| திருமுருகாற்றுப்படை 3 - திரு ஆவினன்குடி [பழநி]
" சீரை தைஇய உடுக்கையர் சீரொடு - - - - - - 126
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்
மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல் - - - - - - 130
பலஉடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு - - - - - - 134
கடும்சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனிஇல் காட்சி முனிவர் முன்புக ..." - - - - - - 137
தெளிவுரை:
"மரவுரியை ஆடையாக உடுத்தியவர்களாகவும், அழகுடன் [வடிவாலும் நிறத்தாலும்] வலம்புரிச் சங்கைப் போன்ற வெண்மையான நரை முடியை உடையவர்களாகவும் [எப்பொழுதும் நீராடுதலால்] தூய்மையாக விளங்கும் வடிவினை உடையவர்களாகவும், மானின் தோலைப் போர்வையாகப் போர்த்துக்கொண்டுள்ளவர்களாகவும் [உணவினை விலக்கிய நோன்பின் காரணமாக] தசை வற்றிய நிலையில் மார்பு எலும்புகள் வெளிப்படுவதைப் போன்ற தோற்றத்தை உடையவர்களாகவும், பகற்பொழுதிலும் உணவு உண்ணா நோன்பினைப் பல நாட்கள் கடைப்பிடிப்பவர்களாகவும், பகையினையும் நெடுங்காலம் தொடரும் சீற்றத்தினையும் அகற்றிய மனத்தினை உடையவர்களாகவும், பலவற்றைக் கற்றவரும் அறிந்திராத கல்வி அறிவினை உடையவர்களாகவும், கல்வியால் பெறும் அறிவிற்கே எல்லையாக விளங்கும் தலைமைத்துவம் உடையவர்களாகவும், ஆசையினையும் கொடிய சினத்தினையும் விலக்கிய அறிவுடையவர்களாகவும், ஒரு சிறிதும் துன்பம் அறியாதவர்களாகவும், யாரிடத்தும் வெறுப்பில்லாது பொருந்தி ஒழுகும் மெய் அறிவினை உடையவர்களாகவும் விளங்கிய முனிவர்கள் முன்னே சென்று [திருக்கோயிலின் உள்ளே] புகவும் ..."
அரும்பத அகராதி:
சீரை = மரவுரியாலாகிய ஆடை; தைஇய = உடுத்திய; உடுக்கை = ஆடை; சீரோடு = அழகாக; வலம்புரி புரையும் = வலம்புரிச் சங்கினை ஒக்கும்; வால் நரை = வெண்மையாக நரைத்த முடி; மாசு = அழுக்கு; இமைக்கும் = விளங்கும்; மானின் உரிவை = மானின் தோல்; ஊன்கெடு மார்பு = தசை வற்றிய மார்பு; என்பு எழுந்து இயங்கும் = (மார்பு) எலும்பு வெளிப்படுவதைப் போன்று தோற்றமளிக்கும்; நன்பகல் பலவுடன் கழிந்த உண்டியர் = பகல் நேரத்திலும் உணவு உண்ணா நோன்பினைப் பல நாட்கள் கடைப்பிடிப்பவர்கள்; இகல் = பகை; செற்றம் = நீண்டகால கோபம்; காமம் = ஆசை, அவா; காட்சி = மெய்யறிவாளரின் தோற்றம்; இடும்பை = துன்பம்; யாவதும் = ஒருசிறிதும்; மேவர = மனம் பொருந்திய; துனிஇல் = வெறுப்பில்லாத.
- - - - - - - - - " புகை முகந்தன்ன மாசுஇல் தூஉடை - - - - - - 138
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்து
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்
நல்யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர், இன்நரம்பு உளர - - - - - - 142
நோய்இன்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்நகைப் - - - - - - 145
பருமம் தாங்கிய பணிந்துஏந்து அல்குல்
மாசுஇல் மகளிரொடு மறுஇன்றி விளங்க ..." - - - - - - 147
தெளிவுரை:
"வெண்புகை, அல்லது பாலாவியை முகந்து ஆடையாக உடுத்தியதைப் போல தூய [மெல்லிய] ஆடையினை அணிந்தவர்களாகவும், மலர்ந்த அரும்புகளாலாகிய மாலையினை அணிந்த மார்பினை உடையவர்களாகவும், தம் செவிகளால் இசையை அளந்து நரம்புகளைக் கட்டிய வார்க்கட்டினை உடைய நல்ல யாழ் இசையில் பயிற்சி பெற்றிருந்தவர்களாகவும் நல்ல உள்ளத்தை உடையவர்களாகவும், எப்பொழுதும் இனிய சொல்லையே பேசுபவர்களாகவும் விளங்கிய இசை வாணர்கள், அல்லது பாணர்கள், இனிய யாழின் நரம்புகளை இயக்குவதற்காக, நோயற்ற உடலை உடையவர்களாகவும், மாமரத்தின் ஒளி பொருந்திய தளிர் போன்ற நிறமுடையவர்களாகவும், [உரை கல்லில் பொன்னை உரைக்கும்போது தோன்றும்] பொன் துகள் போன்ற தோற்றமுடைய அழகுத் தேமலை உடையவர்களாகவும், காண்பதற்கினிய ஒளி பொருந்திய பதினெட்டு வடங்களாலாகிய மேகலையை இடுப்பில் அணிகலனாக அணிந்தவர்களாகவும் விளங்கிய குற்றமற்ற [பாடினி, அல்லது இசை வாணிகளாகிய] மகளிருடன் [மேற்கூறிய இசை வாணர்கள்] குற்றமற்ற வகையில் வருகை புரிந்தனர்."
