Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   6 - தக்ஷ காண்டம்   next kandam6 - dhaksha kANdam

previous padalam   20 - யாகசங்காரப் படலம்   next padalamyAgasangkArap padalam

Ms Revathi Sankaran (7.05mb)
(1 - 60)



Ms Revathi Sankaran (7.18mb)
(61 - 120)



Ms Revathi Sankaran (6.66mb)
(121 - 176)




(ஆர்த்தலும் இறைவி)

ஆர்த்தலும் இறைவி தன்னோ டாண்டகை வீரன் வாசத்
     தார்த்தொகை தூங்கும் யாக சாலையுள் ஏக லோடுந்
          தீர்த்தனைத் தலைவி தன்னைத் திசைமுகன் முதலோர் யாரும்
               பார்த்தனர் உளந்துண் ணென்று பதைபதைத் தச்சங் கொண்டார். ......    1

(மடங்கலின் வரவு)

மடங்கலின் வரவு கண்ட மானினம் போன்றும் வானத்
     தடங்கிய உருமே றுற்ற அரவினம் போன்றும் யாக்கை
          நடுங்கினர் ஆற்றல் சிந்தி நகையொரீஇ முகனும் வாடி
               ஒடுங்கினர் உயிரி லார்போல் இவைசில உரைக்க லுற்றார். ......    2

(ஈசனும் உமையு)

ஈசனும் உமையு மேவந் தெய்தினர் என்பார் அன்னார்
     காய்சினம் உதவ வந்த காட்சியர் காணும் என்பார்
          பேசரி தந்தோ அந்தோ பெரிதிவர் சீற்றம் என்பார்
               நாசம்வந் திட்ட தின்றே நம்முயிர்க் கெல்லாம் என்பார். ......    3

(தக்கனுக் கீறும்)

தக்கனுக் கீறும் இன்றே சார்ந்தது போலும் என்பார்
     மிக்கதோர் விதியை யாரே விலக்கவல் லார்கள் என்பார்
          முக்கணெம் பெருமான் தன்னை முனிந்திகழ் கின்ற நீரார்
               அக்கண முடிவர் என்றற் கையமும் உண்டோ என்பார். ......    4

(விமலனை இகழு)

விமலனை இகழு கின்றான் வேள்வியேன் புரிந்தான் என்பார்
     நமையெலாம் பொருளென் றுன்னி நடத்தினன் காணும் என்பார்
          இமையவர் குழுவுக் கெல்லாம் இறுதி யின்றாமோ என்பார்
               உமையவள் பொருட்டால் அன்றோ உற்றதீங் கிதெலாம் என்பார். ......    5

(ஈடுறு பூதர் யாரும்)

ஈடுறு பூதர் யாரும் எங்கணும் வளைந்தார் என்பார்
     ஓடவும் அரிதிங் கென்பார் ஒளித்திடற் கிடமே தென்பார்
          வீடினங் காணும் என்பார் மேலினிச் செயலென் னென்பார்
               பாடுசூழ் அங்கி நாப்பண் பட்டபல் களிறு போன்றார். ......    6

(அஞ்சினர் இனைய)

அஞ்சினர் இனைய கூறி அமரர்கள் அரந்தை கூரச்
     செஞ்சரண் அதனை நீங்காச் சிலபெரும் பூதர் சூழப்
          பஞ்சுறழ் பதுமச் செந்தாட் பத்திரை யோடு சென்று
               வெஞ்சின வீரன் வெய்யோன் வேள்விசெய் வதனைக் கண்டான். ......    7

(இடித்தென நக்குப்)

இடித்தென நக்குப் பொங்கி எரிவிழித் திகலி ஆர்த்துப்
     பிடித்தனன் வயக்கொம் போதை பிளந்தது செம்பொன் மேரு
          வெடித்தது மல்லல் ஞாலம் விண்டன அண்டம் யாவும்
               துடித்தன உயிர்கள் முற்றும் துளங்கினர் சுரர்க ளெல்லாம். ......    8

(எழுகின்ற ஓசை)

எழுகின்ற ஓசை கேளா இடியுண்ட அரவிற் சோரா
     விழுகின்றார் பதைக்கின் றார்வாய் வெருவுகின் றார்கள் ஏங்கி
          அழுகின்றார் ஓடு கின்றார் அழிந்ததோ வேள்வி என்று
               மொழிகின்றார் மீளு கின்றார் முனிவரும் இமையோர் தாமும். ......    9

(வானவர் பிறரிவ்)

வானவர் பிறரிவ் வாறு வருந்தினர் என்னின் அங்கண்
     ஏனையர் பட்ட தன்மை இயம்பரி தெவர்க்கும் என்றால்
          நானது புகல வற்றோ நளிர்புனல் வறந்த காலத்
               தானதோ ருருமே றுற்ற அசுணமாத் தன்மை பெற்றார். ......    10

(வேலையங் கதனின்)

வேலையங் கதனின் மேலாம் வீரருள் வீரன் ஏகி
     மாலயன் தானும் உட்க மகத்தின்முன் அடைத லோடுஞ்
          சீலம தகன்ற கொள்கைச் சிறுவிதி அவற்கண் டேங்கிச்
               சாலவு நடுக்குற் றுள்ளந் தளர்ந்தனன் தலைமை நீங்கி. ......    11

(சாரதர் வளைந்த)

சாரதர் வளைந்த வாறும் சாலைய துடையு மாறும்
     ஆருமங் குற்ற வானோர் அயர்வுறு மாறு நோக்கிப்
          பேரஞர் உழந்து தேறிப் பெருந்திற லாளன் போல
               வீரபத் திரனை நோக்கி விளம்பினன் இனைய தொன்றே. ......    12

(இங்குவந் தடைந்த)

இங்குவந் தடைந்த தென்கொல் யாரைநீ என்ன லோடுஞ்
     சங்கரன் தனது சேயான் தக்கநின் வேள்வி தன்னின்
          அங்கவற் குதவும் பாகம் அருளுதி அதற்கா அந்தப்
               புங்கவன் அருளி னாலே போந்தனன் ஈண்டை யென்றான். ......    13

(இத்திறம் வீரன்)

இத்திறம் வீரன் கூற இருந்தவத் தக்கன் உங்கள்
     அத்தனுக் குலகம் வேள்வி அதனிடை அவியின் பாகம்
          உய்த்திடா தென்ன அங்கண் உறைதரு மறைகள் நான்குஞ்
               சுத்தமார் குடிலை தானுந் துண்ணென எழுந்து சொல்லும். ......    14

(ஈறிலா உயிர்கட்)

ஈறிலா உயிர்கட் கெல்லாம் இறையவன் ஒருதா னாகும்
     மாறிலா அரனே அல்லால் மகத்தினுக் கிறையா யுள்ளோன்
          வேறொர்வா னவனும் உண்டோ வேள்வியில் அவற்கு நல்குங்
               கூறுநீ பாணி யாது கொடுத்தியால் என்ற அன்றே. ......    15

(தேற்றமில் சிதட)

தேற்றமில் சிதட னாகுஞ் சிறுவிதி கேட்ப இன்ன
     கூற்றினால் மறைகள் நான்குங் குடிலையும் ஒருங்கு கூடிச்
          சாற்றலும் அன்னான் நல்காத் தலைமைகண் டிறைவன் தொல்சீர்
               போற்றியங் ககன்று தத்தம் புகலிடம் போய அன்றே. ......    16

(போதலுந் தக்கன்)

போதலுந் தக்கன் தன்னைப் பொலங்கழல் வீரன் பாரா
     வேதமும் பிறவுங் கூறும் விழுப்பொருள் கேட்டி அன்றே
          ஈதியெம் பெருமாற் குள்ள இன்னவி எனலுங் கானில்
               பேதையொ டாடல் செய்யும் பித்தனுக் கீயேன் என்றான். ......    17

(ஆங்கது கேளா)

ஆங்கது கேளா அண்ணல் அம்புய னாதி யாகிப்
     பாங்குற விரவும் வானோர் பல்குழு அதனை நோக்கி
          நீங்களும் இவன்பா லானீர் நிமலனுக் கவிநல் காமல்
               ஈங்கிவன் இகழுந் தன்மை இசைவுகொல் உமக்கும் என்றான். ......    18

(என்றலும் அனையர்)

என்றலும் அனையர் தொல்லூழ் இசைவினால் அதுகே ளார்போல்
     ஒன்றுமங் குரையா ராகி ஊமரின் இருத்த லோடும்
          நின்றதோர் வீரன் வல்லே நெருப்பெழ விழித்துச் சீறி
               நன்றிவர் வன்மை என்னா நகையெயி றிலங்க நக்கான். ......    19

(கடித்தனன் எயிறு)

கடித்தனன் எயிறு செந்தீக் கான்றனன் கனன்று கையில்
     பிடித்திடு மேரு வன்ன பெருந்திறல் கதைய தொன்றால்
          தடித்திடும் அகல மார்பத் தடவரை அகடு சாய
               அடித்தனன் தக்கன் உள்ளம் வெருவர அரிமுன் வீழ்ந்தான். ......    20

(விட்டுமுன் வீழ்த)

விட்டுமுன் வீழ்த லோடும் வீரருள் வீரத் தண்ணல்
     மட்டுறு கமலப் போதில் வான்பெருந் தவிசில் வைகுஞ்
          சிட்டனை நோக்கி அன்னான் சிரத்திடை உருமுற் றென்னக்
               குட்டினன் ஒருதன் கையால் மேல்வருங் குமர னேபோல். ......    21

(தாக்குத லோடும்)

தாக்குத லோடும் ஐயன் சரணிடைப் பணிவான் போல
     மேக்குறு சென்னி சோர விரிஞ்சனும் வீழ அன்னான்
          வாக்குறு தேவி தன்னை மற்றவர் தம்மை வாளால்
               மூக்கொடு குயமுங் கொய்தான் இறுதிநாள் முதல்வன் போல்வான். ......    22

(ஏடுலாந் தொடையல்)

ஏடுலாந் தொடையல் வீரன் இத்திறம் இவரை முன்னஞ்
     சாடினான் அதுகண் டங்கட் சார்தரும் இமையோர் யாரும்
          ஓடினார் உலந்தார் வீழ்ந்தார் ஒளித்திடற் கிடமே தென்று
               தேடினார் ஒருவர் இன்றிச் சிதறினார் கதறு கின்றார். ......    23

