(கண்ட கறைமிட)
கண்ட கறைமிடற்றுக் கண்ணுதலோன் சுந்தரனை
விண்டு முதலோர் வியப்பவே வெண்ணையிலாட்
கொண்ட தொருபனவக் கோலந் தனைத்தரித்துத்
தண்டும் ஒருகை தனில்ஊன்றி வந்தனனே. ......
1(அங்கண் மகவேதி)
அங்கண் மகவேதி அணித்தாக வேகுறுகிச்
சிங்க முகனைச் சிவபெருமான் கண்ணுற்றே
இங்கு மிகநீ ரெவரும் இரங்குகின்றீர்
நுங்கள் பரிசு நுவலு மெனமொழிந்தான். ......
2(எந்தை பெருமான்)
எந்தை பெருமான் இயம்ப அதுநாடித்
தந்தை யனையார் தமியேந் துயர்கண்டு
வந்து வினவுகின்றார் மற்றிங் கிவர்அருள்சேர்
சிந்தை யினரென்று சீயமுகன் உன்னினனே. ......
3(உன்னி அமலன்)
உன்னி அமலன் உகள மலர்ப்பதமேல்
சென்னி பலவுஞ் செறியப் பணிந்தெழுந்தெம்
இன்னல் வருவாயும் எமது வரன்முறையும்
பன்னி யிடுவ னெனவே பகர்கின்றான். ......
4வேறு(தந்தை யாவான்)
தந்தை யாவான் காசிபனே தாயும் மாயை தானென்பான்
மைந்தர் யாங்கள் ஒருமூவர் மக்கள் பின்னும் பலருண்டால்
எந்தம் அன்னை பணிதன்னா லியாங்கள் ஈசன் றனக்காக
இந்த வனத்தில் மூவருமிவ் வேள்வி தன்னை இயற்றினமே. ......
5(அங்கப் பரிசே)
அங்கப் பரிசே யாண்டுபல அகல மகத்தை ஆற்றிடவுங்
கங்கைச் சடையோன் முன்னின்று கருணை சிறிதுஞ் செய்திலனால்
எங்கட் கெல்லாம் முன்னவனாம் இகல்வெஞ் சூர னதுநாடி
மங்குற் செறியும் வானிற்போய் வாளால் தசையீர்ந் திட்டனனே. ......
6(மின்போல் இலங்கும்)
மின்போல் இலங்கும் வாளாற்றன் மெய்யிற் றசைகள் ஈர்ந்துளத்தில்
துன்போர் இறையும் இல்லாத சூரன் மகத்தீ மிசையிடலும்
முன்போல் தன்னூன் வளர்ந்திடவே பின்னும் அஃதே முயன்றதற்பின்
தன்போல் ஒளிர்வச் சிரகம்பத் தலைவீழ்ந் துருவித் தழல்புக்கான். ......
7(புக்கு முன்னோன்)
புக்கு முன்னோன் ஈறாகிப் போந்த காலை யாங்கண்டு
மிக்க மனத்தில் துயர்கொண்டு வெருவிப் புலம்பி எமதுயிரும்
ஒக்க விடவே நினைந்தேமால் உம்மைக் கண்டோ ரிறைதாழ்த்தோம்
தக்க திதுநம் வரன்முறையுந் தமியேந் துயரு மெனமொழிந்தான். ......
8(மொழிந்த காலை)
மொழிந்த காலை அங்கண்நின்ற முக்கண் இறைநும் முன்னோன்போல்
ஒழிந்து நீரும் மாயாதே உமது சூரன் தனையின்னே
அழிந்த தீயுள்நின் றெழுவித் தருள்செய் கின்றாம் அதுகாண்டிர்
கழிந்த சோகம் விடுதிரெனாக் கங்கை தன்னை நினைந்தனனே. ......
9(முன்னாள் அம்மை)
முன்னாள் அம்மை அங்குலியின் முளைத்த கங்கை தனிலெங்கோன்
மின்னார் சடையிற் கரந்தனவே யன்றி மகவான் விரிஞ்சன்மால்
என்னா நின்ற மும்மையினோர் இருக்கை தோறும் அளித்தவற்றுட்
பொன்னாட் டிருந்த நதிதன்னைப் புந்தி மீதில் உன்னினனே. ......
