Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   6 - தக்ஷ காண்டம்   next kandam6 - dhaksha kANdam

previous padalam   14 - கயமுகன் உற்பத்திப் படலம்   next padalamKayamugan uRppaththip padalam

Ms Revathi Sankaran (8.14mb)
(1 - 60)Ms Revathi Sankaran (8.25mb)
(61 - 140)Ms Revathi Sankaran (7.46mb)
(141 - 210)Ms Revathi Sankaran (6.04mb)
(211 - 265)
(பாக சாதனன் தொல்)

பாக சாதனன் தொல்லைநாள் வானவப் படையோ
     டேகி யேயசு ரர்க்கிறை தன்னைவென் றிகலில்
          வாகை சூடியே விஞ்சையர் முதலினோர் வாழ்த்தப்
               போக மார்தரும் உலகிடை மீண்டுபோய்ப் புகுந்தான். ......    1

(பொன்ன கர்க்கிறை)

பொன்ன கர்க்கிறை போதலும் பொறாமையிற் புழுங்கி
     வன்னி யுற்றிடும் அலங்கல்போ லுளநனி வாடி
          வென்ன ளித்திடும் அவுணர்தங் கோமகன் வினையேற்
               கென்னி னிச்செயல் எனப்பெரி துன்னியே இனைந்தான். ......    2

(வெருவ ரும்படி)

வெருவ ரும்படி மலைந்திடும் அமரர்பான் மேவிப்
     பொருது வென்றிகொண் டெனக்குமப் பெரும்புகழ் புனைய
          ஒருவ ரெங்குலத் தில்லைகொ லோவென உரையாக்
               குருவி ருந்துழி அணுகியே வணங்கினன் கொடியோன். ......    3

(பொற்றை யின்சிறை)

பொற்றை யின்சிறை தடிந்தவன் சுரரொடும் போர்மேல்
     உற்ற காலையில் படையுடன் யான்பொரு துடைந்து
          மற்ற வற்குவென் னளித்தனன் நம்பெரு மரபிற்
               கொற்ற வீரர்க ளியாவரு முடிந்தனர் கூற்றால். ......    4

(கழிய மாசினை அடை)

கழிய மாசினை அடைந்தனம் இன்னலே கரையாம்
     பழிகொள் வேலையில் அழுந்தினம் உடைந்திடு பகைவர்க்
          கழிவும் உற்றனம் பெருந்திறல் அற்றனம் அவுணர்
               ஒழியும் எல்லைவந் தெய்திய தோவிவண் உரைத்தி. ......    5

(சிறுவ ராயினோர்)

சிறுவ ராயினோர் பெருமையிற் பிழைப்பரேல் தெருட்டி
     உறுதி பற்பல கொளுத்திமற் றவர்தமை உயர்ந்த
          நெறியின் ஆக்குதல் குரவர்தங் கடனது நீயே
               அறிதி யாதலின் உய்யுமா றுரைத்தியென் றறைந்தான். ......    6

(உரைத்த வாசகங்)

உரைத்த வாசகங் கேட்டலும் மன்னநீ உளத்தில்
     வருத்த முற்றிடல் என்னவே தேற்றிமேல் வருவ
          கருத்தி லுன்னினன் தெரிதலும் வெதும்பிய காயத்
               தரைத்த சாந்தினை அப்பினன் போலஒன் றறைந்தான். ......    7

வேறு

(ஆதியம் பரமன்)

ஆதியம் பரமன் தாளே அடைதரு புனிதன் தொல்லை
     வேதியர் தலைவ னான விரிஞ்சன்மெய் யுணர்விற் பூத்த
          காதலன் புலன்க ளாய பகைஞரைக் கடந்த காட்சி
               மாதவ முனிவர்க் கீசன் வசிட்டனென் றுரைக்கும் வள்ளல். ......    8

(அன்னவன் மரபின்)

அன்னவன் மரபின் வந்தோன் அறிஞர்க்கும் அறிஞன் மேலாய்
     மன்னிய நெறிக்கண் நின்றோன் மாகதன் என்னும் பேரோன்
          உன்னரு மறைகள் யாவும் உணர்ந்தவன் உயர்ந்த வீடு
               தன்னையிங் கடைவன் என்னாத் தவந்தனை இயற்ற லுற்றான். ......    9

(ஆயவன் தன்பால்)

ஆயவன் தன்பால் இன்றோர் அசுரகன் னிகையைத் தேற்றி
     ஏயினை என்னின் அன்னாள் எய்தியே அவன்ற னோடு
          மேயின காலை ஆங்கோர் வேழமா முகத்தன் உங்கள்
               நாயகன் ஆகத் தோன்றி நற்றவம் புரிவன் அன்றே. ......    10

(நற்றவம் புரிதல்)

நற்றவம் புரிதல் காணா நண்ணலர் புரங்கள் மூன்றுஞ்
     செற்றவன் மேவி மேலாஞ் செல்வமுந் திறலும் நல்க
          மற்றவன் வானோர் தொல்சீர் மாற்றியெவ் வுலகும் ஆளுங்
               கொற்றவ னாவன் என்று கூறினான் குரவ னானோன். ......    11

(அவ்வுரை கேட்ட)

அவ்வுரை கேட்ட லோடும் அடித்துணை இறைஞ்சி ஈது
     செவ்விது செவ்வி தெந்தாய் செய்வல்நீ பணித்த தென்ன
          எவ்வமில் புகரும் அற்றே இயற்றிய சென்மோ என்ன
               மைவரை அனைய மேனி மன்னவன் கடிது மீண்டான். ......    12

(மீண்டுதன் னிருக்கை)

மீண்டுதன் னிருக்கை எய்தி விபுதையென் றொருத்தி அன்னாள்
     காண்டகும் எழிலின் மிக்க கன்னிதன் குலத்தில் வந்தாள்
          பூண்டகு நாணி னோடும் பொருந்தினள் அவளை எய்தி
               ஈண்டொரு மொழிகேட் டன்னாய் என்னிடர் தீர்த்தி யென்றான். ......    13

(மன்னவர் மன்னன்)

மன்னவர் மன்னன் கூறும் மாற்றமங் கதனைக் கேளாக்
     கன்னிகை யாகி நின்ற காமரு வல்லி அன்னாள்
          நின்னடித் தொண்டு செய்யும் நிருதர்தங் குலத்து வந்தேன்
               என்னுனக் கியற்றுஞ் செய்கை இசைந்தன இசைத்தி என்றாள். ......    14

(உரையென லோடு)

உரையென லோடு மன்னன் உன்குலத் தோரை விண்ணோர்
     பொருதுவென் கண்டு மீண்டு போனதை அறிதி அன்றே
          மருவருங் குழலாய் போரில் வானவர் தம்மை வெல்ல
               ஒருவரும் இல்லை நின்னால் உற்றிட வேண்டுங் கண்டாய். ......    15

(ஆங்கதற் கேதுக்)

ஆங்கதற் கேதுக் கேட்டி அம்பொன்மால் வரைத்தெ னாது
     பாங்கரில் அரிய நோன்பு பயிலுமா கதன்பாற் சென்று
          நீங்கல்செல் லாது பன்னாள் நினைவறிந் தொழுகிக் காலந்
               தீங்கற நாடி அன்னான் செய்தவஞ் சிதைத்துச் சேர்தி. ......    16

(சேருதி யென்னின்)

சேருதி யென்னின் அங்கோர் சிறுவன்நின் இடத்தில் தோன்றிப்
     பாருல கனைத்தும் மேலாம் பதங்களும் வலிதிற் கொண்டு
          வீரரில் வீர னாகி வெம்பகை வீட்டி எங்கள்
               ஆரஞர் துடைக்கும் அன்னாய் அன்னவா றமைதி என்றான். ......    17

(வேந்தன துரையை)

வேந்தன துரையைக் கேட்ட விபுதையம் முனிவன் தன்பால்
     போந்துன தெண்ண முற்றப் புதல்வனை அளித்து மீள்வல்
          ஏந்தல்நீ இரங்கல் என்றே ஏகினள் இறைவன் வானோர்
               மாய்ந்தனர் இனியென் றுன்னி மகிழ்ச்சியோ டிருந்தான் அங்கண். ......    18

(ஏகிய அசுர கன்னி)

ஏகிய அசுர கன்னி ஏமமால் வரையின் சார்போய்
     மாகதன் பாற்சென் றன்னான் மாதவத் திறத்தை நோக்கி
          ஆகொடி திவனே அல்லா தாரிது புரியும் நீரார்
               மோகமிங் கிவனை யாக்கி முயங்குவ தெவ்வா றென்றாள். ......    19

(நேமிகள் அனைத்தும்)

நேமிகள் அனைத்தும் ஆர நிவந்தெழும் வடவை தன்னை
     மாமுகில் மாற்ற அற்றோ மாற்றவே வல்ல தென்னில்
          காமவேள் எடுத்த செய்ய கணையெலாம் ஒருங்கு சென்றித்
               தோமில்சீர் முனியை வாட்டித் துறவையும் மாற்றும் என்றாள். ......    20

(வானுயர் தவத்தின்)

வானுயர் தவத்தின் நிற்கும் மாகதன் யானே யல்ல
     மேனகை வரினும் நோக்கான் விண்ணவர் பகைஞர் தங்கள்
          கோனிஃ துணரான் போலுங் குறுகிநீ புணர்தி என்றால்
               நானதற் கிசைந்த வாறும் நன்றென நகைத்து நின்றாள். ......    21

(போந்தனென் மீண்டும்)

போந்தனென் மீண்டும் என்னிற் போற்றலர்க் குடைந்து சோரும்
     வேந்தனென் னுற்றாய் என்று மீளவும் விடுப்பன் அம்மா
          ஏய்ந்தநே யத்தி லென்பால் எய்திமற் றிவனே எற்குக்
               காந்தனே யாக நோற்றுக் காலமும் பார்ப்பன் என்றாள். ......    22

(என் றிவை உன்னி)

என் றிவை உன்னி உற்றோர்க் கினிதருள் புரியும் வெள்ளிக்
     குன் றுறை பெருமான் செய்ய குரைகழல் கருத்துட் கொண்டு
          வன் றிறல் நோன்பின் மிக்க மாகத முனிவன் நேரா
               நின் றருந் தவத்தை யாற்ற நெடும்பகல் கழிந்த தன்றே. ......    23

(மாதுசெய் தவத்தி)

மாதுசெய் தவத்தி னாலும் வரன்முறை வழாத ஊழின்
     ஏதுவி னாலும் அங்கண் இருங்களிற் றொருத்தல் ஒன்று
          காதலம் பிடியி னோடு கலந்துடன் புணரக் காணூஉ
               ஆதரம் பெருகப் பல்கால் நோக்கினன் அருந்த வத்தோன். ......    24

(மறந்தனன் மனுவின்)

மறந்தனன் மனுவின் செய்கை மனப்படு பொருளை வாளா
     துறந்தனன் காமம் என்னுஞ் சூழ்வலைப் பட்டுச் சோர்வுற்
          றிறந்தனன் போல மாழ்கி இன்னுயிர் சுமந்தான் இன்று
               பிறந்தனன் இனைய கூட்டம் பெற்றிடு வேனேல் என்றான். ......    25

(என்றிது புகன்று)

என்றிது புகன்று முன்செய் தவக்குறைக் கிரங்கி என்றும்
     நின்றது பழியே யேனும் நீடுமேற் காமச் சூர்நோய்
          தின்றுயிர் செகுக்கும் அந்தோ செய்வதிங் கெவனோ என்னா
               வென்றிகொள் முனிவன் தானும் மனத்தொடு வினவல் உற்றான். ......    26

(தீவிடந் தலைக்கொண்)

தீவிடந் தலைக்கொண் டாங்கே தெறுதரு காமச் செந்தீ
     ஓய்வது சிறிதும் இன்றி உள்ளுயிர் அலைக்கும் வேலை
          யாவதென் இருக்கின் இன்னும் அருந்தவங் கூடும் ஆவி
               போவதிற் பயன்யா தென்னாப் புணர்ச்சிமேற் புந்தி கொண்டான். ......    27

(போவதற் கெண்ணும்)

போவதற் கெண்ணும் போதில் பொருவில்சீர் அசுரர்க் கெல்லாங்
     காவலின் ஏவல் போற்றுங் கன்னிகை முனிவன் காமத்
          தோய்வதும் பிறவும் எல்லாம் ஒருங்குடன் நோக்கி எண்ணம்
               யாவதும் முடிந்த தென்னா எல்லையில் மகிழ்ச்சி பெற்றாள். ......    28

(ஈங்கிது கால மாகும்)

ஈங்கிது கால மாகும் இடனுமாம் இதற்கு வேறு
     தீங்கிலை இனைய கூட்டஞ் செய்தவஞ் செய்த தென்னா
          வாங்கிய நுதலி னாளும் வல்விரைந் தெழுந்து தூயோன்
               பாங்கரின் அணுகிப் பொற்றாள் பணிந்தனள் பரிவு கூர. ......    29

(மின்னிடை பணிந்து)

மின்னிடை பணிந்து நிற்ப மெய்யுறுப் பனைத்தும் நோக்கிப்
     பின்னரும் மால்மீக் கொள்ளப் பித்தரின் மயங்கா நின்று
          கன்னியும் என்னை வெஃகுங் காந்தரு வத்தி னாளும்
               இன்னவ ளாயின் அன்றோ என்னுயிர் உய்யும் என்னா. ......    30

(கருத்திடை உன்னி)

கருத்திடை உன்னி யார்நீ கன்னியோ என்ன லோடும்
     அருத்திகொள் முனியை நோக்கி அன்னதாம் என்ன நம்பால்
          வரத்தகுங் கருமம் என்கொல் வல்லையில் இயம்பு கென்றான்
               விரத்தரில் தலைவ னாகி வீடுபெற் றுய்ய நோற்றான். ......    31

(முருந்தெனும் முறுவ)

முருந்தெனும் முறுவ லாளும் முனிவநீ கணவ னாக
     இருந்தவம் புரிந்தேன் பன்னாள் இன்றது முடிவ தாகப்
          பொருந்தினன் ஈண்டு நின்னைப் புல்லிய வந்தேன் என்ன
               வருந்துறா தமுதம் பெற்ற மாக்கள்போல் மகிழ்ச்சி உற்றான். ......    32

(என்பெருந் தவமும்)

என்பெருந் தவமும் பன்னாள் என்பொருட் டாக நோற்ற
     நின்பெருந் தவமும் அன்றோ நின்னுடன் என்னை ஈண்டே
          அன்புறக் கூட்டிற் றம்மா அடுகளி றென்னப் புல்லி
               இன்புற வேண்டும் நீயும் இரும்பிடி யாதி என்ன. ......    33

(மெல்லியல் தானும்)

மெல்லியல் தானும் அங்கோர் வெம்பிடி யாகித் தோன்றி
     எல்லையில் காதல் பின்னும் ஈதலும் முனிவன் தானும்
          மல்லலங் களிற தாகி வானுயர் புழைக்கை நீட்டிப்
               புல்லினன் ஊற்றந் தானே புணர்ச்சியிற் சிறந்த தன்றே. ......    34

(நையுறும் உள்ளம்)

நையுறும் உள்ளம் ஆதி நான்மையும் பொறியில் நண்ணி
     ஐயுறு புலனோர் ஐந்தும் ஆவியின் ஒருங்க அன்னாள்
          மெய்யுறு புணர்ச்சித் தாய வேட்கையின் மேவ லுற்றுச்
               செய்யுறு காம முற்றித் தீர்ந்திடு காலை தன்னில். ......    35

