(இகந்த சீர்பெறும்)
இகந்த சீர்பெறும் இப்பெருஞ் சாலையில்
அகந்தை மிக்க அயன்பெருங் காதலன்
மகம்பு ரிந்தது மற்றது சிந்திடப்
புகுந்த வாறும் பொருக்கெனக் கூறுகேன். ......
1வேறு(மருத்து ழாய்முடி மால)
மருத்து ழாய்முடி மாலயன் பாங்குற மகத்தின்
கருத்த னாகிய தீயவன் முன்னமே கருதி
வரித்த மேலவர் தங்களை நோக்கியே மரபின்
இருத்து முத்தழல் என்றலும் நன்றென இசைந்தார். ......
2(முற்றும் நாடிய இரு)
முற்றும் நாடிய இருத்தினோர் அரணியின் முறையால்
உற்ற அங்கியை வேதிகைப் பறப்பைமேல் உய்த்துச்
சொற்ற மந்திர மரபினால் பரிதிகள் சூழ்ந்து
மற்று முள்ளதோர் விதியெலாம் இயற்றினர் மன்னோ. ......
3(ஆங்கு முத்தழல்)
ஆங்கு முத்தழல் விதிமுறை செய்தலும் அயன்சேய்
பாங்கர் உற்றிடும் இருத்தினர் யாரையும் பாரா
நீங்கள் உங்களுக் காகிய செய்கையை நினைந்து
தூங்கல் இன்றியே புரிமினோ கடிதெனச் சொன்னான். ......
4(சொன்ன வாசகங்)
சொன்ன வாசகங் கேட்டலும் இருத்தினோர் தொகையின்
முன்ன மாகிய அம்மகந் தனக்கவி முழுதும்
வன்னி யாதியாஞ் சமிதையுந் தருப்பையும் மற்றும்
இன்ன போல்வதுங் கொடுவழங் கினர்களா றிருவர். ......
5(அந்த வேள்விசெய்)
அந்த வேள்விசெய் வித்தனர் ஒருவரால் அவிகள்
எந்தை அல்லவர் கொள்ளவே அவரவர்க் கிசைத்த
மந்தி ரந்தனைப் புகன்றனர் ஒருவர்அவ் வானோர்
தந்த மைக்குறித் தழைத்தனர் ஒருவர்பேர் சாற்றி. ......
6(மற்ற வர்க்கெலாம்)
மற்ற வர்க்கெலாம் அமைந்திடும் அவிகளை மலர்க்கை
பற்றி யங்கிவாய் அளித்தனர் ஒருவர்அப் பரிசின்
அற்றம் நோக்கியே இருந்தனர் ஒருவர்அங் கதற்கு
முற்றும் நல்லருள் புரிந்தனர் ஒருவரம் முதல்போல். ......
7(இருத்தி னோர்களும்)
இருத்தி னோர்களும் பிறரும்ஈ தியற்றுழி யாக
கருத்த னாகிய தக்கன்அத் தேவரைக் கருதிப்
பரித்து நுங்குதிர் என்றவி புரிதொறும் பகர்ந்தே
அருத்தி உற்றனன் கடவுளர் தமக்கெலாம் அமுதின். ......
8(திருந்து கின்றநற்)
திருந்து கின்றநற் சுவையினால் தூய்மையால் திகழும்
மருந்து போன்றன என்னினும் உயிர்தொறும் மனத்தும்
இருந்த எம்பிரான் அன்றியே மிசைதலின் இமையோர்க்
கருந்தும் நீரலா நஞ்சென லாகிய அவிகள். ......
9ஆகத் திருவிருத்தம் - 9543