வேறு

(இன்னதோர் காலையில் இரி)

இன்னதோர் காலையில் இரிந்து போவதோர்
     மெய்ந்நிறை மதியினை வீரன் காணுறாத்
          தன்னொரு பதங்கொடே தள்ளி மெல்லெனச்
               சின்னம துறவுடல் தேய்த்திட் டானரோ. ......    24

(அடித்தலங் கொடு)

அடித்தலங் கொடுமதி அதனைத் தேய்த்தபின்
     விடுத்தனன் கதிரவன் வெருவி ஓடலும்
          இடித்தெனக் கவுளிடை எற்றி னானவன்
               உடுத்திரள் உதிர்ந்தென உகுப்பத் தந்தமே. ......    25

(எறித்தரு கதிரவன்)

எறித்தரு கதிரவன் எயிறு பார்மிசைத்
     தெறித்திட உயிரொரீஇச் சிதைந்து வீழ்தலும்
          வெறித்தரு பகனெனும் வெய்ய வன்விழி
               பறித்தனன் தகுவதோர் பரிசு நல்குவான். ......    26

(தொட்டலும் பகன்)

தொட்டலும் பகன்விழித் துணையை இத்திறம்
     பட்டது தெரிந்துயிர் பலவும் பைப்பைய
          அட்டிடு கூற்றுவன் அலமந் தோடலும்
               வெட்டினன் அவன்தலை வீர வீரனே. ......    27

(மடிந்தனன் கூற்று)

மடிந்தனன் கூற்றுவ னாக வாசவன்
     உடைந்தனன் குயிலென உருக்கொண் டும்பரில்
          அடைந்தனன் அதுபொழு தண்ணல் கண்ணுறீஇத்
               தடிந்தனன் வீட்டினன் தடக்கை வாளினால். ......    28

(அண்டர்கோன் வீழ்த)

அண்டர்கோன் வீழ்தலும் அலமந் தோடிய
     திண்டிறல் அங்கியைத் திறல்கொள் சேவகன்
          கண்டனன் அங்கவன் கரத்தை ஒல்லையில்
               துண்டம தாகவே துணித்து வீட்டினான். ......    29

(கறுத்திடு மிடறுடை - 1)

கறுத்திடு மிடறுடைக் கடவுட் டேவனை
     மறுத்தவன் நல்கிய வரம்பில் உண்டியும்
          வெறுத்திலை உண்டியால் என்று வீரனும்
               அறுத்தனன் எழுதிறத் தழலின் நாக்களே. ......    30

(துள்ளிய நாவொடு)

துள்ளிய நாவொடுந் துணிந்த கையொடுந்
     தள்ளுற வீழ்ந்திடுந் தழலின் தேவியை
          வள்ளுகி ரைக்கொடு வலங்கொள் நாசியைக்
               கிள்ளினன் வாகையால் கிளர்பொற் றோளினான். ......    31

(அரிதுணைக் கின்ன)

அரிதுணைக் கின்னதோர் ஆணை செய்திடும்
     ஒருதனித் திறலினான் உம்பர் மேலெழு
          நிருதியைக் கண்டனன் நிற்றி யாலெனாப்
               பொருதிறல் தண்டினால் புடைத்திட் டானரோ. ......    32

(வீட்டினன் நிருதி)

வீட்டினன் நிருதியை வீரன் தன்பெருந்
     தாட்டுணை வீழ்தலுந் தடிதல் ஓம்பினான்
          ஓட்டினன் போதிரென் றுரைத்துச் செல்நெறி
               காட்டினன் உருத்திர கணத்தர்க் கென்பவே. ......    33

(ஒழுக்குடன் உருத்தி)

ஒழுக்குடன் உருத்திரர் ஒருங்கு போதலும்
     எழுக்கொடு வருணனை எற்றிச் செங்கையின்
          மழுக்கொடு காலினை மாய்த்து முத்தலைக்
               கழுக்கொடு தனதனைக் கடவுள் காதினான். ......    34

(எட்டெனுந் திசை)

எட்டெனுந் திசையினோன் ஏங்கி வெள்கியே
     அட்டிடுங் கொல்லென அஞ்சிப் போற்றலுங்
          கிட்டினன் வைதனன் கேடு செய்திலன்
               விட்டனன் உருத்திரர் மேவும் தொல்நெறி. ......    35

(தாணுவின் உருக்கொ)

தாணுவின் உருக்கொடு தருக்கு பேரினான்
     நாணொடு போதலும் நடுந டுங்கியே
          சோணித புரத்திறை துண்ணென் றோடுழி
               வேணுவின் அவன்தலை வீரன் வீட்டினான். ......    36

(மணனயர் சாலையின்)

மணனயர் சாலையின் மகத்தின் தெய்வதம்
     பிணையென வெருக்கொடு பெயர்ந்து போதலுங்
          குணமிகு வரிசிலை குனித்து வீரனோர்
               கணைதொடுத் தவன்தலை களத்தில் வீட்டினான். ......    37

(இரிந்திடு கின்றதோர்)

இரிந்திடு கின்றதோர் எச்சன் என்பவன்
     சிரந்துணி படுதலுஞ் செய்கை இவ்வெலாம்
          அரந்தையொ டேதெரிந் தயன்தன் காதலன்
               விரைந்தவண் எழுந்தனன் வெருக்கொள் சிந்தையான். ......    38

(விட்டனன் திண்மை)

விட்டனன் திண்மையை வெய்ய தோர்வலைப்
     பட்டதொர் பிணையெனப் பதைக்குஞ் சிந்தையான்
          மட்டிட அரியஇம் மகமும் என்முனங்
               கெட்டிடு மோவெனா இவைகி ளத்தினான். ......    39

(ஊறகல் நான்முகத்)

ஊறகல் நான்முகத் தொருவன் வாய்மையால்
     கூறிய உணர்வினைக் குறித்து நோற்றியான்
          ஆறணி செஞ்சடை அமலன் தந்திட
               வீறகல் வளம்பல வெய்தி னேனரோ. ......    40

(பெருவள நல்கிய)

பெருவள நல்கிய பிரானைச் சிந்தையிற்
     கருதுதல் செய்திலன் கசிந்து போற்றிலன்
          திருவிடை மயங்கினன் சிவையை நல்கியே
               மருகனென் றவனையான் மன்ற எள்ளினேன். ......    41

(வேதநூல் விதிமுறை)

வேதநூல் விதிமுறை விமலற் கீந்திடும்
     ஆதியாம் அவிதனை அளிக்கொ ணாதெனத்
          தாதையோன் வேள்வியில் தடுத்தி யானுமிவ்
               வேதமாம் மகந்தனை இயற்றி னேனரோ. ......    42

(தந்தைசொல் லாமெ)

தந்தைசொல் லாமெனுந் ததீசி வாய்மையை
     நிந்தனை செய்தனன் நீடு வேள்வியில்
          வந்தவென் மகள்தனை மறுத்துக் கண்ணுதல்
               முந்தையை இகழ்ந்தனன் முடிவ தோர்கிலேன். ......    43

(அன்றியும் வீரன்நின்)

அன்றியும் வீரன்நின் றவியை ஈதியால்
     என்றலும் அவன்தன தெண்ணம் நோக்கியும்
          நன்றென ஈந்திலன் மறையும் நாடிலேன்
               பொன்றிட வந்தகொல் இனைய புந்தியே. ......    44

(அல்லியங் கமலமேல்)

அல்லியங் கமலமேல் அண்ணல் ஆதியாச்
     சொல்லிய வானவர் தொகைக்கு நோற்றிட
          வல்லபண் ணவர்க்கும்வே தியர்க்கும் மற்றவர்
               எல்லவர் தமக்குமோர் இறுதி தேடினேன். ......    45

(துதிதரு மறைப்பொ)

துதிதரு மறைப்பொருள் துணிபு நாடியும்
     நதிமுடி அமலனை நன்று நிந்தியா
          இதுபொழு திறப்பதற் கேது வாயினேன்
               விதிவழி புந்தியும் மேவு மேகொலாம். ......    46

(எனத்தகு பரிசெலாம்)

எனத்தகு பரிசெலாம் இனைந்து தன்னுடை
     மனத்தொடு கூறியே மாளும் எல்லையில்
          நினைத்தறி வின்மையை நிகழ்த்தின் ஆவதென்
               இனிச்செய லென்னென எண்ணி நாடினான். ......    47

(பாடுறு சாரதர் பர)

பாடுறு சாரதர் பரப்பும் வேள்வியின்
     ஊடுறு வீரன துரமுஞ் சீற்றமுஞ்
          சாடுறு பத்திரை தகவுங் கண்ணுறீஇ
               ஓடுவ தரிதென உன்னி யுன்னிமேல். ......    48

(சென்றதோர் உயிரொ)

சென்றதோர் உயிரொடு சிதைந்த தேவர்போல்
     பின்றுவன் என்னினும் பிழைப்ப தில்லையால்
          வன்றிறல் வீரன்முன் வன்மை யாளர்போல்
               நின்றிடல் துணிபெனத் தக்கன் நிற்பவே. ......    49

வேறு

(கண்டு மற்றது வீரப)

கண்டு மற்றது வீரபத் திரனெனுங் கடவுள்
     கொண்ட சீற்றமொ டேகியே தக்கனைக் குறுகி
          அண்ட ரோடுநீ ஈசனை இகழ்ந்தனை அதனால்
               தண்ட மீதென வாள்கொடே அவன்தலை தடிந்தான். ......    50

(அற்ற தோர்சென்னி)

அற்ற தோர்சென்னி வீழுமுன் இறைவன்அங் கையினால்
     பற்றி ஆயிடை அலமரும் பாவகற் பாராத்
          திற்றி ஈதெனக் கொடுத்தனன் கொடுத்தலுஞ் செந்தீ
               மற்றொர் மாத்திரைப் போதினில் மிசைந்தது மன்னோ. ......    51

(மெல்ல வேயெரி)

மெல்ல வேயெரி யத்தலை நுகர்தலும் வேத
     வல்லி யாதியாந் துணைவியர் தக்கன்மா மகளிர்
          சில்லி ருங்குழல் தாழ்வரச் செங்கரங் குலைத்தே
               ஒல்லை யத்திறங் கண்டனர் புலம்பிவந் துற்றார். ......    52

(அந்த வேலையின் மறை)

