(அற்றா கின்ற வேலையின் முன்)
அற்றா கின்ற வேலையின் முன்னோர் அரணம்போற்
சுற்றா நிற்குந் தானவர் தங்கோன் தொலைவில்சீர்
பெற்றான் என்னுந் தன்மையை உன்னிப் பெருவன்மை
உற்றா ரொல்லென் றார்த்தனர் ஆற்ற உவப்புற்றார். ......
1(ஊழியில் வேதன்)
ஊழியில் வேதன் கண்டுயில் வேலை உலகஞ்சூழ்
ஆழிக ளேழும் ஆணையின் நிற்றல் அதுநீங்கி
மாழைகொள் மேருச் சுற்றிய தென்ன மகத்தெல்லை
சூழறல் நீங்கிச் சூர்முதல் தன்பால் துன்னுற்றார். ......
2(கண்டார் ஆர்த்தார்)
கண்டார் ஆர்த்தார் கான்மிசை வீழ்ந்தார் கமழ்வேரி
கொண்டார் ஒத்தார் கைத்தொழு கின்றார் குப்புற்றார்
அண்டா ஓகை பெற்றனர் தொன்னாள் அயர்வெல்லாம்
விண்டார் வெஞ்சூர் தன்புடை யாகி விரவுற்றார். ......
3(முன்னா குற்றோ)
முன்னா குற்றோ ரிற்சிலர் தம்மை முகநோக்கி
இந்நாள் காறும் நீர்வலி யீர்கொ லெனவோதி
மன்னா குற்றோன் நல்லருள் செய்ய மகிழ்வெய்தி
அன்னார் யாரும் இன்னதொர் மாற்றம் அறைகுற்றார். ......
4(தீயுண் டாகுங்)
தீயுண் டாகுங் கண்ணுதல் கொண்ட சிவனுண்டு
நீயுண் டெங்கட் கோர்குறை யுண்டோ நிலையாகி
ஏயுஞ் செல்வஞ் சீரொடு பெற்றோம் இடரற்றோம்
தாயுண் டாயின் மைந்தர் தமக்கோர் தளர்வுண்டோ. ......
5(என்பார் தம்பால்)
என்பார் தம்பால் அன்பின னாகி இறைபின்னோர்
தன்பா லாக நிற்புழி இந்தத் தகுவன்றான்
வன்பா லானான் செய்வதென் என்னா வானோர்கள்
துன்பாய் அச்சுற் றேங்கினர் ஆவி தொலைவார்போல். ......
6வேறு(சேனை நள்ளிடை)
சேனை நள்ளிடைச் சீர்கெழு வன்மையான்
மேன தன்மை விருப்பினிற் கண்ணுறீஇ
மான மேற்சென்று மன்னொடுந் தானவர்
சோனை மாரியில் தூமலர் தூவினார். ......
7(தூசு வீசினர்)
தூசு வீசினர் சூர்முதல் வாழியென்
றாசி கூறினர் ஆடினர் பாடினர்
பேச லாத பெருமகிழ் வெய்தினார்
வாச வன்றன் மனத்துயர் நோக்கினார். ......
8(அண்ண லார்அரு)
அண்ண லார்அரு ளால்அழல் வேதியின்
கண்ணில் வந்த கணிப்பில் படைக்கெலாம்
எண்ணி லோரை இறையவர் ஆக்கினான்
நண்ணி நாளும் நவையறப் போற்றவே. ......
9(கண்ண கன்புய)
கண்ண கன்புயக் காவலன் தானைகள்
மண்ணும் வானமும் மாதிர வெல்லையுந்
தண்ண றச்செலத் தம்பியர் தம்மொடும்
எண்ணி வேள்வி இருங்களம் நீங்கினான். ......
10(நீங்கி மீண்டு)
நீங்கி மீண்டு நெடுந்தவத் தந்தைதன்
பாங்கர் எய்திப் பணிந்து பரமனால்
வாங்க லுற்ற வரத்தியல் கூறியே
யாங்கள் செய்வகை என்னினி யென்னவே. ......
11(தந்தை கேட்டு)
தந்தை கேட்டுச் சதமகன் வாழ்வினுக்
கந்த மாகிய தோவண்ட ருக்கிடர்
வந்த தோவெம் மறைநெறி போனதோ
எந்தை யார்அருள் இத்திற மோவெனா. ......
