Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   6 - தக்ஷ காண்டம்   next kandam6 - dhaksha kANdam

previous padalam   24 - வள்ளியம்மை திருமணப் படலம்   next padalamVaLLiammai thirumaNap padalam

Ms Revathi Sankaran (8.21mb)
(1 - 70)



Ms Revathi Sankaran (7.73mb)
(71 - 140)



Ms Revathi Sankaran (8.19mb)
(141 - 210)



Ms Revathi Sankaran (6.53mb)
(211 - 267)




(வெள்ளியங் கிரியி)

வெள்ளியங் கிரியி னோர்சார் விளங்கிய கந்த வெற்பின்
     நள்ளுறு நகரந் தன்னில் நங்கையோ டினிது மேவும்
          அள்ளிலை வேற்கை நம்பி அம்புவி எயினர் போற்றும்
               வள்ளியை வதுவை செய்த மரபினை வழாது சொல்வாம். ......    1

வேறு

(அயன்ப டைத்திடும்)

அயன்ப டைத்திடும் அண்டத்துக் காவியாய்ப்
     பயன்ப டைத்த பழம்பதி என்பரால்
          நயன்ப டைத்திடு நற்றொண்டை நாட்டினுள்
               வியன்ப டைத்து விளங்குமேற் பாடியே. ......    2

(ஆய தொல்லை அணி)

ஆய தொல்லை அணிநகர் ஞாங்கரின்
     மீயு யர்ந்ததொர் வெற்புநிற் கின்றதால்
          பாய தெண்கடல் பாரள விட்டிடு
               மாய வன்தன் வடிவென நீண்டதே. ......    3

(அரவுந் திங்களும்)

அரவுந் திங்களும் ஆறுமெல் லாரமுங்
     குரவுங் கொன்றையுங் கூவிள மும்மிசை
          விரவுந் தன்மையின் வெற்புவிண் ணோரெலாம்
               பரவுங் கண்ணுதற் பண்ணவன் போன்றதால். ......    4

(வாலி தாகிய வான்)

வாலி தாகிய வான்அரு வித்திரள்
     நீல மேக நிரையொடு தாழ்தலில்
          தோலு நூலுந் துயல்வரு மார்புடை
               நாலு மாமுகன் போலுமந் நாகமே. ......    5

(குமர வேள்குற மங்)

குமர வேள்குற மங்கையொ டிவ்விடை
     அமரு மாலது காண்பனென் றாசையால்
          தமர வானதி தானணு குற்றிட
               நிமிரு கின்றது நீள்கிரி அன்னதே. ......    6

வேறு

(கள்ளிறைத் திடுபூ)

கள்ளிறைத் திடுபூந் தண்டார்க் கடம்பணி காளை பன்னாட்
     பிள்ளைமைத் தொழின்மேற் கொண்டு பெட்புடன் ஒழுகும் வண்ணம்
          வள்ளியைத் தன்பால் வைத்து வள்ளிவெற் பென்னு நாமம்
               உள்ளவக் கிரியின் மேன்மை உரைத்திடும் அளவிற் றாமோ. ......    7

(செய்யவெண் குன்றி)

செய்யவெண் குன்றி வித்துஞ் சீர்திகழ் கழைவீழ் முத்தும்
     பையர வினங்கள் ஈன்ற பருமணித் தொகையும் ஈண்டிச்
          சையம தெங்குஞ் சேர்தல் தாரகா கணங்க ளெல்லாம்
               வெய்யவன் அழற்காற் றாது வீழ்ந்தென விளங்கு கின்ற. ......    8

(கானுறு தளவம்)

கானுறு தளவம் பூத்த காட்சியால் கழைக ளெல்லாந்
     தூநகை முத்த மீன்ற தோற்றத்தால் பொதும்பர் தன்னில்
          தேனமர் தொடையல் தூங்குஞ் செய்கையாற் சிலம்பின் சாரன்
               மீனமும் மதியும் பூத்த விண்ணென விளங்கிற் றம்மா. ......    9

(கூட்டளி முரலும்)

கூட்டளி முரலும் நீலக் குண்டுநீர்ச் சுனைகள் யாண்டுங்
     காட்டிய பிறங்கல் யாருங் காணொணா வள்ளல் ஈண்டே
          வேட்டுவர் சிறுமிக் காக மேவுதல் காண்ப னென்னா
               நாட்டமெய்ம் முழுதும் பெற்று நண்ணிய தன்மை போலாம். ......    10

(விண்ணுயர் பிறங்கல்)

விண்ணுயர் பிறங்கல் மீது விரிகின்ற சுனைகள் மிக்குத்
     துண்ணென விளங்கும் பெற்றி சூரியன் முதலோர் காண
          மண்ணெனும் மடந்தை ஆங்கோர் மதலையில் வரம்பி லாத
               கண்ணடி நிரைத்து வைத்த காட்சிபோன் றிருந்த மாதோ. ......    11

(ஒள்ளிணர்க் கணி)

ஒள்ளிணர்க் கணியின் கொம்பர் உலவியே அசோகில் வாவி
     வெள்ளிலிற் பாய்ந்து மந்திவியன்கடு வுறைப்ப மீள்வ
          வள்ளியர் இடத்துச் சென்றோர் மானவப் பண்பி லோர்பாற்
               பொள்ளென இரப்பான் புக்குப் புலம்பொடு மீண்டவா போல். ......    12

(தொகையுறு குலை)

தொகையுறு குலைச்செங் காந்தள் துடுப்பெடுத் தமருஞ் சூழ்விற்
     சிகையுறு தோகை மஞ்ஞை செறிந்துலா வுற்ற தன்மை
          அகையுறு கழைகொன் றுண்ட வாரழல் சிதற ஆங்கே
               புகையுறு கின்ற தன்மை போலவே பொலிந்த தம்மா. ......    13

(கண்டுதங் கேளிர்)

கண்டுதங் கேளிர் தம்மைக் கைகொடு புல்லி இல்லங்
     கொண்டுசெல் பான்மை உன்னி விலக்குறு கொள்கைத் தென்ன
          விண்டொடர் செலவிற் றாகும் வெஞ்சுடர்க் கதிரை வெற்பில்
               தண்டலை கணியின் கொம்பால் தழீஇக்கொடு தடுக்க லுற்ற. ......    14

(நிறையழி கடமால்)

நிறையழி கடமால் யானை நெடுவரைச் சிகரம் பாய்ந்து
     விறலொடு முழங்க ஆங்கோர் விடரளை மடங்கல் கேளாக்
          கறுவுகொள் சினத்தி னார்க்குங் கம்பலை கனகன் எற்றுந்
               தறியிடை இருந்த சீயத் தழங்குர லென்ன லாமால். ......    15

(பறையடிப் பதனாற்)

பறையடிப் பதனாற் சேணிற் பயன்விரிப் பார்போல் மாறாய்
     அறையடிப் பாந்த ளார்ப்ப அகலிரு விசும்பே றார்ப்பக்
          கறையடித் தொகுதி யார்ப்பக் கடுந்திறல் அரிமா னார்ப்பச்
               சிறையடிக் கொண்டு சிம்பு ளார்த்திடத் திங்கள் செல்லும். ......    16

(இன்னபல் வளமை)

இன்னபல் வளமை சான்ற கிரிதனில் எயினர் ஈண்டி
     மன்னிய தாங்கோர் சீறூர் வதனமா றுடைய வள்ளல்
          பின்னரே தன்பால் மேவப் பெருந்தவந் தன்னை யாற்றிப்
               பொன்னகர் இருந்த வாபோல் புன்மையற் றிருந்த தம்மா. ......    17

(ஆயதோர் குறிச்சி)

ஆயதோர் குறிச்சி தன்னில் அமர்தருங் கிராதர்க் கெல்லாம்
     நாயகன் நுகம்பூண் டுள்ளோன் நாமவேல் நம்பி யென்போன்
          மாயிருந் தவமுன் செய்தோன் மைந்தர்கள் சிலரைத் தந்து
               சேயிழை மகட்பே றுன்னித் தெய்வதம் பராவி யுற்றான். ......    18

(அவ்வரை மருங்கு)

அவ்வரை மருங்கு தன்னில் ஐம்புலன் ஒருங்கு செல்லச்
     செவ்விதின் நடாத்துந் தொன்மைச் சிவமுனி என்னும் மேலோன்
          எவ்வெவர் தமக்கும் எய்தா ஈசனை யுளத்துட் கொண்டு
               சைவநல் விரதம் பூண்டு தவம்புரிந் திருத்த லுற்றான். ......    19

(சிறப்புறு பெரிய)

சிறப்புறு பெரிய பைங்கட் சிறுதலைச் சிலைக்கும் புல்வாய்
     நெறிப்பொடு நிமிர்வுற் றான்ற நெடுஞ்செவிக் குறிய தோகைப்
          பொறிப்படு புனித யாக்கைப் புன்மயிர்க் குளப்பு மென்கால்
               மறிப்பிணை யொன்று கண்டோர் மருளவந் துலாவிற் றங்கண். ......    20

(போர்த்தொழில் கட)

போர்த்தொழில் கடந்த வைவேற் புங்கவன் அருளால் வந்த
     சீர்த்திடு நவ்வி தன்னைச் சிவமுனி என்னுந் தூயோன்
          பார்த்தலும் இளைமைச் செவ்வி படைத்திடும் பிறனிற் கண்ட
               தூர்த்தனின் மையல் எய்திக் காமத்தால் சுழல லுற்றான். ......    21

(ஏமத்தின் வடிவஞ்)

ஏமத்தின் வடிவஞ் சான்ற இலங்கெழில் பிணையின் மாட்டே
     காமத்தின் வேட்கை வைத்துக் கவலையாய் அவல மெய்தி
          மாமத்தம் அளைபுக் கென்ன மனக்கருத் துடைந்து வேறாய்
               ஊமத்தம் பயன்துய்த் தார்போல் உன்மத்த னாகி உற்றான். ......    22

(படவர வனைய அல்கு)

படவர வனைய அல்குற் பைந்தொடி நல்லார் தம்பாற்
     கடவுளர் புணர்ச்சி யென்னக் காட்சியின் இன்பந் துய்த்து
          விடலரும் ஆர்வ நீங்கி மெய்யுணர் வெய்தப் பெற்றுத்
               திடமொடு முந்து போலச் சிவமுனி இருந்து நோற்றான். ......    23

(நற்றவன் காட்சி)

நற்றவன் காட்சி தன்னால் நவ்விபால் கருப்பஞ் சேரத்
     தெற்றென அறிதல் தேற்றிச் செங்கண்மால் உதவும் பாவை
          மற்றதன் இடத்தில் புக்காள் வரைபக வெறிந்த வைவேற்
               கொற்றவன் முன்னஞ் சொற்ற குறிவழிப் படரும் நீராள். ......    24

வேறு

(மானி டத்தின்)

மானி டத்தின் வருமைந்தன் முந்துநீ
     மானி டத்தின் வருகென்ற வாய்மையான்
          மானி டத்தின் வயினடைந் தாள்மரு
               மானி டத்தின் மானாகுமம் மான்மகள். ......    25

(அனைய காலையில் ஆயிடை)

அனைய காலையில் ஆயிடை நீங்கியே
     புனித நவ்வி புனமெங் கணுமுலாய்ச்
          சுனையின் நீருண்டொர் சூழலின் வைகியே
               இனிய மால்வரை ஏறி நடந்ததே. ......    26

(நடந்த நவ்வி நல)

நடந்த நவ்வி நலத்தகு வெற்பினில்
     இடந்தொ றுஞ்செறி ஏனற் புனமெலாங்
          கடந்து போயது காவல்கொள் வேட்டுவர்
               மடந்தை மார்கள் வரிவிழி யென்னவே. ......    27

(பிள்ளை ஈற்றுப்)

பிள்ளை ஈற்றுப் பிணாஎயின் சேரியின்
     உள்ள மாதர் உளித்தலைக் கோல்கொடு
          வள்ளி கீழ்புகு மாமுதல் வௌவியே
               பொள்ளல் செய்திடு புன்புலம் புக்கதே. ......    28

(தோன்ற லுக்குத்)

தோன்ற லுக்குத் துணைவியைத் தொல்பிணை
     தான்த ரித்துத் தளர்ந்து தளர்ந்துபோய்
          மான்ற ரற்றி உயிர்த்து வயிறுநொந்
               தீன்று வள்ளி இருங்குழி இட்டதால். ......    29