அந்த வேலையின் மறைக்கொடி தன்னைமுன் னணுகி
     முந்தி வார்குழை இறுத்தனன் ஏனையர் முடியுந்
          தந்த நங்கையர் சென்னியும் வாள்கொடு தடிந்து
               கந்து கங்கள்போல் அடித்தனள் பத்திர காளி. ......    53

(காளி யாம்பெயர்)

காளி யாம்பெயர்த் தலைவியுங் கருதலர் தொகைக்கோர்
     ஆளி யாகிய வீரனும் ஏனைஅண் டர்களைக்
          கேளி ராகிய முனிவரைத் தனித்தனி கிடைத்துத்
               தாளில் ஆர்ப்பினில் தடக்கையில் படைகளில் தடிந்தார். ......    54

(மருத்தும் ஊழியில்)

மருத்தும் ஊழியில் அங்கியும் உற்றென மாதும்
     உருத்தி ரப்பெரு மூர்த்தியும் வந்தென உயர்சீர்
          தரித்த வீரனும் பத்திர காளியுந் தக்கன்
               திருத்தும் வேள்வியைத் தொலைத்தனர் தனித்தனி திரிந்தே. ......    55

(அண்ணல் தன்மை)

அண்ணல் தன்மையுந் தேவிதன் நிலைமையும் அயரும்
     விண்ணு ளோர்சிலர் நோக்கியே யாங்கணும் விரவி
          அண்ணு கின்றனர் யாரையுந் தொலைக்குநர் அம்மா
               எண்ணி லார்கொலாம் வீரனும் இறைவியும் என்றார். ......    56

(இற்றெ லாம்நிகழ்)

இற்றெ லாம்நிகழ் வேலையில் வீரன திசையால்
     சுற்று தானையர் இத்திறம் நோக்கியே சூழ்ந்த
          பொற்றை போலுயர் காப்பினை வீட்டியுள் புகுந்து
               செற்ற மோடுசென் றார்த்தனர் வானுளோர் தியங்க. ......    57

(சூர்த்த நோக்குடை)

சூர்த்த நோக்குடைப் பூதருங் காளிகள் தொகையும்
     ஆர்த்த காலையின் முனிவருந் தேவரும் அயர்ந்து
          பார்த்த பார்த்ததோர் திசைதொறும் இரிதலும் படியைப்
               போர்த்த வார்கட லாமென வளைந்தடல் புரிய. ......    58

வேறு

(தியக்குற்றனர் வெரு)

தியக்குற்றனர் வெருளுற்றனர் திடுக்கிட்டனர் தெருள்போய்த்
     துயக்குற்றனர் பிறக்குற்றனர் தொலைவுற்றனர் மெலியா
          மயக்குற்றனர் கலக்குற்றனர் மறுக்குற்றனர் மனமேல்
               உயக்குற்றனர் இமையோர்களும் உயர்மாமுனி வரரும். ......    59

(அளிக்கின்றனர் தமை)

அளிக்கின்றனர் தமைத்தம்முனை அருண்மக்களை மனையைக்
     களிக்கின்றதொ ரிளையோர்தமைச் சுற்றந்தனைக் கருதி
          விளிக்கின்றனர் பதைக்கின்றனர் வெருக்கொண்டனர் பிணத்தூ
               டொளிக்கின்றனர் அவன்வேள்வியில் உறைகுற்றதொர் மறையோர். ......    60

(அலக்கட்படும் இமை)

அலக்கட்படும் இமையோர்களும் அருமாமுனி வரரும்
     நிலக்கட்படு மறையோர்களும் நெடுநீர்க்கட லாகக்
          கலக்குற்றனர் வரையாமெனக் கரத்தாற்புடைத் துதிர்த்தார்
               உலக்கிற்றிர ளாகச்சினத் துயர்மால்கரி ஒத்தே. ......    61

(முடிக்குந்திறல் பெரு)

முடிக்குந்திறல் பெருங்கோளரி முழங்கிற்றென முரணால்
     இடிக்கின்றனர் கலைமானென இமையோர்தமை விரைவில்
          பிடிக்கின்றனர் அடிக்கின்றனர் பிறழ்பற்கொடு சிரத்தைக்
               கடிக்கின்றனர் ஒடிக்கின்றனர் களத்தைப்பொரு களத்தில். ......    62

(முறிக்கின்றனர் தட)

முறிக்கின்றனர் தடந்தோள்களை முழுவென்புடன் உடலங்
     கறிக்கின்றனர் அடிநாவினைக் களைகின்றனர் விழியைப்
          பறிக்கின்றனர் மிதிக்கின்றனர் படுக்கின்றனர் சங்கங்
               குறிக்கின்றனர் குடிக்கின்றனர் குருதிப்புனல் தனையே. ......    63

(எடுக்கின்றனர் பிள)

எடுக்கின்றனர் பிளக்கின்றனர் எறிகின்றனர் எதிர்போய்த்
     தடுக்கின்றனர் உதைக்கின்றனர் தடந்தாள்கொடு துகைத்துப்
          படுக்கின்றனர் தலைசிந்திடப் படையாவையுந் தொடையா
               விடுக்கின்றனர் மடுக்கின்றனர் மிகுமூனினைப் பகுவாய். ......    64

(நெரிக்கின்றனர் சில)

நெரிக்கின்றனர் சிலர்சென்னியை நெடுந்தாள்கொடு மிதியா
     உரிக்கின்றனர் சிலர்யாக்கையை ஒருசிற்சிலர் மெய்யை
          எரிக்கின்றனர் மகத்தீயிடை இழுதார்கடத் திட்டே
               பொரிக்கின்றனர் கரிக்கின்றனர் புகைக்கின்றனர் அம்மா. ......    65

(அகழ்கின்றனர் சில)

அகழ்கின்றனர் சிலர்மார்பினை அவர்தங்குடர் சூடி
     மகிழ்கின்றனர் நகைக்கின்றனர் மதர்க்கின்றனர் சிவனைப்
          புகழ்கின்றனர் படுகின்றதொர் புலவோர்தமைக் காணா
               இகழ்கின்றனர் எறிந்தேபடை ஏற்கின்றனர் அன்றே. ......    66

(கரக்கின்றதொர் முனி)

கரக்கின்றதொர் முனிவோர்களைக் கண்டேதொடர்ந் தோடித்
     துரக்கின்றனர் பிடிக்கின்றனர் துடிக்கும்படி படிமேல்
          திரக்குன்றுகொ டரைக்கின்றனர் தெழிக்கின்றனர் சிலவூன்
               இரக்கின்றதொர் கழுகின்றொகைக் கீகின்றனர் மாதோ. ......    67

(நெய்யுண்டனர் ததி)

நெய்யுண்டனர் ததியுண்டனர் பாலுண்டனர் நீடுந்
     துய்யுண்டனர் இமையோர்கடந் தொகைக்காமென உய்க்கும்
          ஐயுண்டதொர் அவியுண்டனர் மகவேள்வியில் வந்தே
               நையுண்டவர் உயிர்கொண்டிடு நாளுண்டவ ரெல்லாம். ......    68

(உகத்துக்கடை அன)

உகத்துக்கடை அனலைக்கடல் உவர்நீர்தணித் தெனவே
     மகத்தில்திரி விதவேதியில் வைகுங்கனல் அதனை
          மிகத்துப்புர வுளதென்றுகொல் வியப்பார்தம துயிரின்
               அகத்துப்புனல் விடுத்தேவிரைந் தவித்தார்மகம் அழித்தார். ......    69

(தடைக்கொண்டதொர்)

தடைக்கொண்டதொர் சிறைதோறுள சாலைக்கத வெல்லாம்
     அடைக்கின்றனர் தழலிட்டனர் அவணுற்றவர் தம்மைத்
          துடைக்கின்றனர் கலசத்தொடு தொடர்கும்பமும் விரைவால்
               உடைக்கின்றனர் தகர்க்கின்றனர் உதிர்க்கின்றனர் உடுவை. ......    70

(தவக்கண்டகத் தொகை)

தவக்கண்டகத் தொகையார்த்திடத் தனிமாமகத் தறியில்
     துவக்குண்டய ரணிமேதகு துகடீர்பசு நிரையை
          அவிழ்க்கின்றனர் சிலர்கங்கையின் அலையிற்செல விடுவார்
               திவக்கும்படி வானோச்சினர் சிலவெற்றினர் படையின். ......    71

(பங்கங்கள் படச்செய்தி)

பங்கங்கள் படச்செய்திடு பதகன்மகந் தனிற்போய்க்
     கங்கங்களை முறிக்கின்றனர் கவின்சேரர மகளிர்
          அங்கங்களைக் கறிக்கின்றனர் அறுக்கின்றனர் அதனை
               எங்கெங்கணும் உமிழ்கின்றனர் எறிகின்றனர் எவரும். ......    72

(படுகின்றவர் வரு)

படுகின்றவர் வருமூர்தியும் படர்மானமுந் தேருஞ்
     சுடுகின்றனர் அவர்கொண்டிடு தொலைவில்படைக் கலமும்
          இடுகுண்டல முடிகண்டிகை எவையுந்தழல் இட்டே
               கடுகின்றுக ளாகப்பொடி கண்டார்திறல் கொண்டார். ......    73

(அடிக்கொண்டதொர் மக)

அடிக்கொண்டதொர் மகச்சாலையுள் அமர்வேதியை அடியால்
     இடிக்கின்றனர் பொடிக்கின்றனர் இருந்தோரணத் தொகையை
          ஒடிக்கின்றனர் பெருந்தீயினை உமிழ்கின்றனர் களிப்பால்
               நடிக்கின்றனர் இசைக்கின்றனர் நமனச்சுறுந் திறத்தோர். ......    74

(தருமத்தினை அடுகின்ற)

தருமத்தினை அடுகின்றதொர் தக்கன்றனக் குறவா
     மருமக்களைப் பிடிக்கின்றனர் வாயாற்புகல் ஒண்ணாக்
          கருமத்தினைப் புரிகின்றனர் கரத்தாலவர் உரத்தே
               உருமுற்றெனப் புடைக்கின்றனர் உமிழ்வித்தனர் அவியே. ......    75

(தறிக்கின்றனர் சில)

தறிக்கின்றனர் சிலதேவரைத் தலைமாமயிர் முழுதும்
     பறிக்கின்றனர் சிலதேவரைப் பாசங்கொடு தறியில்
          செறிக்கின்றனர் சிலதேவரைச் செந்தீயிடை வதக்கிக்
               கொறிக்கின்றனர் சிலதேவரைக் கொலைசெய்திடுங் கொடியோர். ......    76

