(தீயதோ ரினைய)
தீயதோ ரினைய மாற்றஞ் செப்பலும் இதுநன் றெந்தை
ஏயின பணியில் நிற்பன் இறையவன் எனக்குத் தந்த
ஆயிரத் தெட்டென் றோதும் அண்டங்கள் நிலைமை யாவும்
நீயுரை யென்ன ஆசான் நிருபனுக் குரைக்க லுற்றான். ......
1(மேலுள பொருளு)
மேலுள பொருளுந் தத்தம் விளைவது நிற்க இப்பால்
மூலமாம் பகுதி தன்னின் முளைத்திடும் புந்தி புந்தி
ஏலுறும் அகந்தை ஒன்றின் எய்தும்ஐம் புலனும் ஆங்கே
வாலிய ககனந் தொட்டு மாநிலங் காறும் வந்த. ......
2(அப்பெரும் புவிக்கு)
அப்பெரும் புவிக்குத் தான்ஓர் ஆயிர கோடி யண்டம்
ஒப்பில வென்ன உண்டால் ஒன்றினுக் கொன்று மேலாச்
செப்புறு நிலைமைத் தன்று தெரிந்திடிற் பரந்து வைகும்
வைப்பென லாகும் அன்ன மற்றவை அம்பொன் வண்ணம். ......
3(அங்கண்மா ஞாலத் தண்)
அங்கண்மா ஞாலத் தண்டம் ஆயிர கோடி தன்னில்
இங்குநீ பெற்ற அண்டம் ஆயிரத் தெட்டி னுள்ளுந்
துங்கமாம் அண்ட மொன்றின் இயற்கையைச் சொல்லு கின்றேன்
செங்கைசேர் நெல்லி யென்னச் சிந்தையிற் காண்டி யன்றே. ......
4(கதிரெழு துகள்எண்)
கதிரெழு துகள்எண் மூன்று கசாக்கிர கந்தான் ஆகும்
இதுதொகை இருநான் குற்ற திலீக்கையவ் விலீக்கை யெட்டால்
உதிதரும் யூகை யன்ன யூகையெட் டியவை யென்ப
அதினிரு நான்கு கொண்ட தங்குலத் தளவை யாமே. ......
5(அங்குலம் அறுநான்)
அங்குலம் அறுநான் கெய்தின் அதுகரம் கரமோர் நான்கு
தங்குதல் தனுவென் றாகும் தனுவிரண் டதுஓர் தண்டம்
இங்குறு தண்ட மான இராயிரங் குரோசத் தெல்லை
பங்கமில் குரோசம் நான்கோ ரியோசனைப் பால தாமே. ......
6(அந்தயோ சனையின்)
அந்தயோ சனையின் எல்லை ஐம்பதிற் றிரண்டு கோடி
வந்ததிவ் வண்டத் திற்கும் மாயிரும் பரவை வைப்பும்
முந்திய நிவப்பு மாகும் மொழிந்திடும் அண்டங் கட்கும்
இந்தவா றளவைத் தென்றே எண்ணுதி இலைகொள் வேலோய். ......
7(ஒண்புவ னிக்கு)
ஒண்புவ னிக்குக் கீழாம் யோசனை ஐம்பான் கோடி
திண்புவி தனக்கு மேலாய்ச் சேர்தரும் அளவும் அஃதே
மண்புகழ் மேரு வுக்கு மாதிரம் அவையோ ரெட்டும்
எண்படும் ஐம்பான் கோடி கடாகத்தின் எல்லை யோடும். ......
8(அண்டமார் கடமோர்)
அண்டமார் கடமோர் கோடி அதற்குமீ தினிலோர் கோடி
திண்டிறல் காலச் செந்தீ யுருத்திரர் செம்பொற் கோயில்
ஒண்டழற் கற்றை யுள்ள தொருபது கோடி மீக்கட்
கொண்டெழு தூம வெல்லை குணிக்கின்ஐங் கோடி யாமே. ......
9(அரித்தவி சுயர்ச்சி)
அரித்தவி சுயர்ச்சி ஆங்கோர் ஆயிரம் அளவைத் தாகும்
பரத்தலும் அதற்கி ரட்டி படர்தரு காலச் செந்தீ
உருத்திரர் அழலின் மேனி யோசனை அயுத மாகுந்
திருத்தகு பலகை வாள்வில் செஞ்சர மேந்திச் சேர்வார். ......
10(ஓங்கிய கால)
ஓங்கிய காலச் செந்தீ யுருத்திரர் தம்மைப் போல்வார்
ஆங்கொரு பதின்மர் சூழ்வர் அன்னவர் ஏவல் ஆற்றிப்
பாங்குற வொருபான் கோடிப் பரிசன மேவும் அன்னோர்
பூங்கழல் வழுத்தி ஆதி கமடம்அப் புவனம் வைகும். ......
