மனம் வாக்கு காயம் செயல் அற்ற அநுபூதி நிலையில் விளங்கும் சிவஞானத்தை யானைக்கு ஒப்பிடுதல் இலக்கிய மரபு. கந்தர் கலிவெண்பாவில் .. சிவஞான கடக் களிறு .. என வருவதையும் தாயுமானவர் பாட்டில் .. என்னை மத்த கஜமாக்கி .. என வருவதையும் காணலாம். இந்த விசஞான களிறு ஆற்றும் அரிய செயல்கள் 18 என்பர். அவை:
1. உடற்சிறையை நீக்கி சுத்த வெளியான பாழில் நிலைக்கச் செய்யும்,
2. காதி மோதி வாதாடும் சமய வாதிகள் சிதறி ஓட விரட்டும்,
3. நெஞ்சக் கன கல்லை நெகிழவைத்து பேசா அநுபூதி பிறக்கச் செய்யும்,
4. மூவாசைகளும் ஆணவ அழுக்கும் தூளாகிப் போகும்,
5. பிறவிக் கடலில் இருந்து கரையேற்றும்,
6. போர் புரியும் அரிசெட் வர்க்கத்தை (காம குரோதாதிகளை) சிதற அடிக்கும்,
7. இருவினைச் சங்கிலியை அறுத்தெறியும்,
8. யோகப் பயிற்சியின் இடையில் நேரும் அசதியை விரட்டும்,
9. கவடு கோத்தெழு சம்சாரக் கவடுகளை களையும்,
10. இறைவனின் திருவருளில் பரிபூரணமாக திளைக்கச் செய்யும்,
11. சிற்றின்ப நாட்டத்தை ஒழிக்கும்,
12. மாயா உலகின் மருட்சியை வெல்லும்,
13. சினம் என்னும் தீயை அணைக்க பொருமை நதியைப் பெருக்கும், (கர மான் பட்டவா ஒளி சேர்ந்த பின்னே .. கந்தர் அந்தாதி)
14. லோபா மோகத்தை அழிக்கும்,
15. அகம் பாவம் என்னும் காட்டு மரத்தை வேரோடு பறித்து சாய்க்கும், (மதமான பேய் பிடியாமல் .. வள்ளலார்)
16. ராஜத, தாமச, சாத்வீக எனும் மும்மதில்களை இடித்து நிர்குண நிலையில் வைக்கும்,
17. பல மெய் ரகசியங்களை விளக்கும்,
18. திருத்தணி மலைக்கு இறையின் திருப்புகழ் பாடுபவர்களுக்கு அருளை வழங்கி மகிழும்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
சடலை பட்டலை உடல் எனப்படு தரும சித்திர கூட மானவை ...... 1
தவிர நிட்கள வெளியில் நிற்பன சமய தர்க்கவி ரோத வாதிகள் ...... 2
தகர எற்றுவ புகர்ம னக்கிரி தனைமு ருக்குவ, ஆசை ஆணவ ...... 3
தளைஇ யற்கையை விடந டிப்பன சனன முற்றிய சாத மாம்எழு ...... 4
கடல்க டப்பன, படுகொ லைச்சமர் கடகம் அப்படி சாய மோதுவ ...... 5
கருவி னைத்தரும் இருவினைத்தொடர் கழல்ப தத்தன, யோக சாதகர் ...... 6
களைப றிப்பன, கிளைஎ னப்படு கவலை சுற்றிய காடு சாடுவ, ...... 7
கருணை மெய்த்தவ திருவ ருட்கன கவள மொக்குவ, காம ராசனை ...... 8
அடல்கெ டுப்பன, அகில கற்பனை அரண் அழிப்பன, கோப மானவை ...... 9
அவிய நற்பொறை எனுந திப்பிர ளயம் இறைப்பன, லோப மோகிதம் ...... 10
அவைமு றிப்பன, மதமு ழுத்தறி யடிப றிப்பன, ராச தாதியின் ...... 11
அதிகு ணத்ரய மதில் இடிப்பன, அளவில் தத்துவ தூளி வீசுவ; ...... 12
திடமு டைச்சிறை மயில் உகைத்தெழு சிகரி குத்திய வேலை நீள்சுனை ...... 13
தினமும் உற்பல மலர்தி ருத்தணி இறைதி ருப்புகழ் பாடு நாவலர் ...... 14
திரள்ப்ரி யப்பட இனித ளிப்பன செயலொ ழித்தநு பூதி மீமிசை ...... 15
திகழும் அற்புத மவுன நிர்க்குண சிவம யத்திரு ஞான வேழமே. ...... 16
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
......... சொற்பிரிவு .........
