உதரகம லத்தினிடை முதியபுவ னத்ரயமும் உகமுடிவில் வைக்கும்உமை யாள்பெற்ற பாலகனும் ...... 1
உமிழ்திரை பரப்பிவரு வெகுமுக குலப்பழைய உதகமகள் பக்கல்வரு சோதிச் சடானனும் ...... 2
உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்கஅவர் ஒருவரொரு வர்க்கவணொர் ஓர்புத்ரன் ஆனவனும் ...... 3
உதயரவி வர்க்கநிகர் வனகிரண விர்த்தவிதம் உடையசத பத்ரநவ பீடத்து வாழ்பவனும் ...... 4
உறைசரவ ணக்கடவுள் மடுவிலடர் வஜ்ரதர னுடையமத வெற்புலைய வேதித்த வீரியனும் ...... 5
உறைபெற வகுத்தருணை நகரின்ஒரு பத்தனிடும் ஒளிவளர் திருப்புகழ்ம தாணிக்ரு பாகரனும்; ...... 6
உரககண சித்தகண கருடகண யக்ஷகணம் உபநிடம் உரைத்தபடி பூசிக்கும் வானவனும் ...... 7
ஒருவனும் மகிழ்ச்சிதரு குருபரனும் உத்தமனும் உபயமுறும் அக்நிகர மீதிற்ப்ர பாகரனும் ...... 8
அதிமதுர சித்ரகவி நிருபனும் அகத்தியனும் அடிதொழு தமிழ்த்ரயவி நோதக் கலாதரனும் ...... 9
அவரைபொரி யெட்பயறு துவரைஅவல் சர்க்கரையொ டமுதுசெயும் விக்நபதி யானைச் சகோதரனும் ...... 10
அவுணர்படை கெட்டுமுது மகரசல வட்டமுடன் அபயமிட விற்படைகொ டாயத்த மானவனும் ...... 11
அருணையில் இடைக்கழியில் உரககிரி யிற்புவியில் அழகிய செருத்தணியில் வாழ்கற்ப காடவியில் ...... 12
அறிவும்அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும் அறியென இமைப்பொழுதின் வாழ்வித்தவேதியனும் ...... 13
அரிபிரம ருக்குமுதல் அரியபர மற்குயரும் அருமறை முடிப்பையுப தேசித்த தேசிகனும் ...... 14
அமலனும் எனக்கரசும் அதிகுணனும் நிர்க்குணனும் அகிலபுவ னத்தமர சேனைக்கு நாயகனும் ...... 15
அநுபவனும் அற்புதனும் அநுகுணனும் அக்ஷரனும் அருமனம் ஒழிக்கும்அநு பூதிச் சுகோதயனும் ...... 16
இதமகிதம் விட்டுருகி இரவுபக லற்றஇடம் எனதற இருக்கைபுரி யோகப் புராதனனும் ...... 17
எனதுமன சிற்பரம சுகமவுன கட்கமதை யமன்முடி துணிக்கவிதி யாவைத்த பூபதியும் ...... 18
எழுமையும் எனைத்தனது கழல்பரவு பத்தனேன இனிதுகவி யப்படிப்ர சாதித்த பாவலனும் ...... 19
இமையவர் முடித்தொகையும் வனசரர் பொருப்புமென திதயமு மணக்குமிரு பாதச் சரோருகனும் ...... 20
எழுதரிய கற்பதரு நிழலில்வளர் தத்தைதழு வியகடக வஜ்ரஅதி பாரப் புயாசலனும் ...... 21
எதிரில்புல வர்க்குதவு வெளிமுகடு முட்டவளர் இவுளிமுகி யைப்பொருத ராவுத்த னானவனும் ...... 22
எழுபரி ரதத்திரவி எழுநிலமொ டக்கரிகள் இடர்பட முழக்கியெழு சேவற் பதாகையனும் ...... 23
இணையிலியும் நிர்ப்பயனும் மலமிலியும் நிஷ்களனும் இளையவனும் விப்ரகுல யாகச் சபாபதியும் ...... 24
மதுகையொடு சக்ரகிரி முதுகுநெளி யப்புவியை வளையவரும் விக்ரமக லாபச் சிகாவலனும் ...... 25
