திருமுருகாற்றுப்படை 1 - திருப்பரங்குன்றம்
" உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு - - - - - - 1
பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு
ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி ... " - - - - - - 3
தெளிவுரை:
"உலகத்தில் வாழும் உயிர்கள் அனைத்தும் மகிழுமாறு உதித்தெழுந்து [மகாமேரு மலையை] வலம் வருவதும், பலராலும் புகழப்படுவதுமான ஞாயிறு [கதிரவன்], கிழக்குக்கடலில் தோன்றுவதைப்போன்று, தம் கண்களின் பார்வையை வேறு எந்தப் பொருள் மீதும் செலுத்தாமல் கண் இதழ்களைக் குவித்து மூடியவாறு இறையருளில் மூழ்கியுள்ள பக்தர்களின் உள்ளத்தில் விளங்குவதும், தம் புறக்கண்களால் நோக்கும் பக்தர்களுக்குத் தொலைவில் நின்று விளங்குவதுமான இயற்கைப் பேரொளி வடிவினன் திருமுருகப்பெருமான்."
விளக்கவுரை:
இரவின் இருளில் மூழ்கிக்கிடக்கும் உயிர்கள், ஞாயிற்றின் தோற்றத்தால் விழிப்பு நிலை பெற்று வினையாற்றத் தொடங்குவது போல, திருமுருகப் பெருமானின் திருவருளைப் பெறும் உயிர்கள் ஆணவ இருள் நீங்கப் பெற்று, அப்பெருமானின் திருவடிகள் நல்கும் ஒளி பொருந்திய முக்திப் பேற்றினை அடைந்து மகிழும்.
திருமுருகப்பெருமான், 'தனக்கு உவமை இல்லாதான்' ஆயினும், பக்தர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளவேண்டியே, இறைவனின் சிறப்பான வடிவங்களில் ஒன்றாகிய கதிரவனைத் திருமுருகப்பெருமானுக்கு உவமையாகக் கூறியுள்ளார் புலவர் பெருமான் நக்கீரர்; மேலும், கதிரவனின் செங்கதிரை ஒத்த செந்நிறத் திருமேனியை உடையவனாதலால் 'சேயோன்' என்னும் திருப்பெயரால் திருமுருகப்பெருமான் அழைக்கப்பெறுதலும் நோக்கற்பாலது [மாணிக்கனார் 1999:90-91].
கதிரவன் புற இருளை அகற்றுவதைப் போல, திருமுருகப்பெருமான் தன்னை மனத்தால் கண்டு சிந்திப்பவர்களின் ஆணவமாகிய அக இருளைப் போக்கி அருள் புரிதலால் மேற்கூறிய உவமம் தொழில் -உவமமாக விளங்குகின்றது. மேலும், திருமுருகப்பெருமானைக் கண்குளிரக் காணும் பக்தர்களுக்குக் [கடலின் பசுமையும் ஞாயிற்றின் செம்மையும் போல்] மயிலின் பசுமையும் திருமுருகப்பெருமானின் திருமேனிச் செம்மையும் தோன்றலின் அவ்வுவமையை வண்ண- உவமமாகவும் கொள்ளலாம் என்பது உரையாசிரியர் நச்சினார்க்கினியரின் கருத்தாகும் [மாணிக்கனார் 1999:90].
உததி இடை கடவும் மரகத அருண குல துரக உப லளித கனக ரத சதகோடி சூரியர்கள் உதயம் என அதிக வித கலப கக மயிலின் மிசை யுக முடிவில் இருள் அகல ஒரு சோதி வீசுவதும் ... ... மதலை மலைகிழவன் ... ... சீறடியே
என்று திரு அருணகிரி சுவாமிகள் தாம் அருளிச்செய்த [திருவகுப்பு என்னும் நூலில் அடங்கிய] சீர்பாத வகுப்பின் முதலாவது பாடலில் கூறியுள்ளதும் இங்கு நினைவுகூரத்தக்கது. சீர்பாத வகுப்பு
அரும்பத அகராதி:
உலகம் = உலகத்தில் வாழும் உயிர்கள்; உவப்ப = மகிழ; வலன் ஏர்பு = வலப்பக்கமாக எழுந்து; கடல் கண்டாங்கு = [கிழக்குக்] கடலில் தோன்றியதைப் போல; ஞாயிறு = கதிரவன்; ஓ அற இமைக்கும் = இரு கண்களின் பார்வையும் செல்லுவதற்குரிய பொருள்மேல் செல்லாமல் கண்களின் இதழ்கள் இரண்டையும் குவிக்கும்; சேண்விளங்கு அவிர் ஒளி = தூரத்தில் விளங்கும் பேரொளி.
- - - - - - - - - " உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்தாள் - - - - - - 4
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை
மறு இல் கற்பின் வாள்நுதல் கணவன் ... " - - - - - - 6
தெளிவுரை:
"தம்மைச் சார்ந்தவர்களை/அடியார்களை/பக்தர்களைத் தாங்கிக் காத்தருளும் அழகும் வலிமையும் பொருந்திய திருவடிகளையும், பகைவர்களை அழிக்கின்ற, இடியை ஒத்த, பெருமை சார்ந்த திருக்கரங்களையும் உடைய திருமுருகப்பெருமான், குற்றமற்ற கற்பினையும் ஒளி பொருந்திய நெற்றியினையும் உடைய தெய்வயானை -அம்மையாரின் கணவன் ஆவார்."
விளக்கவுரை:
(அ)
திருமுருகப்பெருமானின் திருவடிகளே முக்திப்பேறாக விளங்குவதால், அப் பெரும் பேற்றினை அருளும் திருவடிகள் 'உறுநர்த் தாங்கிய, அழகிய வலிமை பொருந்திய தாள்' என போற்றப்பெறுகின்றன [மாணிக்கனார் 1999: 92].
(ஆ)
உலகத்து உயிர்கள் அனைத்தும் ஆணும் பெண்ணுமாய் வாழ்வதைக் குறிக்கும் பொருட்டே இறைவன் திருமுருகப்பெருமான், 'மறு இல் கற்பினையும், ஒளிபொருந்திய நெற்றியினையும் உடைய தெய்வயானை -அம்மையாரின் கணவன்' என்று போற்றப்படுகின்றார் [மாணிக்கனார் 1999: 93].
அரும்பத அகராதி:
உறுநர் = சார்ந்தவர்கள், அடியார்கள், பக்தர்கள்; மதன் = அழகு; நோன் = வலிமை; தாள் = பாதம்/திருவடிகள்; செறுநர் = பகைவர்; செல் = இடி; உறழ் = போன்ற; தடக்கை = பெரிய, அல்லது பெருமை பொருந்திய கை; வாள்நுதல் = ஒளி பொருந்திய நெற்றியையுடைய தெய்வயானை -அம்மையார்.
- - - - - - - - - " கார்கோள் முகந்த கமம் சூல் மாமழை - - - - - - 7
வாள்போழ் விசும்பில் வள்உறை சிதறி
தலைப்பெயல் தலைஇய தண்நறுங் கானத்து
இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து
உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன் ... " - - - - - - 11
தெளிவுரை:
"கடல்நீரை முகந்த காரணத்தால் நிறைவான கருவுற்ற 'கார்' எனப்படும் கரிய நிறமான மேகமானது, [ஞாயிறும் திங்களும் இருளைப் போக்குவதால் ஏற்படும்] ஒளி பொருந்திய ஆகாயத்திலிருந்து மாபெரும் மழைத்துளிகளைப் பொழியவும், 'கார்காலம்' எனப்படும் மழைப் பருவத்தின் தொடக்கத்தில் [தழை மிகுதியால்] குளிர்ச்சியும் [மலர் மிகுதியால்] நறுமணமும் பொருந்திய காடுகளில் பெய்யும் அந்த 'முதல் மழை'யின் பயனாக இருள் போன்று அடர்த்தியாகத் தழைத்த, பருமனான அடிப்பாகத்தையுடைய செங்கடம்பு மரங்களில் மலர்ந்த, தேர்ச் சக்கரத்தைப் போன்ற வட்ட வடிவுடைய குளிர்ச்சி பொருந்திய [சிவப்பு நிற] மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை புரளுகின்ற திருமார்பினன் திருமுருகப்பெருமான்."