11(அன்னதோர் புவன)
அன்னதோர் புவன மீக்கண் அடுக்குறு நிலைய வாகித்
துன்னுறு நாலேழ் கோடி தொகைப்படு நிரயத் தெல்லை
உன்னத மான கோடி ஒன்றொழி முப்பான் மேலும்
பன்னிரண் டிலக்கம் அண்டத் தளவுறும் பரப்பு மன்னோ. ......
12(உற்றிடு நிரய மீதில்)
உற்றிடு நிரய மீதில் ஒன்றிலா இலக்கம் நூறு
பெற்றிடு முயர்வு தன்னிற் பிறங்குமோர் புவனம் கீழ்மண்
பற்றிய இரும்பு நாப்பண் பச்சிமம் பசும்பொற் சோதி
மற்றதன் மேல்பா கத்தில் வதிவர்கூர் மாண்டர் என்போர். ......
13(காழக முகத்தர்)
காழக முகத்தர் கூர்வாய்க் கணிச்சியம் படைசேர் கையர்
ஊழியங் கனலை அன்ன உருவினர் திரியுங் கண்ணர்
மாழையம் பீட மீக்கண் வைகுகூர் மாண்டர் தம்பால்
சூழுருத் திரராய் உள்ளோர் தொகுதியை அளக்கொ ணாதால். ......
14(அப்புவ னத்து மீதே)
அப்புவ னத்து மீதே அந்தரம் இலக்க மொன்பான்
செப்புவர் அதனுக் கும்பர் சிறந்தபா தலங்கள் என்ப
ஒப்பறு பிலமொன் றற்கே ஒன்பஃதி லக்க மாக
இப்படி அறுபான் மூன்றாம் இலக்கமேழ் பிலத்தின் எல்லை. ......
15(பரத்தினி லுறுங்க)
பரத்தினி லுறுங்க னிட்ட பாதலம் எட்டி லக்கம்
அரத்தினுக் ககற்சி வெவ்வே றயுதமாம் அவைமுப் பாகம்
உரத்தகும் அவுணர் கீழ்பால் ஒள்ளெயிற் றுரகர் நாப்பண்
திருத்தகும் அரக்கர் மேல்பால் சிறந்துவீற் றிருந்து வாழ்வோர். ......
16(இதன்மிசை இலக்க)
இதன்மிசை இலக்க மொன்பான் ஆடகர் இருக்கை யாகும்
இதன்மிசை வெளிஓர் கோடி இலக்கமும் இருப துண்டால்
இதன்மிசைக் களிறு பாந்தள் எட்டுடன் சேடன் ஏந்தும்
இதன்மிசைப் புவியின் ஈட்டம் எண்பஃதி லக்க மாமே. ......
17(ஈடுறு பிலங்க)
ஈடுறு பிலங்கட் கெல்லாம் இறைவராய்ப் பாது காப்போர்
ஆடகர் தாமே நாகர் அவுணர்வாள் அரக்கர் அன்னார்
தாடொழு சனங்கள் அண்ட கடமுதல் தரையீ றாகக்
கோடியோர் ஐம்பான் ஆகுங் குணித்தனை கோடி யன்றே. ......
18(பலவகைப் பிலங்க)
பலவகைப் பிலங்கட் கெல்லாம் பரமதாய் உற்ற தொல்பார்
உலகினுள் விரிவும் அங்கண் உள்ளவும் உரைப்பன் கேட்டி
குலவிய சம்பு சாகங் குசைகிர வுஞ்சம் கோதில்
இலவுகோ மேத கம்புட் கரம்இவை ஏழு தீவே. ......
19(பரவுமிவ் வுலகில்)
பரவுமிவ் வுலகில் உப்புப் பால்தயிர் நெய்யே கன்னல்
இரதமா மதுநீ ராகும் எழுகடல் ஏழு தீவும்
வரன்முறை விரவிச் சூழும் மற்றதற் கப்பால் சொன்னத்
தரையது சூழ்ந்து நிற்கும் சக்கர வாளச் சையம். ......
20(அன்னதற் கப்பால்)
அன்னதற் கப்பால் வேலைக் கரசனாம் புறத்தி லாழி
பின்னது தனக்கும் அப்பால் பேரிருள் சேர்ந்த ஞாலம்
மன்னவ காண்டி அப்பால் வலிகெழும் அண்டத் தோடு
துன்னுமிப் பொருள்கள் யாவுஞ் சூழ்ந்துகொண் டிருக்கு மன்றே. ......