(அயன்முதல் தலைவர்)

அயன்முதல் தலைவர் வானத் தமர்தரு புலவர் ஆற்றுஞ்
     செயன்முறைக் கடன்கள் யாவுஞ் சிந்தினன் சிதைக்கும் வண்ணம்
          வயமுகத் தடவு கொண்ட வயிர்த்திடு மருப்பின் நால்வாய்க்
               கயமுகத் தவுணன் ஆங்கே கதுமென உதயஞ் செய்தான். ......    36

(பற்றிய பலகை ஒள்)

பற்றிய பலகை ஒள்வாள் விதிர்த்தனன் பரவை ஞாலஞ்
     சுற்றினன் வரைகள் யாவுந் துகள்படத் துணைத்தாள் உந்தி
          எற்றினன் உருமே றஞ்ச இரட்டினன் உலக மெல்லாஞ்
               செற்றிடுங் கடுவ தென்னத் திரிந்தனன் சீற்றம் மிக்கான். ......    37

(அன்னதோர் பிடியு)

அன்னதோர் பிடியு ரோமம் அளப்பில அவற்றில் ஆங்கே
     மின்னிலங் கெயிற்றுப் பேழ்வாய் விளங்கெழில் செக்கர் வாய்ந்த
          சென்னியங் குடுமி வீரர் தெழித்தெழீஇச் செங்கை தன்னில்
               துன்னிரும் படைக ளோடுந் தோன்றினர் தொகையில் ஆன்றோர். ......    38

(இன்னவ ரோடு)

இன்னவ ரோடு கூடி இபமுகத் தவுணன் ஆர்ப்பத்
     தன்னையும் பயந்தோன் தானுந் தளர்ந்தனர் இரியல் போகி
          முன்னுறும் உருவங் கொள்ள முனிவரன் உணர்வு தோன்ற
               உன்னிநின் றிரங்கி யேங்கி ஊழ்முறை நினைந்து நைந்தான். ......    39

(மாயமாங் காமம்)

மாயமாங் காமம் என்னும் வலையிடைப் பட்டு நீங்குந்
     தூயவன் முன்னம் நின்ற தோகையைச் சுளித்து நோக்கி
          நீயெவர் குலத்தில் வந்தாய் நினைந்ததென் கழறு கென்னச்
               சேயிழை மரபும் வந்த செய்கையும் உணர்த்தி நின்றாள். ......    40

(வரன்முறை உணர்)

வரன்முறை உணர்த லோடும் மாகத முனிவன் யானே
     தரணியில் உயிர்க ளான சராசரந் தனக்கு மேலாஞ்
          சுரகுலந் தனக்கும் இன்றே துன்புறு வித்தேன் என்னா
               எரியுறு தளிர்போல் வாடி இன்னலங் கடலுட் பட்டான். ......    41

(சிலபொழு திரங்கி)

சிலபொழு திரங்கித் தேறிச் சேயிழை மடந்தை நுங்கோன்
     மெலிவுநின் னெண்ணந் தானும் வீடுபெற் றுய்ய யான்முன்
          பலபகல் புரிந்த நோன்பும் பாருல கனைத்தும் வானோர்
               உலகமு முடிந்த வேநீ ஒல்லையிற் போதி என்றான். ......    42

(போதிநீ என்ன)

போதிநீ என்ன லோடும் பொன்னடி வணங்கிச் சென்று
     தாதுலாந் தெரிய லாகத் தயித்தியர்க் கிறைபால் எய்தி
          ஈதெலாம் உரைத்த லோடும் எல்லையின் மகிழ்ச்சி யாகிக்
               காதல்கூர் தபனற் காணுங் காலையங் கமலம் போன்றான். ......    43

(தாங்கரும் உவகை)

தாங்கரும் உவகை யோடுந் தானவர்க் கரசன் நண்ண
     ஈங்குறு முனிவன் முன்போல் இனிதுநோன் பியற்றப் போனான்
          ஆங்கவண் உதித்த மைந்தர் அனைவரும் முதல்வன் தன்னோ
               டோங்கலின் குலங்கள் மேரு வுடன்நடந் தென்னச் சென்றார். ......    44

(சீற்றங்கொள் தறுகண்)

சீற்றங்கொள் தறுகண் நாகம் ஒருவழித் திரண்ட தென்னக்
     கூற்றம்பல் லுருவு கொண்டு குலாயகொட் பென்ன ஊழிக்
          காற்றெங்கும் பரவிற் றென்னக் கடலிடைப் பிறந்த நஞ்சம்
               ஊற்றங்கொண் டுலாய தென்ன உலகெலாந் திரிதந் துற்றார். ......    45

(மலையினைப் பொடி)

மலையினைப் பொடிப்பர் ஏனை மண்ணினை மறிப்பர் வாரி
     அலையினைக் குடிப்பர் கையால் ஆருயிர்த் தொகையை அள்ளி
          உலையினைப் பொருவு பேழ்வாய் ஓச்சுவர் பரிதி யோடு
               நிலையினைத் தடுப்பர் சேடன் நெளிதரப் பெயர்வர் மாதோ. ......    46

(தக்கதோர் அவுண)

தக்கதோர் அவுண ரோடுந் தந்திமா முகத்து வீரன்
     திக்கெலாம் உலவி யெல்லாத் தேயமும் ஒருங்கே சென்று
          மக்களே யாதி யான மன்னுயிர் வாரி நுங்கித்
               தொக்கதோர் செந்நீர் மாந்தித் துண்ணெனத் திரியும் அன்றே. ......    47

(அத்திறம் வைகல்)

அத்திறம் வைகல் தோறும் அவுணரும் இறையும் ஏகிக்
     கைத்துறும் உயிர்கள் யாவுங் கவர்ந்தனர் மிசைந்தா ராகப்
          பொய்த்தவர் வெறுக்கை என்னப் போயின உயிர்கள் சால
               எய்த்தனர் முனிவர் தேவர் இறந்தது மறையின் நீதி. ......    48

(முகரிமை அடைந்த)

முகரிமை அடைந்த வன்தோன் முகத்தவன் அவுண ரோடும்
     அகலிட மிசையே இவ்வா றமர்தலும் அனைய தன்மை
          தகுவர்கள் முதல்வன் ஓர்ந்து தமதுதொல் குரவ னான
               புகரினை விடுப்ப அன்னான் போந்திவை புகலல் உற்றான். ......    49

வேறு

(ஒள்ளி தாகிய உங்)

ஒள்ளி தாகிய உங்குலத் துற்றுள
     மள்ளர் யார்க்குமொர் வான்குரு வாயினேன்
          தெள்ளு பன்மறைத் திட்பமுந் தேர்ந்துளேன்
               வெள்ளி என்பதொர் மேதகு பேரினேன். ......    50

(உங்கு லத்துக் கொரு)

உங்கு லத்துக் கொருமுத லாகிய
     சிங்க மன்ன திறலினன் உய்த்திட
          இங்கு நின்புடை எய்தினன் மேல்நெறி
               தங்கு நன்னயஞ் சாற்றுதற் கேயென்றான். ......    51

(குரவ னாகிக் குறுகி)

குரவ னாகிக் குறுகிய சல்லியன்
     பரிவொ டீது பகர்தலும் ஆங்கவன்
          திருவ டித்துணை சென்று வணங்கியே
               கரிமு கத்தன் கழறுதல் மேயினான். ......    52

(இறுவ தின்றிய எங்கு)

இறுவ தின்றிய எங்குலத் தோர்க்கெலாம்
     அறிவ நீஅரு ளால்அடி யேற்கிவண்
          உறுதி கூறுகின் றாய்இதன் ஊங்கினிப்
               பெறுவ தொன்றுள தேயெனப் பேசினான். ......    53

(அந்த வேலை அவுண)

அந்த வேலை அவுணர்கள் யாவருஞ்
     சிந்தைமேல் கொண்ட தீதினை நீத்திடா
          எந்தை யார்தங் குரவர் இவரெனா
               வந்து பார்க்கவன் தாளில்வ ணங்கினார். ......    54

(சீத வான்முகிற் கோள்)

சீத வான்முகிற் கோள்எனுஞ் செவ்வியோன்
     ஆதி தன்னரு ளால்அவு ணர்க்கிறை
          போத கன்முகம் நோக்கிப் பொருவிலா
               ஓதி மாண்பின் இவையுரைக் கின்றனன். ......    55

வேறு

(மீயுயர் தவத்தை ஆற்)

மீயுயர் தவத்தை ஆற்றாய் விமலனை உணராய் ஒல்லார்
     மாயமுந் திறலுஞ் சீரும் வன்மையுஞ் சிறிதுந் தேராய்
          ஏயவிவ் வுடலம் நில்லா தென்பதுங் கருதாய் வாளா
               போயின பன்னாள் என்நீ புரிந்தனை புந்தி இல்லாய். ......    56

(முப்பகை கடந்து)

முப்பகை கடந்து மற்றை முரட்பகை முடித்திட் டைம்பான்
     மெய்ப்பகை கடந்து நோற்று விழுத்தகும் ஆற்றல் பெற்றுத்
          துப்பகை தொண்டைச் செவ்வாய்ச் சூரொடு புணரும் வானாட்
               டப்பகை கடந்து தொல்சீர் அடைந்திலை போலும் அன்றே. ......    57

(இம்மையில் இன்ப)

இம்மையில் இன்பந் தன்னைப் புகழொடும் இழத்தி மேலை
     அம்மையில் இன்பந் தானும் அகன்றனை போலும் அன்றே
          உம்மையும் இன்பம் என்ப துற்றிலை என்னிற் பின்னை
               எம்மையில் இன்பந் துய்க்க இசைந்துநீ இருக்கின் றாயால். ......    58

(ஆக்கமுந் திறலு)

ஆக்கமுந் திறலுஞ் சீரும் ஆயுவும் நலனும் மேலாம்
     ஊக்கமும் வீடும் எல்லாம் தவத்தின தூற்றம் அன்றோ
          நோக்குறும் இந்நாள் காறும் நோற்கலா தினைய வெல்லாம்
               போக்குவ தென்னை கொல்லோ புகலுதி இகலும் வேலோய். ......    59

(ஆற்றிடு தருமம் விஞ்சை)

ஆற்றிடு தருமம் விஞ்சை அரும்பெறல் மகவும் சீர்த்தி
     ஏற்றிடு கொற்றம் ஆற்றல் இருநிதி பெருமை இன்பம்
          நோற்றிடு விரதஞ் சீலம் நுவலரும் போதம் யாவுங்
               கூற்றுவன் கூவும் ஞான்று குறித்திடிற் கூடு மோதான். ......    60

(காலனா கியதோர்)

காலனா கியதோர் சேர்ப்பன் காலமாம் வலையை வீசி
     ஞாலமாந் தடத்தில் வைகும் நல்லுயிர் மீன்கள் வாரி
          ஏலவே ஈர்த்து நின்றான் இறுதியாங் கரைசேர் காலை
               மேலவன் கையுட் பட்டு மெலிவொடு வீடும் அன்றே. ......    61

(சீரிய துடலம் என்)

சீரிய துடலம் என்கை தெரிந்திலை நிலைத்தல் செல்லா
     தாருயிர் வகையும் என்ப தறிந்திலை ஆயுட் பன்னாட்
          சாருதல் வேண்டு மென்னுந் தகைமையும் நினைத்தி அல்லை
               பாருயிர் இறப்ப நுங்கி இருப்பதோ பரிசு மாதோ. ......    62

(மந்திரம் இல்லை)

மந்திரம் இல்லை மாயம் இல்லையோர் வரமும் இல்லை
     தந்திரம் இல்லை மேலோர் தருகின்ற படையொன் றில்லை
          அந்தர வமர ரெல்லாம் அனிகமாய்ச் சூழ நின்மேல்
               இந்திரன் பொருவான் செல்லின் யாதுநீ செய்தி மாதோ. ......    63

(சிறியதோர் பயனை)

சிறியதோர் பயனைத் தூக்கித் தீயவர் செய்யுஞ் சூழ்ச்சி
     அறிகில வாகி வீழ்வுற் றகப்படு மாவும் மீனும்
          பறவையும் என்ன ஒல்லார் புணர்ப்பினிற் படுதி இன்னே
               விறலொடு வலியுஞ் சீரும் மேன்மையும் இன்றி உற்றாய். ......    64

(ஆதலின் எவர்க்கும் மேலாம் அர)

ஆதலின் எவர்க்கும் மேலாம் அரன்றனை உன்னி ஆற்ற
     மாதவம் புரிதி அன்னான் வரம்பல கேட்ட வெல்லாந்
          தீதற உதவும் பின்னர்த் தேவர்உன் ஏவல் செய்வார்
               மேதகும் உலகுக் கெல்லாம் வேந்தனாய் இருத்தி என்றான். ......    65

(சொன்னவை கேட்ட)

சொன்னவை கேட்ட லோடுந் தொழுதகை அவுணர் தோன்றல்
     முன்னிவை யாவ ரேனும் மொழிந்தனர் இல்லை யானும்
          இன்னவை புரிதல் தேற்றேன் இனித்தவம் இயற்று கின்றேன்
               அன்னவை புரியுந் தன்மை அருள்செயல் வேண்டும் என்றான். ......    66

வேறு

(ஐவினைசெய் பொறி)

ஐவினைசெய் பொறிகளெலாம் அரங்கமெனக்
     கறங்கும்அறி வடங்கு கின்ற
மெய்வினைய மந்திரமுந் தந்திரமும்
     அங்கமுறு விதியி னோடு
கைவினையும் உட்கோளும் புறங்காப்பும்
     விரதஞ்செய் கடனும் ஏனைச்
செய்வினையும் உணர்வித்து மேருவின்பால்
     தவம்புரியச் செல்லு கென்றான். ......    67

(ஏவுதலுங் கயமுகத்)

ஏவுதலுங் கயமுகத்தோன் அவுணரொடும்
     புகரடியின் இறைஞ்சி அங்கண்
மேவுவன்யான் எனவுரையா விடைகொண்டு
     நோற்றிடுவான் விரைவின் ஏகக்
காவதமங் கோரிரண்டு கடப்பளவுந்
     தானின்று கண்ணின் நோக்கிப்
போவனினி எனமகிழ்ந்து மீண்டுபோய்
     அவுணர்பதி புகுந்தான் அன்றே. ......    68

(அக்காலத் தெதிர்)

அக்காலத் தெதிர்வந்த இறைவனுடன்
     புகுந்தவெலாம் அறைய அன்னான்
இக்காலந் தானன்றோ அருள்செய்தீர்
     எனவியம்பி ஏத்தி அன்பால்
முக்கால்வந் தனைசெய்து விடுத்திடப்போய்த்
     தன்பதத்தின் முன்ன மேபோல்
மிக்கானும் வீற்றிருந்தான் கடவுளரும்
     புரந்தரனும் விழுமங் கொள்ள. ......    69

(மாண்டகுமவ் வலி)

மாண்டகுமவ் வலியகலன் மருப்பதனை
     எதிர்ந்துதொல்லை வைப்பின் ஈங்கு
மீண்டியதிண் காழிரும்பின் எஃகமுதல்
     வியன்படைகள் இயற்கை என்னக்
காண்டகைய தங்குரவ னானபுகர்
     உரையதனைக் கருத்துட் சேர்த்தி
ஆண்டகைசேர் இபமுகத்தோன் அவுணருடன்
     தவம்புரிவான் அகலல் உற்றான். ......    70

(அங்கண்முகில் படி)