அரும்பத அகராதி:
கார் = கரிய நிறமுடைய மழை-மேகம்; கார்கோள் = [மழை பெய்வதற்கென்று மேகத்தால் முகந்து] கொள்ளப்படும் கடல் நீர்; கமம் = நிறைவு; சூல் = கரு; மழை பெய்வதற்குரிய மேகத்தை 'சூல் முகில்' என்று புலவர்கள் அழைப்பர்; வாள் = ஒளி; போழ் = பிளக்கும், போக்கும்; வள் உறை = பெரிய, அல்லது பெருமை பொருந்திய மழைத் துளி; பொதுளிய = தழைத்த; பராரை = பருமனான அடிப்பாகம்; மராஅத்து = செங்கடம்பு மரம் [Eugenia racemosa]; 'கார்க்கடம்பு' என அழைக்கப்படும் இம் மரம் [கொன்றை மரத்தைப் போன்று] கார்காலத்தில் மலரும் இயல்புடையது; செங்கடம்பு மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை திருமுருகப்பெருமானுக்குரிய மாலை; அதனால்தான் திருமுருகப்பெருமானின் மற்றொரு திருப்பெயர் 'கடம்பன்' என்பதாகும் [மாணிக்கனார் 1999: 94-96].
- - - - - - - - - " மால்வரை நிவந்த சேண்உயர் வெற்பில் - - - - - - 12
கிண்கிணி கவைஅய ஒண்செஞ் சீறடி
கணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்
கோபத்து அன்ன தோயாப் பூந்துகில் - - - - - - 15
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்
கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிர்இழை
சேண்இகந்து விளங்கும் செயிர்தீர் மேனி ... " - - - - - - 19
தெளிவுரை:
"பெரிய மூங்கில் வளர்ந்துள்ள மிக உயரமான மலையில், 'கிண்-கிண்' என்று ஒலி எழுப்பும் சதங்கைகளைக் கணுக்காலில் அணிகலனாக அணிந்தவர்களாகவும், செம்மையான சிவந்த சிறு பாதங்களையும், உறுதியான திரண்ட கால்களையும், நுட்பமாக வளைந்துள்ள இடையினையும், மூங்கிலையொத்த தோள்களையும் உடையவர்களாகவும், [செயற்கையான சிவப்பு நிறக் குழம்பில்] தோய்க்கப்படவில்லையாயினும் 'இந்திர-கோபம்' எனப்படும் ஒருவகை சிவப்பு நிறப் பூச்சியின் நிறத்தை ஒத்த செந்நிறப் பூக்கள் போன்ற வடிவங்களையுடைய ஆடைகளை அணிந்தவர்களாகவும், பல்வேறு வகை மணிகளை ஏழு வடங்களாக [சரங்களாகக்] கோர்க்கப்பட்ட 'மேகலை' என்னும் அணிகலனை அணிந்த இடையினையும், இயற்கை அழகினையும் உடையவர்களாகவும், 'சாம்பூநதம்' அல்லது 'நாவல்' எனப்படும் ஒருவகை உயர்தரப் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தவர்களாகவும், நெடுந் தூரத்திலிருந்து பார்க்கும்போதும் ஒளி பொருந்திய குற்றமற்ற மேனியழகுடன் தோற்றம் அளிப்பவர்களாகவும் ..."
அரும்பத அகராதி:
மால் = பெரிய; வரை = மூங்கில்; நிவந்த = உயரமாக வளர்ந்துள்ள; சேண் = தூரம்; வெற்பு = மலை; கிண்-கிணி = கணுக்காலில் அணியப்பெறும் ஒருவகை அணிகலனாகிய சதங்கை; கவைஇய = பொருந்திய; ஒண்செஞ் சீறடி = ஒளியுடைய சிவந்த சிறிய பாதம்; கணைக்கால் = உறுதியான திரண்ட கால்; வாங்கிய நுசும்பு = வளைந்த இடை; பணைத்தோள் = மூங்கில் போன்ற தோள்; கோபம் = 'இந்திர-கோபம்' எனப்படும் செந்நிறப் பூச்சி; பூந்துகில் = பூக்களைப் போன்ற வடிவங்கள் பொறிக்கப்பெற்ற ஆடை; பல்காசு = பலவகை மணிகள்; சில்காழ் = சில வடம் [சரம்]; அல்குல் = இடை, அடிவயிற்றுப் பாகம்; கவின் = அழகு; நாவல் = 'சாம்பூநதம்' எனப்படும் ஒருவகை தரம் வாய்ந்த பொன்; பொலம் = பொன்; அவிர் = ஒளி; இழை = அணிகலன்; செயிர்தீர் = குற்றமற்ற.
