(இங்கிது நிற்கமுன்)
இங்கிது நிற்கமுன் இறைவன் வந்துழி
அங்குற நின்றதோர் அமரர் தங்களுட்
செங்கம லத்துறை தேவன் தக்கனாந்
துங்கமில் மைந்தனை நோக்கிச் சொல்லுவான். ......
1(யாதுமுன் னுணர்ந்த)
யாதுமுன் னுணர்ந்தனை யாது செய்தனை
யாதவண் கருதினை யாரிற் பெற்றனை
யாதுபின் செய்தனை யாது பட்டனை
யாதிவண் பெற்றனை யாதுன் எண்ணமே. ......
2(பொன்றுதல் இல்ல)
பொன்றுதல் இல்லதோர் புலவர் யாவர்க்கும்
வன்றிறல் முனிவரர் தமக்கும் வையமேல்
துன்றிய அந்தணர் தொகைக்குந் துண்ணெனக்
கொன்றுயிர் உண்பதோர் கூற்ற மாயினாய். ......
3(சீரையுந் தொலைத்த)
சீரையுந் தொலைத்தனை சிறந்த தக்கனாம்
பேரையுந் தொலைத்தனை பேதை யாகிநின்
ஏரையுந் தொலைத்தனை ஏவல் போற்றுநர்
ஆரையுந் தொலைத்தனை அலக்கண் எய்தினாய். ......
4(நின்னுணர் வல்லது)
நின்னுணர் வல்லது நிகரின் மேலவர்
சொன்னதும் உணர்ந்திலை தொல்லை ஊழினால்
இந்நிலை யாயினை இறையை எள்ளினாய்
முன்னவன் உயர்நிலை முழுதுந் தேர்ந்தநீ. ......
5(இயற்படு வளம்பெறீ)
இயற்படு வளம்பெறீஇ ஈசன் மேன்மைகள்
அயர்த்தனை நின்னள வன்று மையறான்
உயிர்த்தொகை தமக்கெலாம் உள்ள தாதலான்
மயக்கினை அடைந்தனை மற்றென் செய்திநீ. ......
6(முற்றுணர் வெய்தியே)
முற்றுணர் வெய்தியே முழுத ளித்திடப்
பெற்றவெங் கண்ணினும் பெரிது மாமயக்
குற்றன முற்பகல் உதுகண் டின்றுபோல்
நெற்றியங் கண்ணினான் அருளின் நீக்கினான். ......
7(ஆதலின் அருளுடை)
ஆதலின் அருளுடை அமல நாயகன்
பாதம தருச்சனை பரிவிற் செய்குதி
பேதுறும் இப்பவப் பெற்றி நீக்கியே
போதமொ டின்னருள் புரிவன் என்றலும். ......
8(மைதிகழ் முகத்தினன்)
மைதிகழ் முகத்தினன் மற்ற தற்கிசைந்
துய்திற முணர்த்தினை உங்கள் கண்ணுமுன்
எய்திய மையலும் எம்பி ரானருள்
செய்ததும் இயம்புதி தெளிதற் கென்னவே. ......
9(பொன்னிருஞ் சததள)
பொன்னிருஞ் சததளப் போதின் மீமிசை
மன்னிய திசைமுகன் மதலை மாமுகம்
முன்னுற நோக்கியே முந்துங் கூறினம்
இன்னமும் அக்கதை இயம்பு வோமெனா. ......
10(நாலுள திசைமுக)
நாலுள திசைமுக நாதன் தொல்லைநாள்
மாலொடு பற்பகல் மலைவு செய்துநாம்
மேலதோர் பொருளென விமலன் வந்தருள்
கோலம துன்னியே தொழுது கூறுவான். ......
11வேறு(பத்தினொடு நூறெதிர்)
பத்தினொடு நூறெதிர் படுத்தயுக நான்மை
ஒத்தமுடி வெல்லையென தோர்பகல தாகும்
அத்தகு பகற்பொழுதும் அந்தியொடு செல்ல
நத்தமுறு நான்துயிலின் நண்ணுவன் அவ்வேலை. ......
12(வாளுமொடுங் கும்)
வாளுமொடுங் கும்பரிதி மாமதி யொடுங்கும்
நாளுமொடுங் குந்தமது நாளுமொடுங் குற்றே
கோளுமொடுங் குங்குலிச பாணிமுதல் வானோர்
கேளுமொடுங் கும்புவனி கேடுபடும் அன்றே. ......
13(மண்ணுலகில் ஆரு)
மண்ணுலகில் ஆருயிர் வறந்திறுதி யாகும்
விண்ணுறு பதங்களில் வியன்முனிவர் யாருந்
துண்ணென வெருக்கொடு துளங்கினர்கள் சூழா
எண்ணுசன லோகமிசை எய்துவர்கள் அந்நாள். ......
