(புக்கதொரு பொழுதி)
புக்கதொரு பொழுதிலங்கண் முந்தோ ராலம்
பொந்தினிடை இருந்தமலன் பொற்றாள் உன்னி
மிக்கதவம் புரிமாலைங் கரத்து முன்னோன்
மேவியது மனங்கொண்டு விரைவின் ஆங்கே
அக்கணமே எதிர்சென்று வழுத்திக் காண
அம்மையளித் தருள்சாபம் அகற லோடுஞ்
சக்கரமே முதலியஐம் படைக ளேந்தித்
தனாதுதொல்லைப் பேருருவந் தன்னைப் பெற்றான். ......
1(மாலோன்தொல் லுரு)
மாலோன்தொல் லுருவுதன்பால் மேவக் கண்டு
மகிழ்சிறந்து சிவனருளை மனங்கொண் டேத்தி
மேலோன்தன் முன்னரெய்தி வணக்கஞ் செய்து
மீண்டுமவன் தனைத்துதித்து விமல நீயென்
பாலோங்கு பூசனைகொண் டருளல் வேண்டும்
பணித்தருள்க ஆதிபரா பரத்தின் பாலாய்
மூலோங்கா ரப்பொருளாய் இருந்தாள் முன்னம்
மொழிந்தருள்சா பந்தொலைத்த முதல்வ என்றான். ......
2(ஐங்கரன்றான் மாலு)
ஐங்கரன்றான் மாலுரைத்த மாற்றங் கேளா
அன்னதுசெய் கெனஅருளி அங்கண் மேவக்
கொங்குலவு மஞ்சனநீர் சாந்த மாலை
கொழும்புகையே முதலியன கொண்டு போந்து
சங்கரனார் மதலைதனை அருச்சித் தன்பால்
தாவறுபண் ணியம்பலவுஞ் சால்பில் தந்து
பொங்கியபால் அவியினொடு முன்ன மார்த்திப்
போற்றியே இஃதொன்று புகலல் உற்றான். ......
3(வின்னாமம் புகல்கி)
வின்னாமம் புகல்கின்ற திங்கள் தன்னில்
மிக்கமதி தனிலாறாம் பக்க மாகும்
இந்நாளில் யானுன்னை அருச்சித் திட்ட
இயற்கைபோல் யாருமினி ஈறி லாவுன்
பொன்னாரும் மலரடியே புகலென் றுன்னிப்
பூசைபுரிந் திடவுமவர் புன்கண் எல்லாம்
அந்நாளே அகற்றிநீ யுலவாச் செல்வம்
அளித்திடவும் வேண்டுமிஃ தருள்க வென்றான். ......
4(மாயனுரை கேட்ட)
மாயனுரை கேட்டலுநீ மொழிந்தற் றாக
மகிழ்ந்தனநின் பூசையென மதித்துக் கூறி
ஆயவனும் அயன்முதலா வுள்ளோர் யாரும்
அன்பினொடு வாழ்த்திசைப்ப ஆகு என்னுந்
தூயதொரூர் தியிலெய்திக் கணங்க ளானோர்
சூழ்ந்துவரக் கயிலையெனுந் துகடீர் வெற்பின்
நேயமுடன் போந்தரனை வணக்கஞ் செய்து
நீடருள்பெற் றேதொல்லை நிலையத் துற்றான். ......
5வேறு(அற்றை நாளில் அரியய)
அற்றை நாளில் அரியயன் ஆதியோர்
நெற்றி யங்கண் நிமலன் பதங்களின்
முற்று மன்பொடு மும்முறை தாழ்ந்தருள்
பெற்று நீங்கினர் பேதுறல் நீங்கினார். ......
6(கரிமு கம்பெறு கண்)
கரிமு கம்பெறு கண்ணுதற் பிள்ளைதாள்
பரவி முன்னம் பணிந்தனர் நிற்புழி
அருள்பு ரிந்திட அன்னதொர் வேலையில்
பரிவி னாலொர் பரிசினைக் கூறுவார். ......
