Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   6 - தக்ஷ காண்டம்   next kandam6 - dhaksha kANdam

previous padalam   18 - உமைவரு படலம்   next padalamUmaivaru padalam

Ms Revathi Sankaran (5.84mb)
(பேசுமிவ் வேள்வி)

பேசுமிவ் வேள்வி பிதாமகன் மைந்தன்
     நாசம் விளைந்திட நாடி இயற்ற
          மாசறு நாரத மாமுனி யுற்றே
               காசினி மேலிது கண்டனன் அன்றே. ......    1

(கண்டனன் ஆலமர்)

கண்டனன் ஆலமர் கண்டனை நீக்கிப்
     புண்டரி கந்திகழ் புங்கவன் மைந்தன்
          அண்ட ருடன்மகம் ஆற்றினன் அன்னான்
               திண்டிறல் கொல்லிது செய்திடல் என்னா. ......    2

(எண்ணிய நாரதன்)

எண்ணிய நாரதன் எவ்வு லகுஞ்செய்
     புண்ணிய மன்னதொர் பூங்க யிலாயம்
          நண்ணிமுன் நின்றிடு நந்திகள் உய்ப்பக்
               கண்ணுதல் சேவடி கைதொழு துற்றான். ......    3

(கைதொழு தேத்தி)

கைதொழு தேத்திய காலைஅன் னானை
     மைதிகழ் கந்தர வள்ளல்கண் ணுற்றே
          எய்திய தென்னிவண் இவ்வுல கத்தில்
               செய்திய தென்னது செப்புதி என்றான். ......    4

(எங்கணு மாகி இரு)

எங்கணு மாகி இருந்தருள் கின்ற
     சங்கரன் இம்மொழி சாற்றுத லோடும்
          அங்கது வேலையில் அம்முனி முக்கட்
               புங்கவ கேட்டி யெனப்புகல் கின்றான். ......    5

(அதிர்தரு கங்கை)

அதிர்தரு கங்கை அதன்புடை மாயோன்
     விதிமுத லோரொடு மேதகு தக்கன்
          மதியிலி யாயொர் மகம்புரி கின்றான்
               புதுமையி தென்று புகன்றனன் அம்மா. ......    6

(ஈங்கிது கூறலும்)

ஈங்கிது கூறலும் எம்பெரு மான்றன்
     பாங்கரின் மேவு பராபரை கேளா
          ஆங்கவன் மாமகம் அன்பொடு காண்பான்
               ஓங்கு மகிழ்ச்சி உளத்திடை கொண்டாள். ......    7

(அங்கணன் நல்லரு)

அங்கணன் நல்லரு ளால்அனை யான்றன்
     பங்குறை கின்றனள் பாங்கரின் நீங்கி
          எங்கள் பிரானை எழுந்து வணங்கிச்
               செங்கை குவித்திது செப்புத லுற்றாள். ......    8

(தந்தை எனப்படு)

தந்தை எனப்படு தக்கன் இயற்றும்
     அந்த மகந்தனை அன்பொடு நோக்கி
          வந்திடு கின்றனன் வல்லையில் இன்னே
               எந்தை பிரான்விடை ஈகுதி என்றாள். ......    9

(என்றலும் நாயகன்)

என்றலும் நாயகன் ஏந்திழை தக்கன்
     உன்றனை எண்ணலன் உம்பர்க ளோடும்
          வன்றிறல் எய்தி மயங்குறு கின்றான்
               இன்றவன் வேள்வியில் ஏகலை என்றான். ......    10

(இறையிது பேசலும்)

இறையிது பேசலும் ஏந்திழை வேதாச்
     சிறுவ னெனப்படு தீயதொர் தக்கன்
          அறிவிலன் ஆகும் அவன்பிழை தன்னைப்
               பொறுமதி என்றடி பூண்டனள் மாதோ. ......    11

(பூண்டனள் வேள்வி)

பூண்டனள் வேள்வி பொருக்கென நண்ணி
     மீண்டிவண் மேவுவல் வீடருள் செய்யுந்
          தாண்டவ நீவிடை தந்தருள் என்றாள்
               மாண்டகு பேரருள் வாரிதி போல்வாள். ......    12

(மாதிவை கூறலும்)

மாதிவை கூறலும் வன்மைகொள் தக்கன்
     மேதகு வேள்வி வியப்பினை நோக்குங்
          காதலை யேலது கண்டனை வல்லே
               போதுதி என்று புகன்றனன் மேலோன். ......    13