- - - - - - - - - " துணையோர் ஆய்ந்த இணைஈர் ஓதிச் - - - - - - 20
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடைஇடுபு
பைந்தாள் குவளைத் தூஇதழ் கிள்ளி
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்து
திலகம் தைஇய தேம்கமழ் திருநுதல்
மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்து - - - - - - 25
துவர் முடித்த துகள்அறும் உச்சிப்
பெருந்தண் சண்பகம் செரீஇ கருந்தகட்டு
உளைப்பூ மருதின் ஒள்இணர் அட்டி
கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல் வளைஇ ... " - - - - - - 30
தெளிவுரை:
" 'நல்ல நெய்ப்புடைய கூந்தல்' என்று தோழியர் புகழ்ந்துரைத்த கூந்தலில் சிவந்த காம்பினை உடைய சிறிய வெட்சிப் பூக்களை நடுவே இடு பூக்களாக இட்டு, பசுமையான குவளை மலர்களின் இதழ்களையும் கிள்ளி அந்தக் கூந்தலில் இட்டு, 'சீதேவி', 'வலம்புரி' எனப்படும் தலைக் கோலங்களை வைப்பதற்குரிய இடத்தில் வைத்து, திலகமிட்ட நறுமணம் பொருந்திய அழகிய நெற்றியில் மகர (சுறா) மீனின் திறந்த வாயினைப் போன்ற வடிவில் அமைந்த தலைக் கோலத்தையும் வைத்து, முற்றமுடித்த குற்றமற்ற கொண்டையில் பெரிய குளிர்ந்த சண்பகப் பூவையும் செருகி, கரிய புற இதழையும் உள்ளே துளையையும் உடைய மருதின் ஒள்ளிய பூங்கொத்துக்களை அதன் மீது இட்டு, கிளையிலிருந்து தோன்றி நீரின் கீழ் அழகாய் விளங்கும் சிவந்த அரும்புகளால் கட்டப்பட்ட மாலையை அந்தக் கொண்டையில் வளைய வைத்து ..."
அரும்பத அகராதி:
துணையோர் = தோழியர்; இணை = கூந்தலின் இறுதிப்பாகம் ஒத்திருத்தல்; ஈர்ஓதி = நெய்ப்புடைய கூந்தல்; செங்கால் வெட்சி = சிவந்த காம்பினை உடைய வெட்சி மலர்; சீறிதழ் = சிறிய இதழ்; இடுபு = இட்டு; தெய்வ உத்தி = 'சீதேவி', 'வலம்புரி' எனப்படும் ஒருவகை தலைக் கோலம்; வயின் வைத்து = வைத்தற்குரிய இடத்தில் வைத்து; திலகம் = நெற்றிப்பொட்டு; தைஇய = இடப்பட்ட; தேம்கமழ் = நறுமணம் உடைய; மகரப்பகுவாய் = 'மகர' (சுறா) மீனின் திறந்த வாயைப் போன்ற வடிவில் அமைந்த ஒருவகைத் தலைக் கோலம்; தாழ மண்ணுறுத்து = நெற்றியில் தங்குமாறு அலங்கரித்து; துவர முடித்த = முற்றமுடித்த; துகள் அறும் உச்சி = குற்றமற்ற கொண்டை; கீழ்நீர்ச் செவ்வரும்பு = நீரின் கீழ் அமிழ்ந்திருந்த சிவந்த அரும்பு; செரீஇ = செருகி; கருந்தகட்டு உள் ஐ பூ = கரிய புற இதழையும் உள்ளே துளையையும் உடைய; இணைப்புறு பிணையல் = கட்டப்பட்ட மாலை; வளைஇ = வளைய வைத்து.
