வசைதவிர் ககன சரசிவ கரண மகாவ்ருத சீல சால வரமுநி சித்தரை அஞ்சல் அஞ்சல் என்று வாழ்வித் துநின்றன ...... 1
மணிவட மழலை உடைமணி தபனிய நாணழ காக நாடி வகைவகை கட்டும ருங்கு டன்பொ ருந்து ரீதிக் கிசைந்தன ...... 2
வருணித கிரண வருணித வெகுதரு ணாதப சோதி யாடை வடிவுபெ றப்புனை திண்செ ழுங்கு றங்கின் மேல்வைத் தசைந்தன ...... 3
வளைகடல் உலகை வலம்வரு பவுரி வினோதக லாப கோப மயில்வத னத்துவி ளங்கும் அங்கு சங்க டாவிச் சிறந்தன ...... 4
வரைபக நிருதர் முடிபக மகர மகோததி தீயின் வாயின் மறுகவி திர்த்தயில் வென்றி தங்கு துங்க வேலைப் புனைந்தன ...... 5
மதியென உதய ரவியென வளைபடு தோல்வி சால நீல மலிபரி சைப்படை கொண்டு நின்று ழன்று சாதிக்க முந்தின ...... 6
மனகுண சலன மலினமில் தூியஅ தீதசு காநு பூதி மவுனநி ரக்ஷர மந்தி ரம்பொ ருந்தி மார்பிற் றிகழ்ந்தன ...... 7
வகைவகை குழுமி மொகுமொகு மொகென அநேகச மூக ராக மதுபம்வி ழச்சிறு சண்ப கஞ்செ றிந்த தாரிற் பொலிந்தன ...... 8
மிசைமிசை கறுவி வெளிமுக டளவு நிசாசர சேனை தேடி விததிபெ றச்சில கங்க ணங்க றங்க மீதிற் சுழன்றன ...... 9
வெருவுவ வெருவ எரிசொரி விழியுள பூதபி சாசு போத மிகுதொனி பற்றிமு ழங்கு விஞ்சு கண்டை வாசிக் கைகொண்டன ...... 10
விதமிகு பரத சுரவனி தையர்கண மேல்தொறும் லீலை யாக விமலச லத்தினை விண்டி றந்து மொண்டு வீசிப் பொலிந்தன ...... 11
விதரண தருவின் மலரிடை செருகிய கூதள நீப மாலை விபுதர்கு லக்குலி சன்ப யந்த செங்கை யானைக் கிசைந்தன ...... 12
விகசித தமர பரிபுர முளரி தொழா அபி ராம வேடர் விமலைதி னைப்புன மங்கை கொங்கை கண்டு வேளைப் புகுந்தன ...... 13
விதிர்தரு சமர முறிகர கமல நகாயுத கோழி வீற விதரண சித்ரஅ லங்க்ரு தம்பு னைந்து பூரித் திலங்கின ...... 14
விரகுடை எனது மனதுடன் அகில்பனி நீர்புழு கோட ளாவி ம்ருகமத கற்புர குங்கு மங்க லந்து பூசித் துதைந்தன ...... 15
வினைபுரி பவனி தொழுதழு துருகிய கோதையர் தூது போக விடுமது பக்ஷண வண்டி னந்தி ரண்டு சூழப் படிந்தன ...... 16
இசைதனில் இனிய கயிசிகை கவுட வராளித னாசி தேசி பயிரவி குச்சரி பஞ்சு ரந்தெ ரிந்து வீணைக் கிசைந்தன ...... 17
இறுதியில் உதய ரவிகண நிகரென ஆறிரு காது தோயும் இலகும ணிக்கன விம்ப குண்ட லங்கள் மேவிப் புரண்டன ...... 18
எதிர்படு நெடிய தருஅடு பெரிய கடாம்உமிழ் நாக மேகம் இடிபட மற்பொரு திண்சி லம்ப டங்க மோதிப் பிடுங்கின ...... 19
எழுதரும் அழகு நிறமலி திறல்இசை யாகஉ தார தீரம் என உரை பெற்றஅ டங்க லுஞ்சி றந்து சாலத் ததும்பின ...... 20
இருள்பொரு கிரண இரணிய வடகுல பாரிய மேரு சாதி இனமென ஒத்துல கங்கள் எங்க ணும்ப்ர காசித்து நின்றன ...... 21
இயன்முநி பரவ ஒருவிசை அருவரை யூடதி பார கோர இவுளிமு கத்தவள் கொங்கை கொண்ட சண்ட மார்பைப் பிளந்தன ...... 22
இபரத துரக நிசிசரர் கெடஒரு சூரனை மார்பு பீறி அவனுதி ரப்புனல் செங்க ளந்து ளங்கி ஆடிச் சிவந்தன ...... 23
எவையெவை கருதில் அவையவை தருகொடை யால்மணி மேக ராசி சுரபிய வற்றொடு சங்க கஞ்ச பஞ்ச சாலத்தை வென்றன ...... 24
அசைவற நினையும் அவர்பவம் அகலவெ மேல்வரு கால தூதரை யுடையும் அப்படி அங்கும் இங்கும் எங்கும் ஓடத் துரந்தன ...... 25
அகிலமும் எனது செயலல திலையென யானென வீறு கூறி அறவுமி குத்தெழும் ஐம்பு லன்தி யங்கி வீழத் திமிர்ந்தன ...... 26
