(மன்னவர் மன்ன கேண்மோ மற்)
மன்னவர் மன்ன கேண்மோ மற்றிது புகல்வன் வேதா
முன்னொரு கற்பந் தன்னில் மூவகை யுலகும் நல்கித்
துன்னுயிர் முழுதும் நல்கித் துண்ணென அகந்தை கொண்டு
தன்னையும் பரமென் றுன்னித் தாணுவை அயர்த்தான் அன்றே. ......
1(எந்தையை மறந்து)
எந்தையை மறந்து போதன் யாவையும் விதித்த லோடுந்
தந்திடும் அளவே யன்றிச் சராசரம் பெருகா வாக
நொந்தனன் குறையென் னென்றே நோக்கினன் எமைமுன் ஈன்ற
ஐந்தொழில் முதல்வன் தன்னை அயர்த்தனன் போலு மென்றான். ......
2(இனியவன் அருள்)
இனியவன் அருள்பெற் றன்றி இவ்விதி முடியா தென்னாத்
தனயனும் அளவில் காலந் தவம்புரிந் திடவும் முக்கட்
பனிமதி முடியோன் அன்னான் பாற்படா தொழிய அந்தோ
வினையினேன் முன்னந் தாதை வெளிப்படும் எவன்கொ லென்றான். ......
3(கழியுடல் புயமேற்)
கழியுடல் புயமேற் கொண்ட கண்ணுதல் உறாத துன்னி
இழுதைய ரென்ன ஏங்கி இன்னலுற் றுயிர்த்து வல்லே
அழுதனன் மகவென் செய்வான் அன்னதோர் வேலை கண்ணீர்
விழவிழ அலகை யாகி மிகவெழுந் தீண்டிற் றன்றே. ......
4(காண்டலும் அலகை)
காண்டலும் அலகை ஈட்டங் கருத்திடர் உழப்ப வீழ்ந்து
மாண்டனன் போலச் சோர மன்னுயிர்க் குயிராய் நின்ற
ஆண்டகை யுணர்வு நல்கி அனையவன் கனவில் நண்ணி
ஈண்டினி வருந்தல் மைந்த எழுகெனா அருளிச் செய்வான். ......
5(மதித்தனை பரமென்)
மதித்தனை பரமென் றுன்னை மறந்தனை யெம்மை யற்றால்
விதித்திறங் கூடிற் றில்லை விரைந்தது முடிய நந்தம்
பதத்துளார் தம்மை உன்றன் பாங்குற விடுத்தும் என்றான்
உதித்திடல் இறத்த லின்றி உலகளித் துதவும் ஐயன். ......
6(அந்நெறி கனவி)
அந்நெறி கனவிற் காணும் அற்புதத் தெழுந்து வேதன்
செந்நெறி பூண்டு வைகிச் சிந்தையில் தேற்ற மெய்தி
உன்னலும் அறுவ ரைவர் உருத்திர கணத்தோர் தாதை
தன்னரு ளதனால் நெற்றித் தலத்தினும் போந்து நின்றார். ......
7(நிற்றலும் அவரை)
நிற்றலும் அவரை நோக்கி நெற்றியந் தலத்தில் நீவிர்
உற்றதை எவன்கொ லென்ன உன்செயல் முடியு மாற்றால்
மற்றெமை விடுத்தான் நம்பன் ஆதலின் வந்தே மென்றார்
பற்றலர் புரமூன் றட்ட பண்ணவன் வடிவங் கொண்டோர். ......
8(பரமன துருவாய்)
பரமன துருவாய் நின்றோர் பதினொரு வோரும் இவ்வா
றருள்செய விரிஞ்சன் கேளா அன்பினால் என்பால் வந்தீர்
விரைவுடன் உயிர்கள் தம்மை விதிக்குதிர் என்னத் தத்தம்
உருவுபோற் பதினோர் கோடி உருத்திரர் தொகையைத் தந்தார். ......
9(ஆங்கது தெரிந்து)
ஆங்கது தெரிந்து வேதா ஆவிகள் வினைக்கீ டன்றி
நீங்களிவ் வாறு செய்கை நெறியதன் றென்ன லோடும்
ஓங்கிய உருத்தி ரேசர் ஒல்லையெம் பதத்திற் போதும்
ஈங்கிவண் உயிரை முன்போல் ஈந்தனை இருத்தி யென்றார். ......
10(என்றிவை உரைத்துப் போதன்)
என்றிவை உரைத்துப் போதன் யாவையும் படைப்பான் நல்கி
ஒன்றிய உணர்வின் மிக்க உருத்திரர் யாரும் வெள்ளிக்
குன்றுடை முதல்வன் தொன்னாட் கொடுத்திடும் புவனம் புக்கார்
அன்றுதாம் அளித்து ளோரை அமரரோ டிருத்தி ரென்றார். ......
11(அவனியை அளித்தோன்)
அவனியை அளித்தோன் தன்பால் அடைந்துளார் அண்டந் தன்னில்
புவனமே லிருந்தார் அன்னார் புரிந்திடத் தொன்னாள் வந்த
பவர்முதல் உருத்தி ரேசர் பதினொரு கோடி யுள்ளார்
இவர்சிவ னருளால் வானோர் இனத்துடன் ஈண்டி யுற்றார். ......
12ஆகத் திருவிருத்தம் - 2745