14(வாரிதிகள் நாற்றிற)
வாரிதிகள் நாற்றிறமும் வல்லையில் எழுந்தே
ஆரியை தவஞ்செய்பதி ஆதியன அல்லாப்
பாரினைய ருந்தியொரு பாகமதன் மேலும்
ஓரெழு பிலத்துலகம் உண்டுலவும் அன்றே. ......
15(ஒண்டிகிரி மால்வரை)
ஒண்டிகிரி மால்வரை உடுத்தநில முற்றுங்
குண்டுறு பிலத்தினொடு கூடும்வகை வீட்டி
அண்டருல குண்டுநிமிர்ந் தப்புறனு மாகி
மண்டுபுன லேயுலகை மாற்றியிடும் அன்றே. ......
16(ஆனதொரு வேலை)
ஆனதொரு வேலையிலொ ராலிலையின் மீதே
மேனிலவு தண்மதி மிலைந்தவன் மலர்த்தாள்
தானகமு றுத்தியொர் தனிக்குழவி யேபோல்
கானுறு துழாய்மவுலி கண்டுயிலு மாதோ. ......
17(கண்டுயிலு கின்றபடி)
கண்டுயிலு கின்றபடி கண்டுசன லோகத்
தண்டுமுனி வோர்புகழ வாங்ஙனம் விழித்தே
பண்டைநிலன் நேடவது பாதலம தாகக்
கொண்டல்மணி மேனியனொர் கோலவுரு வானான். ......
18(கோலமெனு மோரு)
கோலமெனு மோருருவு கொண்டுபில மேகி
ஞாலமெவ ணுற்றதென நாடியது தன்னை
வாலிய வெயிற்றினிடை வல்லைகொடு மீண்டு
மூலமென வேநிறுவி மொய்ம்பினொடு போனான். ......
19(அற்பொழுது நாலுக)
அற்பொழுது நாலுகமொ ராயிரமும் ஏக
எற்பொழுது தோன்றிய தியான்துயில் உணர்ந்தே
கற்பனை இயற்றிய கருத்தினினை போழ்தின்
நிற்புழி அடைந்தன நெடும்புணரி எல்லாம். ......
20(அருத்திகெழு பாற்கடல்)
அருத்திகெழு பாற்கடல் அராவணையின் மீதே
திருத்திகழும் மார்புடைய செம்மல்புவி தன்னை
இருத்தினம் எயிற்றினில் எடுத்தென நினைத்தே
கருத்தினில் அகந்தைகொடு கண்டுயிலல் உற்றான். ......
21(ஆனபொழு தத்தினில் அள)
ஆனபொழு தத்தினில் அளப்பிலிமை யோரைத்
தானவரை மானுடவர் தம்மொடு விலங்கை
ஏனைய வுயிர்த்தொகையை யாவையும் அளித்தே
வானகமும் வையகமும் மல்கும்வகை வைத்தே. ......
22(மன்னியலும் இந்திர)
மன்னியலும் இந்திரனை வானரசில் உய்த்தே
அன்னவன் ஒழிந்ததிசை யாளர்களை எல்லாந்
தந்நிலை நிறுத்தியது தன்னைநெடி துன்னி
என்னையல தோர்கடவுள் இன்றென எழுந்தேன். ......
23(துஞ்சலுறு காலைதனி)
துஞ்சலுறு காலைதனில் துஞ்சுமெழும் வேலை
எஞ்சலி லுயிர்த்தொகுதி யாவுமெழும் யானே
தஞ்சமெனை யன்றியொரு தாதையிலை யார்க்கும்
விஞ்சுபொருள் யானென வியந்தெனை நடந்தே. ......
24(மல்லலுறு மேலுலகு)
மல்லலுறு மேலுலகு மாதிரமும் ஏனைத்
தொல்லுலகு மேருவொடு சுற்றுகடல் ஏழும்
ஒல்லென விரைத்தெழும் உயிர்த்தொகையும் அல்லா
எல்லையில் பொருட்டிறனும் யான்நெடிது நோக்கி. ......
25(இப்பொருள் அனைத்து)
இப்பொருள் அனைத்துமுனம் யான்பயந்த என்றால்
ஒப்பிலை யெனக்கென உளத்திடை மதித்தேன்
அப்பொழுதில் ஆரமுத ஆழியிடை யாழிக்
கைப்புயல் அகந்தையொடு கண்டுயிலல் கண்டேன். ......