அனலெழு துவசம் உடுகுலம் உதிரவி யோமமும் ஏழு பாரும் அசலமும் மிக்கபி லங்க ளுங்கு லுங்க ஆலித் ததிர்ந்தன ...... 27
அடல்நெடு நிருதர் தளமது மடிய வலாரிதன் வானை ஆள அரசுகொ டுத்தப யம்பு குந்த அண்ட ரூரைப் புரந்தன ...... 28
அடவியில் விளவு தளவலர் துளவு குராமகிழ் கோடல் பாடல் அளிமுரல் செச்சைய லங்கல் செங்க டம்பு நேசித் தணிந்தன ...... 29
அரியதொர் தமிழ்கொ டுரிமையொ டடிதொழு தேகவி மாலை யாக அடிமைதொ டுத்திடு புன்சொல் ஒன்று நிந்தி யாமற் புனைந்தன ...... 30
அழகிய குமரன் உமைதிரு மதலை பகீரதி மாதர் வாழும் அறுவர் ப்ரியப்படு கந்தன் எந்தை யிந்த்ர நீலச் சிலம்பினன் ...... 31
அநுபவன் அநகன் அனனியன் அமலன் அமோகன்அ நேகன் ஏகன் அபினவன் நித்தியன் அஞ்ச லென்ப்ரசண்ட வாகைப் புயங்களே. ...... 32
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
இந்த வகுப்பிற்கு அச்சாரமாய் அமைந்தது திருப்புகழில் காணப்படும் கீழ் கண்ட வரிகளே.
சந்தாரம் சாத்தும் புய இயல் கந்தா எனும் ஏத்தும்படி மங்காதிங் காக்கும் - திருப்புகழ் (பொதுப்பாடல்கள்)
முற்றிய பன்னிரு தோளும் செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் செப்பு என பக்கரைவி சித்ர - திருப்புகழ்
இன மயிலோன் புய வகுப்பையும் திருப்புகழையும் பாட அருளியதால் தோன்றிய பாடல் இது. அலங்காரத்தில் முன்பு செய்த பழிக்குத் துணை பன்னிரு தோளும் என மந்திர ஆணை வந்திருந்ததால் இவ்வகுப்பின் பாராயண பயன் சஞ்சித வினையின் நீக்கம் என்பதில் ஐயம் இல்லை.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
வசைதவிர்ககன சரசிவ கரண மகாவ்ருத சீல சால வரமுநி சித்தரை அஞ்சல் அஞ்சல் என்று வாழ்வித் துநின்றன ...... 1
......... பதவுரை .........
குற்றம், பழிச் சொல் ஆகியவற்றை அறவே நீக்கியவர்களும், விண்ணில் சஞ்சரிபவர்களும் ஆன, சிவ தியானம் நிறைந்த, சிறந்த ஒழுக்கம் வாய்ந்த புண்ணிய ஆத்மாக்களும், அளவற்ற வரங்களைப் பெற்றவர்களும் ஆன, தவசிகளான சித்த புருசர்களை பயப்படாதீர்கள், அச்சம் வேண்டாம் என அடைக்கலம் கொடுத்து, அவர்களுக்கு சிறஞ்சீவி வாழ்வு கொடுத்து துணையாக நின்றன -
(முருகனின் வாகைப் புயங்களே).
(ககன சர - பிரமனின் மானச புத்திரர்களான வால கல்யர் எனும் 60,000 தவ சிரேஷ்டர்கள். அவர்கள் கட்டை விரல் பரிமாணமே உடையவர்கள். சூரியனின் அதி தீவரமான ஒளி பூ உலகின் மேல் பாய்வதால் எவராலும் தாங்க முடியாது என்று ஆதித்தனின் பவனியின் போது அவனின் தேரைச் சுற்றி சுற்றி வந்து கேடயம் போல தொழில்படுவார்கள். அவர்கள் காற்றையே உணவாகக் கொள்வார்கள். ஆகாயத்தில் சஞ்சரிக்கும் இந்த சீலம் மிக்க தேவ ரிஷிகள் சூரிய வெப்பத்தால் இன்னல் உறாதபடி முருகனின் ஒரு கரம் அவர்களைக் காப்பாற்றி சிறஞ்சீவி பதவியைக் கொடுக்கிறது).
திருமுருகாற்றுபடை: விண் சலன் மரபின் (ஐயர்க்கு ஏந்தியது ஒரு கை).
பரிமேல் அழகர் உரை - ஞாயிற்றின் வெம்மையை பல்லுயிரும் பொருத்தல் ஆற்றா எனக் கருதி தமது அருளால் சுடரோடு திரிந்து அவ்வெம்மையை பெறுக்கின்ற முனிவரைப் பாதுகாக்கவே ஒரு கை.
மணிவட மழலை உடைமணி தபனிய நாணழ காக நாடி வகைவகை கட்டும ருங்கு டன்பொ ருந்து ரீதிக் கிசைந்தன ...... 2
......... பதவுரை .........