வலியநிக ளத்தினொடு மறுகுசிறை பட்டொழிய வனஜமுனி யைச்சிறிது கோபித்த காவலனும் ...... 26
வருசுரர் மதிக்கஒரு குருகுபெயர் பெற்றகன வடசிகரி பட்டுருவ வேல்தொட்ட சேவகனும் ...... 27
வரதனும் அநுக்ரகனும் நிருதர்குல நிஷ்டுரனும் மநுபவன சித்தனும நோதுக்க பேதனனும் ...... 28
வயிரிசை முழக்கமிகு மழைதவழ் குறிச்சிதொறும் மகிழ்குரவை யுட்டிரியும் வேடிக்கை வேடுவனும் ...... 29
மரகதம ணிப்பணியின் அணிதழை உடுத்துலவும் வனசரர் கொடிச்சிதனை யாசிக்கும் யாசகனும் ...... 30
மதனன்விடு புட்பசர படலமுடல் அத்தனையும் மடலெழுதி நிற்குமதி மோகத் தபோதனனும் ...... 31
வரிசிலை மலைக்குறவர் பரவிய புனத்திதணின் மயிலென இருக்குமொரு வேடிச்சி காவலனே. ...... 32
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 
......... சொற்பிரிவு .........
உதர கமலத்தினிடை முதிய புவனத்ரயமும் உக முடிவில் வைக்கும் உமையாள் பெற்ற பாலகனும்
......... பதவுரை ......... 
... தாமரை மலரிடத்தில் பழமையான மூவுலகங்களையும் யுகம் முடிந்து பிரளயம் வரும் போது அடக்கி வைத்து காப்பாற்றும் பார்வதி பெற்ற பாலகனும் (வேடிச்சி காவலனே).
......... சொற்பிரிவு .........
உமிழ் திரை பரப்பி வரு வெகு முக குலப்பழைய உதக மகள் பக்கல் வரு சோதிச் சடானனும்
......... பதவுரை ......... 
... அலை எறிந்து நீர் பரப்பி வரும் பல கிளைகளாக பாய்வதுமாகிய சிரேஷ்டமான பழய ஜலமாது கங்கையில் மடியில் அவதரித்த ஒளி வீசும் ஷண்முகனும் (வேடிச்சி காவலனே).
குலத்திற் கங்கைதன் ...... சிறியோனே
- தடக்கைப் பங்கயம் - திருப்பரங்குன்றம் திருப்புகழ்.
......... சொற்பிரிவு .........
உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்க அவர் ஒருவர் ஒருவர்க்கு அவண் ஓர் ஓர்புத்ரன் ஆனவனும்
......... பதவுரை ......... 
... கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரும் ஒரு உருவமாக இருந்த காங்கேயனுக்கு பால் ஊட்ட நினைத்த போது அந்த மாதர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த இடத்திலே ஓரோர் புத்திரன் ஆனவனும் (வேடிச்சி காவலனே).
......... சொற்பிரிவு .........
உதய ரவி வர்க்க நிகர் வனகிரண விர்த்தவிதம் உடைய சத பத்ர நவ பீடத்து வாழ்பவனும்
......... பதவுரை ......... 
... உதிக்கும் சூரிய கூட்டம் போன்றதும், அழகிய ஒளி வீசுகின்றதும் வேறு வேறு வித்தியாசமான நிறங்களைக் கொண்டதுமான மயிலாகிய புதுமையான ஆசனத்தில் வீற்றிருப்பவனும் (வேடிச்சி காவலனே).
......... சொற்பிரிவு .........
உறை சரவணக்கடவுள் மடுவில் அடர் வஜ்ரதரனுடைய மத வெற்பு அலைய வேதித்த வீரியனும்
......... பதவுரை ......... 