அங்கண்முகில் படிந்தறியா மேருவினுக்
     கொருசார்போய் அவுணர் வேந்தன்
துங்கமிகு கருவிகளாய் வேண்டுவன
     கொணர்வித்துத் தூநீர் ஆடிச்
செங்கதிரோன் தனைநோக்கி ஆற்றுகடன்
     முடித்துமுன்னைத் தீர்வு நேர்ந்து
தங்கள்குர வன்பணித்த பெற்றியினால்
     மிக்கதவந் தன்னைச் செய்வான். ......    71

(பொறியிலுறு புலன)

பொறியிலுறு புலனவித்து நவைநீக்கிக்
     கரணவியல் போக்கி ஆசான்
குறிவழியே தலைநின்று மூலவெழுத்
     துடனைந்துங் கொளுவி எண்ணி
அறிவுதனில் அறிவாகி உயிர்க்குயிராய்ப்
     பரம்பொருளாய் அமல மாகிச்
செறிதருகண் ணுதற்கடவுள் அடிபோற்றி
     அவனுருவைச் சிந்தை செய்தான். ......    72

வேறு

(ஆயிரம் ஆண்டுபுல்)

ஆயிரம் ஆண்டுபுல் லடகு மேயினான்
     ஆயிர மாண்டுசில் புனல்அ ருந்தினான்
          ஆயிர மாண்டள வனிலம் நுங்கினான்
               மாயிரும் புவியுயிர் மடுக்கும் வாயினான். ......    73

(காலமூ வாயிரங்)

காலமூ வாயிரங் கழிந்த பின்முறை
     மாலுறு மருத்தெனும் மாவைத் தூண்டியே
          மூலவெங் கனலினை முடுக்கி மூட்டுறா
               மேலுறும் அமிர்தினை மிசைதல் மேயினான். ......    74

(கண்டனர் அதுசுரர்)

கண்டனர் அதுசுரர் கவலுஞ் சிந்தையர்
     திண்டிறல் அவுணன்இச் செய்கை முற்றுமேல்
          அண்டமும் புவனமும் அலைக்கு மேயெனாக்
               கொண்டனர் தம்பதி அறியக் கூறினார். ......    75

(கூறிய செயலினை)

கூறிய செயலினைத் தேர்ந்து கொற்றவன்
     ஆறிய வெகுட்சியன் அயர்ந்து சோர்வுறா
          வீறியல் வாய்மையும் விறலும் ஆண்மையும்
               மாறிய வோவெனா மறுக்கம் எய்தினான். ......    76

(புலர்ந்தனன் இரங்கின)

புலர்ந்தனன் இரங்கினன் பொருமல் எய்தினான்
     அலந்தனன் உயிர்த்தனன் அச்சங் கொண்டனன்
          உலந்தனன் போன்றனன் ஒடுங்கித் தன்னுளங்
               குலைந்தனன் அவன்செயல் கூறற் பாலதோ. ......    77

(ஈசனை யன்றுகா)

ஈசனை யன்றுகா றெதிரக் கண்டிலன்
     காய்சினம் அகன்றிடு கயமு கத்தினான்
          தேசிகன் அருளினால் தீயின் கண்ணுறீஇ
               மாசறு தவஞ்செய மனத்து முன்னினான். ......    78

(சுற்றுற நாற்கனல்)

சுற்றுற நாற்கனல் சூழ நள்ளிடை
     மற்றொரு பேரழல் வதிய அன்னதில்
          கொற்றவெங் கயமுகக் குரிசில் தாள்நிறீஇ
               நற்றவம் இயற்றினான் நாதற் போற்றியே. ......    79

(மேயின கொழும்புகை)

மேயின கொழும்புகை மிசைக்கொண் டாலெனத்
     தீயழல் நடுவுறச் செந்நின் றையிரண்
          டாயிரம் ஆண்டையின் அவதி ஆருயிர்
               நோயுற இபமுகன் நோற்றல் ஓம்பினான். ......    80

(புழைக்கையின் முக)

புழைக்கையின் முகத்தினன் புனித மார்தரு
     தழற்சிகை மீக்கொளத் தனது தாள்நிறீஇ
          விழுத்தக நோற்றலை வியந்து நோக்குறீஇ
               அழற்பெருங் கடவுளும் அருள்செய் தானரோ. ......    81

(அன்னதோர் அமைதியில் அவு)

அன்னதோர் அமைதியில் அவுணன் மாசுடல்
     வன்னியில் உறுத்துகார் இரும்பின் மாண்டது
          பொன்னினும் மணியினும் பொலிந்து பூத்தது
               மின்னிவர் வச்சிர மிடலுஞ் சான்றதால். ......    82

(ஏற்றநந் தொன்மர பிய)

ஏற்றநந் தொன்மர பியல்வ ழாமலே
     போற்றிய வருமிவன் பொறையும்*1 மேன்மையும்
          நோற்றிடு திட்பமும் நுவலற் பாலவோ
               தூற்றுதும் அலரெனா அவுணர் தோன்றினார். ......    83

(வீசினர் நறுமலர் விய)

வீசினர் நறுமலர் வியப்பின் நன்மொழி
     பேசினர் புகழ்ந்தனர் பிறங்கும் ஆர்வத்தால்
          ஆசிகள் புகன்றனர் அமரர் தானையை
               ஏசினர் அவர்தம தின்னல் நோக்குவார். ......    84

(தளப்பெரும் பங்கய)

தளப்பெரும் பங்கயத் தவிசின் மீமிசை
     அளப்பருங் குணத்துடன் அமர்ந்த நாயகன்
          உளப்பட நோக்கினன் உவந்து பூமுடி
               துளக்கினன் அமரர்கள் துணுக்கம் எய்தினார். ......    85

(இன்னணம் அருந்த)

இன்னணம் அருந்தவம் இயற்றும் எல்லையில்
     பொன்னவிர் சடைமுடிப் புனித நாயகன்
          அன்னது நாடியே அவுண ருக்கிறை
               முன்னுற வந்தனன் மூரி யேற்றின்மேல். ......    86

வேறு

(வந்து தோன்றலும் மற்)

வந்து தோன்றலும் மற்றது நோக்கியத்
     தந்தி மாமுகத் தானவன் நோன்பொரீஇச்
          சிந்தை அன்பொடு சென்னியிற் கைதொழு
               தெந்தை தன்னை இறைஞ்சிநின் றேத்தினான். ......    87

(போற்று கின்றுழிப்)

போற்று கின்றுழிப் புங்கவன் இன்றுகா
     றாற்று நோன்பில் அயர்ந்தனை நீயினிப்
          பேற்றை வேண்டுவ பேசினை கொள்கெனத்
               தேற்ற மிக்கவன் செப்புதல் மேயினான். ......    88

வேறு

(மாலயன் இந்திரன்)

மாலயன் இந்திரன் முதல்வ ரம்பிலோர்
     மேலுறு தகையினர் வெய்ய போரிடை
          ஏலுவர் என்னினும் எனக்கு வென்னிட
               ஆலமர் கடவுள்நீ அருளல் வேண்டுமால். ......    89

(எற்றுவ வெறிகுவ)

எற்றுவ வெறிகுவ ஈர்வ எய்குவ
     குற்றுவ முதலிய குழுக்கொள் வான்படை
          முற்றுற வரினும்யான் முடிவு றாவகை
               அற்றமில் பெருமிடல் அளித்தல் வேண்டுமால். ......    90

(மிக்கதோர் அமரரால்)

மிக்கதோர் அமரரால் வியப்பின் மானுட
     மக்களால் அவுணரால் மற்றை யோர்களால்
          தொக்குறு விலங்கினால் துஞ்சி டாவகை
               இக்கணந் தமியனேற் கீதல் வேண்டுமால். ......    91

(என்னிக ராகிவந்)

என்னிக ராகிவந் தொருவன் என்னொடு
     முன்னுற வெஞ்சமர் முயலும் என்னினும்
          அன்னவன் படையினும் அழிவு றாவகை
               பொன்னவிர் வேணியாய் புரிதல் வேண்டுமால். ......    92

(வரந்தரு கடவுளர்)

வரந்தரு கடவுளர் முனிவர் மற்றையோர்
     இருந்திடும் உலகெலாம் என்ன தாணையில்
          திரிந்திடும் ஆழியுங் கோலுஞ் சென்றிடப்
               புரிந்திடும் அரசியல் புரிதல் வேண்டுமால். ......    93

(அன்றியும் ஒன்றுள)

அன்றியும் ஒன்றுள தடியன் சூழ்ச்சியால்
     பொன்றினும் பிறவியுட் புகாமை வேண்டுமால்
          என்றலு நோற்றவர்க் கேதும் ஈபவன்
               நன்றவை பெறுகென நல்கி யேகினான். ......    94

(பெற்றனன் படைக)

பெற்றனன் படைகளும் பிறவுந் தன்புறஞ்
     சுற்றிடு கிளையெலாந் தொடர்ந்து சூழ்தர
          உற்றனன் காண்டகும் உம்பர் உங்குவன்
               மற்றொரு கயமுகன் என்று மாழ்கினார். ......    95

(காழுறு பெருந்தரு)

காழுறு பெருந்தரு நாறு காசினி
     வீழுறு தூரொடு மெலிந்து நின்றன
          ஊழுறு பருவம்வந் துற்ற காலையில்
               சூழுறு தொன்னிலை என்னத் தோன்றினான். ......    96

(அற்புதம் எய்தினன்)

அற்புதம் எய்தினன் அலைகொள் வாரியில்
     புற்புத மாமெனப் புளகம் பூத்துளான்
          சொற்பகர் வரியதோர் மதர்ப்பின் சும்மையான்
               சிற்பரன் கருணையில் திளைத்தல் மேயினான். ......    97

(அன்னது தேர்வுறீஇ)

அன்னது தேர்வுறீஇ அவுணர் தொல்குல
     மன்னனும் வெள்ளியும் மதங்க மாமுகன்
          தன்னைவந் தெய்தியே சயமுண் டாகெனப்
               பன்னரும் ஆசிகள் பகர்ந்து மேயினார். ......    98

(தண்ணளி யில்லதோர்)

தண்ணளி யில்லதோர் தந்தி மாமுகன்
     அண்ணலங் கடகளிற் றமரர் கோனையும்
          விண்ணவர் பிறரையும் வென்று மீண்டுபின்
               மண்ணுல கதனிடை வல்லை எய்தினான். ......    99

வேறு

(புவனி தன்னிடைப்)

புவனி தன்னிடைப் போந்துபின்
     அவுணர் கம்மிய அறிஞனை
          நுவலும் அன்பொடு நோக்குறா
               உவகை யால்இவை யுரைசெய்வான். ......    100

(நாவ லந்தரு நண்)

நாவ லந்தரு நண்ணுமித்
     தீவின் மேதகு தென்றிசைப்
          பூவி லோர்நகர் புரிதியால்
               மேவ வென்று விளம்பவே. ......    101

(பூவின் மேல்வரு புங்க - 2)

பூவின் மேல்வரு புங்கவத்
     தேவு நாணுறு செய்கையில்
          காவன் மாநகர் கண்டதிற்
               கோவி லொன்று குயிற்றினான். ......    102

வேறு

(வெங்கண் மேதகு)

வெங்கண் மேதகு வேழமு கத்தனைத்
     தங்கள் தொல்பகை தாங்குவ தாமெனச்
          சிங்க மாற்றுந் திருமணிப் பீடமொன்
               றங்கவன் வைக ஆற்றினன் அவ்விடை. ......    103

(இனைத்தி யாவும் இமை - 2)

இனைத்தி யாவும் இமைப்பினில் கம்மியன்
     நினைப்பி னில்செய் நிலைமையை நோக்கியே
          சினத்தின் நீங்கிய செய்தவத் தேசிகன்
               மனத்தி னூடு மகிழ்ச்சியின் மேயினான். ......    104

(காமர் தங்கிய காப்)

காமர் தங்கிய காப்பியன் அந்நகர்
     தூம தங்கெழு தோல்முகற் காதலான்
          மாம தங்க புரம்என மற்றொரு
               நாமம் அங்கதற் கெய்திட நாட்டினான். ......    105

(அந்த மாநகர் ஐதெ)

அந்த மாநகர் ஐதெனக் கம்மியன்
     சிந்தை நாடினன் செய்திடு காலையில்
          தந்தி மாமுகத் தானவன் கண்ணுறீஇ
               அந்தம் இல்லதொ ரார்வமொ டேகினான். ......    106

(காத மங்கொரு பத்)

காத மங்கொரு பத்தெனக் கற்றவர்
     ஓதுகின்ற ஒழுக்கமும் ஒன்றெனும்
          பாதி யெல்லைப் பரப்பும் பெறுநகர்
               வீதி நோக்கினன் விம்மிதம் எய்தினான். ......    107

(அரக்கர் தொல்லை)

அரக்கர் தொல்லை அவுணர்க் கரசொடு
     தருக்கு தானவர் தம்முடன் எய்தியே
          பெருக்க முற்றதன் பின்னவர் இன்னவர்
               இருக்க நல்கினன் இந்நகர் யாவையும். ......    108

(அங்கண் மேவும்)

அங்கண் மேவும் அணிமணிக் கோயிலின்
     மங்க லத்தொடு வல்லையின் ஏகியே
          சிங்க ஏற்றின் சிரங்கெழு பீடமேல்
               வெங்கை மாமுகன் வீற்றிருந் தானரோ. ......    109

(போந்து பின்னர்ப்)

போந்து பின்னர்ப் பொருவருந் தானவர்
     வேந்தன் மாமக ளான விசித்திர
          காந்தி தன்னைக் கருதுநன் னாளினில்
               ஏந்தல் முன்வரைந் தின்புற மேவினான். ......    110

(விண்ணின் மாந்தர்)

விண்ணின் மாந்தர்கள் மேதகு தன்குலம்
     நண்ணு மாதர்கள் நாகர்தம் மாதர்கள்
          வண்ண விஞ்சையர் மாதர்க ளாதியாம்
               எண்ணில் மாதரைப் பின்வரைந் தெய்தினான். ......    111

(பொன்ன கர்க்கும்)

பொன்ன கர்க்கும் பொலங்கெழு புட்பக
     மன்ந கர்க்குமவ் வானவர் ஈண்டிய
          எந்ந கர்க்கும் இலாவளம் எய்திய
               அந்ந கர்க்கண் அமர்ந்திடல் மேயினான். ......    112

(சூழும் வானவர் தான)

சூழும் வானவர் தானவர் துன்னியே
     தாழ ஏழுல குந்தன தாணையால்
          வாழி சேர்கொடுங் கோலொடு மன்னுபேர்
               ஆழி செல்ல அரசுசெய் தானவன். ......    113

(ஆவுஞ் சங்கமும் அம்)

ஆவுஞ் சங்கமும் அம்புய மும்மலர்க்
     காவும் மாமணி யுங்கம லாலயத்
          தேவும் பின்வருந் தேவரும் மாதரும்
               ஏவல் செய்ய இனிதிருந் தானரோ. ......    114

(புந்தி மிக்க புகரும்)

புந்தி மிக்க புகரும் புகருடன்
     அந்த மற்ற அவுணர்கள் மன்னனும்
          தந்தி யின்முகத் தானவ னுக்குநன்
               மந்தி ரத்துணை யாய்அவண் வைகினார். ......    115

(அன்ன காலை அடு)

அன்ன காலை அடுகரி மாமுக
     மன்னன் முன்வரும் வாசவ னாதியாந்
          துன்னு வானவர் சூழலை நோக்கியே
               இன்ன தொன்றை இயம்புதல் மேயினான். ......    116

(வைக லும்மிவண்)