ரத்ன சரம் மெல்லிய ஓசை எழுப்பும் இடுப்பில் கட்டிய மணி மாலையும் (மொழி புகலும் உடை மணியும்) பொன்னொளி வீசும் அரை ஞாண் இவைகளை மிகவும் விரும்பி வித விதமாகக் கட்டியுள்ள இடுப்பில் சேரும் முறைக்கு ஒத்ததாக விளங்கின -
(முருகனின் வாகைப் புயங்களே).
திருமுருகாற்றுபடை: உக்கம் சேர்த்தியது ஒரு கை.
பரிமேல் அழகர் உரை - ஒரு கையும் ஒரு தொழிலைச் செய்தலின் ஏனைய கை தொழில் இன்றி மருங்கில் கிடந்தது.
வருணித கிரண வருணித வெகுதரு ணாதப சோதி யாடை வடிவுபெ றப்புனை திண்செ ழுங்கு றங்கின் மேல்வைத் தசைந்தன ...... 3
......... பதவுரை .........
விவரித்துச் சொல்லத் தக்க ஒளி வீசும் சிவந்த நிறம் மிக்க உதய சூரியனின் பிரகாசத்தைக் கொண்ட உடையை அழகுடன் அணிந்துள்ள வலிமையான செழிப்பான தொடையின் மேல் வைக்கப்பட்டு அசைந்தன -
(முருகனின் வாகைப் புயங்களே).
திருமுருகாற்றுபடை: நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசையிய ஒரு கை.
வளைகடல் உலகை வலம்வரு பவுரி வினோதக லாப கோப மயில்வத னத்துவி ளங்கும் அங்கு சங்க டாவிச் சிறந்தன ...... 4
......... பதவுரை .........
சமுத்திரத்தால் சூழப்பட்ட பூமியை வலமாக சுற்றி சுற்றி மண்டலமிட்டு வந்த அதிசயச் செயலைக் கொண்டதும் தோகை மிகுத்துள்ளதும் ஆன உக்ரமான மயிலின் முகத்தில் ஒளி வீசும் யானைத் தொட்டியை செலுத்தி மேன்மையாக விளங்கின -
(முருகனின் வாகைப் புயங்களே).
திருமுருகாற்றுபடை: அங்குசம் கடாவ ஒரு கை
கோப மயில் - கொடும் கோபச் சூர் மயிலாக மாறியதால் கோப மயில் என்கிறார்.
போரில் செலுத்தும் போது மயிலுக்கு அங்குசம் உண்டு என்பதை கந்த புராணம், கடுகு சமர் அங்சம் சேர் கை என்கிறது.
வரைபக நிருதர் முடிபக மகர மகோததி தீயின் வாயின் மறுகவி திர்த்தயில் வென்றி தங்கு துங்க வேலைப் புனைந்தன ...... 5
......... பதவுரை .........
க்ரவுஞ்சம், எழு கிரிகள் பிளவு பட, அசுரர்களின் முடிகள் சிதறுண்டு விழ, மகர மீன்கள் நிறைந்துள்ள பெரும் கடல் நெருப்பிடையே கலங்க, அசைத்து கூர்மையும் வெற்றியும் நிலைபெற்றுள்ள பரிசுத்தமான வேலாயுதத்தை அலங்காரமாக ஏந்தி நின்றன -
(முருகனின் வாகைப் புயங்களே).
மதியென உதய ரவியென வளைபடு தோல்வி சால நீல மலிபரி சைப்படை கொண்டு நின்று ழன்று சாதிக்க முந்தின ...... 6
......... பதவுரை .........
சந்திரன் போலவும் இளம் சூரியன் போலவும் வட்ட வடிவமுடன் ஒளி வீசுவதாய் தோலால் செய்யப்பட்டு அகன்றுள்ளதாய் கருமை நிறத்துடன் உள்ள கேடயம் எனும் ஆயுதத்தை ஏந்தி நின்று சுழற்றி சுழற்றி வெற்றியை அடைய முற்பட்டு விளங்கின -
(முருகனின் வாகைப் புயங்களே).
முருகன் அந்தண்மறை வேள்விக் காவற்காரன் ஆதலால் இடர் புரிய வரும் அசுரர்களை கேடயத்தைச் சுழற்றி சுழற்றி விரட்டுகிறான்.
திருமுருகாற்றுபடை: மந்திர விதியின் மரபுளி வழா ஒற்குமே
ஒருமுறை காசிபர் திதியால் இயற்றப்பட்ட யாகத்தைக் கெடுக்க தேவர்களால் அனுப்பபட்ட மாலயன், மாரன் எனும் அசுரர்களை இளையனார் வேலூரில் அழித்தார்.
கந்தர் கலி வெண்பா: அதிர் கேடகம் சுழற்றும் அங்கைத் தலமும்
மனகுண சலன மலினமில் துரியஅ தீதசு காநு பூதி மவுனநி ரக்ஷர மந்தி ரம்பொ ருந்தி மார்பிற் றிகழ்ந்தன ...... 7
......... பதவுரை .........