21(எல்லைதீர் முன்னை)
எல்லைதீர் முன்னைத் தீவோ ரிலக்கமாங் கடலும் அற்றே
அல்லன தீவும் நேமி அதற்கதற் கிரட்டி யாகச்
சொல்லினர் ஆங்ஙன் கண்ட தொகையிரு கோடி அன்றி
நல்லதோர் ஐம்பான் மேலும் நான்கெனும் இலக்க மாமே. ......
22(ஐயிரு கோடி)
ஐயிரு கோடி சொன்னத் தணிதலம் அதுசூழ் நேமிச்
சையமோர் அயுத மாகும் சார்தரு புறத்தின் நேமி
எய்திய கோடி மேலும் இருபதோ டிலக்க மேழாம்
மையிருள் சேர்ந்த பாரின் எல்லைமேல் வகுப்பன் மன்னோ. ......
23(ஆரிருள் உலகம்)
ஆரிருள் உலகம் முப்பான் அஞ்செனுங் கோடி மேலும்
ஓரொரு பத்தொன் பானூ றுற்றநான் கயுதமாகும்
பேரிருள் சூழ்ந்த அண்டப் பித்திகைக் கனமோர் கோடி
பாரிடை யகலந் தேரில் பாதியோர் ஐம்பான் கோடி. ......
24(நடைதரு தொன்னூ)
நடைதரு தொன்னூ லாற்றான் நாம்புகல் கணிதந் தன்னை
உடையதோர் திசையே இவ்வா றொழிந்தமா திரத்தும் வைக்கின்
வடகொடு தென்றி கீழ்மேல் மற்றுள கோண முற்றும்
நொடிதரிற் கோடி கோடி நூறுயோ சனைய தாமே. ......
25(முள்ளுடை மூல )
முள்ளுடை மூல மான முண்டகத் தவிசின் மேய
வள்ளறன் வலது மொய்ம்பான் வந்தசா யம்பு மைந்தன்
அள்ளிலை வேற்கை நம்பி அன்புடை விரதன் ஞாலம்
உள்ளதோ ரெல்லை முற்றும் ஒருதனிக் குடையுள் வைத்தான். ......
26(அங்கவன் தனது)
அங்கவன் தனது மைந்தர் அங்கிதீ ரன்மே தாதி
துங்கமாம் வபுட்டி னோடு சோதிட்டுத் துதிமான் தொல்சீர்
தங்குமவ் வியனே மிக்க சவனனாம் எழுவர் தாமும்
பங்குகொண் டேழு தீவும் பாதுகாத் தரசு செய்தார். ......
27வேறு(சீரியசம் புத்தீபம்)
சீரியசம் புத்தீபம் புரந்த அங்கி தீரன்என்போன் தான்அருளுஞ் சிறுவ ராயோர்
பாரதன்கிம் புருடன்அரி கேது மாலன் பத்திரா சுவனன்இளா விருத னென்போன்
ஏருடைய இரமியன்நல் லேமப் பேரோன் இயற்குருவாம் ஒன்பதின்மர் இவர்கள் பேரால்
ஓரொருவர்க் கொவ்வொன்றா நாவற் றீவை ஒன்பதுகண் டமதாக்கி உதவி னானால். ......
28(விண்ணுயர்சம் புத்தீ)
விண்ணுயர்சம் புத்தீவின் நடுவு நின்ற மேருவரை செங்கமலப் பொகுட்டுப் போல
நண்ணுமதற் கியோசனைஉன் னதம்எண் பத்து நான்குளவா யிரமாகும் ஞாலம் ஆழ்ந்த
தெண்ணிரண்டா யிரம் சென்னி யகலம் முப்பா னிராயிரமாம் பராரையெல்லை அதனிற் பாதி
வண்ணமிகு மேகலைமூன் றதனுள் உச்சி வாய்த்திடுமே கலையினிற்பல் சிகர மல்கும். ......
29(மேருவரை அதற்கு)
மேருவரை அதற்குநடுப் பிரமன் மூதூர் மிக்கமனோ வதிஅதற்கு மேலைத் திக்கின்
நாரணன்வாழ் வைகுண்டம் வடகீழ் பாலின் நாதனமர் சோதிட்கம் திசைக ளெட்டுஞ்
சீரியவிந் திரன்முதலாம் எண்மர் தேயந் தெற்குமுதல் வடக்களவு மருங்கு தன்னில்
நேரியதோர் தேசமது செவ்வே போகும் நெடும்பூழை யொன்றுளது நினைகமாதோ. ......
30(அந்தவரைக் கீழ்)
அந்தவரைக் கீழ்த்திசைமந் தரமாம் வெண்மை அதன்தெற்குக் கந்தமா தனம்பொன் மேல்பால்
சுந்தரமாம் விபுலம்நீ லம்வ டக்குச் சுபார்சுவம்மா துளைப்போது கடம்பு சம்பு
நந்தியதோர் போதிஆல் குணபா லாதி நாற்றிசையில் வரைமீது நிற்கும் நாவல்
முந்துமிரண் டாயிரயோ சனையாம் ஏனை முத்தருவும் இதிற்பாதி மொழியும் எல்லை. ......
