Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   6 - தக்ஷ காண்டம்   next kandam6 - dhaksha kANdam

previous padalam   23 - கந்த விரதப் படலம்   next padalamKandha viradhap padalam

Ms Revathi Sankaran (8.41mb)
(1 - 61)



Ms Revathi Sankaran (8.79mb)
(62 - 127)




(உரைசெறி மகவான்)

உரைசெறி மகவான் செம்மல் உம்பரில் இருப்ப இம்பர்
     முரசெறி தானை வேந்தன் முசுகுந்தன் என்னும் வள்ளல்
          விரைசெறி நீபத் தண்டார் வேலவன் விரதம் போற்றித்
               திரைசெறி கடற்பா ராண்ட செயல்முறை விளம்ப லுற்றாம். ......    1

(முந்தொரு ஞான்று தன்னில் - 1)

முந்தொரு ஞான்று தன்னில் முசுகுந்தன் வசிட்டன் என்னும்
     அந்தணன் இருக்கை எய்தி அடிமுறை பணிந்து போற்றிக்
          கந்தவேள் விரத மெல்லாங் கட்டுரை பெரியோய் என்ன
               மைந்தநீ கேட்டி யென்னா மற்றவை வழாது சொல்வான். ......    2

(எள்ளருஞ் சிறப்பின்)

எள்ளருஞ் சிறப்பின் மிக்க எழுவகை வாரந் தன்னுள்
     வெள்ளிநாள் விரதந் தானே விண்ணவர் உலகங் காத்த
          வள்ளல்தன் விரத மாகும் மற்றது புரிந்த மேலோர்
               உள்ளமேல் நினைந்த வெல்லாம் ஒல்லையின் முடியும் அன்றே. ......    3

(பகிரதன் என்னும்)

பகிரதன் என்னும் வேந்தன் படைத்தபா ருலகை யெல்லாம்
     நிகரறு கோரன் என்னும் நிருதனங் கொருவன் வௌவ
          மகவொடு மனையுந் தானும் வனத்திடை வல்லை ஏகிப்
               புகரவன் தனது முன்போய்த் தன்குறை புகன்று நின்றான். ......    4

(பார்க்கவன் என்னும்)

பார்க்கவன் என்னும் ஆசான் பகீரதன் உரைத்தல் கேளா
     வேற்கரன் மகிழு மாற்றால் வெள்ளிநாள் விரதந் தன்னை
          நோற்குதி மூன்றி யாண்டு நுங்களுக் கல்லல் செய்த
               மூர்க்கனும் முடிவன் நீயே முழுதுல காள்வை என்றான். ......    5

(நன்றென வினவி)

நன்றென வினவி மன்னன் ஞாயிறு முதலாம் நாளில்
     ஒன்றெனும் வெள்ளி முற்றும் உணவினைத் துறந்து முன்பின்
          சென்றிடும் இரண்டு நாளும் திவாவினில் அடிசில் மாந்தி
               இன்றுயில் அதனை நீத்தி யாண்டுமூன் றளவு நோற்றான். ......    6

(நோற்றிடும் அளவில்)

நோற்றிடும் அளவில் ஐயன் நுதியுடைச் செவ்வேல் வந்து
     மாற்றலன் உயிரை யுண்டு வல்லையின் மீண்டு செல்லப்
          போற்றியே பகீர தப்பேர்ப் புரவலன் தன்னூ ரெய்தி
               ஏற்றதொல் லரசு பெற்றான் இன்னுமோர் விரதஞ் சொல்வாம். ......    7

(வாரிச மலர்மேல்)

வாரிச மலர்மேல் வந்த நான்முகன் மதலை யான
     நாரத முனிவன் என்போன் நலத்தகு விரத மாற்றி
          ஓரெழு முனிவர் தம்மில் உயர்ந்திடு பதமும் மேலாஞ்
               சீரொடு சிறப்பும் எய்தச் சிந்தனை செய்தான் அன்றே. ......    8

(நூற்படு கேள்வி)

நூற்படு கேள்வி சான்ற நுண்ணிய உணர்வின் மிக்கோன்
     பார்ப்பதி உதவு முன்னோன் பதமுறை பணிந்து போற்றி
          ஏற்புறு முனிவ ரான எழுவகை யோரில் யானே
               மேற்பட விரத மொன்றை விளம்புதி மேலோய் என்றான். ......    9

(முன்னவன் அதனை)

முன்னவன் அதனைக் கேளா முழுதருள் புரிந்து நோக்கி
     அன்னது பெறுதி திண்ணம் ஆறுமா முகத்து நம்பி
          பொன்னடி வழிபா டாற்றிப் பொருவில்கார்த் திகைநாள் நோன்பைப்
               பன்னிரு வருடங் காறும் பரிவுடன் புரிதி என்றான். ......    10

(நாரதன் வினவி)

நாரதன் வினவி ஈது நான்புரிந் திடுவன் என்னாப்
     பாருல கதனில் வந்து பரணிநாள் அபரா ணத்தில்
          ஓர்பொழு துணவு கொண்டே ஒப்பில்கார்த் திகைநாள் தன்னில்
               வீரவேல் தடக்கை அண்ணல் விரதத்தை இயற்ற லுற்றான். ......    11

(தூசொடு கயத்தின்)

தூசொடு கயத்தின் மூழ்கித் துய்யவெண் கலைகள் சுற்றி
     ஆசறு நியம முற்றி ஆன்றமை புலத்த னாகித்
          தேசிகன் தனது பாதஞ் சென்னிமேற் கொண்டு செவ்வேள்
               பூசனை புரிந்திட் டன்னான் புராணமும் வினவி னானால். ......    12

(கடிப்புனல் அள்ளி)

கடிப்புனல் அள்ளித் தன்னோர் கைகவித் துண்டு முக்காற்
     படுத்திடு தருப்பை என்னும் பாயலிற் சயனஞ் செய்து
          மடக்கொடி மாதர் தம்மை மறலியா மதித்து வள்ளல்
               அடித்துணை யுன்னிக் கங்குல் அவதியு முறங்கா துற்றான். ......    13

(அந்தநாள் செல்ல)

அந்தநாள் செல்லப் பின்னர் உரோகிணி யடைந்த காலைச்
     சந்தியா நியமம் எல்லாஞ் சடக்கென முடித்துக் கொண்டு
          கந்தவேள் செம்பொற் றண்டைக் கான்முறை வழிபட் டேத்தி
               வந்தமா தவர்க ளோடும் பாரணம் மகிழ்ந்து செய்தான். ......    14

(பாரணம் விதியி)

பாரணம் விதியிற் செய்தோன் பகற்பொழு துறங்கு மாயின்
     ஆரண மறையோர் தம்மில் ஐம்பதிற் றிருவர் தம்மைக்
          காரண மின்றிக் கொன்ற கடும்பழி யெய்தும் என்னா
               நாரதன் மாயம் வல்லோன் இமைத்திலன் நயனஞ் சற்றும். ......    15

(விழியொடும் இமை)

விழியொடும் இமைகூ டாமே வெய்யவன் குடபால் வீழும்
     பொழுதள விருந்து மற்றைப் புறத்துள செயலும் போற்றி
          அழிவறு விரதம் இவ்வாறு ஆறிரு வருட மாற்றி
               எழுவகை முனிவோ ருக்கும் ஏற்றமாம் பதத்தைப் பெற்றான். ......    16

(இந்தநல் விரதந்)

இந்தநல் விரதந் தன்னை ஈண்டொரு மறையோன் நோற்று
     முந்திய மனுவே யாகி முழுதுல கதனை ஆண்டான்
          அந்தணன் ஒருவன் பின்னும் அவ்விர தத்தைப் போற்றிச்
               சிந்தையின் நினைந்தாங் கெய்தித் திரிசங்கு வாகி யுற்றான். ......    17

(ஈங்கொரு மன்னன்)

ஈங்கொரு மன்னன் வேடன் இருவரும் நோற்று வண்மை
     தாங்கிய அந்தி மானே சந்திமான் என்று பேராய்
          வீங்குநீர் உடுத்த பாரை மேலைநாட் புரந்தார் என்ப
               ஆங்கவர் பின்னாள் முத்தி அடைவது திண்ணம் அம்மா. ......    18

(இப்படி ஆரல் நாளில்)

இப்படி ஆரல் நாளில் விரதத்தை இயல்பின் நோற்று
     முப்புவ னத்தின் வேண்டும் முறைமையை யடைந்த நீரார்
          மெய்ப்படு தொகையை யாரே விளம்புவர் ஈதே யன்றி
               ஒப்பரும் விரதம் வேறும் ஒன்றுள துரைப்பக் கேண்மோ. ......    19