12(உன்னி யுள்ள)
உன்னி யுள்ளத் துணர்வுறு காசிபன்
தன்னின் வந்த தனயரை நோக்கியே
முன்னை நுங்கண் முதற்குருப் பார்க்கவன்
அன்ன வன்கண் அடைகுதிர் அன்பினீர். ......
13(அடைதி ரேயெ)
அடைதி ரேயெனின் அன்னவன் உங்களுக்
கிடைய றாவகை இத்திரு மல்குற
நடைகொள் புந்தி நவின்றிடும் நன்றெனா
விடைபு ரிந்து விடுத்தனன் மேலையோன். ......
14(விட்ட காலை விடை)
விட்ட காலை விடைகொண்டு வெய்யவன்
மட்டி லாத வயப்படை யோடெழா
இட்ட மான இயற்புக ரோனிடங்
கிட்டி னானது கேட்டனன் ஆங்கவன். ......
15(கேட்டு ணர்ந்திடு)
கேட்டு ணர்ந்திடு கேழ்கிளர் தேசிகன்
வாட்ட நீங்கி மகிழ்நறை மாந்தியே
வேட்ட மெய்தி விரைந்துதன் சீடர்தங்
கூட்ட மோடெதிர் கொண்டு குறுகவே. ......
16(கண்ட சூரன்)
கண்ட சூரன் கதுமெனத் தன்பெருந்
தண்ட முன்சென்று தம்பியர் தம்மொடு
மண்டு காதலின் மன்னிய தேசிகன்
புண்ட ரீகமென் பொன்னடி தாழ்ந்தெழ. ......
17(நன்று வாழிய)
நன்று வாழிய நாளுமென் றாசிகள்
நின்று கூறி நிருதர்க் கிறைவனைத்
தன்று ணைக்கரத் தால்தழு விப்புகர்
என்றும் வாழ்தன் னிருக்கைகொண் டேகினான். ......
18(ஏகு மெல்லை)
ஏகு மெல்லை இளவற் கிளவலை
வாகு சேர்ந்தநம் மாப்படை போற்றென
யூக மோடு நிறீஇயுர வோனொடும்
போகல் மேயினன் புந்தியில் சூரனே. ......
19(ஆரு யிர்த்துணை)
ஆரு யிர்த்துணை யான அரிமுகன்
வார முற்றுடன் வந்திட வந்திடுஞ்
சூர பன்மனைச் சுக்கிரன் தன்னிடஞ்
சேர வுய்த்துச் செயன்முறை நாடியே. ......
20(ஆச னங்கொடு)
ஆச னங்கொடுத் தங்கண் இருத்தியே
நேச நெஞ்சொடு நீடவும் நல்லன
பேசி நீர்வரும் பெற்றியென் னோவெனாத்
தேசி கன்சொலச் செம்மல் உரைசெய்வான். ......
21(ஓங்கு வேள்வி)
ஓங்கு வேள்வி உலப்பறச் செய்ததும்
ஆங்க னம்வந் தரனருள் செய்ததும்
தாங்க ரும்வளந் தந்ததுங் காசிபன்
பாங்கர் வந்த பரிசும் பகர்ந்துமேல். ......
22(தாதை கூறிய)
தாதை கூறிய தன்மையும் முற்றுற
ஓதி யாமினி ஊக்கி யியற்றிடும்
நீதி யாது நிகழ்த்துதி நீயெனத்
தீது சால்மனத் தேசிகன் கூறுவான். ......
23(பாச மென்றும்)
பாச மென்றும் பசுவென்றும் மேதகும்
ஈச னென்றும் இசைப்பர் தளையெனப்
பேசல் மித்தை பிறிதிலை ஆவியுந்
தேசு மேவு சிவனுமொன் றாகுமே. ......
24(தீய நல்லன வேயெ)
தீய நல்லன வேயெனச் செய்வினை
ஆயி ரண்டென்பர் அன்னவற் றேதுவால்
ஏயு மால்பிறப் பென்பர்இன் பக்கடல்
தோயும் என்பர் துயருறு மென்பரால். ......
25(ஒருமை யேயன்றி)
ஒருமை யேயன்றி ஊழின் முறைவிராய்
இருமை யுந்துய்க்கும் என்பர்அவ் வெல்லையில்
அரிய தொல்வினை யானவை ஈட்டுமேல்
வருவ தற்கென்பர் மன்னுயிர் யாவையும். ......