31(அத்தகைய கீழ்த்தி)
அத்தகைய கீழ்த்திசையில் அருணம் மேல்பால் அசிதோதம் தென்றிசைமா னதமே யல்லா
உத்தரத்தின் மாமடுநீர் நிலையாய் மேவும் உய்யானஞ் சயித்திரதங் குணக்கு வைகும்
வைத்தபெரு நந்தனந்தக் கிணத்தில் ஓங்கும் வைப்பிரசங் குடக்கமரும் வடாது பாங்கின்
மெத்துதிரு தாக்கியம்உற் றிடுமிவ் வாறு மேருவரைச் சாரலிடை விரவு மன்றே. ......
32(கடிகமழும் நாவலொ)
கடிகமழும் நாவலொன்று தென்பால் நின்ற காரணத்தால் பாரதன்றன் கண்ட முற்றும்
இடனுடைய நாவலந்தீ வெனப்பேர் பெற்ற தித்தருவின் தீங்கனிநீ ராறாய் மேருத்
தடவரையைப் புடைசூழ்ந்து வடபாற் சென்று சாம்புநதப் பெயர்பெறுமச் சலிலந் துய்த்தோர்
உடல்முழுதும் பொன்மயமாய் அயுத மேலும் ஒருமூவா யிரமாண்டங் குறுவர் அன்றே. ......
33(நாற்றிசையில் வரை)
நாற்றிசையில் வரைப்பரப்பு மேல்கீழ் தானும் நவின் றிடின்மே ருவிற்பாதி அதற்குக் கீழ்பால்
மாற்றரிய மாலியவான் மேல்பாற்கந்த மாதனந்தென் றிசைநிசதம் ஏம கூடம்
ஏற்றஇமம் வடபால்நீ லம்சுவேதம் இயற்சிருங்கம் எட்டுவரை இவையாம் நீலம்
மேற்றிகழ்பொன் மணிகனகம் பனியே நீலம் வெண்மைமதி காந்தம்இவை மேனி தாமே. ......
34(நிசதமொடு பொற்)
நிசதமொடு பொற்கூடம் இமையங் கீழ்மேல் நெடுங்கடலைத் தலைக்கூடி நிமிரும் சோமன்
திசையுளபூ தரமூன்றும் அனைய எட்டுத் திண்கிரியும் இராயிரயோ சனைவான் செல்லும்
வசையில்கந்த மாதனமா லியவான் என்னும் மால்வரைகள் தமதகலம் அயுதம் மற்றை
அசலமிரு மூன்றுமிரா யிரம்இத் தீவுள் அமருநவ கண்டவெல்லை அறைவன் மாதோ. ......
35(கோதில்வட கடல்)
கோதில்வட கடல்முதலாச் சிருங்கங் காறுங் குருவருடம் சிருங்கமுதற் சுவேத மட்டும்
நீதிஇர ணியவருடம் சுவேத நீல நெடுங்கிரியின் நடுவண்இர மியமாம் மேருப்
பூதரஞ்சூழ் வருடம்இளா விருதமாகும் பொலிந்தகந்த மாதனமேற் புணரி நாப்பண்
கேதுமால் வருடம்மா லியவான் தொட்டுக் கீழ்கடலின் இறுவாய்பத் திரம தாமே. ......
36(அம்புவியின் நிசத)
அம்புவியின் நிசதமுதல் ஏமங் காறும் அரிவருடம் ஏமமுதல் இமைய நாப்பண்
கிம்புருடம் தென்கடற்கும் இமைய மென்னுங் கிரிக்குநடுப் பாரதமாம் கேது மாலோ
டிம்பர்புகழ் பத்திரமுப் பத்து நாலா யிரம்நின்ற தொன்பதினா யிரமா மெல்லை
உம்பர்தம துலகனைய பரத மென்னும் ஒன்றொழிந்த கண்டமெட்டும் உற்று ளோர்க்கே. ......
37(ஆங்குருநாட் டுறை)
ஆங்குருநாட் டுறைபவர்ஓர் பொழுதின் யாய்பால் ஆடூவு மகடூவு மாகத் தோன்றித்
தாங்கள்விழை விற்புணர்வர் அவர்க்குத் தெய்வத் தருமலர்கள் உதவும்உணாக் கனியுங் காயும்
ஓங்குபச்சை நிறம் ஆயுள் அயுத மேலும் ஒருமூவா யிரம்அதற்குள் வடபா கத்திற்
பாங்கமர்வர் முனிவரர்சா ரணரே சித்தர் பதின்மூவா யிரம்ஆயுள் படிகம் வண்ணம். ......