(வெற்பொடும் அவுண)

வெற்பொடும் அவுணன் தன்னை வீட்டிய தனிவேற் செங்கை
     அற்புதன் தன்னைப் போற்றி அமரரும் முனிவர் யாருஞ்
          சொற்படு துலையின் திங்கட் சுக்கில பக்கந் தன்னில்
               முற்பக லாதி யாக மூவிரு வைகல் நோற்றார். ......    20

(முந்திய வைக லாதி)

முந்திய வைக லாதி மூவிரு நாளுங் காலை
     அந்தமில் புனலின் மூழ்கி ஆடையோ ரிரண்டு தாங்கிச்
          சந்தியிற் கடன்கள் செய்து தம்பவிம் பங்கும் பத்திற்
               கந்தனை முறையே பூசை புரிந்தனர் கங்குற் போதில். ......    21

(நிறைதரு கட்டி கூட்டி)

நிறைதரு கட்டி கூட்டி நெய்யினாற் சமைக்கப் பட்ட
     குறைதவிர் மோத கத்தைக் குமரநா யகற்க ருத்திப்
          பிறவுள விதியுஞ் செய்து பிரான்திருப் புகழ்வி னாவி
               உறுபுனல் சிறிது மாந்தி உபவசித் திருந்தார் மாதோ. ......    22

(ஆரண முனிவர் வானோர்)

ஆரண முனிவர் வானோர் அங்கதன் மற்றை வைகல்
     சீரணி முருக வேட்குச் சிறப்பொடு பூசை யாற்றிப்
          பாரணம் விதியிற் செய்தார் பயிற்றுமிவ் விரதந் தன்னால்
               தாரணி அவுணர் கொண்ட தம்பதத் தலைமை பெற்றார். ......    23

(என்றிவை குரவன்)

என்றிவை குரவன் செப்ப இறையவன் வினவி எந்தாய்
     நன்றிவை புரிவன் என்னா நனிபெரு வேட்கை யெய்தி
          அன்றுதொட் டெண்ணில் காலம் அவ்விர தங்கள் ஆற்றிக்
               குன்றெறி நுதிவேல் ஐயன் குரைகழல் உன்னி நோற்றான். ......    24

வேறு

(ஆன காலையில் ஆறுமா)

ஆன காலையில் ஆறுமா முகமுடை அமலன்
     கோன வன்தனக் கருளுவான் மஞ்ஞைமேல் கொண்டு
          தானை வீரனும் எண்மரும் இலக்கருஞ் சார
               வானு ளோர்களுங் கணங்களுஞ் சூழ்வுற வந்தான். ......    25

(வந்து தோன்றலும் மன்)

வந்து தோன்றலும் மன்னவர் மன்னவன் மகிழ்ந்து
     கந்த வேளடி பணிந்தனன் கைதொழூஉப் பரவ
          அந்த மில்பகல் விரதங்கள் ஆற்றினை அதனால்
               எந்த நல்வரம் வேண்டினை அதுபுகல் என்றான். ......    26

(என்ற காலையில் முசுமுக)

என்ற காலையில் முசுமுக முடையவன் எந்தாய்
     நன்று பாரெலா மெனதுசெங் கோலிடை நடப்பான்
          வென்றி மொய்ம்பினன் ஆதியாம் வீரரை யெல்லாம்
               ஒன்று கேண்மையின் துணைவராத் தருதியென் றுரைத்தான். ......    27

(மன்னன் இவ்வகை)

மன்னன் இவ்வகை வேண்டுகோள் வினவுறா வள்ளல்
     அன்ன வாறுனக் குதவுவ மென்றருள் புரிந்து
          மின்னல் வாட்படை வீரமொய்ம் பன்முதல் விளம்புந்
               துன்னு தானையந் தலைவரை நோக்கியே சொல்வான். ......    28

(நோற்றல் கூடிய)

நோற்றல் கூடிய முசுகுந்தன் நும்மினும் எம்பால்
     ஏற்ற மேதகும் அன்பினான் எழுகடற் புவியும்
          போற்ற வைகுவான் நீவிர்கள் ஆங்கவன் புடைபோய்
               ஆற்றல் சான்றிடு துணைவராய் இருத்திர்என் றறைந்தான். ......    29

வேறு

(முழுதருட் புரிதரு)

முழுதருட் புரிதருங் கடவுள்சொல் வினவியே முடிவ தில்லாச்
     செழுமதித் தண்குடைச் சூர்குலந் தனையடுந் திறலி னேங்கள்
          பழிபடப் பானுவின் வழிவருஞ் சிறுமகன் பாங்க ராகி
               இழிதொழில் புரிகிலோ மெனமறுத் துரைசெய்தார் யாரும்வீரர். ......    30

(ஞானநா யகனவர்)

ஞானநா யகனவர் மொழிதனைத் தேர்ந்துநம் முரைம றுத்தீர்
     ஆனதோர் பான்மையால் நீவிர்மா னுடவராய் அவனி மன்னன்
          சேனையா கிப்புறம் போற்றியே பற்பகற் சேர்திர் பின்னர்
               வானுளோர் புகழவே நோற்றுநம் பக்கலில் வருதி ரென்றான். ......    31

(ஐயன்வாய் மொழி)

ஐயன்வாய் மொழியினால் வீரமொய்ம் புடையவ னாதி யானோர்
     மையல்மா னுடவராய்த் தொல்லைநா ளுடையதோர் வன்மை நீங்கி
          மெய்யெலாம் வியர்வுறப் பதைபதைத் தேங்கியே விழும மிக்குப்
               பொய்யரேம் பிழைபொறுத் தருடியா லென்றுபொன் னடிப ணிந்தார். ......    32

(கமலமார் செய்யசே)

கமலமார் செய்யசே வடியின்மேற் றாழ்ந்துகை தொழுது போற்றிக்
     குமரவேள் விடைதனைப் பெற்றுமா னவரெலாங் கொற்ற மன்னன்
          தமர்களாய் ஒழுகினார் நேமியம் படையுடைத் தரும மூர்த்தி
               அமரர்கோன் இளவலாய் ஆங்கவன் பின்செலும் அமைதி யேபோல். ......    33

(ஆயதோர் காலையின்)

ஆயதோர் காலையின் முசுமுகத் திறையவன் ஆடல் வேற்கை
     நாயகன் பொற்பதம் வந்தியா நிற்பநல் லருள்பு ரிந்தே
          பாயபொன் சுடர்மணித் தோகையம் புரவியும் படைக ளாகும்
               மாயிரும் பூதருந் தானும்அந் நிலைதனில் மறைத லுற்றான். ......    34

வேறு

(மறைந்தனன் குமரன்)

மறைந்தனன் குமரன் ஏக மன்னவன் மகிழ்ச்சி கொண்டு
     சிறந்திடு கருவூர் என்னுந் திருநகர் அரசின் மேவி
          அறந்தரு மாட வீதி அளப்பில புரிவித் தாங்கே
               நிறைந்திடு வீரர் தம்மை நிலைபெற இருத்தி னானே. ......    35

(ஆயவர் தங்கட் கெல்)

ஆயவர் தங்கட் கெல்லாம் அரும்பெறல் ஆக்க முள்ள
     தேயமுங் கரிதேர் வாசித் திரள்களும் வரிசை முற்றுந்
          தூயபல் சனங்க ளாகுந் தொகுதியும் உதவித் தண்ட
               நாயக முதல்வ ராக நல்கினன் ஞால மன்னன். ......    36

(அன்னதோர் காலந்)

அன்னதோர் காலந் தன்னில் அரம்பையர் அவனி யாளும்
     மன்னவர் தம்பால் தோன்றி வளர்தலும் வாகை மொய்ம்பின்
          முன்னவன் முதலோர்க் கெல்லாம் முசுகுந்த வேந்தன் அந்தக்
               கன்னியர் தம்மைக் கூவிக் கடிமணம் இயற்று வித்தான். ......    37

(அந்தமில் வன்மை சான்ற ஆட)

அந்தமில் வன்மை சான்ற ஆடலம் புயத்தோன் புட்ப
     கந்தியென் றுரைபெற் றுள்ள கன்னிகை தன்னை வேட்டுச்
          சிந்தையின் மகிழ்வால் சேர்ந்து சித்திர வல்லி யென்னும்
               பைந்தொடி தன்னை அன்பால் பயந்தனன் பதும மின்போல். ......    38