26(அன்றவனை மாலென)
அன்றவனை மாலென அறிந்தனன் அறிந்துஞ்
சென்றனன் அகந்தையொடு செய்யதிரு வைகும்
மன்றன்மணி மார்பமிசை வண்கைகொடு தாக்கி
இன்றுயில் உணர்ந்திடுதி என்றலும் எழுந்தான். ......
27(ஏற்றெழு முராரிதனை)
ஏற்றெழு முராரிதனை யாரையுரை என்றே
சாற்றுதலும் யாமுனது தாதையறி யாய்கொல்
நாற்றலைகொள் மைந்தவென நன்றென நகைத்துத்
தேற்றிடினும் நீதுயில் தெளிந்திலைகொ லென்றேன். ......
28(தந்தையென வந்தவர்)
தந்தையென வந்தவர்கள் தாமுதவு கின்ற
மைந்தர்கள் தமக்குரைசெய் வாசகம தென்ன
முந்துற வெமக்கிது மொழிந்ததியல் பன்றால்
எந்தையென வேநினைதி யாம்பிரம மேகாண். ......
29(உந்தியிலி ருந்துவரும்)
உந்தியிலி ருந்துவரும் உண்மையுண ராமே
மைந்தனென நீயெமை மனத்தினினை குற்றாய்
இந்தன முதித்திடும் எரிக்கடவு ளுக்குத்
தந்தையது வோவிது சழக்குரைய தன்றோ. ......
30(நின்னுடைய தாதை)
நின்னுடைய தாதையென நீயுனை வியந்தாய்
அன்னதை விடுக்குதி அருந்தவ வலத்தான்
முன்னமொரு தூணிடை முளைத்தனை யவற்றால்
உன்னிலது வேமிக உயர்ந்தபொரு ளாமோ. ......
31(துய்யமக னாம்பிருகு)
துய்யமக னாம்பிருகு சொற்றசப தத்தால்
ஐயிரு பிறப்பினை அடிக்கடி யெடுத்தாய்
மெய்யவை யனைத்தையும் விதித்தனம் விதித்தெங்
கையது சிவந்துளது கண்டிடுதி என்றேன். ......
32வேறு(அன்றவற் கெதிர்புகு)
அன்றவற் கெதிர்புகுந் தனையசொற் புகறலுங்
குன்றெடுத் திடுகரக் கொண்டல்போல் மேனியான்
நன்றெனச் சிரமசைஇ நகைசெயா வெகுளியால்
பொன்றளிர்க் கரதலம் புடைபுடைத் துரைசெய்வான். ......
33(நச்சராப் பூண்டிடு)
நச்சராப் பூண்டிடு நம்பனுன் சென்னியில்
உச்சியந் தலையினை உகிரினாற் களைதலும்
அச்சமாய் வீழ்ந்தனை யதுபடைத் தின்னமும்
வைச்சிலாய் நன்றுநீ மற்றெமை தருவதே. ......
34(நேயமாய் முன்னரே)
நேயமாய் முன்னரே நின்னையீன் றுதவிய
தாயும்யா மன்றியுந் தந்தையும் யாமுனக்
காயதோர் கடவுள்யாம் அடிகள்யாம் மைந்தநம்
மாயையால் இன்றிவண் மதிமயக் குறுதிகாண். ......
35(பொன்னலா தாங்கொ)
பொன்னலா தாங்கொலோ பூணெலாம் இறைபுரி
மன்னலா தாங்கொலோ மாநில மாநிலந்
தன்னலா தாங்கொலோ தகுவதோர் வளமதில்
என்னலா தாங்கொலோ எச்சரா சரமுமே. ......
36(எண்ணுவிப் போனு)
எண்ணுவிப் போனுநான் எண்ணுகின் றோனுநான்
கண்ணுதற் பொருளுநான் காண்டகும் புலனுநான்
நண்ணுதற் கரியன்நான் நாரணக் கடவுள்நான்
விண்ணகத் தலைவன்நான் வேதமும் பொருளுநான். ......
37(ஆதிநான் உருவுநான்)
ஆதிநான் உருவுநான் அருவுநான் இருளுநான்
சோதிநான் அத்தன்நான் தூயன்நான் மாயன்நான்
யாதுநான் பூதநான் யாருநான் சங்கரன்
பாதிநான் அவனுநான் பரமெனும் பொருளுநான். ......
38(என்றுபற் பலவுரைத்)
என்றுபற் பலவுரைத் திடுதலும் யானெதிர்
சென்றுருத் திருவருஞ் செருவினைப் புரிதுமேல்
வென்றியுற் றவரரோ மேலையோர் எழுகென
வன்றிறற் போர்செய்வான் வந்தனன் மாலுமே. ......
