvisayap padalam

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]