(அத்தகு பொழுதில்)

அத்தகு பொழுதில் பின்னை அனகனே சனகன் என்னும்
     புத்திரர் தம்மை நல்கிப் புவனியாள் முசுகுந் தற்குச்
          சித்திர வல்லி யென்னுஞ் சீர்கெழு புதல்வி தன்னை
               மெய்த்தகு வதுவை நீரால் விதிமுறை வழாமல் ஈந்தான். ......    39

(ஏனைய வீரர் தாமும்)

ஏனைய வீரர் தாமும் இயல்புளி வழாமல் வேட்ட
     தேனிவர் குழலா ரோடுஞ் சிறந்தஇல் வாழ்க்கை போற்றிப்
          பானலங் குதலைச் செவ்வாய்ப் பாலரை நீல வேற்கண்
               மானனை யாரை நல்கி மனுகுலத் தொன்றி உற்றார். ......    40

(சித்திர வல்லி யென்)

சித்திர வல்லி யென்னுஞ் சீருடைச் செல்வி ஆங்கோர்
     தத்தையை வளர்த்த லோடுந் தண்டகத் தருமன் தேவி
          அத்தனிக் கிளியை வெஃக ஆங்கவன் தூதர் போந்து
               கைத்தலத் ததனைப் பற்றிக் கடிதினில் கொடுபோய் ஈந்தார். ......    41

(அவ்வழி கிள்ளை காணா)

அவ்வழி கிள்ளை காணாள் ஆயிழை அயர்த லோடும்
     எவ்வழி போயிற் றோவென் றிறையவன் உலகின் நாடி
          மைவழி கின்ற மேனி மறலிதன் துணைவி யானாள்
               கைவழி அமருந் தன்மை கதுமென உணர்ந்தான் அன்றே. ......    42

(பூதலம் புரந்த செங்)

பூதலம் புரந்த செங்கோல் புரவலன் வீர மொய்ம்பன்
     ஆதியர் தம்மைக் கூவி அங்ஙனந் தூண்ட அன்னோர்
          ஏதமில் கரிதேர் வாசி எல்லையின் மறவர் சுற்ற
               மேதியங் கடவுள் மூதூர் விரைந்துபோய் வளைந்து கொண்டார். ......    43

(தன்னகர் வளைத)

தன்னகர் வளைத லோடுந் தருமன்வந் தேற்ற காலை
     அன்னவ னொடுபோர் செய்தே அடுமுரண் தொலைச்சி யம்பொன்
          வன்னமென் கிள்ளை தன்னை வாங்கினர் மீண்டு தங்கண்
               மின்னுள மகிழ நல்கி வேந்தற்கு விசயஞ் செய்தார். ......    44

(சித்திர வல்லி பின்னர்)

சித்திர வல்லி பின்னர்ச் சீர்கெழு சூல்கொண் டுற்று
     மெய்த்தகு பலங்காய் வேண்டி வேண்டினள் வினவ லோடு
          முத்தணி அலங்கல் திண்டோள் முசுகுந்த னதுகொண் டேக
               அத்திரு மலைநன் னாட்டுக் களப்பிலோர் தம்மை உய்த்தான். ......    45

(மஞ்சுசூழ் மலைநா)

மஞ்சுசூழ் மலைநா டுள்ளார் மன்னவர் மன்னன் ஆணைக்
     கஞ்சலர் இகழ்த லோடும் ஆடலம் புயனு மேனைச்
          செஞ்சிலை வீரர் தாமுஞ் சென்றனர் அந்நாட் டுள்ள
               வெஞ்சுர மீரொன் பானும் வென்றொரு பகலின் மீண்டார். ......    46

(பூண்டிடு கழற்கால்)

பூண்டிடு கழற்கால் வீரர் பொற்புறு புதல்வி யானாள்
     வேண்டிய தீய பைங்காய் வியத்தக நல்கிப் பின்னர்
          ஈண்டுள தரணி யெல்லாம் ஏகியே திறைகொண் டெங்கும்
               ஆண்டைய மன்னன் கோலும் ஆணையும் நடக்கச் செய்தார். ......    47

(கருமுதிர் கின்ற காமர்)

கருமுதிர் கின்ற காமர் கற்பக வல்லி யன்னாள்
     எரிகிளர் அங்கி வன்மன் என்பதோர் குமரன் தன்னை
          அரியதோர் தவத்தின் சீரால் அளித்தனள் அதனைக் கண்டு
               பெரிதுள மகிழ்ந்து மன்னன் பேரர சாட்சி செய்தான். ......    48

வேறு

(அன்ன காலையில் வலாசுர)

அன்ன காலையில் வலாசுரன் என்பதோ ரவுணன்
     பன்னெ டும்பெருஞ் சேனையுந் தானுமாய்ப் படர்ந்து
          பொன்னி னாட்டினைச் சுற்றியே அடர்த்தலும் புலவோர்
               மன்னர் மன்னவன் அவனுடன் சிலபகல் மலைந்தான். ......    49

(நிருதர் போற்றிய)

நிருதர் போற்றிய வலாசுரன் தன்னொடு நேர்ந்து
     பொருது வென்றிலன் ஆதலால் பூதலம் புரக்குங்
          குருதி வேற்படை முசுகுந்த மன்னனைக் கூவி
               வருதி யென்றொரு தூதனை விடுத்தனன் மகவான். ......    50

(ஏய தூதுவன் இருநில)

ஏய தூதுவன் இருநிலம் புக்கனன் இமையோர்
     நாய கன்பணி உரைத்தலும் நன்றென வினவி
          மாயி ருந்திறல் வீரர்தம் படையொடும் வான்மேற்
               போயி னான்முசு குந்தனென் றுரைபெறும் புகழோன். ......    51

(போன மன்னவன்)

போன மன்னவன் புரந்தரன் பொன்னடி வணங்கித்
     தானை விண்ணவர்க் கதிபனாந் தலைமையைத் தாங்கி
          மானி னங்கள்மேல் மடங்கல்சென் றென்னவல் அவுணர்
               சேனை யங்கடல் யாவையும் இமைப்பினில் செறுத்தான். ......    52

(சுற்று நிற்புறும் அவுண)

சுற்று நிற்புறும் அவுணராஞ் சூழ்பெரும் பௌவம்
     வற்று கின்றுழி வலாசுரன் தன்னொடு மகவான்
          செற்ற நீரொடு சிலபகல் நின்றுபோர் செய்து
               கொற்ற மார்குலி சத்தினால் அவனுயிர் குடித்தான். ......    53

(மன்னு தொல்புகழ் வல)

மன்னு தொல்புகழ் வலனுயிர் கோறலால் வலாரி
     என்ன வோர்பெயர் பெற்றனன் வாகையும் எய்திக்
          கொன்னு னைப்படை முசுகுந்த வேந்தனைக் கொண்டு
               பொன்ன கர்த்திருக் கோயிலில் புரந்தரன் புகுந்தான். ......    54

(காய்ந்த மாற்றலர் தம்)

காய்ந்த மாற்றலர் தம்வலி கடந்தெனைக் ககன
     வேந்த னாக்கினை வீரமும் மேதகு புகழும்
          ஈந்தெ னக்குநற் றுணைவனு மாயினை இதனால்
               ஆந்த ரங்கமாஞ் சுற்றம்நீ அல்லையோ வென்றான். ......    55

(என்று மன்னனை)

என்று மன்னனை நோக்கியே முகமன்கள் இயம்பிக்
     குன்று போலுயர் தன்பெருங் கோயிலுட் கொடுபோய்
          மன்றல் மாண்புன லாடியே மணிக்கலை புனைந்து
               சென்று மால்தொழுந் தேவனைப் பூசனை செய்தான். ......    56

(எயிலை யங்கெரி)

எயிலை யங்கெரி யூட்டிய கண்ணுதல் இமைய
     மயிலும் மைந்தனும் ஒருபுடை மகிழ்வுடன் மேவக்
          கயிலை யின்கணே அமர்தல்போல் இருத்தலுங் கண்டான்
               பயிலும் அன்புடை மன்னவன் பரவச மானான். ......    57

(ஆடி னான்தொழு)

ஆடி னான்தொழு தேத்தினான் அடிகளை முடிமேற்
     சூடி னான்உள முருகினான் துள்ளினான் சுருதி
          பாடி னான்கரங் கொட்டினான் பகரொணா உவகை
               கூடி னான்மொழி குழறினான் பொடிப்புமெய் கொண்டான். ......    58

(சிறந்த வெள்ளியங்)

