திருமுருகாற்றுப்படை 5 - குன்றுதோறாடல்
" பைங்கொடி நறைக்காய் இடைஇடுபு வேலன் - - - - - - 190
அம்பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு
வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
நீடுஅமை விளைந்த தேக்கள் தேறல் - - - - - - 195
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர ..." - - - - - - 197
தெளிவுரை:
"பசுமையான கொடியால், நறுமணமுடைய சாதிக்காயினையும் அழகான புட்டில் போன்ற தக்கோலக்காயினையும் நடுவில் வைத்து, காட்டு மல்லிகை மலருடன் வெண் கூதாளம் [வெண்டாளி] என்னும் மலரினையும் சேர்த்துக் தொடுக்கப்பட்ட கண்ணியை தலைமுடி மீது அணிந்துள்ள வேலன், நறுமணம் பொருந்திய சந்தனம் பூசப்பெற்ற [மஞ்சள்] நிறத்தால் விளங்கும் மார்பினை உடையவன்; கொடிய வில்லால் விலங்குகளை வேட்டையாடிக் கொடுமையான கொலைத் தொழிலைச் செய்யும் வேடர்கள், நீண்ட மூங்கிற் குழாயில் முற்றி விளைந்த தேனாலான கள்ளின் தெளிவை மலையில் சிறு ஊரில் வாழும் தம் சுற்றத்தாருடன் உண்டு மகிழ்ந்து [அக் குறிஞ்சி நிலப் பகுதிக்குரிய] தொண்டகம் எனப்படும் சிறியதொரு பறையின் தாளத்துக்கு ஏற்பக் குரவைக் கூத்தாட ..."
அரும்பத அகராதி:
பைங்கொடி = பசுமையான கொடி; நறைக்காய் = நறுமணம் உடைய சாதிக்காய்; இடை இடுபு = நடுவில் இட்டு; வேலன் = [திருமுருகனைப் போல] கையில் வேலை உடையவன்; அம்பொதிப்புட்டில் விரைஇ = அழகான புட்டில் போன்ற தக்கோலக்காயினை இணைத்து; குளவி = காட்டு மல்லிகைப் பூ; வெண்கூதாளம் = வெண்டாளி; நறுஞ்சாந்து = நறுமணமிக்க சந்தனம்; கேழ் கிளர் = ஒளியுடன் விளங்குகின்ற; கொடுந்தொழில் வல் வில் கொலைஇய கானவர் = வலிமையான வில்லால் விலங்குகளை வேட்டையாடுவதன் மூலம், கொடுமையான கொலைத் தொழிலைச் செய்கின்ற காட்டில் வசிக்கும் வேடர்கள்; நீடுஅமை = நீண்ட மூங்கில்; தேக்கள் தேறல் = தேனால் விளைந்த கள், மது; தொண்டகம் = சிறிய பறை வகைகளுள் ஒன்று; சிறுகுடிக் கிளை = சிறிய ஊரில் வாழும் சுற்றத்தார்; குரவை = ஏழு, எட்டு, அல்லது ஒன்பது பேர்கள் கை கோர்த்தாடும் ஒருவகைக் கூத்து.
- - - - - - - - - " விரல்உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கான் - - - - - - 198
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல் - - - - - - 200
முடித்த குல்லை இலையுடை நறும்பூ
செங்கால் மராஅத்த வால்இணர் இடைஇடுபு
சுரும்புஉணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு ..." - - - - - - 205
தெளிவுரை:
"விரல்களால் அரும்புகளைத் தொட்டு அலைத்து அலர்த்தப்பட்டமையால் பல்வேறு வகை நறுமணம் வீசுவதும், ஆழமான சுனையில் மலர்ந்த மலர்களால் தொடுக்கப்பட்டதும், வண்டுகள் மொய்ப்பதுமான மாலையினையும், தொடுக்கப்பட்ட ஏனைய மாலைகளையும் சேர்த்துக் கட்டிய கூந்தலையும் உடையவர்களாகவும், இலையைத் தலைமுடி மீது அணிந்த கஞ்சங்குல்லையையும் நறிய பூங்கொத்துகளையும் சிவந்த அடிப்பாகத்தை உடைய கடம்பு மரத்தின் மலர்க் கொத்துகளை இடையே இட்டுக் கட்டிய பெரிய குளிர்ந்த அழகிய தழையையும், வடங்களோடு கூடிய அணிகலன்கள் அணியப்பெற்ற இடுப்பில், ஆடையாக உடுத்தியவர்களாகவும், மயிலைப் போன்ற சாயலை உடையவர்களாகவும் விளங்கிய மகளிரொடு ..."
அரும்பத அகராதி:
விரல் உளர்ப்பு அவிழ்ந்த = விரல்கள் தொடுவதால் அலர்ந்த; குண்டு சுனை = ஆழமான சுனை; வண்டுபடு கண்ணி = வண்டுகள் விரும்பி மொய்க்கும் மாலை; இணைத்த கோதை = வெவ்வேறு மாலைகளால் இணைக்கபெற்ற மற்றொரு மாலை; அணைத்த கூந்தல் = மாலைகளால் சேர்த்துக் கட்டப்பெற்ற கூந்தல்; முடித்த குல்லை = இலையைத் தலைமுடி மீது சூடியது போன்று விளங்கும் கஞ்சங்குல்லை; இலை உடை நறும்பூ = இலைகள் இடையிடையே செருகப்பட்டிருந்த நறுமணப் பூங்கொத்துகள்; செங்கால் மராத்த வால் இணர் = சிவந்த அடிப்பகுதியை உடைய கடம்பு மரத்தின் வெண்மையான பூங்கொத்தினையும்; சுரும்பு உண = வண்டுகள் [மலரில் உள்ள தேனினை] உண்ணுமாறு; பெருந்தண் மரத்தழை = பெரிய குளிர்ந்த அழகிய தழையாலாகிய ஆடை; திருந்து காழ் அல்குல் = திருந்திய வடங்களால் ஆகிய [மேகலை போன்ற] அணிகலன் அணியப்பெற்ற இடுப்பு; திளைப்ப உடீஇ = பொருந்துமாறு, அல்லது அசையுமாறு உடுத்திய; மயில் கண்டன்ன மடநடை மகளிரொடு = மயிலைப் பார்த்தது போன்ற இளமையோடு கூடிய நடையினை உடைய மகளிருடன்.
- - - - - - - - - " செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச் - - - - - - 206
செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகர்இல் சேவல்அம் - - - - - - 210
கொடியன் நெடியன் தொடிஅணி தோளன்
நரம்பு ஆர்த்தன்ன இன்குரல் தொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
முழவுஉறழ் தடக்கையின் இயல ஏந்தி - - - - - - 215
மென்தோள் பல்பிணை தழீஇ தலைத்தந்து
குன்றுதொறு ஆடலும்நின்ற தன்பண்பே, அதான்று ..." - - - - - - 217
தெளிவுரை:
"[திருமுருகனைப் போல] வேலினை உடைய வேலன், சிவந்த மேனியனாகக் காட்சியளிப்பவன்; சிவப்பு நிற ஆடையை அணிந்துள்ளவன்; சிவந்த அடிப்பாகத்தையுடைய அசோக மரத்தின் குளிர்ச்சி பொருந்திய தளிர்களை இரு காதுகளிலும் அணிந்துள்ளவன்; இடையில் கச்சை அணிந்துள்ளவன்; கால்களில் வீரக் கழல்களை அணிந்துள்ளவன்; சிவந்த வெட்சி மலர்களை தலை முடியில் கண்ணியாக அணிந்துள்ளவன்; புல்லாங்குழலை உடையவன்; ஊதுகொம்பினை உடையவன்; பல இசைக் கருவிகளை உடையவன்; ஆட்டினை உடையவன்; மயிலினை உடையவன்; குற்றமற்ற அழகிய சேவல் கொடியை உடையவன்; உயரமானவன்; [தோளில் அணியப்பெறும்] 'தொடி' எனப்படும் அணிகலன் அணியப்பெற்றுள்ள தோள்களை உடையவன்; நரம்பாலாகிய இசைக் கருவிகளின் இசையை ஒத்த இனிய இசையோடு வருகின்ற மகளிர் குழாத்துடன் வருபவன்; சிறிய புள்ளிகளையும் நறுமணத்தையும் குளிர்ச்சியையும் அழகினையும் உடையதாக, நிலத்தில் தோய்கின்ற ஓர் ஆடையை அணிந்திருப்பவன்; குரவை ஆடவிருக்கும் பெண்மானைப் போன்ற மகளிரை முழவு போன்ற பெருமையுடைய தன் கைகளால் பொருந்தத் தாங்கித் தோளைத் தழுவியவாறு [ஆட்டம் தொடங்குவதற்கு அடையாளமாக] தன் பெருமை பொருந்திய கையை முதற் கையாக அம் மகளிர்க்குத் தந்து, ஒவ்வொரு குன்றின் மீதும் திருமுருகனைப் போல ஆடுவது அவன்தன் இயல்பாகும், அது மட்டுமன்று ..."
அரும்பத அகராதி:
செய்யன் = சிவந்த மேனியன்; செவ்வரை செயலை தண் தளி துயல் வரும் காதினன் = சிவந்த அடிப்பாகத்தை உடைய அசோக மரத்தின் குளிர்ச்சி பொருந்திய தளிர் அசையும் காதுகளையுடையவன்; கச்சு = இடையில் அணியும் ஒருவகை ஆடை; கழல் = காலில் அணியும் வீரக் கழல்; செச்சை = சிவந்த வெட்சி மலர்; கண்ணி = தலையில் அணியும் மாலை; கோடு = ஊதுகொம்பு; பல்லியம் = பல்வேறுவகை இசைக் கருவிகள்; தகர் = ஆடு; மஞ்ஞை = மயில்; புகர் இல் = குற்றம் இல்லாத; நெடியன் = உயரமானவன்; தொடி = தோளில் அணியும் ஒருவகை அணிகலன்; நரம்பு ஆர்த்தன்ன = நரம்புகளால் ஆகிய 'யாழ்' போன்ற இசைக் கருவி ஒலித்ததைப் போல; இன் குரல் தொகுதி = இனிய குரலினை உடைய மகளிர் குழாம்; குறும்பொறி = சிறிய புள்ளி; நறுந்தண் சாயல் = நறுமணமும் குளிர்ச்சியும் பொருந்திய மென்மை; நிலம் நேர்பு = நிலத்தில் தோய்கின்ற; முழவு உறழ் = தண்ணுமை [மத்தளம்] போன்ற; தடக்கை = பெரிய அல்லது பெருமை பொருந்திய கை; இயல் ஏந்தி = பொருந்தத் தாங்கி; மென் தோள் = மென்மையான தோள்; தழீஇ = தழுவிக்கொண்டு; பல்பிணை = பெண் மான் போன்ற பல மகளிர்க்கு; தலைத்தந்து = முதற்கை தந்து; நிலைஇய பண்பே = திருமுருகப்பெருமானின் நிலையான குணமேயாகும். |