| திருமுருகாற்றுப்படை 4 - திரு ஏரகம் [சுவாமிமலை]
" இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது - - - - - - 177
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறு நான்கு இரட்டி இளைமைநல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை - - - - - - 180
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர் உடீஇ
உச்சிக்கூப்பிய கையினர் தற்புகழ்ந்து - - - - - - 185
ஆறுஎழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரைஉறு நறுமலர் ஏந்தி பெரிதுஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன், அதான்று ..." - - - - - - 189
தெளிவுரை:
"['வேதம்' போன்ற நூல்களைக்] ஓதல் [கற்றல்], ஓதுவித்தல் [கற்பித்தல்], வேட்டல் [வேள்வி, அல்லது யாகம், செய்தல்], வேட்பித்தல் [ஏனையோரின் நன்மைக்காக வேள்வி செய்வித்தல்], ஏற்றல் [மற்றவர்களிடமிருந்து பொருளைத் தானமாகப் பெறுதல்], ஈதல் [மற்றவர்களுக்குப் பொருளைத் தானமாகக் கொடுத்து உதவுதல்] ஆகிய ஆறுவகைப் பணிகளையும் தவறாமல் நிறைவேற்றுபவர்களாகவும்; தாய்-தந்தையர் இருவரின் குடும்பமும் நல்ல குடும்பம் என உலகத்தாரால் மதிக்கப்பெற்ற பழம்பெரும் குடியில் தோன்றியவர்களாகவும்; தம் வாழ்நாளில் முதலாவது நாற்பத்தெட்டு ஆண்டுகள் அடங்கிய இளமைக் காலம் முழுவதும் 'பிரமச்சரியம்' எனப்படும் திருமணமாகாத வாழ்வியலை மேற்கொள்பவர்களாகவும்; அறம் பொருந்திய கோட்பாட்டினை உடையவர்களாகவும்; 'ஆகவனீயம், தக்கிணாக்கினியம், காருகபத்தியம்' எனப்படும் மூவகைத் தீயால் வேள்வி செய்து பெறும் செல்வத்தை உடையவர்களாகவும்; இவ்வுலகில் [தம் தாயின் வயிற்றிலிருந்து] இயற்கையாகப் பிறக்கும் பிறப்போடு, கல்வியறிவு, அறிவு முதிர்ச்சி ஆகியவற்றை எய்திய பிறகு 'மீண்டும் பிறத்தலால்' 'இரு பிறப்பாளர்' என அழைக்கப்படுபவர்களாகவும்; ஒவ்வொரு நாளுக்கும் உரிய நல்ல நேரத்தை கணித்து மற்றவர்களுக்குத் தெரிவிப்பவர்களாகவும்; [ஒவ்வொரு புரியிலும்] மூன்று நூல் இழைகளைத்கொண்ட புரிகள் மூன்றால் ஆகிய ஒன்பது நூலிழைகளைக் கொண்ட பூணூலை அணிபவர்களாகவும்; நீராடிய பின்னர் உலராத ஆடையையே அணிந்து ஈரமான அந்த ஆடை உலரும்படிச் செய்பவர்களாகவும்; தலை உச்சி மீது தங்கள் இரு கைகளையும் குவித்து இறைவனை வணங்குபவர்களாகவும்; 'சரவணபவ', அல்லது 'குமாராயநம' என்னும் ஆறெழுத்து மந்திரத்தைச் சொல்லி, தம் நாவினால் மென்மையாகவும் இனிமையாகவும் பாடி நறுமணமுடைய மலர்களைத் தூவி திருமுருகப்பெருமானை வழிபடுபவர்களாகவும் விளங்கும் அந்தணர்கள் வாழ்ந்துவரும் திரு ஏரகத்திலும் திருமுருகப்பெருமான் மனமகிழ்வோடு அமர்ந்திருக்கும் உரிமை உடையவன், அதுமட்டுமன்று ..."
அரும்பத அகராதி:
இருமூன்று எய்திய இயல்பு = 'ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஏற்றல், ஈதல்'. ஆகிய அறுவகைப் பணிகளை நிறைவேற்றும் பண்பு; இருவர்ச்சுட்டிய = தாயும், தந்தையும் ஆகிய இருவரின் குலத்தின், அல்லது குடும்பத்தின் நற்பெயரைப் புகழ்ந்து கூறிய; அறு-நான்கு இரட்டி இளமை நல் யாண்டு = 6x4 + 6x4 = 48 ஆண்டுகள் அடங்கிய இளமைக் காலம்; முத்தீ = 'ஆகவனீயம், தக்கிணாக்கினியம், காருகபத்தியம்' என்னும் மூவகை வேள்வித் தீ; இருபிறப்பாளர் = இயற்கைப் பிறப்பு, அறிவு முதிர்ச்சியின் பின்னர் எய்தும் மறு பிறப்பு ஆகிய இரு பிறப்புகளுக்குரிய அந்தணர்கள்; பொழுது அறிந்து நுவல = நல்ல நேரத்தை கணித்துத் தெரிவிக்க; ஒன்பதுகொண்ட மூன்று புரி நுண்ஞாண் = [ஒவ்வொரு புரியிலும் மூன்று இழைகளைக்கொண்ட] மூன்று புரிகளாலாகிய ஒன்பது இழைகளைக்கொண்ட பூணூல்; புலராக் காழகம் புலர உடீஇ = உலராத ஆடையை உலரும்படி உடுத்தி; உச்சிக்கூப்பிய கையினர் = தலை உச்சி மீது இரு கைகளையும் குவித்து வணங்குபவர்கள்; ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி = 'சரவணபவ', அல்லது 'குமாராயநம' என்னும் ஆறு எழுத்துகள் அடங்கிய மந்திரம்; 'விரைவுறு நறுமலர் ஏந்தி = நறுமணம் உடைய மலர்களைத் தூவி; பெரிது உவந்து = மிகவும் மகிழ்ந்து; ஏரகத்து உறைதலும் உரியன் = திரு ஏரகத்தில் அமர்ந்திருக்கும் உரிமையுடைய திருமுருகப்பெருமான். |