(குழைகு றுந்தொடி)

குழைகு றுந்தொடி கோல்வளை யேமுதற்
     பழைய பூண்கள் பலவுடன் தாங்குறாத்
          தழைபு னைந்து தனதுணர் வின்றியே
               உழைவ யின்வந்து தித்தனள் ஒப்பிலாள். ......    30

(கோற்றொ டிக்கை)

கோற்றொ டிக்கைக் குழவியை நோக்கியே
     ஈற்று மான்பிணை எம்மினத் தன்றிது
          வேற்று ருக்கொடு மேவிய தீண்டெனா
               ஆற்ற வேமருண் டஞ்சிய கன்றதே. ......    31

வேறு

(அன்னை யெனஈ)

அன்னை யெனஈன்ற அரிணமருண் டோடியபின்
     தன்னிணை யிலாத தலைவி தனித்தனளாய்க்
          கின்னரநல் யாழொலியோ கேடில்சீர்ப் பாரதிதன்
               இன்னிசையோ என்றயிர்க்க ஏங்கிஅழு திட்டனளே. ......    32

(அந்த வளவைதனில்)

அந்த வளவைதனில் ஆறிரண்டு மொய்ம்புடைய
     எந்தை யருளுய்ப்ப எயினர்குலக் கொற்றவனும்
          பைந்தொடி நல்லாளும் பரிசனங்கள் பாங்கெய்தச்
               செந்தினையின் பைங்கூழ் செறிபுனத்துப் புக்கனரே. ......    33

(கொல்லை புகுந்த)

கொல்லை புகுந்த கொடிச்சியொடு கானவர்கோன்
     அல்லை நிகர்குழலாள் அம்மென் குரல்கேளா
          எல்லை யதனில் எழுமொலியங் கேதென்னா
               வல்லை தனில்அவ் வறும்புனத்தில் வந்தனனே. ......    34

(வந்தான் முதலெடு)

வந்தான் முதலெடுத்த வள்ளிக்குழி யில்வைகும்
     நந்தா விளக்கனைய நங்கைதனை நோக்கி
          இந்தா இஃதோர் இளங்குழவி என்றெடுத்துச்
               சிந்தா குலந்தீரத் தேவிகையில் ஈந்தனனே. ......    35

(ஈந்தான் சிலைநில)

ஈந்தான் சிலைநிலத்தில் இட்டான் எழுந்தோங்கிப்
     பாய்ந்தான் தெழித்தான் உவகைப் படுகடலில்
          தோய்ந்தான் முறுவலித்தான் தோள்புடைத்தான் தொல்பிறப்பின்
               நாந்தாம் இயற்றுதவம் நன்றாங்கொல் என்றுரைத்தான். ......    36

(கொற்றக் கொடிச்சி)

கொற்றக் கொடிச்சி குழவியைத்தன் கைவாங்கி
     மற்றப் பொழுதில் வயாவும் வருத்தமுமாய்ப்
          பெற்றுக்கொள் வாள்போலப் பேணிப் பெரிதுமகிழ்
               வுற்றுக் கனதனத்தில் ஊறும்அமிர் தூட்டினளால். ......    37

(வென்றிச் சிலை)

வென்றிச் சிலையெடுத்து மேலைப் புனமகன்று
     குன்றக் குறவன் குதலைவாய்க் கொம்பினுடன்
          மன்றற் றுணைவிதனை வல்லைகொடு சீறூரில்
               சென்றக் கணத்தில் சிறுகுடிலில் புக்கனனே. ......    38

(அண்டர் அமுதம்)

அண்டர் அமுதம் அனையமகட் பெற்றிடலான்
     மண்டுபெரு மகிழ்வாய் மாத்தாட் கொழுவிடையைக்
          கெண்டி யொருதன் கிளையோ டினிதருந்தித்
               தொண்டகம தார்ப்பக் குரவைமுறை தூங்குவித்தான். ......    39

(காலை யதற்பின்)

காலை யதற்பின் கடவுட் பலிசெலுத்தி
     வாலரிசி மஞ்சள் மலர்சிந்தி மறியறுத்துக்
          கோல நெடுவேற் குமரன்விழாக் கொண்டாடி
               வேலனை முற்கொண்டு வெறியாட்டு நேர்வித்தான். ......    40

(இன்ன பலவும் இய)

இன்ன பலவும் இயற்றி இருங்குறவர்
     மன்னன் மனைவி வடமீன் தனைஅனையாள்
          கன்னி மடமகட்குக் காப்பிட்டுக் கானமயிற்
               பொன்னஞ் சிறைபடுத்த பூந்தொட்டில் ஏற்றினளே. ......    41

(நாத்தளர்ந்து சோர்)

நாத்தளர்ந்து சோர்ந்து நடுக்கமுற்றுப் பற்கழன்று
     மூத்து நரைமுதிர்ந்த மூதாளர் வந்தீண்டிப்
          பாத்தி படுவள்ளிப் படுகுழியில் வந்திடலால்
               வாய்த்த இவள்நாமம் வள்ளியெனக் கூறினரே. ......    42

(தம்மரபி லுள்ள தம)

தம்மரபி லுள்ள தமரா கியமுதுவர்
     இம்முறையால் ஆராய்ந் தியற்பேர் புனைந்துரைப்பக்
          கொம்மை முலையாள் கொடிச்சியொடு குன்றவர்கோன்
               அம்மனையை நம்மகள்என் றன்பால் வளர்த்தனனே. ......    43

(முல்லைப் புறவ முத)

முல்லைப் புறவ முதல்வன் திருமடந்தை
     கொல்லைக் குறிஞ்சிக் குறவன் மகளாகிச்
          சில்லைப் புன்கூரைச் சிறுகுடிலில் சேர்ந்தனளால்
               தொல்லைத் தனித்தந்தை தோன்றியமர் வுற்றதுபோல். ......    44

(மூவா முகுந்தன் முத)

மூவா முகுந்தன் முதனாட் பெறுமமுதைத்
     தேவாதி தேவன் திருமைந்தன் தேவிதனை
          மாவாழ் சுரத்தில்தம் மாமகளாப் போற்றுகையால்
               ஆவா குறவர்தவ மார்அளக்க வல்லாரே. ......    45

(பொற்றொட்டில் விட்)

பொற்றொட்டில் விட்டுப் புவியின் மிசைதவழக்
     கற்றுத் தளர்நடையுங் காட்டிக் கணிநீழல்
          முற்றத் திடையுலவி முறத்தின் மணிகொழித்துச்
               சிற்றில் புனைந்து சிறுசோறட் டாடினளே. ......    46

(முந்தை யுணர்வு முழு)

முந்தை யுணர்வு முழுதுமின்றி இம்முறையால்
     புந்திமகிழ் வண்டல் புரிந்துவளர் செவ்விக்கண்
          எந்தைபுயம் புல்லுவதற் கிப்பருவம் ஏற்குமெனப்
               பைந்தொடியி னுக்கியாண்டு பன்னிரண்டு சென்றனவே. ......    47

(ஆன பருவங்கண் டம்)

ஆன பருவங்கண் டம்மனையும் அம்மனையில்
     கோனும் ஒருதங் குலத்தின் முறைநோக்கி
          மானின் வயிற்றுதித்த வள்ளிதனைப் பைம்புனத்தில்
               ஏனல் விளையுள் இனிதளிக்க வைத்தனரே. ......    48

(காட்டில் எளிதுற்ற)

காட்டில் எளிதுற்ற கடவுள்மணி யைக்கொணர்ந்து
     கூட்டி லிருளோட்டக் குருகுய்த்த வாறன்றோ
          தீட்டுசுடர் வேற்குமரன் தேவியாந் தெள்ளமுதைப்
               பூட்டுசிலைக் கையார் புனங்காப்ப வைத்ததுவே. ......    49

(சுத்த மெழுகிட்டுச்)

சுத்த மெழுகிட்டுச் சுடர்கொளுவிப் பன்மணியின்
     பத்தி குயின்றிட்ட பழுப்பேணி யிற்பாதம்
          வைத்து மகிழ்ந்தேறி மகடூஉத் தினைப்புனத்தில்
               எத்திசையுங் காணும் இதணத் திருந்தனளே. ......    50

(கிள்ளையொடு கேக)

கிள்ளையொடு கேகயமே அன்றிப் பிறநிலத்தில்
     உள்ள பறவை ஒருசார் விலங்கினொடும்
          வள்ளி மலைப்புனத்தில் வந்துற் றனமாவும்
               புள்ளு மயங்கல் பொருள்நூற் றுணிபன்றோ. ......    51

(கட்டு வரிவில் கரு)

கட்டு வரிவில் கருங்குறவர் கைத்தொழிலால்
     இட்ட இதணத் திருந்தெம் பெருமாட்டி
          தட்டை குளிர்தழலைத் தாங்கித் தினைப்புனத்தைக்
               கிட்டலுறா வண்ணங் கிளிமுதற்புள் ளோட்டினளே. ......    52

(எய்யா னவையும் இர)

எய்யா னவையும் இரலைமரை மான்பிறவுங்
     கொய்யாத ஏனற் குரல்கவர்ந்து கொள்ளாமல்
          மையார் விழியாள் மணிக்கற் கவணிட்டுக்
               கையால் எடுத்துக் கடிதோச்சி வீசினளே. ......    53

(பூவைகாள் செங்கட்)

பூவைகாள் செங்கட் புறவங்காள் ஆலோலம்
     தூவிமா மஞ்ஞைகாள் சொற்கிளிகாள் ஆலோலம்
          கூவல் சேர்வுற்ற குயிலினங்காள் ஆலோலம்
               சேவல்காள் ஆலோலம் என்றாள் திருந்திழையாள். ......    54

(இந்த முறையில்)

இந்த முறையில் இவள்ஏனற் புனங்காப்ப
     அந்த வளவில் அவளுக் கருள்புரியக்
          கந்த வரைநீங்கிக் கதிர்வே லவன்தனியே
               வந்து தணிகை மலையிடத்து வைகினனே. ......    55

வேறு

(சூரல் பம்பிய தணி)

சூரல் பம்பிய தணிகைமால் வரைதனில் சுடர்வேல்
     வீரன் வீற்றிருந் திடுதலும் வேலையங் கதனில்
          வாரி யும்வடித் துந்தியும் வரிசையால் உறழ்ந்துஞ்
               சீரி யாழ்வல்ல நாரதன் புவிதனிற் சேர்ந்தான். ......    56

(வளவி தாகிய வள்ளி)

வளவி தாகிய வள்ளிமால் வரைதனில் வந்து
     விளையு ளாகிய தினைப்புனம் போற்றிவீற் றிருந்த
          புளினர் பாவையைக் கண்டுகை தொழுதுபுந் தியினில்
               அளவி லாததோர் அற்புதத் துடனிவை அறைவான். ......    57

(அன்னை யாகியிங்)

அன்னை யாகியிங் கிருப்பவர் பேரழ கனைத்தும்
     உன்னி யான்புனைந் துரைக்கினும் உலவுமோ உலவா
          என்னை யாளுடை அறுமுகன் துணைவியாய் இருப்ப
               முன்னர் மாதவம் புரிந்தவர் இவரென மொழிந்தான். ......    58

வேறு

(கார்த்தி னைப்புனங்)

கார்த்தி னைப்புனங் காவற் கன்னியைப்
     பார்த்து மற்றிவை பகர்ந்து போற்றிப்போய்
          மூர்த்த மொன்றினில் மூன்று பூமலர்
               தீர்த்தி கைச்சுனைச் சிகரம் நண்ணினான். ......    59

(தணிகை யங்கிரி)

தணிகை யங்கிரி தன்னில் வைகிய
     இணையில் கந்தனை எய்தி அன்னவன்
          துணைமென் சீறடி தொழுது பன்முறை
               பணிதல் செய்திவை பகர்தல் மேயினான். ......    60

(மோன நற்றவ முனி)

மோன நற்றவ முனிவன் தன்மகள்
     மானின் உற்றுளாள் வள்ளி வெற்பினில்
          கான வக்குலக் கன்னி யாகியே
               ஏன லைப்புரந் திதணில் மேயினாள். ......    61

(ஐய னேயவள் ஆக)

ஐய னேயவள் ஆகம் நல்லெழில்
     செய்ய பங்கயத் திருவிற் கும்மிலை
          பொய்ய தன்றிது போந்து காண்டிநீ
               கைய னேன்இவண் கண்டு வந்தனன். ......    62