வேறு

(அரன்விடை புரிதலும்)

அரன்விடை புரிதலும் அம்மை ஆங்கவன்
     திருவடி மலர்மிசைச் சென்னி தாழ்ந்தெழா
          விரைவுடன் நீங்கியோர் விமானத் தேறினாள்
               மரகத வல்லிபொன் வரையுற் றாலென. ......    14

(ஐயைதன் பேரருள்)

ஐயைதன் பேரருள் அனைத்தும் ஆங்கவள்
     செய்யபொன் முடிமிசை நிழற்றிச் சென்றெனத்
          துய்யதொர் கவுரிபாற் சுமாலி மாலினித்
               தையலார் மதிக்குடை தாங்கி நண்ணினார். ......    15

(துவரிதழ் மங்கலை)

துவரிதழ் மங்கலை சுமனை யாதியோர்
     கவரிகள் இரட்டினர் கவுரி பாங்கரில்
          இவர்தரும் ஓதிமம் எண்ணி லாதஓர்
               அவிர்சுடர் மஞ்ஞைபால் அடைவ தாமென. ......    16

(கால்செயும் வட்ட)

கால்செயும் வட்டமுங் கவின்கொள் பீலியும்
     மால்செயும் நறுவிரை மல்க வீசியே
          நீல்செயும் வடிவுடை நிமலை பாற்சிலர்
               வேல்செயும் விழியினர் மெல்ல ஏகினார். ......    17

(கோடிகம் அடைப்பை)

கோடிகம் அடைப்பைவாள் குலவு கண்ணடி
     ஏடுறு பூந்தொடை ஏந்தி யம்மைதன்
          மாடுற அணுகியே மானத் தேகினார்
               தோடுறு வரிவிழித் தோகை மார்பலர். ......    18

(நாதன தருள்பெறு)

நாதன தருள்பெறு நந்தி தேவியாஞ்
     சூதுறழ் பணைமுலைச் சுகேசை என்பவள்
          மாதுமை திருவடி மலர்கள் தீண்டிய
               பாதுகை கொண்டுபின் படர்தல் மேயினாள். ......    19

(கமலினி அனிந்திதை)

கமலினி அனிந்திதை என்னுங் கன்னியர்
     அமலைதன் சுரிகுழற் கான பூந்தொடை
          விமலமொ டேந்தியே விரைந்து செல்கின்றார்
               திமிலிடு கின்றதொல் சேடி மாருடன். ......    20

(அடுத்திடு முலகெலா)

அடுத்திடு முலகெலாம் அளித்த அம்மைசீர்
     படித்தனர் ஏகினர் சிலவர் பாட்டிசை
          எடுத்தனர் ஏகினர் சிலவர் ஏர்தக
               நடித்தனர் ஏகினர் சிலவர் நாரிமார். ......    21

(பாங்கியர் சிலதியர்)

பாங்கியர் சிலதியர் பலரும் எண்ணிலா
     வீங்கிய பேரொளி விமானத் தேறியே
          ஆங்கவள் புடையதாய் அணுகிச் சென்றனர்
               ஓங்கிய நிலவுசூழ் உடுக்கள் போன்றுளார். ......    22

(தண்ணுறு நானமுஞ்)

தண்ணுறு நானமுஞ் சாந்துஞ் சந்தமுஞ்
     சுண்ணமுங் களபமுஞ் சுடரும் பூண்களும்
          எண்ணருந் துகில்களும் இட்ட மஞ்சிகை
               ஒண்ணுத லார்பரித் துமைபின் போயினார். ......    23

(குயில்களுங் கிள்ளை)

குயில்களுங் கிள்ளையுங் குறிக்கொள் பூவையும்
     மயில்களும் அஞ்சமும் மற்றும் உள்ளவும்
          பயிலுற ஏந்தியே பரைமுன் சென்றனர்
               அயில்விழி அணங்கினர் அளப்பி லார்களே. ......    24

(விடையுறு துவச)

விடையுறு துவசமும் வியப்பின் மேதகு
     குடைகளும் ஏந்தியுங் கோடி கோடியாம்
          இடியுறழ் பல்லியம் இசைத்தும் அம்மைதன்
               புடைதனில் வந்தனர் பூதர் எண்ணிலார். ......    25

(அன்னவள் அடி)

