இருபிறை எயிறு நிலவெழ உடலம் இருள்படு சொருபம் உடைக்கோ விடவே ...... 1
இறுகிய கயிறு படவினை முடுகி எமபடர் பிடரி பிடித்தே கொடுபோய் ...... 2
அருமறை முறையின் முறை முறை கருதி அதரிடை வெருவ ஒறுத்தால் வகையால் ...... 3
அறிவொடு மதுர மொழியது குழறி அலமரு பொழுதில் அழைத்தால் வருவாய் ...... 4
ஒருபது சிரமும் இருபது கரமும் விழஒரு பகழி தொடுத்தோன் மருகா ...... 5
உரமது பெரிய திரிபுரம் எரிய உயர்கன கிரியை வளைத்தோர் புதல்வா ...... 6
மருவளர் அடவி வனிதையர் பரவ மரகத இதணில் இருப்பாள் கணவா ...... 7
வளைகடல் கதற நிசிசரர் மடிய மலையொடு பொருத முழுச்சே வகனே. ...... 8
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
......... சொற்பிரிவு .........
இருபிறை எயிறு நிலவெழ உடலம் இருள் படு சொருபம் உடைக் கோ விடவே
......... பதவுரை .........
... இரண்டு சந்திர பிரபைகள் போன்ற பற்களில் இருந்து வெண்ணிற ஒளி வீச உடம்பு கரிய நிறமுடைய தலைவனாகிய எமராஜனின் கட்டளைப்படி
......... சொற்பிரிவு .........
இறுகிய கயிறு பட வினை முடுகி எமபடர் பிடரி பிடித்தே கொடு போய்
......... பதவுரை .........
... சுவாசத்தில் இறுகக் கட்டி பிராணனை இழுத்துச் செல்லும் சூக்குமக் கயிற்றில் உயிர்கள் அகப்பட பூர்வ வினைகளின்படி எமதூதர்கள் சூக்கும உடம்பின் பிடரியில் கை வைத்துப் பிடித்துக் கொண்டு எமபுரத்திற்குச் செல்லும் போது
......... சொற்பிரிவு .........
அருமறை முறையின் முறை முறை கருதி அதரிடை வெருவ ஒறுத்தால் வகையால்
......... பதவுரை .........
... வழியில் அச்சம் விளையும்படி பலவிதமாக தண்டித்தால் அருமை மிக்க வேதம் விதித்த விதியின்படி ஒழுங்காக தவறு ஏற்படாத வகையில் உன்னை சிந்தித்து
......... சொற்பிரிவு .........
அறிவொடு மதுர மொழியது குழறி அலமரு பொழுதில் அழைத்தால் வருவாய்
......... பதவுரை .........
... புத்தியும் இனிய பேச்சும் தடுமாறி வரும் அந்தக் கடைசி நேரத்தில் 'முருகா' என உணர்ச்சியுடன் உன்னை அழைப்பேன். அந்தச் சமயம் உடனே வந்து காப்பாற்ற வேண்டும்.
(சிவ சாம்ராஜ்யத்தின் சட்சட ஒழுங்கான விதிகளையும் விலக்குகளையும் கற்பிக்கும் வேதநெறிகளை மீறி நடப்போரை தண்டிக்கும் தர்ம ராஜனான எமனின் உடம்பு எனாமல் சொருபமுடைக்கோ என்கிறார்).