(தாய தாகுமத் தைய)

தாய தாகுமத் தையல் முன்னரே
     மாய வன்மகள் மற்றுன் மொய்ம்பினைத்
          தோய நோற்றனள் சொற்ற எல்லையில்
               போய வட்கருள் புரிதி யால்என்றான். ......    63

(என்ற வேலையில் எஃக)

என்ற வேலையில் எஃக வேலினான்
     நன்று நன்றிது நவையில் காட்சியோய்
          சென்றி நீயெனச் செப்பித் தூண்டியே
               கன்று காமநோய்க் கவலை யுள்வைத்தான். ......    64

(எய்யும் வார்சிலை)

எய்யும் வார்சிலை எயினர் மாதராள்
     உய்யு மாறுதன் உருவம் நீத்தெழீஇச்
          செய்ய பேரருள் செய்து சேவகன்
               மையல் மானுட வடிவந் தாங்கினான். ......    65

(காலிற் கட்டிய கழ)

காலிற் கட்டிய கழலன் கச்சினன்
     மாலைத் தோளினன் வரிவில் வாளியன்
          நீலக் குஞ்சியன் நெடியன் வேட்டுவக்
               கோலத் தைக்கொடு குமரன் தோன்றினான். ......    66

(கிள்ளை யன்னதோர்)

கிள்ளை யன்னதோர் கிளவி மங்கைமாட்
     டுள்ள மோகந்தன் னுள்ள கந்தனைத்
          தள்ள எம்பிரான் தணிகை வெற்பொரீஇ
               வள்ளி யங்கிரி வயின்வந் தெய்தினான். ......    67

வேறு

(மண்டலம் புகழுந்)

மண்டலம் புகழுந் தொல்சீர் வள்ளியஞ் சிலம்பின் மேல்போய்ப்
     பிண்டியந் தினையின் பைங்கூழ்ப் பெரும்புனத் திறைவி தன்னைக்
          கண்டனன் குமரன் அம்மா கருதிய எல்லை தன்னில்
               பண்டொரு புடையில் வைத்த பழம்பொருள் கிடைத்த வாபோல். ......    68

(பூமஞ்சார் மின்கொல்)

பூமஞ்சார் மின்கொல் என்னப் பொருப்பினில் ஏனல் காக்குங்
     காமஞ்சால் இளைமை யாளைக் கடம்பமர் காளை நோக்கித்
          தூமஞ்சால் விரகச் செந்தீச் சுட்டிடச் சோர்ந்து வெம்பி
               ஏமஞ்சால் கின்ற நெஞ்சன் இதணினுக் கணியன் சென்றான். ......    69

(நாந்தக மனைய)

நாந்தக மனைய உண்கண் நங்கைகேள் ஞாலந் தன்னில்
     ஏந்திழை யார்கட் கெல்லாம் இறைவியாய் இருக்கும் நின்னைப்
          பூந்தினை காக்க வைத்துப் போயினார் புளின ரானோர்க்
               காய்ந்திடு முணர்ச்சியொன்றும் அயன்படைத்தி லன்கொல் என்றான். ......    70

(வாரிருங் கூந்தல்)

வாரிருங் கூந்தல் நல்லாய் மதிதளர் வேனுக் குன்றன்
     பேரினை உரைத்தி மற்றுன் பேரினை உரையாய் என்னின்
          ஊரினை உரைத்தி ஊரும் உரைத்திட முடியா தென்னில்
               சீரிய நின்சீ றூர்க்குச் செல்வழி உரைத்தி யென்றான். ......    71

(மொழியொன்று புகலா)

மொழியொன்று புகலா யாயின் முறுவலும் புரியா யாயின்
     விழியொன்று நோக்கா யாயின் விரகமிக் குழல்வேன் உய்யும்
          வழியொன்று காட்டா யாயின் மனமுஞ்சற் றுருகா யாயின்
               பழியொன்று நின்பாற் சூழும் பராமுகந் தவிர்தி என்றான். ......    72

(உலைப்படு மெழுக)

உலைப்படு மெழுக தென்ன உருகியே ஒருத்தி காதல்
     வலைப்படு கின்றான் போல வருந்தியே இரங்கா நின்றான்
          கலைப்படு மதியப் புத்தேள் கலங்கலம் புனலிற் றோன்றி
               அலைப்படு தன்மைத் தன்றோ அறுமுகன் ஆடல் எல்லாம். ......    73

(செய்யவன் குமரி)

செய்யவன் குமரி முன்னந் திருநெடுங் குமரன் நின்று
     மையலின் மிகுதி காட்டி மற்றிவை பகரும் எல்லை
          எய்யுடன் உளியம் வேழம் இரிதர விரலை யூத
               ஒய்யென எயினர் சூழ ஒருதனித் தாதை வந்தான். ......    74

(ஆங்கது காலை தன்னின் அடி)

ஆங்கது காலை தன்னின் அடிமுதல் மறைக ளாக
     ஓங்கிய நடுவண் எல்லாம் உயர்சிவ நூல தாகப்
          பாங்கமர் கவடு முற்றும் பல்கலை யாகத் தானோர்
               வேங்கையின் உருவ மாகி வேற்படை வீரன் நின்றான். ......    75

(கானவர் முதல்வன்)

கானவர் முதல்வன் ஆங்கே கதுமென வந்து தங்கள்
     மானினி தன்னைக் கண்டு வள்ளியங் கிழங்கு மாவுந்
          தேனொடு கடமான் பாலுந் திற்றிகள் பிறவு நல்கி
               ஏனலம் புனத்தில் நின்ற யாணர்வேங் கையினைக் கண்டான். ......    76

(ஆங்கவன் அயலாய்)

ஆங்கவன் அயலாய் நின்ற அடுதொழில் மறவ ரானோர்
     வேங்கையின் நிலைமை நோக்கி விம்மித நீர ராகி
          ஈங்கிது முன்னுற் றன்றால் இத்துணை புகுந்த வாற்றால்
               தீங்குவந் திடுதல் திண்ணம் என்றனர் வெகுளித் தீயார். ......    77

(எறித்தரு கதிரை)

எறித்தரு கதிரை மாற்றும் இருநிழற் கணியை இன்னே
     முறித்திடு வீர்க ளென்பார் முதலொடு வீழச் சூழப்
          பறித்திடு வீர்க ளென்பார் பராரையைக் கணிச்சி தன்னால்
               தறித்திடு வீர்க ளென்பார் தாழ்க்கலீர் சற்று மென்பார். ......    78

(இங்கிவை உரைக்கு)

இங்கிவை உரைக்குந் தீயோர் யாரையும் விலக்கி மன்னன்
     நங்கைதன் வதனம் பாரா நறுமலர் வேங்கை யொன்று
          செங்குரல் ஏனற் பைங்கூழ் செறிதரு புனத்தின் மாடே
               தங்கிய தென்னை கொல்லோ சாற்றுதி சரத மென்றான். ......    79

(தந்தையாங் குரைத்த)

தந்தையாங் குரைத்தல் கேளாத் தையலும் வெருவி ஈது
     வாந்தவா றுணர்கி லேன்யான் மாயம்போல் தோன்றிற் றையா
          முந்தைநாள் இல்லா தொன்று புதுவதாய் முளைத்த தென்னாச்
               சிந்தைமேல் நடுக்க மெய்தி இருந்தனன் செயலி தென்றாள். ......    80

வேறு

(என்றிவை சொற்ற)

என்றிவை சொற்றபின் ஏந்திழை அஞ்சேல்
     நன்றிவண் வைகுதி நாண்மலர் வேங்கை
          இன்றுணை யாயிவண் எய்திய தென்னாக்
               குன்றுவன் வேடர் குழாத்தொடு போனான். ......    81

(போனது கண்டு புன)

போனது கண்டு புனத்திடை வேங்கை
     ஆனதொர் தன்மையை ஐயன் அகன்று
          கானவர் தம்மகள் காண்வகை தொல்லை
               மானுட நல்வடி வங்கொடு நின்றான். ......    82

வேறு

(தொல்லையின் உரு)

தொல்லையின் உருக்கொடு தோன்றி நின்றவேள்
     எல்லையில் மையலுற் றிரங்கு வானென
          அல்லிவர் கூந்தலாள் அருகு நிற்புறீஇ
               நல்லரு ளால்இவை நவிறல் மேயினான். ......    83

(கோங்கென வளர்)

கோங்கென வளர்முலைக் குறவர் பாவையே
     ஈங்குனை அடைந்தனன் எனக்கு நின்னிரு
          பூங்கழல் அல்லது புகலொன் றில்லையால்
               நீங்கலன் நீங்கலன் நின்னை என்றுமே. ......    84

(மாவியல் கருங்கணாய்)

மாவியல் கருங்கணாய் மற்று நின்றனைப்
     பாவியன் நீங்கியே படர வல்லனோ
          ஆவியை யகன்றுமெய் யறிவு கொண்டெழீஇப்
               போவது கொல்லிது புகல வேண்டுமே. ......    85

(மைதிகழ் கருங்க)

மைதிகழ் கருங்கணின் வலைப்பட் டேற்கருள்
     செய்திடல் அன்றியே சிறைக்க ணித்தனை
          உய்திறம் வேறெனக் குளகொல் ஈண்டுநின்
               கைதனில் இவ்வுயிர் காத்துக் கோடியால். ......    86

(கோடிவர் நெடுவரை)

கோடிவர் நெடுவரைக் குறவர் மாதுநீ
     ஆடிய சுனையதாய் அணியுஞ் சாந்தமாய்ச்
          சூடிய மலர்களாய்த் தோயப் பெற்றிலேன்
               வாடினன் இனிச்செயும் வண்ணம் யாவதே. ......    87

(புல்லிது புல்லிது புன)

புல்லிது புல்லிது புனத்தைக் காத்திடல்
     மெல்லியல் வருதியால் விண்ணின் பால்வரும்
          வல்லியர் யாவரும் வணங்கி வாழ்த்திடத்
               தொல்லியல் வழாவளந் துய்ப்ப நல்குவேன். ......    88

(என்றிவை பலபல)

என்றிவை பலபல இசைத்து நிற்றலுங்
     குன்றுவர் மடக்கொடி குமரன் சிந்தையில்
          ஒன்றிய கருத்தினை யுற்று நோக்கியே
               நன்றிவர் திறமென நாணிக் கூறுவாள். ......    89

(இழிகுல மாகிய எயி)

இழிகுல மாகிய எயினர் பாவைநான்
     முழுதுல கருள்புரி முதல்வர் நீரெனைத்
          தழுவுதல் உன்னியே தாழ்ச்சி செப்புதல்
               பழியது வேயலால் பான்மைத் தாகுமோ. ......    90

(இலைமுதிர் ஏன)

இலைமுதிர் ஏனல்காத் திருக்கும் பேதையான்
     உலகருள் இறைவர்நீர் உளம யங்கியென்
          கலவியை விரும்புதல் கடன தன்றரோ
               புலியது பசியுறில் புல்லுந் துய்க்குமோ. ......    91

வேறு

(என்றிவை பலப்பலவும் ஏந்)

என்றிவை பலப்பலவும் ஏந்திழை இயம்பா
     நின்றபொழு தத்தில்அவள் நெஞ்சம்வெருக் கொள்ள
          வென்றிகெழு தொண்டகம் வியன்துடி யியம்பக்
               குன்றிறைவன் வேட்டுவர் குழாத்தினொடும் வந்தான். ......    92

(வந்தபடி கண்டுமட)

வந்தபடி கண்டுமட மான்நடு நடுங்கிச்
     சிந்தைவெரு விக்கடவுள் செய்யமுக நோக்கி
          வெந்திறல்கொள் வேடுவர்கள் வெய்யர்இவண் நில்லா
               துய்ந்திட நினைந்துகடி தோடும்இனி யென்றாள். ......    93

(ஓடுமினி யென்றவள்)

ஓடுமினி யென்றவள் உரைத்தமொழி கேளா
     நீடுமகிழ் வெய்தியவண் நின்றகும ரேசன்
          நாடுபுகழ் சைவநெறி நற்றவ விருத்த
               வேடமது கொண்டுவரும் வேடரெதிர் சென்றான். ......    94

(சென்றுகிழ வோன்குற)

சென்றுகிழ வோன்குறவர் செம்மலெதிர் நண்ணி
     நின்றுபரி வோடுதிரு நீறுதனை நல்கி
          வன்றிறல் மிகுத்திடுக வாகைபெரி தாக
               இன்றியமை யாதவளன் எய்திடுக என்றான். ......    95

