(அந்த வெல்லைஎமை)
அந்த வெல்லைஎமை யாளுடைய அண்ணல் அகிலந்
தந்த மங்கைதன தன்பினை வியந்து தளருஞ்
சிந்தை கொண்டசெயல் முற்றியிடு மாறு சிறிதே
புந்தி யுள்ளுற நினைந்தனன் நினைந்த பொழுதே. ......
1(பொன்னின் மேருவின்)
பொன்னின் மேருவின் இருந்திடு பொலங்கு வடெலாம்
மின்னும் வெள்ளிமுளை மேற்கொடுவிளங் கியதென
மன்னு தண்சுடர் மதிக்குறை மிலைச்சு மவுலிச்
சென்னி ஆயிரமும் வான்முகடு சென்றொ ளிரவே. ......
2(விண்ட லந்தனில்)
விண்ட லந்தனில் இலங்குசுட ரின்மி டலினைக்
கண்ட லந்தர ஒதுங்குவன போற்க திருலா
மண்ட லந்திகழ் முகந்தொறும் வயங்கு பணியின்
குண்ட லங்களிணை கொண்டகுழை கொண்டு லவவே. ......
3(ஆன்ற திண்கடல்)
ஆன்ற திண்கடல் வறந்திட இறந்த தனிடைத்
தோன்று கின்றதொர் மடங்கல்வலி யின்று தொலைய
மூன்று கண்கள்முக மாயிரமு மேவி முனிவால்
கான்ற அங்கிகளின் அண்டமுழு துங்க ரியவே. ......
4(சண்ட மாருதமும்)
சண்ட மாருதமும் அங்கியும் ஒதுங்கு தகவால்
துண்ட மீதுறும் உயிர்ப்புடன் எழுந்த சுடுதீ
அண்ட கோளமுடன் அப்புறமு மாகி அழியாக்
கொண்ட லூடுதவழ் மின்னுவென வேகு லவவே. ......
5(மலரின் வந்துறையும்)
மலரின் வந்துறையும் நான்முகன் முகுந்தன் மகவான்
புலவர் தம்புகழ் அனைத்தையும் நுகர்ந்த பொழுதில்
சிலவொ ழுங்கொடித ழின்புடைகள் சிந்தி எனவே
நிலவு செய்தபிறை வாள்எயிறு நின்றி லகவே. ......
6(துண்ட மீதின்அழ)
துண்ட மீதின்அழ லோஇதழின் வீழ்ந்த சுசியோ
மண்டு தீவிழிகள் கான்றகனலோம னமிசைக்
கொண்டதோர் வெகுளி யாகிய கொடுந்த ழலதோ
எண்டி சாமுகமு மாகிஅடு கின்ற தெனவே. ......
7(தண்ட லின்றுறையும்)
தண்ட லின்றுறையும் ஆவிகள் வெரீஇத் தளரமேல்
அண்ட ரண்டநிரை விண்டிட அவற்றி டையுறுந்
தெண்டி ரைக்கடல் கலங்கஅடல் உற்ற சிவனின்
கொண்ட ஆர்ப்புமுழு தெண்டிசை குலாய்நி மிரவே. ......
8(தராத லங்கண்முழு)
தராத லங்கண்முழு துண்டுமிழு கின்ற தகைசேர்
அராவி னங்கடமை யங்கடக மங்க தமொடே
விராய மென்றொடிக ளாவிடுபு விண்ணு றநிமிர்ந்
திராயி ரங்கொள்புய மெண்டிசையெ லாஞ்செ றியவே. ......
9(வரத்தின் மேதகைய)
வரத்தின் மேதகைய வேதன்முத லான வலியோர்
சிரத்தின் மாலிகை அடுக்கல்அவ ரென்பு செறிபூண்
பெருத்த கேழலின் மருப்பினுடன் ஆமை பிறவும்
உரத்தின் மேவுபுரி நூலொடு பெயர்ந்தொ ளிரவே. ......
10(குந்தம் வெம்பலகை)
குந்தம் வெம்பலகை தோமரமெ ழுக்கு லிசம்வாள்
செந்த ழற்கழுமுள் சூலமொடு பீலி சிலைகோல்
முந்து தண்டம்அவி ராழிவசி யால முதலாம்
அந்த மில்படைகள் அங்கைக டொறுங்கு லவவே. ......
11(ஐய மாழைதனின்)
ஐய மாழைதனின் மாமணியி னாகி அறிவார்
செய்ய லாதுவரு பேரணிக ளோடு சிவணிப்
பையு லாவுசுடர் வெம்பணிக ளான பணியும்
மெய்யெ லாமணி இடந்தொறும் மிடைந்தி லகவே. ......