... கங்கையில் உள்ள சரவணப் பொய்கையில் மலர்ந்த கடவுளாகிய முருகனை அவன் சிவபெருமானின் குமாரன் என புரிந்து கொள்ளாமல் போர் செய்ய வந்த வஜ்ராயுத தேவனான இந்திரனின் மலை போன்ற வலிமை மிக்க ஐராவதம் அடிபட்டு அழியும்படி புடைத்த வீரனும்
......... சொற்பிரிவு .........
உறை பெற வகுத்த அருணை நகரின் ஒரு பத்தன் இடும் ஒளி வளர் திருப்புகழ் மதாணி க்ருபாகரனும்
......... பதவுரை ......... 
... முருகப் பெருமானின் கீர்த்தி பிரசித்தியாய் விளங்கும் பொருட்டு சீர்பாதச் சிறப்பு அவனின் வேலாயுத மகிமை முதலியவற்றை வரைபடுத்தி திருவண்ணாமலையில் வாழும் ஒரு பக்தனான அடியேன் இயற்றி அணிவித்த பெருமை ஒளி வளர்கின்ற திருப்புகழ் ஆகியற்றை சொல்மாலைகளின் நடுவே பதக்கமாக ஏற்றுக் கொண்ட கருணாமூர்த்தியும் (வேடிச்சி காவலனே).
(நான் எனக் கூறாமல் ஒரு பக்தன் என படர்க்தையில் கிளி ரூபம் பெற்றபின் இவ்வகுப்பை அருணகிரியார் பாடினார் என்பது சிலரின் கருத்து).
......... சொற்பிரிவு .........
உரககண சித்தகண கருடகண யக்ஷகணம் உபநிடம் உரைத்தபடி பூசிக்கும் வானவனும்
......... பதவுரை ......... 
... பதிணெண் கணத்தைச் சேர்ந்த நாக கணங்கள், (நாகலோக ஈரேழு பாருக்கும் உரியோனே) அஷ்ட மா சித்திகளில் வல்லவர்களான சித்தர் கூட்டங்கள், (அகிலம் புகழும் சிவானந்த அமிர்தம் புசிக்கும் சித்தர்கள், அஷ்டாங்கத்தால் நாத வடிவான யோக சித்தர்கள், உகிரால் ஊன்றி பருபதத்தை உயரத் தூக்கும் சித்தர்கள், ஒற்றைக் கல்லை பரிசுத்த உயர் பொன்னாக்கும் சித்தர்கள், ஜெகதல அண்டங்களை தமது அகத்தே தரிசிக்கும் சித்தர்கள், திரி காலம் கண்டு அனிமாது செய்யும் சித்தர்கள்), கருடர்கள் (திருமாலின் வாகனமான கருடனைத் தவிர பல கருடர்கள் உண்டு என்பதை பாரதமும் கூறுகிறது), குபேரன் முதலிய இயக்கர் கூட்டம் (படைத்த பிரம்மனையே பட்சிக்க வேண்டும் என்பவர்கள் அரக்கர்கள். ரட்சிக்க வேண்டும் என்பவர்கள் யக்ஷர்கள்) அவர்கள் அனைவரும் கூடி உபநிடத்தில் சொல்லியபடி தகர வித்தையால் பூஜிக்கப்படும் தேவாதி தேவனும் (வேடிச்சி காவலனே).
......... சொற்பிரிவு .........
ஒருவனும் மகிழ்ச்சி தரு குருபரனும் உத்தமனும் உபயமுறும் அக்நி கர மீதில் ப்ரபாகரனும்
......... பதவுரை ......... 
... ஒப்பற்ற பிரம்மப் பொருளும் (அவரே பரப்பிரம்மம்) தன்னையே உபாசனை செய்யும் அடியார்களை பேரின்ப மகிழ்ச்சிக் கடலில் வைத்திருக்கும் குருமூர்த்தியும் (தத்திக் கரை புரளும் பரமானந்த சாகரத்தே தித்திக்கும் அமுது கண்டேன்), மிக சிரேஷ்டனும் (தந்தை .. நொடித்தான் மலை உத்தமன், தாய் .. இமவான் மடந்தை உத்தமி, ஆகையால் மைந்தனும் உத்தமனாய் விளங்குவதில் வியப்பு ஒன்றும் இல்லை) தீ கடவுளின் இருகரங்களாலும் தாங்கப்பட்ட (அஜத்து உருமிக்கும் மெய்யோன் கையில் சேர்ந்த சேய்யோன்) பேரொளி வீசும் சொரூபமுடையவனும் (வேடிச்சி காவலனே).
