இந்த நூல் தணிகேசரின் திருப்புகழை ஓதுபவர்களுக்கு அந்தப் பெருமான் திருக் கையால் கிடைக்கும் அருள் பிரசாதத்தின் மகிமையை விஸ்தரிப்பது. இந்த பிரசாதம் சிவஞானமே. இதை ஞான களிற்றிற்கு உவமையாக கூறி இருக்கிறார்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
தருக்குவ செருக்களம் வெருக்கொள அதிர்ப்பன தடக்கரம் நிமிர்த்துயர் உடுக்குலம் உதிர்ப்பன, ...... 1
தடித்தெழு குலப்புவி நடுக்குற அதிர்ப்பன தழைச்செவி படைப்பன, திரட்கயிலை ஒப்பன, ...... 2
சதுர்த்தச தலத்தையும் எடுத்தக டவுட்பணி சகஸ்ர பணபத்தியும் ஒடுக்குற நடப்பன, ...... 3
சமுத்ர மதனத்தில் அமுதத்துடன் உதிப்பன, தரத்தன, தலைச்சுர, நதிப்புனல் குளிப்பன; ...... 4
அருக்கர் பதம்உட்பட மிதித்திடு பதத்தன; அறப்படு கொலைத்தொழில் புறப்படு முகத்தன; ...... 5
அரக்கர்ப டைகெட்டுமு றியப்பொரு பதத்தன; அயற்கும் அமரர்க்கும்ஒ ருபொற்பதி யளிப்பன; ...... 6
அளித்தவ முதுக்கவள மொக்குவன; முத்தெறி அலைக்கடல் கலக்குவ; குலக்கிரி குலுக்குவ; ...... 7
அடித்தெழு பொருப்பினை நெருப்பெழ விழிப்பன அதிக்ரம கமப்ரவுட விக்ரம மதத்தன; ...... 8
மருக்குலவு கற்பக வனத்தலர் பறிப்பன; வளைத்தெழு தருக்களை மொளுக்கென முறிப்பன; ...... 9
மதிப்பிள வெனச்செருகி வைத்தென மணிச்சதுர் மருப்பின; இமைப்பற விழித்த நயனத்தன; ...... 10
வளைத்த கிரியைப் பொடிபடுத்தி இபம்எட்டையு மலைத்தவண் அடிப்பட மடப்பிடி அணைப்பன; ...... 11
மழைப்புயல் கிழிப்பன புனற்பசி தணிப்பன; மணிக்கண கனப்பண மதத்ரயம் விதிர்ப்பன; ...... 12
திருத்திய புனத்திடை வனத்தழை உடுத்தினி திருப்பவள் விருப்புறு வரைப்புயன் வினைப்பகை ...... 13
செகுப்பவன் நினைத்தவை முடித்தருள் க்ருபைக்கடல் சிவத்த கமலச் சரவணத் தறுமுகப்பொருள் ...... 14
செகத்ரய முகிழ்த்த உதரத் திரிபுரைக்கொரு திருப்புதல்வன் உற்பல கிரிப்பெயர் தரித்தருள் ...... 15
திருத்தணி மலைக்கிறை திருப்புகழ் படிப்பவர் சிறப்பொடு பெறத்தரு திருக்கையில் வழக்கமே. ...... 16
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
......... சொற்பிரிவு .........
தருக்குவ செருக்களம் வெருக்கொள அதிர்ப்பன
......... பதவுரை .........
... இடித்து போர் புரியும் யுத்தகளம் பயத்தினால் நடுக்கும்படி முழக்கம் இடுவன (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
தடக்கரம் நிமிர்த்துயர் உடுக்குலம் உதிர்ப்பன
......... பதவுரை .........
... பெரிய துதிக்கையை உயர்த்தி ஆகாயத்தில் உயரத்தில் உள்ள நட்சத்திரக் கூட்டங்கள் உதிரும்படி அடிப்பன (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
தடித்து எழு குலப் புவி நடுக்கு உற அதிர்ப்பன
......... பதவுரை .........
