வேல் வாங்குவது என்றால் வேலைப் பிரயோகம் செய்வது எனப் பொருள்படும். தேவேந்திர சங்க வகுப்பில் இப்பிரயோகத்தை காணலாம்.
வேல் வாங்கிய செந்தமிழ் நூலோன் குமரன் குகன் குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
திடவிய நெஞ்சுடை அடியர்இ டும்பைகெ டும்படி தீயாங்குறை போயாழ்ந்தது ...... 1
செயசெய என்றிசை பரவிய எங்கள்கொ டுங்கலி தேசாந்தர மேசாய்ந்தது ...... 2
செயலுரை நஞ்சுறழ் மயலுறு நெஞ்சினர் வஞ்சகர் தீமான்கதர் தாமேங்கினர் ...... 3
சிகரத ரங்கித மகரநெ ருங்குபெ ருங்கடல் தீமூண்டுதன் வாய்மாண்டது ...... 4
தெரியலர் சென்றடை திசைகளில் எண்கரி சிம்பெழ மாறாங்கிரி நூறாந்தொளை ...... 5
சிகரநெ டுங்கிரி குகைகள்தி றந்துதி கந்தமும் லோகாந்தமு நீர்தேங்கின ...... 6
சிறையுள் அழுந்திய குறைகள்ஒ ழிந்துசெ யங்கொடு தேவேந்திரர் சேணாண்டனர் ...... 7
திரிபுவ னங்களும் ஒருபயம் இன்றிவ ளங்கெழு சீர்பூண்டற நேர்பூண்டன; ...... 8
விடவச னஞ்சில பறையும்வி ரிஞ்சன்வி லங்கது கால்பூண்டுதன் மேல்தீர்ந்தனன் ...... 9
விகசித சுந்தர விதரண ஐந்தரு வெந்தெழில் வீவான்பொழில் பூவாய்ந்தது ...... 10
விழைவுத ரும்பத சசிதன்வி ளங்கிய மங்கல நூல்வாங்குகி லாள்வாழ்ந்தனள் ...... 11
வெருவி ஒதுங்கிமை யவரெவ ருஞ்சிறை வென்றித மேலாம்படி யேமீண்டனர் ...... 12
விழியொர்இ ரண்டொரு பதுசத நின்றெரி கண்டகன் மேல்வாங்கிளை கால்சாய்ந்தது ...... 13
வெளிமுழு துந்திசை முழுதும்வி ழுங்கி எழுங்கன சூர்மாண்டற வேர்மாய்ந்தது ...... 14
விபுதர் பயங்கெட நிருதர் தளங்கெட விண்கெடு மேடாம்படி பாடோங்கின ...... 15
மிடைகுறள் வெங்கொடி கழுகு பருந்து விருந்தென ஊனார்ந்தகல் வானார்ந்தன; ...... 16
அடவிப டுஞ்சடை மவுலியில் வெம்பணி யம்பணி யாமாங்கதர் வாமாங்கனை ...... 17
அநுபவை அம்பிகை அநுதிதை அம்பைத்ரி யம்பகி ஆசாம்பரை பாசாங்குசை ...... 18
அநகை அசஞ்சலை அதிகுண சுந்தரி அந்தரி காலாந்தகி மேலாந்திரு ...... 19
அமலை அலங்க்ருதை அபிநய பங்குரை சங்கினி மானாங்கணி ஞானாங்குரை ...... 20
அணிமுக பந்திகள் சிறுபொறி சிந்தவி ளைந்தழல் வாய்கான்றிடு நாகாங்கதை ...... 21
அபயவ ரம்புரி உபயக ரந்திகழ் அந்தணி யாமாங்கறி தாய்மாண்பினள் ...... 22
அதுலைத ருந்திரு மதலையி பங்கொள்ப யங்கொடு பாய்மாண்கலை வாய்மாண்புன ...... 23
அணிகுற மின்புணர் தணிகையில் அந்தணன் இந்திர ராசாங்கம தாராய்ந்தவன்; ...... 24
வடவையி டும்படி மணிமுடி பஞ்செழ விஞ்சிய மாடாம்புடை நாடாண்டகை ...... 25