வைக லும்மிவண் வந்துழி நுங்கள்தம்
     மொய்கொள் சென்னியில் மும்முறை தாக்கியே
          கைகள் காதுறக் கால்கொடு தாழ்ந்தெழீஇச்
               செய்க நம்பணி தேவர்கள் நீர்என்றான். ......    117

(அன்ன தோதலும்)

அன்ன தோதலும் அண்டர்கள் யாவரும்
     மன்னன் தானும் மறுப்பதை அஞ்சியே
          முன்னரே நின்று மொய்ம்புடைத் தோல்முகன்
               சொன்ன தோர்புன் தொழின்முறை ஆற்றினார். ......    118

(எழிலி யூர்தியும்)

எழிலி யூர்தியும் ஏனைய வானவர்
     குழுவி னோர்களுங் குஞ்சர மாமுகத்
          தழித கன்பணி அல்கலும் ஆற்றியே
               பழியெ னும்பர வைப்படிந் தாரரோ. ......    119

(கரிமு கத்துக் கய)

கரிமு கத்துக் கயவன தேவலால்
     பருவ ரற்பழி மூழ்குறு பான்மையைச்
          சுரர்க ளுக்கிறை தொல்லைவி ரிஞ்சன்மால்
               இருவ ருக்கும் இயம்பி இரங்கினான். ......    120

(இரங்கும் எல்லை)

இரங்கும் எல்லையில் இந்திர முற்றுளந்
     தரங்க மெய்தித் தளர்ந்திடல் நீயெனா
          உரங்கொள் பான்மை உணர்த்தி அவனொடும்
               புரங்கள் அட்டவன் பொற்றையிற் போயினார். ......    121

(மாகர் யாவரும் வாச)

மாகர் யாவரும் வாசவ னும்புடை
     யாக வந்திட அம்புயன் மாலுமை
          பாகன் மேய பனிவரைக் கோயிலுள்
               ஏகி னார்நந்தி எந்தை விடுப்பவே. ......    122

(கண்டு நாதன் கழலி)

கண்டு நாதன் கழலிணை தாழ்ந்துநல்
     தொண்டு காணத் துதித்தலும் ஆங்கவன்
          அண்ட ரோடும் அலமரல் எய்தியே
               வண்டு ழாய்முடி வந்ததென் னென்னவே. ......    123

வேறு

(ஆனதோர் பொழுதின்மால்)

ஆனதோர் பொழுதின்மால் அரனை நோக்கியோர்
     தானவன் கயமுகன் என்னுந் தன்மையான்
          வானவர் தமையெலாம் வருத்தி னானவன்
               ஊனமில் தவம்புரிந் துடைய வன்மையால். ......    124

(வெங்கய முகத்தினன்)

வெங்கய முகத்தினன் விறலை நீக்குதல்
     எங்களுக் கரியதால் எவர்க்கும் ஆதியாம்
          புங்கவ நினக்கது பொருளன் றாகையால்
               அங்கவன் உயிர்தொலைத் தருள வேண்டுநீ. ......    125

(என்றுரை செய்தலும்)

என்றுரை செய்தலும் ஈசன் யாமிவண்
     ஒன்றொரு புதல்வனை யுதவித் தோல்முக
          வன்றிறல் அவுணனை மாய்த்து மற்றவன்
               வென்றிகொண் டேகுவான் விடுத்துமேல் என்றான். ......    126

(வீடிய பற்றுடை)

வீடிய பற்றுடை விரதர்க் கென்னினும்
     நாடிய அரியவன் நவின்ற வாய்மையைச்
          சூடினர் சென்னிமேல் தொழுத கையராய்
               ஆடினர் பாடினர் அமரர் யாருமே. ......    127

(பாங்கரில் அனையரை)

பாங்கரில் அனையரைப் பரிந்து நோக்கியே
     ஈங்கினி நும்பதிக் கேகு வீரென
          ஆங்கவர் எம்பிரான் அடியில் வீழ்ந்தனர்
               வீங்குறு காதலால் விடைகொண் டேகினார். ......    128

(ஏகிய எல்லையில்)

ஏகிய எல்லையில் எண்ணி லாவிதி
     சேகரம் மிலைச்சிய சென்னி வானவன்
          பாகமுற் றுலகெலாம் பயந்த சுந்தரத்
               தோகையை நோக்கியே இதனைச் சொல்லுவான். ......    129

(யாம்பெரு விருப்பு)

யாம்பெரு விருப்புடன் இயற்று வித்திடுந்
     தேம்படு தருவனந் தெரித்துஞ் செல்கென
          வாம்பரி சருளினை வருவன் ஆங்கெனாக்
               காம்படு தோளுடைக் கவுரி கூறினாள். ......    130

(ஆயது கேட்டனன்)

ஆயது கேட்டனன் அகிலம் யாவையுந்
     தாயென அருளுமத் தையல் தன்னொடுஞ்
          சேயுயர் விசும்பினைச் செறிதண் சோலையில்
               போயினன் மறைக்கெலாம் பொருள தாயினான். ......    131

(நீணுதற் கனல்விழி)

நீணுதற் கனல்விழி நிமலத் தேவெனுந்
     தாணுவைப் போலவே தனது பாதமுஞ்
          சேணுடைச் சென்னியுந் தேவர் யாரினுங்
               காணுதற் கரியதக் கடிகொள் சோலையே. ......    132

(தேசுடைத் தருநிரை)

தேசுடைத் தருநிரை திருமென் போதொடு
     பாசடைத் தொகுதியும் பரித்து நிற்பன
          ஈசனுக் கருச்சனை இயல்பின் ஆற்றிட
               நேசமுற் றுடையவர் நிலைய தொக்குமால். ......    133

(பாலுற வருவதோர்)

பாலுற வருவதோர் பரைதன் மெய்யொளி
     மேலுறு பைங்கொடி வேத நாயகன்
          ஏலுறு தாருக வனத்தில் எய்தமுன்
               மாலுறு மங்கையர் வடிவம் போலுமால். ......    134

(கொடிகளுந் தருக்க)

கொடிகளுந் தருக்களின் குழுவு மாதுடன்
     அடிகளங் கேகலும் அனையர் செம்மையுஞ்
          சுடர்கெழு பசுமையந் துவன்றி அன்னதோர்
               வடிவுகொண் டிருந்திடும் வண்ணம் போலுமால். ......    135

(பூந்தரு நிரைகளில்)

பூந்தரு நிரைகளில் பொருவில் கோட்டிடைச்
     சேந்திடு நனைபல திகழ்வ பார்ப்பதி
          காந்தனை அன்பொடு கண்டு பாங்குளார்
               ஏந்திய தீபிகை என்ன லானவே. ......    136

(வான்தரு ஓர்சில)

வான்தரு ஓர்சில மலரின் கண்டொறுந்
     தேன்றுளி விடுவன சிவனைக் கண்டுழி
          ஆன்றதோர் அன்பினார் அகம்நெ கிழ்ந்துகட்
               கான்றதோர் புனலெனக் கவின்று காட்டிய. ......    137

(வண்தரு ஓர்சில மரு)

வண்தரு ஓர்சில மருப்பில் வானிறங்
     கொண்டிடு மதுமலர் குழுமி யுற்றன
          எண்டிரு மலையிடை வீழுங் கங்கையில்
               தண்டுளி சிதறிய தன்மை போன்றவே. ......    138

(கற்றையஞ் சுடர்மணி)

கற்றையஞ் சுடர்மணி கனகம் ஏனைய
     பிற்றையென் னாதருள் பெரியர் வண்மைபோல்
          மற்றவ ணுள்ளபன் மரமுந் தம்பயன்
               எற்றையும் உலப்புறா தீகை சான்றவே. ......    139

(காவதன் இயல்பினை)

காவதன் இயல்பினைக் கண்டு தன்னொரு
     தேவியொ டேயருள் செய்து சிற்பரன்
          ஆவியுள் ளுணர்வென அதனுள் வைகுமோர்
               ஓவிய மன்றிடை ஒல்லை ஏகினான். ......    140

(எண்டகு பெருநசை)

எண்டகு பெருநசை எய்தி ஐம்புலன்
     விண்டிடல் இன்றியே விழியின் பாற்படக்
          கண்டனள் கவுரிஅக் கடிகொள் மண்டபங்
               கொண்டிடும் ஓவியக் கோலம் யாவுமே. ......    141

(பாங்கரில் வருவதொர்)

பாங்கரில் வருவதொர் பரமன் ஆணையால்
     ஆங்கதன் நடுவணில் ஆதி யாகியே
          ஓங்கிய தனியெழுத் தொன்றி ரண்டதாய்த்
               தூங்குகைம் மலைகளில் தோன்றிற் றென்பவே. ......    142

(அன்னவை உமையவள்)

அன்னவை உமையவள் காண ஆங்கவை
     முன்னுறு புணர்ச்சியின் முயற்சி செய்தலும்
          என்னைகொல் இதுவென எண்ணித் தன்னொடு
               மன்னிய முதல்வனை வணங்கிக் கூறுவாள். ......    143

(மூலமாம் எழுத்திவை)

மூலமாம் எழுத்திவை முயங்கி மால்கரிக்
     கோலமாய்ப் புணர்வதென் கூறு கென்றலும்
          ஏலவார் கருங்குழல் இறைவி கேளென
               ஆலமார் களத்தினன் அருள்செய் கின்றனன். ......    144

வேறு

(முன்புநீ காண்டலின்)

முன்புநீ காண்டலின் மூலமாய் உடையதோர்
     மன்பெருந் தொல்பொறி மருவியீர் உருவுறீஇ
          அன்பினால் ஆனைபோற் புணருமால் ஆகையால்
               நின்பெருந் தகவினை நினைகிலாய் நீயுமே. ......    145

(காட்சியால் இதுசெயு)

காட்சியால் இதுசெயுங் காரணம் பெற்றநின்
     மாட்சிதான் யாமலான் மற்றியார் உணர்குவார்
          ஆட்சியாய் உற்றதொல் அருமறைக் காயினுஞ்
               சேட்செலா நிற்குநின் திருவருட் செய்கையே. ......    146

(என்னவே முகமனால்)

என்னவே முகமனால் எம்பிரான் அம்பிகை
     தன்னொடே மொழியஅத் தந்தியும் பிடியுமாய்த்
          துன்னியே புணர்வுறுந் தூயசெய் தொழில்விடா
               முன்னமே போன்றதால் முடிவிலாக் குடிலையே. ......    147

(அக்கணத் தாயிடை)

அக்கணத் தாயிடை ஐங்கரத் தவன்அருள்
     முக்கண்நால் வாயினான் மும்மதத் தாறுபாய்
          மைக்கருங் களிறெனும் மாமுகத் தவன்மதிச்
               செக்கர்வார் சடையன்ஓர் சிறுவன்வந் தருளினான். ......    148

(ஒருமையால் உணரு)

ஒருமையால் உணருவோர் உணர்வினுக் குணர்வதாம்
     பெருமையான் எங்கணும் பிரிவரும் பெற்றியான்
          அருமையான் ஏவரும் அடிதொழுந் தன்மையான்
               இருமையாம் ஈசனே என்னநின் றருளுவான். ......    149

(மருளறப் புகலுநான்)

மருளறப் புகலுநான் மறைகளில் திகழுமெய்ப்
     பொருளெனப் படுமவன் புவனமுற் றவர்கள்தம்
          இருளறுத் தவர்மனத் திடர்தவிர்த் தருளவோர்
               அருளுருத் தனைஎடுத் தவதரித் துளனவன். ......    150

(வந்துமுன் னிருவர்தம்)

வந்துமுன் னிருவர்தம் மலரடித் தலமிசைச்
     சிந்தையார் வத்தொடுஞ் சென்னிதாழ்த் திடுதலுந்
          தந்தையுந் தாயுமுன் தழுவிமார் புறவணைத்
               தந்தமில் கருணைசெய் தருளினார் அவ்வழி. ......    151

(என்னரே யாயினும்)

என்னரே யாயினும் யாவதொன் றெண்ணுதல்
     முன்னரே உனதுதாள் முடியுறப் பணிவரேல்
          அன்னர்தஞ் சிந்தைபோல் ஆக்குதி அலதுனை
               உன்னலார் செய்கையை ஊறுசெய் திடுதிநீ. ......    152

(சேயநன் மலர்மிசை)

சேயநன் மலர்மிசைத் திசைமுகன் மால்முதல்
     ஆயபண் ணவர்தமக் காருயிர்த் தொகையினுக்
          கேயபல் கணவருக் கெத்திறத் தோர்க்குநீ
               நாயகம் புரிதியால் நல்லருட் டன்மையால். ......    153

(கானுறுங் கரடவெங்)

கானுறுங் கரடவெங் கயமுகத் தவனெனுந்
     தானவன் வன்மையைச் சாடியே தண்டுழாய்
          வானவன் சிறுமையும் மாற்றியே வருகெனா
               ஆனையின் முகவனுக் கைம்முகன் அருள்செய்தான். ......    154

(மோனமே குறியதா)

மோனமே குறியதா முதலெழுத் தருளிய
     ஞானமா மதலைபால் நண்ணவே பூதவெஞ்
          சேனையா யினஅருள் செய்துசிற் பரையொடும்
               ஆனைமா முகனொடும் அமலன்மீண் டருளினான். ......    155

(புங்கவர்க் கிறைவனா)

புங்கவர்க் கிறைவனாம் புதல்வனை நோக்கிடா
     நங்கடைத் தலையினில் நாயகம் புரிகெனா
          அங்கருத் தியொடிருத் தினன்அணிக் கோயிலுட்
               சங்கரக் கடவுள்சுந் தரியொடு மருவினான். ......    156

(தந்திமா முகமுடை)

தந்திமா முகமுடைத் தனயன்அங் கணுகியே
     முந்துபா ரிடமெலாம் மொய்த்துமுன் சூழ்தர
          நந்திவந் தனைசெய நான்முகன் முதலினோர்
               வந்துவந் தடிதொழ மகிழ்வொடே வைகினான். ......    157

(அன்னதற் பின்னரே)

அன்னதற் பின்னரே ஆயிரம் பெயருடைப்
     பொன்னுலாம் நேமியான் புனிதனைக் காணிய
          மின்னுதண் சுடர்விடும் வெள்ளிமால் வரைமிசைத்
               துன்னினான் ஆலயச் சூழல்முன் அணுகினான். ......    158

(அந்தியார் சடைமுடி)

அந்தியார் சடைமுடி அண்ணல்தன் அருளினால்
     நந்திதே வுய்த்திட நங்கையோர் பங்கனாம்
          எந்தைபா லெய்தியே இணைமலர்த் தாள்தொழாப்
               புந்தியார் வத்தொடும் போற்றிசெய் தருளவே. ......    159

வேறு

(நிருத்தனவ் விடை)

நிருத்தனவ் விடைதனில் நேமி யான்தனை
     இருத்தியென் றருள்புரிந் திடத்தின் மேவிய
          ஒருத்தியை நோக்கிஒன் றுரைப்பங் கேளெனா
               அருத்திசெய் ஆடல்ஒன் றருளிற் கூறுவான். ......    160

(சூதனை எம்மொடே)

சூதனை எம்மொடே பொருதி தோற்றனை
     ஆதியேல் நீபுனை அணிகள் யாவையும்
          ஈதியால் வென்றனை என்னின் எம்மொரு
               பாதியாஞ் சசிமுதற் பலவுங் கோடியால். ......    161

(என்னலும் உமையவள்)