(நாற்றிக்கினும் எறி)

நாற்றிக்கினும் எறிகின்றனர் சிலர்தங்களை நல்லூன்
     சேற்றுத்தலைப் புதைக்கின்றனர் சிலர்தங்களைச் செந்நீர்
          ஆற்றுக்கிடை விடுக்கின்றனர் சிலர்தங்களை அண்டப்
               பாற்றுக்கிரை இடுகின்றனர் சிலர்தங்களைப் பலரும். ......    77

(இடைந்தாரையும் விழு)

இடைந்தாரையும் விழுந்தாரையும் எழுந்தாரையும் எதிரே
     நடந்தாரையும் இரிந்தாரையும் நகையுற்றிட இறந்தே
          கிடந்தாரையும் இருந்தாரையுங் கிளர்ந்தாரையும் விண்மேல்
               படர்ந்தாரையும் அவர்க்கேற்றதொர் பலதண்டமும் புரிந்தார். ......    78

(உலக்குற்றிடு மக)

உலக்குற்றிடு மகங்கண்டழு துளம்நொந்தனர் தளரா
     மலக்குற்றிடும் அணங்கோர்தமை வலிதேபிடித் தீர்த்துத்
          தலக்கட்படு மலர்ப்பொய்கையைத் தனிமால்கரி முனிவால்
               கலக்கிற்றெனப் புணர்கின்றனர் கணநாதரில் சிலரே. ......    79

(குட்டென்பதும் பிள)

குட்டென்பதும் பிளவென்பதும் கொல்லென்பதும் கடிதே
     வெட்டென்பதும் குத்தென்பதும் உரியென்பதும் விரைவில்
          கட்டென்பதும் அடியென்பதும் உதையென்பதும் களத்தே
               எட்டென்பதொர் திசையெங்கணும் எவரும்புகல் வனவே. ......    80

(கையற்றனர் செவி)

கையற்றனர் செவியற்றனர் காலற்றனர் காமர்
     மெய்யற்றனர் நாவற்றனர் விழியற்றனர் மிகவும்
          மையுற்றிடு களமற்றனர் அல்லான்மலர் அயன்சேய்
               செய்யுற்றிடு மகத்தோர்களில் சிதைவற்றவர் இலையே. ......    81

வேறு

(இத்திறம் யாரையும்)

இத்திறம் யாரையும் ஏந்தல் தானையும்
     பத்திரை சேனையும் பரவித் தண்டியா
          மெத்துறும் அளைகெழு வேலை யில்பல
               மத்துறு கின்றென மகத்தை வீட்டவே. ......    82

(செழுந்திரு வுரத்திடை)

செழுந்திரு வுரத்திடை தெருமந் துற்றிடத்
     தொழுந்திறல் பரிசனந் தொலைய மாயவன்
          அழுந்திடு கவலொடும் அயர்வு யிர்த்தவண்
               எழுந்தனன் மகம்படும் இறப்பு நோக்கினான். ......    83

(திருத்தகும் வேள்வி)

திருத்தகும் வேள்வியைச் சிதைவின் றாகயான்
     அருத்தியிற் காத்ததும் அழகி தாலெனாக்
          கருத்திடை உன்னினன் கண்ணன் வெள்கியே
               உருத்தனன் மானநின் றுளத்தை ஈரவே. ......    84

(பரமனை இகழ்ந்திடு)

பரமனை இகழ்ந்திடு பான்மை யோர்க்கிது
     வருவது முறையென மனத்துட் கொண்டிலன்
          தெருமரு முணர்வினன் திறல்கொள் வீரன்மேல்
               பொருவது கருதினன் பொருவில் ஆழியான். ......    85

(உன்னினன் கருடனை)

உன்னினன் கருடனை உடைந்த தாதலுந்
     தன்னுறு சீற்றமாந் தழலை ஆங்கொரு
          பொன்னிருஞ் சிறையபுள் ளரசன் ஆக்கலும்
               அன்னது வணங்கியே அரிமுன் நின்றதே. ......    86

(நிற்றலும் அதன்கையின்)

நிற்றலும் அதன்கையின் நீல மேனியான்
     பொற்றடந் தாள்வையாப் பொருக்கென் றேறியே
          பற்றினன் ஐம்பெரும் படையும் வேள்வியுள்
               முற்றுறு பூதர்மேல் முனிவுற் றேகினான். ......    87

(எடுத்தனன் சங்கினை)

எடுத்தனன் சங்கினை இலங்கு செந்துவர்
     அடுத்திடு பவளவாய் ஆரச் சேர்த்தியே
          படுத்தனன் பேரொலி பரவைத் தெண்டிரைத்
               தடக்கட லுடைந்திடு தன்மை போலவே. ......    88

(மீச்செலும் அமரர்கள்)

மீச்செலும் அமரர்கள் புரிந்த வேள்வியந்
     தீச்சிகை உதவிய சிலையை வாங்கியே
          தாச்செலும் வசிகெழு சரங்கள் எண்ணில
               ஓச்சினன் வீரன துரவுத் தானைமேல். ......    89

(காளிகள் தொகைகளு)

காளிகள் தொகைகளுங் கழுதின் ஈட்டமுங்
     கூளிகள் தொகைகளுங் குழுமி யேற்றெழீஇ
          வாளிகள் தொகைசொரீஇ மாயற் சூழ்வுறா
               நீளிகல் புரிந்தனர் நிகரில் வன்மையார். ......    90

(தண்டுள வலங்கல)

தண்டுள வலங்கலந் தடம்பொற் றோளுடை
     அண்டனுந் தன்படை அனைத்து நேர்கொடு
          மண்டமர் புரிதலை மற்ற எல்லையில்
               கண்டனன் நகைத்தனன் கடவுள் வீரனே. ......    91

(வெருவரும் பெருந்)

வெருவரும் பெருந்திறல் வீரன் தண்டுழாய்
     அரியொடு போர்செய ஆதி நாயகன்
          திரைகடல் உலகமுஞ் சிறிது தானென
               ஒருபெருந் தேரினை உய்த்திட் டானரோ. ......    92

(பாயிரந் தானென)

பாயிரந் தானெனப் பகரும் வேதமா
     மாயிரம் புரவிகள் அளப்பில் கேதனங்
          காயிரும் படைகள்மீக் கலந்த தாகிய
               மாயிருந் தேரவண் வல்லை வந்ததே. ......    93

(தேரவண் வருதலு)

தேரவண் வருதலுந் திறல்கொள் வீரனால்
     பாரிடை வீழ்ந்தயர் பங்க யாசனன்
          ஆருயிர் பெற்றென அறிவு பெற்றெழீஇ
               நேரறு மகம்படு நிகழ்ச்சி நோக்கினான். ......    94

(அரிபொரு நிலைமை)

அரிபொரு நிலைமையும் ஆடல் வீரன
     துருகெழு செற்றமும் உம்பர் தன்னிடை
          இரதம்வந் திட்டதும் யாவும் நோக்கியே
               கருதினன் யானுயுங் கால மீதெனா. ......    95

(விண்ணிழி தேரிடை)

விண்ணிழி தேரிடை விரைவில் நான்முகன்
     நண்ணினன் வலவனின் நகைமுட் கோல்கொடு
          துண்ணென நடத்தியே தொழுது வீரனாம்
               புண்ணியன் தனக்கிது புகறல் மேயினான். ......    96

(நீறணி பவளமெய்)

நீறணி பவளமெய் நிமலன் நிற்கிதோர்
     வீறணி தேர்தனை விரைவில் உய்த்தனன்
          தேறலர் தமையடுந் திறல்கொள் வீரநீ
               ஏறுதி துணைவியோ டென்று போற்றினான். ......    97

(போற்றினன் இரத்தலு)

போற்றினன் இரத்தலும் பொருவில் வேதன்மேல்
     சீற்றமுள் ளதிலொரு சிறிது நீங்கியே
          ஆற்றல்கொள் வீரன்எம் மன்னை தன்னுடன்
               ஏற்றமொ டதன்மிசை இமைப்பின் மேவினான். ......    98

(மேவிய காலையில்)

மேவிய காலையில் வெலற்க ருந்திறல்
     சேவக அடியனேன் திறத்தைக் காண்கெனத்
          தாவகல் தேரினைத் தண்டு ழாய்முடிக்
               காவலன் முன்னுறக் கடாவி உய்ப்பவே. ......    99

(வரனுறு நான்முக)

வரனுறு நான்முக வலவன் உய்த்திடு
     திருமணித் தேர்மிசைத் திகழ்ந்த வீரன்முன்
          ஒருதனி வையமேல் உம்பர்க் காகவே
               புரமட வருவதோர் புராரி போன்றனன். ......    100

(எல்லையில் பெரு)

எல்லையில் பெருந்திறல் இறைவன் ஏறுதேர்
     அல்லியங் கமலமேல் அண்ணல் உய்த்திடச்
          சொல்லருந் தானையின் தொகையை நீக்கியே
               வல்லைசென் றிறுத்ததம் மாயன் முன்னரே. ......    101

(பாருல களவினும்)

பாருல களவினும் பரந்த பைம்பொனந்
     தேரவண் எதிர்தலுந் திருவு லாவிய
          காருறழ் மேனியங் கண்ணன் கண்ணுதல்
               வீரனை நோக்கியோர் மொழிவி ளம்பினான். ......    102

வேறு

(தெழித்த வார்புனற்)

தெழித்த வார்புனற் கங்கையஞ் சடைமுடிச் சிவனைப்
     பழித்த தக்கனை அடுவதல் லாலவன் பாலில்
          இழுக்கில் தேவரை அடுவதென் வேள்வியை எல்லாம்
               அழித்த தென்னைநீ புகலுதி யாலென அறைந்தான். ......    103

(பாடல் சான்றிடு)

பாடல் சான்றிடு மாலிது புகறலும் பலரும்
     நாடு தொல்புகழ் வீரன்நன் றிதுவென நகையா
          ஈடு சேர்இமில் ஏற்றுடன் வயப்புலி யேறொன்
               றாடல் செய்தல்போல் ஒருமொழி உரைத்தனன் அன்றே. ......    104

(எல்லை இல்லதோர் பர)