38(பரவுபத்தி ராசு)
பரவுபத்தி ராசுவத்தோர் கனிகாய் துய்ப்போர் பதின்மூவா யிரம்ஆயுள் படைத்த சேயோர்
இரணியத்தோர் பலநுகர்வோர் மதிநேர் மெய்யர் இராயிரமைஞ் ஞூறயுதம் ஆண்டு பெற்றோர்
பொருவரிய இரமியத்தி னுள்ளோர் ஆலின் புன்கனிகள் மிசைகுவர்பூங் குவளை போல்வார்
வருடமவர்க் கொருபதினா யிரமே யன்றி மற்றுமிரண்டா யிரமாச் சொற்ற தொன்னூல். ......
39(விராவும்இளா விருத)
விராவும்இளா விருதத்தோர் வெளிய மெய்யர் மிசைவதுதீங் கரும்பிரதம் அயுத மேலும்
இராயிரமாம் யுகம்கேது மாலந் தன்னில் இருப்பவர்பைங் குவளைநிறம் இனிதி னுண்டல்
பராரையுள கண்டகியின் கனியே ஆயுள் பத்துளவா யிரம்அரிகண் டத்து வாழ்வோர்
ஒராயிரமோ டொன்பதினா யிரம தெல்லை உணவுகனி காய்மதியம் ஒளிய தன்றே. ......
40(போற்றியகிம் புருட)
போற்றியகிம் புருடத்தோர் இறலித் தீய புன்கனியே மிசைவர்நிறம் பொன்மை ஆயுள்
சாற்றியிடும் ஓரயுதம் ஏமகூடத் தடவரைத் தென் பால்இமைய வடபால் தன்னில்
ஏற்றமிகுங் கயிலைநிற்கும் அதற்கு மீதே இமையாமுக் கட்பகவன் உமையா ளோடும்
வீற்றிருப்பன் ஊழிதனில் அண்டங் காறு மேலொடுகீழ் சென்றிடுமவ் வெற்பு மாதோ. ......
41(இந்தவிரு நாற்கண்ட)
இந்தவிரு நாற்கண்டத் துறையும் நீரார் இன்னல்பிணி நரைதிரைமூப் பிறையுஞ் சேரார்
முந்தையுகம் போலேனை மூன்றி னுள்ளும் மொய்ம்புநிறை அறிவுடலம் முயற்சி ஆயுள்
அந்தமில்சீர் முதலெல்லாம் ஒருதன் மைத்தா அடைகுவர்முன் பாரதத்தில் அவதரித்து
வந்துபுரி வினைப்பயனை நுகர்வர் என்பர் வானமுகில் சென்றுபுனல் வழங்கா தங்ஙன். ......
42(பாரதத்துள் ளார்அவ)
பாரதத்துள் ளார்அவனி கிளைத்து மற்றும் பஃறொழிலும் புரிந்துமறம் பாவம் ஈட்டிப்
பேரருள்பௌ திகமெழுவா யான மூன்றிற் பெறுபயன்கொண் டுய்வர்என்பர் பெருமை யாற்றல்
சீரறிவு நிறைஆயுள் உருவம் உண்டி செய்கையுகங் களுக்கியைந்த திறனே சேர்வர்
தோரைமுதற் பலபைங்கூழ் விளையுள் ஆக்கந் தூயகனி காய்கந்தம் பிறவுந் துய்ப்பார். ......
43(நாலிருகண் டத்தோ)
நாலிருகண் டத்தோரும் விண்ணு ளோரும் நரகினரும் அவ்விடத்தில் நண்ணி வைகி
மேலையிரு வினையாற்றி அவற்றிற் கேற்ற வியன்பயன்கள் துய்ப்பரென விளம்பு மாற்றால்
சீலமிகு பாரதமாங் கண்டமொன்றே தீவினைநல் வினையாகுஞ் செயற்கைக் கெல்லாம்
மூலமொரு குறைபெறினே வந்து தேவர் முனிவர்களுந் தவம்பூசை முயல்வர் அங்கண். ......
44(கவிபுகழும் பரத)
கவிபுகழும் பரதனும்இந் திரனாம் பேரோன் கசேருகன்தா மிரபன்னன் கபத்தி நாகன்
சவுமியனே கந்தருவன் வருணன் என்னுந் தனயருடன் குமரியெனும் வனிதை தன்னை
உவகைதனில் உதவிஅவர் தத்தம் பேரால் ஒன்றற்கோ ராயிரம்யோ சனைய தாகப்
புவிபுகழ்பா ரதத்தை நவ கண்ட மாக்கிப் பொற்பினுடன் அனையவர்க்குப் புரிந்தான் அன்றே. ......