வசைகரு துங்குரு பதியொடு தம்பிய ரும்பட வேபாண்டவர் தேரூர்ந்தவன் ...... 26
வளவில்வ ளர்ந்திடை மகளிர்கு விந்துத டங்குடை வார்பூந்துகில் வார்பூம்பூயல் ...... 27
வரைநிரை கன்றின முழுதும யங்கிய பண்கெழு வேயேந்திய வாயான்கழல் ...... 28
மருதிடை சென்றுயர் சகடுத டிந்தடர் வெம்புளை வாய்கீண்டொரு பேய்காய்ந்தவன் ...... 29
மதசயி லம்பொர வரவிடு நெஞ்சினில் வஞ்சக மாமான்பகை கோமான்றிரு ...... 30
மருகன் நிரம்பிய மதிமுக மஞ்சரி குஞ்சரி வாகாம்பரை தோய்காங்கேயன் ...... 31
மகபதி தன்பதி பகைகிழி யும்படி அன்றடல் வாளோங்கிய வேல்வாங்கவே. ...... 32
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
திடவிய நெஞ்சுடை அடியர் இடும்பை கெடும்படி தீயாம் குறை போய் ஆழ்ந்தது ...... 1
......... பதவுரை .........
திண்ணிய உள்ளம் படைத்த அடியவர்களின் துன்பம் அழியும்படி தீமை எனும் குறைபாடுகள் தீர்ந்து ஒழிந்தன (காங்கேயன் வேல் வாங்கவே)
செய செய என்று இசை பரவிய எங்கள் கொடும் கலி தேசாந்தரமே சாய்ந்தது ...... 2
......... பதவுரை .........
ஜெய ஜெய என்று முருகனின் திருப்புகழ் போற்றிய அடியார்களாகிய எங்களின் கொடிய நோயும் வறுமையும் வெளி நாட்டிற்கு ஓடிப் போய் விட்டன (காங்கேயன் வேல் வாங்கவே)
செயல் உரை நஞ்சு உறழ் மயல் உறும் நெஞ்சினர் வஞ்சகர் தீமான்கதர் தாம் ஏங்கினர் ...... 3
......... பதவுரை .........
தங்களுடைய செயல்களும் பேச்சுக்களும் விஷத்தைப் போல மயக்கம் கொண்ட உள்ளத்தை உடைய வஞ்சகர்கள், தீய கோபத்தைக் கொண்டவர்கள், பயம் அடைந்து தளர்ந்து போனார்கள் (காங்கேயன் வேல் வாங்கவே)
சிகர தரங்கித மகர நெருங்கு பெருங்கடல் தீமூண்டு தன் வாய் மாண்டது ...... 4
......... பதவுரை .........
மலையின் உச்சி போல் எழும்புகின்ற அலைகள் வீசுகின்றதும் மகர மீன்கள் நிறைந்துள்ள பெரிய கடல் எரி மூண்டு ஒசை அடங்கி ஒடுங்கியது (காங்கேயன் வேல் வாங்கவே)
(இறை கடல் தீப்பட வென்ற வேலா
- விரகற நோக்கியும் - எழுகரைநாடு திருப்புகழ்).
தெரியலர் சென்று அடை திசைகளில் எண் கரி சிம்பு எழ மாறாம் கிரி நூறாம் தொளை ...... 5
......... பதவுரை .........
பகைவர்கள் ஓடி ஒளிந்த எல்லா திக்குகளிலும் இருந்த அஷ்ட கஜங்களும் பயத்தால் பிளிற மறைந்திருந்த க்ரவுஞ்ச கிரி பொடிபட்டு விழ
சிகர நெடுங்கிரி குகைகள் திறந்து திக்கு அந்தமும் லோக அந்தமும் நீர் தேங்கின ...... 6
......... பதவுரை .........