12(நெஞ்ச லஞ்சல)
நெஞ்ச லஞ்சல மரும்பிறவி நீடு வினையின்
சஞ்ச லஞ்சல மகன்றதன தன்பர் குழுவை
அஞ்ச லஞ்சலெனுமஞ் சொலென விஞ்சு சரண்மேற்
செஞ்சி லம்பொடு பொலங்கழல் சிலம்ப மிகவே. ......
13(அந்தி வான்பெரு)
அந்தி வான்பெரு மேனியன் கறைமிட றணிந்த
எந்தை தன்வடி வாயவன் நுதல்விழி யிடையே
வந்து தோன்றியே முன்னுற நின்றனன் மாதோ
முந்து வீரபத் திரனெனுந் திறலுடை முதல்வன். ......
14(அங்க வேலையில்)
அங்க வேலையில் உமையவள் வெகுளியால் அடல்செய்
நங்கை யாகிய பத்திர காளியை நல்கச்
செங்கை யோரிரண் டாயிரம் பாதிசெம் முகமாய்த்
துங்க வீரபத் திரன்றனை யடைந்தனள் துணையாய். ......
15(எல்லை தீர்தரு)
எல்லை தீர்தரு படைக்கலத் திறையுமவ் விறைவற்
புல்லு கின்றதோர் திறலுடைத் துணைவியும் போலத்
தொல்லை வீரனுந் தேவியும் மேவரு தொடர்பை
ஒல்லை காணுறா மகிழ்ந்தனர் விமலனும் உமையும். ......
16(தன்னை வந்தடை)
தன்னை வந்தடை பத்திரை தன்னொடு தடந்தாள்
மன்னு வார்கழல் கலித்திட வலஞ்செய்து வள்ளல்
அன்னை தாதையை வணங்கியே யவர்தமை நோக்கி
முன்ன நின்றுகை தொழுதனன் இவைசில மொழிவான். ......
17(மால யன்றனைப்)
மால யன்றனைப் பற்றிமுன் தந்திடோ மறவெங்
காலன் ஆவியை முடித்திடோ அசுரரைக் களைகோ
மேலை வானவர் தம்மையுந் தடிந்திடோ வேலை
ஞாலம் யாவையும் விழுங்குகோ உலகெலா நடுக்கோ. ......
18(மன்னு யிர்த்தொகை)
மன்னு யிர்த்தொகை துடைத்திடோ வரம்பில வாகித்
துன்னும் அண்டங்கள் தகர்த்திடோ நுமதுதூ மலர்த்தாள்
சென்னி யிற்கொடே யாவதொன் றென்னினுஞ் செய்வன்
என்னை இங்குநீர் நல்கிய தெப்பணிக் கென்றான். ......
19(என்ற வீரனை)
என்ற வீரனை நோக்கியே கண்ணுதல் எம்மை
அன்றி வேள்விசெய் கின்றனன் தக்கன்அவ் விடைநீ
சென்று மற்றெம தவியினைக் கேட்டிஅத் தீயோன்
நன்று தந்தன னேயெனின் இவ்விடை நடத்தி. ......
20(தருத லின்றெனின்)
தருத லின்றெனின் அனையவன் தலையினைத் தடிந்து
பரிவி னால்அவன் பால்உறு வோரையும் படுத்துப்
புரியும் எச்சமுங் கலக்குதி அங்கது பொழுதின்
வருதும் ஆயிடை ஏகுதி என்றனன் வள்ளல். ......
21(அந்த வேலையில் பத்தி)
அந்த வேலையில் பத்திரை தன்னொடும் அடலின்
முந்து வீரனவ் விருவர்தம் பதங்களின் முறையால்
சிந்தை அன்புடன் வணங்கியே விடைகொண்டு சிவனை
நிந்தை செய்தவன் வேள்வியை அழித்திட நினைந்தான். ......
22(உன்னி மற்றவண்)
உன்னி மற்றவண் நீங்கியே ஆற்றவும் உருத்துத்
தன்னு யிர்ப்பினால் அளவையில் கணங்களைத் தந்து
துன்னு கின்றமெய் வியர்ப்பினால் சிலவரைத் தொகுத்து
வன்னி போல்மயிர்க் கால்தொறுஞ் சிலவரை வகுத்தான். ......