45(கங்கைகவு தமிய)
கங்கைகவு தமியமுனை கவுரி வாணி காவிரிநன் மதைபாலி கம்பை பம்பை
துங்கபத் திரைகுசைகோ மதிபாஞ் சாலி சூரிசிகி பாபகரை தூத பாபை
சங்கவா கினிசிகைபா ரத்து வாசி சார்வரிசந் திரபாகை சரயு வேணி
பிங்கலைகுண் டலைமுகரி பொருநை வெஃகாப் பெண்ணை முதல் ஆறனந்தம் பெருகி நண்ணும். ......
46(மன்னுமகேந் திரம)
மன்னுமகேந் திரமலயஞ் சையஞ் சத்தி மாநிருடம் பாரியாத்திரமே விந்தம்
என்னுமலை ஓரேழுங் காஞ்சி யாதி எழுநகருந் தானமொரா யிரமேல் எட்டும்
பன்னும்அரு மறைமுதலோர் மேய தேயம்பற் பலவுஞ் சுருதிமுறை பயில்வு மேவி
மெய்ந்நெறிசேர் வதுகுமரி கண்டம் ஏனை மிலேச்சரிடம் ஓரெட்டும் வியப்பி லாவே. ......
47(இங்கிவைசம் புத்தீ)
இங்கிவைசம் புத்தீவி னிடனே தண்பால் இருங்கடல்சூழ் சாகத்தின் எல்லை தன்னில்
தங்கியகோ மேதாதி அவற்கு மைந்தர் சாந்தவயன் சிசிரன்கோ தயன்ஆ னந்தன்
துங்கமிகு சிவனொடுகே மகன்சி றந்த துருவன்இவர் பேராலேழ் வருட மாக்கி
அங்கவருக் கருள்புரிந்தான் கடவுள் வாயு ஆரியர்விந் தகர்குகரர் ஆண்டு வாழ்வார். ......
48(சோமகமே சுமன)
சோமகமே சுமனஞ்சந் திரமே முந்துந் துந்துபிவப் பிராசனநா ரதியந் தொல்சீர்க்
கோமதமாம் எழுகிரியுஞ் சிவைவி பாபை குளிர்அமிர்தை சுகிர்தைமநு தத்தை சித்தி
மாமைதரு கிரமையெனும் ஆறங் கேழும் மருவியிடும் ததிக்கடல்தான் வளைய நின்ற
ஏமமுறு குசத்தீவில் வபுட்டு வென்னும் இறையவற்குஞ் சிறுவர்களாய் எழுவ ருண்டால். ......
49(சுப்பிரதன் உரோகி)
சுப்பிரதன் உரோகிதனே தீரன் மூகன் சுவேதகன்சித் தியன்வயித்தி தன்னென் றோதும்
இப்புதல்வர் பேராலேழ் வருட மாக்கி ஈந்தனன்உன் னதங்குமுதங் குமாரம் மேகம்
வைப்புறுசந் தகம்மகிட மேது ரோணம் மலையேழுஞ் சோனைவெள்ளி மதியே தோமை
ஒப்பறுநேத் திரைவிமோ சனைவி ருத்தி ஓரேழு நதியுளவால் உலவை புத்தேள். ......
50(தர்ப்பகரே கபிலர்)
தர்ப்பகரே கபிலர்சா ரணர்நீ லத்தர் தண்டர்விதண் டகராண்டைச் சனங்கள் ஆவார்
அப்புற நெய்ப் புணரிகிர வுஞ்ச தீபம் அதற்கு மன்னன் சோதிட்டாம் அவன்றன் மைந்தர்
மெய்ப்படுசா ரணன்கபிலன் கிருதி கீர்த்தி வேணுமான் இலம்பகன்உற் பிதனே யென்னச்
செப்புமெழு பேராலேழ் வருட மாக்கிச் சிறப்புடனே அவரரசு செய்தற் கீந்தான். ......
51(மன்னுகுசே சயம்)
மன்னுகுசே சயம்அரிவித் துருமம் புட்பா வருத்தம்இமம் துதிமானே மந்த ரந்தான்
என்னுமலை ஏழுசிவை விதூத பாபை இமைபுனிதை பூரணையோ டகில பாபை
சென்னெறிசேர் தம்பைஎனு நதியோரேழு சேர்ந்துளது தபதர்சடா வகர்மந் தேகர்
பன்னுபுகழ் அனேகர் அவர் சனங்க ளாவார் பங்கயனே அங்குடைய பகவன் அம்மா. ......