தர்ம சபையை அடைவதற்கு முன்பே, உயிர் செய்த பாவங்களை எண்ணி ஆத்திரமடைந்த எம படர்கள், 'ஏ பாவி, எத்தனைக் கோடி கோடி ஜென்மம் எடுத்தும் நீ நல்வழிப் படவில்லையே. நின்னைப் பெற்ற தாயர்களும் சலித்து விட்டனரே. ஒரு தாய் இரு தாய் பல கோடியதாய் உன்னைப் படைத்து படைத்து பிரமனும் சோர்ந்து விட்டாரே. உன் உடலைத் தின்று தின்று நரிகளும், உன் தேகத்தை திருப்ப திரும்ப எரித்ததினால் அக்னி தேவனும் சலித்து விட்டனரே. உன்னைப் போன்ற பாவிகளைக் கண்டு எங்கள் தலைவரான எமதர்ம ராஜனின் மேனி கருத்தனவே. கொதிக்கும் சினத்தோடு பற்களை நற நற என கடித்ததினால் அவைகளும் வளைந்து போயிற்றே. உன்னைப் பிடித்து பிடித்து எங்கள் கால்களும் சலித்து விட்டனவே' எனும் கோப மோழிகளைப் பேசி வசைகளுடனே தொடர்ந்து அடைவார்கள். பல தண்டனைகளைக் கொடுப்பார்கள். இப்படிப் பட்ட வேதனைகளை எண்ணி எண்ணி என் பேச்சும் குழறுமே. ஆதலால் இனிமேலாவது திருந்தி வேதம் விதித்த ஒழுங்குபடி நடந்து உள்ளம் உருகி ஒருகால் 'முருகா, பரமா, குமரா' என அழைப்பேன். அப்போது நீ வந்து ஆட்கொள்ள வேண்டும்.
கடி சமன் உயிர் தனை இரு விழி அனலது கக்க சக்கென முட்டி கட்டி ...... உடன்று போகு முன் கதி தரும் முருகனும் என நினை நினைப்பவர் கற்பமுர புக்கு அறிவொக்க கற்பது தந்திடாயோ ?
- படிதனில் உறவெனும் - திருப்புகழ் (பொதுப்பாடல்கள்).
......... சொற்பிரிவு .........
ஒருபது சிரமும் இருபது கரமும் விழ ஒரு பகழி தொடுத்தோன் மருகா
......... பதவுரை .........
... இராவணனின் பத்து தலைகளையும் இருபது கைகளையும் அறுத்து கீழே விழும்படி ஒப்பற்ற அஸ்திரத்தால் வீழ்த்திய ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் மருகனே,
(ஒப்பற்ற ப்ரம்மாஸ்திரத்தைக் கொண்டு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஒரே அம்பினால் இராவணனை வீழ்த்தினார் என அருணகிரியார் கூறுகிறார்:
.. சமர கண்ட கொற்றத்து அரக்கன் கதிர் விடும் பத்து கொத்து முடிக்கு தனி ஓர் அம்பைத் தொட்டு
- கனக தம்பத்தை - காஞ்சீபுரம் திருப்புகழ்.
'ஒரு' எனும் சொல்லுக்கு 'ஒப்பற்ற' எனவும் 'ஒன்று' எனவும் இரு பொருள் கொள்ளலாம்.
சீதா தேவி இரவணனை எச்சரித்ததை இராமாயணம் பேசுகிறது. .. ஆரியன் பகழி வல்லது. அறிந்திருந்தும் அறிவிலாதாய், தலை பத்தும் சிந்துவாயோ? ஒருபது பார மவுலியும் இருபது வாகு மேருவும் உததியில் விழ ஒரு கணை ஏவும் ப்ராக்ரமன். வெய்ய வாரணம் போல் கை தான் இருபது உடையான் தலை பத்தும் கத்தரிக்க எய்தான் மருகா .. கந்தர் அலங்காரம்).
......... சொற்பிரிவு .........
உரமது பெரிய திரிபுரம் எரிய உயர்கன கிரியை வளைத்தோர் புதல்வா
......... பதவுரை .........