சிறந்த வெள்ளியங் கிரியின்மேற் கண்ணுதற் செல்வன்
     உறைந்த இப்பெருங் கோலத்தைக் கண்டுகண் டுளத்தே
          நிறைந்த மாமகிழ் வெய்தியே இருந்தனன் நெடுநாள்
               மறந்த னன்கொலோ பிறப்பினான் மயங்கியே என்றான். ......    59

(ஓவி லாமலே ஒரு)

ஓவி லாமலே ஒருபொருள் போற்றுவான் உன்னி
     மேவு கின்றவன் அவசமாய் விழிதுயின் றதுபோல்
          மாவின் மாமுகம் வாங்கியும் மயங்கிய மன்னன்
               தேவ தேவனை நோக்கியே தொழுதிவை செப்பும். ......    60

வேறு

(ஏகனே போற்றி யார்)

ஏகனே போற்றி யார்க்கும் ஈசனே போற்றி அம்மை
     பாகனே போற்றி மேலாம் பரஞ்சுடர் உருவே போற்றி
          மேகமார் களனே போற்றி விடைமிசை வருவாய் போற்றி
               மோகமார் தக்கன் வேள்வி முடித்திடு முதல்வா போற்றி. ......    61

(அம்புயா சனன்மால்)

அம்புயா சனன்மால் இன்னும் அளப்பருந் திறத்தாய் போற்றி
     நம்பனே போற்றி எங்கள் நாதனே போற்றி கோதில்
          செம்பொனே மணியே போற்றி சிவபெரு மானே போற்றி
               எம்பிரான் போற்றி முக்கண் இறைவனே போற்றி போற்றி. ......    62

(பொங்கரா வணிக)

பொங்கரா வணிக ளாகப் புனைதரு புனிதா போற்றி
     அங்கரா கத்திற் பூதி அணிந்திடும் ஆதி போற்றி
          வெங்கரா சலத்தின் வன்றோல் வியன்புயம் போர்த்தாய் போற்றி
               சங்கரா பரமா போற்றி தாணுவே போற்றி போற்றி. ......    63

(முன்னெனும் பொரு)

முன்னெனும் பொருளுக் கெல்லாம் முன்னவா போற்றி முப்பால்
     மன்னுயிர்க் குயிரே போற்றி மறைகளின் முடிவே போற்றி
          என்னைமுன் வலிந்தாட் கொண்டே இருநிலம் விடுத்தாய் போற்றி
               நின்னுருக் காட்டி யென்னை நினைப்பித்த நித்தா போற்றி. ......    64

(எவ்வெவர் தம்மை)

எவ்வெவர் தம்மை யேனும் யாவரே எனினும் போற்றின்
     அவ்வவ ரிடமாக் கொண்டே அவர்க்கருள் தருவாய் போற்றி
          மெய்வரு தெளிவில் உன்னை வெளிப்பட உணர்ந்து ளோர்க்குத்
               தெய்வத போக முத்தி சிறப்பொடு தருவாய் போற்றி. ......    65

(அம்புய மலர்மேல்)

அம்புய மலர்மேல் அண்ணல் அச்சுத னாதி வானோர்
     தம்பதம் எமக்கு நல்குந் தற்பரா என்றே யாரும்
          நம்புறு பொருட்டால் வேதம் நவின்றிட அடைந்தோர்க் கெல்லா
               உம்பர்தம் பதமும் ஈயும் உலகுடை முதல்வா போற்றி. ......    66

(உறைதரும் அமரர்)

உறைதரும் அமரர் யாரும் உழையராய்ச் சூழ நாப்பண்
     மறைபயில் பெரியோ ருற்று வழிபட இருந்தாய் போற்றி
          அறுவகை ஐந்தும் ஆறு மாகிய வரைப்பின் மேலாம்
               இறைவனே போற்றி போற்றி என்பிழை பொறுத்தி என்றான். ......    67

(இவைமுசு குந்தன்)

இவைமுசு குந்தன் கூற எம்பிரான் கருணை செய்தே
     அவன்முகந் தன்னை நோக்கி ஆழியான் அளப்பில் காலம்
          உவகையால் வழிபா டாற்றி உம்பர்கோன் இடத்தில் வைத்தான்
               புவிதனிற் கொடுபோய் நம்மைப் பூசனை புரிதி என்றான். ......    68

(என்றிவை முக்கண்)

என்றிவை முக்கண் மூர்த்தி இந்திரன் கேளா வண்ணம்
     நன்றருள் புரித லோடும் நனிபெரு மகிழ்ச்சி யெய்தி
          உன்றிரு வுளமீ தாயின் உய்ந்தனன் அடியேன் என்னா
               வென்றிகொள் மன்னர் மன்னன் விம்மித னாகி யுற்றான். ......    69

(இந்திரன் அமலன்)

இந்திரன் அமலன் பூசை இவ்வழி முடித்த பின்னர்ச்
     செந்தழல் ஓம்பி ஏனைச் செய்கடன் புரிந்து வேறோர்
          மந்திரம் புகுந்து தேனு வருகென வல்லை கூவி
               வெந்திறல் மன்னற் கந்நாள் விருந்துசெய் வித்தான் அன்றே. ......    70

(விருந்துசெய் வித்த)

விருந்துசெய் வித்த பின்னர் விசித்திரக் கலையும் பூணுந்
     தெரிந்திடு மணியும் முத்தும் தெய்வதப் படையும் மற்றும்
          பரிந்துடன் உதவி இன்னும் வேண்டுவ பகர்தி என்னப்
               புரந்தரன் அருள லோடும் புரவலன் இதனைச் சொல்வான். ......    71

(ஏவருந் தெரிதல் தேற்)

ஏவருந் தெரிதல் தேற்றா திருந்திடும் இமையா முக்கட்
     பாவையோர் பாகன் தன்னைப் பரிவொடு கொடுத்தி ஐய
          பூவுல கதனின் யான்போய்ப் பூசனை புரிதற் கென்னத்
               தேவர்கள் முதல்வன் கேளா இனையன செப்ப லுற்றான். ......    72

(உந்தியால் உலகைத்)

உந்தியால் உலகைத் தந்த ஒருதனி முதல்வன் முன்னம்
     மைந்தர்தாம் இன்மை யாலே மன்னுயிர்த் தொகுதிக் கெல்லாந்
          தந்தையாய் இருந்த தங்கோன் சரணமே அரண மென்னாச்
               சிந்தைசெய் தூழி காலஞ் செய்தவம் இயற்றி யிட்டான். ......    73

(தவமுழந் திருந்த)

தவமுழந் திருந்த காலைச் சாரதப் புணரி சுற்றக்
     கவுரியுந் தானும் ஐயன் கருணையால் வந்து தோன்றப்
          புவிதனை அளந்த மாயோன் பொள்ளென எழுந்து போற்றிச்
               சிவனடி வணக்கஞ் செய்து செங்கையால் தொழுது நின்றான். ......    74

வேறு

(மாதொரு பாகன் மகிழ்)

மாதொரு பாகன் மகிழ்ந்தருள் செய்து
     நீதவ மாற்றி நெடும்பகல் நின்றாய்
          ஏதிவண் வேண்டும் இயம்புதி யென்னச்
               சீதரன் இன்னன செப்புத லுற்றான். ......    75

(அந்தமில் ஆயுவும்)

அந்தமில் ஆயுவும் ஆருயிர் காப்புஞ்
     செந்திரு வோடுறை செல்வமும் ஈந்தாய்
          மைந்தனி லாமல் வருந்தினன் எந்தாய்
               தந்தரு ளாய்தமி யேற்கினி என்றான். ......    76

(குன்றினை ஆற்றிடு)

குன்றினை ஆற்றிடு கோன்இவை செப்ப
     நன்றென வேநகை யாநவை இல்லா
          ஒன்றொரு செம்மல் உனக்குத வுற்றாம்
               என்றருள் செய்தனன் யாரினும் மேலோன். ......    77

(கழையிசை போற்று)

கழையிசை போற்று கருங்கடல் வண்ணன்
     முழுதுல கீன்றிடு முற்றிழை பாதந்
          தொழுதிலன் நின்று துதித்திலன் அன்பால்
               வழிபடு நீரின் வணங்கிலன் மாதோ. ......    78

வேறு

(முறையி னால்தன)

முறையி னால்தனக் கிளையவள் என்றே
     முன்னி னன்கொலோ மூலமும் நடுவும்
இறுதி யும்மிலாப் பரமனுக் கெம்போல்
     இவளு மோர்சத்தி யெனநினைந் தனனோ
மறுவி லாமலை மகளென உளத்தே
     மதித்த னன்கொலோ மாயவன் கருத்தை
அறிகி லேம்உமை யம்மைபாற் சிறிதும்
     அன்பு செய்திலன் முன்புசெய் வினையால். ......    79