என்னலும் உமையவள் இசைவு கோடலும்
     அன்னதொ ரெல்லையின் அரியை நோக்கியே
          தன்னிகர் இல்லவன் இதற்குச் சான்றென
               மன்னினை இருத்தியான் மாயநீ என்றான். ......    162

(பற்றிகல் இன்றியே)

பற்றிகல் இன்றியே பழவி னைப்பயன்
     முற்றுணர்ந் துயிர்களை முறையின் வைப்பவன்
          மற்றிது புகறலும் வனசக் கண்ணினான்
               நற்றிறம் இஃதென நவின்று வைகினான். ......    163

(இந்தவா றாயிடை)

இந்தவா றாயிடை நிகழும் எல்லையில்
     சுந்தரன் முதலிய உழையர் சுற்றினோர்
          அந்தமில் பெருங்குணத் தாதி ஏவலில்
               தந்தனர் காசொடு பலகை தன்னையே. ......    164

(அதுபொழு தண்ணலும்)

அதுபொழு தண்ணலும் அரியை நோக்கியிம்
     முதிர்தரு கருவியை முறையின் வைக்கெனக்
          கதுமென வைத்தலுங் கவுரி நீநமக்
               கெதிருறு கென்றுமுன் னிருத்தி னானரோ. ......    165

(கவற்றினை முன்னரே)

கவற்றினை முன்னரே உய்ப்பக் கண்ணுதல்
     அவற்றினைப் பின்னுற அவளும் உய்த்தனள்
          தவற்றியல் பல்லதோர் வல்ல சாரியால்
               எவற்றினும் மேலையோர் இனிதின் நாடினார். ......    166

(பஞ்சென வுரைசெய்வர்)

பஞ்சென வுரைசெய்வர் பாலை என்பர்ஈர்
     அஞ்சென மொழிவர் அஞ்சென்பர் அன்றியுந்
          துஞ்சலின் நடம்என்பர் துருத்தியீ தென்பர்
               விஞ்சிய மகிழ்வொடு வெடியென் றோதுவார். ......    167

(அடியிது பொட்டைஈ)

அடியிது பொட்டைஈ தென்பர் அஃதென
     முடிவில குழூஉக்குறி முறையின் முந்துறக்
          கடிதினில் கழறினர் கவறு சிந்தினார்
               நொடிதரு கருவிகள் எதிரின் நூக்கினார். ......    168

வேறு

(ஏற்றா னவன்எய்திய)

ஏற்றா னவன்எய்திய இன்னருள் யாவ தேயோ
     தேற்றாம் அஃதியார்க்கு மளப்பருஞ் செய்கை யாலே
          மேற்றான் எதிராவுடன் ஆடிய மெல்லி யற்குத்
               தோற்றான் நெடுமாலயன் நாடவுந் தோற்றி லாதான். ......    169

(ஒன்றாய பரஞ்சுட)

ஒன்றாய பரஞ்சுட ரோன்உமை தன்னை நோக்கி
     நன்றா யதுநின் வலியென்று நகைத்து நம்மை
          வென்றா யலைதோற் றனைமுன்னர் விளம்பு மாற்றால்
               நின்றா ரொடுபூணும் எமக்கினி நேர்தி என்றான். ......    170

(மூன்றாம் உலகங்களும்)

மூன்றாம் உலகங்களும் ஆருயிர் முற்று முன்னம்
     ஈன்றாள் அதுகேட்டலுந் தான்இகல் ஆடல் அஞ்சி
          வான்றா வியபே ரடிமாயனை வல்லை நோக்கிச்
               சான்றா மெனவை கினைநீயிது சாற்று கென்றாள். ......    171

(சொல்லும் அளவிற்)

சொல்லும் அளவிற் சுடர்நேமியன் சூது டைப்போர்
     வெல்லுந் தகையோன் பரனென்று விளம்ப லோடும்
          நல்லுண்மை சொற்றாய் திறநன்றிது நன்றி தென்னாச்
               செல்லுண்ட ஐம்பால் உமைஆற்றச் சினம்பு ரிந்தாள். ......    172

(பாராயலை கண்ணனு)

பாராயலை கண்ணனு மாயினை பாலி னுற்றாய்
     தேராதது ஒன்றிலை யாவருந் தேர ஒண்ணாப்
          பேராதி யோன்நவை கூறினும்நீயிது பேச லாமோ
               காராமெய் என்பர் மனமுங்கரி யாய்கொல் மன்னோ. ......    173

(ஏம்பா லிதுசொற் றனை)

ஏம்பா லிதுசொற் றனைஆதலின் என்று மாயை
     ஓம்பா வருவா யுறுகைதவத் தூற்ற மிக்காய்
          பாம்பாதி யென்னப் பகர்ந்தாள் பகர்கின்ற எல்லை
               ஆம்பால் உருவம் அஃதங்கண் அடைந்த தன்றே. ......    174

(அவ்வா றவன்பால்)

அவ்வா றவன்பால் அணைகின்றதொர் போழ்தில் ஆழிக்
     கைவா னவனும் அதுகண்டு கவற்சி எய்திச்
          செவ்வான் உறழும் முடியோன்அடி சென்று தாழா
               எவ்வா றெனக்கிவ் வுருநீங்கும் இசைத்தி என்றான். ......    175

(காலாய் வெளியாய்ப்)

காலாய் வெளியாய்ப் புனலாய்க் கனலோடு பாராய்
     மேலாகி யுள்ள பொருளாய்எவற் றிற்கும் வித்தாய்
          நாலாய வேதப் பொருளாகி நண்ணுற்ற நாதன்
               மாலா யவனுக் கிஃதொன்று வகுத்து ரைப்பான். ......    176

(என்பால் வருமன்பின்)

என்பால் வருமன்பின் இசைத்தனை ஈது பெற்றாய்
     நின்பால் வருமின் னலைநீக்குவன் நீங்கு கின்றாய்
          தென்பா லுலகந்தனில் அன்னதொர் தேய மீதில்
               முன்பால வனம்மென ஒன்றுள மொய்ம்பின் மிக்காய். ......    177

(ஆங்கே யினிநீ கடி)

ஆங்கே யினிநீ கடிதேகினை அன்ன கானில்
     பாங்கே ஒருதொன்மரம் நின்றது பார்த்த துண்டே
          ஊங்கே பராரையின் மேயபொந் தொன்றி னூடு
               தீங்கே குறப்போய்ப் பெருமாதவஞ் செய்து சேர்தி. ......    178

(அஞ்சேல் அவண்நீ)

அஞ்சேல் அவண்நீ உறைகின்றதொர் காலை யானே
     எஞ்சே யவனாங் கயமாமுகன் எய்து வானச்
          செஞ்சே வகனுக் கெதிர்கொண்டனை சென்று காண்டி
               மஞ்சே யனையாய் உனக்கிவ்வுரு மாறும் அன்றே. ......    179

வேறு

(என்னுமள வில்தொழு)

என்னுமள வில்தொழுதி றைஞ்சிஇனி தேத்தி
     அன்னதொர் வனத்திடை அமர்ந்ததொன் மரத்தில்
          துன்னுவன் எனக்கடிது சொல்லுதலும் யார்க்கும்
               முன்னவ னுமேகென முராரியை விடுத்தான். ......    180

(விட்டிடுத லுங்க)

விட்டிடுத லுங்கயிலை நீங்கினன் விரைந்தே
     கட்டழகின் மேதகைய காமனது தாதை
          சிட்டர்கள் பயின்றுறை தெனாதுபுலம் நண்ணி
               மட்டொழுகு தொன்மர வனத்தினிடை உற்றான். ......    181

(நன்மதி யுடைப்புல)

நன்மதி யுடைப்புலவர் நால்வர்களும் உய்யச்
     சின்மயம் உணர்த்தியருள் தேவன்அமர் தாருத்
          தன்மையது பெற்றுநனி தண்ணிழல் பரப்புந்
               தொன்மர வியற்கைஅத னிற்சிறிது சொல்வாம். ......    182

(பசுந்தழை மிடைந்த)

பசுந்தழை மிடைந்தஉல வைத்திரள் பரப்பி
     விசும்பளவு நீடியுயர் வீழினிரை தூங்கத்
          தசும்பனைய தீங்கனிகள் தாங்கியது தாளால்
               வசுந்தரை அளந்தநெடு மாயவனை மானும். ......    183

(அண்டநடு வாயவு)

அண்டநடு வாயவுல கேழினையும் அந்நாள்
     உண்டருளி ஒல்லைதனில் ஓர்சிறுவ னாகிப்
          பண்டுகரி யோன்துயில்கொள் பாசடைகள் தன்பாற்
               கொண்டவட மன்னதொரு கொள்கைய துடைத்தால். ......    184

(மழைத்தபசு மேனியது)

மழைத்தபசு மேனியது மாதிர வரைப்பில்
     விழுத்தகைய வீழினிரை வீசுவட தாருத்
          தழைக்குல மருப்புமிசை தாங்கியிடை தூங்கும்
               புழைக்கைகொடு மால்களிறு நாடுகரி போலும். ......    185

(பாசடை தொடுத்தபட)

பாசடை தொடுத்தபட லைப்பழு மரத்தின்
     வீசிநிமிர் கின்றபல வீழின்விரி கற்றை
          பூசலிடு கூளியொடு பூதநிரை பற்றி
               ஊசல்பல ஆடியென ஊக்கியன அன்றே. ......    186

(ஆல்வரையின் வீழ்)

ஆல்வரையின் வீழ்நிரைகள் ஆசுகம் உடற்றப்
     பால்வரையின் எற்றிவரு மாறிரவி பாகன்
          கால்வரையின் ஏகவெழு கந்துகம தென்னும்
               மால்வரையின் வீசுபல மத்திகைய தொத்த. ......    187

(ஆசறுதெ னாதுதிசை)

ஆசறுதெ னாதுதிசை ஆளுமிறை எண்ணில்
     பாசமொடு நின்றதொரு பான்மையஃ தன்றேல்
          வாசவனும் ஆகமிசை மாலிகையு மாமால்
               வீசுபழு மாமர விலங்கலும்அவ் வீழும். ......    188

(மாநிலமெ லாந்தனை)

மாநிலமெ லாந்தனை வழுத்தவரு மன்னற்
     கூனமுறு காலைதனில் ஒண்குருதி வாரி
          வானமுகில் கான்றனைய மாண்டதொன் மரத்தின்
               மேனிதரு செய்யபல வீழின்விரி மாலை. ......    189

(இம்பருறை ஆலமிசை)

இம்பருறை ஆலமிசை எம்முருவு கொள்ளா
     வம்புலவு தண்டுவள மாயன்வரும் என்னா
          வெம்பணிகள் தம்பதியின் மேவுவன போலாம்
               தம்பமென வேதரை புகுந்ததனி வீழ்கள். ......    190

(கடித்தன எயிற்றின்)

கடித்தன எயிற்றின்அழல் காலவர வின்மேல்
     நடிக்குமொரு கட்செவி நமைக்குறுகும் என்னாத்
          துடித்தன எனத்தலை துளக்கின உரோமம்
               பொடித்தன நிகர்த்துள புனிற்றினுறு புன்காய். ......    191

(கிளர்ப்புறு கவட்டி)

கிளர்ப்புறு கவட்டிலை கிடைத்த கிளையாவும்
     அளப்பில்புகை சுற்றிட அனற்கெழுவு கற்றை
          துளக்குறு தரக்குழுவு தோன்றியது போன்ற
               விளக்கழல் நிகர்த்துள விரிந்தமுகை யெல்லாம். ......    192

(செருப்புகு சினத்தெ)

செருப்புகு சினத்தெதிர் செறுத்தமத வெற்பின்
     மருப்பினை ஒசிப்பவன் வரத்தினியல் காணா
          விருப்பமலி வுற்றதன் விழித்தொகைகள் எங்கும்
               பரப்பிய நிகர்த்துள பயங்கெழுவு பைங்காய். ......    193

(வெள்ளிபடு கின்றமதி)

வெள்ளிபடு கின்றமதி விண்டபடர் விமானங்
     கள்ளிபடு பால்கெழு கவட்டினிடை தேய்ப்பத்
          துள்ளிபடு கின்றளவி லோர்திவலை தொத்தப்
               புள்ளிபடு மாறுமுயல் என்பர் புவிமேலோர். ......    194

(காவதமொ ரேழுள)

காவதமொ ரேழுள பராரை கணிப்பின்றால்
     தாவறும் உயர்ச்சியத னுக்குமதி சான்றே
          பூவுலகம் எங்குநிழல் போக்கிநெடி தோம்புங்
               கோவதென நின்றதுயர் கோளியெனுங் குன்றம். ......    195

(அவ்வகைய தாருவி)

அவ்வகைய தாருவினை நோக்கினன் அணைந்தான்
     பவ்வநிற வண்ணல்துயில் பாசடை கள்தம்மோ
          டெவ்வகை சுமத்திரென வேவினவ என்றே
               வெவ்வரவி னுக்கிறைவன் மேவியது மான. ......    196

(அந்தமில் பெருங்கடல்)

அந்தமில் பெருங்கடல் வளாகம்அனைத் துந்தன்
     உந்தியில் அடைந்ததென ஓங்கல்கெழும் ஒள்வாள்
          வந்துறை யினிற்புகுவ தென்ன வடதாருப்
               பொந்தினிடை யேயணுகி னான்உலகு பூத்தோன். ......    197

(சத்தியுரை யால்அரி)

சத்தியுரை யால்அரி தனிப்பணிய தான
     இத்திறமி சைத்தனம் இனிச்சுரரை வாட்டும்
          அத்திமுக வெய்யவனை ஆதியருள் செய்யும்
               வித்தக முதற்புதல்வன் வென்றமை உரைப்பாம். ......    198

வேறு

(முந்து வேழ முகத்த)

முந்து வேழ முகத்தவன் ஏவலால்
     நொந்து சிந்தை நுணங்கிய தேவரும்
          இந்தி ராதிபர் யாவரும் ஐங்கரன்
               வந்த தோர்ந்து மகிழ்ச்சியின் மேயினார். ......    199

(ஏத மில்மகிழ் வெய்)

ஏத மில்மகிழ் வெய்திய இந்திரன்
     ஆதி யோர்கயி லாயத் தணுகியே
          போத கத்துப் புகர்முகப் புங்கவன்
               பாத முற்றுப் பணிந்து பரவினார். ......    200

(பரவல் செய்திடு பான்)

பரவல் செய்திடு பான்மையை நோக்கியே
     கருணை செய்து கயமுகத் தெம்பிரான்
          உரையும் நுங்கட் குறுகுறை என்றலும்
               வரன்மு றைப்பட வாசவன் கூறுவான். ......    201

(தொல்லை நாண்மதி)

தொல்லை நாண்மதி சூடிய சோதிபால்
     எல்லை நீங்கும் வரந்தனை எய்தினான்
          கல்லென் வெஞ்சொற் கயாசுரன் என்பவன்
               அல்லல் செய்தனன் ஆற்றவும் எங்களை. ......    202

(பின்னும் நங்களைப்)

பின்னும் நங்களைப் பீடற வைகலுந்
     தன்னை வந்தனை செய்யவுஞ் சாற்றினான்
          அன்ன செய்தனம் அன்றியும் எங்கள்பால்
               மன்ன வேபுதி தொன்று வகுத்தனன். ......    203

(கிட்டித் தன்முன்)

கிட்டித் தன்முன் கிடைத்துழி நெற்றியிற்
     குட்டிக் கொண்டு குழையிணை யிற்கரந்
          தொட்டுத் தாழ்ந்தெழச் சொற்றனன் ஆங்கதும்
               பட்டுப் பட்டுப் பழியிடை மூழ்கினேம். ......    204