23(மொழியி னிற்பல)
மொழியி னிற்பல பூதரை அளித்தனன் முளரி
விழியி னிற்பல பூதரை அளித்தனன் வேணி
யுழியி னிற்பல பூதரை அளித்தனன் உந்திச்
சுழியி னிற்பல பூதரை அளித்தனன் தூயோன். ......
24(தோளில் எண்ணிலா)
தோளில் எண்ணிலா வீரரை அளித்தனன் சுவையின்
கோளில் எண்ணிலா வீரரை அளித்தனன் குளிர்பொற்
றாளில் எண்ணிலா வீரரை அளித்தனன் தடக்கை
வாளில் எண்ணிலா வீரரை அளித்தனன் வலியோன். ......
25(கையி னிற்சில)
கையி னிற்சில பூதரை அளித்தனன் களத்தில்
வெய்ய மார்பினிற் கன்னத்திற் சிலவரை விதித்தான்
ஐய தோர்முழந் தாள்தனிற் சிலவரை அளித்தான்
குய்ய மீதினில் ஊருவிற் சிலவரைக் கொடுத்தான். ......
26(இன்ன தன்மையில் வீரபத்)
இன்ன தன்மையில் வீரபத் திரனெனும் இறைவன்
தன்னை நேர்வரும் எண்ணிலா வீரரைத் தந்து
துன்னு கின்றுழிப் பத்திரை என்பதோர் துணைவி
அன்ன பண்பினிற் காளிகள் தொகையினை அளித்தாள். ......
27(வீர பத்திர உருத்தி)
வீர பத்திர உருத்திரன் வேறுவே றளித்த
சார தர்க்குளங் கோர்சிலர் நீனிறந் தழைப்போர்
கோர பத்திரம் மணிக்கலன் மின்னுவிற் குலவக்
காரெ னப்பொலிந் துருமெனக் கழறுகின் றனரால். ......
28(அக்கு மாலையும்)
அக்கு மாலையும் மணிகளும் உடுக்கள்போல் அவிரப்
பக்க வாணிலா எயிறுகள் பிறையெனப் பயில
மிக்கு நீடிய வடிவின ராகியே மேலாஞ்
செக்கர் வானெனச் சேந்தெழு பூதர்கள் சிலரே. ......
29(அண்ட ரைத்தொலை)
அண்ட ரைத்தொலை வித்திடும் வீரனை அடைந்தோர்
பிண்ட முற்றும்வான் நிறத்தினர் பூதரில் பெரியோர்
பண்டி ரைத்தொரு முனிமகன் பின்றொடர் பாலின்
தெண்டி ரைக்கடற் றொகையெனக் கிளர்ந்தனர் சிலரே. ......
30(வெம்பொன் மேனியர்)
வெம்பொன் மேனியர் அணுகுறின் அவர்தமை விரைவில்
பைம்பொன் மேனியர் ஆக்குமத் திருநிழல் பரப்பி
அம்பொன் மார்புடை முகுந்தனில் வடிவுடை யவராய்ச்
செம்பொன் மால்வரை நிரையெனத் தோன்றினர் சிலரே. ......
31(மேய வான்பசப்)
மேய வான்பசப் பூர்தரு மேனிய ராகிக்
காய மித்துணை யெனப்படாக் கணக்கின ராகி
மாயர் கண்டுயில் சேக்கையைத் தங்கணே வகுத்துச்
சேய தொன்மரத் தொகையெனக் கெழீஇயினர் சிலரே. ......
32வேறு(அங்க வர்க்குள்)
அங்க வர்க்குள் அடல்விடை ஆனனந்
தங்கி நின்று தயங்கினர் ஓர்சிலர்
பொங்கு சீற்றப் பொருதிறல் வாலுளைச்
சிங்க மாமுக மாய்த்தெழித் தார்சிலர். ......
33(புழைகொள் கையுடை)
புழைகொள் கையுடைப் போர்வலி யாளியின்
முழைகொள் மாமுக மாகிமொய்த் தார்சிலர்
வழுவை யானனம் மன்னினர் ஓர்சிலர்
உழுவை யின்முக மாகியுற் றார்சிலர். ......
34(அலைமு கப்பரி)
அலைமு கப்பரி ஆனனம் எய்தியே
கொலைமு கத்துக் குழீஇயினர் ஓர்சிலர்
மலைமு கத்து மரைகளி றெண்குடன்
கலைமு கத்துக் கவினடைந் தார்சிலர். ......
35(இனையர் தங்குழு)
இனையர் தங்குழு எண்ணில அன்னர்கைப்
புனைய நின்ற பொருபடை எண்ணில
வினைகொள் வன்மையும் வீரமும் இற்றென
நினைவ தற்கரி தெங்ஙன் நிகழ்த்துகேன். ......