... பெரிதாகிய சிறந்து ஏழு உலகங்களும் ஆட்டம் காணும்படி நடுங்கச் செய்வது (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
தழைச்செவி படைப்பன, திரட்கயிலை ஒப்பன,
......... பதவுரை .........
... முறம் போன்ற தழைத்த பரந்துள்ள காதுகளைக் கொண்டன, திரட்சி மிக்க கயிலை மலை போல் நெருக்கமாக வெள்ளை நிறம் உடையன (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
சதுர்த் தச தலத்தையும் எடுத்த கடவுள் பணி சகஸ்ர பண பத்தியும் ஒடுக்குற நடப்பன
......... பதவுரை .........
... 14 உலகங்களையும் தன் முதுகில் சுமக்கும் தெய்வீகமான சர்ப்பம் ஆதிசேஷனின் 1000 பட வரிசைகளும் பயந்து நடுங்கும்படி உலா வருவன (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
சமுத்ர மதனத்தில் அமுதத்துடன் உதிப்பன
......... பதவுரை .........
... திருப்பாற்கடல் கடைந்த போது அமுதத்துடன் சேர்ந்து தோன்றின (ஐராவததிற்கு ஒப்பிடுகிறார்) (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
தரத்தன, தலைச்சுர நதிப்புனல் குளிப்பன
......... பதவுரை .........
... சிரேஷ்டமானவை, நதிகளில் தலையாய ஆகாச கங்கையில் குளிப்பன (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
அருக்கர் பதம் உட்பட மிதித்திடு பதத்தன
......... பதவுரை .........
... சூரிய மண்டலம் முதல் எல்லா புவனங்களையும் மிதித்து சஞ்சரிக்கக் கூடிய கால்களை உடையன (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
அறப்படு கொலைத் தொழில் புறப்படு முகத்தன
......... பதவுரை .........
... தர்ம தேவதை நடுங்கும் வகையில் கொலை உக்ரத்தை வெளிப்படுத்தும் முகத்தை உடையன (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
அரக்கர்படை கெட்டு முறியப் பொரு பதத்தன
......... பதவுரை .........
... அரக்கர் படை தோற்று ஓடும்படி போர் புரியும் தகுதி உடையன (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
அயற்கும் அமரர்க்கும் ஒருபொற்பதி அளிப்பன
......... பதவுரை .........
... அயனுக்கும் அமரர்களுக்கும் ஒப்பற்ற சத்ய லோகத்தையும் அமராவதியையும் கொடுத்து உதவி புரிவன (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
அளித்த அமுதுக் கவளம் மொக்குவன
......... பதவுரை .........
... தனக்கு அளிக்கப்பட்ட அமிர்த உணவுக் குவியலை வாரி மொக்குவன (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
முத்தெறி அலைக்கடல் கலக்குவ
......... பதவுரை .........
... முத்துக்களை வாரி வீசும் அலை வீசும் சமுத்திரத்தைக் கலக்குவன (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
குலக்கிரி குலுக்குவ
......... பதவுரை .........
... அஷ்ட திக்கு மலைகளை ஆட்டி அசைப்பன (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
அடித்து எழு பொருப்பினை நெருப்பு எழ விழிப்பன
......... பதவுரை .........
... சூரனுக்கு அரணாக இருந்த ஏழு மலைகளை (நிமிர்ந்து நிற்கும் மலைகளை) கண்களில் அனல் வீச முழித்துப் பார்ப்பன (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
அதிக்ரம கம ப்ரவுட விக்ரம மதத்தன
......... பதவுரை .........
... அளவு கடந்த நிறைவான கம்பீரம் மிக்க வீரப் பெருமை உடையன (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
மருக்குலவு கற்பக வனத்தலர் பறிப்பன
......... பதவுரை .........
... நறுமணம் வீசும் கற்பக வனத்தில் பூக்களைப் பறிப்பன (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
வளைத்தெழு தருக்களை மொளுக்கென முறிப்பன
......... பதவுரை .........
... நிமிர்ந்து நிற்கும் மரங்களின் கிளைகளை வளைத்து படார் என ஒடிப்பன (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
மதிப் பிளவு எனச்செருகி வைத்ததென மணிச்சதுர் மருப்பின
......... பதவுரை .........