39(ஏற்றெழுந் தோர்சிலை)
ஏற்றெழுந் தோர்சிலை ஏந்தியே வாங்கிமால்
கூற்றிரும் படைமுதற் கொடியவெம் படையெலாம்
மாற்றருந் தன்மையால் வல்லையுய்த் திடுதல்கண்
டாற்றினன் குசைகளால் அனையவெம் படைதொடா. ......
40வேறு(ஆங்கவை யழிவுற)
ஆங்கவை யழிவுற அரியுந் தன்படை
வாங்கினன் விடுத்தலும் வருதல் கண்டியான்
பாங்கரின் நின்றவென் படையை அங்கையில்
தாங்கிநின் றுய்த்தனன் தடுத்து மீண்டதே. ......
41(அப்படை மீண்டபின்)
அப்படை மீண்டபின் ஆதி யாகிய
ஒப்பருஞ் சிவனளித் துளது புங்கவர்
எப்பெரும் படைக்குமோ ரிறைவ னாயது
மைப்புயல் மேனிமால் வழுத்தி வாங்கினான். ......
42(மஞ்சன முதலிய)
மஞ்சன முதலிய மறுவில் பூசனை
நெஞ்சுறு புலன்களின் நிரப்பி ஓச்சலும்
எஞ்சலில் அமரர்கள் இரிய மேற்செலும்
நஞ்சினுங் கொடிதென நடந்த வேலையே. ......
43(முன்னமே எனக்கும்)
முன்னமே எனக்கும்அம் முக்கண் நாயகன்
அன்னதோர் படையளித் தருளி னானதை
உன்னியே வழிபடீஇ ஒல்லை யுய்த்தனன்
வன்னிமேல் வன்னிசெல் வண்ண மென்னவே. ......
44(ஒருதிறத் திருவரும்)
ஒருதிறத் திருவரும் உஞற்றி யேவிய
அரனருள் பெரும்படை தம்மில் ஆடல்செய்
தெரிகனற் கற்றைகள் யாண்டுஞ் சிந்தியே
திரிதலுற் றுலகெலாஞ் செற்று லாயவே. ......
45(அப்படை திரிதலும்)
அப்படை திரிதலும் அவைகள் வீசிய
துப்புறழ் கொழுங்கனல் தொல்லை வானினும்
இப்புவி மருங்கினும் ஈண்ட வானவர்
வெப்புற விரிந்தனர் விதிர்ப்புற் றேங்குவார். ......
46(வீண்டனர் ஒருசிலர்)
வீண்டனர் ஒருசிலர் வெதும்பி விம்மியே
மாண்டனர் ஒருசிலர் வந்த நஞ்சமுண்
டாண்டவர் கழலிணை அடைதும் யாமெனாக்
காண்டகு கயிலையின் கண்ணுற் றார்சிலர். ......
47(காரெலாங் கரிந்தன)
காரெலாங் கரிந்தன ககனந் தன்னொடு
பாரெலாம் எரிந்தன பௌவப் பாற்படு
நீரெலாம் வறந்தன நிரந்த பல்லுயிர்ப்
பேரெலாந் தொலைந்தன பின்னும் போர்செய்தேம். ......
48(இந்தவா றமர்புரிந்)
இந்தவா றமர்புரிந் திட்ட காலையில்
தந்தையார் அருளினால் தமியன் மாமுகம்
வந்துநா ரதனெனும் மறுவில் மாமுனி
சிந்தைசெய் தெமக்கிவை செப்பல் மேயினான். ......
49(நீர்முதல் நாமென)
நீர்முதல் நாமென நினைந்து கூறியே
போர்முத லேசில புரிகின் றீர்கொலாம்
ஓர்முதல் அன்றியே இல்லை உங்களில்
ஆர்முதல் இருவரும் அன்ன பண்பினீர். ......
50(பொருசமர் கருதியே)
பொருசமர் கருதியே புகுந்த போழ்தினும்
உரியதோர் படையல துலகந் தீப்பதோர்
வெருவரும் பெரும்படை விடுத்திர் அப்படை
அருளிய கடவுளை அயர்த்திர் போலுமால். ......
51(கடவுளை மறந்தி)
கடவுளை மறந்திரேல் கருதி நீர்பெறும்
அடுபடை நாமமும் அயர்த்தி ரோவது
நெடிதுநும் மனத்தினில் நினைந்து தேற்றுமின்
விடுமினி அமரென விளம்பி மேலுமே. ......
52(வாதியா இன்னுநீர்)
வாதியா இன்னுநீர் மலைதி ரேயெனின்
ஆதியாய் அருவுரு வான தோர்பொருள்
சோதியாய் நடுவுறத் தோன்றுங் காண்டிரென்
றோதியால் எமக்கிவை உணர்த்திப் போயினான். ......