26(ஈட்டு கின்ற)
ஈட்டு கின்ற இருவினை யாற்றலான்
மீட்டு மீட்டும் விரைவின் உதித்திடும்
பாட்டின் மேவும் பரிசுணர்ந் தன்னவை
கூட்டு மென்பர் குறிப்பரி தாஞ்சிவன். ......
27(சொற்ற ஆதியுந்)
சொற்ற ஆதியுந் தோமுறு வான்றளை
உற்ற ஆவியும் ஒன்றல ஒன்றெனில்
குற்ற மாகும்அக் கோமுதற் கென்பரால்
மற்ற தற்கு வரன்முறை கேட்டிநீ. ......
28(ஆதி யந்தமின்)
ஆதி யந்தமின் றாகி அமலமாஞ்
சோதி யாயமர் தொல்சிவன் ஆடலின்
காத லாகிக் கருதுதல் மாயையாற்
பூதம் யாவும் பிறவும் புரிவனால். ......
29(இடங்கொள் மாயை)
இடங்கொள் மாயையின் யாக்கைக ளாயின
அடங்க வும்நல்கி அன்னவற் றூடுதான்
கடங்கொள் வானிற் கலந்துமற் றவ்வுடல்
மடங்கு மெல்லையின் மன்னுவன் தொன்மைபோல். ......
30(இத்தி றத்தின்)
இத்தி றத்தின்எஞ் ஞான்றும்அவ் வெல்லைதீர்
நித்தன் ஆடல் நிலைமை புரிந்திடும்
மித்தை யாகும் வினைகளும் யாவையும்
முத்தி தானு முயல்வதும் அன்னதே. ......
31(பொய்ய தாகும்)
பொய்ய தாகும் பொறிபுலம் என்றிடின்
மெய்ய தோவவை காணும் விழுப்பொருள்
மையில் புந்தியும் வாக்கும் வடிவமுஞ்
செய்ய நின்ற செயல்களும் அன்னதே. ......
32(அன்ன செய்கை)
அன்ன செய்கைகள் அன்மைய தாகுமேற்
பின்னர் அங்கதன் பெற்றியின் வந்திடும்
இன்னல் இன்பம் இரண்டுமெய் யாகுமோ
சொன்ன முன்னைத் துணிபின வாகுமே. ......
33(மித்தை தன்னை)
மித்தை தன்னையும் மெய்யெனக் கொள்ளினும்
அத்த குந்துய ரானதும் இன்பமும்
நித்த மாகும் நிமலனை எய்துமோ
பொத்தி லான பொதியுடற் காகுமே. ......
34(தோன்று கின்றது)
தோன்று கின்றதும் துண்ணென மாய்வதும்
ஏன்று செய்வினை யாவதுஞ் செய்வதும்
ஆன்ற தற்பரற் கில்லை அனையதை
ஊன்றி நாடின் உடற்குறு பெற்றியே. ......
35(போவதும் வருகின்ற)
போவ தும்வரு கின்றதும் பொற்புடன்
ஆவ தும்பின் அழிவதுஞ் செய்வினை
ஏவ தும்மெண்ணி லாத கடந்தொறும்
மேவு கின்றதொர் விண்ணினுக் காகுமோ. ......
36(அன்ன போல்எங்கும்)
அன்ன போல்எங்கும் ஆவியொன் றாகியே
துன்னி நின்றிடு தொல்பரன் வேறுபா
டென்ன தும்மிலன் என்றுமொர் பெற்றியான்
மன்னும் அங்கது வாய்மையென் றோர்திநீ. ......
37(தஞ்ச மாகும் தரும)
தஞ்ச மாகும் தருமநன் றாலென
நெஞ்ச கத்து நினைந்து புரிவதும்
விஞ்சு கின்ற வியன்பவந் தீதென
அஞ்சு கின்றது மாம்அறி வின்மையே. ......
38(யாது யாதுவந் தெய்)
யாது யாதுவந் தெய்திய தன்னதைத்
தீது நன்றெனச் சிந்தைகொள் ளாதவை
ஆதி மாயையென் றாய்ந்தவை ஆற்றுதல்
நீதி யான நெறிமைய தாகுமே. ......
39(தருமஞ் செய்க)
தருமஞ் செய்க தவறுள பாவமாங்
கருமஞ் செய்யற்க என்பர் கருத்திலார்
இருமை தன்னையும் யாவர்செய் தாலுமேல்
வருவ தொன்றிலை மாயம்வித் தாகுமோ. ......