சிகரங்களை உடைய பெரிய மலைகளின் குகைகள் வாய் விட்டு பிளந்து திக்குகளின் எல்லா வரைகளும் அனைத்து உலகங்களின் முடிவிடங்கள் வரையிலும் ப்ரளய ஜலம் தேங்கி நின்றன (காங்கேயன் வேல் வாங்கவே)
சிறையுள் அழுந்திய குறைகள் ஒழிந்து செயம் கொடு தேவேந்திரர் சேண் ஆண்டனர் ...... 7
......... பதவுரை .........
சூரபத்மனால் சிறையில் அடைபட்டுக் கிடந்த தாழ்வுகள் நீங்கி வெற்றி முழக்கத்துடன் இந்திரர்கள் விண்ணுலகில் ஆட்சி புரிந்தனர் (காங்கேயன் வேல் வாங்கவே)
திரிபுவனங்களும் ஒரு பயம் இன்றி வளம் கெழு சீர் பூண்டு அற நேர் பூண்டன ...... 8
......... பதவுரை .........
எந்த விதமான அச்சமும் இல்லாமல் மூவுலகங்களும் வளமை நிறைந்த சிறப்பை அடைந்து தரும ஒழுக்கத்தைச் செம்மையாக மேற்கொண்டன (காங்கேயன் வேல் வாங்கவே)
விட வசனம் சில பறையும் விரிஞ்சன் விலங்கது கால்பூண்டு தன் மேல் தீர்ந்தனன் ...... 9
......... பதவுரை .........
முருகனைப் பார்த்து 'பிரணவத்தின் பொருள் சிறு பாலகனாகிய உனக்கு எப்படி புரியும்' என்கிற விஷமப் பேச்சுகள் பலவற்றை பேசிய பிரம்மனின் காலில் விலங்கைப் பூண்டி அவனுடைய செருக்கை ஒழித்தது (காங்கேயன் வேல் வாங்கவே)
விகசித சுந்தர விதரண ஐம் தரு வெந்து எழில்வீ வான் பொழில் பூ வாய்ந்தது ...... 10
......... பதவுரை .........
மலர்ந்த அழகான கொடையில் சிறந்த சந்தானம், அரிசந்தனம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம் என்கிற ஐந்து தெய்வீக மரங்களும் அசுரர்களால் பொசுக்கப்ட்டு அதன் அழகு குலைந்துபோன நிலை மாறி விண்ணுலக சோலைகள் மாறத் தொடங்கியது (காங்கேயன் வேல் வாங்கவே)
விழைவுத ரும்பத சசிதன்வி ளங்கிய மங்கல நூல்வாங்குகி லாள்வாழ்ந்தனள் ...... 11
......... பதவுரை .........
அசை தரும்படியான பதவியில் உள்ள இந்திராணி தனது (நூறு அஸ்வமேத யாகம் செய்தவருக்கே இந்திரப் பதவியும் சசியை அனுபவிக்கும் உரிமையும் கிடைக்கும்) விளக்கமுற்ற திருமாங்கல்ய சரடு கழலாதவாறு - அதாவது விதவை ஆகாமல் - செளபாக்யத்துடன் வாழ்ந்திருந்தாள். (காங்கேயன் வேல் வாங்கவே)
(சூரபத்மாதிகள் இறந்ததினால் இந்திரனின் உயிர் காப்பாற்றப்பட்டது. .. கயிற்றான் கிழத்தி கழுத்தில் கட்டும் நூல் வாங்கிடாது அன்று வேல் வாங்கி ..).
வெருவி ஒதுங்கு இமையவர் எவரும் சிறை வென்று இதம் மேலாம் படியே மீண்டனர் ...... 12
......... பதவுரை .........
ராக்ஷதர்களிடம் பயப்பட்டு ஒளிந்து கிடந்த எல்லா தேவர்களும் தம் சிறை வாசத்திலிருந்து தப்பித்து நன்மைகள் பெருகும்படி தங்கள் தேவ லோகத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தனர். (காங்கேயன் வேல் வாங்கவே)
'சூரர் கொடு போய் அடைத்த தேவர் சிறை மீளவிட்ட பெருமாளே'.