எல்லை இல்லதோர் பரமனை இகழ்ந்தவன் இயற்றும்
     மல்லல் வேள்வியில் அவிநுகர்ந் தோர்க்கெலாம் மறைமுன்
          சொல்லுந் தண்டமே புரிந்தனன் நின்னையுந் தொலைப்பாம்
               வல்லை யேல்அது காத்தியென் றனன்உமை மைந்தன். ......    105

(வீரன் இங்கிது புக)

வீரன் இங்கிது புகறலுஞ் செங்கண்மால் வெகுண்டு
     பார வெஞ்சிலை குனித்தனன் நாணொலி படுத்தி
          யாரும் விண்முகில் ஒன்றுதன் வில்லொடும் அப்பு
               மாரி பெய்தெனப் பகழியால் பூதரை மறைத்தான். ......    106

(கணங்கள் தம்மிசை)

கணங்கள் தம்மிசை மால்சரம் பொழிதலுங் காணூஉ
     அணங்கு தன்னொடு நகைசெய்து வீரனாம் அமலன்
          பணங்கொள் பஃறலைப் பன்னகக் கிறைவனாற் படைத்த
               குணங்கொள் மேருவே அன்னதோர் பெருஞ்சிலை குனித்தான். ......    107

(செற்ற மீக்கொள ஐய)

செற்ற மீக்கொள ஐயன்வில் வாங்கினன் சிறிதே
     பற்றி நாணொலி எடுத்தலும் ஒடுங்கின பரவை
          பொற்றை யாவையுங் கீண்டன துளங்கின புவனம்
               இற்றை வைகலோ இறுதியென் றயர்ந்தனர் எவரும். ......    108

(கோளி லாகிய புற்றி)

கோளி லாகிய புற்றிடை ஓரராக் குறுகி
     மீளில் வெஞ்சினக் குழவிகொண் டேகலின் வீரன்
          தோளில் வாங்கிய சிலையினில் தூணியில் துதைந்த
               வாளி வாங்கியுய்த் தொருதனி மாயனை மறைத்தான். ......    109

(செங்க ணான்தனை)

செங்க ணான்தனை மறைத்தபின் மற்றவன் செலுத்துந்
     துங்க வெங்கணை யாவையும் பொடிபடத் தொலைப்ப
          அங்கொ ராயிரம் பகழியை ஐதெனப் பூட்டி
               எங்கள் நாயகன் திருமணிப் புயத்தின்நேர் எய்தான். ......    110

(எய்யும் வெங்கணை)

எய்யும் வெங்கணை யாவையும் வீரருள் இறையாம்
     ஐயன் ஆசுகம் ஆயிரம் ஓச்சினன் அகற்றி
          ஒய்யெ னக்கரி யோன்நுதல் மீமிசை ஒருதன்
               வெய்ய பொத்திரம் ஏவினன் அவனுளம் வெருவ. ......    111

(ஏவு தொல்கணை)

ஏவு தொல்கணை மாயவன் நுதலிடை இமைப்பின்
     மேவு கின்றுழி அனையவன் தளர்தலும் வீரன்
          வாவு தேர்மிசை ஊன்றினன் சிலையைவார் கணையுந்
               தூவு கின்றிலன் மாலிடர் நீங்குறுந் துணையும். ......    112

(இன்னல் அத்துணை)

இன்னல் அத்துணை யகன்றுமால் எதிர்தலும் எமது
     மன்னும் நேர்ந்தனன் இருவரும் வரிசிலை வளையாப்
          பொன்னின் வாளிகள் பொழிந்தனர் முறைமுறை பொருதார்
               அன்ன பான்மையர் செய்தபோர் யாவரே அறைவார். ......    113

(மாறு கொண்டபோர்)

மாறு கொண்டபோர் இவ்வகை புரிதலும் வயத்தால்
     வீறு கொண்டுயர் முக்கணான் வெய்யதீ வடவைக்
          கூறு கொண்டதோர் படையினை ஓச்சலுங் குவட்டில்
               ஏறு கொண்டலை அனையவன் உரத்தில்எய் தியதே. ......    114

(எய்து காலையில் உள)

எய்து காலையில் உளம்பதை பதைத்திட இரங்கி
     வெய்து யிர்ப்புடன் உணர்வொரீஇ உளம்நனி மெலிந்து
          நொய்தின் மையலை நீங்கலும் முகுந்தனை நோக்கிச்
               செய்தி போரென உரைத்தனன் சரபமாந் திறலோன். ......    115

(மெய்வ தத்தினை யாவ)

மெய்வ தத்தினை யாவர்க்கும் விரைவினில் இழைக்குந்
     தெய்வ தப்படை முழுவதுஞ் செங்கண்மால் செலுத்த
          அவ்வ னைத்தையும் அனையஅப் படைகளால் அகற்றிக்
               கவ்வை முற்றினன் நுதல்விழி அளித்திடுங் கடவுள். ......    116

வேறு

(தேன்றிகழ் பங்கயத்)

தேன்றிகழ் பங்கயத் திருவின் நாயகத்
     தோன்றல்தன் படைக்கலந் தூண்ட எங்கணுஞ்
          சான்றென நின்றவன் தனயன் வீரமாம்
               வான்திகழ் படைதொடா வல்லை மாற்றவே. ......    117

(அரியதன் பின்னுற)

அரியதன் பின்னுற ஆதி வீரன்மேல்
     பொருகணை அளப்பில பொழிய மாற்றியோர்
          சரமது செலுத்திமால் சார்ங்கம் ஒன்றையும்
               இருதுணி படுத்தினன் இறைவன் மைந்தனே. ......    118

(பின்னுமத் துணைத)

பின்னுமத் துணைதனில் பெருந்தி றற்பெயர்
     முன்னவன் இருகணை முறையின் ஓச்சியே
          பன்னக மிசைத்துயில் பகவன் ஊர்திதன்
               பொன்னிருஞ் சிறையினைப் புவியில் வீட்டினான். ......    119

(ஆயதோர் அமைதியில்)

ஆயதோர் அமைதியில் ஆழி யங்கையான்
     மாயவன் ஆதலின் வரம்பில் கண்ணரை
          மேயின காதலின் விதிப்ப வீரன்முன்
               பாயிருள் முகிலெனப் பரம்பி னாரரோ. ......    120

(அங்கவர் யாரையும்)

அங்கவர் யாரையும் அமலன் வெய்யகட்
     பொங்கழல் கொளுவிநுண் பொடிய தாக்கலும்
          பங்கய விழியினான் பரமன் அன்றருள்
               செங்கையில் ஆழியைச் செல்கென் றேவினான். ......    121

(விடுத்ததோர் திகிரி)

விடுத்ததோர் திகிரியை வீரன் அங்கையால்
     பிடித்தவண் விழுங்கினன் பெயர்த்து மாயவன்
          எடுத்திடு கதையினை எறிய அன்னது
               தடுத்தனன் தனதுகைத் தடம்பொற் றண்டினால். ......    122

வேறு

(சங்கார் செங்கைப்)

சங்கார் செங்கைப் புங்கவன் ஏவுந் தண்டம்போய்
     மங்கா அங்கண் வீழ்வது காணா வாள்வாங்கிப்
          பொங்கா நின்றே உய்த்திட எய்தும் பொழுதின்கண்
               உங்கா ரஞ்செய் திட்டனன் அம்மா உமைமைந்தன். ......    123

(ஒய்யென் றையன்)

ஒய்யென் றையன் சீற்றமொ டங்கண் உங்காரஞ்
     செய்யுங் காலத் தோவியம் என்னச் செயனீங்கிக்
          கையும் வாளு மாய்அவண் நின்றான் கடலூடே
               வையம் முண்டு கண்டுயில் கின்ற மாமாயன். ......    124

(சான்றகல் மாயன்)

சான்றகல் மாயன் அச்சுற வெய்தித் தளர்காலை
     மூன்றுகண் வீரன் யாது நினைந்தோ முனிவெய்த
          ஆன்றதொர் செற்றம் நீங்குதி என்னா அண்டத்தே
               தோன்றிய தம்மா கண்ணுதல் ஈசன் சொல்லொன்றே. ......    125

(அந்தர மீதே வந்திடு)

அந்தர மீதே வந்திடு சொல்லங் கதுகேளா
     எந்தை மனங்கொள் வெஞ்சினம் நீங்கி யிடுபோழ்தில்
          அந்தின் மணித்தேர் உய்த்திடு பாகன் அதுநோக்கி
               வந்தனை செய்தே போற்றியொர் மாற்றம் வகுப்பானால். ......    126

வேறு

(அறத்தினை யொருவி)

அறத்தினை யொருவிச் செல்லும் அழிதகன் உலக மெல்லாம்
     இறத்தலை யெய்த இங்ஙன் இயற்றிய மகத்தின் மேவிப்
          பெறத்தகும் அவியை நுங்கும் பேதையேன் பிழையை யெல்லாம்
               பொறுத்தனை கொண்மோ என்னாப் பொன்னடிக் கமலம் பூண்டான். ......    127

(பூண்டிடும் உலகந்)

பூண்டிடும் உலகந் தந்த புங்கவன் தன்னை நோக்கி
     ஆண்டகை வீரன் அஃதே ஆகவென் றருள லோடும்
          நீண்டதோர் மாயன் அன்னான் நீடருள் நிலைமை காணூஉ
               ஈண்டிது காலம் என்னா ஏத்தினன் இயம்ப லுற்றான். ......    128

(பாரவெஞ் சிலையும்)

பாரவெஞ் சிலையும் வீட்டிப் பல்படைக் கலமுஞ் சிந்திச்
     சேரலர் உயிர்கள் உண்ட திகிரியுஞ் செல்ல நுங்கிப்
          போரிடை எனையும் வென்று புகழ்புனைந் திடுதி யென்றால்
               வீரநின் றகைமை யாரே முடிவுற விளம்ப வல்லார். ......    129

(ஆசறு நெறியின்)

ஆசறு நெறியின் நீங்கும் அயன்மகன் இயற்று கின்ற
     பூசனை விரும்பி வேள்வி புகுந்தனன் புந்தி யில்லேன்
          மாசறு புகழாய் நின்னால் மற்றிது பெற்றேன் அந்தோ
               ஈசனை இகழ்ந்தோர் தம்பால் இருப்பரோ எண்ணம் மிக்கோர். ......    130

(ஆதிநா யகனை)