52(மற்றதனுக் கப்பா)
மற்றதனுக் கப்பாலை அளக்கர் கன்னல் வளைந்துடைய தீபஞ்சான் மலியாம் அங்கட்
கொற்றவனாந் துதிமானன் அவன்றன் மைந்தர் குசலன்வெய்யன் தேவன்முனி அந்த காரன்
அற்றமிலா மனோரதன்துந் துபியாம் அன்னோர்க் களித்தனன்ஏழ் கூறாக்கி யசலம் ஏழுஞ்
சொற்றிமிரம் சுரபிவா மனம்வி ருத்தம் துந்துபிசம் மியத்தடம்புண் டரீகம் நிற்கும். ......
53(போதுகுமு தங்க)
போதுகுமு தங்கவரி யாதி யாமை புண்டரிகை மனோபமைசந் தியையென் றோதுஞ்
சீதநதி யேழுசெல்லும் புட்க லாதர் சிறந்திடுபுட் கரர்தனியர் சிசிரர் என்போர்
ஏதமிலா துறைசனங்கள் கடவுள் ஈசன் இதற்குமப்பால் மதுக்கடல்சூழ்ந் திருந்த தீபம்
மேதகுகோ மேதகம்அவ் வியனே தொன்னாள் வேந்தன்அவற் கெழுமைந்தர் மேனாள் வந்தார். ......
54(தூயவிமோ கனன்)
தூயவிமோ கனன்மோகன் சகலன் சோமன் சுகுமாரன் குமாரன்மரீ சகனாம் மைந்தர்க்
காயதையேழ் கூறுபுரிந் தளித்தான் சிங்கம் அத்தம்உத யம்சலகம் கிரவுஞ்சம் ஆம்பி
கேயம்இர மியங்கிரியேழ் அயாதி தேனுக் கிளர்கபத்தி சுகுமாரி குமாரி இக்கு
மாயைநதி ஏழுளமந் தகர்ஆ மங்கர் மாகதர்மா னசர்மாக்கள் மதிமுன் தெய்வம். ......
55(புடையினது தூய)
புடையினது தூயபுனற் கடலாந் தீபம் புட்கரமன் னன்சவனன் புதல்வ ரானோர்
அடல்கெழுவு தாதகிமா பீத னென்போர்க் கதனையிரு கூறுபடுத் தளித்தான் என்ப
இடபமகேந் திரம்வருணம் வராக நீலம் இந்திரமந் திரியமெனும் ஏழு வெற்புக்
குடிலைசிவை உமை தரணிசுமனை சிங்கை குமரியெனும் எழுநதியுங் கொண்டு மேவும். ......
56(மேனிலா வியநகரர்)
மேனிலா வியநகரர் நாகர் என்போர் மேவியமர் பரிசனம்வெய் யவனே புத்தேள்
ஆனதோர் புட்கரத்தின் முடிவில் ஐம்ப தாயிரம்யோ சனைதன்னில் அசல மொன்று
மானசோத் தரம்எனவே சகடக் கால்போல் வட்டணைபெற் றிடுமதன்கண் மகவா னுக்கும்
ஏனையோர் எழுவருக்குங் குணபா லாதி எண்டிசையி னும்பதங்கள் எய்தும் அன்றே. ......
57(பொங்குதிரைப் புணரி)
பொங்குதிரைப் புணரிகளின் முடிவு தோறும் புடையுறவே வளைந்தொவ்வோர் பொருப்பு நிற்கும்
இங்குளதோர் சாகமுதல் தீப முற்றும் இருக்குநர்க்கு நரைதிரைமூப் பின்னல் இல்லை
அங்கவர்கள் கலியினுங்கிம் புருடர் தன்மை யடைவர்பதி னாயிரமாண் டமர்வர் அப்பால்
தங்கியது தபனியப்பார் அதனைச் சூழ்போய்த் தடம்பெருநே மிப்பொருப்புச் சார்வுற் றன்றே. ......
58(நேமிவரை அதற்கி)
நேமிவரை அதற்கிப்பாற் சுடரே அப்பால் நிசிப்படலஞ் செய்யமணி நிறனே மன்னர்
காமருசீர் இயக்கர்இராக் கதரே வெம்பேய்க் கணங்கள்அமர்ந் திடுவர்திசைக் கடவு ளோருந்
தாமுடைய மாதிரத்தின் மேரு வின்கண் தங்குதல்போல் வைகுவர்அங் கதனுக் கப்பால்
ஏமமுறு புறக்கடல்அங் கதனுக் கப்பால் இருளாகும் அதற்கப்பால் எய்தும் அண்டம். ......