40(கனவின் எல்லை)
கனவின் எல்லையில் காமுறு நீரவும்
இனைய வந்தவும் ஏனை இயற்கையும்
நனவு வந்துழி நாங்கண்ட தில்லையால்
அனைய வாம்இவண் ஆற்றுஞ் செயலெலாம். ......
41(இம்மை யாற்றும்)
இம்மை யாற்றும் இருவினை யின்பயன்
அம்மை எய்தின்அன் றோவடை யப்படும்
பொய்ம்மை யேயது பொய்யிற் பிறப்பது
மெய்ம்மை யாகும தோசுடர் வேலினோய். ......
42(நெறிய தாகுமிந்)
நெறிய தாகுமிந் நீர்மையெ லாம்பிறர்
அறிவ ரேயெனின் அன்னதொர் வேலையே
பெறுவர் யாமுறும் பெற்றியெ லாமவை
உறுதி யுண்டெனின் உண்மைய தாகுமே. ......
43(சிறிய ரென்று)
சிறிய ரென்றுஞ் சிலரைச் சிலரைமேல்
நெறிய ரென்றும் நினைவது நீர்மையோ
இறுதி யில்லுயிர் யாவுமொன் றேயெனா
அறிதல் வேண்டுமஃ துண்மைய தாகுமே. ......
44(உண்மை யேயிவை)
உண்மை யேயிவை ஓதியி னார்உணர்
நுண்மை யாம்இனி நுங்களுக் காகிய
வண்மை யுந்தொல் வழக்கமும் மற்றவுந்
திண்மை யோடுரை செய்திடக் கேட்டிநீ. ......
45(தேவர் தம்மினு)
தேவர் தம்மினுஞ் சீதர னாதியோர்
ஏவர் தம்மினும் ஏற்றம தாகிய
கோவி யற்கையுங் கொற்றமும் ஆணையும்
ஓவில் செல்வமும் உன்னிடை யுற்றவே. ......
46வேறு(உற்றதோர் மேன்)
உற்றதோர் மேன்மை நாடி உன்னைநீ பிரம மென்றே
தெற்றெனத் தெளிதி*
1 மற்றத் திசைமுகன் முதலோர் தம்மைப்
பற்றலை மேலோ ரென்று பணியலை இமையோர் உங்கள்
செற்றலர் அவரை வல்லே செறுமதி திருவுஞ் சிந்தி. ......
47(இந்திர னென்போன்)
இந்திர னென்போன் வானோர்க் கிறையவன் அவனேநென்னல்
அந்தமில் அவுணர் தங்கள் ஆருயிர் கொண்டான் அன்னான்
உய்ந்தனன் போகா வண்ணம் ஒல்லையில் அவனைப் பற்றி
மைந்துறு நிகளஞ் சேர்த்தி வன்சிறை புரிதி மாதோ. ......
48(சிறையினை இழை)
சிறையினை இழைத்துச் செய்யுந் தீயன பலவுஞ் செய்து
மறைபுகல் முனிவர் தம்மை வானவர் தம்மைத் திக்கின்
இறையவர் தம்மை நாளும் ஏவல்கொண் டிடுதி அன்னார்
உறைதரு பதங்க ளெல்லாம் உதவுதி அவுணர்க் கம்மா. ......
49(கொலையொடு களவு)
கொலையொடு களவு காமங் குறித்திடும் வஞ்ச மெல்லாம்
நிலையெனப் புரிதி யற்றால் நினக்குமேல் வருந்தீ தொன்றும்
இலையவை செய்தி டாயேல் இறைவநீ விரும்பிற் றெல்லாம்
உலகிடை ஒருங்கு நண்ணா உனக்கெவர் வெருவும் நீரார். ......
50(வண்டுழாய் மிலை)
வண்டுழாய் மிலைச்சுஞ் சென்னி மால்விடைப் பாகன் தந்த
அண்டமா யிரமே லெட்டும் அனிகமோ டின்னே ஏகிக்
கண்டுகண் டவண்நீ செய்யுங் கடன்முறை இறைமை யாற்றி
எண்டிசை புகழ மீண்டே ஈண்டுவீற் றிருத்தி யென்றான். ......
51ஆகத் திருவிருத்தம் - 2505