ஆதிநா யகனை ஒல்லார் அனையவர்ச் சேர்ந்தார்க் கெல்லாம்
     வேதமே இசையா நிற்கும் வியன்பெருந் தண்டம் அன்றோ
          ஈதெலாம் எம்ம னோர்பால் இயற்றிய இனைய தன்மை
               நீதியால் எம்பால் அன்றி நின்கணோர் குறையும் உண்டோ. ......    131

(விழிதனில் முறுவல்)

விழிதனில் முறுவல் தன்னில் வெய்துயிர்ப் பதனில் ஆர்ப்பின்
     மொழிதனில் புவன மெல்லா முதலொடு முடிக்க வல்லோய்
          பழிபடு வேள்வி தன்னில் பலரையும் படையி னோடும்
               அழிவுசெய் திட்ட தம்மா அடிகளுக் காடல் அன்றோ. ......    132

(உறுநர்தந் தொகைக்கு)

உறுநர்தந் தொகைக்கு வேண்டிற் றுதவிய முதல்வன் ஏவும்
     முறையதை உன்னி வேள்வி முடிப்பதோர் ஆடல் ஆகச்
          சிறிதெனும் அளவை தன்னில் சிதைத்தனை அன்றி எந்தாய்
               இறுதிசெய் திடநீ யுன்னின் யார்கொலோ எதிர்க்கும் நீரார். ......    133

(இறுதிசெய் திடலே)

இறுதிசெய் திடலே சீற்றம் இன்பமே யாண்மை என்னா
     அறைதரு சத்தி நான்காம் அரன்தனக் கையை காளி
          முறைதரு கவுரி இன்னோர் மும்மையும் பெற்றோர் ஏனைப்
               பெறலருஞ் சத்தி யான்இப் பெற்றியும் மறைகள் பேசும். ......    134

(அன்னதோர் பரிசால்)

அன்னதோர் பரிசால் ஈசன் அரும்பெருஞ் சத்தி என்னில்
     பின்னமன் றவற்கி யானும் பெரிதுமன் புடையேன் முக்கண்
          முன்னவன் தன்பால் ஈண்டென் மொய்ம்புடன் இழந்த நேமி
               இன்னுமங் கவன்தாள் அர்ச்சித் திமைப்பினில் எய்து கின்றேன். ......    135

(முனிவுடன் அடிகள்)

முனிவுடன் அடிகள் ஈண்டு முறைபுரிந் ததனுக் கின்னல்
     மனனிடை கொள்ளேன் இன்னான் மற்றிது பெறுத லாலே
          புனிதமாக் கொள்வன் தண்டம் புரிந்தனை பொறுத்தி குற்றம்
               இனியருள் புரிதி என்னா இணையடி இறைஞ்ச லோடும். ......    136

(வீரருள் வீரன் மாலோ)

வீரருள் வீரன் மாலோன் விளம்பிய மாற்றங் கேளா
     நாரணற் கன்பு செய்து நணியதோர் காலை தன்னில்
          பாரிடஞ் சூழ நந்தி பரவிட உமையா ளோடு
               மூரிமால் விடைமேற் கொண்டு தோன்றினன் முடிவிலாதான். ......    137

(தேங்கிய கங்கை)

தேங்கிய கங்கை சூடுஞ் செஞ்சடைக் கடவுள் தோன்ற
     ஆங்கது தெரிந்த வீரன் அச்சமோ டங்கை கூப்பிப்
          பாங்குற நிற்ப மாலும் பங்கயத் தயனுந் தாழா
               நீங்கிய தாயை நேருங் குழவியின் நிலைய ரானார். ......    138

(கண்டனள் கவுரி)

கண்டனள் கவுரி வேள்விக் களத்திடைக் கழலுங் கையும்
     துண்டமும் தலையும் மார்பும் தோள்களும் துணிந்து வீழ
          அண்டருந் தக்கன் தானும் ஆவிபோய்க் கிடந்த தன்மை
               கொண்டதோர் சீற்றம் நீங்கி அருள்வரக் கூறு கின்றாள். ......    139

வேறு

(பொன்னார் சடையெம்)

பொன்னார் சடையெம் புனிதன்தனை நோக்கி
     முன்னா கியபொருட்கு முன்னோனே வேள்விக்கு
          மன்னா னவற்கும் இமையோர்க்கும் மற்றெவர்க்கும்
               என்னால் முடிவெய்திற் றென்றுரைக்கும் இவ்வுலகே. ......    140

(மற்ற வர்கள்புந்தி மய)

மற்ற வர்கள்புந்தி மயக்குற் றுனதுதொல்சீர்
     சற்று முணராது தவறுசெய்த தன்மையினால்
          செற்ற மிகுவீரத் திருமகனால் இஞ்ஞான்று
               பெற்றன ரேயன்றோ பெறத்தக்க தோர்பரிசே. ......    141

(முந்தும் இவரை முடி)

முந்தும் இவரை முடித்தியென வெஃகியதும்
     தந்து முடித்தாய் தனிவீர னாலனையர்
          உய்ந்து குறைபோய் உயிர்பெற் றெழும்வண்ணம்
               இந்த வரமும் எனக்கருளாய் எங்கோவே. ......    142

(என்று தொழுதாங்)

என்று தொழுதாங் கெமையுடையாள் கூறுதலும்
     நன்றுன் னருளென்று நகைசெய்து தன்பாங்கர்
          நின்ற திறலோனை நேர்நோக்கி இம்மாற்றம்
               ஒன்று பகர்ந்தான் உயிர்க்குயிராய் உற்றபிரான். ......    143

(ஈண்டை மகத்தில்)

ஈண்டை மகத்தில் எமையிகழ்ந்து நின்சினத்தான்
     மாண்டு சிதைவுற்ற வலியிலோர் தம்முயிரை
          மீண்டும் அளித்துருவு மேனா ளெனப்புரிதி
               ஆண்டகை நீயென்றே அரனருளிச் செய்தலுமே. ......    144

(வீர னதற்கிசைந்து)

வீர னதற்கிசைந்து மேனா ளெனஇறந்தீர்
     யாரும் எழுதி ரெனஉரைப்ப வானவர்கள்
          சோரு முனிவர் மறையோர் துயிலுணர்ந்த
               நீர ரெனஉயிர்வந் தெய்த நிலத்தெழுந்தார். ......    145

(தண்டம் இயற்றுந்)

தண்டம் இயற்றுந் தனிவீர னாற்சிதைந்த
     பிண்ட முழுதுருவும் பெற்றார் மகம்புக்கு
          விண்ட செயலுமுயிர் மீண்டதுவுங் கங்குலிடைக்
               கண்ட புதிய கனவுநிலை போலுணர்ந்தார். ......    146

(அந்தண் முனிவோர்)

அந்தண் முனிவோர் அனைவோரும் வானவரும்
     இந்திர னேயாதி இமையோர் களும்வெருவிச்
          சிந்தை மருண்டு சிவனை இகழ்ந்ததனால்
               வந்த பழியுன்னி வருந்திமிக வெள்கினரால். ......    147

(பாணார் அளிமுரலும்)

பாணார் அளிமுரலும் பைந்தார் புனைவீரன்
     மாணா கத்தன்னோர் மருங்காகத் தேவியுடன்
          பூணார் அரவப் புரிசடையெம் புண்ணியனைச்
               சேணார் ககனந் திகழுஞ் செயல்கண்டார். ......    148

(துஞ்சல் அகன்ற சுர)

துஞ்சல் அகன்ற சுரரும் முனிவரரும்
     நஞ்ச மணிமிடற்று நாயகனைக் கண்ணுற்றே
          அஞ்சி நடுங்க அதுகண் டெவர்இவர்க்குத்
               தஞ்சம் எமையல்லால் என்றுதள ரேலென்றான். ......    149

(என்றாங் கிசைத்த)

என்றாங் கிசைத்த இறைவன் அருள்நாடி
     நன்றா லிதென்று நனிமகிழ்ந்து முன்னணித்தாய்ச்
          சென்றார் தொழுதார் திசைமுகன்மா லாதியராய்
               நின்றார் எவரும் நெறியால் இவைஉரைப்பார். ......    150

(சிந்தை அயர்வுற்றுச்)

சிந்தை அயர்வுற்றுச் சிறுவிதிதன் வேள்விதனில்
     எந்தை நினையன்றி இருந்தேங்கள் கண்முன்னும்
          வந்து கருணை புரிந்தனையால் மைந்தர்க்குத்
               தந்தை யலது பிறிதொருவர் சார்புண்டோ. ......    151

(அற்றமில் அன்பில்லா)

அற்றமில் அன்பில்லா அடியேங்கள் பாலடிகள்
     செற்ற மதுபுரியிற் செய்கைமுத லானசெயல்
          பற்றி முறைசெய் பதமுளதோ அஞ்சலென
               மற்றொர் புகலுளதோ மன்னுயிருந் தானுளதோ. ......    152

(வேதத் திறங்கடந்த)

வேதத் திறங்கடந்த வேள்விப் பலியருந்தும்
     பேதைச் சிறியேம் பெரும்பகலுந் தீவினையில்
          ஏதப் படாமே இமைப்பி லதுதொலைத்த
               ஆதிக் கெவன்கொல் அளிக்கின்ற கைம்மாறே. ......    153

(இங்குன் னடிபிழை)

இங்குன் னடிபிழைத்தோம் எல்லோமும் வீரனெனுஞ்
     சிங்கந்தன் கையாற் சிதைபட்ட வாறெல்லாம்
          பங்கங்கள் அன்றே பவித்திரமாய் மற்றெங்கள்
               அங்கங் கட்கெல்லாம் அணிந்த அணியன்றோ. ......    154

(கங்கை முடித்ததுவு)

கங்கை முடித்ததுவுங் காய்கனலை ஏந்தியதும்
     வெங்கண் மிகுவிடத்தை மேனாள் அருந்தியதும்
          நங்கை யுமைகாண நடித்ததுவும் முற்பகலும்
               எங்கண் மிசைவைத்த அருளன்றோ எம்பெருமான். ......    155

(ஐய பலவுண் டறி)

ஐய பலவுண் டறிவிலேம் நின்றனக்குச்
     செய்ய வருபிழைகள் சிந்தைமிசைக் கொள்ளாமல்
          உய்யும் வகைபொறுத்தி உன்னடியேம் என்றலுமே
               தைய லொருபங்கன் தணிந்தனமால் அஃதென்றான். ......    156