- மாறுபொரு காலன் - திருப்புகழ் (பொதுப்பாடல்கள்).
விழி ஓர் இரண்டு ஒருபது சத நின்று எரி கண்டகன் மேல் வாம் கிளை கால் சாய்ந்தது ...... 13
......... பதவுரை .........
கண்கள் இரண்டு ஆயிரமும் நிலைத்து நெருப்பு வீச கொடியவனான சிங்கமுகனும் அவனைச் சார்ந்து விரிந்து படர்ந்துள்ள சுற்றத்தார் அனைவரும் வேரோடு அழிந்தனர் (காங்கேயன் வேல் வாங்கவே)
வெளிமுழுதும் திசை முழுதும் விழுங்கி எழும் கன சூர் மாண்டு அற வேர் மாய்ந்தது ...... 14
......... பதவுரை .........
ஆகாய வெளி முழுவதும் எல்லா திசைகளிலும் படர்ந்து மா மரமாய் எழுந்து நின்ற பெரிய சூரபத்மன் அடியோடு அவன் குலமும் அழிபட்டது (காங்கேயன் வேல் வாங்கவே)
விபுதர் பயம் கெட நிருதர் தளம் கெட விண்கெடு மேடாம்படி பாடு ஓங்கின ...... 15
......... பதவுரை .........
தேவர்களின் அச்சம் தீரவும் அசுரர்களின் படை ஒழியவும், (அசுரர்களின் பிணக்குவியல் வந்து சேர்ந்ததால்) ஆகாய முகடு கெட்டு மேடாகும்படி போர் சம்பவங்கள் சிறப்பாக நடந்தேறின (காங்கேயன் வேல் வாங்கவே)
இந்த பிணக்குவியலினால் தன் தேர் செல்ல தடை ஏற்பட்டதினால், முருகப் பெருமான் தன் நெற்றிக் கண் நெருப்பினால் அவைகளை சுட்டு சாம்பலாக்கினார்.
'கொடு சூரர் சினத்தையும் உடற் சங்கரித்த மலை முற்றும் சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா.
- சினத்தவர் முடிக்கும் - திருப்புகழ் (திருத்தணிகை).
மிடை குறள் வெம்கொடி கழுகு பருந்து விருந்து என ஊன் ஆர்ந்து அகல் வான் ஆர்ந்தன ...... 16
......... பதவுரை .........
அண்டி வந்த பூதங்களும், கொடிய காக்கைகளும், கழுகுகளும், பருந்துகளும் நல்ல சாப்பாடு கிடைத்தது என்று மாமிசத்தை உண்டு பறந்து ஆகாயம் முழுவதையும் நிறைத்தன (காங்கேயன் வேல் வாங்கவே)
'முதுகழுகு பந்தரிட்ட வேலினான்'.
அடவி படும் சடை மவுலியில் வெம்பணி அம்பணி ஆம் அங்கதர் வாம அங்கனை ...... 17
......... பதவுரை .........
காடு போன்ற ஜடாமுடியில் (செஞ்சடாஅடவி மேல் ஆற்றை) கொடிய பாம்புகளையும், அழகிய ஆபரணம் போல தோள் அணியாக (வாகு வளையம்) பூண்ட சிவபெருமானின் இடப் பாகம் பெற்ற பெண்
அநுபவை அம்பிகை அநுதிதை அம்பை த்ரியம்பகி ஆசாம்பரை பாசாங்குசை ...... 18
......... பதவுரை .........