(பூதியினை யன்பொடு)

பூதியினை யன்பொடு புரிந்த குரவன்தன்
     பாதமலர் கைகொடு பணிந்துகுற மன்னன்
          மேதகுமிவ் வெற்பினில் விருத்தரென வந்தீர்
               ஓதிடுதிர் வேண்டியதை ஒல்லைதனில் என்றான். ......    96

(ஆண்தொழிலின் மேத)

ஆண்தொழிலின் மேதகைய அண்ணலிது கேண்மோ
     நீண்டதனி மூப்பகல நெஞ்சமருள் நீங்க
          ஈண்டுநும் வரைக்குமரி எய்தியினி தாட
               வேண்டிவரு கின்றனன் மெலிந்துகடி தென்றான். ......    97

வேறு

(நற்றவன் மொழியைக்)

நற்றவன் மொழியைக் கேளா நன்றுநீர் நவின்ற தீர்த்தம்
     நிற்றலு மாடி எங்கள் நேரிழை தமிய ளாகி
          உற்றனள் அவளுக் கெந்தை ஒருதனித் துணைய தாகி
               மற்றிவண் இருத்திர் என்ன அழகிதாம் மன்ன வென்றான். ......    98

(இனையதோர் பொழுதி)

இனையதோர் பொழுதில் தந்தை ஏந்திழை தன்பா லேகித்
     தினையொடு கிழங்கு மாவுந் தீங்கனி பிறவும் நல்கி
          அனையவள் துணைய தாக அருந்தவன் தன்னை வைத்து
               வனைகழல் எயின ரோடும் வல்லையின் மீண்டு போனான். ......    99

(போனது முதியோன்)

போனது முதியோன் கண்டு புனையிழை தன்னை நோக்கி
     நானினிச் செய்வ தென்கொல் நலிவது பசிநோ யென்னத்
          தேனொடு கனியும் மாவுஞ் செங்கையிற் கொடுப்பக் கொண்டு
               வேனிலும் முடுகிற் றுண்ணீர் விடாய்பெரி துடையேன் என்றான். ......    100

(செப்புறும் அனைய)

செப்புறும் அனைய மாற்றஞ் சேயிழைக் கிழத்தி கேளா
     இப்புற வரைக்கும் அப்பால் எழுவரை கடந்த தற்பின்
          உப்புற மிருந்த தெந்தாய் ஒருசுனை யாங்க ணேகி
               வெப்புற லின்றித் தெண்ணீர் மிசைந்துபின் வருதி ரென்றாள். ......    101

(பூட்டுவார் சிலைக்கை)

பூட்டுவார் சிலைக்கை வேடர் பூவையே புலர்ந்து தெண்ணீர்
     வேட்டனன் விருத்தன் வெற்பில் வியனெறி சிறிதுந் தேரேன்
          தாட்டுணை வருந்து மென்று தாழ்த்திடா தொல்லை யேகிக்
               காட்டுதி சுனைநீர் என்றான் அறுமுகங் கரந்த கள்வன். ......    102

(முருகன துரையை)

முருகன துரையை அந்த மொய்குழல் வினவி எந்தாய்
     வருகென அழைத்து முன்போய் வரையெலாங் கடந்து சென்று
          விரைகமழ் சுனைநீர் காட்ட வேனிலால் வெதும்பி னான்போல்
               பருகினன் பருகிப் பின்னர் இஃதொன்று பகர்த லுற்றான். ......    103

(ஆகத்தை வருத்து)

ஆகத்தை வருத்து கின்ற அரும்பசி அவித்தாய் தெண்ணீர்த்
     தாகத்தை அவித்தாய் இன்னுந் தவிர்ந்தில தளர்ச்சி மன்னோ
          மேகத்தை யனைய கூந்தல் மெல்லியல் வினையேன் கொண்ட
               மோகத்தைத் தணித்தி யாயின் முடிந்ததென் குறைய தென்றான். ......    104

வேறு

(ஈறில் முதியோன்)

ஈறில் முதியோன் இரங்கி இரந்துகுறை
     கூறி மதிமயங்கிக் கும்பிட்டு நின்றளவில்
          நாறு மலர்க்கூந்தல் நங்கை நகைத்துயிர்த்துச்
               சீறி நடுநடுங்கி இவ்வாறு செப்புகின்றாள். ......    105

(மேலா கியதவத்தோர்)

மேலா கியதவத்தோர் வேடந் தனைப்பூண்டிங்
     கேலா தனவே இயற்றினீர் யார்விழிக்கும்
          பாலாகித் தோன்றிப் பருகினார் ஆவிகொள்ளும்
               ஆலால நீர்மைத்தோ ஐயர் இயற்கையதே. ......    106

(கொய்தினைகள் காப்)

கொய்தினைகள் காப்பேனைக் கோதிலா மாதவத்தீர்
     மெய்தழுவ உன்னி விளம்பா தனவிளம்பிக்
          கைதொழுது நிற்றல் கடனன்று கானவரிச்
               செய்கை தனைஅறியின் தீதாய் முடிந்திடுமே. ......    107

(நத்துப் புரைமுடியீர்)

நத்துப் புரைமுடியீர் நல்லுணர்வு சற்றுமிலீர்
     எத்துக்கு மூத்தீர் இழிகுலத்தேன் தன்னைவெஃகிப்
          பித்துக்கொண் டார்போல் பிதற்றுவீர் இவ்வேடர்
               கொத்துக் கெலாமோர் கொடும்பழியைச் செய்தீரே. ......    108

(சேவலாய் வைகுந்)

சேவலாய் வைகுந் தினைப்புனத்திற் புள்ளினுடன்
     மாவெலாங் கூடி வளர்பைங் குரல்கவரும்
          நாவலோய் நீரும் நடந்தருளும் நான்முந்திப்
               போவனால் என்று புனையிழையாள் போந்தனளே. ......    109

(பொன்னே அனையாள்)

பொன்னே அனையாள் முன்போகுந் திறல்நோக்கி
     என்னே இனிச்செய்வ தென்றிரங்கி எம்பெருமான்
          தன்னே ரிலாதமரும் தந்திமுகத் தெந்தைதனை
               முன்னே வருவாய் முதல்வா வெனநினைந்தான். ......    110

(அந்தப் பொழுதில்)

அந்தப் பொழுதில் அறுமா முகற்கிரங்கி
     முந்திப் படர்கின்ற மொய்குழலாள் முன்னாகத்
          தந்திக் கடவுள் தனிவார ணப்பொருப்பு
               வந்துற்ற தம்மா மறிகடலே போல்முழங்கி. ......    111

(அவ்வேலை யில்வள்ளி)

அவ்வேலை யில்வள்ளி அச்சமொடு மீண்டுதவப்
     பொய்வேடங் கொண்டுநின்ற புங்கவன்தன் பாலணுகி
          இவ்வேழங் காத்தருள்க எந்தைநீர் சொற்றபடி
               செய்வேன் எனவொருபால் சேர்ந்துதழீஇக் கொண்டனளே. ......    112

(அன்ன தொருகாலை)

அன்ன தொருகாலை அறுமா முகக்கடவுள்
     முன்னொரு சார்வந்து முதுகளிற்றின் கோடொற்றப்
          பின்னொரு சார்வந்து பிடியின் மருப்பூன்ற
               இந்நடு வேநின்றான் எறுழ்வயிரத் தூணேபோல். ......    113

(கந்த முருகன் கடவுட்)

கந்த முருகன் கடவுட் களிறுதனை
     வந்தனைகள் செய்து வழுத்திநீ வந்திடலால்
          புந்தி மயல்தீர்ந்தேன் புனையிழையுஞ் சேர்ந்தனளால்
               எந்தை பெருமான் எழுந்தருள்க மீண்டென்றான். ......    114

(என்னும் அளவில்)

என்னும் அளவில் இனிதென்றி யானைமுக
     முன்னிளவல் ஏக முகமா றுடையபிரான்
          கன்னி தனையோர் கடிகாவி னிற்கலந்து
               துன்னு கருணைசெய்து தொல்லுருவங் காட்டினனே. ......    115

(முந்நான்கு தோளும்)

முந்நான்கு தோளும் முகங்களோர் மூவிரண்டுங்
     கொன்னார்வை வேலுங் குலிசமுமே னைப்படையும்
          பொன்னார் மணிமயிலு மாகப் புனக்குறவர்
               மின்னாள் கண்காண வெளிநின் றனன்விறலோன். ......    116

(கூரார் நெடுவேற்)

கூரார் நெடுவேற் குமரன் திருவுருவைப்
     பாரா வணங்காப் பரவலுறா விம்மிதமுஞ்
          சேரா நடுநடுங்காச் செங்கைகுவி யாவியரா
               ஆராத காதலுறா அம்மையிது ஓதுகின்றாள். ......    117

(மின்னே அனையசுடர்)

மின்னே அனையசுடர் வேலவரே இவ்வுருவம்
     முன்னேநீர் காட்டி முயங்காமல் இத்துணையுங்
          கொன்னே கழித்தீர் கொடியேன்செய் குற்றமெலாம்
               இன்னே தணித்தே எனையாண்டு கொள்ளுமென்றாள். ......    118

(உம்மை யதனில்)

உம்மை யதனில் உலகமுண்டோன் தன்மகள்நீ
     நம்மை அணையும்வகை நற்றவஞ்செய் தாய்அதனால்
          இம்மை தனிலுன்னை எய்தினோ மென்றெங்கள்
               அம்மை தனைத்தழுவி ஐயன் அருள்புரிந்தான். ......    119

(எங்கண் முதல்வன்)

எங்கண் முதல்வன் இறைவி தனைநோக்கி
     உங்கள் புனந்தன்னில் உறைந்திடமுன் னேகுதியால்
          மங்கைநல் லாயாமும் வருவோம் எனவுரைப்ப
               அங்கண் விடைகொண் டடிபணிந்து போயினளே. ......    120

வேறு

(வாங்கிய சிலைநுதல்)

வாங்கிய சிலைநுதல் வள்ளி என்பவள்
     பூங்குரல் ஏனலம் புனத்து ளேகியே
          ஆங்கனம் இருத்தலும் அயற்பு னத்தமர்
               பாங்கிவந் தடிமுறை பணிந்து நண்ணினாள். ......    121

(நாற்றமுந் தோற்றமும்)

நாற்றமுந் தோற்றமும் நவிலொ ழுக்கமும்
     மாற்றமுஞ் செய்கையும் மனமும் மற்றதும்
          வேற்றுமை யாதலும் விளைவு நோக்கியே
               தேற்றமொ டிகுளையங் கினைய செப்புவாள். ......    122

(இப்புனம் அழிதர)

இப்புனம் அழிதர எங்ஙன் ஏகினை
     செப்புதி நீயெனத் தெரிவை நாணுறா
          அப்புற மென்சுனை யாடப் போந்தனன்
               வெப்புறும் வேனிலால் மெலிந்தி யானென்றாள். ......    123

(மைவிழி சிவப்பவும்)

மைவிழி சிவப்பவும் வாய்வெ ளுப்பவும்
     மெய்வியர் வடையவும் நகிலம் விம்மவுங்
          கைவளை நெகிழவுங் காட்டுந் தண்சுனை
               எவ்விடை இருந்துள தியம்பு வாயென்றாள். ......    124

(சொற்றிடும் இகுளை)

சொற்றிடும் இகுளையைச் சுளித்து நோக்கியே
     உற்றிடு துணையதா உனையுட் கொண்டியான்
          மற்றிவண் இருந்தனன் வந்தெ னக்குமோர்
               குற்றம துரைத்தனை கொடியை நீயென்றாள். ......    125

(பாங்கியுந் தலைவியும்)

பாங்கியுந் தலைவியும் பகர்ந்து மற்றிவை
     யாங்கனம் இருத்தலும் அதனை நோக்கியே
          ஈங்கிது செவ்வியென் றெய்தச் சென்றனன்
               வேங்கைய தாகிமுன் நின்ற மேலையோன். ......    126

(கோட்டிய சிலையினன்)

கோட்டிய சிலையினன் குறிக்கொள் வாளியன்
     தீட்டிய குறியவாள் செறித்த கச்சினன்
          வேட்டம தழுங்கிய வினைவ லோனெனத்
               தாட்டுணை சிவந்திடத் தமியன் ஏகினான். ......    127