(ஏற்றுத் தலைவன்)

ஏற்றுத் தலைவன் இயம்புந் திருவருளைப்
     போற்றித் தொழுதுதம் புந்தி தளிர்ப்பெய்திக்
          கூற்றைத் தடிந்த குரைகழற்றாள் முன்னிறைஞ்சித்
               தேற்றத் துடன்பாடி யாடிச் சிறந்தனரே. ......    157

(அன்ன பொழுதத்)

அன்ன பொழுதத் தயன்முதலாந் தேவர்கள்மேல்
     உன்ன அரிய ஒருவனருட் கண்வைத்து
          நுந்நும் மரசும் நுமக்கே அளித்தனமால்
               முன்ன ரெனவே முறைபுரிதி ரென்றுரைத்தான். ......    158

(மாலயனே யாதியராம்)

மாலயனே யாதியராம் வானவர்கள் எல்லோரும்
     ஆல மிடற்றண்ணல் அருளின் திறம்போற்றி
          ஏல மகிழ்வெய்த இறந்தெழுந்தோர் தங்குழுவில்
               சீலமிலாத் தன்மகனைக் காணான் திசைமுகனே. ......    159

(மாண்டதொரு தக்கன்)

மாண்டதொரு தக்கன் வயவீரன் தன்னருளால்
     ஈண்டுசனந் தன்னோ டெழாவச் செயல்நோக்கிக்
          காண்டகைய நாதன் கழலிணைமுன் வீழ்ந்திறைஞ்சி
               ஆண்டு கமலத் தயன்நின் றுரைக்கின்றான். ......    160

வேறு

(ஐயநின் வாய்மை எள்)

ஐயநின் வாய்மை எள்ளி அழல்கெழும் மகத்தை யாற்றுங்
     கையன தகந்தை நீங்கக் கடிதினில் தண்டஞ் செய்து
          மையுறு நிரயப் பேறு மாற்றினை அவனும் எம்போல்
               உய்யவே அருளு கென்ன உமாபதி கருணை செய்தான். ......    161

(இறையருள் கண்டு)

இறையருள் கண்டு வீரன் எல்லையங் கதனில் எந்தை
     அறைகழல் கண்டு போற்றி அவற்றியல் வினவித் தாழாப்
          பொறியுள தென்று தக்கன் புன்றலை புகுத்த வுன்னாக்
               குறையுடல் அதனைப் பானு கம்பனைக் கொணர்தி என்றான். ......    162

(வித்தக வலிகொள்)

வித்தக வலிகொள் பூதன் வீரபத் திரன்தன் முன்னர்
     உய்த்தலும் அதன்மேல் வேள்விக் குண்டியாம் பசுவுள் வீந்த
          மைத்தலை கண்டு சேர்த்தியெழு கென்றான் மறைகள் போற்றும்
               அத்தனை இகழும் நீரர் ஆவரிப் பரிசே என்னா. ......    163

(என்றலும் உயிர்பெற்)

என்றலும் உயிர்பெற் றங்கண் எழுந்தவத் தக்கன் முன்னம்
     நின்றதோர் வீரற் கண்டு நெஞ்சுதுண் ணென்ன அஞ்சித்
          தன்றக விழந்து பெற்ற தலைகொடு வணங்கி நாணி
               அன்றுசெய் நிலைமை நாடி அரந்தையங் கடலுட் பட்டான். ......    164

(அல்லல்கூர்ந் திரங்கு)

அல்லல்கூர்ந் திரங்கு கின்ற அசமுகன் அடல்வெள் ளேற்றின்
     மெல்லிய லோடு முற்ற விமலன் துருவங் காணூஉ
          ஒல்லென வெருக்கொண் டாற்ற உற்றனன் அச்ச மற்றவ்
               வெல்லையில் இறைவன் தக்கா அஞ்சலை இனிநீ என்றான். ......    165

(அஞ்சலென் றருள)

அஞ்சலென் றருள லோடும் அசமுகத் தக்கன் எங்கோன்
     செஞ்சரண் முன்னர்த் தாழ்ந்து தீயனேன் புரிந்த தீமை
          நெஞ்சினும் அளக்கொ ணாதால் நினைதொறுஞ் சுடுவ தையா
               உஞ்சனன் அவற்றை நீக்கி உனதருள் புரிந்த பண்பால். ......    166

(அடியனேன் பிழைத்த)

அடியனேன் பிழைத்த தேபோல் ஆர்செய்தார் எனினும் என்போல்
     படுவதே சரத மன்றோ பங்கயத் தயனை நல்கும்
          நெடியவன் துணையென் றுன்னி நின்பெரு மாயை யாலே
               அடிகளை இகழ்ந்தேன் யாதும் அறிகிலேன் சிறியேன் என்றான். ......    167

(காலையங் கதனில்)

காலையங் கதனில் அம்மை காளிதன் னோடு போற்றிப்
     பாலுற நின்ற வீர பத்திரன் தனைவம் மென்றே
          வேலவன் றேவி யென்ன வெரிந்புறம் நீவி அன்னார்க்
               கேலநல் வரங்கள் ஈந்தாள் ஈசனுக் கன்பு மிக்காள். ......    168

(மீத்தகு விண்ணு)

மீத்தகு விண்ணு ளோரும் வேள்வியந் தேவும் மாலும்
     பூத்திகழ் கமலத் தோனும் புதல்வனு முனிவர் தாமும்
          ஏத்தினர் வணங்கி நிற்ப எம்மையா ளுடைய முக்கண்
               ஆத்தனங் கவரை நோக்கி இவைசில அருளிச் செய்வான். ......    169

(வம்மினோ பிரம)

வம்மினோ பிரம னாதி வானவர் மகஞ்செய் போழ்தில்
     நம்மைநீர் இகழ்ந்தி யாரு நவைபெறக் கிடந்த தெல்லாம்
          உம்மையில் விதியாந் தண்டம் உமக்கிது புரிந்த வாறும்
               இம்மையின் முறையே நாணுற் றிரங்கலீர் இதனுக் கென்றான். ......    170

வேறு

(இனைத்தருள் புரிதலும்)

இனைத்தருள் புரிதலும் எண்ண லாரையும்
     நினைத்தருள் புரிதரு நிமலன் தாள்தொழாச்
          சினத்தொடு மகத்தைமுன் சிதைத்து ளோனையும்
               மனத்தகும் அன்பினால் வணங்கிப் போற்றவே. ......    171

(வீரரில் வீரனும் விச)

வீரரில் வீரனும் விசய மேதகு
     நாரியும் அயல்வர நந்தி முன்செலப்
          பாரிடம் எங்கணும் பரவ மாதொடே
               போரடல் விடையினான் பொருக்கென் றேகினான். ......    172

(கயிலையி லேகியே)

கயிலையி லேகியே கவுரி யோடரன்
     வியனகர் மன்றிடை வீற்றி ருந்துழி
          வயமிகு வீரற்கு வான மேக்குற
               இயலுமோர் பதமளித் திருத்தி யாங்கென. ......    173

(இருவர்தந் தாளையும்)

இருவர்தந் தாளையும் இறைஞ்சி அன்னவர்
     தருவிடை பெற்றன னாகித் தக்கன
          துரியதோர் மகம்அடும் உலப்பில் பூதர்கள்
               திரைகட லாமெனத் திசைதொ றீண்டவே. ......    174

(தந்தைமுன் விடுத்த)

தந்தைமுன் விடுத்ததோர் தடம்பொற் றேரயல்
     வந்ததங் கதன்மிசை வயங்கொள் ஆடலான்
          பைந்தொடி யொடும்புகாப் பானு கம்பன
               துந்திட அரனருள் உலகிற் போயினான். ......    175

(போயினன் அதனிடை)

போயினன் அதனிடைப் பொருவில் தொல்பெருங்
     கோயிலின் எய்தியே குழுக்கொள் சாரதர்
          மேயினர் சூழ்தர வீர பத்திரன்
               ஏயதோர் துணைவியோ டினிது மேவினான். ......    176

ஆகத் திருவிருத்தம் - 9840




(எண் = செய்யுளின் எண்)

*1-1. இறைவி - பத்திரகாளி.

*1-2. தீர்த்தனை - பரிசுத்தனான வீரபத்திரனை.

*1-3. தலைவி தன்னை - பத்திரகாளியை.

*2-1. மடங்கல் - சிங்கம்.

*2-2. உரும் ஏறு - இடியேறு.

*4. ஈறும் - அழிவும்.

*5-1. நமை - நம்மை; இங்கு பிரமன் முதலிய தேவர்களை.

*5-2. பொருள் என்று - சிறந்த கடவுள் என்று.

*6-1. ஈடு - வன்மை.

*6-2. பாடு - பக்கம்.

*7-1. அரந்தை - துன்பம்.

*7-2. பஞ்சு - செம்பஞ்சு.

*8. வயக் கொம்பு - வெற்றிக்கு ஊதும் கொம்பு.

*9. அசுணமா - இஃது இனிய இசையைக் கேட்டுக்களிக்கும் ஒரு மிருகம்; பறவை என்பாரும் உண்டு.

*14-1. உங்கள் அத்தன் - இங்குச் சிவபெருமான்.

*14-2. உலகம் - உலக மக்கள்.

*14-3. குடிலை - பிரணவம்.

*16-1. புகலிடம் - இருப்பிடம்.

*16-2. போய - போயின.

*17-1. பேதை - காளி.

*17-2. பித்தன் - சிவன்.

*17-3. ஈயேன் - கொடேன்.

*19-1. தொல் ஊழ் - பழைய ஊழ்வினை.

*19-2. இசைவினால் - தொடர்பால்.

*19-3. அது - வீரபத்திரன் கூறியதை.

*19-4. ஊமரின் - ஊமைகள் போல.

*20. அரி முன் - திருமால் முன்பு.

*21-1. விட்டு - விட்டுணு.

*21-2. கமலப்போதில் ... சிட்டன் - பிரமதேவன்.

*21-3. மேல்வரும் - பின்வரும்.

*21-3. குமரன் போல் - குமரக் கடவுள் போல்.

*22-1. அன்னான் வாக்குறு தேவி - சரசுவதி.

*22-3. மற்றவர் - இலக்குமி முதலியோர்.

*22-4. குயம் - முலை.

*24. சின்னம் - சிதைவு.

*25-1. கதிரவன் - சூரியன்.

*25-2. கவுள் - கன்னம்.