(ஆன்ற ஐம்புலன்)

ஆன்ற ஐம்புலன் ஒருவழிப் படுத்தி
     ஆர்வம் வேரறுத் தையமொன் றின்றி
ஊன்தி ரிந்திடி னுந்நிலை திரியா
     உண்மை யேபிடித் துலகங்கண் முழுதும்
ஈன்ற வெம்பெரு மாட்டியை நீக்கி
     எம்பி ரானையே வழிபடும் இயற்கை
மூன்று தாளுடை ஒருவனுக் கல்லால்
     ஏனை யோர்களால் முடியுமோ முடியா. ......    80

(அன்ன காலையில் எம்பெரு)

அன்ன காலையில் எம்பெரு மாட்டி
     ஆழி யம்படை அண்ணலை நோக்கி
என்னை நீயிவண் அவமதித் தனையால்
     எம்பி ராற்குநீ அன்புளன் அன்றால்
முன்ன நீபெறு மதலையும் ஐயன்
     முனிவின் ஒல்லையின் முடிந்திட என்னாப்
பன்ன ருங்கொடு மொழிதனை இயம்பிப்
     பராப ரன்தனை நோக்கியே பகர்வாள். ......    81

(ஆன தோர்பரப்)

ஆன தோர்பரப் பிரமமும் யானே
     அல்ல தில்லையென் றறிவிலாப் பேதை
மானு டப்பெரும் பசுக்களை யெல்லாம்
     மருட்டி யேதிரி வஞ்சகன் முன்னம்
ஞான நீரினார் அறிவினால் அன்றி
     நணுகு றாதநீ அணுகிநிற் பதுவோ
ஊனு லாவிய உயிரினுக் குயிராம்
     ஒருவ செல்லுதும் வருகென உரைத்தாள். ......    82

(இன்ன வாறுரைத்)

இன்ன வாறுரைத் தெம்பெரு மாட்டி
     எம்பி ரான்தனைக் கொண்டுபோ மளவில்
அன்ன தன்மைகண் டச்சுதக் கடவுள்
     அலக்கண் எய்தியே அச்சமுற் றயர்ந்து
தன்னு ளந்தடு மாறிமெய் பனித்துத்
     தளர்ந்து நேமியந் தண்கரைக் கணித்தாய்
மன்னு பல்பொருட் கலந்தனைக் கவிழ்த்த
     வணிக னாமென வருந்தினன் மாதோ. ......    83

(அம்மை தன்பொருட்)

அம்மை தன்பொருட் டால்இடை யூறிங்
     கடைந்த தென்றுமால் அகந்தனில் உன்னி
எம்மை யாளுடை இறையவன் தனையும்
     இறைவி தன்னையும் இளங்கும ரனையும்
மெய்மை சேர்வடி வாகஆங் கமைத்து
     வேத வாகம விதிமுறை வழாமற்
பொய்மை தீர்ந்திடும் அன்பினாற் பூசை
     புரிந்து பின்னரும் வருந்தியே நோற்றான். ......    84

வேறு

(அனைய தன்மையால்)

அனைய தன்மையால் ஆண்டுபல் லாயிர கோடி
     புனித னாகியே நோற்றனன் அதுகண்டு புழுங்கி
          முனிவ ராயுளோர் இன்னமும் வருகிலன் முதல்வன்
               இனிய ருந்தவஞ் செய்பவர் இல்லையால் என்றார். ......    85

(அந்த வெல்லையில்)

அந்த வெல்லையில் சத்தியுஞ் சிவமுமாய் அனைத்தும்
     வந்தி டும்பரி சளித்தவர் இருவரும் வரலுஞ்
          சிந்தை யின்மகிழ் வெய்தியே அம்மைசே வடியின்
               முந்தி யோடியே வணங்கினன் முழுதொருங் குணர்ந்தோன். ......    86

(இறைவி தாள்மலர்)

இறைவி தாள்மலர் பணிந்தபின் எம்பிரான் பதமும்
     முறையி னாற்பணிந் திருவர்தஞ் சீர்த்திகள் முழுதும்
          மறையின் வாய்மையால் பன்முறை யால்வழுத் துதலும்
               நிறையும் நல்லருள் புரிந்தனன் தனக்குநே ரிலாதான். ......    87

(மாது நீயிவற் கருள்)

மாது நீயிவற் கருள்புரி யென்னஅம் மாது
     சீத ரன்தனை நோக்கியே நம்பெருந் தேவன்
          ஓதும் வாய்மையும் யான்முனிந் துரைத்திடும் உரையும்
               பேதி யாவினி யாவரே அன்னவை பெயர்ப்பார். ......    88

(எங்கள் நாயகன்)

எங்கள் நாயகன் விழிபொழி அங்கியால் இறந்து
     துங்க மேன்மைபோய்ப் பின்முறை முன்புபோல் தோன்றி
          உங்குன் மாமகன் இருக்கவென் றுரைத்தனள் உமையாள்
               அங்க தாகவென் றருளியே மறைந்தனன் ஐயன். ......    89

(அம்மை தன்னுடன்)

அம்மை தன்னுடன் எம்பிரான் மறைதலும் அண்ணல்
     விம்மி தத்தொடு தன்பதி புகுந்துவீற் றிருப்ப
          மைம்ம லிந்திடு மெய்யுடைக் காமவேள் வாரா
               இம்மெ னக்கடி துதித்தனன் அவன்மனத் திடையே. ......    90

வேறு

(வந்திடுங் காமவேள்)

வந்திடுங் காமவேள் வடிவுடைக் காளையாய்க்
     கந்தமார் பூங்கணை கன்னல்விற் கைகொடே
          மைந்தரா னோர்களும் மாதருங் காமமேற்
               புந்திவைத் திடும்வகை போர்புரிந் துலவினான். ......    91

(தண்ணிழற் குடை)

தண்ணிழற் குடையெனச் சசிபடைத் துடையவன்
     எண்ணமற் றொருபகல் யார்க்குமே லாகிய
          கண்ணுதற் பகவன்மேற் கணைமலர் சிதறியே
               துண்ணெனத் துகளதாய்த் தொலைதலுற் றானரோ. ......    92

(பூழியாய் மாண்டு)

பூழியாய் மாண்டுளான் பொருவிலா நல்லருள்
     ஆழியான் ஆணையால் அருவொடே உருவமாய்
          வாழிசேர் தொல்லைநாள் வளனொடு மன்னினான்
               சூழிமால் கிரிதருந் தோகைசொல் தவறுமோ. ......    93

(நிற்பமற் றித்திறம்)

நிற்பமற் றித்திறம் நேமியான் முன்னைநாள்
     அற்புடன் வழிபடும் அமலையைக் குமரனைத்
          தற்பரக் கடவுளைத் தனதுமார் பிற்கொடே
               பற்பகல் பணியின்மேல் பாற்கடல் துஞ்சினான். ......    94

(நீடவே துயிலுமால்)

நீடவே துயிலுமால் நெட்டுயிர்ப் பசைவினால்
     பீடுசேர் நாகணைப் பேருயிர்ப் பசைவினால்
          பாடுசூழ் தெண்டிரைப் பாற்கடல் அசைவினால்
               ஆடியே வைகினார் அலகிலா ஆடலார். ......    95

(அன்னதோர் அமைதியில் அசு)

அன்னதோர் அமைதியில் அசுரசே னைக்கெலாம்
     மன்னனாய் உற்றுளான் வாற்கலி என்பவன்
          என்னைவா னவரொடும் ஈடழித் தமர்தனில்
               முன்னைநாள் வென்றனன் முடிவிலா மொய்ம்பினால். ......    96

(அத்திறங் கண்டுநான்)

அத்திறங் கண்டுநான் அமரரோ டேகியே
     பத்துநூற் றுத்தலைப் பாந்தள்மேல் துயில்கொளுஞ்
          சுத்தனைப் போற்றியே தொழுதுவாற் கலியினால்
               எய்த்தனம் காத்தியால் எம்மைநீ என்றனன். ......    97

(நஞ்சுபில் கெயிறுடை)

நஞ்சுபில் கெயிறுடை நாகமாம் பள்ளிமேல்
     துஞ்சும்வா லறிவினான் துயிலைவிட் டேயெழீஇ
          அஞ்சலீர் உங்களுக் கல்லலே ஆற்றிய
               வஞ்சனா ருயிர்தனை வல்லையுண் டிடுதுமால். ......    98