......... சொற்பிரிவு .........
அதிமதுர சித்ரகவி நிருபனும் அகத்தியனும் அடிதொழு தமிழ் த்ரய விநோதக் கலாதரனும்
......... பதவுரை ......... 
... மிகவும் இனிமை மிக்க எழுக்கூற்றிருக்கை, ஏகபாதம், மாலைமாற்று முதலிய சித்ர கவிகளை ஞானசம்பந்த அவதாரத்தில் பாடி அருளிய கவிராஜனும், (அதிக வித சாமர்த்திய கவிராஜனே .. தன்னுடைய பாட்டுக்கள் மூலம் எலும்பை பெண்ணாக்கியது, பாம்பு கடியால் மாண்டவனை மீட்டது, ஆண் பனையை பழம் ஈனச் செய்தது, மதுரையில் அனல் புனல் வாதம் செய்தது முதலிய அமானுஷ செயல்களை செய்ததை சித்ர கவி நிருபன் என்பது குறிக்கும்) தமிழுக்கு தந்தையாகிய அகத்திய மாமுனியே வணங்கும் முத்தமிழ் விநோதனாகிய சகலகலா வல்லவனும் (வேடிச்சி காவலனே).
......... சொற்பிரிவு .........
அவரை பொரி எள் பயறு துவரை அவல் சர்க்கரையொடு அமுதுசெயும் விக்நபதி யானைச் சகோதரனும்
......... பதவுரை ......... 
... சக்கரை யோடு அவரை முதலியவைகளை உணவாக உட்கொள்ளும் விக்ன விநாயகரின் தம்பியும் (வேடிச்சி காவலனே).
......... சொற்பிரிவு .........
அவுணர் படை கெட்டு முது மகரசல வட்டமுடன் அபயம் இட வில் படைகொடு ஆயத்தமானவனும்
......... பதவுரை ......... 
... அரக்கர்கள் அனைவரையும் அழித்து, பசுமை மீன்கள் நிறைந்த கடல் அடைக்கலம் எனக் கதற (வாரி கோ கோ என வாய் விட), வில் ஏந்தி போருக்கு தயாராக நின்றவனும் (வேடிச்சி காவலனே).
......... சொற்பிரிவு .........
அருணையில் இடைக்கழியில் உரககிரி யிற்புவியில் அழகிய செருத்தணியில் வாழ்கற்ப காடவியில்
......... பதவுரை ......... 
... திருவண்ணாமலையில், திருவிடைக்கழியில், திருச்செங்கோட்டில், பூமியின் அழகிய தலமான திருத்தணியில் (புவிக்கு உயிராகும் திருத்தணி), தன்னால் புது வாழ்வு கொடுக்கப்பட்ட கற்பக வனங்கள் மிக்க தேவலோகத்தில் (அருணகிரிநாதர் கிளி ரூபத்தில் பாரிஜாத மலருக்காக அமராவதி நகருக்கு போய் வந்தார் எனும் செவிவழி செய்திக்கு இவ்வடிகள் பலமூட்டுகிறது).
......... சொற்பிரிவு .........
அறிவும், அறி தத்துவமும், அபரிமித வித்தைகளும் அறி என, இமைப் பொழுதின் வாழ்வித்த வேதியனும்
......... பதவுரை ......... 
... உலகப் பொருளை அறிய வைக்கும் சுட்டறிவையும், அந்த அறிவு எப்படி உருவாகிறது என்பதை விளங்கவைக்கும் மெய்யறிவையும்
அறிவை அறிவது பொருளென அருளிய ...... பெருமாளே.
- குமர குருபர குணதர - திருவருணை திருப்புகழ்.
அறிவு ஒன்றற நின்று பிரிவு ஒன்றற நின்ற பிரான்
- கந்தர் அநுபூதி.
