(போனதோர் பொழுதில)
போனதோர் பொழுதிலவன் துவசமிற்ற
மகத்தூணிற் பொருக்கென் றெய்திக்
கானுலா வியகொடியுங் கழுகுமிடைந்
தனயாருங் கலங்கத் தானே
மானமார் வேதவல்லி மங்கலநா
ணுங்கழன்ற மற்றித் தன்மை
ஆனதோர் துன்னிமித்தம் பலவுண்டால்
முடிவோன்கண் அவையு றாவோ. ......
1வேறு(இந்த வாறுதுன் னிமி)
இந்த வாறுதுன் னிமித்தங்கள் பலநிகழ்ந் திடவுஞ்
சிந்தை செய்திலன் சிறுவதும் அஞ்சிலன் தீயோன்
தந்தை தன்னையும் நாரணன் தன்னையுந் தகவால்
முந்து பூசனை புரிந்தனன் முகமன்கள் மொழியா. ......
2(மற்றை வானவர் யாவர்)
மற்றை வானவர் யாவர்க்கும் முனிவர்க்கும் மரபால்
எற்று வேண்டிய அவையெலாம் நல்கியே இதற்பின்
பெற்ற மங்கையர் தமக்கும்மா மருகர்க்கும் பெரிதும்
அற்ற மில்லதோர் மங்கலத் தொல்சிறப் பளித்தான். ......
3(நாலு மாமுகக் கடவுள்)
நாலு மாமுகக் கடவுள்சேய் இத்திறம் நல்கி
மாலும் யாவருங் காத்திடத் தீத்தொழில் மகஞ்செய்
வேலை நோக்கியே தொடங்கினன் அவ்விடை வேள்விச்
சாலை தன்னிடை நிகழ்ந்தன சாற்றுவன் தமியேன். ......
4(முன்னரே தக்கன் ஏவ)
முன்னரே தக்கன் ஏவலும் வினைசெயல் முறையால்
மன்னு தேனுவோ ராடகச் சாலையின் மாடே
பொன்னின் மால்வரை நடுவுசேர் வெள்ளியம் பொருப்பை
அன்ன தாமென அன்னமாம் பிறங்கலை அளித்த. ......
5(ஏதம் நீங்கிய தீயபால்)
ஏதம் நீங்கிய தீயபால் அடிசிலும் எண்ணில்
பேத மாகிய முதிரையின் உண்டியும் பிறவாம்
ஓத னங்களும் வீற்றுவீற் றாகவே உலகின்
மாதி ரங்களிற் குலகிரி யாமென வகுத்த. ......
6(நெய்யி னோடளாய்)
நெய்யி னோடளாய் விரைகெழு நுண்டுகள் நீவிக்
குய்யின் ஆவியெவ் வுலகமும் நயப்புறக் குழுமி
வெய்ய தாகிய கருனைகள் திசைதொறும் மேவும்
மையல் யானைக ளாமென வழங்கிற்று மாதோ. ......
7(அண்ணல் சேர்வெந்)
அண்ணல் சேர்வெந்தை தோயவை*
1 நொலையலே ஆதிப்
பண்ணி யங்களுந் தாரமுங் கனிவகை பலவும்
மண்ணின் மேலுறு கிரியெலாங் குலகிரி மருங்கு
நண்ணி னாலெனத் தொகுத்தன யாவரும் நயப்ப. ......
8(விருந்தி னோர்கொள)
விருந்தி னோர்கொள விழுதுடன் பால்தயிர் வெள்ளந்
திருந்து கங்கையும் யமுனையு மாமெனச் செய்த
அருந்தும் உண்டிகள் யாவையும் வழங்குகோ அதனில்
பொருந்து கின்றது தந்ததென் றாலது புகழோ. ......
9(தாவில் பாளித மான்)
தாவில் பாளித மான்மதஞ் சாந்துதண் பனிநீர்
நாவி வெள்ளடை செழும்பழுக் காயொடு நறைமென்
பூவு மேனைய பொருள்களும் நல்கின புகழ்சேர்
தேவர் கோமகன் பணிபுரி கின்றதோர் தேனு. ......