(கறுத்து மற்றவன்)

கறுத்து மற்றவன் கட்டுரைக் கின்றசொல்
     மறுத்த லஞ்சி வரும்பழி தன்னையும்
          பொறுத்து நாணமும் போகஇன் றந்தமுஞ்
               சிறப்பி லாவச் சிறுதொழில் செய்தனம். ......    205

(ஆங்க வன்தன)

ஆங்க வன்தன தாவியொ டெங்குறை
     நீங்கு வித்திட நீவரு வாயெனா
          ஓங்கல் நல்கும் உமையவள் தன்னொரு
               பாங்கர் வைகும் பராபரன் கூறினான். ......    206

(ஆத லால்நின் னடை)

ஆத லால்நின் னடைந்தனம் எம்முடை
     ஏத மாற்றுதி என்று வழிபடீஇ
          மோத காதிகள் முன்னுற வார்த்திடப்
               பூத நாதன் அருளில் புகலுவான். ......    207

(அஞ்சல் அஞ்சல்)

அஞ்சல் அஞ்சல் அவுணர்க் கரசனாம்
     விஞ்சு வேழ முகமுடை வீரனைத்
          துஞ்சு வித்துந் துயர்தவிர்ப் போமெனாக்
               குஞ்ச ரத்திரு மாமுகன் கூறவே. ......    208

(இறைவ னோடும்)

இறைவ னோடும் இமையவர் எம்முடைச்
     சிறுமை நீங்கின செல்லலும் நீங்கின
          மறுமை இன்பமும் வந்தன வால்இனிப்
               பெறுவ தொன்றுள தோவெனப் பேசினார். ......    209

வேறு

(துன்பினை உழந்திடு)

துன்பினை உழந்திடு சுரர்கள் இவ்வகை
     இன்புறு காலையில் ஈசன் தந்திடும்
          அன்புடை முன்னவன் ஆனை மாமுக
               முன்பனை யடுவது முன்னி னானரோ. ......    210

(பொருக்கெனத் தவி)

பொருக்கெனத் தவிசினின் றெழுந்து பூதர்கள்
     நெருக்குறு வாய்தலின் எய்தி நீள்கதிர்
          அருக்கனின் இலகிய அசலன் என்பவன்
               தருக்கிய புயத்தின்மேற் சரண்வைத் தேறினான். ......    211

(ஏறியங் கசலன்மே லிரு)

ஏறியங் கசலன்மே லிருந்து செல்லுழிக்
     காறொடர் முகிலினங் கவைஇய காட்சிபோல்
          மாறில்வெம் பூதர்கள் வந்து சுற்றியே
               கூறினர் அவன்புகழ் குலாய கொள்கையார். ......    212

(சாமரை வீசினர் தண)

சாமரை வீசினர் தணப்பில் பன்மணிக்
     காமரு தண்ணிழல் கவிகை ஏந்தினர்
          பூமரு மதுமலர் பொழிதல் மேயினர்
               ஏமரு பூதரில் எண்ணி லோர்களே. ......    213

(துடியொடு சல்லரி)

துடியொடு சல்லரி தோமில் தண்ணுமை
     கடிபடு கரடிகை கணையம் சல்லிகை
          இடியுறழ் பேரிகை இரலை காகளங்
               குடமுழ வியம்பினர் கோடி சாரதர். ......    214

(சிந்தையில் உன்னினர்)

சிந்தையில் உன்னினர் தீமை தீர்ப்பவன்
     வந்திடு காலையின் மகத்தின் வேந்தனும்
          அந்தர அமரரும் அடைந்து போற்றியே
               புந்திகொள் உவகையால் போதல் மேயினார். ......    215

(தாருவின் நறுமலர்)

தாருவின் நறுமலர் தத்தங் கைகொடு
     பேரருள் நுதல்விழிப் பிள்ளை மீமிசை
          சேருற வீசியே புடையிற் சென்றனர்
               காரினை யடைதரு கடவுள் வில்லென. ......    216

(விரைந்தெழு சாரத)

விரைந்தெழு சாரத வெள்ளம் எண்ணில
     நிரந்தன சூழ்தர நிமலன் மாமகன்
          பெருந்தரை ஏகியே பிறங்கு தோல்முகன்
               புரந்திடு மதங்கமா புரமுன் போயினான். ......    217

(ஆயது கயமுகத் தவு)

ஆயது கயமுகத் தவுணர் கோடியே
     வேயினர் புகறலும் வெகுட்சி கொண்டெழீஇ
          ஏயதன் படையெலாம் எடுத்து மற்றவன்
               சேயுயர் தனதுபொற் றேரில் ஏறினான். ......    218

(பல்லியம் இயம்பின)

பல்லியம் இயம்பின பரிகள் சுற்றின
     சில்லிகொள் ஆழியந் தேர்கள் சூழ்ந்தன
          எல்லையில் இபநிரை யாவும் மொய்த்தன
               வல்லியல் அவுணர்கள் வரம்பின் றீண்டினார். ......    219

(ஆயிர வெள்ளமாம்)

ஆயிர வெள்ளமாம் அனிகஞ் சுற்றிடக்
     காய்கனல் விழியுடைக் கயமு காசுரன்
          ஏயெனும் அளவையில் ஏகிக் கண்ணுதல்
               நாயகன் மதலைதன் படைமுன் நண்ணினான். ......    220

(நண்ணிய காலையின்)

நண்ணிய காலையின் நவையில் பூதரும்
     அண்ணலங் கழலடி அவுண ருங்கெழீஇப்
          பண்ணினர் பெருஞ்சமர் படையின் வன்மையால்
               விண்ணவர் யாவரும் வியந்து நோக்கவே. ......    221

(புதிதெழு வெயிலுடன்)

புதிதெழு வெயிலுடன் பொங்கு பேரிருள்
     எதிர்பொரு மாறுபோல் இனங்கொள் தானவர்
          அதிர்கழற் பூதரோ டமர்செய் தாற்றலர்
               கதுமென அழிந்தனர் கலங்கி ஓடினார். ......    222

(ஓடினர் அளப்பிலர்)

ஓடினர் அளப்பிலர் உயிரைச் சிந்தியே
     வீடினர் அளப்பிலர் மெய்கு றைந்துபின்
          ஆடினர் அளப்பிலர் அகலு தற்கிடந்
               தேடினர் அளப்பிலர் தியக்கம் எய்தினார். ......    223

(ஒழிந்தன கரிபரி)

ஒழிந்தன கரிபரி உலப்பில் தேர்நிரை
     அழிந்தன இத்திறம் அவுணர் தம்படை
          குழிந்திடு கண்ணுடைக் குறள்வெம் பூதர்கள்
               மொழிந்திட அரியதோர் விசய முற்றினார். ......    224

(உயர்தரு தானவர்)

உயர்தரு தானவர் உடைந்த தன்மையும்
     புயவலி கொண்டுள பூதர் யாவருஞ்
          சயமுடன் மேல்வரு தகவு நோக்கியே
               கயமுக அவுணர்கோன் கனலிற் சீறினான். ......    225

(உளத்தினில் வெகு)

உளத்தினில் வெகுண்டுசென் றொருதன் கைச்சிலை
     வளைத்தனன் அத்துணை வளைத்துப் பேரமர்
          விளைத்தனர் பூதர்கள் அனையர் மெய்யெலாந்
               துளைத்தனன் கணைமழை சொரிந்து துண்ணென. ......    226

(அரந்தெறு பகழிகள்)

அரந்தெறு பகழிகள் ஆகம் போழ்தலும்
     வருந்தினர் திறலொடு வன்மை நீங்கினர்
          இரிந்தனர் பூதர்கள் யாரும் ஓடினார்
               புரந்தரன் இமையவர் பொருமல் எய்தவே. ......    227

(கணநிரை சாய்தலுங்)

கணநிரை சாய்தலுங் கண்டு மற்றது
     மணிகிளர் கிம்புரி மருப்பு மாமுகன்
          இணையறும் அசலன்மேல் ஏகி வல்லையில்
               அணுகினன் இபமுகத் தவுணர் கோனையே. ......    228

(காருடை இபமுகக்)

காருடை இபமுகக் கடவுள் மேலையோன்
     ஏருற வருதலும் நின்ற தூதரைச்
          சீருறு கயமுகத் தீயன் நோக்கியே
               யாரிவண் பொருவதற் கணுகுற் றானென. ......    229

(பரவிய ஒற்றர்கள்)

பரவிய ஒற்றர்கள் பணைம ருப்புடைக்
     காரிமுக முடையன்முக் கண்ணன் ஐங்கரன்
          உருகெழு பூதன்மேல் உறுகின் றான்சிவன்
               பெருமக னாகும்இப் பிள்ளைதான் என்றார். ......    230

(அன்னது கேட்டலும்)

அன்னது கேட்டலும் அவுணன் சீறியே
     பன்னருங் கலைதெரி பாகை நோக்கிநம்
          பொன்னி ரதத்தினைப் புழைக்கை மாமுகன்
               முன்னுறக் கடவுதி மொய்ம்ப என்னவே. ......    231

(கேட்டிடு வலவையோ)

கேட்டிடு வலவையோன் கிஞ்சு கக்குரத்
     தாட்டிறற் பரியினந் தன்னின் மத்திகை
          காட்டினன் தவறிலாக் கனகத் தேரினை
               ஓட்டினன் ஐங்கரத் தொருவன் முன்னுற. ......    232

(ஆயிடைக் கரிமுக)

ஆயிடைக் கரிமுகத் தவுணன் ஐங்கரத்
     தூயனை யழல்விழி சுழல நோக்கியே
          காயெரி எயிறுகக் கறைகொள் பற்களால்
               சேயிதழ் அதுக்கியே இனைய செப்புவான். ......    233

(நுந்தையென் மாதவம்)

நுந்தையென் மாதவம் நோக்கி முன்னரே
     தந்திடு பெருவரந் தன்னைத் தேர்கிலை
          உய்ந்தனை போதிநின் னுயிர்கொண் டென்னெதிர்
               வந்தனை இறையது மதியி லாய்கொலோ. ......    234

(அன்றிநீ யமர்செய)

அன்றிநீ யமர்செய அமைதி யென்னினும்
     வன்றிறல் உனக்கிலை மைந்த என்னெதிர்
          பொன்றினர் அல்லது போர்செய் தென்னைமுன்
               வென்றவர் இவரென விளம்ப வல்லையோ. ......    235

(தேன்பெறு தருநிழல்)

தேன்பெறு தருநிழல் திருவின் வைகிய
     வான்பெறு தேவரால் மக்க ளாலவர்
          ஊன்பெறு படைகளால் ஒழிந்தி டேன்இது
               நான்பெறு வரத்தியல் நவிலக் கேட்டியேல். ......    236

(பின்னரும் பலவுள)

பின்னரும் பலவுள பெற்ற தொல்வரம்
     என்னைவெல் பவர்எவர் இந்தி ராதிபர்
          தன்னிடர் தணிப்பவர் போலச் சார்ந்தனை
               உன்னைவென் றன்னவர் உயிரும் உண்பனால். ......    237

(பொருதெனை வென்)

பொருதெனை வென்றனை போக வல்லையேல்
     வருதியென் றுரைத்தலும் வானு லாவிய
          புரமெரி படுத்தவன் புதல்வன் அவ்விடை
               அருளுட னொருமொழி அறைவ தாயினான். ......    238

வேறு

(நிரந்தபல் படையும்)

நிரந்தபல் படையும் நாளும் நிலைபெற நினக்குத் தொன்னாள்
     வரந்தரு கின்ற எந்தை வல்லைநின் னுயிரை வவ்விப்
          புரந்தரன் முதலி னோர்க்குப் பொன்னினா டுதவி அன்னார்
               அரந்தையும் அகற்றிச் செல்கென் றருளினன் எனக்கும் அன்றே. ......    239

(உன்னுயிர் காத்தி)

உன்னுயிர் காத்தி என்னின் உறுதியொன் றுரைப்பன் கேண்மோ
     பொன்னக ரதனை இந்தப் புரந்தரன் புரக்க நல்கி
          இந்நிலத் தரசு செய்தே இருத்தியஃ திசையா தென்னின்
               நின்னுயிர் முடிப்பான் நேர்ந்து நின்றனன் இனைவென் னென்றான். ......    240

(என்னலும் அவுணன்)

என்னலும் அவுணன் பொங்கி எரியுக விழித்துச் சென்றோர்
     பொன்னெடுஞ் சிலையை வாங்கிப் பொருக்கெனப் புரிநாண் ஏற்றி
          மின்னுடை வடிம்பின் வாளி வீசலும் விமலன் நல்கும்
               முன்னவன் எழுவொன் றேந்தி முரணொடு சிந்தி நின்றான். ......    241

(பொற்றனு முரிந்து)

பொற்றனு முரிந்து வீழப் புழைக்கையிற் பிடித்த தண்டால்
     எற்றினன் அனைய காலை இபமுகத் தசுரன் என்போன்
          மற்றொரு சிலையைக் கையால் வாங்கினன் வாங்கு முன்னர்ச்
               செற்றனன் அதனை மைந்தன் திசைமுகன் முதலோர் ஆர்ப்ப. ......    242

(திண்டிறல் பெற்ற)

திண்டிறல் பெற்ற வீரச் சிலைமுரிந் திட்ட பின்னர்த்
     தண்டமொன் றேந்தி ஈசன் தனயனோ டெதிர்த லோடும்
          விண்டது சோரும் வண்ணம் வெய்தெனப் புடைத்து மாயாக்
               கண்டகன் உரத்தில் தாக்கக் கையற வெய்தி நின்றான். ......    243

(நடுங்கினன் சிந்தை)

நடுங்கினன் சிந்தை ஒன்று நவில்கிலன் நாணத் தாலே
     ஒடுங்கினன் கயவெஞ் சூரன் உலந்தனன் போல நின்றான்
          அடும்பரி களிறு திண்டேர் அணிகெழு தானை பாரிற்
               படும்படி நினைந்து முன்னோன் பாசம்ஒன் றுய்த்தான் அன்றே. ......    244

(விட்டவெம் பாசம்)

விட்டவெம் பாசம் அங்கண் வெய்யதோர் சேனை முற்றுங்
     கட்டிய தாக மைந்தன் கணிச்சியும் அதற்பின் ஏவ
          அட்டதால் அதனை நோக்கி ஆடினர் அமரர் தானை
               பட்டன உணர்ந்து தீயோன் பதைபதைத் துயிர்த்து நொந்தான். ......    245

(முந்துதன் கரத்தி)

முந்துதன் கரத்தி லுள்ள முரண்கெழு படைகள் யாவுஞ்
     சிந்தினன் அவைகள் எல்லாஞ் சேர்ந்தன திங்கள் சூடும்
          எந்தையை வலஞ்செய் தேத்தி ஏவலின் இயன்ற மாதோ
               வெந்திறல் அவுணன் மேன்மேல் வெகுளித்தீக் கனல நின்றான். ......    246

(நின்றவன் தன்னை)

நின்றவன் தன்னை நோக்கி நெடியபல் படைகள் ஏவில்
     சென்றிவன் தன்னைக் கொல்லா சிவனருள் வரத்தின் சீரால்
          இன்றினிச் செய்வ தென்னென் றிறைவரை உன்னி எந்தை
               தன்றிருக் கோட்டில் ஒன்று தடக்கையின் முரித்துக் கொண்டான். ......    247

(தடக்கையி லேந்து)