*26. பகன் எனும் வெய்யவன் - பகன் என்னும் மற்றொரு சூரியன்.

*28-1. நாகம் - சுவர்க்கம்.

*28-2. உடைந்தனன் - மனம் உடைந்து.

*29-1. அங்கியை - அக்கினி தேவனை.

*29-2. சேவகன் - வீரபத்திரன்.

*30. ஏழு திறத்து - ஏழு பகுதியினை உடைய.

*33. செல்நெறி - போம் வழி.

*34-1. எழு - எழுவாயுதம்.

*34-2. காலினை - வாயு தேவனை.

*34-3. தனதனை - குபேரனை.

*35. எட்டெனும் திசையினோன் - ஈசானன்.

*36. எச்சன் - யாகத்தின் அதி தேவதை.

*39. மட்டிட - அளவிடுதற்கு.

*40-1. ஊறு அகல் - குற்றம் அற்ற.

*40-2. ஈறு அகல் - எல்லையற்ற.

*41-1. மன்ற - மிகவும்.

*41-2. எண்ணினேன் - இகழ்ந்தேன்.

*42. இவ்வேதமாம் - இந்த துன்பத்திற்குரிய.

*45. ஓர் இறுதி - ஒரு அழிவுக் காலத்தினை.

*46. நிந்தியா - நிந்தித்து.

*48. சாடுஉறு - கொலைபுரிகின்ற.

*50. தண்டம் - தண்டனை.

*51-1. அலமரும் - சுழலுகின்ற.

*51-2. பாவகன் - அக்கினி.

*51-3. ஈது திற்றி - இதனைத் தின்னுவாய்.

*52. சில் - தலையில் அணியும் ஓர் ஆபரணம்.

*53-1. வார்குழை - நீண்ட காதினை.

*53-2. கந்துகம் - பந்து.

*54-1. ஆளி - சிங்கம்.

*54-2. கேளிர் - சுற்றத்தினர்.

*57. காப்பினை வீட்டி - மதிலினை இடித்து.

*58. சூர்த்த - அச்சம் தரும்.

*61. அலக்கண் - துன்பம்.

*62-1. பெருங் கோளரி - பெருஞ் சிங்கம்.

*62-2. களத்தை - கழுத்தை.

*63-1. கறிக்கின்றனர் - மெல்லுகின்றனர்.

*63-2. சங்கங் குறிக்கின்றனர் - வெற்றிச் சங்கு ஊதுகின்றனர்.

*67. தெழிக்கின்றனர் - பேரொலி செய்கின்றனர்.

*68-1. ததி - தயிர்.

*68-2. துய் - சோறு.

*69-1. உகத்துக் கடை அனல் - ஊழிக் காலத்துப் பிரளயாக்கினி.

*69-2. திரிவித வேதி - மூவகை வேதிகை.

*69-3. உயிர் - இங்கு ஆண் குறி.

*69-4. அகத்துப்புனல் - இங்குச் சிறுநீர்.

*70. உடுவை - ஆடுகளை.

*71-1. தவக் கண்டகத்தொகை ஆர்த்திட - மிகவும் கழுத்தின் கண்ணுள்ள மணிகள் ஒலிக்கவும்; (யாகத்திற்குரிய ஆடுகளின் கழுத்தில் உணவுக்காக, காரை முட்செடிகளைக் கட்டுதல் மரபு ஆதலின், ஆடுகளுக்குத்) தவத்திற்குரிய காரை முட்செடிகளை உண்பிக்க.

*71-2. தவக்கண்டகத் தொகை ஆர்த்திட்ட - மந்திர செபம் செய்தலாகிய தவத்துடன் தோயலிடப்பட்ட வாளாயுதத்தால் அறுத்தற்கு.

*71-3. கண்டகம் - வாள்.

*71-4. மகத்தறி - யூபஸ்தம்பம்.

*71-5. பசு என்றது யாகத்திற்குரிய ஆடுகளை.

*72-1. பங்கம் - இழிவு.

*72-2. பதகன் - கீழ்மகன்; தக்கன்.

*72-3. கங்கம் - பருந்து.

*76-1. தறித்தல் - வெட்டுதல்.

*76-2. பாசம் - கயிறு.

*76-3. தறி - தூண்.

*77. பாற்று - பாறு - பருந்து.

*78-1. அணங்கு - தெவமாதர்.

*82. ஏந்தல் - வீரபத்திரன்.

*83-1. செழுந்திரு - இலக்குமி.

*83-2. உரம் - மார்பு.

*84-1. திருத்தகும் - செல்வமிகுந்த.

*84-2. கண்ணன் - திருமால்.

*85. ஆழியான் - திருமால். ஆழியான் மனத்துட் கொண்டிலன் என்க.

*86-1. உடைந்தது - வீரபத்திரனுக்குப் பயந்து ஓடியது.

*86-2. புள்ளரசன் - கருடன்.

*86-3. அரி - திருமால்.

*89-1. தீச்சிகை - யாகாக்கினி.

*89-2. சிலை - வில்.

*89-3. தாச் செலும் - தாவிச் செல்லுகின்ற.

*89-4. வசி - வன்மை.

*90-1. கழுது - பேய்.

*90-2. சொரீஇ - விடுத்து.

*92. ஆதி நாயகன் - சிவபெருமான்.

*93. கேதனம் - கொடி.

*95. உம்பர் தன்னிடை - ஆகாயத்தில்.

*97. போற்றினான் - (பிரமன்) வணங்கினான்.

*98. ஏற்றமொடு - கவுரவுத்துடன்.

*99. தா அகல் - குதிரைகளை மிகுதியாகப் பூட்டிய. தா - பாய்தல்; குதிரை : ஆகுபெயர்.

*100-1. வலவன் - சாரதி.

*100-2. புராரி - சிவபெருமான்.

*101. அல்லி - அகவிதழ்.

*104-1. பாடல் சான்றிடும் - பெருமையமைந்த.

*104-2. இமில் - பிடரியில் உயர்ந்து காணும் ஊன்முடிச்சு; கொண்டை.

*104-3. ஏறு - எருது.

*105. உமை மைந்தன் - வீரபத்திரன்.

*107-1. பணம் - படம்.

*107-2. பன்னகக்கிறைவன் - ஆதிசேடன்.

*109-1. தூணியில் - அம்பறாத்தூணியில்.

*109-2. துதைந்த - நிறைந்த.

*111-1. நுதல்மீமிசை - நெற்றிமேல்.

*111-2. பொத்திரம் - அம்பு.

*114. கொண்டலை அனையவன் - திருமால்.

*115-1. சரபமாம் திறலோன் - வீரபத்திரன்.

*115-2. சரபம் - ஏண்கால்களையுடைய ஒரு பறவை.

*116-1. மெய்வதம் - உடல் அழிவு.

*116-2. கவ்வை - அட்டகாசம்.

*118. சார்ங்கம் - சாரங்கம் - வில்; இது திருமால் வில்.

*120. வரம்பில் கண்ணரை - அளவற்ற திருமால்களை.

*121. பங்கயவிழியினான் - திருமால்.

*126. அந்தரமீதே வந்திடு சொல் - அசரீரி.

*129. நுங்கி - விழுங்கி.

*131. ஒல்லார் - பகைத்தவர்.

*132-1. ஆர்ப்பு - அட்டகாசம்.

*132-2. முதலொடு - அடியொடு.

*133. உறுநர் - அடியடைந்த அன்பர்.

*134-1. இறுதி செய்திடல், சீற்றம், இன்பம், ஆண்மை - இவை நான்கும் இறைவனுக்கு துர்க்கை, காளி, கௌரி, திருமால் என்னும் சக்திகளாகும்.

*134-2. யான் - இங்குத் திருமால்.

*137. முடிவிலாதான் - அழிவில்லாத சிவபெருமான்.

*139-1. கழலும் காலும்.

*139-2. துண்டம் - மூக்கு.

*139-3. துணிந்து - துண்டுபட்டு.

*142-1. முந்தும் - முன்னரும்.

*143-2. முடித்தி - அழித்தி.

*147-1. அம் - அழகிய.

*147-2. தண் - தண்ணளியினையுடைய.

*147-3. உன்னி - நினைத்து.

*147-4. வெள்கினர் - வெட்கமுற்றார்கள்.

*149. துஞ்சல் - இறத்தல்.

*152-1. அற்றம் - அழிவு.

*152-2. இல் - இல்லாத.

*152-3. செய்கை முதலான செயல் - படைப்பு முதலிய தொழில்கள்.

*153. வேள்விப்பலி - அவி.

*154-1. பங்கங்கள் அன்றே - குற்றங்கள் அன்றாம்.

*154-2. பவித்திரம் - பரிசுத்தம்.

*157. ஏற்றுத்தலைவன் - சிவபெருமான்.

*159. திசைமுகன் தன் மகனை காணான் - பிரமன் தன் மகனான தக்கனை கண்டிலன்.

*160-1. மாண்ட - இறந்த.

*160-2. ஆண்டு - அங்கே.

*161. கையன் - கீழ்மகனான தக்கன்.

*162-1. தாழாப் பொறியுளது - குறையாத அடையாளம் உளது; கெடாத குறிப்பு ஒன்றுளது எனினுமாம்.

*162-2. பானு கம்பன் - சிவகணங்களில் ஒருவன்.

*163-1. வீந்த - இறந்த.

*163-2. மைத்தலை - ஆட்டின் தலை.

*165. அசமுகன் - ஆட்டு முகத்தனான தக்கன்.

*167-1. சரதம் - உண்மை.

*167-2. நெடியவன் - திருமால்.

*168-1. வேலவன் தேவி என்ன - குமரக் கடவுளையும் அவன் தேவியையும் போல.

*168-2. வெரிந் - முதுகு.

*168-3. நீவி - தடவி.

*169. வேள்வியந் தேவும் - யாகத் தெய்வமும்.

*172. விசயமே தகு நாரி - பத்திரகாளி.

*173. பதம் - பதவி.

*174. இருவர் - உமாதேவியும் சிவபெருமானும் ஆகிய இருவர்.

*175. பானு கம்பன் அது உந்திட - பானு கம்பன் சாரதித் தொழில் செய்ய.



previous padalam   20 - யாகசங்காரப் படலம்   next padalamyAgasangkArap padalam

previous kandam   6 - தக்ஷ காண்டம்   next kandam6 - dhaksha kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]