10(ஆவ திவ்வகை யாவ)
ஆவ திவ்வகை யாவது நல்கியே அங்கண்
மேவு கின்றது மணியும்அச் சங்கமும் வியன்சேர்
காவும் அம்புய நிதியமுந் தக்கனாங் கடியோன்
ஏவ லாலருட் சாலையில் அடைந்தன இமைப்பில். ......
11(கணித மில்லதோர்)
கணித மில்லதோர் பரிதிகள் மேனியிற் கஞலும்
மணிக ளோர்புடை தொகுத்தன ஆடக வரைபோல்
அணிகொள் காஞ்சன மோர்புடை தொகுத்தன அம்பொற்
பணிக ளாடைக ளோர்புடை தொகுத்தன படைத்தே. ......
12(மற்றும் வேண்டிய)
மற்றும் வேண்டிய பொருளெலாம் உதவிஅம் மருங்கில்
உற்ற வேலைஅத் தக்கன தேவலின் ஒழுகா
நிற்றல் போற்றிய முனிவரர் யாவரும் நிலத்தோர்க்
கிற்றெ லாமிவண் வழங்குதும் யாமென இசைத்தார். ......
13வேறு(இன்ன வேலையில்)
இன்ன வேலையில் இச்செயல் யாவையும்
முன்ன மேயுணர் முப்புரி நூலினர்
துன்னி யேமனந் தூண்டவந் தொல்லையில்
அன்ன சாலை தனையணைந் தாரரோ. ......
14(சாலை காண்டலுந்)
சாலை காண்டலுந் தக்கனை ஏத்தியே
பாலர் தன்மையிற் பாடினர் ஆடினர்
கோல மார்பிற் குலாவிய வெண்டுகில்
வேலை யாமென வீசிநின் றார்த்துளார். ......
15(மிண்டு கின்றஅவ்)
மிண்டு கின்றஅவ் வேதியர் தங்களைக்
கண்டு வம்மின் கதுமென நீரெனாக்
கொண்டு சென்று குழுவொடி ருத்தியே
உண்டி தன்னை உதவுதல் மேயினார். ......
16(மறுவில் செம்பொன்)
மறுவில் செம்பொன் மணிகெழு தட்டைகள்
இறுதி யில்லன யாவர்க்கும் இட்டுமேல்
நறிய உண்டிகள் நல்கியின் னோர்தமக்
குறவி னாரென ஊட்டுவித் தார்அவண். ......
17(அன்ன காலை அரு)
அன்ன காலை அரும்பசி தீர்தரத்
துன்ன வுண்டுஞ் சுவையுடைத் தாதலால்
உன்னி உன்னியிவ் வுண்டிகள் சாலவும்
இன்னம் வேண்டு மெனவுரைப் பார்சிலர். ......
18(குற்ற மொன்றுள)
குற்ற மொன்றுள கூறுவ தென்னினி
நற்றவஞ் செய்து நான்முக னால்இவண்
உற்ற உண்டி யெலாமுண ஓர்பசி
பெற்றி லோமெனப் பேதுறு வார்சிலர். ......
19(வீறு முண்டி மிசை)
வீறு முண்டி மிசைந்திட வேண்டும்வாய்
நூறு நூற தெனநுவல் வார்தமை
ஏற வேண்டு மிதிலமை யாதெனச்
சீறி யேயிகல் செய்திடு வார்சிலர். ......
20(புலவர் கோன்நகர்)
புலவர் கோன்நகர் போற்றிய தேனுவந்
தலகில் இவ்வுண வாக்கிய தாலெனாச்
சிலர்பு கன்றனர் தேக்கிட உண்மினோ
உலவ லீரென ஓதுகின் றார்சிலர். ......