வேறு

(காந்தள் போலிய)

காந்தள் போலிய கரத்தினீர் யானெய்த கணையால்
     பாய்ந்த சோரியும் பெருமுழக் குறுபகு வாயும்
          ஓய்ந்த புண்படு மேனியு மாகியோர் ஒருத்தல்
               போந்த தோவிவண் புகலுதிர் புகலுதிர் என்றான். ......    128

(வேழ மேமுதல் உள்)

வேழ மேமுதல் உள்ளன கெடுதிகள் வினவி
     ஊழி நாயகன் நிற்றலும் உமக்குநே ரொத்து
          வாழு நீரருக் குரைப்பதே யன்றிநும் வன்மை
               ஏழை யேங்களுக் கிசைப்பதென் என்றனள் இகுளை. ......    129

(ஐயர் வேட்டைவந்)

ஐயர் வேட்டைவந் திடுவதுந் தினைப்புனத் தமர்ந்து
     தையல் காத்திடு கின்றதுஞ் சரதமோ பறவை
          எய்யும் வேட்டுவர் கோலமே போன்றன இருவர்
               மையல் தன்னையும் உரைத்திடும் விழியென மதித்தாள். ......    130

(மனத்தில் இங்கிவை)

மனத்தில் இங்கிவை உன்னியே துணைவியும் மற்றைப்
     புனத்தி லேகிவீற் றிருந்தனள் அன்னதோர் பொழுதில்
          சினத்தி டுங்கரி எய்தன மென்றசே வகன்போய்க்
               கனத்தை நேர்தரு கூந்தலாய் கேளெனக் கழறும். ......    131

(உற்ற கேளிரும் நீங்)

உற்ற கேளிரும் நீங்களே தமியனுக் குமக்குப்
     பற்ற தாயுள பொருளெலாந் தருவன் நும்பணிகள்
          முற்று நாடியே புரிகுவன் முனிவுகொள் ளாது
               சற்று நீரருள் செய்திடு மென்றனன் தலைவன். ......    132

(அண்ணல் கூறிய)

அண்ணல் கூறிய திகுளைதேர்ந் திடுதலும் ஐயர்
     எண்ண மீதுகொல் எம்பெருங் கிளைக்கிதோர் இழுக்கை
          மண்ணின் நாட்டவோ வந்தது மறவர்தம் பேதைப்
               பெண்ணை ஆதரித் திடுவரோ பெரியவர் என்றாள். ......    133

(சீத ரன்தரும் அமிர்தி)

சீத ரன்தரும் அமிர்தினை எயினர்கள் செய்த
     மாத வந்தனைப் பெண்ணினுக் கரசைமற் றெனக்குக்
          காதல் நல்கியே நல்லருள் புரிந்தகா ரிகையைப்
               பேதை யென்பதே பேதைமை என்றனன் பெரியோன். ......    134

(என்றெங் கோனுரை)

என்றெங் கோனுரை செய்தலும் மடமகள் இங்ஙன்
     குன்றங் காவலர் வருகுவர் அவர்மிகக் கொடியோர்
          ஒன்றுந் தேர்கிலர் காண்பரேல் எம்முயிர் ஒறுப்பார்
               நின்றிங் காவதென் போமென நெறிப்படுத் துரைத்தாள். ......    135

(தோட்டின் மீதுசெல்)

தோட்டின் மீதுசெல் விழியினாய் தோகையோ டென்னைக்
     கூட்டி டாயெனில் கிழிதனில் ஆங்கவள் கோலந்
          தீட்டி மாமட லேறிநும் மூர்த்தெரு வதனில்
               ஓட்டு வேன்இது நாளையான் செய்வதென் றுரைத்தான். ......    136

(ஆதி தன்மொழி துணை)

ஆதி தன்மொழி துணைவிகேட் டஞ்சியை யர்க்கு
     நீதி யன்றுதண் பனைமட லேறுதல் நீர்இம்
          மாத வித்தருச் சூழலில் மறைந்திரும் மற்றென்
               காதல் மங்கையைத் தருவனென் றேகினள் கடிதின். ......    137

வேறு

(அங்க வெல்லையில் அக)

அங்க வெல்லையில் அகம கிழ்ச்சியாய்
     எங்கள் தம்பிரான் இனிதின் ஏகியே
          மங்குல் வந்துகண் வளரும் மாதவிப்
               பொங்கர் தன்னிடைப் புக்கு வைகினான். ......    138

(பொள்ளெ னத்தினை)

பொள்ளெ னத்தினைப் புனத்திற் பாங்கிபோய்
     வள்ளி தன்பதம் வணங்கி மானவேற்
          பிள்ளை காதலும் பிறவுஞ் செப்பியே
               உள்ளந் தேற்றியே ஒருப்ப டுத்தினாள். ......    139

(இளைய மங்கையை)

இளைய மங்கையை இகுளை ஏனலின்
     விளைத ரும்புனம் மெல்ல நீங்கியே
          அளவில் மஞ்ஞைகள் அகவும் மாதவிக்
               குளிர்பொ தும்பரிற் கொண்டு போயினாள். ......    140

(பற்றின் மிக்கதோர்)

பற்றின் மிக்கதோர் பாவை இவ்வரை
     சுற்றி யேகிநீ சூடுங் கோடல்கள்
          குற்று வந்துநின் குழற்கு நல்குவன்
               நிற்றி ஈண்டென நிறுவிப் போயினாள். ......    141

வேறு

(கோற்றொடி இகுளை)

கோற்றொடி இகுளைதன் குறிப்பி னால்வகை
     சாற்றினள் அகன்றிடத் தையல் நிற்றலும்
          ஆற்றவும் மகிழ்சிறந் தாறு மாமுகன்
               தோற்றினன் எதிர்ந்தனன் தொன்மை போலவே. ......    142

(வடுத்துணை நிகர்விழி)

வடுத்துணை நிகர்விழி வள்ளி எம்பிரான்
     அடித்துணை வணங்கலும் அவளை அங்கையால்
          எடுத்தனன் புல்லினன் இன்ப மெய்தினான்
               சுடர்த்தொடி கேட்டியென் றிதனைச் சொல்லினான். ......    143

(உந்தையும் பிறரும்வந்)

உந்தையும் பிறரும்வந் துன்னை நாடுவர்
     செந்தினை விளைபுனஞ் சேவல் போற்றிடப்
          பைந்தொடி அணங்கொடு படர்தி நாளையாம்
               வந்திடு வோமென மறைந்து போயினான். ......    144

(போந்தபின் இரங்கிய)

போந்தபின் இரங்கியப் பொதும்பர் நீங்கியே
     ஏந்திழை வருதலும் இகுளை நேர்கொடு
          காந்தளின் மலர்சில காட்டி அன்னவள்
               கூந்தலிற் சூடியே கொடுசென் றேகினாள். ......    145

(இவ்வகை வழிபடும்)

இவ்வகை வழிபடும் இகுளை தன்னொடு
     நைவள மேயென நவிலுந் தீஞ்சொலாள்
          கொய்வரு தினைப்புனங் குறுகிப் போற்றியே
               அவ்விடை இருந்தனள் அகம்பு லர்ந்துளாள். ......    146

(வளந்தரு புனந்தனில்)

வளந்தரு புனந்தனில் வள்ளி நாயகி
     தளர்ந்தனள் இருத்தலுந் தலைய ளித்திடும்
          இளந்தினை யின்குரல் ஈன்று முற்றியே
               விளைந்தன குறவர்கள் விரைந்து கூடினார். ......    147

வேறு

(குன்ற வாணர்கள்)

குன்ற வாணர்கள் யாவருங் கொடிச்சியை நோக்கித்
     துன்றும் ஏனல்கள் விளைந்தன கணிகளுஞ் சொற்ற
          இன்று காறிது போற்றியே வருந்தினை இனிநீ
               சென்றி டம்மஉன் சிறுகுடிக் கெனவுரை செய்தார். ......    148

(குறவர் இவ்வகை)

குறவர் இவ்வகை சொற்றன செவிப்புலங் கொண்டாங்
     கெறியும் வேல்படு புண்ணிடை எரிநுழைந் தென்ன
          மறுகு முள்ளத்த ளாகியே மற்றவண் நீங்கிச்
               சிறுகு டிக்குநல் லிகுளையுந் தானுமாய்ச் சென்றாள். ......    149

(மானி னங்களை)

மானி னங்களை மயில்களைக் கிளியைமாண் புறவை
     ஏனை யுள்ளவை தங்களை நோக்கியே யாங்கள்
          போன செய்கையைப் புகலுதிர் புங்கவர்க் கென்னாத்
               தானி ரங்கியே போயினள் ஒருதனித் தலைவி. ......    150

(பூவை யன்னதோர்)

பூவை யன்னதோர் மொழியினாள் சிறுகுடிப் புகுந்து
     கோவில் வைப்பினுட் குறுகியே கொள்கைவே றாகிப்
          பாவை ஒண்கழங் காடலள் பண்டுபோல் மடவார்
               ஏவர் தம்மொடும் பேசலள் புலம்பிவீற் றிருந்தாள். ......    151

(மற்ற எல்லையில்)

மற்ற எல்லையில் செவிலியும் அன்னையும் மகளை
     உற்று நோக்கியே மேனிவே றாகிய துனக்குக்
          குற்றம் வந்தவா றென்னென வற்புறக் கூறிச்
               செற்ற மெய்தியே அன்னவள் தன்னையிற் செறித்தார். ......    152

வேறு

(ஓவிய மனைய நீராள்)

ஓவிய மனைய நீராள் உடம்பிடித் தடக்கை யோனை
     மேவினள் பிரித லாலே மெய்பரிந் துள்ளம் வெம்பி
          ஆவிய தில்லா ளென்ன அவசமாய் அங்கண் வீழப்
               பாவையர் எடுத்துப் புல்லிப் பருவர லுற்றுச் சூழ்ந்தார். ......    153

(ஏர்கொள்மெய் நுடங்கு)

ஏர்கொள்மெய் நுடங்கு மாறும் இறைவளை கழலு மாறுங்
     கூர்கொள்கண் பனிக்கு மாறுங் குணங்கள்வே றாய வாறும்
          பீர்கொளு மாறும் நோக்கிப் பெண்ணினைப் பிறங்கற் சாரற்
               சூர்கொலாந் தீண்டிற் றென்றார் சூர்ப்பகை தொட்ட தோரார். ......    154

(தந்தையுங் குறவர்)

தந்தையுங் குறவர் தாமுந் தமர்களும் பிறரும் ஈண்டிச்
     சிந்தையுள் அயர்வு கொண்டு தெரிவைதன் செயலை நோக்கி
          முந்தையின் முதியா ளோடு முருகனை முறையிற் கூவி
               வெந்திறல் வேலினாற்கு வெறியயர் வித்தார் அன்றே. ......    155

(வெறியயர் கின்ற)

வெறியயர் கின்ற காலை வேலன்மேல் வந்து தோன்றிப்
     பிறிதொரு திறமும் அன்றால் பெய்வளை தமிய ளாகி
          உறைதரு புனத்தில் தொட்டாம் உளமகிழ் சிறப்பு நேரிற்
               குறையிது நீங்கு மென்றே குமரவேள் குறிப்பிற் சொற்றான். ......    156

(குறிப்பொடு நெடு)

குறிப்பொடு நெடுவேல் அண்ணல் கூறிய கன்ன மூல
     நெறிப்பட வருத லோடும் நேரிழை அவசம் நீங்கி
          முறைப்பட எழுந்து வைக முருகனை முன்னி யாங்கே
               சிறப்பினை நேர்தும் என்று செவிலித்தாய் பராவல் செய்தாள். ......    157

(மனையிடை அம்மை)

மனையிடை அம்மை வைக வனசரர் முதிர்ந்த செவ்வித்
     தினையினை அரிந்து கொண்டு சிறுகுடி அதனிற் சென்றார்
          இனையது நோக்கிச் செவ்வேள் இருவியம் புனத்திற் புக்குப்
               புனையிழை தன்னைக் காணான் புலம்பியே திரித லுற்றான். ......    158

(கனந்தனை வினவும்)

கனந்தனை வினவும் மஞ்ஞைக் கணந்தனை வினவும் ஏனற்
     புனந்தனை வினவும் அம்மென் பூவையை வினவுங் கிள்ளை
          இனந்தனை வினவும் யானை இரலையை வினவுந் தண்கா
               வனந்தனை வினவும் மற்றை வரைகளை வினவு மாதோ. ......    159