அன்னவள் அடிதொழு தருள்பெற் றொல்லையில்
     பன்னிரு கோடிபா ரிடங்கள் பாற்பட
          முன்னுற ஏகினன் மூரி ஏற்றின்மேல்
               தொன்னெறி அமைச்சியற் சோம நந்தியே. ......    26

(இவரிவர் இத்திறம்)

இவரிவர் இத்திறம் ஈண்ட எல்லைதீர்
     புவனமும் உயிர்களும் புரிந்து நல்கிய
          கவுரியம் மானமேற் கடிது சென்றரோ
               தவலுறு வோன்மகச் சாலை நண்ணினாள். ......    27

(ஏலுறு மானநின்)

ஏலுறு மானநின் றிழிந்து வேள்வியஞ்
     சாலையுள் ஏகியே தக்கன் முன்னுறும்
          வேலையில் உமைதனை வெகுண்டு நோக்கியே
               சீலமி லாதவன் இனைய செப்பினான். ......    28

வேறு

(தந்தை தன்னொடு)

தந்தை தன்னொடுந் தாயி லாதவன்
     சிந்தை அன்புறுந் தேவி யானநீ
          இந்த வேள்வியான் இயற்றும் வேலையில்
               வந்த தென்கொலோ மகளிர் போலவே. ......    29

(மல்லல் சேரும்இம்)

மல்லல் சேரும்இம் மாம கந்தனக்
     கொல்லை வாவென உரைத்து விட்டதும்
          இல்லை ஈண்டுநீ ஏக லாகுமோ
               செல்லும் ஈண்டுநின் சிலம்பில் என்னவே. ......    30

(மங்கை கூறுவாள்)

மங்கை கூறுவாள் மருகர் யார்க்குமென்
     தங்கை மார்க்கும்நீ தக்க தக்கசீர்
          உங்கு நல்கியே உறவு செய்துளாய்
               எங்கள் தம்மைஓர் இறையும் எண்ணலாய். ......    31

(அன்றி யும்மிவண்)

அன்றி யும்மிவண் ஆற்றும் வேள்வியில்
     சென்ற என்னையுஞ் செயிர்த்து நோக்குவாய்
          நன்ற தோவிதோர் நவைய தாகுமால்
               உன்தன் எண்ணம்யா துரைத்தி என்னவே. ......    32

(ஏய முக்குணத் தியலு)

ஏய முக்குணத் தியலுஞ் செய்கையுள்
     தீய தொல்குணச் செய்கை ஆற்றியே
          பேயொ டாடல்செய் பித்தன் தேவியாய்
               நீயும் அங்கவன் நிலைமை எய்தினாய். ......    33

(அன்ன வன்தனோ)

அன்ன வன்தனோ டகந்தை மேவலால்
     உன்னை எள்ளினன் உனது பின்னுளோர்
          மன்னு கின்றவென் மருகர் யாவரும்
               என்னி னும்மெனக் கினியர் சாலவும். ......    34

(ஆத லாலியா னவ)

ஆத லாலியா னவர்கள் பாங்கரே
     காத லாகியே கருது தொல்வளன்
          யாது நல்கினன் இந்த வேள்வியில்
               ஓது நல்லவி யுளது நல்கினேன். ......    35

(புவனி உண்டமால்)

புவனி உண்டமால் புதல்வ னாதியாம்
     எவரும் வந்தெனை ஏத்து கின்றனர்
          சிவனும் நீயுமோர் சிறிதும் எண்ணலீர்
               உவகை யின்றெனக் குங்கள் பாங்கரில். ......    36

(ஏற்றின் மேவுநின்)

ஏற்றின் மேவுநின் இறைவ னுக்கியான்
     ஆற்றும் வேள்வியுள் அவியும் ஈகலன்
          சாற்று கின்றவே தத்தின் வாய்மையும்
               மாற்று கின்றனன் மற்றென் வன்மையால். ......    37

(அனைய தன்றிஈண்)

அனைய தன்றிஈண் டடுத்த நிற்கும்யான்
     தினையின் காறுமோர் சிறப்புஞ் செய்கலன்
          எனவி யம்பலும் எம்பி ராட்டிபால்
               துனைய வந்ததால் தோமில் சீற்றமே. ......    38

(சீற்ற மாயதீச் செறி)

சீற்ற மாயதீச் செறியு யிர்ப்பொடே
     காற்றி னோடழல் கலந்த தாமெனத்
          தோற்றி அண்டமுந் தொலைவில் ஆவியும்
               மாற்று வானெழீஇ மல்கி ஓங்கவே. ......    39