53(போயினன் உரைத்த)
போயினன் உரைத்தசொற் புந்தி கொண்டிலம்
தீயென உருத்திகல் செருக்கு நீங்கலம்
ஆயிர மாண்டுகா றமரி யற்றினம்
மாயிரும் புவனமும் உயிரும் மாயவே. ......
54(இங்கிவை யாவையும்)
இங்கிவை யாவையும் இறுதி யூழியின்
அங்கியின் நடம்புரி அண்ணல் நோக்கியே
தங்களில் இருவருஞ் சமர்செய் கின்றனர்
புங்கவர் தாமெனும் புகழை வெஃகினார். ......
55(அறிவறை போயினர்)
அறிவறை போயினர் அகந்தை உற்றனர்
உறுவதொன் றுணர்கிலர் உண்மை யோர்கிலர்
சிறுவரில் இருவருஞ் சீற்றப் போர்செயா
இறுதிசெய் கின்றனர் உலகம் யாவையும். ......
56(ஈங்கிவர் செயலினை)
ஈங்கிவர் செயலினை இன்னுங் காண்டுமேல்
தீங்குறும் உலகுயிர் சிதைந்து வீடுமால்
ஓங்கிய நந்நிலை உணர்த்தின் ஆயிடைத்
தாங்கரும் வெஞ்சமர் தணிந்து நிற்பரால். ......
57(தம்மையே பொருளென)
தம்மையே பொருளெனச் சாற்று கின்றதும்
வெம்மைசேர் வெகுளியும் வெறுத்து வீட்டியே
செம்மைசேர் மனத்தராய்த் திகழ்வர் தாமெனா
எம்மையா ளுடையவன் எண்ணி னானரோ. ......
58வேறு(ஆன்றதோ ரளவை)
ஆன்றதோ ரளவை தன்னில் அடைந்தது மாகந் தன்னில்
வான்றிகழ் பானாட் கங்குல் மதிபகல் தழுவு நென்னல்
ஞான்றது தனில்யாங் கண்டு நடுக்குற நடுவ ணாகத்
தோன்றினன் கனற்குன் றேபோல் சொல்லரும் பரத்தின் சோதி. ......
59(தோற்றிய செய்ய)
தோற்றிய செய்ய சோதி தொல்லமர் உழந்தி யாங்கண்
மாற்றரும் படைக ளாக வழங்கிய இரண்டும் வௌவி
ஆற்றருந் தன்மைத் தாக அணுகுறா தகன்று போகிச்
சீற்றமுஞ் சமரும் நீங்கிச் சேணுற நோக்கி நின்றேம். ......
60(நிற்றலும் யாங்கள்)
நிற்றலும் யாங்கள் கேட்ப நெடுவிசும் பிடையோர் வார்த்தை
தெற்றென எழுந்த தம்மா சிறுவிர்காள் நுமது வன்மை
பற்றலர் புரமூன் றட்ட பரமனே காண்பான் சோதி
மற்றிதன் அடியும் ஈறும் வரன்முறை தேரு மென்றே. ......
61(கேட்டனம் அதனை)
கேட்டனம் அதனை நெஞ்சில் கிளர்ந்தெழு சீற்றம் யாவும்
வீட்டினம் எனினும் பின்னும் விட்டிலம் அகந்தை தன்னைக்
காட்டிய எமது முன்னோன் காண்பனும் வலியை யென்ன
வீட்டுடன் விசும்பிற் சொற்றார் யார்கொலென் றெண்ணிப் பின்னும். ......
62(ஏணுற எதிர்ந்தி)
ஏணுற எதிர்ந்தி யாஞ்செய் இகலினுக் கிடையூ றாக
நீணில மதனைக் கீண்டு நிமிர்ந்துவான் புகுந்து நீடு
மாணுறு சோதி தானும் மறைமுனி உரைத்த வாறு
காணிய வந்த தெம்மில் கடந்தவான் பொருள்கொல் என்றேம். ......
63(தீதறு காலின் வந்த)
தீதறு காலின் வந்த செந்தழல் அன்றால் ஈது
யாதுமொன் றறிதல் தேற்றாம் இருவரும் இதனை இன்னே
ஆதியும் முடியும் நாடி யன்னது காண்டும் என்னா
மாதவன் தானும் யானும் வஞ்சினம் இசைத்து மன்னோ. ......
64(நீடுவான் உருவி)
நீடுவான் உருவிச் சென்று நிலனுற விடந்து புக்கும்
ஓடிநாம் ஒல்லை தன்னில் உற்றிதற் கடியும் ஈறும்
நாடினால் அவற்றில் ஒன்றும் நலம்பெற முன்னங் கண்டோர்
பீடுயர் தலைவர் ஈதே துணிவெனப் பேசி நின்றேம். ......