மனத்தின் ஓட்டம் குணம் மாறி மாறி இருப்பது, ஒரு நிலை இல்லாமல் ஓடுவது போன்ற மாசு அற்றதாய் யோகியர்கள் தன் மயம்க நிற்கும் நான்காவது நிலைக்கும் மேற்பட்ட துரியாதீதமாகிய, - எனதும் யானும் வேறாகி எவரும் யாரும் யானாகும் நிலை - துன்பம் கலப்பு இல்லாத இன்பத்தை அனுபவிக்கும் ஞான மயமான மவுன மந்திரம், மனம், வாக்கு, காயம், தொழில்கள் அற்றுப் போக செய்யும் மந்திரம் (உரை மாள செயல் மாண்டு சித்தம் அவிழ), எழுத்து கணக்குக்கு அப்பாற்பட்டது மான மந்திரம் (இதுவே நிர் வசன பிரசங்கம் என்பார்) பொருந்தி மார்பில் சின் முத்திரையுடன் விளங்கின (பசுவாகிய ஆட்காட்டி விரல் பதியாகிய பெருவிரலுடன் சேர்ந்து பாச விரல்கள் மூன்றும் தனித்து விலக நிற்கும் தோற்றம்) -
(முருகனின் வாகைப் புயங்களே).
திருமுருகாற்றுபடை: ஒரு கை மார்புடன் விளங்க
தேசு பெற நீ வைத்த சின்முத்திரை அங்குசம் செங்கைக்குள்ளே அடக்கி சின்மயானந்த சுக வெள்ளம் படிந்து - தாயுமான மெளன குரு
வகைவகை குழுமி மொகுமொகு மொகென அநேகச மூக ராக மதுபம்வி ழச்சிறு சண்ப கஞ்செ றிந்த தாரிற் பொலிந்தன ...... 8
......... பதவுரை .........
கூட்டம் கூட்டமாகத் திரண்டு மொகு மொகு என்ற ஒலியுடன் பலவிதமான இசையுடன் வண்டுகள் விருப்பத்துடன் மேலே வந்து விழ மல்லிகைப் பூ நெருக்கமாகக் கட்டப்பட்ட மாலை மீது விளங்கின -
(முருகனின் வாகைப் புயங்களே).
திருமுருகாற்றுபடை: ஒரு கை தாரொடு பொலிய
பண்புனை குரல் விழி வண்டு கிண்டி செண்பக மலர் பொழில் சிவபுரமே
மிசைமிசை கறுவி வெளிமுக டளவு நிசாசர சேனை தேடி விததிபெ றச்சில கங்க ணங்க றங்க மீதிற் சுழன்றன ...... 9
......... பதவுரை .........
மேன்மேலும் சிறந்து அண்ட உச்சி வரை அசுரர் சேனைகளின் இருப்பிடங்களைக் கண்டு பிடித்து அவரகள் பரவி இருந்த இடங்கள் அனைத்தையும் சிதறி அடிக்க தோள் வளை, கை காப்பு முதலியன கண் என ஒலி எழுப்ப மேலே சுழன்றன -
(முருகனின் வாகைப் புயங்களே).
திருமுருகாற்றுபடை: ஒரு கை கீழ் வீழ் தொடியோடு மீ மிசை கொப்ப
உரை - ஒரு கை தொடியோடு மேலே சுழன்று கள வேள்விக்கு முத்திரை கொடுப்ப
வெருவுவ வெருவ எரிசொரி விழியுள பூதபி சாசு போத மிகுதொனி பற்றிமு ழங்கு விஞ்சு கண்டை வாசிக் கைகொண்டன ...... 10
......... பதவுரை .........
மற்றவர்கள் பயந்து ஒதுங்கும் துஷ்ட மிருகங்களும் பயப்படும்படியும் தீயைக் கக்குகின்ற கண்கள் உள்ள பேய்களும் பிசாசுகளும் ஓடிப் போகும்படி பலத்த சத்தத்துடன் ஒலி மிகுத்துள்ள கண்டா மணியை வாசிக்க முற்பட்டன -
(முருகனின் வாகைப் புயங்களே).
திருமுருகாற்றுபடை: ஒரு கை பாடியின் படு மணி இரட்ட
உரை - மற்றொரு கை ஒசை இனிதாகிய ஒலிக்கின்ற மணியை மாறி ஒலிக்கப்பண்ண
முருகன் கையில் மணி உண்டு என்பதை கந்த புராணமும் -
வீறு கேதனம் வஜ்ரம் அங்குசம் விசிகம் மறிலாத வேல் அபய மேல் வலம் வரதம் ஏறு பங்கயம் மணி மழு தண்டு வில் இசைந்த ஆறிரணதடு கை அது முகம்
- எனக் கூறும்.