(பாரும் உட்கின பர)

பாரும் உட்கின பரவு பௌவமுந்
     நீரும் உட்கின நெருப்பும் உட்கின
          காரும் உட்கின கரிகள் உட்கின
               ஆரும் உட்கினர் அமர ராயுளார். ......    40

(பங்க யாசனப் பக)

பங்க யாசனப் பகவன் தானுமச்
     செங்கண் மாயனுஞ் சிந்தை துண்ணென
          அங்கண் உட்கினார் என்னின் ஆங்கவள்
               பொங்கு சீற்றம்யார் புகல வல்லரே. ......    41

(வேலை அன்னதில்)

வேலை அன்னதில் விமலை என்பவள்
     பாலின் நின்றதோர் பாங்கி தாழ்ந்துமுன்
          ஞாலம் யாவையும் நல்கும் உன்றனக்
               கேலு கின்றதோ இனைய சீற்றமே. ......    42

(மைந்தர் யாரையும்)

மைந்தர் யாரையும் வளங்கள் தம்மொடுந்
     தந்து நல்கிய தாய்சி னங்கொளா
          அந்த மாற்றுவான் அமைந்து ளாயெனின்
               உய்ந்தி டுந்திறம் உண்டு போலுமால். ......    43

(அறத்தை ஈங்கிவன்)

அறத்தை ஈங்கிவன் அகன்று ளானெனச்
     செறுத்தி அன்னதோர் சீற்றம் யாரையும்
          இறைக்கு முன்னரே ஈறு செய்யுமால்
               பொறுத்தி ஈதெனப் போற்றல் மேயினாள். ......    44

(போற்றி நிற்றலும்)

போற்றி நிற்றலும் புனிதை தன்பெருஞ்
     சீற்ற மாய்எழுந் தீயை யுள்ளுற
          மாற்றி வேள்விசெய் வானை நோக்கியே
               சாற்று கின்றனள் இனைய தன்மையே. ......    45

(என்னை நீயிவண்)

என்னை நீயிவண் இகழ்ந்த தன்மையை
     உன்ன லேன்எனை யுடைய நாயகன்
          தன்னை எள்ளினாய் தரிக்கி லேன்அதென்
               கன்னம் ஊடுசெல் கடுவு போலுமால். ......    46

(நிர்க்கு ணத்தனே)

நிர்க்கு ணத்தனே நிமல னன்னவன்
     சிற்கு ணத்தனாய்த் திகழு வானொரு
          சொற்கு ணத்தனோ தொலைக்கு நாள்அடு
               முற்கு ணத்தினை முன்னு மாறலால். ......    47

(துன்று தொல்லுயிர்)

துன்று தொல்லுயிர் தொலைவு செய்திடும்
     அன்று தாமதத் தடுவ தன்றியே
          நன்று நன்றது ஞான நாயகற்
               கென்று முள்ளதோர் இயற்கை யாகுமோ. ......    48

(தீய தன்றடுஞ்)

தீய தன்றடுஞ் செயலும் நல்லருள்
     ஆயில் ஆவிகள் அழிந்துந் தோன்றியும்
          ஓய்வி லாதுழன் றுலைவு றாமலே
               மாய்வு செய்திறை வருத்த மாற்றலால். ......    49

(ஆன வச்செயல்)

ஆன வச்செயல் அழிவி லாததோர்
     ஞான நாயகற் கன்றி நாமெனும்
          ஏனை யோர்களால் இயற்ற லாகுமோ
               மேன காவலும் விதியும் என்னவே. ......    50

(முன்னரே எலா)

முன்னரே எலா முடித்த நாதனே
     பின்னும் அத்திறம் அளிக்கும் பெற்றியான்
          அன்ன வன்கணே அனைத்து மாகுமால்
               இன்ன பான்மைதான் இறைவன் வாய்மையே. ......    51

(தோமி லாகமஞ்)

தோமி லாகமஞ் சுருதி செப்பியே
     ஏம விஞ்சைகட் கிறைவ னாகியே
          நாம றும்பொருள் நல்கும் எந்தையைத்
               தாம தன்னெனச் சாற்ற லாகுமோ. ......    52

(ஆத லால்அவன்)