7(எந்தை கேண்மதி)
எந்தை கேண்மதி எம்மை அலைத்திடுந்
தந்தி மாமுகத் தானவற் செற்றியால்
உய்ந்து நாங்கள் உனதடி யோமிவண்
வந்து நல்குகைம் மாறுமற் றில்லையே. ......
8(நென்னல் காறும்)
நென்னல் காறும் நிகரில் கயாசுரன்
முன்ன ராற்று முறைப்பணி எந்தைமுன்
இன்ன நாட்டொட் டியற்றுதும் யாமென
அன்ன செய்திரென் றான்அருள் நீர்மையான். ......
9(இத்தி றம்படும்)
இத்தி றம்படும் எல்லையின் நின்றிடும்
அத்த லைச்சுரர் யாவரும் அன்புறீஇக்
கைத்த லத்தைக் கபித்தம தாக்கியே
தத்தம் மத்தகந் தாக்கினர் மும்முறை. ......
10(இணைகொள் கையை)
இணைகொள் கையை யெதிரெதிர் மாற்றியே
துணைகொள் வார்குழை தொட்டனர் மும்முறை
கணைகொள் காலுங் கவானுஞ் செறிந்திடத்
தணிவி லன்பொடு தாழ்ந்தெழுந் தேத்தினார். ......
11(இணங்கும் அன்பு)
இணங்கும் அன்புடன் யாருமி தாற்றியே
வணங்கி நிற்ப மகிழ்சிறந் தான்வரை
அணங்கின் மாமகன் அவ்வியல் நோக்கியே
கணங்க ளார்த்தன கார்க்கட லாமென. ......
12(நின்ற தேவர் நிமல)
நின்ற தேவர் நிமலனை நோக்கியே
உன்றன் முன்னம் உலகுளர் யாவரும்
இன்று தொட்டெமைப் போலிப் பணிமுறை
நன்று செய்திட நல்லருள் செய்கென. ......
13(கடனி றத்துக் கய)
கடனி றத்துக் கயமுகன் அத்திற
நடைபெ றும்படி நல்கிஅ மரர்கோன்
நெடிய மாலயன் நின்றுள ருக்கெலாம்
விடைபு ரிந்து விடுத்தனன் என்பவே. ......
14(அம்பு யக்கண் அரி)
அம்பு யக்கண் அரியயன் வாசவன்
உம்பர் அவ்வரை ஒல்லையின் நீங்குறாத்
தம்ப தந்தொறுஞ் சார்ந்தனர் வைகினார்
தும்பி யின்முகத் தோன்றல் அருளினால். ......
15(முந்தை வேத முத)
முந்தை வேத முதலெழுத் தாகிய
எந்தை தோற்றம் இயம்பினம் இங்கினி
அந்த மில்குணத் தாண்டகைக் கோர்குணம்
வந்ததென் னென்றி மற்றது கேட்டிநீ. ......
16வேறு(நற்குண முடைய)
நற்குண முடைய நல்லோரும் நாடொணாச்
சிற்குணன் ஆகுமச் சிவன்ப ராபரன்
சொற்குண மூவகைத் தொடர்பும் இல்லதோர்
நிர்க்குணன் அவன்செயல் நிகழ்த்தற் பாலதோ. ......
17(பரவிய வுயிர்க்கெலாம்)
பரவிய வுயிர்க்கெலாம் பாசம் நீக்குவான்
அருளினன் ஆகியே அமலன் மாலயற்
கிருதொழின் முறையினை ஈந்து மற்றவைக்
குரியன குணங்களும் உள்ள வாக்கினான். ......
18(முடித்திடல் இயற்றும்)
முடித்திடல் இயற்றும்எம் முதல்வன் அத்தொழில்
தடுப்பரும் வெஞ்சினந் தன்னில் முற்றுமால்
அடுத்தவப் பான்மையால் அதன்கண் தாமதம்
படுத்தினன் அத்திறம் பலருந் தேர்வரால். ......