புத பிசாசுகள் சேட்டைகள் மிகுந்த இடங்களில் சேவல் விருத்தம் போல இந்த வகுப்பையும் பாராயணம் செய்வது நல்ல பலனைத் தரும்
குமார தந்திரத்தில் 6 - வது மூர்த்தியானது சரவணபவ மூர்த்தம். அதன் தியான சுலோகம் பின் வருமாறு -
சக்திம் கண்டாம் துவஜ சாகிஜே குக்குடம் பாச தண்டவ் டங்கம் பாணம் வரதம் அபயம் கார் முகம் ச ஊர்த்தவ கஸ்தம் பீதம் செளமியம் விதச நயனம் தேவ சங்கை கி உபாசியம் சத்விகி பூஜ்யம் சரவணபவம் சண்முகம் பாவயாமி
விதமிகு பரத சுரவனி தையர்கண மேல்தொறும் லீலை யாக விமலச லத்தினை விண்டி றந்து மொண்டு வீசிப் பொலிந்தன ...... 11
......... பதவுரை .........
பலவகையான பரதக் கலையில் வல்லுரானதேவ ஸ்திரிகள் கூட்டத்தில் ஒவ்வொருவர் மேலும் (அவர் ஆடும் போது) விளையாட்டாக தூய ஆகாச கங்கையின் ஜலத்தை ஆகாயத்திலிருந்து வருவதற்கு வழி திறந்து அந்நீரை அள்ளி அம் மாதர்கள் மேல் தெளித்து விளங்கின -
(முருகனின் வாகைப் புயங்களே).
திருமுருகாற்றுபடை: ஒரு கை நீணிற விசும்பின் மலி துளி பொழிய
உரை - ஒரு கை நீல நிறத்தை உடைய மேகத்திலே மிக்க மழையைப் பொழியா நிற்க
இல் வாழ்வு சிறக்க மழையைப் பொழிவித்தது ஒரு கை.
விதரண தருவின் மலரிடை செருகிய கூதள நீப மாலை விபுதர்கு லக்குலி சன்ப யந்த செங்கை யானைக் கிசைந்தன ...... 12
......... பதவுரை .........
கொடைக்கு பேர் போன கற்பக மரத்தின் மலர்கள் நடு நடுவில் வைத்து கோர்க்கப்பட்ட கூதள கடப்ப மாலைகளை தேவ வம்சத்தினரான வஜ்ரப்படை ஏந்திய இந்திரன் வளர்த்த சிவந்த கையை உடைய தேவயானைக்கு சூட்டுவதற்கு உடன் பட்டன -
(முருகனின் வாகைப் புயங்களே).
திருமுருகாற்றுபடை: ஒரு கை வாரண மகளிர்க்கு வதுவை சூட்ட
உரை - ஒரு கை இல் வாழ்க்கை சிறப்பாக நிகழ்தல் பொருட்டு மண மாலையை சூட்டிற்று
விகசித தமர பரிபுர முளரி தொழா அபி ராம வேடர் விமலைதி னைப்புன மங்கை கொங்கை கண்டு வேளைப் புகுந்தன ...... 13
......... பதவுரை .........
மலர்ந்துள்ளதும் ஒலி செய்கின்றதுமாகிய பாதச் சலங்கைகள் அணிந்துள்ள தாமரையன்ன திருவடிகளை வணங்கி அந்த அழகு நிறைந்த வேடப் பெண், பரிசுத்தை, தினைக் கொள்ளையில் வசித்து வந்த வள்ளியின் மார்பைப் பார்ப்பதற்காக (அதாவது அவளின் பக்குவ நிலையை அறிய) தக்க சமயம் பார்த்து அனைந்தன -
(முருகனின் வாகைப் புயங்களே).
மேவிய புனத்து இதணில் ஓவியமென திகழும் மேதகு குறத்தி திரு வேளைக்காரனே. மேனி தளர்ந்து உருகா பரிதாபமுடன் திரு வேளைப் புகுந்த பராக்ரம.
விதிர்தரு சமர முறிகர கமல நகாயுத கோழி வீற விதரண சித்ரஅ லங்க்ரு தம்பு னைந்து பூரித் திலங்கின ...... 14
......... பதவுரை .........
நடுங்கச் செய்யும் போரில் எதிரிகளை அடக்கி அழிக்க வல்ல தனது தாமரையன்ன கையில் கால் நகங்களையே ஆயுதமாக கொண்டு சண்டை போடும் (காலாயுதக் கொடியோன்) சேவல் கொடி மேம்பட்டு விளங்க (சேவலங் கொடியான பைங்கர) கொடையில் சிறந்த அழகிய அலங்காரம் உடையதானதை தரித்துக் கொண்டு கம்பீரமாக நின்றன -
(முருகனின் வாகைப் புயங்களே).
விதரண - வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்ட வேறாது உதவும் பெருமாளே
விரகுடை எனது மனதுடன் அகில்பனி நீர்புழு கோட ளாவி ம்ருகமத கற்புர குங்கு மங்க லந்து பூசித் துதைந்தன ...... 15
......... பதவுரை .........
கபடம் மிக்க எனது மனதை தன் வசமாக்கி அகில் பன்னீர் புனுகுச் சட்டம் இவைகளுடன் என் மனதையும் கலந்து கஸ்தூரி பச்சைக் கற்பூரம் குங்குமப் பூ சேர்ந்த இந்தக் கலவையை பூசிக் கொண்டு பிரகாசித்தன -
(முருகனின் வாகைப் புயங்களே).