(என்றுதன் கையமைத்)

என்றுதன் கையமைத் தேழொடே ழுலகமுண்
     டன்றொரா லிலையின்மேல் அறிதுயில் மேவிய
          மன்றலந் தண்டுழாய் மாலைசூழ் மவுலியான்
               ஒன்றுபே ரன்பினால் ஒன்றெனக் குரைசெய்தான். ......    99

(பார்த்தியா லெனதெனும்)

பார்த்தியா லெனதெனும் பைம்பொன்மார் பத்திடை
     மூர்த்தியாய் வைகிய முதல்வியைக் குமரனைத்
          தீர்த்தனைப் பூசனை செய்துநின் தீவினை
               ஆர்த்திநீங் குதியெனா ஆதரத் தருளினான். ......    100

(அன்னவா றருள்செய்தே)

அன்னவா றருள்செய்தே அனையர்மூ வோரையும்
     பொன்னுலா மார்பினும் பொள்ளென வாங்கியே
          என்னதா கியகரத் தீந்தனன் ஈதலுஞ்
               சென்னிமேல் தாங்கினேன் மாதவத் திண்மையால். ......    101

வேறு

(அங்கதற்பின் முறையாக)

அங்கதற்பின் முறையாக அச்சுதன்பாற் கடல்அகன்று
     நங்குழுவெ லாஞ்சூழ நாவலந்தீ வகத்தணுகி
          எங்கள்பிரான் அருள்நடஞ்செய் எல்லையிலாத் தில்லைதனில்
               துங்கமணி மன்றுதனைத் தொழுதுபர வசமானான். ......    102

(செல்லரிய பரவச)

செல்லரிய பரவசமாய்த் திருமுன்னே வீழ்ந்திறைஞ்சித்
     தொல்லைதனில் அறிவிழந்து துணைவிழிகள் புனல்பெருகப்
          பல்லுயிர்க்கும் உயிராகும் பரமசிவ பூரணத்தின்
               எல்லைதனில் புக்கழுந்தி எழுந்திலன்ஈ ரிருதிங்கள். ......    103

(இத்திறத்தால் அவச)

இத்திறத்தால் அவசமதாய் ஈறுமுதல் நடுவுமிலா
     அத்தனது திருவடிக்கீழ் அடங்கியே ஆணையினால்
          மெய்த்துரியங் கடந்தவுயிர் மீண்டுசாக் கிரத்தடையத்
               தத்துவமெய் யுணர்ச்சியெலாந் தலைத்தலைவந் தீண்டினவால். ......    104

(கண்டுயில்வான் எழு)

கண்டுயில்வான் எழுந்ததெனக் கதுமெனமா யோன்எழுந்து
     புண்டரிகப் பதந்தொழுது போற்றிசெய்து புறத்தேகித்
          தெண்டிரைசூழ் புவிக்கரசு செலுத்தியவாற் கலியுடனே
               மண்டுபெருஞ் சமர்செய்து வல்லைதனில் உயிர்உண்டான். ......    105

(வாற்கலிதன் உயிரு)

வாற்கலிதன் உயிருண்டு வாகைபுனைந் தேதிருமால்
     சீர்க்கருணை நெறியதனால் தேவருக்கும் என்றனக்கும்
          ஏற்கும்வகை விடையுதவி இம்மெனவே மறைந்தேகிப்
               பாற்கடலில் பணியணைமேற் பண்டுபோல் கண்வளர்ந்தான். ......    106

(தேவர்குழாத் தொடு)

தேவர்குழாத் தொடுமீண்டு சிறந்திடும்இத் துறக்கத்தில்
     ஆவலுடன் வந்தேயான் அன்றுமுதல் இன்றளவும்
          பூவைநிறங் கொண்டபுத்தேள் பொன்மார்பில் வீற்றிருந்த
               மூவரையும் அருச்சித்தேன் முதுமறைநூல் விதிமுறையால். ......    107

(மன்னர்க்கு மன்ன)

மன்னர்க்கு மன்னவநீ வழிபடுதல் காரணமாத்
     தன்னொப்பி லாதாரைத் தருகென்றாய் தந்திடுவ
          தென்னிச்சை யன்றேமால் இசைவுனக்குண் டாமாகில்
               பின்னைத்தந் திடுவனெனப் பெருந்தகையோன் பேசினனால். ......    108

(பேசுதலும் முசுகுந்)

பேசுதலும் முசுகுந்தன் பெயர்ந்துபாற் கடலிடைபோய்க்
     கேசவனை அடிவணங்கிக் கிட்டிநின்று வேண்டுதலும்
          வாசவன்தன் இடந்தன்னில் வைத்திடும்நம் முயிர்க்குயிரைப்
               பூசனைசெய் கொடுபோந்து பூதலத்தி னிடையென்றான். ......    109

(நன்றெனவே இசை)

நன்றெனவே இசைவுகொண்டு நாரணனை விடைகொண்டு
     சென்றுபுரந் தரற்குரைப்பச் சிந்தைதளர்ந் தேயிரங்கி
          அன்றுதனை ஈன்றதனிப் புனிற்றாவை அகலுவதோர்
               கன்றெனவே நனிபுலம்பி ஒருசூழ்ச்சி கருதினனால். ......    110

(தேவர்பிரான் அவ்வ)

தேவர்பிரான் அவ்வளவில் தெய்வதக்கம் மியன்செயலான்
     மூவடிவும் மூவிரண்டு முறைவேறு வேறாக
          ஏவர்களும் வியப்பெய்த இமைப்பின்முனம் அமைப்பித்துக்
               காவலன்கை தனிற்கொடுப்பக் கைதவமென் றறிந்தனனே. ......    111

(ஆதியில்விண் ணவ)

ஆதியில்விண் ணவர்தச்சன் அமைத்திடுமூ விருவடிவும்
     பூதலமன் னவன்வாங்கிப் புதல்வனொடுங் கவுரியொடும்
          வீதிவிடங் கப்பெருமான் மேவியதாம் எனஇருந்தும்
               ஏதுமுரை யாநெறியால் இவரவரன் றெனமொழிந்தான். ......    112

(துங்கமுறு முசுகுந்தன்)

துங்கமுறு முசுகுந்தன் சொல்வினவிச் சுடராழிப்
     புங்கவன்தன் மார்பமெனும் பொன்னூசல் ஆட்டுகந்து
          மங்கையொடுங் குமரனொடும் மகிழ்ச்சியொடும் வீற்றிருந்த
               எங்கள்பிரான் தனைக்கொடுவந் திவராமோ என்றனனே. ......    113

(இந்திரன்இவ் வாறு)

இந்திரன்இவ் வாறுரைப்ப இமையாமுக் கட்பகவன்
     முந்துதிறல் முசுகுந்தன் முகநோக்கி நின்பாலில்
          வந்தனமால் எம்மையினி மாநிலத்திற் கொடுபோந்து
               புந்திமகிழ் வாற்பூசை புரிவாயென் றருள்செய்தான். ......    114

(ஊழிநா யகன்மகவா)

ஊழிநா யகன்மகவான் உணராமே இஃதுரைப்பக்
     கேழிலாப் பேருவகை கிடைத்தினிது பணிந்தேத்தி
          ஆழியான் பூசனைகொண் டமர்ந்தவரா மாமிவரை
               வாழியாய் தருகவென வாங்கினன்மன் னவர்மன்னன். ......    115

(வாங்கியபின் இமை)

வாங்கியபின் இமையவர்கோன் மன்னவனை முகநோக்கி
     ஈங்கிவரை அறுவரொடும் இருநிலத்தி னிடைகொடுபோய்ப்
          பூங்கமலா லயமுதலாப் புகல்கின்ற தலந்தன்னில்
               தீங்கறவே வழிபாடு செய்தியென விடைகொடுத்தான். ......    116

(நன்றெனவே விடை)

நன்றெனவே விடைகொண்டு நானிலத்தி னிடையிழிந்து
     தென்றிசையா ரூர்தன்னில் சிவனுறைபூங் கோயில்புக்கு
          மன்றல்கமழ் தண்டுளவோன் வழிபடவீற் றிருந்தோரை
               வென்றியரி யணைமீதில் விதிமுறையால் தாபித்தான். ......    117

(கடனாகை நள்ளாறு)