கணக்கற்ற கலைகளையும் அற்புத சித்திகளையும், தெரிந்து கொள் எனச் சொல்லி, ஒரு நொடியில் உபதேசித்து எனக்கு மரணமில்லா பெரு வாழ்வை அருளிய அந்தணனும் (வேடிச்சி காவலனே).
'வள்ளியை வலிய சென்று நீ ஆட் கொண்டதின் கருத்து யாது?' என வினவிய ஈசனுக்கும் நொடிப் பொழுதில் முருகன் உபதேசம் செய்தார்.
வள்ளி சன்மார்க்கம் விள்ளைக்கு நோக்க வல்லைக்குள் ஏற்றும் ...... இளையோனே
- கள்ளக் குவால் பை - வள்ளிமலை திருப்புகழ்.
......... சொற்பிரிவு .........
அரிபிரமருக்கு முதல் அரிய பரமற்கு உயரும் அருமறை முடிப்பை உபதேசித்த தேசிகனும் அமலனும் எனக்கு அரசும் அதிகுணனும் நிர்க்குணனும்
......... பதவுரை ......... 
... நாராயணனுக்கும் நான்மறை பிரமனுக்கும் முதல்வரும் அவர்களால் அறிய முடியாதவராய் விளங்கிய சிவபெருமானுக்கு உயர்ந்த உணர அரிதான வேத முடிவை உணர்த்திய குருமூர்த்தியும் (வேடிச்சி காவலனே).
நெறி பல கொண்ட வேத நன் முடியினும் மருவிய குருநாதா
- கொந்துவார் குரவடி திருத்தணிகை திருப்புகழ்.
ஆசா பாச அழுக்கற்றவனும், எனது தலைவனும், மேலான குண சீலனும், அதே சமயத்தில் ராஜஸ, தாமஸ, சாத்வீக குணங்களைக் கடந்தவனும்
போத நிர்குண போதா நமோ நம
- போத நிர்க்குண - திருப்புகழ் (பொதுப்பாடல்கள்).
......... சொற்பிரிவு .........
அகிலபுவனத்து அமர சேனைக்கு நாயகனும்
......... பதவுரை ......... 
... அனைத்து ப்ரபஞ்சங்களுக்கும் தேவ சைன்யங்களுக்கும் தலைவனும் (வேடிச்சி காவலனே).
......... சொற்பிரிவு .........
அநுபவனும் அற்புதனும் அநுகுணனும் அக்ஷரனும் அருமனம் ஒழிக்கும் அநுபூதிச் சுகோதயனும்
......... பதவுரை ......... 
... உலகில் அனைத்து ஜீவராசிகளும் உணரும் இன்ப துன்பங்களுக்கு மூலகாரணமாக இருப்பவனும், வியக்கத்தக்க மூர்த்தியும்,
சித்ர முகம் ஆறும் முத்து மணி மார்பும் திக்கினில் இலாத பெருமாள் காண்
- கைத்தருண சோதி - சிதம்பரம் திருப்புகழ்.
எல்லா இயக்கங்களுக்கும் துணையாக நிற்பவனும் (அவனன்றி ஒரு அணுவும் அசையாது), நாசம் அற்றவனும் அழிவில்லாதவனும் (க்ஷரம் = அழிவு), அருமையான மனத்தின் சலனங்களை ஒடுக்கி தன்மயமாய் நிற்கும் அநுபவ ஞானத்தில் கிடைக்கப் பெறும் ஆனந்த வஸ்துவும் (வேடிச்சி காவலனே).
உள்ளப் பெருக நின்று தொய்யப்படாமல் என்றும் உள்ளத்தின் மாய்வது ஒன்றை மொழியாயோ
- கை ஒத்து வாழும் - வள்ளிமலை திருப்புகழ்.
......... சொற்பிரிவு .........
இதம் அகிதம் விட்டு உருகி இரவுபகல் அற்ற இடம் எனதற இருக்கை புரி யோகப் புராதனனும்
......... பதவுரை ......... 