19(மாமறை அளப்பில)
மாமறை அளப்பில வரம்பில் ஆகமந்
தோமற உதவியோர் தொன்ம ரத்திடைக்
காமரு முனிவரர் கணங்கட் கன்னவை
தாமத குணத்தனேல் சாற்ற வல்லனோ. ......
20(வாலிய நிமலமாம்)
வாலிய நிமலமாம் வடிவங் கண்ணுதல்
மேலவன் எய்துமோ வேதம் விஞ்சையின்
மூலமென் றவனையே மொழியு மோவிது
சீலமில் லார்க்கெவன் தேற்றும் வண்ணமே. ......
21(இமையவர் யாவரும்)
இமையவர் யாவரும் இறைஞ்சுங் கண்ணுதல்
விமலன்அன் றிறுதியை விளைக்கும் பண்பினால்
தமகுணன் என்றியத் தன்மை செய்கையால்
அமைகுண மியற்குணம் அறியற் பாலதோ. ......
22(ஈத்தலும் அளித்தலும்)
ஈத்தலும் அளித்தலும் இயற்று வோர்க்குள
சாத்திக ராசதந் தத்தஞ் செய்கையின்
மாத்திரை யல்லது மற்ற வர்க்கவை
பார்த்திடின் இயற்கையாப் பகர லாகுமோ. ......
23(அக்குண மானவை)
அக்குண மானவை அளிக்குஞ் செய்கையால்
தொக்குறும் இயற்கையத் தொல்லை யோர்கள்பால்
இக்குண மல்லதோர் இரண்டுஞ் சேருமால்
முக்குண நெறிசெலும் முனிவர் தேவர்போல். ......
24(நேமியாற் குருவெலாம்)
நேமியாற் குருவெலாம் நீல மாயதுந்
தோமறு கடலிடைத் துயில்கொள் பான்மையும்
மேமுறும் அகந்தையும் பிறவு மெய்துமேல்
தாமத ராசதந் தானு முற்றவே. ......
25(அறிவொருங் குற்றுழி)
அறிவொருங் குற்றுழி அனையன் கண்ணுதல்
இறைவனை வழிபடீஇ ஏத்தி இன்னருள்
நெறிவரு தன்மையும் நீடு போதமும்
பெறுதலிற் சாத்திக முறையும் பெற்றுளான். ......
26(மேனிபொற் கென்ற)
மேனிபொற் கென்றலின் விமல வான்பொருள்
நானெனும் மருட்கையின் நவையில் ஈசனைத்
தானுணர் தெளிவினில் தவத்திற் பூசையில்
ஆனது குணனெலாம் அயன்ற னக்குமே. ......
27(ஆதலின் விருப்புடன்)
ஆதலின் விருப்புடன் அல்ல தெய்தினோர்
ஓதிய குணவிதத் துறுவர் கண்ணுதல்
நாதனுக் கனையது நணுகு றாமையால்
பேதைமை ஒருகுணம் அவன்கட் பேசுதல். ......
28(மூன்றென உளபொருள்)
மூன்றென உளபொருள் யாமும் முன்னமே
ஈன்றவன் கண்ணுதல் என்னும் நான்மறை
சான்றது வாகுமால் தவத்தர்க் கென்னினும்
ஆன்றதோர் அவன்செயல் அறியற் பாலதோ. ......
29(செங்கண்மால் முதலிய)
செங்கண்மால் முதலிய தேவர் ஏனையோர்
அங்கவர் அல்லவை அகத்துள் வைகியே
எங்குமா யாவையும் இயற்று கின்றதோர்
சங்கரன் ஒருகுணச் சார்பின் மேவுமோ. ......