65(முடியினைக் காண்பன்)
முடியினைக் காண்பன் என்றே மொழிந்தனன் தமியன் ஏனை
அடியினைக் காண்பன் என்றே அரியும்அங் கிசையா நின்றான்
நடைபயில் மழலை ஓவா நாகிளஞ் சிறுவர் வானில்
சுடர்மலி கதிரைக் கையால் தீண்டுவான் துணியு மாபோல். ......
66(எரியுறழ் தறுகட்)
எரியுறழ் தறுகட் செங்கண் இமிலுடை எருத்தம் யாரும்
உருகெழு துழனிக் கூர்வாய் ஒள்ளெயி றிலங்கு தந்தங்
கருவரை யனைய மேனிக் கடுநடைக் குறுந்தாள் வெள்ளைக்
குரமொடு கண்ணன் அன்றோர் கோலமாங் கோலங் கொண்டான். ......
67(ஒருபது நூற தாகும்)
ஒருபது நூற தாகும் யோசனை உகப்பி னோடு
பருமையு மாகும் அந்தப் பகட்டுரு வாகி முன்னந்
தரணியை இடந்து கீழ்போய்த் தடவியே துருவிச் சென்று
நிறைபடு புவனம் யாவும் நீந்தியே போயி னானால். ......
68(பாதலம் நாடி அன்னா)
பாதலம் நாடி அன்னான் படர்தலும் யானும் ஆங்கோர்
ஓதிம வடிவ மாகி ஒல்லையில் எழுந்து மீப்போய்
மேதகு விசும்பின் மேலாம் வியன்புவ னங்கள் நாடிப்
போதலுஞ் சோதி முன்னம் போலமேல் போயிற் றம்மா. ......
69(முன்னமோ ரேன)
முன்னமோ ரேன மாகி முரணொடு புவனி கீண்டு
வன்னியாய் எழுந்த சோதி வந்ததோர் மூலங் காண்பான்
உன்னியே போன மாலோன் ஊக்கியே செல்லச் செல்லப்
பன்னெடுங் காலஞ் சென்ற பாதமுங் காணான் மாதோ. ......
70(நொந்தன எயிறு)
நொந்தன எயிறு மேனி நுடங்கின நோன்மை யாவுஞ்
சிந்தின புனலுண் வேட்கை சேர்ந்தன உயிர்ப்பி னோடும்
வந்தன துயரம் போன வஞ்சினம் அகந்தை வீந்த
முந்தையில் உணர்வு மால்பால் முழுதொருங் குற்ற தன்றே. ......
71(தொல்லையில் உணர்)
தொல்லையில் உணர்ச்சி தோன்றத் துண்ணெனத் தெளிந்த கண்ணன்
அல்லுறழ் புயலின் தோற்றத் தண்ணலங் களிற்றின் யாக்கை
மெல்லவே தரிக்க லாற்றான் வீட்டவுங் கில்லான் மீண்டு
செல்லவும் ஊற்ற மில்லான் சிவனடி சிந்தை செய்தான். ......
72வேறு(என்றும் உணர்வரிய)
என்றும் உணர்வரிய எம்பெருமான் உன்றிருத்தாள்
அன்றி அரணில்லை அவற்றைஅருச் சித்திடவும்
பொன்றிய தென்வன்மை பொறுத்தி குறையடியேன்
ஒன்று முணரேன்என் றுளம்நொந்து போற்றினனே. ......
73(ஆன பொழுதில்)
ஆன பொழுதில் அமலன் திருவருளால்
தேனு லவுதண்டார்த் திருமால் மிடலுடைத்தாய்
ஏன வடிவோ டெழுந்துபுவிப் பால்எய்தி
வானுறுசோ திக்கணித்தா வந்து வணங்கிநின்றான். ......
74வேறு(நின்றான் ஒருபால்)
நின்றான் ஒருபால் நெடுமாலது நிற்க யான்முன்
பின்றா வகையாற் பெருஞ்சூளிவை பேசி வானில்
சென்றா யிரமாண்டு திரிந்து திரிந்து நாடிக்
குன்றாத சோதிக் கொழுந்தின்தலை கூட லேன்யான். ......
75(மீளும் படியும் நினை)
மீளும் படியும் நினையேன் வினையேனும் மீளில்
சூளும் பழுதா மதுவன்றித் துணிந்து முன்னம்
மூளுஞ் சுடரின் முதல்கண்டரி மூர்த்தி யாவான்
ஆளென்பர் என்னை அழிவெய்தும்இவ் வாற்றல் மன்னோ. ......