தடக்கையி லேந்து கோட்டைத் தந்தியாம் அவுணன் மீது
     விடுத்தலும் அனையன் மார்பை வெய்தெனக் கீண்டு போகி
          உடல்படி மிசையே வீழ்த்தி ஒல்லையில் ஓடித் தெண்ணீர்க்
               கடல்படிந் தமலன் மைந்தன் கரத்தில்வந் திருந்த தன்றே. ......    248

(புயலினத் தொகுதி)

புயலினத் தொகுதி ஒன்றிப் புவிமிசை வழுக்கிற் றென்னக்
     கயமுகத் தவுணன் முந்நீர்க் கடலுடைந் தென்ன ஆர்த்திட்
          டியலுடைத் தேர்மேல் வீழா எய்த்தனன் அவன்தன் மார்பில்
               வியனதித் தாரை என்ன விரிந்தன குருதி வெள்ளம். ......    249

(ஏடவிழ் அலங்கல் திண்)

ஏடவிழ் அலங்கல் திண்டோள் இபமுகத் தவுணன் மார்பின்
     நீடிய குருதிச் செந்நீர் நீத்தமாய் ஒழுகும் வேலைப்
          பாடுற வருங்கான் ஒன்றில் பரத்தலின் அதுவே செய்ய
               காடெனப் பெயர்பெற் றின்னுங் காண்டக இருந்த தம்மா. ......    250

(ஆய்ந்தநல் லுணர்)

ஆய்ந்தநல் லுணர்வின் மேலோர் அறிவினும் அணுகா அண்ணல்
     ஈந்ததொல் வரத்தால் மாயா இபமுகத் தவுணன் வீழ்ந்து
          வீந்தனன் போன்று தொல்லை மெய்யொரீஇ விண்ணும் மண்ணுந்
               தீந்திட எரிகண் சிந்தச் சீற்றத்தோ ராகு வானான். ......    251

(தேக்கிய நதிசேர்)

தேக்கிய நதிசேர் கின்ற சென்னியன் செம்மல் தன்னைத்
     தாக்கிய வருத லோடுஞ் சாரதன் தோளின் நீங்கி
          நீக்கருந் துப்பின் தாக்கி நீநமைச் சுமத்தி என்று
               மேக்குயர் பிடரில் தாவி வீற்றிருந் தூர்தல் உற்றான். ......    252

(மற்றது கண்ட தேவ)

மற்றது கண்ட தேவர் வாசவன் முதலோர் யாரும்
     இற்றனன் கயவெஞ் சூரன் எம்மிடர் போயிற் றன்றே
          அற்றதெம் பகையும் என்னா ஆடினர் பாடா நின்றார்
               சுற்றிய கலிங்கம் வீசித் துண்ணென விசும்பு தூர்த்தார். ......    253

(காமரு புயலின் தோற்)

காமரு புயலின் தோற்றங் காண்டலுங் களிப்பின் மூழ்கி
     ஏமரு கலாப மஞ்ஞை இனமெனக் குலவு கின்றார்
          தேமரும் இதழி அண்ணல் சிறுவனைத் தெரியா வண்ணம்
               பூமலர் பொழிந்து நின்று புகழினைப் போற்றல் உற்றார். ......    254

(காப்பவன் அருளும்)

காப்பவன் அருளும் மேலோன் கண்ணகல் ஞாலம் யாவுந்
     தீப்பவன் ஏனைச் செய்கை செய்திடும் அவனும் நீயே
          ஏப்படுஞ் செய்கை யென்ன எமதுளம் வெதும்பும் இன்னல்
               நீப்பது கருதி யன்றோ நீயருள் வடிவங் கொண்டாய். ......    255

(உன்னிடைப் பிறந்த)

உன்னிடைப் பிறந்த வேதம் உன்பெரு நிலைமை தன்னை
     இன்னதென் றுணர்ந்த தில்லை யாமுனை அறிவ தெங்ஙன்
          அன்னையும் பயந்தோன் தானும் ஆயினை அதனால் மைந்தர்
               பன்னிய புகழ்ச்சி யாவும் பரிவுடன் கேட்டி போலாம். ......    256

(என்றிவர் எகினம்)

என்றிவர் எகினம் ஊரும் இறையொடும் இறைஞ்சி ஏத்தி
     நன்றிகொள் சிந்தை யோடு நகையொளி முகத்த ராகி
          மன்றவர் குமரன் தன்பால் வந்தனர் சூழ்த லோடும்
               ஒன்றிய கருணை நோக்கால் உலப்பிலா அருள்பு ரிந்தான். ......    257

(உய்ந்தனம் இனிநாம்)

உய்ந்தனம் இனிநாம் என்னா ஓதிமம் உயர்த்தோன் வெள்ளைத்
     தந்தியன் யாரும் பேற்றிச் சார்தலுஞ் சமரின் முன்னம்
          வெந்தொழில் அவுணன் காயம் வீந்திடு பூதர் தம்மை
               எந்தையங் கினிது நோக்கி எழுதிரென் றருளிச் செய்தான். ......    258

(அவ்வகை அருள)

அவ்வகை அருள லோடும் அரவென எழுந்து போற்றி
     மைவரை மிடற்றுப் புத்தேள் மைந்தனை வணங்கி ஏத்தி
          எவ்வமில் பூதர் யாரும் ஈண்டினர் இனைய எல்லாஞ்
               செவ்விதில் உணர்ந்து கொண்டான் தேசிலா நிருதர்க் கீசன். ......    259

(மந்திரி யோடுஞ்)

மந்திரி யோடுஞ் சூழ்ந்து வருந்தினன் புலம்பி மாழ்கி
     உய்ந்தனன் போவல் யானென் றுன்னிஓர் பறவை யாகி
          அந்தரத் திறந்த புள்ளோ டணுகியப் பதியை நீங்கிச்
               சிந்தையிற் செல்லல் கூரச் செம்பொன்மால் வரையிற் சென்றான். ......    260

(தாழுறு சார லூடு)

தாழுறு சார லூடு தபனனும் உணராத் தாருச்
     சூழலொன் றுண்டால் அங்கட் சுருங்கையோ டிருந்த சேமப்
          பூழையுட் புலம்பி உற்றான் பொன்னகர் இறைக்கும் அங்கண்
               ஊழிவெங் காலிற் சூழும் உலப்பில்பூ தர்க்கும் அஞ்சி. ......    261

(வானவர் பகைஞன்)

வானவர் பகைஞன் அந்த மதங்கமா புரியை நீங்கிப்
     போனதோர் காலை மற்றைப் புகருமோர் புள்ள தாகித்
          தானுறை உலகு நண்ணித் தவமறைந் தல்ல தாற்றி
               ஊனுட லோம்பு வார்போல் ஒருப்படா யோகில் உற்றான். ......    262

(பூதரும் அன்ன)

பூதரும் அன்ன வேலைப் புரிசைசூழ் நகரம் போகி
     நீதியில் அவுண ராகி நிறங்கிளர் படைகொண் டோரைக்
          காதிவெஞ் சினப்போர் முற்றிக் களத்திடை வருத லோடும்
               ஆதிதந் தருளும் மைந்தன் அவ்விடை அகன்று மீண்டான். ......    263

(மீண்டுசெங் காட்டி)

மீண்டுசெங் காட்டி லோர்சார் மேவிமெய்ஞ் ஞானத் தும்பர்
     தாண்டவம் புரியுந் தாதை தன்னுருத் தாபித் தேத்திப்
          பூண்டபே ரன்பிற் பூசை புரிந்தனன் புவியு ளோர்க்குக்
               காண்டகும் அனைய தானங் கணபதீச் சரம தென்பார். ......    264

(புரமெரி படுத்தோன்)

புரமெரி படுத்தோன் தன்னைப் பூசனை புரிந்த பின்னர்
     எரிவிழி சிதறும் ஆகு எருத்தமேல் இனிதின் ஏறிச்
          சுரபதி அயன்விண் ணோர்கள் தொழுதுடன் சூழ்ந்து போற்ற
               அரவென மாலோன் வைகும் ஆலமா வனத்திற் புக்கான். ......    265

ஆகத் திருவிருத்தம் - 9450
*1. பா-ம்: பூண்டகை.

(எண்=செய்யுளின் எண்)

*1-1. பாகசாதனன் - இந்திரன்.

*1-2. விஞ்சையர் - வித்தியாதரர்.

*2. வினையேற்கு - பாவியாகிய எனக்கு.

*3-1. குரு - சுக்கிரன்.

*3-2. கொடியோன் - அசுரர் அரசன்.

*4. பொற்றை - மலை.

*7-1. வெதும்பிய - வெப்பமுற்று.

*7-2. சாந்து - சந்தனம்.

*8. விரிஞ்சன்: காதலன் - சனகாதியோர்.

*9-1. அன்னவன் - அவ்வசிட்டன்.

*9-2. மாகதன் - ஒரு முனிவன்.

*12. புகர் - சுக்கிரன்.

*13. விபுதை - இவள் ஒரு அசுர கன்னிகை.

*15. வென் - முதுகு.

*16. ஏது - காரணம்.

*18. மீள்வல் - திரும்புவேன்.

*20. நேமிகள் - கடல்கள்.

*21. மேனகை - தேவ மாதரில் ஒருத்தி.

*22. காந்தன் - காதலன்.

*24-1. களிறு ஒருத்தல் - ஆண் யானை.

*24-2. பிடி - பெண் யானை.

*25. மனுவின் செய்கை - மந்திரம் செபிக்கும் தொழில்.

*26. சூர் - அச்சம்.

*29-1. கூட்டம் - சேர்க்கை.

*29-2. பரிவு கூர - அன்புமிக.

*32. முருந்து - மயிலிறகின் அடி.

*35. உள்ளம் ஆதி நான்மை - மனம் முதலிய அந்தக் கரணங்கள் நான்கும்.

*36-1. வய - பெருமை.

*36-2. தடவு - வளைவு.

*36-3. வயிர்த்திடும் - வைரம் பொருந்திய.

*36-4. நால் வாய் - தொங்குகின்ற வாய்.

*37. பலகை - கேடகம்.

*39. இபமுகம் - யானைமுகம்.

*40-1. தூயவன் - இங்கு மாகத முனிவன்.

*40-2. சுளித்து - கோபித்து.

*40-3. சேயிழை - இங்கு விபுதை.

*41. சராசரம் - சரம்+அசரம். சரம் - அசையும் பொருள்; இது இயங்கியற் பொருள் (இயங்குதிணை) அல்லது சங்கமம் எனவும் பெயர்பெரும். அசரம் - அசையாப் பொருள்; இது நிலையியற் பொருள் (நிலைத்திணை) அல்லது தாவரம் எனவும் பெயர்பெரும்.

*43-1. தாது - மகரந்தம்.

*43-2. தயித்தியர் - அசுரர்.

*43-3. தபனன் - சூரியன்.

*43-4. காணும் காலை - உதயகாலம்; கண்டபொழுதுமாம்.

*45-1. தறுகண் - அஞ்சாமை.

*45-2. கொட்புஎன்ன - உலவினாற்போல்.

*46. சேடன் - ஆதிசேடன்.

*47-1. நுங்கி - விழுங்கி.

*47-2. செந்நீர் - இரத்தம்.

*48. பொய்த்தவர் - பொய்யுரைப்போர்.

*49-1. முகரிமை - முதன்மை.

*49-2. தோல்முகத்தவன் - கயமுகாசுரன்.

*50. மள்ளர் - வீரர்.

*52. சல்லியன் - சுக்கிரன்.

*53-1. இறுவது - அழிவது.

*53-2. அறிவ - ஞானாசிரியனே.

*54. பார்க்கவன் - சுக்கிரன்.

*55. முகிற்கோள் எனும் செவ்வியோன் - சுக்கிரன்.

*57-1. முப்பகை - காமம், வெகுளி, மயக்கம் என்னும் முப்பகை.

*57-2. முரட்பகை - வலியபகை.

*57-3. ஐம்பால் மெய்ப்பகை - ஐம்புலனாகிய உட்பகை.

*58-1. அம்மை - அவ்வுலகம்.

*58-2. உம்மை - நடுவணதான இக்காலம்.

*58-3. எம்மை - எந்தச்சென்மம்.

*60-1. விஞ்சை - வித்தை.

*60-2. மகவு - புத்திரப்பேறு.

*60-3. சீலம் - ஒழுக்கம்.

*60-4. போதம் - நல்லுணர்வு.

*60-5. குறித்திடில் - கருதினால்.

*61-1. காலன் - எமன்.

*61-2. சேர்ப்பன் - நெய்தனிலத்தவனான செம்படவன்.

*61-3. மேல் - பின்னர்.

*61-4. அவன் - அந்த எமன்.

*61-5. வீடும் - அழியும்.

*63. அனிகம் - சேனை.

*64-1. வீழ்வுற்று அகப்படும் - வலையிலும், தூண்டிலிலும், கண்ணியிலும் முறையே அகப்பட்டுக்கொள்ளுகின்ற.

*64-2. விறல் - வெற்றி.

*67-1. ஐவினை செய்ப்பொறிகள் - காணல், கேட்டல் முதலிய ஐந்து தொழில்களைப் புரிகின்ற ஐம்பொறிகள்.

*67-2. கைவினை - முத்திரைகள்.

*67-3. உட்கோள் - அந்தரங்கத் தியானம்.

*67-4. புறக்காப்பு - கவசம்.

*68. காவதம் - காதம்; ஓர் அளவு.

*69. விழுமம் - துன்பம்.

*70. அகலம் - மார்பு. கயமுகன் தவத்திற்கு செல்கை, அவன் தந்தங்களில் பட்டுத் திரும்பும் எஃகம் முதலிய ஆயுதத்தின் மீட்சியை ஒத்து என்க.

*71. செங்கதிரோன்தனை நோக்கி ஆற்றுகடன் - சூரிய நமஸ்காரம்.

*72-1. முதல் இரண்டடிகள் இறைவனைத் தியானிக்க வேண்டும் முறையினை விளக்குகின்றன.

*72-2. கரணம் - அந்தக் கரணம்.

*72-3. மூலவெழுத்து - பிரணவம்.

*72-4. ஐந்து - பஞ்சாட்சரம்.

*72-5. கொளுவி - கலந்து.

*73-1. அடகு - இலைகள்.

*73-2. அனிலம் - காற்று.

*74-1. மருத்தெனும் மாவை - பிராணவாயு என்னும் குதிரையை.

*74-2. மூல வெங்கனல் - மூலாக்கினி.

*74-3. மூட்டுறா - (பிரமநாடியில்) மூட்டச்செய்து.

*75. தம்பதி - தமது அரசன்; இந்திரன்.

*76. வெகுட்சி - கோபம்.

*77-1. புலந்தனன் - வருந்தி.

*77-2. பொருமல் - அழுதல்.

*77-3. அலந்தனன் - துன்பமுற்று.

*77-4. உலந்தனன் - வாடி.

*78. தேசிகன் அருளால் - (தவத்திற்கு இரங்கி இறைவன் வராவிடில் தீயினின்று தவம்செய் என்று) சுக்கிரன் அருளியபடி.

*79. நள்ளிடை - நடுவிடம்.

*80. அவதி - காலம்.

*81. புழைக்கை - துதிக்கை.

*82-1. கார் இரும்பின் - கரிய இரும்பைப்போல.

*82-2. மாண்டது - மாட்சிமையுற்று.

*82-3. மிடல் - வலிமை.

*83-1. பொறை - சாந்த குணம்.

*83-2. திட்பம் - திண்மை.

*85. நாயகன் - சிவன்; கயமுகனுமாம்.

*86. மூரி - வலிமை; திமிலுமாம்.