அழுக்கும் துர்நாற்றமும் மிக்க என் மனதை பக்தியினால் பண்படையச் செய்து தன்னுடன் சேர்த்துக் கொண்டன.
- எனையும் மனதோடு அடிமை கொளவும் மனதோடு வரவேணும்.
- கடப்பையும் என் நெஞ்சையும் தாழிணைக்கே புகட்டி.
வினைபுரி பவனி தொழுதழு துருகிய கோதையர் தூது போக விடுமது பக்ஷண வண்டி னந்தி ரண்டு சூழப் படிந்தன ...... 16
......... பதவுரை .........
தன்னைக் காணும் பெண்களின் உள்ளத்தில் விரக போரை உண்டாக்கும் உலாக் காட்சியைக் கண்டு வணங்கி அழுது மனம் நொந்த மாதர்கள் உன்னிடம் காதல் தூதாக அனுப்பிய தேன் உண்ணும் வண்டுகள் கூட்டமாகச் செர்ந்து மொய்த்திருந்தன -
(முருகனின் வாகைப் புயங்களே).
வண்டரங்க புணர் கமல மது மாந்தி பேடையனோடும் ஒண்டங்க வினையாடும் அளி அரசே ஒளி மதிய துண்டரங்க பூண்மார்ப திருத்தோணிப்புரத்துறையும் பண்டரங்கருக்கு என் நிலையை புரிந்து ஒரு சொல் பகராயே
... தேவாரம்.
இசைதனில் இனிய கயிசிகை கவுட வராளித னாசி தேசி பயிரவி குச்சரி பஞ்சு ரந்தெ ரிந்து வீணைக் கிசைந்தன ...... 17
......... பதவுரை .........
இராகங்களில் இனிமையான கைசிகை முதலிய ராகங்களின் இலக்கணத்தை அறிந்து கொண்டு அவற்றை வீணையில் அமைத்து மீட்டுவன (முருகனின் வாகைப் புயங்களே).
முருகன் பல ராகங்களில் பிரியம் கொண்டவர் - ராக விநோதன்
சிவபிரானும் வீணை வாசிப்பார் - விடமுண்ட கண்டன் நல்ல வீணை தடவி
அது போல் முருகனும் தணிகை மலையில் பல வாத்தியங்களை வாசித்து விளையாடுவார் என்பதை கந்த புராணம்,
காடு இயம்பியும் வேய்குழல் ஊதியும் குழலால் நீடு தந்திரி இயக்கியும் -
மேலும் அருணகிரியார் தனது படைப்புகளில் ராகங்களைப் பற்றி கூறுகையில்,
இதத்த கயிசிகம் - பொருகளத் தலகை வகுப்பு கவுட பயிரவி - பூத வேதாள வகுப்பு காலம் மாறாத வராளி - பூத வேதாள வகுப்பு தனாசி தேசி - பூத வேதாள வகுப்பு சாதாரி தேசி நாதநாமக்ரியா பாதாளமாதி - திருப்புகழ் குச்சரி டெக்கம்படி மாடி
... என்பார்.
இறுதியில் உதய ரவிகண நிகரென ஆறிரு காது தோயும் இலகும ணிக்கன விம்ப குண்ட லங்கள் மேவிப் புரண்டன ...... 18
......... பதவுரை .........
எல்லையற்ற ஒளி வீசும் உதய சூரியனுக்கு ஒப்பான 12 காதுகளில் நிலை பெற்று விளங்கும் ரத்ன பொன் மயமான பிரகாசிக்கும் குண்டலங்கள் பொருந்தப் பெற்று விளங்கின -
(முருகனின் வாகைப் புயங்களே).
(மின் குலவு நவ ரத்ன மகர குண்டலம் ஆட)
எதிர்படு நெடிய தருஅடு பெரிய கடாம்உமிழ் நாக மேகம் இடிபட மற்பொரு திண்சி லம்ப டங்க மோதிப் பிடுங்கின ...... 19
......... பதவுரை .........
எதிரே தென்படும் நீண்ட மரங்களை அழிப்பனவாய் அபரிவிதமான மத நீரை வெளிப்படுத்துகின்ற அஷ்ட திக்கு யானைகள் இடி மேகங்கள் போல் ஒன்றோடு ஒன்று மோதி பேரொலி செய்ய மற்போர் செய்வித்து வலிமையான அஷ்ட கிரிகளையும் தாக்கி பிடுங்கி எறிய வல்லன -
(முருகனின் வாகைப் புயங்களே).
கந்த புராணம் பேசுகிறது - ஆசை சாங்கிரிகள் தம்மை அங்கை கொண்டு ஒன்றோடு ஒன்று பூசல் செய்விக்கும். குலகிரி அனைத்தும் ஓர் பால் கூட்டிடும் அவற்றைப் பின்னர் தலை தடுமாறடறமாக தரையினில் நிறுத்தும்.
எழுத அரும் அழகு நிறம் மலி திறல் இசையாக உதார தீரம் என உரை பெற்ற அடங்கலும் சிறந்து சாலத் ததும்பின ...... 20
......... பதவுரை .........