36(கையில் எண்ணில்)
கையில் எண்ணில் படையினர் காய்கனல்
செய்ய பூணினர் தீக்கலுழ் கண்ணினர்
வெய்ய சொல்லர் வெருவரு மேனியர்
வையம் யாவும் மடுக்குறும் வாயினார். ......
37(கட்டு செஞ்சடைக் கற்)
கட்டு செஞ்சடைக் கற்றையர் காய்ந்தெழு
நெட்ட ழற்கு நிகர்வரு நாவினர்
வட்டி மாலைகள் மானும் எயிற்றினர்
தொட்ட மூவிலைச் சூலந் துளக்குவார். ......
38(துண்ட மீது சொரி)
துண்ட மீது சொரிதருந் தீயினர்
அண்ட கூடம் அலைத்திடுங் கையினர்
சண்ட மாருதந் தாழ்க்குஞ் செலவினர்
உண்டு போரென் றுளந்தளிர்ப் பெய்துவார். ......
39(மடித்த வாயினர்)
மடித்த வாயினர் வானவர் என்பினால்
தொடுத்த கண்ணி துயல்வரு மார்பினர்
தடித்த தோளர் தனித்தழல் என்னினும்
பிடித்து நுங்கும் பெரும்பசி மிக்குளார். ......
40(நச்சில் தீயவர்)
நச்சில் தீயவர் நானில மங்கையும்
அச்சுற் றெஞ்ச அடிகள் பெயர்த்துளார்
கச்சைத் தோல்மிசை கட்டிய தட்டியர்
உச்சிட் டம்மென் றுலகினை உண்கிலார். ......
41(சூழி யானை துவன்)
சூழி யானை துவன்றிய மால்வரைப்
பாழி யாகப் படர்செவி வாயினர்
ஊழி மாருதம் உட்கும் உயிர்ப்பினர்
ஆழி யாக அகன்ற அகட்டினார். ......
42(ஆழ்ந்த சூர்ப்பசுங்)
ஆழ்ந்த சூர்ப்பசுங் கண்ணர் அடித்துணை
தாழ்ந்த கையர் தடக்குறுந் தாளினர்
வீழ்ந்து மிக்க வியன்அத ரத்தினர்
சூழ்ந்த பூதத் தொகையினர் யாவரும். ......
43வேறு(அத்தகை நின்றிட)
அத்தகை நின்றிட அண்ண லுடன்சேர்
பத்திர காளி பயந்திடு கின்ற
கத்து கடற்புரை காளிகள் தம்மை
இத்துணை யேயென எண்ணரி தாமால். ......
44(அந்தமில் பல்படை)
அந்தமில் பல்படை அங்கையில் ஏந்தி
உந்திய தும்பைகள் உச்சி மிலைச்சிச்
சுந்தர மெய்திய தோற்றம தாகி
விந்தை யெனச்சிலர் மேவினர் அன்றே. ......
45(தோளின் மிசைத்திரி)
தோளின் மிசைத்திரி சூலம் இலங்கக்
கோளில் உயிர்ப்பலி கொள்கலன் ஏந்தித்
தாளிடை நூபுர சாலமி லங்கக்
காளிகள் போற்சிலர் காட்சி மலிந்தார். ......
46(வாகினி எங்குள)
வாகினி எங்குள வென்றிட மல்கு
மோகினி போற்சிலர் மொய்த்தனர் மாயச்
சாகினி போற்சிலர் சார்ந்தனர் அல்லா
யோகினி போற்சிலர் உற்றனர் அம்மா. ......
47(அயிருறு அண்டம்)
அயிருறு அண்டம் அனைத்தையும் எற்றா
உயிரவி நுங்கிய உன்னி யெழுந்தே
செயிரவி யாது தெழித்திடு தொன்னாள்
வயிரவி போற்சிலர் மன்னினர் மாதோ. ......
48(நீடலை மாலை)
நீடலை மாலை நிலத்திடை தோய
ஆடுறு பாந்தள் அணிக்கலன் மின்ன
ஈடுறு வானுரும் ஏறென ஆர்த்தே
மோடிக ளாமென மொய்த்தனர் சில்லோர். ......
49(இவ்வகை மாதர்கள்)
இவ்வகை மாதர்கள் யாவரும் வெவ்வே
றைவகை மேனிய ராய்வத னங்கள்
கைவகை எண்ணில ராய்க்கவின் மாட்சிச்
செவ்விய ராய்ச்செரு மேற்கிளர் கின்றார். ......