*89. ஆலமர் கடவுள் - கல்லால் நிழலில் அமரும் கடவுள்; தட்க்ஷிணாமூர்த்தி.

*93-1. ஆழி - ஆக்கினா சக்கிரம்.

*93-2. கோல் - செங்கோல்.

*94. சூழ்ச்சி - பகைவர் வஞ்சனை.

*95. தவம் செய்யு முன் இரும்பென விளங்கிய உடலம் தவம்செய்த பின் பொன்னென விளங்கியதால் கயமுகனை, "மற்றொரு கயமுகன்" என்றார்.

*96-1. பெருந்தரு - ஆலமரம்.

*96-2. நாறு - நாறுகள்.

*96-3. தூர் - சிறு வேர்களான விழுதுகள்.

*96-4. ஊழுறு பருவம் - நற்பருவம். கயமுகன் பிற்காலத்தில் தவப் பெருமையால் சேனை வன்மை, ஆயுத வன்மை முதலியவற்றுடன் விளங்கினான் என்பது இச்செய்யுளின் உட்கருத்து.

*98. அவுணர் தொல்குல மன்னன் - அசுரேந்திரன்.

*104. தேசிகன் - சுக்கிரன்.

*105-1. காப்பியன் - சுக்கிரன்.

*105-2. தூ - சிந்துகின்ற.

*105-3. மதங்கபுரம் - இது கயமுகன் நகரம்.

*106. ஐது என - அழகென.

*109. வெங்கைமாமுகன் - கயமுகன்.

*110. விசித்திரகாந்தி - இவள் கயமுகன் மனைவி; அசுரேந்திரன் மகள்.

*111. வரைந்து - மணந்து.

*112. புஷ்பக மன் - குபேரன்.

*114-1. ஆ - காமதேனு.

*114-2. சங்கம் - சங்கநிதி.

*114-3. அம்புயம் - பதுமநிதி.

*114-4. கா - கற்பகத்தரு.

*119-1. எழிலி ஊர்தி - இந்திரன்.

*119-2. அல்கலும் - நாடோறும்.

*119-3. பழியெனும் பரவை - துன்பக்கடல்.

*122. மாகர் - தேவர்.

*123. அலமரல் - துன்பம்.

*125. விறலை - வெற்றியை.

*129-1. விதி சேகரம் - பிரமகபாலம்.

*129-2. உலகெலாம் பயந்த சுந்தரத் தோகை - உமாதேவியார்.

*130. காம்படு தோள் - மூங்கிலைப்பழிக்கும் தோள்.

*131. தையல் - உமாதேவியார்.

*132. கடி - வாசனை. இது முதல் சோலை வருணனை ஆகும்.

*133. பாசடை - பசிய இலை.

*135. கொடிகளின் பசுமையும் தருக்களின் செம்மையும் அம்மை அப்பரை ஒத்து விளங்குகின்றன.

*136. தீபிகை - தீபத்தட்டு.

*138-1. வான்நிறம் - வெண்ணிறம்.

*138-2. மதுமலர் - தேன்மலர்.

*140-1. கா - சோலை.

*140-2. ஓவிய மன்று - சித்திர மண்டபம்.

*141-1. பெருநசை - பெருவிருப்பம்.

*141-2. விண்டிடல் - விலகாமல்.

*141-3. ஓவியக்கோலம் - சித்திர வடிவம்.

*142-1. தனி எழுத்து - ஏகாட்சரம்; பிரணவம்.

*142-2. தூங்கும் - தொங்குகின்ற.

*142-3. கைம் மலைகள் - யானைகள்.

*144. மூலமாம் எழுத்து - பிரணவாட்சரங்கள்.

*147. குடிலை - ஓங்காரம்.

*148. மும்மதம் - கன்னமதம், கபோலமதம், பீசமதம்; சிலர் பீசமதத்தை நீக்கிக் கைம்மதம் என்றும் கூறுவர்.

*152-1. என்னரே ஆயினும் - எத்தகையோராயினும்.

*152-2. அன்னவர்தம் சிந்தைபோல் - அவர் எண்ணம்போல.

*152-3. உன்னலார் - நினைத்து வழிபடாதவர்.

*152-4. ஊறு - இடையூறு.

*153. நாயகம் - தலைமைத்துவம்.

*154-1. கான் - நாற்றம்.

*154-2. கரடம் - மதம்.

*154-3. சாடி - அழித்து.

*154-4. ஆனையின்முகவன் - விநாயகன்.

*154-5. ஐம்முகன் - சிவபெருமான்.

*155-1. மோனம் - மௌனம்.

*155-2. முதலெழுத்து - பிரணவம்.

*155-3. ஞானமாமதலை - விநாயகன்.

*156-1. அருத்தி - விருப்பம்.

*156-2. மருவினான் - சொன்னான்.

*158. நேமியன் - திருமால்.

*160. ஒருத்தி - ஒப்பற்ற உமாதேவியார்.

*161-1. சூது - சூதாட்டம்.

*161-2. சசி - சந்திரன்.

*161-3. கோடி - கொள்வாய்.

*162-1. சான்று - சாட்சி.

*162-2. மன்னினை - பொருந்தி.

*163-1. இகல் - வெறுப்பு.

*163-2. வனசக்கண்ணினான் - திருமால்.

*164-1. உழையர் - ஊழியர்கள்.

*164-2. காசு, பலகை - இவை சூதாடு கருவிகள்.

*166. கவறு - சூதாடு கருவி.

*167. பஞ்சு, பாலை, ஈரைஞ்சு, அஞ்சு, நடம், துருத்தி, வெடி - இவை சூதாட்டத்தின் குழூஉக் குறிகள்.

*168-1. அடி, பெட்டை - இவை சூதாட்டத்தின் குழூஉக் குறிகள்.

*168-2. கவறுசிந்துதல் - காய்களை வெட்டுதல்.

*168-3. நூக்கினார் - தள்ளினார்.

*169. ஏற்றான் - இடபத்தையுடையவன்.

*170-1. வென்றாய்அலை - வெற்றி பெறவில்லை.

*170-2. தார் - மாலை.

*170-3. நேர்தி - அளித்தி.

*171. இகல்ஆட - பகைத்து நானே வென்றேன் என்று கூற.

*172-1. செல் - மேகம்.

*172-2. ஐம்பால் - கூந்தல்.

*172-3. ஆற்ற - மிகவும்.

*173-1. கண்ணனுமாயினை - இங்கு, நீ கண்ணுடையவனாய் இருந்தும் அதற்குரிய செயலினை இழந்தாய் என்பது குறிப்பு.

*173-2. பாலினுற்றாய் - பக்கத்திலிருந்தாய்; பாற்கடலிலிருந்தாய்; பாலை வைத்துக்கொண்டு பொய் சொல்லலாகாது என்பது கருத்து.

*174-1. ஏம்பால் - மகிழ்ச்சியால்.

*174-2. கைதவம் - வஞ்சனை.

*174-3. பாம்பு ஆதி - பாம்பாகக் கடவாய்.

*175-1. கவற்சி - கலக்கம்.

*175-2. செவ்வான் - செவ்வானம்.

*176-1. கால் - காற்று.

*176-2. வெளி - ஆகாயம்.

*176-3. நாதன் - சிவன்.

*177-1. இசைத்தனை - தவறு கூறினை.

*177-2. ஈது - பாம்பு வடிவாகும் இச்சாபத்தினை.

*177-3. ஆலவனம் - திருவாலங்காடு.

*178-1. தொன் மரம் - ஆலமரம்.

*178-2. பராரை - பெரிய அடிப்பாகம்.

*179-1. கயமுகன் - விநாயகன்.

*179-2. சேவகன் - வீரன்.

*179-3. மஞ்சே அனையாய் - மேக வண்ணனே!.

*179-4. இவ்வுறு - இப்பாம்பு வடிவம்.

*180. முராரி - திருமால்.

*181-1. காமனது தாதை - திருமால்.

*181-2. சிட்டர்கள் - மேலானவர்கள்.

*181-3. தெனாது புலம் - தென்னாடு.

*181-4. மட்டு - தேன்.

*182-1. புலவர் - அறிஞர்.

*182-2. தாரு - கல்லால விருட்சம்.

*183. இது முதல் ஆலமரத்தின் வருணனை ஆகும்.

*183-1. உலவைத்திரள் - கிளைகள்.

*183-2. வீழின் நிரை - விழுதின் வரிசை.

*183-3. தசும்பு - குடம்.

*183-4. வசுந்தரை - பூமி.

*184. வடம் அன்ன - அந்த ஆலே போல.

*185. கரி - இங்குப் பெண் யானை.

*186-1. படலை - மாலை.

*186-2. பழுமரம் - ஆலமரம்.

*186-3. பூசல் - சிறு சண்டை.

*187-1. ஆல்வரை - ஆலமரமாகிய மலை.

*187-2. ஆசுகம் - காற்று.

*187-3. இரவிபாகன் - அருணன்.

*187-4. கந்துகம் - சத்தமா என்னும் குதிரைகள்.

*187-5. மத்திகை - குதிரைச் சம்மட்டி; சவுக்கு.

*188-1. தெனாதுதிசை யாளும் இறை - எமன்.

*188-2. மாலிகை - பூமாலை.

*188-3. பழுமாமர விலங்கல் - ஆலமரமாகிய மலை.

*189-1. ஊனம் - அழிவு.

*189-2. கான்றல் - பெய்தல்.

*189-3. மாண்ட - மாட்சிமை வாய்ந்த.

*190-1. வெம்பணிகள் - கொடிய பாம்புகள்.

*190-2. தம்பதி - பாதாளம்.

*191-1. கட்செவி - கண்ணே காதாக உடையது; பாம்பு.

*191-2. புனிறு - இளமை.

*192-1. கவடு - பெருங்கிளை.

*192-2. முகை - மொட்டு.

*193-1. பயம் - பால்.

*193-2. கெழுவு - பொருந்திய.

*194-1. கள்ளிபடு - கள்ளியிலும் அதிகமாக உண்டாகின்ற.

*194-2. தொத்த - பட.

*194-3. முயல் - முயல் என்னும் களங்கம்.

*195-1. மதிசான்று எனறது ஆலமரக்கிளைகள் சந்திர மண்டலத்தை முட்டியதை.

*195-2. கோ - இறைவன்.

*195-3. அது: பகுதிப்பொருள் விகுதி.

*195-4. கோளி - ஆலமரம்.

*196-1. நோக்கினன் - நோக்கி.

*196-2. வினவஎன்றே - வினாவி அறிதற்கு என்றே.

*196-3. அரவினுக்கு இறைவன் - ஆதிசேடன்.

*197-1. உந்தியில் - வயிற்றில்.

*197-2. ஓங்கல் - உயர்ந்த.

*197-3. வாள் - வாட்படை.

*197-4. ஓங்கல் கெழும் ஒள்வாள் வந்துறையினில் புகுவதென்ன - உதயகிரியில் உதித்து விளங்கிய சூரியன் சென்று கடலுள் புகுந்தாற்போல எனவும் பொருள்கொள்ளலாம்.

*198-1. சத்தி உரை - தேவியின் சாபமொழி.

*198-2. ஆதி - சிவன்.

*198-3. வித்தக முதற்புதல்வன் - ஞானவடிவினனாகிய விநாயகன்.

*199. ஐங்கரன் - விநாயகன்.

*200-1. போதகம் - இளமை.

*200-2. புகர் - புள்ளி.

*204-1. கிடைத்துழி - அடைந்தபோது.

*204-2. குழைஇணை - இரு காது.

*206. ஓங்கல் - இமயமலை.

*207-1. ஏதம் - துன்பம்.

*207-2. மோதகாதிகள் - மாஒதகம் முதலிய பொருள்கள்.

*208. துஞ்சுவித்து - இறக்கச்செய்து.

*210. முன்னவன் - விநாயகப் பெருமான்.

*211. அசலன் - பூதகணங்களில் ஒருவன்.

*213. ஏமரு - மகிழ்வுற்ற.

*214-1. துடி - உடுக்கை.

*214-2. தோம் இல் - குற்றமில்லாத.

*214-3. தண்ணுமை - மத்தளம்.

*214-4. இரலை, ஊதுகொம்பு, சல்லரி, கரடிகை, கணையம், சல்லிகை, காகளம், குடமுழவு - இவகள் வாத்திய வகைகள்.

*216. கடவுள்வில் - இந்திரவில்.

*218-1. வேயினர் - ஒற்றர்.

*218-2. சேய் - செவ்விய.

*219. சில்லிகொள் - தகடுகள் பதித்த.

*223. தியக்கம் - கலக்கம்.

*224-1. குறள் - குறுகிய.

*224-2. விசயம் - வெற்றி.

*227-1. அரம்தெறு - அரத்தால் கூராக்கிய.

*227-2 ஆகம் - உடல்.

*228. கிம்புரி - பூண்.

*230. பணை - பருமை.

*231. கடவுதி - செலுத்துவாயாக.

*232-1. வலவையோன் - சாரதி.

*232-2. கிஞ்சுகம் - செந்நிறம்.

*234-1. நுந்தை - உனது தந்தை.

*234-2. இறையது - சிறிதும்.

*236-1. ஊன் - மாமிசம்.

*236-2. படை - ஆயுதம்.

*239-1. நிரந்த - வரிசையான.

*239-2. எந்தை - சிவன்.

*239-3. அரந்தை - துன்பம்.

*241-1. பொன் - அழகு.

*241-2. எழு - ஓர் ஆயுதம்.

*241-3. முரண் - வலிமை.

*243-1. கண்டகன் - கொடியன்; கயமுகன்.

*243-2. கையறவு - துன்பம்.

*244. பாசம் - கயிறு.

*245. அட்டது - அழித்தது.

*247-1. எந்தை - எந்தையாகிய விநாயகர்.

*247-2. தன் திருக்கோட்டில் ஒன்று - தனது கொம்புகளில் ஒன்றான வலது கொம்பை.

*248. கரத்தில் - வலது கரத்தில்.

*250. செய்யகாடு - செங்காடு; இது தற்போது திருச்செங்காட்டாங்குடி என வழங்குகிறது.

*251-1. தொல்லைமெய் - யானை வடிவு.

*251-2. ஒரீஇ - நீங்கி.

*251-3. ஆகு - பெருச்சாளி.

*252. பிடரி - முதுகு.

*253-1. இற்றனன் - இறந்தனன்.

*253-2. கலிங்கம் - ஆடை.

*254-1. கலாபம் - தோகை.

*254-2. மஞ்ஞை - மயில்.

*257. எகினம் அன்னம்.

*258-1. ஓதிமம் - அன்னம்.

*258-2. வெள்ளைத் தந்தியன் - இந்திரன்.

*259. அரவென - ஹரஹர என்ற ஒலியுடன்.

*260-1. மந்திரி - இங்குச் சுக்கிரன்.

*260-2. பதியை - மங்கதபுரத்தை.

*260-3. செல்லல் - வருத்தம்.

*261-1. சாரல் - மலை அடிவாரம்.

*261-2. தபனன் - சூரியன்.

*261-3. சுருங்கை - சிறு துவாரம்.

*261-4. சேமம் - காவல்.

*261-5. புழையுள் - மரப்பொந்தில்.

*262. வானவர் பகைஞன் - அசுரேந்திரன்.

*264. கணபதீச்சரம் - இது திருச்செங்காட்டாங்குடியில் உள்ள சிவாலயத்தின் பெயர்.previous padalam   14 - கயமுகன் உற்பத்திப் படலம்   next padalamKayamugan uRppaththip padalam

previous kandam   6 - தக்ஷ காண்டம்   next kandam6 - dhaksha kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]