- - - - - - - - - " ... ... ... துணைத்தக
வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர் - - - - - - 31
நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ்
நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேம்கமழ் மருது இணர்கடுப்பக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் - - - - - - 35
வேங்கை நுண்தாது அப்பிக் காண்வர
வெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெரியா
கோழி ஓங்கிய வென்றுஅடு விறல்கொடி
வாழிய பெரிது என்று ஏத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி
சூரர மகளிர் ஆடும் சோலை ... " - - - - - - 41
தெளிவுரை:
"ஒன்றிற்கொன்று இணையான வளம் பொருந்திய இரு காதுகளின் பின்புறத்தில் இட்டுச்செருகி தொங்கவிட்டிருந்த அசோக மரத்தின் ஒளியுடைய தளிர்கள் நுட்பமான பூணினை அணிந்த மார்பின் மீது அசைய, திண்மையான வயிரத்தை உடைய சந்தனக் கட்டையை தேய்த்துப்பெற்ற நறுமணம் பொருந்திய சந்தனக் குழம்பினை, மருதமரத்தின் [மஞ்சள் நிறப்] பூவினை அப்பியது போன்று, கோங்கினது அரும்பினையொத்த இளமுலையில் அப்பி, அச்சந்தனக் குழம்பின் ஈரம் புலர்வதற்கு முன்பே விரிந்த வேங்கை மலரின் நுண்ணிய மகரந்தத் தாதினையும் அப்பி, அதன்மேல் விளாமரத்தின் சிறிய தளிர்களைக் கிள்ளித்தெறித்த கோலமுடைய மகளிர், 'கோழியின் உருவம் வரையப்பட்ட வெற்றிக் கொடி நீண்ட காலம் வாழ்வதாக' என்று வாழ்த்தி, மலைகள்தோறும் எதிர் ஒலி உண்டாகும்படி 'சூரர மகளிர்' எனப்படும் மகளிர் பலரும் ஒருங்கே கூடிப்பாடி ஆடுகின்ற சோலை ..."
விளக்கவுரை:
(அ)
'சூரர மகளிர்': வானளாவிய மலைகளில் வாழ்ந்த பேரழகுடைய மகளிர், தம்மைச் தற்செயலாகக் காண்பவர்பால் வியப்பினையும் அச்சத்தினையும் விளைவிக்கும் 'அணங்குகள்' போன்றவர்கள் என்னும் பொருள்பட அவர்கள் 'சூரர மகளிர்' என அழைக்கப்பட்டனர் என்று தெரிகின்றது; அதோடு, 'சூரர மகளிர்' எனப்படுவோர் 'அச்சம் ('சூர்') தரும், கொடிய ('அர') தெய்வ மங்கையர், அல்லது வானுலக மகளிர்' என்னும் கருத்தும் உள்ளது [மாணிக்கனார் 1999: 106; சுப்பிரமணியன் 2002: 37].
(ஆ)
'கோழிக்கொடி', திருமுருகப்பெருமானின் கொடியாகும் [மாணிக்கனார் 1999: 105].
அரும்பத அகராதி:
'துணைத்தக = ஒன்றிற்கொன்று இணையாக; வண் காது = வளம் பொருந்திய செவிகள்; பிண்டி = அசோகம்; ஆகம் = மார்பு; காழ் = வயிரம்; நறும் = நறுமணம் உடைய; குறடு = [சந்தனக்] கட்டை; உரிஞ்சிய = உரைத்த (தேய்த்த); பூங்கேழ்த் தேய்வை = பொலிவுடைய நிறம் பொருந்திய, தேய்த்து எடுத்த, சந்தனக் குழம்பு; கோங்கு = கோங்கு மரம்; வேங்கை = வேங்கை மரம்; தாது = மகரந்தம்; காண் = அழகு; வெள்ளிள் = விளா மரம்; குறுமுறி = சிறிய தளிர்; கிள்ளுபு = கிள்ளி; தெறியா = தெறித்து; சிலம்பு = மலை; சிலம்ப = எதிர் ஒலிக்க.
- - - - - - - - - " மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்து - - - - - - 42
சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் ... " - - - - - - 44
தெளிவுரை:
"மரம் ஏறுவதில் வல்ல குரங்குகளும் ஏறுவதற்கு அறியாத வகையில் மிக உயரமாக வளர்ந்து நிற்கும் மரங்களையுடைய மலைப் பக்கத்தில் வண்டுகளும் மொய்க்க இயலாத அதிக உயரத்தில் மலர்ந்த, தீயைப் போன்ற நிறமுடைய செங்காந்தள் மலர்களால் ஆகிய குளிர்ச்சி பொருந்திய பெரிய மாலையைத் தலையில் சூடும் கண்ணியாக அணிந்த திருமுடியை உடையவன் திருமுருகப்பெருமான் ..."
விளக்கவுரை:
திருமுருகப்பெருமானின் கோழிக்கொடியைச் 'சூரர மகளிர்' வாழ்த்திப்பாடி ஆடுகின்ற சோலையை உடைய மிக உயரமான மலைப் பக்கத்தில் மலர்ந்த செங்காந்தள் மலர்களால் ஆகிய கண்ணியைச் சூடிய சென்னியன் திருமுருகப்பெருமான்; திருமுருகப்பெருமானின் அடையாளப் பூ செங்காந்தள் மலர் [Gloriosa superba].