... சந்திரனின் பிறை எனச் சொல்லும்படி அதை முகத்தில் சொருகி வைத்திருப்பது போல அழகிய நான்கு தந்தங்களை உடையன (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
இமைப்பற விழித்த நயனத்தன
......... பதவுரை .........
... இமைகளைக் மூடாமல் விழித்திருக்கும் கண்களை உடையன (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
வளைத்த கிரியைப் பொடி படுத்தி இபம் எட்டையும் அலைத்து அவண் அடிப்பட மடப்பிடி அணைப்பன
......... பதவுரை .........
... பூமியை வளைத்திருக்கும் சக்ரவாளகிரியைப் தூள் செய்து அஷ்ட திக்கு கஜங்களை எதிர்த்து அவைகளை அங்கேயே கீழே தள்ளி விட்டு தன் பெண் யானையுடன் கூடி மகிழ்வன (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
மழைப்புயல் கிழிப்பன புனற்பசி தணிப்பன
......... பதவுரை .........
... மழை மேகத்தைக் கிழித்து அதில் இருந்து சிந்தும் தண்ணீரைக் குடித்து தாகத்தைத் தணித்துக் கொள்வன (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
மணிக்கண கனப்பண மதத்ரயம் விதிர்ப்பன
......... பதவுரை .........
... தன் கழுத்தில் கட்டி இருக்கும் மணிகள் கண கண எனும் ஒலியை எழுப்ப இன்ன மதம் கை மதம் கோச மதம் முதலியவைகளைச் சொரிவன (ஞானக் களிறு)
......... சொற்பிரிவு .........
திருத்திய புனத்திடை வனத்தழை உடுத்து இனிது இருப்பவள் விருப்புறு வரைப்புயன்
......... பதவுரை .........
... உழுது சீர்படுத்தப்பட்ட தினைப்புனத்தினில் காட்டு மரங்களின் இலைகளை உடையாகக் கொண்டு (பெண் பார்க்கப் போகும் போது மாப்பிள்ளை புதுப் புடவை கொண்டு போவது போல் வள்ளி மலைக்கு தழைகளால் ஆன ஆடைகளைக் கொண்டு போகிறார் .. கொய்த தழையே செல்லும் மழவா) சுக வாழ்வு அனுபவித்த வள்ளி நாயகி விரும்புகின்ற மலை போன்ற தோள்களை உடையவன்,
......... சொற்பிரிவு .........
வினைப்பகை செகுப்பவன், நினைத்தவை முடித்தருள் க்ருபைக்கடல், சிவத்த கமலச் சரவணத்து அறுமுகப்பொருள்
......... பதவுரை .........
... நம் பகைவர்களாகிய வினைகளை ஜெயித்து அழிப்பவன், சினைத்த காரியங்களை அனுகூலமே புரிபவன், சரவணப் பொய்கையில் செந்தாமரைப் படுக்கையில் உதித்த சண்முகத் தெய்வம்
......... சொற்பிரிவு .........
செகத்ரய முகிழ்த்த உதரத் திரிபுரைக்கொரு திருப்புதல்வன்
......... பதவுரை .........
... மூவுலகங்களையும் ஈன்ற திருவயிறு உடைய பராசக்தியின் ஒப்பற்ற திருக்குமரன்,
......... சொற்பிரிவு .........
உற்பல கிரிப்பெயர் தரித்தருள் திருத்தணி மலைக்கிறை
......... பதவுரை .........
... நீலோற்பல மலை எனும் பெயரைத் தாங்கும் திருத்தணி மலைக்கு தலைவனாகிய முருகக் கடவுளின்,
......... சொற்பிரிவு .........
திருப்புகழ் படிப்பவர் சிறப்பொடு பெறத்தரு திருக்கையில் வழக்கமே.
......... பதவுரை .........
... திருப்புகழை ஓதுபவர்கள் விஷேசமாக அடைவது அப்பெருமானின் திருக்கையால் வழங்கப்படும் ப்ரசாதமே. |