கடனாகை நள்ளாறு காறாயல் கோளரியூர்
     மடனாக முத்தீனும் வாய்மியூர் மறைக்கானம்
          உடனாகுந் தலம்ஆறில் ஓராறு வடிவுகொண்ட
               படநாக மதிவேணிப் பரஞ்சுடரை அமர்வித்தான். ......    118

(இப்படியே ஒருபகலில்)

இப்படியே ஒருபகலில் எழுவரையுந் தாபித்து
     மெய்ப்பரிவில் வழிபாடு விதிமுறையால் புரிவித்துச்
          செப்பரிய புகழாரூர்த் தேவனுக்கு விழாச்செய்வான்
               முப்புவனங் களும்போற்றும் முசுகுந்தன் முன்னினனால். ......    119

(அந்நாளில் இமையவ)

அந்நாளில் இமையவர்கோன் அருச்சனைசெய் பரம்பொருளைக்
     கொன்னார்வேல் மன்னவன்கைக் கொடுத்ததொரு கொடும்பவத்தால்
          பொன்னாட்டின் திருவிழந்து புலையுருவந் தனைத்தாங்கிக்
               கைந்நாக மிசையூர்ந்து கமலையெனும் பதியடைந்தான். ......    120

(ஆரூரின் மேவியபின்)

ஆரூரின் மேவியபின் அமலன்விழாப் போற்றுதற்குப்
     பாரூருந் திரையூரும் பலவூரும் வருகவென்றே
          வாரூரும் முரசெறிந்து மதக்களிற்றின் மிசையேறித்
               தேரூருஞ் செம்பொன்மணித் திருவீதிப் புடைசூழ்ந்தான். ......    121

(பூங்கமலா புரிவாழும்)

பூங்கமலா புரிவாழும் புங்கவனார்க் கன்னதற்பின்
     ஓங்குதிரு விழாநடத்தி ஒழிந்தபதிப் பண்ணவர்க்கும்
          ஆங்கதுபோல் நிகழ்வித்தே அந்தமில்சீர் முசுகுந்தன்
               பாங்கில்வரும் வீரருடன் பாருலகம் புரந்திருந்தான். ......    122

(ஆண்டுபல அப்பதி)

ஆண்டுபல அப்பதியில் அமலன்விழாச் சேவித்துக்
     காண்டகைய தவம்புரிந்து கடைஞர்வடி வினைநீங்கித்
          தூண்டகைய தோள்மகவான் தொல்லுருவந் தனைப்பெற்று
               மீண்டுசுரர் பதிபுகுந்து விபவமுடன் வீற்றிருந்தான். ......    123

(விண்ணவர்கோன் ஏகி)

விண்ணவர்கோன் ஏகியபின் விரவுபுகழ்க் கருவூரில்
     எண்ணரிய பலகாலம் இறையரசு செலுத்தியபின்
          மண்ணுலகம் புரக்கஅங்கி வன்மனுக்கு முடிசூட்டித்
               துண்ணெனவே நோற்றிருந்து தொல்கயிலை தனையடைந்தான். ......    124

(துங்கமிகு முசுகுந்தன்)

துங்கமிகு முசுகுந்தன் தொல்கயிலை யடைந்தபின்னர்
     எங்கள்விறல் மொய்ம்பினனும் இலக்கருடன் எண்மர்களும்
          தங்கள்சிறார் தமைவிளித்துத் தத்தமது சிறப்புநல்கி
               அங்கிவன்மன் பாலிருத்தி அரியதவம் ஆற்றினரே. ......    125

(மாதவம்எண் ணில)

மாதவம்எண் ணிலஇயற்றி மானுடத்தன் மையைநீங்கி
     ஆதிதனில் அடலெய்தி அருள்முறையால் அனைவர்களும்
          மேதகுசீர்க் கந்தகிரி விரைந்தேகி வேற்கடவுள்
               பாதமலர் பணிந்தேத்திப் பத்திமைசெய் துற்றனரால். ......    126

(ஆகையால் அயன்)

ஆகையால் அயன்அறியா அருமறைமூ லந்தெரிந்த
     ஏகநா யகன்விரதம் எவரேனும் போற்றியிடின்
          ஓகையால் நினைந்தவெலாம் ஒல்லைதனில் பெற்றிடுவர்
               மாகமேல் இமையவரும் வந்தவரை வணங்குவரே. ......    127

ஆகத் திருவிருத்தம் - 10078




(எண் = செய்யுளின் எண்)

*1. மகவான் செம்மல் - சயந்தன்.

*1-2. இம்பர் - இவ்வுலகம்.

*1-3. நீபம் - கடம்பு.

*1-4. வேலவன் விரதம் - முருகக் கடவுளுக்குரிய சஷ்டி விரதம்.

*3-1. எழுவகை வாரந் தன்னுள் - ஞாயிறு முதலிய ஏழு நாட்களில்.

*3-2. வெள்ளி நாள் விரதம் - சுக்கிர வார விரதம்.

*4-1. கோரன் என்னும் நிருதன் - கோரன் என்னும் அசுரன்.

*4-2. புகர் - சுக்கிரன்.

*5-1. ஆசான் - அசுரகுரு.

*5-2. வெள்ளிநாள் விரதந்தன்னை மூன்று யாண்டுநோற்குதி - மூன்று வருடன் சுக்கிரவார விரதந்தன்னை அனுட்டிக்கக் கடவாய்.

*6-1. வெள்ளி முற்றும் - வெள்ளிக்கிழமை முழுவதும்.

*6-2. முன்பின் சென்றிடும் இரண்டு நாளும் - வியாழனும் சனியும் ஆகிய இரு தினங்களிலும்.

*6-3. திவாவினில் - பகலில் மாத்திரம்.

*7. ஐயன் - முருகன்.

*7. மாற்றலன் - இங்குக் கோரன் என்னும் அசுரன்.

*8-1. வாரிச மலர் - தாமரை மலர்.

*8-2. ஓர் எழு முனிவர் - சத்தவிருடிகள்.

*9-1. பார்ப்பதி - பார்வதி.

*9-2. முன்னோன் - விநாயகன்.

*9-3. மேற்பட - உயர்ந்தோனாக.

*10-1. ஆறு மாமுகத்து நம்பி - சண்முகக்கடவுள்.

*10-2. கார்த்திகை நாள் நோன்பு - கார்த்திகை விரதம்.

*11-1. பரணி நாள் - பரணி நட்சத்திரம்.

*11-2. அபராணத்தில் - பிற்பகலில்.

*12-1. தூசொடு - கட்டிய ஆடையுடன்.

*12-2. கயம் - குளம்.

*12-3. வெண்கலை - வெள்ளை வஸ்திரம்.

*13-1. மறலியா மதித்து - யமனாகக் கருதி.

*13-2. உன்னி - நினைத்து.

*13-2. பாரணம் - விரத முடிவில் உண்ணுதல்.

*15-1. ஐம்பதிற்று இருவர் -நூறுபேர்.

*15-2. கடும் பழி - கொடிய பழி.

*16-1. குடபால் - மேற்கு.

*16-2. ஆறு இரு வருடம் - பன்னிரண்டு வருடம்.

*17. இந்த நல் விரதம் - நல்ல இக் கார்த்திகை விரதம்.

*19. ஆரல் நாள் - கார்த்திகை நாள்.

*20-1. வெற்பு - கிரவுஞ்ச மலை.

*20-2. அவுணன் - தாரகன்.

*20-3. துலையின் திங்கள் - ஐப்பசி மாதம்.

*20-4. முற்பகல் ஆதியாக மூவிரு வைகல் - பிரதமை முதலாக ஆறுதினம்.

*21-1. தம்பம் - அக்கினி.

*21-2. பிம்பம் - உருவம்.

*21-3. கும்பம் - கலசம்.

*22-1. கட்டி - வெல்லக்கட்டி.

*22-1. திருப்புகழ் - அழகிய புகழ்.

*22-2. வினாவி - கேட்டு.

*23-1. ஆரணம் - வேதம்.

*23-2. அதன் மற்றை வைகல் - அந்தச் சஷ்டியின் மறுதினம்.

*24-1. குரவன் - இங்கு வசிட்டன்.

*24-2. இறையவன் - முசுகுந்தன்.

*25-1. மஞ்ஞை - மயில்.

*25-2. தானை வீரன் - வீரவாகு.

*26. அந்தமில் பகல் - அளவற்றகாலம்.

*27. முசுமுகமுடையவன் - குரங்கின் முகத்தினையுடைய முசுகுந்த மன்னன்.

*29. நோற்றல் கூடிய - சஷ்டி விரதத்தை நோற்று முற்றுப்பெற்ற.