76(எந்நாள் வரைசெல்)
எந்நாள் வரைசெல் லினுஞ்செல்லுக இன்னும் விண்போய்ப்
பொன்னார் முடிகண் டபின்அல்லது போக லேனென்
றுன்னா வதுகா ணியபோதலும் உள்ளம் வெம்பி
மன்னா வுயிரு முலைந்தாற்றலும் மாண்ட தன்றே. ......
77(கண்ணுஞ் சுழன்ற)
கண்ணுஞ் சுழன்ற சிறைநொந்தன காலும் ஓய்ந்த
எண்ணுந் திரிந்தத துபோதில் எழுந்த சோதி
உண்ணின்ற சித்த ரெனவேபலர் ஒல்லை மேவி
விண்ணின் தலைபோய் இதுவொன்று விளம்ப லுற்றார். ......
78(வானார் பரஞ்சோ)
வானார் பரஞ்சோ தியின்ஈற்றினை வாரி தன்னுள்
மீனார் தரவே திரிகின்றதொர் வெள்ளை அன்னந்
தானா முணருஞ் சிறைபோகித் தளர்ந்து வன்மை
போனாலும் நாட வருகின்றது போலும் அம்மா. ......
79(அன்னந் தனக்கீ)
அன்னந் தனக்கீ தறிவின்மைய தாகும் அல்லால்
பின்னொன் றுளதோ துணிவுற்றதொர் பெற்றி நோக்கின்
இன்னுஞ் சிறிது பொழுதேகின் இறக்கும் இந்த
மன்னுஞ் சுடரைச் சிவனென்று மனங்கொ ளாதோ. ......
80(மாலென் பவனும்)
மாலென் பவனும் நிலங்கீண்டனன் வல்லை யேகி
மூலந் தெரிவான் உணராமல் முரணும் நீங்கிச்
சீலங் குறுகச் சிவனேசர ணென்று பைய
ஞாலந் தனில்வந் தனல்வெற்பினை நண்ணி நின்றான். ......
81(முந்துற் றிதனை)
முந்துற் றிதனை அருள்செய்திடு மூர்த்தி தானே
சிந்தைக்குள் மாசு தனைத்தீர்த்தருள் செய்யின் உய்யும்
இந்தப் பறவை யெனயானும் இதனை நாடிப்
புந்திக்குள் மைய லொழிந்தேயவர்ப் போற்றி செய்தேன். ......
82(ஈசன் அருளால் இவை)
ஈசன் அருளால் இவைகூறினர் ஏக லோடும்
ஆசின் வழியாம் அகந்தைத்திற னாதி யாய
பாசங் களைவீட் டியரன்புகழ் பன்னி ஏத்தி
நேசங் கொடுபூ சனைசெய்ய நினைந்து மீண்டேன். ......
83வேறு(வந்துகண்ணன் தனை)
வந்துகண்ணன் தனையணுகி வான்பொருள்யா மென்றிகலி
முந்துறுவெஞ் சமர்இயற்றி முனிமொழியும் உணர்ந்திலமால்
தந்தைவர வறியாமல் தாள்முடியுந் தேடலுற்றேம்
அந்தமுறும் வேலைதனில் அவன்அருளால் அவற்புகழ்ந்தேம். ......
84(கீண்டுநில னிருவிசு)
கீண்டுநில னிருவிசும்பிற் கிளர்ந்தும்அடி முடியுணரேம்
மீண்டும்அவன் தன்அருளால் மிடல்பெற்று வந்தனமால்
ஈண்டுசிவன் தனைவழிபட் டிருவரும்அன் னவன்தோற்றங்
காண்டுமென யானுரைப்பக் கண்ணனும்அங் கதற்கிசைந்தான். ......
85(இருவரும்அச் சிவ)
இருவரும்அச் சிவனுருவை இயல்முறையால் தாபித்து
விரைமலர்மஞ் சனஞ்சாந்தம் விளக்கழலா தியவமைத்துப்
பொருவருபூ சனைபுரிந்து போற்றிசெய்து வணங்குதலும்
எரிகெழுசோ திக்கணித்தா எந்தைஅவண் வந்தனனே. ......
86(மைக்களமும் மான்)
மைக்களமும் மான்மழுவும் வரதமுடன் அபயமுறும்
மெய்க்கரமும் நாற்புயமும் விளங்குபணிக் கொடும்பூணுஞ்
செக்கருறு மதிச்சடையுஞ் சேயிழையோர் பாகமுமாய்
முக்கணிறை யாங்காண முன்னின்றே யருள்புரிந்தான். ......