ஆத லால்அவன் அனைவ ருக்குமோர்
     நாத னாமரோ அவற்கு நல்லவி
          ஈதல் செய்திடா திகழ்தி அஞ்சியே
               வேதம் யாவையும் வியந்து போற்றவே. ......    53

(சிவனெ னுந்து)

சிவனெ னுந்துணைச் சீரெ ழுத்தினை
     நுவலு வோர்கதி நொய்தி லெய்துவார்
          அவனை எள்ளினாய் ஆரி தாற்றுவார்
               எவனை உய்குதி இழுதை நீரைநீ. ......    54

வேறு

(முண்டக மிசையி)

முண்டக மிசையினோன் முகுந்தன் நாடியே
     பண்டுணர் வரியதோர் பரனை யாதியாக்
          கொண்டிலர் எள்ளிய கொடுமை யோர்க்கெலாந்
               தண்டம்வந் திடுமென மறைகள் சாற்றுமால். ......    55

(ஈதுகேள் சிறுவிதி)

ஈதுகேள் சிறுவிதி இங்ங னோர்மகம்
     வேதநா யகன்தனை விலக்கிச் செய்தனை
          ஆதலால் உனக்கும்வந் தடைக தண்டமென்
               றோதினாள் உலகெலாம் உதவுந் தொன்மையாள். ......    56

(இன்னன கொடு)

இன்னன கொடுமொழி இயம்பி வேள்விசெய்
     அந்நிலம் ஒருவிஇவ் வகிலம் ஈன்றுளாள்
          முன்னுள பரிசன முறையின் மொய்த்திடப்
               பொன்னெழின் மானமேற் புகுந்து போந்தனள். ......    57

(அகன்றலை உலக)

அகன்றலை உலகருள் அயன்தன் காதலன்
     புகன்றன உன்னியுட் புழுங்கி ஐந்துமா
          முகன்திரு மலையிடை முடுகிச் சென்றனள்
               குகன்தனை மேலருள் கொடிநு சுப்பினாள். ......    58

(ஒருவினள் ஊர்தி)

ஒருவினள் ஊர்தியை உமைதன் நாயகன்
     திருவடி வணங்கினள் சிறிய தொல்விதி
          பெரிதுனை இகழ்ந்தனன் பெரும அன்னவன்
               அரிதுசெய் வேள்வியை அழித்தி என்னவே. ......    59

(எவ்வமில் பேரருட்)

எவ்வமில் பேரருட் கிறைவ னாகியோன்
     நவ்வியங் கரமுடை நாதன் ஆதலின்
          அவ்வுரை கொண்டில னாக அம்பிகை
               கவ்வையொ டினையன கழறல் மேயினாள். ......    60

(மேயின காதலும்)

மேயின காதலும் வெறுப்பு நிற்கிலை
     ஆயினும் அன்பினேற் காக அன்னவன்
          தீயதோர் மகத்தினைச் சிதைத்தல் வேண்டும்என்
               நாயக னேயென நவின்று போற்றினாள். ......    61

ஆகத் திருவிருத்தம் - 9604
(எண் = செய்யுளின் எண்)

*1. பிதாமகன் - பிரமன்.

*4. மைதிகழ் சுந்தரம் - நீலகண்டம்.

*6. கங்கை அதன்புடை - கங்கா நதிக்கரையில்.

*7. பராபரை - அம்பிகை.

*10-1. ஏந்திழை - உமாதேவியே!.

*10-2. வந்திறல் - மிக்க செருக்கு.

*10-3. ஏகலை - போகாதே.

*11-1. இறை - சிவபெருமான்.

*11-2. பொறுமதி - பொறுப்பாயாக. மதி: முன்னிலையசை.

*12-1. மாண்டகு - மாட்சிமை மிக்க.

*12-2. வாரிதி - கடல்.

*15. ஐயை - அம்பிகை.

*16-1. துவர் - செந்நிறம்.

*16-2. இவர்தரு - செல்லாநின்ற.

*17-1. கால் - காற்று.

*17-2. பீலி - மயில் விசிறி.

*17-3. நீல் - நீலநிறம்.

*17-4. நிமலை - அம்பிகை.

*18-1. கோடிகம் - பூந்தட்டு; அணிகலச் செப்புமாம்.

*18-2. கண்ணடி - கண்ணாடி.

*18-3. தோடு - காதணி.

*19. சூது - சொக்கட்டான் காய்.

*20-1. அமலை - அம்பிகை.

*20-2. விமலம் - தூய்மை.