*30-1. சூர்குலம் - சூரபன்மனுடைய குலம்.

*30-2. பானுவின் வழிவரு சிறு மகன் - சூரியகுலத்தில் தோன்றிய முசுகுந்தன்.

*31. ஞான நாயகன் - முருகக் கடவுள்.

*33-1. மானவர் - வீரர்.

*33-2. தமர் - நண்பர்.

*33-3. அமரர்கோன் இளவல் - உபேந்திரன்.

*35. வீரர்தம்மை - நவவீரர் ஆதியரை.

*37. வாகை மொய்ம்பின் முன்னவன் - வீரவாகுதேவன்.

*38. பதுமமின்போல் - திருமகளைப் போல.

*41-1. தந்தை - கிளி.

*41-2. தருமன் தேவி - எமனுடைய மனைவி.

*42-1. மை - கருமை.

*42-2. மறலி - எமன்.

*43-1. மேதி - எருமை.

*43-2. மேதியங்கடவுள் மூதூர் - எமலோகம்.

*45-1. சூல் - கருப்பம்.

*45-2. பலங்காய் - பழங்களையும் காய்களையும்.

*46-1. சுரம் ஈர் ஒன்பான் - பதினெண் சுரங்கள்.

*46-2. சுரம் - ஊர்.

*47. தீய பைங்காய் - இனிய பலாப்பழம்.

*49. பொன்னின் நாடு - சுவர்க்கம்.

*53. குலிசம் - வச்சிராயுதம்.

*55. ஆந்தரங்கம் - அந்தரங்கம்; நெருங்கிய நண்பு.

*56. முகமன் - உபசார வார்த்தைகள்.

*57. கண்ணுதல் இமைய மயிலும் மைந்தனும் - இது சோமாஸ்கந்தமூர்த்தியினைக் குறிப்பது.

*60. மாவின் மாமுகம் - குரங்கின் முகம்.

*61. மேகமார்களனே - நீலகண்டனே.

*63-1. பொங்கு - சீறும்.

*63-2. அங்கராகத்தில் - பூசும் பரிமணத்திரவியத்தைப் போல.

*63-3. பூதி - விபூதி.

*63-4. கராசலம் - யானை.

*64. முப்பால் மன்னுயிர் - விஞ்ஞானகலர், பிரளயகலர், சகலர் என்னும் மூவகை ஆன்மாக்கள்.

*67. அறுவகை ஐந்தும் ஆறும் - முப்பத்தாறு தத்துவங்கள்.

*68. ஆழியான் - திருமால்.

*70-1. செந்தழல் ஓம்பி - அக்கினி காரியம்செய்து.

*70-2. ஏனைச் செய்கடன் - சண்டேசுவரர் பூசை முதலியன.

*70-3. மந்திரம் - மாளிகை.

*70-4. தேனு - காமதேனு.

*72. இமையாமுக்கண் பாவையோர் பாகன் தன்னை - இங்குச் சோமாஸ்கந்த மூர்த்தியை.

*73. உந்தியால் உலகைத்தந்த ஒருதனி முதல்வன் - திருமால்.

*75-1. நெடும்பகல் - அளவற்ற காலம்.

*75-2. சீதரன் - திருமால்.

*77-1. குன்றினை ஆற்றிடு - கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திய.

*77-2. செம்மல் - ஆண்மகன்.

*78-1. கழை - வேய்ங்குழல்.

*78-2. உலகீன்றிடு முற்றிழை - உமாதேவியார்.

*79. நினைந்தனனோ, ஓ: ஐயவினா.

*80. மூன்றுதாளுடைய ஒருவன் - பிருங்கிமுனிவன்.

*81-1. ஐயன் - இறைவன்.

*81-2. முனிவன் - கோபத்தால்.

*84. இறையவன் தனையும் இறைவி தன்னையும் இளங்குமரனையும் மெய்மை சேர்வடிவு - இது சோமாஸ்கந்தமூர்த்தி உருவம்.

*90. அவன் மனத்திடை - திருமால் மனத்தினின்றும்.

*91-1. பூங்கணை - மலர்க்கணை.

*91-2. கன்னல் வில் - கரும்புவில்.

*92. சசி - சந்திரன்.

*93-1. நல்லருள் ஆழியான் - சிவபெருமான்.

*93-2. சூழிமால்கிரி - சிகரங்களையுடைய பெரிய இமயமலை.

*95. பாடு - பக்கங்களில்.

*98. வாலறிவினான் - தூயவறிவினையுடைய திருமால்.

*100-1. தீர்த்தன் - பரிசுத்தன்.

*100-2. தீவினையார்த்தி - தீவினையாலாகும் துன்பத்தை.

*101. அனையர் மூவோரையும் - சோமாஸ்கந்தமூர்த்தியை.

*102-1. தில்லை - சிதம்பரம்.

*102-2. துங்கமணிமன்று - சிற்சபை.

*103. ஈரிரு திங்கள் - நான்கு மாதம்.

*106. வாகை - வெற்றிமாலை.

*107-1. பூவை - காயாம்பூ.

*107-2. மூவர் - சோமாஸ்கந்த மூர்த்தியை.

*111-1. மூவிரண்டுமுறை - ஆறு முறை.

*111-2. அமைப்பித்து - உண்டாக்கி.

*111-3. கைதவம் - வஞ்சனை.

*112. இவர் அவர் அன்று - இவர் நீர் பூசித்த மூர்த்தி அல்ல.

*113. இவராமோ - இவரோ அவர்.

*114. திறன் - வெற்றியினையுடைய.

*115-1. ஊழிநாயகன் - சிவபெருமான்.

*115-2. கேழிலா - ஒப்பற்ற.

*115-3. வாழியாய் - வாழ்வினையுடையாய்.

*116-1. இவரை அறுவரொடும் - இப்பெருமானை இந்த ஆறுமூர்த்திகளுடன்.

*116-2. கமலாலயம் - திருவாரூர்.

*117. பூங்கோயில் - இது திருவாரூரிலுள்ள சிவாலயத்தின் பெயர்.

*118-1. நாகை - நாகப்பட்டினம்.

*118-2. நள்ளாறு - திருநள்ளாறு.

*118-3. காறாயில் - திருக்காறாயில்.

*118-4. கோளரியூர் - திருக்கோளிலி.

*118-5. வாய்மியூர் - திருவாய்மூர்.

*118-6. மறைக்கானம் - திருமறைக்காடு.

*119-1. ஒரு பகலில் - ஒரே நாளில்.

*119-2. எழுவரையும் - ஏழு மூர்த்திகளையும் (ஏழு தலங்களில்). [திருவாரூரில் வீதிவிடங்கர் என்றும், திருநாகையில் அழகவிடங்கர் என்றும், திருநள்ளாற்றில் நகரவிடங்கர் என்றும், திருக்காறாயிலில் ஆதிவிடங்கர் என்றும், திருக்கோளிலியில் அவனிவிடங்கர் என்றும், திருவாய்மூரில் நீலவிடங்கர் என்றும், திருமறைக்காட்டில் புவனிவிடங்கர் என்றும் இறைவன் பெயர் பெறுவார்.]

*120-1. கொன் - அச்சம்.

*120-2. கைந்நாகம் - ஐராவதம்.

*120-3. கமலை - திருவாரூர்.

*121-1. பாரூரும் திரையூரும் பலவூரும் - பெரிய நகரங்களில் உள்ளவர்களும், கடற்கரை நகரங்களில் உள்ளவர்களும், பற்பல கிராமங்களில் உள்ளவர்களும். பார் - பூமியை, ஊரும் - ஊர்ந்து மோதுகின்ற, திரை - கடல், ஊரும் - சூழ்ந்த, பலவூரும் - பல ஊரிலுள்ளாரும் - என்று கூறினும் அமையும்.

*123-1. கடைஞர் வடிவினை - புலையன் உருவத்தை.

*123-2. விபவம் - செல்வம்.

*124. அங்கிவன்மன் - இவன் முசுகுந்தன் மகன். இங்குக் கூறப்பட்ட முசுகுந்தன் பாகவத புராணன் முதலியவற்றில் கூறப்படும் முசுகுந்தன் அல்ல என்க.

*125. விறல் மொய்ம்பினன் - வீரவாகுதேவன்.

*127. வேதநாயகன் விரதம் - முருகக்கடவுளுக்குரிய சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம் ஆகிய விரதங்கள்.



previous padalam   23 - கந்த விரதப் படலம்   next padalamKandha viradhap padalam

previous kandam   6 - தக்ஷ காண்டம்   next kandam6 - dhaksha kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]