59(ஊழினெறி யால்தத்தம்)
ஊழினெறி யால்தத்தம் உயிரைத் தாமே ஒழிவுசெய்தோ ருந்தெருளு முணர்வி லோரும்
ஆழிவரைப் புறஞ்சூழ்வர் அப்பா லாகும் ஆரிருள்சேர் எல்லைதனில் அநாதி யீசர்
வாழுமொரு பெருங்கயிலை யுண்டவ் வண்ட மருங்கதனிற் கணநிரைகள் வதிந்து மல்குஞ்
சூழுறுசம் புத்தீப முதலா அண்டச் சுவர்காறும் புவியென்பர் தொல்லை யோரே. ......
60(இப்புவியின் மேற்கண)
இப்புவியின் மேற்கணத்தின் உலக மாகும் இதன்மிசைக்குய் யகலோகம் இதற்கு மீது
வைப்புடைய ஈரைங்கால் வயங்கு தேயம் மற்றதன்மேல் எழுபுயலும் வழங்கு மெல்லை
முப்பதினா யிரகோடி முகில்ஒவ் வொன்றை முறைசூழ்வுற் றிடும்அதற்கு முன்ன ராகச்
செப்பரிய கிம்புருடர் கருட ரானோர் சித்தர்கள்விஞ் சையர்இயக்கர் செறியும் மூதூர். ......
61(இங்கிதன்மேற் சுரந)
இங்கிதன்மேற் சுரநதிசெல் லிடனே அப்பால் இரவிபதம் தரணிக்கோர் இலக்க மாகும்
அங்கதனின் முப்பான்முக் கோடி தேவர் அருக்கனுடன் வழிக்கொள்வர் அதற்கு மீதே
திங்கள்உல கோரிலக்கம் உம்பர் தன்னில் செறிதருதா ரகையுலகம் இலக்கஞ் சேணிற்
பொங்கொளிசேர் புதன்உலகீ ரிலக்கம் அப்பாற் புகர்உலகம் ஈரிலக்கம் பொருந்திற் றன்றே. ......
62(அந்தரமேற் சேய்உல)
அந்தரமேற் சேய்உலகீ ரிலக்கம் மேலே அரசன்உல கீரிலக்கம் அதற்கு மீதே
மந்தன்உல கீரிலக்கம் அதன்மேல் ஓரேழ் மாமுனிவர் உலகிலக்க மாகும் அப்பால்
நந்துருவன் உலகிலக்கம் புவர்லோ கத்தின் நலத்தகைய தொகைபதினைந் திலக்க மாகும்
இந்தவுல கத்துமிசை யுடைய தேயம் எழுவகையா மருத்தினமுங் கெழுவு மெல்லை. ......
63(தொகலோடு சேர்த)
தொகலோடு சேர்தருமிப் பதத்தின் மீதிற் சுவர்லோகம் எண்பத்தஞ் சிலக்க மாங்கே
புகலோடு வானவரும் பிறரும் போற்றப் புரந்தரன்வீற் றிருந்தரசு புரிவன் அப்பால்
மகலோகம் இருகோடி மார்க்கண்டாதி மாமுனிவர் பலர்செறிவர் மற்ற தன்மேல்
இகலோகம் பரவுசன லோகம் எல்லை எண்கோடி பிதிர்தேவர் இருப்பர் அங்கண். ......
64(தவலோகம் உன்ன)
தவலோகம் உன்னதமீ ராறு கோடி சனகர்முத லாவுடைய வனகர் சேர்வர்
அவண்மேற்சத் தியவுலகம் ஈரெண் கோடி அயன்இன்பத் தலம்உலக மளிக்குந் தானம்
நவைதீரும் பிரமபதம் மூன்று கோடி நாரணன்வாழ் பேருலகம் ஓர்முக் கோடி
சிவலோகம் நாற்கோடி அதற்கு மீதே திகழண்ட கோளகையுங் கோடி யாமே. ......
65(வேதமொடு தந்திரமும்)
வேதமொடு தந்திரமும் அவற்றின் சார்பு மிருதிகளும் பிறநூலும் வேறு வேறா
ஓதிடுமண் டத்தியற்கை மலைவோ வென்றால் உண்மைதெரிந் திடிற்படைப்பும் உலப்பில் பேதம்
ஆதலினால் அவ்வவற்றின் றிரிபு நாடி அறிந்தஉனக் கீண்டுண்மை யதுவே சொற்றாம் ஏதமில்
இவ் வண்டத்தில் புவன நூற்றெட் டிறையருள்சேர் உருத்திரர்தம் மிருக்கை யாமே. ......
66வேறு(இந்த அண்டத்தின்)
இந்த அண்டத்தின் இயற்கைய முன்னுனக் கிறைவன்
தந்த அண்டங்கள் ஆயிரத் தெட்டுமித் தகைமை
மைந்த நீசென்று காணுதி யெனவகுத் துரைப்ப
அந்த மில்லதோர் மகிழ்ச்சியின் உணர்ந்தனன் அவுணன். ......
67ஆகத் திருவிருத்தம் - 2572