87(அவ்விடையா மிரு)
அவ்விடையா மிருவர்களும் அமலன்றன் அடிவணங்கிச்
செவ்விதின்நின் றவன்அருளில் திளைத்திதனைச் செப்பினமால்
மெய்வகையாம் அன்பின்றி விளங்காநின் னியல்மறையும்
இவ்வகையென் றுணராதே யாங்காணற் கெளிவருமோ. ......
88வேறு(புந்தி மயங்கிப் பொரு)
புந்தி மயங்கிப் பொருங்காலை யெம்முன்னில்
செந்தழலின் மேனிகொடு சென்றருளித் தொல்லறிவு
தந்து நினையுணர்த்தித் தாக்கமரும் நீக்கினையால்
எந்திரம்யாம் உள்நின் றியற்றுகின்றாய் நீயன்றோ. ......
89(உன்னை உணரும் உண)
உன்னை உணரும் உணர்வுபுரிந் தாலுன்னைப்
பின்னை யுணர்வேம் பெருமசிறி யேஞ்செய்த
புன்னெறியை யெல்லாம் பொறுத்தியால் தஞ்சிறுவர்
என்ன செயினும் இனிதன்றோ ஈன்றவர்க்கே. ......
90(இன்னாத் தகைசேர் இரு)
இன்னாத் தகைசேர் இரும்பினைவல் லோன்இலங்கும்
பொன்னாக் கியபரிசு போலே எமையருளி
மன்னாக் கினையயர்த்தோம் மற்றுனையும் யாங்களுயிர்
தொன்னாட் பிணித்த தொடர கற்றவல் லோமோ. ......
91வேறு(என்றி யம்பியாம் ஏத்)
என்றி யம்பியாம் ஏத்தலும் எதிருற நோக்கிக்
குன்ற வில்லுடை யொருவன்நீர் செய்தன குறியா
ஒன்றும் எண்ணலீர் நும்பெரும் பூசனை உவந்தாம்
அன்று மக்கருள் பதந்தனை இன்னும்யாம் அளித்தேம். ......
92(வேண்டு நல்வரங் கேண்)
வேண்டு நல்வரங் கேண்மின்நீர் என்றலும் விசும்பில்
தாண்ட வம்புரி பகவநின் சரணமே அரணாப்
பூண்டி டுந்தலை யன்பருள் என்றலும் புரிந்து
காண்ட குந்தழற் சோதியுள் இமைப்பினிற் கலந்தான். ......
93(கலந்த காலையில்)
கலந்த காலையில் யாங்கள்முன் தொழுதெழுங் காலைச்
சலங்கொள் பான்மையின் முன்னுறத் தேடுவான் தழலாய்
மலர்ந்த பேரொளி மீமிசை சுருங்கியே வந்தோர்
விலங்க லாகிய துலகெலாம் பரவியே வியப்ப. ......
94(அன்ன தாஞ்சிவ)
அன்ன தாஞ்சிவ லிங்கரூப ந்தனை அணுகி
முன்ன மாகியே மும்முறை வலஞ்செய்து முறையால்
சென்னி யால்தொழு தேத்தியெம் பதங்களிற் சென்றேம்
பின்னர் எந்தையை மறந்திலம் போற்றுதும் பெரிதும். ......
95(அரியும் யானும்முன்)
அரியும் யானும்முன் தேடும்அவ் வனற்கிரி யனல
கிரியெ னும்படி நின்றதால் அவ்வொளி கிளர்ந்த
இரவ தேசிவ ராத்திரி யாயின திறைவற்
பரவி யுய்ந்தனர் அன்னதோர் வைகலிற் பலரும். ......
96(ஆத லால்அவ னரு)
ஆத லால்அவ னருள்பெறின் அவனியல் அறியும்
ஓதி யாகுவர் அல்லரேல் பலகலை உணர்ந்தென்
வேத நாடியென் இறையும்அன் னவன்நிலை விளங்கார்
பேதை நீரரும் ஆங்கவர் அல்லது பிறரார். ......
97(மோக வல்வினை)
மோக வல்வினை யாற்றியே பவத்திடை மூழ்கும்
பாகர் அல்லவர்க் கெய்திடா தவனருள் பவமும்
போக மாற்றிடு தருமமும் நிகர்வரு புனிதர்க்
காகும் மற்றவன் அருள்நிலை பாகராம் அவரே. ......
98(நீயுந் தொல்வினை)
நீயுந் தொல்வினை நீங்கலின் எம்பிரான் நிலைமை
ஆயுந் தொல்லுணர் வின்றுவந் தெய்திய தவனே
தாயுந் தந்தையுங் குரவனுங் கடவுளுந் தவமும்
ஏயுஞ் செல்வமும் அனையவற் சார்தியா லென்றான். ......
99ஆகத் திருவிருத்தம் - 9939