உயிர்களுக்கு சுக துக்கங்களை உணரச் செய்பவள், அம்மை, விவரிக்க முடியாதவள், அம்மா, முக்கண்ணி, திக்குகளையே ஆடையாகக் கொண்ட நிருவாணி, .. திகம்பரி, கையில் பாசத்தையும் அங்குசத்தையும் வைத்திருப்பவள்,
(ஆணவம் எனும் யானையைக் கட்ட பாசமும், அடக்க அங்குசமும், கையில் வைத்துள்ளார் விநாயகர். அஞ்சு கரமும் அங்குச பாசமும் .. இவருடைய இந்தச் செயலுக்கு காரணம் தன் தாயே என்கிறது தணிகை புராணம். பாசாங்குசம் அணி இபமுகத்தன் தொழிற்கு எல்லாம் காரணம் ஆதல் தெளிந்து அருள் கொழிக்கும் கன்னி).
அநகை அசஞ்சலை அதிகுண சுந்தரி அந்தரி காலாந்தகி மேலாம் திரு, ...... 19
......... பதவுரை .........
பாபமற்றவள், சஞ்சலம் அற்றவள், மிகச் சிறந்த அழகி, ஞான ஆகாய வடிவி, (சிற்பர வெளிக்குள் வளர் தற்பரமதான பரதேவதையை அஞ்சலி செய்வாம் .. தாயுமானவர்), எமனை உதைத்து அழித்தவள், (கூற்று உதைத்திடவே உதை பார்வதி, காலன் விழ மோது சாமுண்டி) லக்குமிக்கும் மேலானவள்,
அமலை அலங்க்ருதை, அபிநய பங்குரை சங்கினி, மானாங்கணி ஞான அங்குரை ...... 20
......... பதவுரை .........
மலமற்றவள், சர்வ ஆபரண பூஷணி, நாட்டிய சாஸ்திர இலக்கணத்தை விளக்கும் மாது, மான் போன்ற விழிகளை உடையவள், ஞானத்திற்கு முளைவித்து, (அங்குர் = வித்து)
அணிமுக பந்திகள் சிறுபொறி சிந்த விளைந்து அழல் வாய் கான்றிடு நாக அங்கதை ...... 21
......... பதவுரை .........
அழகிய பட வரிசைகள் தீப்பொறிகளை சிந்தும்படி வெளிவரும் நெருப்பைக் கக்கும் பாம்பைத் தோள் வளையளாகக் கொண்டவள்
அபய வரம் புரி உபய கரம் திகழ் அந்தணி ஆம் ஆங்கு அறி தாய் மாண்பினள் ...... 22
......... பதவுரை .........
அபயம் வரதம் இரண்டையும் காண்பிக்கும் இரண்டு கரங்களை உடைய அழகிய மாது, தன் அடியார்களுக்கு வேண்டிய நலங்களை அவ்விடத்திலே அறிந்து அவற்றை நல்கும் தாய் போன்ற பெருமை மிக்கவள்
அதுலை தருந்திரு மதலை இபம் கொள் பயங்கொடு பாய் மாண் கலை வாய் மாண் புன ...... 23
......... பதவுரை .........
சாமானமற்றவள் ஆகிய தேவி அளித்த அழகிய குமாரன், கணபதியாகிய யாபையினால் ஏற்பட்ட அச்சத்தினால் தாவுகின்றதும் நிறைந்துள்ளதுமான கலைமான்கள் வாழும் சிறந்த தினைபுனத்திலிருந்த
அணி குற மின்புணர் தணிகையில் அந்தணன் இந்திர ராசாங்கம் அது ஆராய்ந்தவன் ...... 24
......... பதவுரை .........
அழகிய குறமகளை மணம் புரிந்தவனும், திருத்தணியில் கருணாமூர்த்தியும் வெகுநாட்களாக அசுரர்களால் ஆக்ரமிக்கப்பட்டிருந்த தேவலோக அரசாட்சியை பரிசீலித்து பனரமைப்பு செய்தவன்,
வடவை இடும்படி மணிமுடி பஞ்சு எழ விஞ்சிய மாடு ஆம்புடை நாடு ஆண் தகை ...... 25
......... பதவுரை .........