சடலை பட்டு அலை உடல் எனப்படு தரும சித்திர கூடம் ஆனவை தவிர நிட்கள வெளியில் நிற்பன
......... பதவுரை .........
... பொய்யான வஞ்சனை சேர்ந்து ஸ்தூலத்தில் பருத்து துன்பப்படுகின்ற சரீரம் என்று கூறப்படுவதும், பூர்வ வினை எனும் விதியினால் ஏற்பட்ட பொய்யான வீட்டை நீங்குவதற்கு துணை நின்று, உருவ பேதம் அற்ற பர ஆகாசத்தில் (மயிலாடு சுத்த வெளியில்) விளங்கச் செய்வன (வெளியில் விளைந்த வெறும் பாழில் தான் விளங்கி அடியார்களையும் அங்கு அழைத்துச் செல்லும்) ... சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்.
(சித்திரம் இக்கனவு இல் வாழ்வு .. கந்தர் அந்தாதி
சித்திரம் = பொய்யான).
......... சொற்பிரிவு .........
சமய தர்க்க விரோத வாதிகள் தகர எற்றுவ
......... பதவுரை .........
... கொந்து கா என மொழியும் சமயவிரோத தந்திரவாதிகளை மோதி இதன் விளைவாக தள்ளுவன ... சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்.
......... சொற்பிரிவு .........
புகர் மனக்கிரி தனை முருக்குவ
......... பதவுரை .........
... குற்றம் நிறைந்த உள்ளமாகிய மலையை பொடிப்பொடி ஆக்குவன ... சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்.
......... சொற்பிரிவு .........
ஆசை ஆணவ தளை இயற்கையை விட நடிப்பன
......... பதவுரை .........
... மூவாசை அகங்காரம் ஆகிய இயல்பாகிய தளைகளான விலங்குகளை விலக்கவல்ல விளையாடல்களை புரியும்படி செய்வன ... சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்.
......... சொற்பிரிவு .........
சனன முற்றிய சாதமாம் எழு கடல் கடப்பன
......... பதவுரை .........
... பிறப்பு எனும் முடிவான எழுவகை தோற்றங்களும் ஏழு வகையான பிறவிக் கடலையும் கடக்க வைக்க வல்லன ... சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்.
......... சொற்பிரிவு .........
படுகொலைச் சமர் கடகம் அப்படி சாய மோதுவ
......... பதவுரை .........
... கொடிய கொலைகளை நிகழ்த்தி போர் புரியும் சேனைகளை அந்த நிமிடத்திலேயே குலைந்து அழியும்படி எதிர்த்து போரிட வல்லன ... சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்.
......... சொற்பிரிவு .........
கருவினைத் தரும் இரு வினைத் தொடர் கழல் பதத்தன
......... பதவுரை .........
... மீண்டும் கருக்குழியில் தள்ளுகின்ற தீவினைகள், நான் செய்கிறேன் என்ற நினைப்புடன் செய்யும் நல்வினை ஆகிய சங்கிலிகளை கழற்றி விடுதலை செய்ய வல்லன ... சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்.
......... சொற்பிரிவு .........
யோக சாதகர் களை பறிப்பன
......... பதவுரை .........
... யோக அப்பியாசம் செய்யும் மாணவர்களுக்கு நடு நடுவில் ஏற்படும் சோர்வையும் சோம்போரித்தனத்தையும் நீக்கி புத்துயிர் கொடுக்க வல்லன ... சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்.
......... சொற்பிரிவு .........
கிளை எனப்படு கவலை சுற்றிய காடு சாடுவ
......... பதவுரை .........
... நேருங்கிய உறவினர் போல வந்து சூழ்ந்திருக்கும் மனக்கவலையாகிய காட்டை அழிக்க வல்லன ... சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்.