சித்தரித்துக் கூற அரிதான அழகும் ஒளியும் மேம்பட்ட வீரச் செயல்களும் பிறரால் புகழப்பட்டு இலக தயாள குணம் வீரம் என்று பேசப்பட்ட அனைத்து நற்பண்புகளுக்கு இடம் என மேலோங்கி விளங்கின -
(முருகனின் வாகைப் புயங்களே).
(பழுதுறாத பாவாணர் எழுதொணாத தோள் வீர)
இருள்பொரு கிரண இரணிய வடகுல பாரிய மேரு சாதி இனம் என ஒத்து உலகங்கள் எங்கணும் ப்ரகாசித்து நின்றன ...... 21
......... பதவுரை .........
இருளை விலக்குவதும் ஒளி வீசுவதும் பொன் மயமானதும் வட திசையில் விளங்குவதும் சேஷ்டமானதும் பருத்ததுமாகிய மேரு மலைக் கூட்டங்களின் ஜோதி போல் திகழ்ந்து இளைத்து உலகங்களிலும் ஒளி வீசி நின்றன -
(முருகனின் வாகைப் புயங்களே).
இயன்முநி பரவ ஒரு விசை அருவரை ஊடதி பார கோர இவுளி முகத்தவள் கொங்கை கொண்ட சண்ட மார்பைப் பிளந்தன ...... 22
......... பதவுரை .........
முத்தமிழில் சிறந்த தேர்ச்சி பெற்ற நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடி துதித்த போது முன்பு திருப்பரங்குன்றத்தில் பெரிய மலைக் குகையில் மிகப் பெரிய பயங்கரமான குதிரை முகம் கொண்ட கற்கி முகி எனும் பூதத்தின் பெரிய தனங்களை உடைய மார்பைப் பிளந்து அழித்தன -
(முருகனின் வாகைப் புயங்களே).
அருவரை திறந்து வன்சங்க்ரம சற்கிமுகி அபயமிட அஞ்சல் என அங்கீரனுக்கு உதவி - பூத வேதாள வகுப்பு.
இப ரத துரக நிசிசரர் கெட ஒரு சூரனை மார்பு பீறி அவன் உதிரப் புனல் செங்களம் துளங்கி ஆடிச் சிவந்தன ...... 23
......... பதவுரை .........
யானைப்படை, ரதப்படை, குதிரைப்படை கொண்ட அரக்கர்கள் அழிந்து போகவும், ஒப்பற்ற சூரபத்மனின் மார்பைப் பிளந்து அவனது இரத்த வெள்ளத்தால் சிவந்திருந்த போர் பூமி கலங்கும்படி பரவச் செய்து கோபித்தன -
(முருகனின் வாகைப் புயங்களே).
எவை எவை கருதில் அவை அவை தரு கொடையால் மணி மேக ராசி சுரபி அவற்றொடு சங்க கஞ்ச பஞ்சசாலத்தை வென்றன ...... 24
......... பதவுரை .........
அடியார்கள் என்ன என்ன விரும்பினாலும் அவைகள் அனைத்தையும் வருவித்து தரும் வள்ளல் தன்மையில் (அடியவர் இச்சையில் எவை எவை உற்றன அவை தருவித்தருள் பெருமாளே), சிந்தாமணி, மேகக் கூட்டங்கள், காமதேனு இவைகளுடன் சங்க நிதி, பதும நிதி இரண்டையும் தெய்வ தருக்களான கற்பகம் முதலிய ஐந்து கூட்டத்தையும் ஜெயித்து விளங்கின -
(முருகனின் வாகைப் புயங்களே).
அசைவற நினையும் அவர் பவம் அகலவே மேல் வரு கால தூதரை அடையும் அப்படி அங்கும் இங்கும் எங்கும் ஓடத் துரந்தன ...... 25
......... பதவுரை .........
சலனமின்றி ஏக சித்த தியானம் செய்பவர்களின் (எழுதிய படமென இருளறு சுடரடி இனைதொழு மெளனிகள்) பிறவித் துன்பம் நீங்க அவர்களை பிடிக்கவரும் எம தூதர்கள் சிதறி ஓடும்படி பல திசைகளிலும் அவர்களைத் துரத்தி வெற்றி கண்டன -
(முருகனின் வாகைப் புயங்களே).
எமபடர் தொடர்ந்து அழைக்கில் அவருடன் எதிர்த்து உள் உட்க இடி என முழங்கி வெற்றி பேசலாம் - கடைக்கண்ணியக் வகுப்பு.
அகிலமும் எனது செயலலது இலையென யான் என வீறு கூறி அறவு மி குத்து எழும் ஐம்புலன் தியங்கி வீழத் திமிர்ந்தன ...... 26
......... பதவுரை .........
அனைத்தும் எனது சொந்த முயற்சியே தவிர வேறு எவருடைய உதவியும் கிடையாது எனறு பெருமை பேசி நான் நான் எனும் இருமாப்புடன் மேலே கிளம்பி மிகவும் துள்ளுகின்ற பஞ்சேந்திரியங்கள் சோர்ந்து ஒடுங்கும்படி அவற்றின் மேலே விழுந்து அடிப்பன -
(முருகனின் வாகைப் புயங்களே).