50வேறு(கணந்திகழ் அனைய)
கணந்திகழ் அனைய பூதர் காரிகை மார்கள் யாரும்
அணங்குறு காளி தன்னோ டாண்டகை வீரன் தாளில்
பணிந்தனர் பரசி அன்னார் பாங்கரில் விரவிச் சூழ்ந்து
துணங்கைகொ டாடிப் பாடித் துள்ளியே போத லுற்றார். ......
51(ஈட்டமிக் கெழுந்து)
ஈட்டமிக் கெழுந்து செல்லும் இன்னதோர் பூதர் தம்மில்
மோட்டிகல் பானு கம்பன் முதலிய கணங்கள் முத்தி
வீட்டுடைத் தலைவ னான வீரபத் திரன்முன் னாகி
ஈட்டுடைப் பல்லி யங்கள் யாவையும் இயம்பிச் சென்றார். ......
52(கொண்டபே ராற்ற)
கொண்டபே ராற்ற லோடுங் குலவிய வீரன் தன்பால்
அண்டமேல் உரிஞ்சப் பல்வே றணிப்பெருங் கவிகை கொண்டும்
விண்டுலாங் கவரி யீட்டம் வீசியுஞ் சேற லுற்றார்
தண்டனே பினாகி சிங்கன் ஆதியாம் தறுகட் பூதர். ......
53(பாசிழை மகளிர்)
பாசிழை மகளிர் சில்லோர் பத்திரை பாங்க ராகித்
தேசுடைக் கவிகை ஈட்டந் திருநிழல் பரப்ப ஏந்தி
மாசறு கவரி வட்டம் வரம்பில இரட்டிப் பல்வே
றாசிகள் புகன்று செம்பொன் அணிமலர் சிதறிப் போந்தார். ......
54(படர்ந்திடு புணரி)
படர்ந்திடு புணரி போலப் பார்முழு தீண்டித் தானை
அடங்கலும் ஆர்க்கும் ஓதை அகிலமுஞ் செறிய விண்ணும்
உடைந்ததவ் வண்டங் கொல்லோ உதுகொலோ இதுவோ என்னா
மிடைந்தபல் லண்டத் தோரும் விதிர்ப்பொடும் விளம்பல் உற்றார். ......
55(பூழிகள் எழுந்த)
பூழிகள் எழுந்த அம்மா புவியெலாம் பரவித் தொல்பேர்
ஆழியும் அடைத்து வான்புக் கச்சுதன் பதங்கா றேகி
ஊழியின் முதல்வ னார்க்கும் ஒலியினால் உடைந்த அண்டப்
பாழிக டொறுமுற் றெல்லாப் புவனமும் பரந்த அன்றே. ......
56(அங்கெழு பூழி)
அங்கெழு பூழி தன்னால் அவர்விழி கலுழுந் தீயால்
செங்கையிற் படைகள் தேய்ப்பச் சிதறிய கனலால் வையம்
எங்கணும் எரிகள் துன்னி இரும்புகைப் படலம் ஈண்டிக்
கங்குலும் பகலுங் காணாக் கடைப்பகல் போன்ற தன்றே. ......
57(இப்பெருந் தானை)
இப்பெருந் தானை சூழ எம்பிரான் எழுந்து சீற்றத்
துப்புடன் ஏகித் தக்கன் தொல்மகம் புரியுஞ் சாலை
வைப்பினை அணுகித் தன்பால் வருபடைத் தலைவர்க் கொன்று
செப்பினன் என்ப மன்னோ சேணுரு மேறு நாண. ......
58(பற்றலர் புரமூன் றட்ட)
பற்றலர் புரமூன் றட்ட பரமனை இகழ்ந்து நீக்கிச்
சிற்றினம் பொருளென் றுன்னிச் சிறுவிதி என்னுந் தீயோன்
இற்றிடு நெறியால் வேள்வி இயற்றும்இச் சாலை வாயில்
சுற்றொடு சேமஞ் செய்து துயக்கறக் காத்தி ரென்றான். ......
59(என்றலுந் தானை)
என்றலுந் தானை யோர்கள் எயிற்புற முற்றுஞ் சூழ்ந்து
நின்றனர் வானி னூடு நெருங்கினர் வாய்தல் தோறுஞ்
சென்றனர் கொடிய தக்கன் சேனையாய் எதிர்ந்தோர் தம்மைக்
கொன்றனர் அவரூன் துய்த்துக் கூற்றனும் உட்க ஆர்த்தார். ......
60ஆகத் திருவிருத்தம் - 9664