......... சொற்பிரிவு .........
கருணை மெய்த் தவ திருஅருள் கன கவள மொக்குவ
......... பதவுரை .........
... கந்தனின் கிருபையால் கிடைக்கும் உண்மைத் தவத்தின் பயனாய் கிட்டும் தேவானுக்கிரகம் எனும் திரண்ட மெய் உணவு உருண்டையை வாரி முழுங்குவன ... சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்.
......... சொற்பிரிவு .........
காம ராசனை அடல் கெடுப்பன
......... பதவுரை .........
... சிற்றின்ப ஆசையின் வல்லமையை அழிப்பன ... சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்.
......... சொற்பிரிவு .........
அகில கற்பனை அரண் அழிப்பன
......... பதவுரை .........
... பல விதமான மாய கோட்டைகளின் வல்லமையைத் தகர்க்க வல்லன ... சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்.
......... சொற்பிரிவு .........
கோபம் ஆனவை அவிய நற் பொறை எனு நதிப் பிரளயம் இறைப்பன
......... பதவுரை .........
... ஆத்திரம் கொண்ட செய்கைகள் நசியும்படி சிறந்த பொறுமை எனும் ஆற்றின் வெள்ளத்தை வாரி வீசி கொடுப்பன ... சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்.
......... சொற்பிரிவு .........
லோப மோகிதம் அவை முறிப்பன
......... பதவுரை .........
... ஈயாத கஞ்சத் தன்மை, காம மயக்கம் ஆகிவைகளை ஒழித்து எறிவன ... சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்.
......... சொற்பிரிவு .........
மதமுழுத் தறி அடி பறிப்பன
......... பதவுரை .........
... அகம் பாவம் எனும் தூணின் மூலத்தையே பறித்து எறிவன ... சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்.
......... சொற்பிரிவு .........
ராச தாதியின் அதி குணத்ரய மதில் இடிப்பன
......... பதவுரை .........
... மேல் எழும் முக்குணங்களின் கோட்டைச் சுவர்களை இடித்து நிற்குண நிலைகளைக் கொடுப்பன ... சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்.
......... சொற்பிரிவு .........
அளவு இல் தத்துவ தூளி வீசுவ
......... பதவுரை .........
... அளவிடுவதற்கு அரிய உண்மைப் பொருளாகிய மலரின் பூந்தாதுகளை வீசி எறிவன ... சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்.
......... சொற்பிரிவு .........
திடம் உடைச் சிறை மயில் உகைத்து
......... பதவுரை .........
... வலிமை மிக்க சிறகைக் கொண்ட மயிலை வாகனமாகச் செலுத்தி,
......... சொற்பிரிவு .........
எழு சிகரி குத்திய வேல் ஐ
......... பதவுரை .........
... சூரபத்மனுக்குக் காவலாக இருந்த ஏழு மலைகளையும் தாக்கி அழித்த வேல் கடவுள்
......... சொற்பிரிவு .........
நீள்சுனை தினமும் உற்பல மலர்தி ருத்தணி இறை
......... பதவுரை .........
... பெரிய தடாகத்தில் அனுதினமும் நீலோற்பலம் பூக்கின்ற தணிகாசலனின்
......... சொற்பிரிவு .........
திருப்புகழ் பாடு நாவலர் திரள் ப்ரி யப்பட இனிது அளிப்பன
......... பதவுரை .........
... திருப்புகழைப் பாடுகின்ற புலவர்களின் கூட்டம் இன்புறும்படி அனைத்துப் பொருள்களையும் தருவன ... சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்.
......... சொற்பிரிவு .........
செயல் ஒழித்த அநுபூதி மீமிசை திகழும் அற்புத மவுன நிர்க்குண சிவமயத் திரு ஞான வேழமே.
......... பதவுரை .........
... மனம் வாக்கு காயத்தின் சலனங்களை நீக்கி சுவாநுபூதி நிலையின் சிகரமாக விளங்கும் அற்புதமான மெளன நிலையாகிய முக்குணங்களைக் கடந்த சொரூபமான சிவ மயமாய்த் திகழுகின்ற மங்களகரமான ஞானம் எனும் களிற்றின் ஆற்றல்களே. |