அரும்பத அகராதி:
புகை முகந்தன்ன = வெண்புகை, அல்லது பாலாவி போன்ற மெல்லிய; மாசு = குற்றம், அழுக்கு; தூஉடை = தூய்மையான உடை; முகை = மொட்டு, அரும்பு; தகை = சிறப்பு, பெருமை; ஆகம் = மார்பு; திவவு = நரம்புக்கட்டு; நவில்தல் = சொல்லுதல்; நயன் = நன்மை, இனிமை, அன்பு; மேவலர் = மேவுதலை உடையவர்; உளர = [யாழின் நரம்புகளைக்கொண்டு] இசையை மீட்ட; யாக்கை = உடல்; மாவின் அவிர் தளிர் = மாமரத்தின் ஒளி பொருந்திய தளிர்; திதலை = தேமல்; பருமம் = பதினெட்டு வடங்கள், அல்லது சரங்களால் ஆகிய 'மேகலை' எனப்படும் அணிகலன்; மாசு = குற்றம்; மறு = குற்றம்.
- - - - - - - - - " கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால்எயிற்று - - - - - - 148
அழல்என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் - - - - - - 150
புள்அணி நீள்கொடிச் செல்வனும் ...
... ... ... வெள் ஏறு - - - - - - 151
வலம்வயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூஎயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல் - - - - - - 155
வேள்வி முற்றிய வென்றுஅடு கொற்றத்து
ஈர்இரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடை
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும் ..." - - - - - - 159
தெளிவுரை:
"நஞ்சுடன் கூடிய துளையையும் வெண்மையான பற்களையும், நெருப்பு போல மூச்சுவிடும்போது காண்பவர்களுக்கு அச்சத்தை விளைவிக்கும் கடுமையான வலிமையினையும் உடைய பாம்புகள் மடியும்படி அவற்றை அடித்து வீழ்த்துவதும் பல வரிகளை உடைய வளைந்த சிறகுகளையுடையதுமான கருடன் எனப்படும் பறவை தோற்றமளிக்கும் கொடியையுடைய திருமாலும்;
தம் ஊர்தியான வெண்ணிற காளை தோற்றமளிக்கும் கொடியினை வலப் பக்கத்தில் உயர்த்தியுள்ளவரும், பலரும் புகழ்ந்து போற்றும் திண்மையான தோள்களையுடையவரும், உமாதேவியாரைத் தம் இடப் பக்கத்தில் உடையவரும், இமைக்காத மூன்று கண்களையுடையவரும், முப்புரங்களை எரித்து அழித்தவருமான சிவபெருமானும்;
ஆயிரம் கண்களை உடையவனும், நூற்றுக்கு மேற்பட்ட வேள்விகளைச் செய்து முடித்தலால் பகைவரை வென்று அவர்களைக் கொல்லும் வெற்றியை உடையவனும், முன்பக்கம் உயர்ந்த நான்கு கொம்புகளையும் அழகிய நடையினையும், நிலத்தைத் தொடுமாறு நீண்ட வளைந்த துதிக்கையினையும் உடையதும், புலவர்களால் புகழப்படுவதுமான ['ஐராவதம்' எனப்படும்] யானையின் பிடரியின் மீது அமர்ந்தவாறு இந்திரனும் [திருக்கோயிலில் வந்து சேர];
அரும்பத அகராதி:
கடு = நஞ்சு; தூம்பு = துளை; வால் = வெண்மையான; எயிறு = பற்கள்; அழல் = நெருப்பு; உயிர்க்கும் = மூச்சுவிடும்; திறல் = வலிமை; சிறை = சிறகுகள்; புள் = பறவை; புள் அணி நீள்கொடிச் செல்வன் = கருடன் எனப்படும் பறவை அலங்கரிக்கும் நீளமான கொடியினை உடைய திருமால்; வெள் ஏறு = வெண்மையான காளை; முக்கண் = 'நெற்றிக்கண்'ணையும் சேர்த்து மூன்று கண்கள்; மூஎயில் = ['ஆணவம், கன்மம், மாயை' எனப்படும் மூவகை அக இருளை குறிக்கும், 'வெள்ளி, பொன், இரும்பு' ஆகியவற்றால் வானில் அசுரரால் கட்டப்பெற்ற] 'மூன்று அரண்கள்/கோட்டைகள்'; முருக்கிய = அழித்த; நூற்றுப்பத்து அடுக்கிய = நூற்றைப் பத்தாக அடுக்கிய, அஃதாவது 'ஆயிரம்'; நாட்டம் = கண்; வேள்வி முற்றிய = யாகம் செய்த; கொற்றத்து = வெற்றியைப் பெற்ற; மருப்பு = யானைக் கொம்பு; தாழ் பெருந்தடக்கை = [நிலத்தைத் தொடும் வகையில் அமைந்திருந்த] பெரிய துதிக்கை; எருத்தம் ஏறிய = பிடரியின் மீது அமர்ந்த; திருக்கிளர் செல்வன் = அனைத்துச் செல்வங்களையும் உடைய இந்திரன்.