... இன்ப துன்பங்களில் இருந்து நீங்கி (துன்பம் இன்பம் கழித்து ஓடுகின்றது எக்காலம் ?) இறைவன் ஆட்கொண்ட கருணைத் திறனை நினைத்து நினைத்து அழுது மறதி நினைப்பு இவை கடந்த பரவெளியை (கருதா மறவா நெறி இதுவே) (இரவு பகல் இல்லா இன்பப் பெரு வெளியூடே விரவி விரவி நின்று உந்தீபற) மமகாரம் அற்றுப் போக (எனது எனும் மலம் அறில்) என்னுடைய இருப்பிடமாக அருளிக் கொடுத்த சிவ யோக பழையவனும் (வேடிச்சி காவலனே).
......... சொற்பிரிவு .........
எனது மன சிற்பரம சுக மவுன கட்கமதை யமன்முடி துணிக்க விதியா வைத்த பூபதியும்
......... பதவுரை ......... 
... எனது உள்ளத்தில் எமனுடைய சிரத்தை அறுக்கவல்ல பாக்ய வஸ்துவான நிஷ்சல இன்பம் நல்கும் மவுனம் எனும் வாளை கொடுத்து அருளிய மன்னனும் (வேடிச்சி காவலனே).
'மவுன வாளால் எமதூதரை வெல்லும் திறனை' முன்பு திருப்புகழில் வேண்டினார்:
எம படரை மோது மோன உரையில் உபதேச வாளை எனது பகை தீர நீயும் ...... அருள்வாயே
- ஒருவழிபடாது - சோமநாதன்மடம் திருப்புகழ்.
முருகன், 'சும்மா இரு சொல்லற' என்று உபதேசித்ததும் மோன நிலை கிட்டியது.
இந்த வாளை வைத்திருக்கும் தைரியத்தால் எமனுக்கே சவால் விடுகிறார்:
.. செந்தில் வேலனுக்குத் தொண்டாகிய என் அவிரோத ஞானச் சுடர்வாள் கண்டாயடா அந்தகா வந்து பார் சற்று என் கைக்கு எட்டவே.
இதற்கு முன் இந்த வாளை சிவபெருமானுக்குக் கொடுத்தார் என்கிறார்:
.. தந்தைக்கு முன்னம் தனி ஞான வாள் ஒன்று சாதித்தருள் கந்தசாமி.
இந்த வாளை சிவனார் தரித்துள்ளார் என்பதை மாணிக்கவாசகரும் கூறுகிறார்:
.. ஞான வாள் ஏந்தும் ஐயா.
......... சொற்பிரிவு .........
எழுமையும் எனை தனது கழல் பரவு பத்தனேன் என இனிது கவி அப்படி ப்ரசாதித்த பாவலனும்
......... பதவுரை ......... 
... ஊர்வன முதல் தாவரம் முதலான ஏழுவகை பிறப்பிலும் என்னைத் தனது திருவடிகளைத் துதிக்கும் அடியவன் என ஏற்றுக் கொண்டு இனிமையான முறையில் பாடல்களைப் பாடும் திறனை அற்புதமான வகையில் தந்தருளிய கவி ராஜனும் (வேடிச்சி காவலனே).
(திருவண்ணாமலையில் ஆறெழுத்தை பொறித்து நான் எப்படி பாடுவேன் என மலைப்புடன் அருணகிரியார் சொல்ல முருகன் அடி எடுத்து கொடுத்து கவிபாடும் திறனை அருளியதை இவ்வரிகள் குறிக்கின்றன).
......... சொற்பிரிவு .........
இமையவர் முடித்தொகையும் வனசரர் பொருப்பும் எனது இதயமும் மணக்கும் இரு பாதச் சரோருகனும்
......... பதவுரை ......... 
... தேவர்களின் சிரங்களின் கூட்டத்திலும் (உயர் அமரர் மணி முடியில் உறைவதுவும்) வேடர்களின் வள்ளி மலையிலும் (எயினர் இடும் இதண் அதனில் சிறுமி வளர் புனமீது உலாவுவதும்) எனது உள்ளத்திலும் நறுமணம் கமழும் இரு பாத தாமரைகளை கொண்டவனும் (வேடிச்சி காவலனே).