அரும்பத அகராதி:
மந்தி = குரங்கு; அடுக்கம் = பக்க மலை; சுரும்பு = வண்டு; மூசா = மொய்க்காத; சுடர்ப்பூங் காந்தள் = தீயைப் போன்ற நிறமுடைய செங்காந்தள் மலர்; தண்கண்ணி = குளிர்ச்சி பொருந்திய [தலைமுடியைச் சுற்றி அணியும்] 'கண்ணி' எனப்படும் ஒருவகை மாலை; சென்னியன் = திருமுடியை உடைய திருமுருகப்பெருமான்.
- - - - - - - - - " பார்முதிர் பனிக்கடல் கலங்க உள்புக்கு - - - - - - 45
சூர்முதல் தடிந்த சுடர்இலை நெடுவேல் ... " - - - - - - 46
தெளிவுரை:
"பாறைகளை உடைய, முற்றும் பனியாக உறைந்திருந்த கடலின் உள்ளே புகுந்து, [அக்கடலின் உள்ளே மாமரமாய் ஒளிந்து நின்ற] அசுரர்களின் தலைவனாகிய சூரபன்மனைக் கொன்ற, இலையைப் போன்ற ஒளி பொருந்திய தலைப் பாகத்தை உடைய [திருமுருகப்பெருமானின்] நீண்ட வேல் ..."
அரும்பத அகராதி:
பார் = பாறை; பனிக்கடல் = பனி போல உறைந்து குளிர்ந்த கடல்; சூர்முதல் = அசுரர்களின் தலைவன் [சூரபன்மன்]; தடிந்த = பிளந்த, பிளந்து கொன்ற; சுடர் = ஒளி; நெடுவேல் = நீண்ட வேல்.
- - - - - - - - - " உலறிய கதுப்பின் பிறழ்பல் பேழ்வாய் - - - - - - 47
சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்
கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட்டு - - - - - - 50
உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதிஆடிய கூர்உகிர்க் கொடு விரல்
கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்று அடு விறல்களம் பாடித் தோள்பெயரா
நிணம்தின் வாயள் துணங்கை தூங்க ... " - - - - - - 56
தெளிவுரை:
"[எண்ணெய்ப் பசையின்றி] உலர்ந்த பரட்டைத் தலைமுடியினையும் வரிசையற்ற பற்களையும் பிளந்த பெரிய வாயினையும், பிறரை அச்சுறுத்தும் வகையில் சுழலும் பச்சை நிறக் கண்களையும் மார்பின் மீது வீழ்ந்து வருத்துகின்ற தொங்கும் பாம்பினைக் கயிறாகவும் பெரிய ஆந்தையைக் குண்டலமாகவும் கொண்ட காதணிகளை அணிந்த காதுகளையும், சொரசொரப்பான வயிற்றினையும், காண்பவர்கள் அஞ்சும்படியான நடையையும் உடைய பேய்மகள், போர்க்களத்தில் வீழ்ந்து மாண்ட அசுரரின் தலையைக் கிள்ளி எடுத்து அதன் கண்ணைத் தோண்டித் தின்ற பின் நாற்றமுடைய அத்தலையைத் தன் பெரிய கைகளில் ஏந்தியவாறு பிறருக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் நடந்து சென்று, [திருமுருகப்பெருமான் போர்க்களத்தில் அசுரரை வீழ்த்தி அடைந்த] வெற்றியைப் புகழ்ந்து பாடி, தன் தோளை அசைத்தவாறு அசுரர்களின் நிணத்தைத் தின்ற வாயுடன் துணங்கைக் கூத்து ஆட ..."
விளக்கவுரை:
அசுரர்கள் போன்ற தீயவர்களுக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் அமைவது பேய்மகளின் துணங்கைக் கூத்து [மாணிக்கனார் 1999: 109-110].