- நானா என வரு முத்திரை அழிதர -
அனல் எழு துவசம் உடுகுலம் உதிர வியோமமும் ஏழு பாரும் அசலமும் மிக்கபி கபிலங்களும் குலுங்க ஆலித்து அதிர்ந்தன ...... 27
......... பதவுரை .........
பெரும் சினத்துடன் வரும் கொடிய சேவல், நட்சத்திரக் கூட்டங்கள் சிதறி விழும்படி ஆகாய வெளியும் ஏழு உலகங்களும் மலைகளும் பெரிய பாதாள லோகங்களும் அதிரும்படி பெரும் குக்குரல் செய்து ஆரவாரித்தன. இப்படிப்பட்ட சேவல் கொடியை ஏந்தி இருப்பன -
(முருகனின் வாகைப் புயங்களே).
அடல்நெடு நிருதர் தளம் அது மடிய வலாரி தன் வானை ஆள அரசு கொடுத்து அபயம் புகுந்த அண்டர் ஊரைப் புரந்தன ...... 28
......... பதவுரை .........
வலிமை மிக்க அசுரர்களின் சேனைகள் இறந்து ஒழிய, இந்திரன் தனது விண்ணுலகை ஆள, அரசாட்சியைத் தந்து தம்மிடம் சரண் அடைந்த தேவர்களின் அமராவதியை காப்பாற்றின -
(முருகனின் வாகைப் புயங்களே).
வானாடு அரசாளும்படி வாவா வா என்று அழைத்து வானோர் பரிதாபம் தவிர்த்த பெருமாளே.
அடவியில் விளவு தளவு அலர் துளவு குரா மகிழ் கோடல் பாடல் அளிமுரல் செச்சை அலங்கல் செங்கடம்பு நேசித்து அணிந்தன ...... 29
......... பதவுரை .........
காட்டில் வளருகின்ற விளா இலைகள், முல்லை மலர், துளசி, குராமலர், மகிழ மலர், வெண் காந்தள், பாதிரிப் பூ, வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற வெட்சி மாலை, சிவந்த கடப்ப மாலை, முதலியவற்றை விரும்பி சூடிக் கொண்டன -
(முருகனின் வாகைப் புயங்களே).
அரியது ஓர் தமிழ் கொடுஉரிமையொடு அடிதொழுதே கவி மாலையாக அடிமை தொடுத்திடு புன்சொல் ஒன்று நிந்தியாமல் புனைந்தன ...... 30
......... பதவுரை .........
ஒப்பற்ற தமிழில் வழி வழி அடிமை எனும் உரிமையோடு திருப்பாதங்களை வணங்கி பாடல் தொகுதியான இந்த அடியேன் புனைந்த அற்பமான வார்த்தைகளை இகழாமல் ஏற்றுக் கொண்டன -
(முருகனின் வாகைப் புயங்களே).
முடிய வழி வழி அடிமை எனும் உரிமை அடிமை முழுதும் உலகறிய மழலை மொழி கொடுபாடும் ஆசு கவி ... மாலை சூடுவதும்
... சீர் பாத வகுப்பு
மல்லேபுரி பன்னிருவாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனே
... அனுபூதி
ஈன்பு அடியேன் உரைத்த புன் சொல் அது மீது நித்தமும் தண் அருளே தழைத்து வரவேணும்
... என சுவாமிமலைத் திருப்புகழில் விடுத்த வேண்டுகோளை முருகப்பெருமான் ஏற்றுக்கொண்டார் என்பதை உணர்ந்து மேற்கண்ட வரிகள் பாடப்பட்டன.
அழகிய குமரன் உமை திரு மதலை பகீரதி மாதர் வாழும் அறுவர் ப்ரியப்படு கந்தன் எந்தை இந்த்ர நீலச் சிலம்பினன் ...... 31
......... பதவுரை .........
அழகு மிக்க குமாரக்கடவுள், பார்வதி தேவியின் செல்வப் புதல்வன், கங்கையும் ஆறு கார்த்திகை மாதர்களும் அன்பு செலுத்தும் கந்தசுவாமி, எனக்கு தந்தையானவன், இந்திரன் வளர்த்த நீலோற்பன பூ மலரும் திருத்தணிகை மலையான்,
அநுபவன் அநகன் அனனியன் அமலன் அமோகன் அநேகன் ஏகன் அபினவன் நித்தியன் அஞ்சல் என ப்ரசண்ட வாகைப் புயங்களே. ...... 32
......... பதவுரை .........
ஆன்மாக்களுக்கு இன்ப துன்ப உணர்வை நுகரச் செய்பவன், பாவம் அற்றவன், ஜீவாத்மாவை விட்டு வேறுபடாத பரமாத்மா, மலம் நீங்கிய தூயவன், இச்சையற்றவன், பல பொருளாக காட்சி தருபவன், ஒரே நித்தியப் பொருளானவன், புதியவன், அழிவற்றவன் - ஆகிய முருகப்பெருமானின் 'பயப்படாதே' என குறிப்பு காட்டும் வெற்றி விளங்கும் வீர பன்னிரு புயங்களே ... கரங்களே. |