......... சொற்பிரிவு .........
எழுத அரிய கற்பதரு நிழலில்வளர் தத்தை தழுவிய கடக வஜ்ர அதி பாரப் புயாசலனும்
......... பதவுரை ......... 
... எழுதுவதற்கு முடியாத அழகுடையவளும் (பழுதொணாத பாவாணர் எழுதொணாத தோள் வீர) கற்பக நிழலிலே வளர்ந்தவளுமான தேவசேனையைத் தழுவியதும், வீர வாளை அணிந்துள்ளதும், வைரம் போன்ற வலிமை கொண்டதுமான கனத்த தோள் வலிமை கொண்டவனும் (வேடிச்சி காவலனே).
......... சொற்பிரிவு .........
எதிர் இல் புலவர்க்கு உதவு வெளி முகடு முட்ட வளர் இவுளி முகியைப் பொருத ராவுத்தன் ஆனவனும்
......... பதவுரை ......... 
... தனக்கு சமானமில்லாத பெரும் புலவர் நக்கீரருக்கு உதவும் பொருட்டு ஆகாச உச்சியைத் தொடும் அளவிற்கு வளர்ந்திருந்த கற்கிமுகி எனும் பூதத்துடன் யுத்தம் செய்த போர் வீரனும் (வேடிச்சி காவலனே).
......... சொற்பிரிவு .........
எழு பரி ரதத்து இரவி எழு நிலமொடு அக்கரிகள் இடர் பட முழக்கி எழு சேவற் பதாகையனும்
......... பதவுரை ......... 
... ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் உலாவும் சூரியன் வியாபித்து வரும் ஏழு புவனங்களும் அந்த எட்டு திக்கு யானைகளும் வேதனை அடையும்படி கூக்குரலிட்டு எழும் சேவல் கொடியை கொண்டவனும் (வேடிச்சி காவலனே).
......... சொற்பிரிவு .........
இணையிலியும் நிர்ப்பயனும் மலமிலியும் நிஷ்களனும் இளையவனும் விப்ரகுல யாகச் சபாபதியும்
......... பதவுரை ......... 
... தனக்கு நிகரில்லாதவனும், (தணிகையில் இணையிலி) பயம் என்பதையே அறியாதவனும், (நிஷ்டுர, நிராகுல, நிர்பயனே), மும்மலங்கள் அற்றவனும் (அநகா), சொரூபத்தில் உருவமற்றவனும் என்றும் இளமையாக உள்ளவனும் மறையோர்கள் செய்யும் யாகத்திற்கு நாயகனும் (அந்தண் மறை வேள்வி காவற்கார) (வேடிச்சி காவலனே).
......... சொற்பிரிவு .........
மதுகையொடு சக்ரகிரி முதுகு நெளியப் புவியை வளையவரும் விக்ரம கலாபச் சிகாவலனும்
......... பதவுரை ......... 
... வலிமையுடன் சக்ரவாள கிரியின் பக்கவாட்டங்களை தளர்த்து அசையும்படி பூமியைச் சுற்றி வந்த பராக்ரமம் பொருந்திய தோகை மயில் வாகனனும் (வேடிச்சி காவலனே).
......... சொற்பிரிவு .........
வலிய நிகளத்தினொடு மறுகு சிறை பட்டு ஒழிய வனஜ முனியைச் சிறிது கோபித்த காவலனும்
......... பதவுரை ......... 
... பலம் மிக்க விலங்குடன் மனம் கலங்கி சிறையில் பிடிபட்டு துன்பப்படும்படி தாமரை மலரோன் பிரம்மனை சற்றே சினத்த தலைவனும் (வேடிச்சி காவலனே).
'வனஜ ஜாதனை அன்று முனிந்தற வலிய பார விலங்கிடு புங்கவன்'
- (பூத வேதாள வகுப்பு)
......... சொற்பிரிவு .........