10(மாயோன் தன்பால்)
மாயோன் தன்பால் முற்கொண்ட வலிசேர் தண்ட மேந்திவரு
தூயோன் உன்ன அக்கங்கை துண்ணென் றுணர்ந்து துளங்கி விண்ணோர்
ஆயோர் எவரும் வெருக்கொள்ள அளப்பில் முகங்கொண் டார்த்தெழுந்து
சேயோ ரெல்லாம் அணித்தாகத் திசையோர் அஞ்சச் சென்றதுவே. ......
11(மேலா கியவிண்)
மேலா கியவிண் ணுலகனைத்தும் விரைவிற் கடந்து மேதினியின்
பாலாய் எங்கள் பிரான்பதங்கள் பணிந்து பணியாற் படர்செந்தீ
ஏலா நின்ற நடுக்குண்டத் திடையே புகலும் எறிகடல்வாய்
ஆலா லம்வந் துதித்ததென அவுணர் கோமா னார்த்தெழுந்தான். ......
12(தொன்மை போல)
தொன்மை போல வேதியினிற் சூர பன்மாத் தோன்றலுமத்
தன்மை கண்ட அரிமுகனுந் தார கப்பேர் வீரனுமாய்
இன்மை கொண்டோர் பெருவளம்பெற் றென்ன மகிழ்வுற் றெல்லையிலா
வன்மை யெய்திக் கடிதோடி மன்னன் பதமேல் வணங்கினரே. ......
13(தங்கோன் தன்னை)
தங்கோன் தன்னைப் பின்னோர்கள் தாழுஞ் செயலைத் தானவர்கண்
டெங்கோன் வந்தான் வந்தானென் றெவருங் கேட்ப எடுத்தியம்பிப்
பொங்கோ தஞ்சேர் கடன்மதியப் புத்தேள் வரவு கண்டதென
அங்கோ தையினால் வாழியவென் றவனைப் போற்றி ஆர்த்தனரே. ......
14(எண்மேற் கொண்ட)
எண்மேற் கொண்ட நிருதர்குழாம் ஏத்த எரிநின் றெழுசூரன்
மண்மேற் கொண்ட திறங்காணூஉ வானோர் தொகையும் மகபதியும்
விண்மேற் கொண்ட புயல்கண்ட வியன்கோ கிலம்போல் வெருவித்தம்
முண்மேற் கொண்ட செல்லலொடும் ஓடித் தம்மூர் உற்றனரே. ......
15வேறு(அரந்தைதனை இக)
அரந்தைதனை இகந்தஇரு துணைவர்களும் பாங்கருற அவுணர் சேனை
பரந்துபல வாழ்த்தெடுப்பச் சூரபன்மன் திகழ்வேலைப் படியும் வானும்
நிரந்தபுனற் கங்கைதனை வருவித்து மறையவன்போல் நின்ற எம்மான்
கரந்துதனை உணர்கின்ற உருவினோடு தோன்றினனால் ககன மீதே. ......
16(நாரிபா கமும்இமை)
நாரிபா கமும்இமையா முக்கண்ணுந் திருப்புயங்கள் நான்குமாகி
மூரிமால் விடைமேல்கொண் டெம்பெருமான் மேவுதலும் உன்னி நோக்கிப்
பாரின்மீ மிசைவீழ்ந்து பணிந்தெழுந்து பலமுறையும் பரவிப் போற்றிச்
சூரனா ராதபெரு மகிழ்சிறந்து துணைவரொடுந் தொழுது நின்றான். ......
17(நின்றுபுகழ் சூரபன்)
நின்றுபுகழ் சூரபன்மன் முகநோக்கி நமையுன்னி நெடிது காலம்
வன்றிறன்மா மகமாற்றி எய்த்தனையால் வேண்டுவதென் வகுத்தி யென்னப்
பொன்றிகழு மலர்க்கமலப் பொகுட்டுறைவோன் முதலியபுத் தேளிர் யாரும்
இன்றெமது தலைமையெலாம் போயிற்றா லென இரங்க இதனைச் சொல்வான். ......
18(கொன்னாரும் புவி)
கொன்னாரும் புவிப்பாலாய்ப் பலபுவனங் கொண்டவண்டக் குழுவுக் கெல்லாம்
மன்னாகி யுறல்வேண்டும் அவைகாக்குந் தனியாழி வரலும் வேண்டும்
உன்னாமுன் அவையனைத்துஞ் செல்லுவதற் கூர்திகளும் உதவல் வேண்டும்
எந்நாளும் அழியாமல் இருக்கின்ற மேனியுமெற் கீதல் வேண்டும். ......