(வாடினான் தளர்ந்தான்)

வாடினான் தளர்ந்தான் நெஞ்சம் வருந்தினான் மையற் கெல்லை
     கூடினான் வெய்து யிர்த்தான் குற்றடிச் சுவடு தன்னை
          நாடினான் திகைத்தான் நின்று நடுங்கினான் நங்கை தன்னைத்
               தேடினான் குமரற் கீது திருவிளை யாடல் போலாம். ......    160

(வல்லியை நாடு வான்)

வல்லியை நாடு வான்போல் மாண்பகல் கழித்து வாடிக்
     கொல்லையம் புனத்திற் சுற்றிக் குமரவேள் நடுநாள் யாமஞ்
          செல்லுறு மெல்லை வேடர் சிறுகுடி தன்னிற் புக்குப்
               புல்லிய குறவர் செம்மல் குரம்பையின் புறம்போய் நின்றான். ......    161

(பாங்கிசெவ் வேளைக்)

பாங்கிசெவ் வேளைக் கண்டு பணிந்துநீர் கங்குற் போதில்
     ஈங்குவந் திடுவ தொல்லா திறைவியும் பிரியின் உய்யாள்
          நீங்களிவ் விடத்திற் கூட நேர்ந்ததோ ரிடமு மில்லை
               ஆங்கவள் தன்னைக் கொண்டே அகலுதிர் அடிகள் என்றாள். ......    162

(என்றிவை கூறிப்)

என்றிவை கூறிப் பாங்கி இறைவனை நிறுவி யேகித்
     தன்றுணை யாகி வைகுந் தையலை யடைந்து கேள்வர்
          உன்றனை வவ்விச் செல்வான் உள்ளத்தில் துணியா இங்ஙன்
               சென்றனர் வருதி என்னச் சீரிதென் றொருப்பா டுற்றாள். ......    163

(தாய்துயில் அறிந்து)

தாய்துயில் அறிந்து தங்கள் தமர்துயில் அறிந்து துஞ்சா
     நாய்துயில் அறிந்து மற்றந் நகர்துயில் அறிந்து வெய்ய
          பேய்துயில் கொள்ளும் யாமப் பெரும்பொழு ததனிற் பாங்கி
               வாய்தலிற் கதவை நீக்கி வள்ளியைக் கொடுசென் றுய்த்தாள். ......    164

(அறுமுக வொருவன்)

அறுமுக வொருவன் தன்னை யாயிழை எதிர்ந்து தாழ்ந்து
     சிறுதொழில் எயினர் ஊரில் தீயனேன் பொருட்டால் இந்த
          நறுமலர்ப் பாதங் கன்ற நள்ளிருள் யாமந் தன்னில்
               இறைவநீர் நடப்ப தேயென் றிரங்கியே தொழுது நின்றாள். ......    165

(மாத்தவ மடந்தை)

மாத்தவ மடந்தை நிற்ப வள்ளலை இகுளை நோக்கித்
     தீத்தொழில் எயினர் காணில் தீமையாய் விளையும் இன்னே
          ஏத்தருஞ் சிறப்பி னும்மூர்க் கிங்கவள் தனைக்கொண் டேகிக்
               காத்தருள் புரியு மென்றே கையடை யாக நேர்ந்தாள். ......    166

(முத்துறு முறுவ லாளை)

முத்துறு முறுவ லாளை மூவிரு முகத்தி னான்தன்
     கைத்தலந் தன்னில் ஈந்து கைதொழு திகுளை நிற்ப
          மெய்த்தகு கருணை செய்து விளங்கிழாய் நீயெம் பாலின்
               வைத்திடு கருணை தன்னை மறக்கலங் கண்டாய் என்றான். ......    167

(மையுறு தடங்கண் நல்லா)

மையுறு தடங்கண் நல்லாள் வள்ளியை வணக்கஞ் செய்து
     மெய்யுறப் புல்லி அன்னாய் விரைந்தனை சேறி யென்னா
          ஐயனோ டினிது கூட்டி ஆங்கவர் விடுப்ப மீண்டு
               கொய்யுறு கவரி மேய்ந்த குரம்பையின் கூரை புக்காள். ......    168

(விடைபெற்றே இகுளை)

விடைபெற்றே இகுளை ஏக வேலுடைக் கடவுள் அன்ன
     நடைபெற்ற மடந்தை யோடு நள்ளிரு ளிடையே சென்று
          கடைபெற்ற சீறூர் நீங்கிக் காப்பெலாங் கடந்து காமன்
               படைபெற்றுக் குலவும் ஆங்கோர் பசுமரக் காவுட் சேர்ந்தான். ......    169

(செஞ்சுடர் நெடுவேல்)

செஞ்சுடர் நெடுவேல் அண்ணல் செழுமலர்க் காவிற் புக்கு
     வஞ்சியொ டிருந்த காலை வைகறை விடியல் செல்ல
          எஞ்சலில் சீறூர் தன்னில் இறையவன் தனது தேவி
               துஞ்சலை யகன்று வல்லே துணுக்கமுற் றெழுந்தாள் அன்றே. ......    170

(சங்கலை கின்ற செங்)

சங்கலை கின்ற செங்கைத் தனிமகட் காணா ளாகி
     எங்கணும் நாடிப் பின்னர் இகுளையை வந்து கேட்பக்
          கங்குலின் அவளும் நானுங் கண்படை கொண்ட துண்டால்
               அங்கவள் அதற்பின் செய்த தறிகிலன் அன்னாய் என்றாள். ......    171

(தம்மகட் காணா வண்)

தம்மகட் காணா வண்ணந் தாய்வந்து புகலக் கேட்டுத்
     தெம்முனைக் குறவர் செம்மல் தெருமந்து செயிர்த்துப் பொங்கி
          நம்மனைக் காவல் நீங்கி நன்னுதற் பேதை தன்னை
               இம்மெனக் கொண்டு போந்தான் யாவனோ ஒருவன் என்றான். ......    172

(மற்றிவை புகன்று)

மற்றிவை புகன்று தாதை வாட்படை மருங்கிற் கட்டிக்
     கொற்றவில் வாளி ஏந்திக் குமரியைக் கவர்ந்த கள்வன்
          உற்றிடு நெறியை நாட ஒல்லையிற் போவன் என்னாச்
               செற்றமொ டெழுந்து செல்லச் சிறுகுடி எயினர் தேர்ந்தார். ......    173

(எள்ளுதற் கரிய சீறூர்)

எள்ளுதற் கரிய சீறூர் இடைதனில் யாமத் தேகி
     வள்ளியைக் கவர்ந்து கொண்டு மாயையால் மீண்டு போன
          கள்வனைத் தொடர்தும் என்றே கானவர் பலருங் கூடிப்
               பொள்ளெனச் சிலைகோல் பற்றிப் போர்த்தொழிற் கமைந்துபோனார். ......    174

(வேடுவர் யாரும் ஈண்)

வேடுவர் யாரும் ஈண்டி விரைந்துபோய் வேந்த னோடு
     கூடினர் இரலை தன்னைக் குறித்தனர் நெறிகள் தோறும்
          ஓடினர் பொதும்ப ரெல்லாம் உலாவினர் புலங்கள் புக்கு
               நாடினர் சுவடு நோக்கி நடந்தனர் இடங்க ளெங்கும். ......    175

(ஈங்கனம் மறவ ரோடு)

ஈங்கனம் மறவ ரோடும் இறையவன் தேடிச் செல்லப்
     பாங்கரில் ஒருதண் காவிற் பட்டிமை நெறியால் உற்றாள்
          ஆங்கனந் தெரியா அஞ்சி ஆறுமா முகத்து வள்ளல்
               பூங்கழல் அடியில் வீழ்ந்து பொருமியே புகல லுற்றாள். ......    176

(கோலொடு சிலையும்)

கோலொடு சிலையும் வாளுங் குந்தமும் மழுவும் பிண்டி
     பாலமும் பற்றி வேடர் பலருமாய்த் துருவிச் சென்று
          சோலையின் மருங்கு வந்தார் துணுக்கமுற் றுளதென் சிந்தை
               மேலினிச் செய்வ தென்கொல் அறிகிலேன் விளம்பா யென்றாள். ......    177

(வருந்தலை வாழி)

வருந்தலை வாழி நல்லாய் மால்வரை யோடு சூரன்
     உரந்தனை முன்பு கீண்ட உடம்பிடி யிருந்த நும்மோர்
          விரைந்தமர் புரியச் சூழின் வீட்டுதும் அதனை நோக்கி
               இருந்தருள் நம்பின் என்னா இறைமகட் கெந்தை சொற்றான். ......    178

(குறத்திரு மடந்தை)

குறத்திரு மடந்தை இன்ன கூற்றினை வினவிச் செவ்வேள்
     புறத்தினில் வருத லோடும் பொள்ளெனக் குறுகி அந்தத்
          திறத்தினை யுற்று நோக்கிச் சீறிவெய் துயிர்த்துப் பொங்கி
               மறத்தொழில் எயினர் காவை மருங்குற வளைந்து கொண்டார். ......    179

(தாதையங் கதனைக்)

தாதையங் கதனைக் கண்டு தண்டலை குறுகி நந்தம்
     பேதையைக் கவர்ந்த கள்வன் பெயர்கிலன் எமது வன்மை
          ஏதையு மதியான் அம்மா இவன்விறல் எரிபாய்ந் துண்ணும்
               ஊதையங் கான மென்ன முடிக்குதும் ஒல்லை யென்றான். ......    180

(குறவர்கள் முதல்வன்)

குறவர்கள் முதல்வன் தானுங் கொடுந்தொழில் எயினர் யாரும்
     மறிகட லென்ன வார்த்து வார்சிலை முழுதும் வாங்கி
          எறிசுடர்ப் பரிதித் தேவை எழிலிகள் மறைத்தா லென்ன
               முறைமுறை அம்பு வீசி முருகனை வளைந்து கொண்டார். ......    181

(ஒட்டல ராகிச் சூழ்ந்)

ஒட்டல ராகிச் சூழ்ந்தாங் குடன்றுபோர் புரிந்து வெய்யோர்
     விட்டவெம் பகழி யெல்லாம் மென்மலர் நீர வாகிக்
          கட்டழ குடைய செவ்வேற் கருணையங் கடலின் மீது
               பட்டன பட்ட லோடும் பைந்தொடி பதைத்துச் சொல்வாள். ......    182

(நெட்டிலை வாளி தன்)

நெட்டிலை வாளி தன்னை ஞெரேலென நும்மேற் செல்லத்
     தொட்டிடு கையர் தம்மைச் சுடருடை நெடுவேல் ஏவி
          அட்டிடல் வேண்டும் சீயம் அடுதொழில் குறியா தென்னில்
               கிட்டுமே மரையும் மானுங் கேழலும் வேழந் தானும். ......    183

(என்றிவை குமரி செப்ப)

என்றிவை குமரி செப்ப எம்பிரான் அருளால் பாங்கர்
     நின்றதோர் கொடிமாண் சேவல் நிமிர்ந்தெழுந் தார்ப்புக் கொள்ளக்
          குன்றவர் முதல்வன் தானுங் குமரருந் தமரும் யாரும்
               பொன்றின ராகி மாண்டு பொள்ளெனப் புவியில் வீழ்ந்தார். ......    184

(தந்தையும் முன்னை)

தந்தையும் முன்னை யோரும் தமரும்வீழ்ந் திறந்த தன்மை
     பைந்தொடி வள்ளி நோக்கிப் பதைபதைத் திரங்கிச் சோரக்
          கந்தனத் துணைவி அன்பு காணுவான் கடிகா நீங்கிச்
               சிந்தையில் அருளோ டேக அனையளுந் தொடர்ந்து சென்றாள். ......    185

(செல்லநா ரதப்பேர்)

செல்லநா ரதப்பேர் பெற்ற சீர்கெழு முனிநேர் வந்து
     வல்லியோ டிறைவன் தன்னை வணங்கிநின் செய்கை எல்லாஞ்
          சொல்லுதி என்ன அன்னான் தோகையைக் காண்டல் தொட்டு
               மல்லல்வேட் டுவரை யட்டு வந்திடும் அளவுஞ் சொற்றான். ......    186

(பெற்றிடு தந்தை தன்)