வரு சுரர் மதிக்க ஒரு குருகு பெயர் பெற்ற கன வடசிகரி பட்டுருவ வேல் தொட்ட சேவகனும்
......... பதவுரை ......... 
... யுத்தகளத்திற்கு வந்த தேவர்கள் போற்ற ஒப்பற்ற கிரவுஞ்ச பக்ஷியின் பெயரைத் தாங்குவதும் வட திசையில் பொன்மயமாக இருந்ததுமான மலை தொளைக்கும்படி வேலாயுதத்தை பிரயோகம் செய்த வீரனும் (வேடிச்சி காவலனே).
......... சொற்பிரிவு .........
வரதனும் அநுக்ரகனும் நிருதர்குல நிஷ்டுரனும் மநுபவன சித்தனும நோதுக்க பேதனனும்
......... பதவுரை ......... 
... வரம் கொடுப்பவனும் (வரதாமணி நீ) அருள் பாலிப்பவனும் (நதிகா நமக்குறுதி அவரே) அசுரர் குலத்தை அழித்தவனும் (மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே) மந்திரங்களுக்கு இருப்பிடமான சித்த மூர்த்தியும் (வேத மந்திர சொரூபா, வேலைத் துளைத்து வரை ஏழைப் பிளந்து வரு சித்தர், சித்தர் மகனே, விராலி சித்ர மலை மேல் உலாவு சித்தா) மனக்கவலைகளை பிளந்து மாற்றுபவனும் (மனத்துயர் கெடுத்து எனை வளர்த்தருள் கிருபைக்கடல்) (வேடிச்சி காவலனே).
......... சொற்பிரிவு .........
வயிரிசை முழக்க மிகு மழை தவழ் குறிச்சிதொறும் மகிழ் குரவையுள் திரியும் வேடிக்கை வேடுவனும்
......... பதவுரை ......... 
... ஊது கொம்புகளின் ஒலி நிறைந்துள்ளதும் சாரல் படிந்ததுமான களிப்புடன் கொண்டாடப்படும் குரவைக் கூட்டங்களில் கலந்து கொண்டு அருள் புரியும் வேடிக்கை வேடுவனும் (வேடிச்சி காவலனே).
......... சொற்பிரிவு .........
மரகத மணிப்பணியின் அணிதழை உடுத்து உலவும் வனசரர் கொடிச்சிதனை யாசிக்கும் யாசகனும்
......... பதவுரை ......... 
... 'பச்சை மணி போன்ற ஆபரணங்களுடன் அழகிய இலைகளை உடையாய் உடுத்தி உலாவுகின்ற வேடுவச் சிறுமியாகிய என்னை மணம் செய்து கொள்' என்று விடாமல் யாசித்துக் கொண்டிருப்பவளை யாசித்துக் கொண்டிருப்பவனும் (வேடிச்சி காவலனே).
......... சொற்பிரிவு .........
மதனன் விடு புட்ப சர படலம் உடல் அத்தனையும் மடல் எழுதி நிற்கும் அதி மோகத் தபோதனனும்
......... பதவுரை ......... 
... மன்மதன் செலுத்திய மலர் பாணங்களின் தொகுதி தனது உடல் முழுதும் பாய்ந்து புண்படுத்தி இருக்கும் நிலையை படத்தில் வரைந்து காட்டும் அதிக தெய்வீகக் காதல் மிக்க தவசீலனும் (வேடிச்சி காவலனே).
......... சொற்பிரிவு .........
வரிசிலை மலைக்குறவர் பரவிய புனத்திதணின் மயில் என இருக்கும் ஒரு வேடிச்சி காவலனே.
......... பதவுரை ......... 
... வரிந்து கட்டப்பட்ட வில் உடைய வேடுவர்கள் பூஜை போட்டு வழிபடும் தினை புனத்து பரணி மீதில் மயில் போன்ற கவர்ச்சியுடன் அழகுடன் அமர்ந்திருக்கும் (மான் தரு கான மயில்) ஒப்பற்ற வள்ளி நாச்சியாருக்கு பொழுது போக்குபவனாய் காவல் காத்த அந்த ஷண்முக தெய்வம்தான். |