21(அறிவி லாத அய)
அறிவி லாத அயன்மகன் யாகம்இன்
றிறுதி யாமென் றிசைத்தனர் அன்னது
பெறுதி யேனுமிப் பேருண வேநமக்
குறுதி வல்லையில் உண்மினென் பார்சிலர். ......
22(உண்டி லேம்இவ)
உண்டி லேம்இவண் உண்டதில் ஈதுபோற்
கண்டி லேம்ஒரு காட்சியும் இன்பமுங்
கொண்டி லேம்இன்று கொண்டதில் ஈசனால்
விண்டி லேம்எனின் மேலதென் பார்சிலர். ......
23(எல்லை யில்லுண)
எல்லை யில்லுண வீயும்இத் தேனுவை
நல்ல நல்லதொர் நாண்கொடி யாத்திவண்
வல்லை பற்றிநம் மாநக ரிற்கொடு
செல்லு தும்மெனச் செப்புகின் றார்சிலர். ......
24(மக்கள் யாவரும்)
மக்கள் யாவரும் வானவர் யாவரும்
ஒக்கல் யாவரும் உய்ந்திட வாழ்தலால்
தக்கன் நோற்ற தவத்தினும் உண்டுகொல்
மிக்க தென்று விளம்புகின் றார்சிலர். ......
25(மைந்தன் இட்டன)
மைந்தன் இட்டன மாந்திட நான்முகன்
தந்தி லன்வயின் சாலவும் ஆங்கவன்
சிந்தை மேலழுக் காறுசெய் தானெனா
நொந்து நொந்து நுவலுகின் றார்சிலர். ......
26(குழுவு சேர்தரு குய்)
குழுவு சேர்தரு குய்யுடை உண்டிகள்
விழைவி னோடு மிசைந்தன மாற்றவும்
பழுதி லாவிப் பரிசனர் தம்மொடும்
எழுவ தெப்படி என்றுரைப் பார்சிலர். ......
27(இந்த நல்லுண வீண்)
இந்த நல்லுண வீண்டு நுகர்ந்திட
நந்தம் மைந்தரை நம்மனை யாங்கொடு
வந்தி லம்மினி வந்திடு மோவெனாச்
சிந்தை செய்தனர் செப்புகின் றார்சிலர். ......
28(அன்ன பற்பல ஆர்)
அன்ன பற்பல ஆர்கலி யாமெனப்
பன்னி நுங்கும் பனவர்கள் கேட்டனர்
என்ன மற்றவை யாவையும் ஆர்தர
முன்ன ளித்து முனிவர் அருத்தினார். ......
29(அருத்தி மிச்சில்)
அருத்தி மிச்சில் அகற்றி அருந்தவ
விருத்தி மேவிய வேதியர் தங்களை
இருத்தி மற்றொர் இருக்கையில் வாசநீர்
கரைத்த சந்தின் கலவை வழங்கினார். ......
30(நளிகு லாவிய நாவி)
நளிகு லாவிய நாவி நரந்தம்வெண்
பளிதம் வெள்ளடை பாகுடன் ஏனவை
அளியு லாவும் அணிமலர் யாவையும்
ஒளிறு பீடிகை உய்த்தனர் நல்கினார். ......
31(அரைத்த சாந்தம்)
அரைத்த சாந்தம் அணிந்துமெய் எங்கணும்
விரைத்த பூந்துணர் வேய்ந்துபைங் காயடை
பரித்து நின்ற பனவர்புத் தேளுறுந்
தருக்க ளாமெனச் சார்ந்தனர் என்பவே. ......
32(ஆன பான்மையில்)
ஆன பான்மையில் அந்தணர் யாவரும்
மேன காதலின் வெய்தென ஏகியே
வான மண்ணிடை வந்தென ஏர்கெழு
தான சாலை தனையடைந் தார்களே. ......
33(அடையும் வேலை)
அடையும் வேலை அயனருள் காதலன்
விடையி னால்அங்கண் மேவு முனிவரர்
இடைய றாதவர்க் கீந்தனர் ஈந்திடுங்
கொடையி னால்எண்ணில் கொண்டலைப் போன்றுளார். ......