பெற்றிடு தந்தை தன்னைப் பிறவுள சுற்றத் தோரைச்
     செற்றமொ டட்டு நீக்கிச் சிறந்தநல் லருள்செ யாமல்
          பொற்றொடி தன்னைக் கொண்டு போந்திடத் தகுமோ வென்னா
               மற்றிவை முனிவன் கூற வள்ளலும் அஃதாம் என்றான். ......    187

(விழுப்பம துளதண்)

விழுப்பம துளதண் காவில் விசாகன்மீண் டருளித் தன்பால்
     முழுப்பரி வுடைய நங்கை முகத்தினை நோக்கி நம்மேற்
          பழிப்படு வெம்போர் ஆற்றிப் பட்டநுங் கிளையை எல்லாம்
               எழுப்புதி என்ன லோடும் இனிதென இறைஞ்சிச் சொல்வாள். ......    188

(விழுமிய உயிர்கள் சிந்)

விழுமிய உயிர்கள் சிந்தி வீழ்ந்தநங் கேளிர் யாரும்
     எழுதிரென் றருள லோடும் இருநிலத் துறங்கு கின்றோர்
          பழையநல் லுணர்வு தோன்றப் பதைபதைத் தெழுதற் கொப்பக்
               குழுவுறு தமர்க ளோடுங் குறவர்கோன் எழுந்தான் அன்றே. ......    189

(எழுந்திடு கின்ற காலை)

எழுந்திடு கின்ற காலை எம்பிரான் கருணை வெள்ளம்
     பொழிந்திடு வதன மாறும் புயங்கள்பன் னிரண்டும் வேலும்
          ஒழிந்திடு படையு மாகி உருவினை அவர்க்குக் காட்ட
               விழுந்தனர் பணிந்து போற்றி விம்மித ராகிச் சொல்வார். ......    190

(அடுந்திறல் எயினர்)

அடுந்திறல் எயினர் சேரி அளித்திடு நீயே எங்கள்
     மடந்தையைக் கரவில் வௌவி வரம்பினை அழித்துத் தீரா
          நெடுந்தனிப் பழிய தொன்று நிறுவினை புதல்வர் கொள்ள
               விடந்தனை அன்னை யூட்டின் விலக்கிடு கின்றா ருண்டோ. ......    191

(ஆங்கது நிற்க எங்கள்)

ஆங்கது நிற்க எங்கள் அரிவையை நசையால் வௌவி
     நாங்களும் உணரா வண்ணம் நம்பெருங் காவல் நீங்கி
          ஈங்கிவட் கொணர்ந்தாய் எந்தாய் இன்னினிச் சீறூர்க் கேகித்
               தீங்கனல் சான்றா வேட்டுச் செல்லுதி நின்னூர்க் கென்றார். ......    192

(மாதுலன் முதலோர்)

மாதுலன் முதலோர் சொற்ற மணமொழிக் கிசைவு கொண்டு
     மேதகு கருணை செய்து மெல்லியல் தனையுங் கொண்டு
          கோதிலா முனிவ னோடுங் குளிர்மலர்க் காவு நீங்கிப்
               பாதபங் கயங்கள் நோவப் பருப்பதச் சீறூர் புக்கான். ......    193

(தந்தையுஞ் சுற்றத்)

தந்தையுஞ் சுற்றத் தோருஞ் சண்முகன் பாங்க ரேகிச்
     சிந்தையின் மகிழ்ச்சி யோடு சிறுகுடி யோரை நோக்கிக்
          கந்தனே நமது மாதைக் கவர்ந்தனன் நமது சொல்லால்
               வந்தனன் மணமுஞ் செய்ய மற்றிது நிகழ்ச்சி யென்றார். ......    194

(சங்கரன் மதலை தானே)

சங்கரன் மதலை தானே தையலைக் கவர்ந்தான் என்றும்
     மங்கல வதுவை செய்ய வந்தனன் இங்ஙன் என்றும்
          தங்கள்சுற் றத்தோர் கூறச் சிறுகுடி தன்னில் உற்றோர்
               பொங்குவெஞ் சினமும் நாணும் மகிழ்ச்சியும் பொடிப்ப நின்றார். ......    195

(குன்றவர் தமது செம்)

குன்றவர் தமது செம்மல் குறிச்சியில் தலைமைத் தான
     தன்றிரு மனையி னூடே சரவண முதல்வன் தன்னை
          மன்றலங் குழலி யோடு மரபுளி யுய்த்து வேங்கைப்
               பொன்றிகழ் அதளின் மீது பொலிவுற இருத்தி னானே. ......    196

(அன்னதோர் வேலை தன்)

அன்னதோர் வேலை தன்னில் அறுமுக முடைய வள்ளல்
     தன்னுழை இருந்த நங்கை தனையரு ளோடு நோக்கக்
          கொன்னவில் குறவர் மாதர் குயிற்றிய கோலம் நீங்கி
               முன்னுறு தெய்வக் கோல முழுதொருங் குற்ற தன்றே. ......    197

(கவலைதீர் தந்தை)

கவலைதீர் தந்தை தானுங் கணிப்பிலாச் சுற்றத் தாருஞ்
     செவிலியும் அன்னைதானும் இகுளையும் தெரிவை மாரும்
          தவலருங் கற்பின் மிக்க தம்மகள் கோலம் நோக்கி
               இவள்எம திடத்தில் வந்த தெம்பெருந் தவமே என்றார். ......    198

(அந்தநல் வேலை)

அந்தநல் வேலை தன்னில் அன்புடைக் குறவர் கோமான்
     கந்தவேள் பாணி தன்னில் கன்னிகை கரத்தை நல்கி
          நந்தவ மாகி வந்த நங்கையை நயப்பால் இன்று
               தந்தனன் கொள்க வென்று தண்புனல் தாரை உய்த்தான். ......    199

(நற்றவம் இயற்றுந்)

நற்றவம் இயற்றுந் தொல்சீர் நாரதன் அனைய காலைக்
     கொற்றம துடைய வேலோன் குறிப்பினால் அங்கி யோடு
          மற்றுள கலனுந் தந்து வதுவையின் சடங்கு நாடி
               அற்றம தடையா வண்ணம் அருமறை விதியாற் செய்தான். ......    200

(ஆவதோர் காலை தன்னில்)

ஆவதோர் காலை தன்னில் அரியும்நான் முகனும் வானோர்
     கோவொடு பிறருஞ் சூழக் குலவரை மடந்தை யோடுந்
          தேவர்கள் தேவன்வந்து சேண்மிசை நின்று செவ்வேள்
               பாவையை வதுவை செய்யும் பரிசினை முழுதுங் கண்டான். ......    201

(கண்ணுதல் ஒருவன்)

கண்ணுதல் ஒருவன் தானுங் கவுரியுங் கண்ணாற் கண்டு
     தண்ணளி புரிந்து நிற்பத் தண்டுழாய் முடியோ னாதிப்
          பண்ணவர் உவகை நீடிப் பனிமலர் மாரி வீசி
               அண்ணலை வழிபட் டேத்தி அஞ்சலி புரிந்திட் டார்த்தார். ......    202

(அறுமுக முடைய வள்)

அறுமுக முடைய வள்ளல் அன்னது நோக்கிச் சீறூர்
     இறையதும் உணரா வண்ணம் இமையமேல் அணங்கி னோடுங்
          கறையமர் கண்டன் தன்னைக் கைதொழு தேனை யோர்க்கு
               முறைமுறை யுவகை யோடு முழுதருள் புரிந்தான் அன்றே. ......    203

வேறு

(அங்க வேலையின்)

அங்க வேலையின் அலரின் மேலவன்
     செங்கண் மாயவன் தேவர் கோமகன்
          சங்கை தீர்தருந் தவத்தர் தம்மொடு
               மங்கை பாதியன் மறைந்து போயினான். ......    204

(போன எல்லையில்)

போன எல்லையில் பொருவில் நாரதன்
     தானி யற்றிய சடங்கு முற்றலுங்
          கான வேடுவர் கன்னி தன்னொடு
               மான வேலனை வணங்கிப் போற்றினான். ......    205

வேறு

(மற்றது காலை தன்னில் மாது)

மற்றது காலை தன்னில் மாதுலன் வள்ளி தன்னைக்
     கொற்றவே லுடைய நம்பி வதுவைசெய் கோலம் நோக்கி
          உற்றவிவ் விழிகள் தம்மால் உறுபயன் ஒருங்கே இன்று
               பெற்றனன் என்றான் அன்னான் உவகையார் பேசற் பாலார். ......    206

(மெல்லிடை கொம்)

மெல்லிடை கொம்பென் றுன்ன விரைமலர் தழைமேற் கொண்ட
     புல்லிய குறவர் மாதர் பொருவில்சீர் மருகன் தானும்
          வல்லியும் இன்னே போல வைகலும் வாழ்க என்று
               சொல்லியல் ஆசி கூறித் தூமலர் அறுகு தூர்த்தார். ......    207

(செந்தினை இடியும்)

செந்தினை இடியும் தேனும் தீம்பல கனியும் காயும்
     கந்தமும் பிறவு மாக இலைபொலி கலத்தி லிட்டுப்
          பைந்தொடி யணங்கு நீயும் பரிவுடன் நுகர்திர் என்ன
               வெந்திறல் எயினர் கூற வியனருள் புரிந்தான் மேலோன். ......    208

வேறு

(கிராதர் மங்கையும்)

கிராதர் மங்கையும் பராபரன் மதலையும் கெழுமி
     விராவு சில்லுணா மிசைந்தனர் மிசைந்திடு தன்மை
          முராரி யாதியாந் தேவர்பால் முனிவர்பால் மற்றைச்
               சராச ரங்கள்பால் எங்கணுஞ் சார்ந்துள தன்றே. ......    209

(அனைய காலையில் அறுமுக)

அனைய காலையில் அறுமுகன் எழுந்துநின் றாங்கே
     குனியும் வில்லுடைக் குறவர்தங் குரிசிலை நோக்கி
          வனிதை தன்னுடன் சென்றியாஞ் செருத்தணி வரையில்
               இனிது வைகுதும் என்றலும் நன்றென இசைத்தான். ......    210

(தாயும் பாங்கியுஞ் செவி)

தாயும் பாங்கியுஞ் செவிலியுந் தையலை நோக்கி
     நாய கன்பின்னர் நடத்தியோ நன்றெனப் புல்லி
          நேய மோடுபல் லாசிகள் புகன்றிட நெடுவேல்
               சேயு டன்கடி தேகவே சிந்தையுட் கொண்டாள். ......    211

(பாவை தன்னுடன்)

பாவை தன்னுடன் பன்னிரு புயமுடைப் பகவன்
     கோவில் நீங்கியே குறவர்தங் குரிசிலை விளித்துத்
          தேவ ருந்தொழச் சிறுகுடி அரசியல் செலுத்தி
               மேவு கென்றவண் நிறுவியே போயினன் விரைவில். ......    212

(இன்ன தன்மைசேர் வள்ளி)

இன்ன தன்மைசேர் வள்ளியஞ் சிலம்பினை இகந்து
     பன்னி ரண்டுமொய்ம் புடையவன் பாவையுந் தானும்
          மின்னும் வெஞ்சுடர்ப் பரிதியும் போலவிண் படர்ந்து
               தன்னை யேநிகர் தணிகைமால் வரையினைச் சார்ந்தான். ......    213

(செச்சை மௌலியான்)

செச்சை மௌலியான் செருத்தணி வரைமிசைத் தெய்வத்
     தச்சன் முன்னரே இயற்றிய தனிநகர் புகுந்து
          பச்சிளங் கொங்கை வனசரர் பாவையோ டொன்றி
               இச்ச கத்துயிர் யாவையும் உய்யவீற் றிருந்தான். ......    214

(அந்த வேலையில் வள்ளி)

அந்த வேலையில் வள்ளிநா யகிஅயில் வேற்கைக்
     கந்த வேள்பதம் வணங்கியே கைதொழு தைய
          இந்த மால்வரை*1 இயற்கையை இயம்புதி என்னச்
               சிந்தை நீடுபேர் அருளினால் இன்னன செப்பும். ......    215

(செங்கண் வெய்யசூர்)

செங்கண் வெய்யசூர்ச் செருத்தொழி லினுஞ்சிலை வேடர்
     தங்க ளிற்செயுஞ் செருத்தொழி லினுந்தணிந் திட்டே
          இங்கு வந்தியாம் இருத்தலால் செருத்தணி என்றோர்
               மங்க லந்தரு பெயரினைப் பெற்றதிவ் வரையே. ......    216

(முல்லை வாள்நகை)