... வலிமை மிக்க முப்புரங்களும் தீயில் சாம்பலாக, உயர்ந்த மேன்மையான மேரு மலையை வில்லாக வளைத்த சிவபெருமானின் திருக்குமாரனே,
வித்யுன் மாலி, தாரகாக்ஷன், கமாலாக்ஷன் எனும் அசுரத் தலைவர்கள் நீண்ட காலம் கடும் தவம் புரிந்து சிவபெருமானிடம் விண்வ, பூவுலகம், பாதாளம் எனும் மூன்று இடங்களிலும் பறக்கக் கூடிய முப்புரங்களை வரமாகப் பெற்றனர். பொன், வெள்ளி, செப்பால் ஆன இந்த முப்புரங்களிலும் இவர்கள் சென்று ஊர்களைப் பாழாக்கி வந்தனர். சிவ பூஜை செய்து வந்த இவர்களை சிவபெருமான் அழிக்க மாட்டார் எனக் கருதி, திருமால் புத்த உருவத்துடன் நாரத ரிஷி சீடனாய்ச் சென்று அவர்களை பெளத்த மதத்திற்கு மாற்றி சிவ பெருமானை மறக்கச் செய்தார்கள். ஆனால் இந்த மூன்று தலைவர்கள் மட்டும் மாறவில்லை. சிவபெருமான் நிலம் தேராகவும், சூரிய சந்திரர்கள் அதன் சக்கரங்களாகவும், பிரமன் சாரதியாகவும், மேரு மலை வில்லாகவும், ஆதிஷேடன் நாணாகவும், திருமால் அம்பாகவும் நான்கு வேதங்களும் குதிரைகளாகவும் மற்ற தேவர்கள் வேறு வேறு கருவிகளாவும் கொண்டு போருக்குச் சென்றார். தங்களால்தான் திரிபுர சம்ஹாரம் நடக்கப் போகிறது என திருமாலும் மற்ற தேவர்களும் ஆணவம் கொள்ள, அதை அறிந்த மஹாதேவர் சிரித்தார். அச்சிரிப்பிலிருந்து எழுந்த நெருப்பு முப்புரங்களையும் அசுரர்களையும் எரித்து சாம்பலாக்கியது. மூன்று தலைவர்கள் மட்டும் அழியவில்லை. அவர்கள் சிவபெருமானால் கயிலை மலையில் அமர்த்தப்பட்டனர்.
.. நல்விரதத்தை விட்ட புன்மையர் புரத்ரயத்தர் ...... பொடியாக பொன் மலை வளைத்து எரித்த கண்நுதல் ..
- மின்னினில் நடுக்கம் - திருப்புகழ் - பொதுப்பாடல்கள்.
......... சொற்பிரிவு .........
மருவளர் அடவி வனிதையர் பரவ மரகத இதணில் இருப்பாள் கணவா
......... பதவுரை .........
... நறுமணம் மிக்க வனத்தில் வசிக்கும் வேடப்பெண்கள் வழிபட (அவர்களின் வழிபாட்டை ஏற்று) பசுமையான பரண் மேல் இருந்து தினைப்புனங்களைக் காப்பற்றிய வள்ளி நாச்சியாரின் மணவாளனே,
('பெரும் பைம்புனத்தினுள் சிற்றேனல் காக்கும்' பணியில் கண்ணும் கருத்துமாக இருந்து அந்த இடத்தை விட்டு அகலாமல் இருந்த வள்ளி நாச்சியாரை 'இருப்பாள்' என்கிறார். பரமாத்மாவை அடைய தீவிரமான நெறியில் பழகும் ஜீவாத்மா கடைபிடிக்கும் அஷ்டாங்க யோகத்தில் இது தாரண நிலையாகும்).
வள்ளிமலை சுவாமிகள் வள்ளிமலையில் வசிக்கும் போழுது 'பொங்கி' என்பவளின் தலைமையில் வன தேவதைகள் முருகனின் அருட்சக்தியாகிய வள்ளியம்மையை பூஜிப்பதை அறிந்து அந்த பொங்கி மாதாவுக்கு தானும் தினமும் பூஜை செய்து வந்தார். ஆதலால் 'வனிதையர்' என்பதற்கு 'வனதேவதைகள்' என பொருள் கொள்ளுவதே மேலானதாகும்.