வடவைத் தீ பற்றினது போல அசுரர்களின் தலைகள் பஞ்சாய்ப் பறக்கவும் மேன் மேல் குவிந்திருந்த இருபக்கத்து பாண்டவ கெளரவ சேனைகள் அடங்கிய போரில் புபாரத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் அதை செய்து முடித்த புருசோத்தமன்
வசை கருதும் குரு பதியொடு தம்பியரும் படவே பாண்டவர் தேர் ஊர்ந்தவன் ...... 26
......... பதவுரை .........
உலகத்தவரால் பழித்து வந்த செயல்களையே புரிந்துவந்த குருகுல தலைவன் துரியோதனனும் அவன் தம்பிகளும் இறந்து ஒழிய பாண்டவர்களுக்கு தேர் சாரதியாய் இருந்தவன்
(கன பாண்டவர் தேர்தனிலே எழுபரி தூண்டிய சாரதியாகிய கதிர் ஓங்கிய நேமியனாம் அரி).
வளவில் வளர்ந்து இடை மகளிர் குவிந்து தடம் குடை வார் பூந்துகில் வார் பூம் பூயல் ...... 27
......... பதவுரை .........
ஆயர்பாடியில் வளர்ந்து (பொதுவியர் சேரிக்கே வளர்) இடையர் குல பெண்கள் ஒன்றாகக் கூடி குளத்தில் நீராடிக் கொண்டிருந்தவர்களின் அழகிய சேலைகளை வாரி எடுத்து அபகரித்துச் சென்ற அழகிய மேக வண்ணன்
(கொடும் கானிலே செழும் சேலையே கொடு குருத்தேறு மால்மாயன்)
வரை நிரை கன்று இன முழுதும் மயங்கிய பண் கெழு வேய் ஏந்திய வாயான் ...... 28
......... பதவுரை .........
கோவர்த்தனகிரியின் அடிவாரத்தில் பசுக் கூட்டங்கள் கன்று கூட்டங்கள் அனைத்தும் தன் நிலை மறக்கும்படி புல்லாங்குழல் இசை எழுப்பிய வாயை உடையவன்
கழல் மருதிடை உயர் சகடு தடித்த அடர் வெம் புளை வாய் கீண்ட ஒரு பேய் காய்ந்தவன் ...... 29
......... பதவுரை .........
தன் கழல்களால் மருத மரங்களுக்கு இடையே சென்று சகடாசுரனைக் கொன்று எதிர்த்து வந்த கொக்கு வடிவினனான பகாசுரனை அழித்து பகதியைக் கொன்றவன்
மத சயிலம் பொர வர விடு நெஞ்சினில் வஞ்சக மாமான்பகை கோமான் திரு மருகன் ...... 30
......... பதவுரை .........
குவலயா பீடம் எனும் பம யானையை சண்டை செய்ய அனுப்பியவனும் உள்ளத்தில் வஞ்சனை கொண்ட மாமனாகிய கம்சனை பகைத்து அழித்த பெருமானாகிய கண்ணனின் மங்கலம் மிக்க மருகன்,
நிரம்பிய மதி முக மஞ்சரி குஞ்சரி வாகு ஆம்பரை தோய் காங்கேயன் ...... 31
......... பதவுரை .........
பூரண சந்திரன் போன்ற முகம் கொண்ட தளிர் போல் மென்மையானவள், ஐராவதத்தால் வளர்க்கப் பட்டவள், அழகான ஆடை புனைந்த தேவசேனையை அணைக்கும் கங்கையின் மைந்தன்
மகபதி தன்பதி பகை கிழியும்படி அன்று அடல் வாள் ஓங்கிய வேல் வாங்கவே. ...... 32
......... பதவுரை .........
இந்திரனின் அமராவதிக்கு பகைவனாகிய சூரபத்மன் கூறுபட்டு அழியும்படி யுத்தம் செய்த அன்று வலிமையும் ஒளியும் பொருந்திய வேலாயுதத்தை செலுத்திய போது (முன் கூறப்பட்டவை அனைத்தும்) நடந்தது. |