அரும்பத அகராதி:
உலறிய கதுப்பு = நெய்ப்பு இன்றி உலர்ந்த தலைமுடி; பிறழ்பல் = வரிசையாய் அமைந்திராத பற்கள்; பேழ் வாய் = பிளந்த, அல்லது பெரிய வாய்; சூர்த்த நோக்கின் = அச்சம் தரும், அல்லது கொடிய பார்வையுடன்; கழல்கண் கூகையொடு = வெளியே பிதுங்கும் கண்களையுடைய பெரிய ஆந்தை; பெருமுலை அலைக்கும் காதின் = பெரிய முலையை வருத்தும் காதணியாகிய [பாம்பு]; பிணர் = சொரசொரப்பான; மோடு = வயிறு; செலவு = நடை; குருதி ஆடிய = இரத்தத்தைக் கலக்கிய; கொடுஉகிர் = வளைந்த நகம்; தொட்டு = தோண்டி; கழிமுடை = நாற்றம் உடைய; வெருவர = அச்சம் தோன்ற; அடுவிறல் = போரில் பெறும் வெற்றி; நிணம் = கொழுப்பு; துணங்கை = [போர்க்களத்தில்] முடக்கிய இரு கைகளையும் விலாப் புடைகளில் ஒற்றி அடித்துக்கொண்டு தோளை உயர்த்தி அசைந்து ஆடும் ஒருவகைக் கூத்து; தூங்க = ஆட.
- - - - - - - - - " இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை - - - - - - 57
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர்
மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்து
எய்யா நல்இசை செவ்வேல் சேஎய் ... " - - - - - - 61
தெளிவுரை:
"'விலங்காகிய குதிரையின் தலையோடு கூடிய பெரியதொரு மனித உடல்' போன்ற உருவம் எடுத்து கடலிற் புகுந்து கீழ் நோக்கி மலர்ந்துள்ள மலர்க் கொத்துக்களையுடைய ஒரு மாமரம் போல் நின்ற அசுரர்களின் தலைவனாகிய சூரபன்மனை, அறுவகை வடிவங்களெடுத்து அச்சுறுத்தி அசுரர்களின் ஆற்றலை அடக்கி [மாமரமாய் நின்ற] சூரபன்மனை இரண்டாகப் பிளந்து கொன்ற குற்றமில்லாத வெற்றியையும் நல்ல புகழையும் சிவந்த வேலினையும் திருமேனியினையும் உடைய திருமுருகப்பெருமான் ..."
அரும்பத அகராதி:
இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை = குதிரை முகத்தோடு கூடிய பெரியதொரு மனித உடல்; அஞ்சுவர = அச்சம்தோன்ற; அவுணர் = அசுரர்; கவிழ் இணர் = கீழ்நோக்கி மலர்ந்திருக்கும் மலர்க் கொத்து; மாமுதல் தடிந்த = மாமரத்தின் அடியை வெட்டி வீழ்த்திய; மறு இல் = குற்றம் இல்லாத; கொற்றம் = வெற்றி; எய்யா நல்லிசை = எவராலும் அளந்தறிய இயலாத நற்புகழ்; சேஎய் = சிவந்த திருமேனியினையுடைய திருமுருகப்பெருமான்.
- - - - - - - - - " சேவடி படரும் செம்மல் உள்ளமொடு - - - - - - 62
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும்
செலவுநீ நயந்தனை ஆயின் பலஉடன்
நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப
இன்னே பெறுதி நீமுன்னிய வினையே ... " - - - - - - 66
தெளிவுரை:
"திருமுருகப்பெருமானின் சிவந்த திருவடிகளை அடைவதற்குரிய செம்மையான உள்ளத்துடனும் பிறருக்கு நன்மைகளையே செய்யும் கொள்கையுடனும் [மெய்ப் பொருளை உணர்ந்து] ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல விரும்புவாயானால் நீ கருதிய வினையின் பயனை இப்போதே பெறுவாய் ..."
அரும்பத அகராதி:
சேவடி = [முக்தியைத் தரவல்ல திருமுருகப்பெருமானின்] சிவந்த திருவடிகள்; செம்மல் உள்ளம் = [முக்தியைப் பெறுவதற்குரிய] செம்மையான உள்ளம்; நலம்புரிக்கொள்கை = அனைவருக்கும் நன்மைகளைச் செய்ய விரும்பும் கொள்கை; புலம் பெயர்ந்து உறையும் = ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சென்று தங்கும்; நன்னர் நெஞ்சத்து = நல்ல உள்ளத்தின்; இன் நசை வாய்ப்ப = இனிய [முக்திப் பேற்றினைப் பெறும்] விருப்பம் நிறைவேறுமாறு; இன்னே பெறுதி = இப்பொழுதே பெறுவாய்; நீ முன்னிய வினையே = நீ கருதிய செயலின் பயனை.