34(பொன்னை நல்கினர்)
பொன்னை நல்கினர் பூணொடு பூந்துகில்
தன்னை நல்கினர் தண்சுட ரோனென
மின்னை நல்கும் வியன்மணி நல்கினர்
கன்னி யாவுங் கறவையும் நல்கினார். ......
35(படியி லாடகப் பாது)
படியி லாடகப் பாதுகை நல்கினர்
குடைகள் நல்கினர் குண்டிகை நல்கினர்
மிடையும் வேதியர் வேண்டிய வேண்டியாங்
கடைய நல்கினர் அங்கைகள் சேப்பவே. ......
36(இந்த வண்ணம் இறை)
இந்த வண்ணம் இறையதுந் தாழ்க்கிலர்
முந்து நின்ற முனிவரர் ஆண்டுறும்
அந்த ணாளர்க் கயினியொ டாம்பொருள்
தந்து நின்று தயங்கினர் ஓர்புடை. ......
37(அற்ற மில்சிறப்)
அற்ற மில்சிறப் பந்தணர் ஆயிடைப்
பெற்ற பெற்ற பெருவளன் யாவையும்
பற்றி மெல்லப் படர்ந்தனர் பற்பல
பொற்றை செய்தனர் போற்றினர் ஓர்புடை. ......
38(வரத்தி னாகும்)
வரத்தி னாகும் வரம்பில் வெறுக்கைதம்
புரத்தி னுய்த்திடும் புந்தியில் அன்னவை
உரத்தி னால்தமக் கொப்பரும் வேதியர்
சிரத்தின் மேற்கொடு சென்றனர் ஓர்புடை. ......
39(அரிதன் ஊர்தியும்)
அரிதன் ஊர்தியும் அன்னமும் கீழ்த்திசை
அரிதன் ஊர்தியும் ஆங்கவன் மாக்களும்
அரிதன் ஊர்தியும் ஆருயிர் கொண்டிடும்
அரிதன் ஊர்தியும் ஆர்ப்பன ஓர்புடை. ......
40(தான மீது தயங்கி)
தான மீது தயங்கிய தேவரும்
ஏனை யோர்களும் இவ்விடை ஈண்டலின்
மீன மார்தரு விண்ணென வெண்ணிலா
மான கோடி மலிகின்ற ஓர்புடை. ......
41(நரம்பின் வீணை)
நரம்பின் வீணை ஞரலுறும் வேய்ங்குழல்
பரம்பு தண்ணுமை பண்ணமை பாடல்நூல்
வரம்பின் ஏய்ந்திட வானவர் நாடவே
அரம்பை மார்கள்நின் றாடினர் ஓர்புடை. ......
42(தேவர் மாதருஞ்)
தேவர் மாதருஞ் சிற்சில தேவருந்
தாவி லாமகச் சாலையின் வைகிய
காவு தோறுங் கமல மலர்ந்திடும்
ஆவி தோறும்உற் றாடினர் ஓர்புடை. ......
43(வேத வல்லி விய)
வேத வல்லி வியப்புடன் நல்கிய
காதல் மாதருங் காமரு விண்ணவர்
மாத ராருஞ் சசியும் மகத்திரு
ஓதி நாடியங் குற்றனர் ஓர்புடை. ......
44(இனைய பற்பல எங்க)
இனைய பற்பல எங்கணும் ஈண்டலிற்
கனைகொள் பேரொலி கல்லென ஆர்த்தன
அனையன் வேள்விக் ககன்கடல் யாவையுந்
துனைய வந்தவண் சூழ்ந்தன போலவே. ......
45(ஊன மேலுறும் உம்)
ஊன மேலுறும் உம்பரும் இம்பரும்
ஏன காதலின் மிக்கவண் ஈண்டுவ
வான யாறு வருநதி யும்புவித்
தான யாறுந் தழீஇயின போன்றவே. ......
46ஆகத் திருவிருத்தம் - 9534