தவம் புரிந்து வந்த குறமாதை ஆட்கொண்டு முருகப் பெருமான் சுவாச யோகத்தைக் காட்டி பிராணாயாமம் முதலிய பிரணவ உபதேசம் செய்தார் என கீழ்க்கணட திருப்புகழ் வரிகளிலிருந்து அறிய முடிகிறது:
ஓது குறமான் வனத்தில் மேவி அவள் கால் பிடித்து உள் ஓம் எனும் உபதேச வித்தோடு அணைவோனே
- சூலம் என ஓடு - திருக்கடவூர் திருப்புகழ்.
......... சொற்பிரிவு .........
வளைகடல் கதற நிசிசரர் மடிய மலையொடு பொருத முழுச்சே வகனே.
......... பதவுரை .........
... உலகைச் சுற்றி இருக்கும் சமுத்திரம் கதறி முறையிடவும் அசுரர்கள் இறக்கவும் க்ரவுஞ்ச மலையுடன் போர் செய்த சுத்த வீரனே.
(குகஸ்ரீ ரசபதி நகைச்சுவையாக கூறுவார் .. இராவணனைக் கொன்ற திருமால் கால் சேவகன். முப்புரம் எரித்தசிவபெருமான் அரைச் சேவகன். காம குரோதாதியான அறுபகைகள் உயிர்த்தொகைகளாகிய தினைப்பயிர்களை நாசம் செய்யாது தவம் காத்த வள்ளி முக்கால் சேவகன். கடல் கதற மலை மடிய நிசாசரர் மாள செய்த முருகனே முழுச் சேவகன் என்பதை இந்த நான்கு அடிவளிலும் அருணகிரியார் வெளிப்படுத்துகிறார்).
இவ்வடிகளில் உள்ள சித்தாந்தக் கருத்து:
.. ஆணவம் மூவாயிறத்து நான்கு கூறுகள் கொண்டது. அவற்றின் உச்சியில் இருக்கும் கூறு ஒன்று உயின் அறிவை மயக்கும். இதுவே வெளியில் சூரபத்மன் என உரு எடுக்கும். அச்சமயத்தில் தன் கூறுகளை மக்களாகப் பெற்று எடுக்கும் உச்சிக் கூறு பானுகோபனாக ஒளியை மறைத்து உயிர்களுக்கு பெரும் துன்பத்தைக் கொடுக்கும்.
ஆயிரம் கூறுகள் கொண்ட மாயாமலம் ஆயிரம் கூறுகள் உச்சியில் கொண்டும் பக்கவாட்டில் ஈராயிரம் கூறுகள் கீழ்க் கூறுகள் நூற்று ஒன்றாகக் கொண்டது. இந்த மாயாமலம் அண்டத்தில் ஆயிரம் சிரங்கள் ஈராயிரம் கைகள் உடைய சிங்கமுகன். அவனுக்கு 101 புதல்வர்கள்.
கன்ம மலம் கீழ் நோக்கும் ஒரு கூறு உடையது. இம்மலம் அண்டத்தில் தாரகனாய் தோன்றி அசுரேந்திரன் எனும் ஒரு மகனை உடையதாய் உயிர்களை பதைபதைக்க வதை புரியும்.
பிண்டத்திலும் அண்டத்திலும் இன்மலங்களால் உயிர்கள் படும் வேதனைகளைக் கண்டு பெரும் கருணையுடன் உள்ளே குகனாய் மல கண்டனம் செய்து வெளியில் முருகனாய் அசுரர்களை வதைத்த காரணத்தினால் அவனை முழுச் சேவகன் என்கிறார்.
கடல் உலகினில் வரும்உயிர் படும் அவதிகள் கலகம் இனையதுள கழியவும் நிலைபெற கதியும் உனது திருவடி நிழல் தருவதும் ...... ஒருநாளே
- சரவண பவநிதி - திருவேங்கடம் திருப்புகழ்.
(வீரனை 'சேவகன்' என்பதைத் திருவாசகத்திலும் காணலாம்:
.. குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் ..). |