(மருமலர் அயனிவை)
மருமலர் அயனிவை வகுப்ப நாடியே
புரிகுவன் அஃதெனப் புகன்று தாதைதாள்
பரிவொடு சிறுவிதி பணிந்து காசியாந்
திருநகர் அதனிடைச் சேறல் மேயினான். ......
1(சென்றனன் காசியில்)
சென்றனன் காசியில் சிறந்த தொல்மணி
கன்றிகை ஒருபுடை கங்கை வேலையில்
பொன்றிகழ் செஞ்சடைப் புனிதற் காலயம்
ஒன்றுமுன் விதித்தனன் உணர்வு சேர்ந்துளான். ......
2(அருளுரு வாகியே)
அருளுரு வாகியே அகில மாவிகள்
தருவதுங் கொள்வது மாகித் தாணுவாய்
உருவரு வாகிய ஒப்பில் பேரொளித்
திருவுரு வொன்றினைச் சிவனுக் காக்கினான். ......
3(நாயகன் மொழிதரு)
நாயகன் மொழிதரு நவையில் ஆகமம்
மேயின முறைதெரி விரத னாகியே
பாய்புனல் புனைசடைப் பரமன் தாள்மலர்
ஆயிரம் யாண்டுகா றருச்சித் தேத்தினான். ......
4(அருச்சனை புரிதலும்)
அருச்சனை புரிதலும் அயன்தன் காதலன்
கருத்துறும் அன்பினைக் கண்டு கண்ணுதல்
பொருக்கென வெளிப்படப் புகழ்ந்து பொன்னுலாந்
திருக்கழல் வணங்கினன் தெளிவு பெற்றுளான். ......
5(அகந்தைய தாகியே)
அகந்தைய தாகியே ஐய நின்தனை
இகழ்ந்தனன் என்கணே எல்லை யில்பவம்
புகுந்தன அவையெலாம் போக்கி நின்னிடைத்
தகும்பரி சன்பினைத் தருதி யால்என்றான். ......
6(ஆயவை தொலை)
ஆயவை தொலைத்தளித் தவன்தன் பூசையின்
நேயம தாகியே நிமலன் தன்கண
நாயக இயற்கையை நல்கி வல்லையில்
போயினன் தக்கனும் புனிதன் ஆயினான். ......
7வேறு(கங்கைச் சடையான்)
கங்கைச் சடையான் தனைத்தக்கனக் காசி தன்னில்
அங்கர்ச் சனைசெய் திடப்போந்துழி அம்பு யன்மால்
துங்கத் திமையோர் இறையாவருஞ் சூர மாதர்
சங்கத் தவரு மகவெல்லை தணந்து போனார். ......
8(போகுற் றவர்கள்)
போகுற் றவர்கள் அனைவோரும் பொருவில் சீர்த்தி
வாகுற்ற வீரன் சயந்தன்னை வழுத்தித் தங்கட்
காகுற்ற தொல்லைத் தலந்தோறும் அடைந்து மாதோர்
பாகத் தமலன் தனைப்பூசனை பண்ண லுற்றார். ......
9(ஆரா தனைகள்)
ஆரா தனைகள் புரிந்தேஅனை வோரும் எங்கும்
பேரா துநிற்கும் பெருமானருள் பெற்று மெய்யில்
தீராத சின்னங் களுந்தீர்ந்து சிறந்து தத்த
மூரா கியதோர் பதமேவி உறைத லுற்றார். ......
10(மேதக்க தக்கன்)
மேதக்க தக்கன் மகந்தன்னில் விரைந்து புக்காங்
கேதத் தடிசில் மிசைந்தேபொருள் யாவும் ஏற்றுப்
பூதத் தரின்மாய்ந் தெழுந்தேதம் புரிகள் தோறும்
பேதைத் தொழில்அந் தணர்யாரும் பெயர்ந்து போனார். ......
11(என்றிங் கிவைகள்)
என்றிங் கிவைகள் குரவோன்இசைத் திட்டல் கேளா
நன்றென்று சென்னி துளக்குற்று நனிம கிழ்ந்து
குன்றின் சிறைகொய் தவன்தந்த குரிசில் உள்ளத்
தொன்றுங் கவலை இலனாகிஅவ் வும்ப ருற்றான். ......
12ஆகத் திருவிருத்தம் - 9951