- - - - - - - - - " செருப் புகன்றுஎடுத்த சேண்உயர் நெடுங்கொடி - - - - - - 67
வரிப்புனை பந்தொடு பாவை தூங்க
பொருநர்த் தேய்த்த போர் அருவாயில்
திருவீற்றிருந்த தீதுதீர் நியமத்து - - - - - - 70
மாடம் மலிமறுகின் கூடல் குடவயின்
இருஞ்சேற்று அகல்வயல்விரிந்து வாய்அவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள்கமழ் நெய்தல் ஊதி எல்படக்
கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர் - - - - - - 75
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்று அமர்ந்து உறைதலும் உரியன், அதான்று ... " - - - - - - 77
தெளிவுரை:
"[மதுரை மாநகரின்] நுழை வாயிலில், போரை விரும்பி மிக உயரமான நெடிய கொடிகளின் அருகில் வரிந்து கட்டப்பட்ட பந்தும் பாவையும் [அவற்றை அறுத்துப் போரிட முன்வருவோர் யாரும் இல்லாமையால்] தொங்கிய வண்ணம் உள்ளன; அம் மாநகரின் கடை வீதிகளில் திருமகளே வீற்றிருப்பது போல செல்வம் கொழிக்கின்றது; மாளிகைகள் அமைந்திருக்கும் வீதிகளும் அங்கு உள்ளன. அந் நகரின் மேற்குத் திசையில் அமைந்திருக்கும் அகன்ற நெல் வயல்களில் முட்கள் பொருந்திய தண்டுகளை உடைய தாமரை மலர்கள் மீது வண்டுகள் இரவில் உறங்கிய பின்னர் வைகறையில் தேன் மணம் கமழும் நெய்தல் மலர் மீது மொய்த்து ஊதி, கதிரவன் தோன்றிய பின்னர் மலையின் சுனைகளில் கண்களைப் போல் பூத்துள்ள விருப்பம் தரும் மலர்களின் அருகே சென்று ரீங்காரமிடும் அழகிய இடமாகிய திருப்பரங்குன்றத்தின் மீது திருமுருகப்பெருமான் மனம் விரும்பி அமர்ந்துள்ளார், அதுமட்டுமன்று ..."
அரும்பத அகராதி:
செரு புகன்று = போரினை விரும்பி; சேண் உயர் நெடுங்கொடி = மிக உயரமான கம்பத்தின் மீது பறந்துகொண்டிருக்கும் நீண்ட கொடிகள்; வரிப்புணை பந்தொடு = வரிந்து கட்டப்பட்டுள்ள பந்தோடு; பாவை = பொம்மை; தூங்க = தொங்கிய வண்ணமிருக்க; பொருநர் தேய்த்த = போரிடுவோர் இல்லாதவாறு செய்த; போர் அருவாயில் = போரிடும் வாய்ப்பு இல்லாத வாயில்; திருமகள் வீற்றிருந்த = அளவற்ற செல்வம் கொழிக்குமாறு திருமகள் கம்பீரமாக வீற்றிருந்த; தீது தீர் = குற்றம் நீங்கிய; நியமம் = கடைவீதிகள்; மாடம் மலி மறுகு = மாளிகைகளையுடைய வீதிகள்; கூடல் = மதுரை மாநகர்; குடவாயின் = மேற்குத் திசையில்; இருஞ்சேறு = கரிய சேறு; அகல் வயல் = அகலமான நெல் வயல்; வாய் அவிழ்ந்த = தாதும் இதழும் தோன்றுமாறு கட்டவிழ்ந்து மலர்ந்த; இரு = மிக்க; முள்தாள் தாமரை = முள் பொருந்திய தண்டினை உடைய தாமரை மலர்; வைகறை = விடியற் காலையில்; கள்கமழ் = தேன் மணம் கமழ்கின்ற; நெய்தல் ஊதி = நெய்தல் மலர் மீது மொய்த்து ரீங்காரமிட்டு; எல்பட = கதிரவன் தோன்றும் வேளையில்; காமரு காமம் வரு = விருப்பத்தைத் தரும்; அரி = அழகு; குன்று = திருப்பரங்குன்றம்; அமர்ந்து = விரும்பி அமர்ந்திருக்கும்; உரியன் = தனக்கு உரிய அருட் செயலாகக்கொண்ட திருமுருகப்பெருமான். |