30(ஈறுசெய் முறையினை)
ஈறுசெய் முறையினை எண்ணித் தாமதங்
கூறினர் அல்லது குறிக்கொள் மேலையோர்
வேறொரு செய்கையின் விளம்பி னாரலர்
ஆறணி செஞ்சடை அமல னுக்கரோ. ......
31வேறு(என்றிவை பலவுந் தூயோ)
என்றிவை பலவுந் தூயோன் இசைத்தலும் இனைய வெல்லாம்
வன்றிறல் வெறுக்கை எய்தி மயங்கலால் தக்கன் என்னும்
புன்றொழில் புரியுந் தீயோன் பொறுத்திலன் புந்தி மீது
நன்றென அறிதல் தேற்றான் ஒருசில நவிலல் உற்றான். ......
32(முனிவகேள் பலவும்)
முனிவகேள் பலவும் ஈண்டு மொழிவதிற் பயனென் வெள்ளிப்
பனிவரை உறையும் நுங்கோன் பகவனே எனினு மாக
அனையவன் தனக்கு வேள்வி அவிதனை உதவேன் நீயும்
இனியிவை மொழியல் போதி என்செயல் முடிப்பன் என்றான். ......
33வேறு(வளங்குலவு தக்கனிது)
வளங்குலவு தக்கனிது புகன்றிடலுந்
ததீசிமுனி மனத்திற் சீற்றம்
விளைந்ததுமற் றவ்வளவில் வெருவியது
வடவையழல் விண்ணோர் நெஞ்சந்
தளர்ந்ததுபொன் மால்வரையுஞ் சலித்தந்தக்
குலகிரியுந் தரிப்பின் றாகி
உளைந்தனவே லைகள்ஏழும் ஒடுங்கியன
நடுங்கியதிவ் வுலகம் எல்லாம். ......
34(அக்கணமே முனிவரன்)
அக்கணமே முனிவரன்தன் பெருஞ்சீற்றந்
தனைநோக்கி அந்தோ என்னால்
எக்குவடும் எக்கிரியும் எக்கடலும்
எவ்வுலகும் யாவும் யாருந்
தக்கன்ஒரு வன்பொருட்டால் தளர்ந்திடுமோ
எனமுனிவு தணிந்து தற்சூழ்
ஒக்கலொடும் அவணெழுந்து சிறுவிதியின்
முகநோக்கி ஒன்று சொல்வான். ......
35(சங்கரனை விலக்கி)
சங்கரனை விலக்கியின்று புரிகின்ற
மகஞ்சிதைக தக்க நின்னோ
டிங்குறையும் அமரரெலாம் அழிவுறவின்
னேயென்னா இசைத்துப் பின்னர்
அங்கணுறு மறையோர்தம் முகநோக்கி
அந்தணரில் அழிதூ வானீர்
உங்கள்குலத் தலைமைதனை இழந்திட்டீர்
கேண்மினென உரைக்கல் உற்றான். ......
36(பேசரிய மறைகளெ)
பேசரிய மறைகளெலாம் பராபரன்நீ
எனவணங்கிப் பெரிது போற்றும்
ஈசனையும் அன்பரையும் நீற்றொடுகண்
டிகையினையும் இகழ்ந்து நீவிர்
காசினியின் மறையவராய் எந்நாளும்
பிறந்திறந்து கதியு றாது
பாசமத னிடைப்பட்டு மறையுரையா
நெறியதனிற் படுதிர் என்றான். ......
37(இனையநெறி யாற்சாப)
இனையநெறி யாற்சாபம் பலவுரைத்துத்
ததீசிமுனி இரண்டு பாலும்
முனிவர்தொகை தற்சூழத் தானுறையும்
ஆச்சிரம முன்னிச் சென்றான்
அனையவன்தன் பின்னாகத் தக்கனென்போன்
பெருந்தகவும் ஆற்றும் நோன்பும்
புனைபுகழுஞ் செழுந்திருவும் ஆற்றலுமாம்
மனச்செருக்கும் போயிற் றன்றே. ......
38ஆகத் திருவிருத்தம் - 9488