- - - - - - - - - " நாற்பெருந் தெய்வத்து நல்நகர் நிலைஇய - - - - - - 160
உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவரும் தலைவர் ஆக
ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றி
தாமரைப் பயந்த தாஇல் ஊழி
நான்முக ஒருவற் சுட்டி காண்வர - - - - - - 165
பகலில் தோன்றும் இகல்இல் காட்சி
நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்
மீன்பூத்தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந்தன்ன செலவினர் வளியிடைத் - - - - - - 170
தீஎழுந்தன்ன திறலினர் தீப்பட
உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கில் தம்பெறு முறைகொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்து உடன்காண
தாஇல் கொள்கை மடந்தையொடு சில்நால்
ஆவினன்குடி அசைதலும் உரியன், அதான்று ..." - - - - - - 176
தெளிவுரை:
"நான்கு பெருந் தெய்வங்களாகக் கருதப்படும் பிரமன், திருமால், சிவபெருமான், இந்திரன் ஆகியோரில், பிரமன் அல்லாத மற்ற மூவரும் உலகத்தை காத்தல் என்னும் ஒன்றையே தங்கள் கோட்பாடாகக் கடைப்பிடித்துவரவும், திருமாலின் கொப்பூழ்த் தாமரையில் தோன்றிய பிரமனுக்காக, திருமுருகப்பெருமானின் திருவருளினை வேண்டி முப்பத்து முக்கோடித் தேவர்களும் பதினெட்டு கணங்களும் பகல் நேரத்தில் தோன்றும் ஞாயிறு போன்றவற்றின் ஒளியுடன் வரலாயினர்; அவர்கள் வானத்தின் விண் மீன்களை போன்ற தோற்றத்தினர்; காற்றினைப் போல் விரைவாகச் செல்லும் ஆற்றல் உடையவர்கள்; காற்றில் தீ எரிவதைப் போன்ற வலிமை உடையவர்கள்; வானத்தில் மின்னலுடன் இடி இடிக்கும் ஓசையை ஒத்த குரலை உடையவர்கள்; அவர்கள் [பிரமனைச் சிறையிலிருந்து விடுவிக்கவேண்டும் என்னும் வேண்டுகோளுடன்] வானத்தில் வட்டமாய் சுழன்று வந்து நிற்கின்றனர். குற்றமற்ற கொள்கையை உடைய தெய்வயானை-அம்மையாருடன் சில நாட்கள் திரு ஆவினன்குடியில் [பழநியில்] அமர்ந்து இருப்பவர் திருமுருகப்பெருமான்."
அரும்பத அகராதி:
நாற்பெருந்தெய்வத்து ... பலர்புகழ் மூவர் = பிரமன், திருமால், சிவபெருமான், இந்திரன் ஆகிய நான்கு பெருமைக்குரிய தெய்வங்களில் பிரமன் அல்லாத, பலராலும் புகழப்படும் ஏனைய மூவர்; நன்னகர் நிலைஇய = நல்ல நகரங்கள் நிலைபெற்று விளங்க; உலகம் காக்கும் ஒன்றுபுரிக்கொள்கை = உலகத்தைக் காப்பதையே தலையான கோட்பாடாகக்கொண்ட [பலர் புகழ் மூவர்]; ஏம் (ஏமம்) = காவல்; தாமரை பயந்த தாஇல் ஊழி நன்முக ஒருவற் சுட்டி = திருமாலின் உந்தித் தாமரையில் உதித்த நான்முகனாகிய பிரம்மனைக் குறித்து; பகலில் தோன்றும் = பகல் நேரத்தில் தோன்றும் கதிரவன் போன்றவர்கள்; இகல் = மாறுபாடு/வேறுபாடு/பகை; நால்வேறு இயற்கை பதினொரு மூவர் = முப்பத்து முக்கோடித் தேவர்கள்; ஒன்பதிற்று இரட்டி உயர்நிலைப் பெறீஇயர் = பதினெட்டு கணங்கள்; தாஇல் = குற்றமற்ற; மடந்தை = தெய்வயானை-அம்மையார்; அசைதல் = தங்குதல், அமர்ந்திருத்தல். |