*20-3. திமில் - திமிலம்; பேரொலி.

*21-1. சிலவர் - சிலர்.

*21-2. நாரிமார் - பெண்கள்.

*22. உடுக்கள் - நட்சத்திரங்கள்.

*23-1. நானம் - கஸ்தூரி.

*23-2. சாந்து - கலவைச் சந்தனம்.

*23-3. மஞ்சிகை - பேழை; பெட்டி.

*24-1. பூவை - நாகண வாய்ப்பறவை.

*24-2. அஞ்சம் - அன்னம்.

*24-3. பரை - உமை.

*26. சோமநந்தி - இவன் ஒரு தலைமைக் கணாதிபன்.

*28. சீலமிலாதவன் - ஒழுக்கமற்ற தக்கன்.

*30-1. மல்லல் - வளப்பம்.

*30-2. நின் சிலம்பில் - உனது கயிலை மலைக்கு.

*33. தீயதொல் குணம் - தாமதகுணம்.

*36. உவகை இன்று - விருப்பம் இல்லை.

*37-1. சாற்றுகின்ற - சிவபரமாக உரையாநின்ற.

*37-2. வாய்மை - உண்மைப் பொருளை.

*38-1. தினை - ஒரு தானியம். இது அளவிற் சிறியது.

*38-2. துனைய - விரைவாக.

*42-1. வேலை அன்னதில் - அந்தச் சமயத்தில்.

*42-2. விமலை - ஒரு சேடி.

*43. வளங்கள் தம்மொடு - தனுகரணபுவன போகங்களாகிய வளப்பங்களுடன்.

*45. புனிதை - உமாதேவியார்.

*46-1. கன்னம்ஊடு - காதினுள்.

*46-2. கடுவு - விஷம்.

*47-1. ஒரு சொற்குணத்தனோ - ஒரு குணமுடையவனோ.

*47-2. தொலைக்கு நாள் அடு முற் குணத்தினை முன்னு மாறலால் - சங்கார காலத்திற்கு முன் உள்ள குணத்தினைக் கருதுவதன்றித் தாமதமாகிய ஒரு குணமுடையனோ இல்லை என்றபடி.

*47-3. நிமலன் - (சிவபெருமான்) நிற்குணத்தனே; அவனே சிற்குணனாகவும் விளங்குவான்; சங்கார காலத்தில் சங்கரிக்கு முன் குணத்தினை எண்ணுவதே அல்லாமல் மற்றைய காலத்துத் தாமத குணமுடையவனோ அல்லன் என்பது கருத்து.

*49. உயிர்கள் பிறப்பு இறப்புக்களில் வருந்தாமல் இளைப்பாறும் பொருட்டே இறைவன் சங்காரத்தொழில் புரிகின்றான்; இச்செயல் அருட்டிறமே ஆகுமென்க.

*50-1. நாம் எனும் - அகங்காரம் பொருந்திய.

*50-2. மேன - முன் உரைத்த.

*50-3. காவலும் விதியும் - காத்தலும் படைத்தலும்.

*51. இறைவன் வாய்மை - சிவபெருமானின் உண்மைநிலை.

*52-1. ஏம விஞ்சை - உயிர்க்குப் பாதுகாவலான வித்தை.

*52-2. நாம் அறும் - நிந்தை இல்லாத.

*54-1. சிவன் எனும் - மங்களகரம் பொருந்திய.

*54-2. துணைச்சீர் எழுத்து - 'சிவ' என்னும் இரண்டெழுத்து.

*54-3. கதி - சிவகதி.

*55-1. கொண்டிலர் - கொள்ளாராய்.

*55-2. தண்டம் - தண்டனை.

*56. வேதநாயகன் - சிவபெருமான்.

*57. ஒருவி - நீங்கி.

*58-1. ஐந்து மாமுகன் மலை - கயிலாயமலை.

*58-2. ஐந்து மாமுகன் - ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னும் ஐந்து திருமுகங்களையுடைய சிவபெருமான்.

*58-3. குகன் - முருகன்.

*58-4. நுசுப்பு - இடை.

*59. தொல்விதி - தக்கன்.

*60-1. நவ்வி - மான்.

*60-2. கவ்வை - துன்பம்.previous padalam   18 - உமைவரு படலம்   next padalamUmaivaru padalam

previous kandam   6 - தக்ஷ காண்டம்   next kandam6 - dhaksha kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]