19(அலையாழி மிசை)
அலையாழி மிசைத்துயில்கூர் பண்ணவனே முதலோர்கள் அமர்செய் தாலும்
உலையாது கடந்திடுபேர் ஆற்றலொடும் பலபடையும் உதவல் வேண்டும்
தொலையாமே எஞ்ஞான்றும் இருந்திடலும் வேண்டுமெனச் சூரன் வேண்டக்
கலையார்வெண் மதிமிலைச்சுஞ் செஞ்சடிலத் தனிக்கடவுள் கருணை செய்வான். ......
20(மண்டனக்கா யிர)
மண்டனக்கா யிரகோடி அண்டங்க ளுளவாகு மற்ற வற்றுள்
அண்டமோ ராயிரத்தெட் டுகநூற்றெட் டாள்கவென அருளால் நல்கி
எண்டொகைபெற் றிடுகின்ற அவ்வண்டப் பரப்பெங்கும் ஏகும் வண்ணம்
திண்டிறல்பெற் றிடுகின்ற இந்திரஞா லமதென்னுந் தேரும் நல்கி. ......
21(எண்ணுபல புவன)
எண்ணுபல புவனங்கள் கொண்டஅண்டத் தொகைதன்னை யென்றும் போற்றக்
கண்ணனது நேமியினும் வலிபெறுமோர் அடலாழி கடிதின் நல்கி
அண்ணலுறு சினவேற்றுக் கோளரியூர் தியும்நல்கி அகிலத் துள்ள
விண்ணவர்கள் யாவருக்கும் அன்றுமுதன் முதல்வனாம் மேன்மை கல்கி. ......
22(மேற்றிகழும் வான)
மேற்றிகழும் வானவரைத் தானவரை ஏனவரை வெற்றி கொள்ளும்
ஆற்றலொடு பெருந்திறலும் பாசுபத மாப்படையே ஆதி யாகித்
தோற்றமுறு கின்றதெய்வப் படையனைத்தும் எந்நாளுந் தொலைந்தி டாமல்
ஏற்றமிகும் வச்சிரமா கியமணிமே னியுமுதவி இதற்குப் பின்னர். ......
23(ஆறுசேர் கங்கை)
ஆறுசேர் கங்கைதனை விண்ணுலகு தனிலேவி அக்கங் கைக்குங்
கூறுசேர் பெருவேள்விச் செந்தழற்குந் தோற்றமெய்திக் குலவும் வண்ணம்
வீறுசேர் பெருங்கடல்போல் ஒருபதினா யிரகோடி வெள்ள மாகுந்
தாறுபாய் கரிதிண்டேர் வயப்புரவி அவுணரெனுந் தானை நல்கி. ......
24வேறு(துன்னுறு பெரும்)
துன்னுறு பெரும்புகழ்ச் சூர பன்மனுக்
கின்னதோ ரருள்புரிந் திட்ட வெல்லையில்
அன்னவற் கிளைஞர்வந் தடிப ணிந்தெழத்
தன்னிகர் இல்லதோர் தலைவன் கூறுவான். ......
25வேறு(சூரன் என்பவன்)
சூரன் என்பவன் தோளிணை போலவே
வீரம் எய்தி விளங்கிநூற் றெட்டுகஞ்
சீரின் மேவுதிர் தேவர்கள் யாரையும்
போரில் வென்று புறந்தரக் காண்டிரால். ......
26(தேவர் யாவரு)
தேவர் யாவருஞ் சென்று தொழப்படு
மூவ ராகி மொழிந்திடு நுங்களைத்
தாவி லாதநஞ் சத்தியொன் றேயலால்
ஏவர் வெல்பவர் என்று விளம்பிமேல். ......
27(ஈறு றாத விரத)
ஈறு றாத விரதமுந் தன்பெயர்
கூறு தெய்வப் படையுங் கொடுத்திடா
வேறு வேறு மிகவருள் செய்துமேல்
ஆறு சேர்சடை ஆண்டகை ஏகினான். ......
28ஆகத் திருவிருத்தம் - 2454