முல்லை வாள்நகை உமையவள் முலைவளை அதனான்
     மல்லல் மாநிழல் இறைவரை வடுப்படுத் தமரும்
          எல்லை நீர்வயற் காஞ்சியின் அணுகநின் றிடலால்
               சொல்ல லாந்தகைத் தன்றிந்த மால்வரைத் தூய்மை. ......    217

(விரையி டங்கொளும்)

விரையி டங்கொளும் போதினுள் மிக்கபங் கயம்போல்
     திரையி டங்கொளும் நதிகளிற் சிறந்தகங் கையைப்போல்
          தரையி டங்கொளும் பதிகளிற் காஞ்சியந் தலம்போல்
               வரையி டங்களிற் சிறந்ததித் தணிகைமால் வரையே. ......    218

(கோடி யம்பியும் வேய்)

கோடி யம்பியும் வேய்ங்குழல் ஊதியுங் குரலால்
     நீடு தந்திரி இயக்கியும் ஏழிசை நிறுத்துப்
          பாடி யுஞ்சிறு பல்லியத் தின்னிசை படுத்தும்
               ஆடு தும்விளை யாடுதும் இவ்வரை அதன்கண். ......    219

(மந்த ரத்தினும் மேரு)

மந்த ரத்தினும் மேருமால் வரையினும் மணிதோய்
     கந்த ரத்தவன் கயிலையே காதலித் ததுபோல்
          சுந்த ரக்கிரி தொல்புவி தனிற்பல வெனினும்
               இந்த வெற்பினில் ஆற்றவும் மகிழ்ச்சியுண் டெமக்கே. ......    220

(வான்றி கழ்ந்திடும்)

வான்றி கழ்ந்திடும் இருநில வரைபல அவற்றுள்
     ஆன்ற காதலால் இங்ஙனம் மேவுதும் அதற்குச்
          சான்று வாசவன் வைகலுஞ் சாத்துதற் பொருட்டால்
               மூன்று காவியிச் சுனைதனில் எமக்குமுன் வைத்தான். ......    221

(காலைப் போதினில்)

காலைப் போதினில் ஒருமலர் கதிர்முதிர் உச்சி
     வேலைப் போதினில் ஒருமலர் விண்ணெலாம் இருள்சூழ்
          மாலைப் போதினில் ஒருமல ராகஇவ் வரைமேல்
               நீலப் போதுமூன் றொழிவின்றி நிற்றலும் மலரும். ......    222

(ஆழி நீரர சுலகெலாம்)

ஆழி நீரர சுலகெலாம் உண்ணினும் அளிப்போர்
     ஊழி பேரினும் ஒருபகற் குற்பலம் மூன்றாய்த்
          தாழி ருஞ்சுனை தன்னிடை மலர்ந்திடும் தவிரா
               மாழை ஒண்கணாய் இவ்வரைப் பெருமையார் வகுப்பார். ......    223

(இந்த வெற்பினைத்)

இந்த வெற்பினைத் தொழுதுளார் பவமெலாம் ஏகும்
     சிந்தை அன்புடன் இவ்வரை யின்கணே சென்று
          முந்த நின்றவிச் சுனைதனில் விதிமுறை மூழ்கி
               வந்து நந்தமைத் தொழுதுளார் நம்பதம் வாழ்வார். ......    224

(அஞ்சு வைகல்இவ்)

அஞ்சு வைகல்இவ் வகன்கிரி நண்ணியெம் மடிகள்
     தஞ்ச மென்றுளத் துன்னியே வழிபடுந் தவத்தோர்
          நெஞ்ச கந்தனில் வெஃகிய போகங்கள் நிரப்பி
               எஞ்ச லில்லதோர் வீடுபே றடைந்தினி திருப்பார். ......    225

(தேவ ராயினும் முனி)

தேவ ராயினும் முனிவர ராயினுஞ் சிறந்தோர்
     ஏவ ராயினும் பிறந்தபின் இவ்வரை தொழாதார்
          தாவ ராதிகள் தம்மினுங் கடையரே தமது
               பாவ ராசிகள் அகலுமோ பார்வலஞ் செயினும். ......    226

(பாத கம்பல செய்தவ)

பாத கம்பல செய்தவ ராயினும் பவங்கள்
     ஏதும் வைகலும் புரிபவ ராயினும் எம்பால்
          ஆத ரங்கொடு தணிகைவெற் படைவரேல் அவரே
               வேதன் மாலினும் விழுமியர் எவற்றினும் மிக்கார். ......    227

வேறு

(உற்பல வரையின்)

உற்பல வரையின் வாழ்வோர் ஓரொரு தருமஞ் செய்யில்
     பற்பல வாகி யோங்கும் பவங்களில் பலசெய் தாலுஞ்
          சிற்பம தாகி யொன்றாய்த் தேய்ந்திடும் இதுவே யன்றி
               அற்புத மாக இங்ஙன் அநந்தகோ டிகளுண் டன்றே. ......    228

(என்றிவை குமரன் கூற எயி)

என்றிவை குமரன் கூற எயினர்தம் பாவை கேளா
     நன்றென வுவகை யெய்தி நானில வரைப்பி னுள்ள
          குன்றிடைச் சிறந்த இந்தத் தணிகைமால் வரையின் கொள்கை
               உன்றிரு வருளால் தேர்ந்தே உய்ந்தனன் தமியன் என்றாள். ......    229

(இவ்வரை ஒருசார்)

இவ்வரை ஒருசார் தன்னில் இராறுதோ ளுடைய எந்தை
     மைவிழி யணங்குந் தானும் மாலயன் உணரா வள்ளல்
          ஐவகை யுருவில் ஒன்றை ஆகம விதியால் உய்த்து
               மெய்வழி பாடு செய்து வேண்டியாங் கருளும் பெற்றான். ......    230

(கருத்திடை மகிழ்வும்)

கருத்திடை மகிழ்வும் அன்புங் காதலுங் கடவ முக்கண்
     ஒருத்தனை வழிபட் டேத்தி ஒப்பிலா நெடுவேல் அண்ணல்
          மருத்தொடை செறிந்த கூந்தல் வள்ளிநா யகியுந் தானுஞ்
               செருத்தணி வரையில் வைகிச் சிலபகல் அமர்ந்தான் அன்றே. ......    231

(தள்ளரும் விழைவின்)

தள்ளரும் விழைவின் மிக்க தணிகையின் நின்றும் ஓர்நாள்
     வள்ளியுந் தானு மாக மானமொன் றதனிற் புக்கு
          வெள்ளியங் கிரியின் பாங்கர் மேவிய கந்த வெற்பில்
               ஒள்ளிணர்க் கடப்பந் தாரோன் உலகெலாம் வணங்கப் போனான். ......    232

(கந்தவெற் பதனிற்)

கந்தவெற் பதனிற் சென்று கடிகெழு மானம் நீங்கி
     அந்தமில் பூதர் போற்றும் அம்பொனா லயத்தின் ஏகி
          இந்திரன் மகடூஉ வாகும் ஏந்திழை இனிது வாழும்
               மந்திர மதனிற் புக்கான் வள்ளியுந் தானும் வள்ளல். ......    233

(ஆரணந் தெரிதல்)

ஆரணந் தெரிதல் தேற்றா அறுமுகன் வரவு நோக்கி
     வாரண மடந்தை வந்து வந்தனை புரிய அன்னாள்
          பூரண முலையும் மார்பும் பொருந்துமா றெடுத்துப் புல்லித்
               தாரணி தன்னில் தீர்ந்த தனிமையின் துயரந் தீர்த்தான். ......    234

(ஆங்கது காலை வள்ளி)

ஆங்கது காலை வள்ளி அமரர்கோன் அளித்த பாவை
     பூங்கழல் வணக்கஞ் செய்யப் பொருக்கென எடுத்துப் புல்லி
          ஈங்கொரு தமிய ளாகி இருந்திடு வேனுக் கின்றோர்
               பாங்கிவந் துற்ற வாறு நன்றெனப் பரிவு கூர்ந்தாள். ......    235

(சூர்க்கடல் பருகும்)

சூர்க்கடல் பருகும் வேலோன் துணைவியர் இருவ ரோடும்
     போர்க்கடல் கொண்ட சீயப் பொலன்மணி அணைமேற் சேர்ந்தான்
          பாற்கடல் அமளி தன்னில் பாவையர் புறத்து வைகக்
               கார்க்கடற் பவள வண்ணன் கருணையோ டமரு மாபோல். ......    236

(செங்கனல் வடவை)

செங்கனல் வடவை போலத் திரைக்கடல் பருகும் வேலோன்
     மங்கையர் இருவ ரோடு மடங்கலம் பீட மீதில்
          அங்கினி திருந்த காலை அரமகள் அவனை நோக்கி
               இங்கிவள் வரவு தன்னை இயம்புதி எந்தை யென்றாள். ......    237

வேறு

(கிள்ளை அன்னசொற்)

கிள்ளை அன்னசொற் கிஞ்சுகச் செய்யவாய்
     வள்ளி தன்மையை வாரணத் தின்பிணாப்
          பிள்ளை கேட்பப் பெருந்தகை மேலையோன்
               உள்ள மாமகிழ் வால்இவை ஓதுவான். ......    238

(நீண்ட கோலத்து)

நீண்ட கோலத்து நேமியஞ் செல்வர்பால்
     ஈண்டை நீவிர் இருவருந் தோன்றினீர்
          ஆண்டு பன்னிரண் டாமள வெம்புயம்
               வேண்டி நின்று விழுத்தவம் ஆற்றினீர். ......    239

(நோற்று நின்றிடு)

நோற்று நின்றிடு நுங்களை எய்தியாம்
     ஆற்ற வும்மகிழ்ந் தன்பொடு சேருதும்
          வீற்று வீற்று விசும்பினும் பாரினும்
               தோற்று வீரென்று சொற்றனந் தொல்லையில். ......    240

(சொன்ன தோர்முறை)

சொன்ன தோர்முறை தூக்கி இருவருள்
     முன்ன மேவிய நீமுகில் ஊர்தரு
          மன்னன் மாமக ளாகி வளர்ந்தனை
               அன்ன போதுனை அன்பொடு வேட்டனம். ......    241

(பிளவு கொண்ட)

பிளவு கொண்ட பிறைநுதற் பேதைநின்
     இளைய ளாய்வரும் இங்கிவள் யாம்பகர்
          விளைவு நாடி வியன்தழன் மூழ்கியே
               வளவி தாந்தொல் வடிவினை நீக்கினாள். ......    242

(பொள்ளெ னத்தன்)

பொள்ளெ னத்தன் புறவுடல் பொன்றலும்
     உள்ளி னுற்ற வுருவத் துடன்எழீஇ
          வள்ளி வெற்பின் மரம்பயில் சூழல்போய்த்
               தெள்ளி தில்தவஞ் செய்திருந் தாளரோ. ......    243

(அன்ன சாரல் அதனி)

அன்ன சாரல் அதனில் சிவமுனி
     என்னு மாதவன் எல்லையில் காலமாய்
          மன்னி நோற்புழி மாயத்தின் நீரதாய்ப்
               பொன்னின் மானொன்று போந்துல வுற்றதே. ......    244

(வந்து லாவும் மறித)

வந்து லாவும் மறிதனை மாதவன்
     புந்தி மாலொடு பொள்ளென நோக்கலும்
          அந்த வேலை யதுகருப் பங்கொள
               இந்த மாதக் கருவினுள் எய்தினாள். ......    245

வேறு

(மானிவள் தன்னை)

மானிவள் தன்னை வயிற்றிடை தாங்கி
     ஆனதொர் வள்ளி அகழ்ந்த பயம்பில்
          தானருள் செய்து தணந்திட அங்கட்
               கானவன் மாதொடு கண்டனன் அன்றே. ......    246

(அவ்விரு வோர்களும்)

அவ்விரு வோர்களும் ஆங்கிவள் தன்னைக்
     கைவகை யிற்கொடு காதலொ டேகி
          எவ்வமில் வள்ளி யெனப்பெயர் நல்கிச்
               செவ்விது போற்றினர் சீர்மக ளாக. ......    247

(திருந்திய கானவர்)

திருந்திய கானவர் சீர்மக ளாகி
     இருந்திடும் எல்லையில் யாமிவள் பாற்போய்ப்
          பொருந்தியும் வேட்கை புகன்றும் அகன்றும்
               வருந்தியும் வாழ்த்தியும் மாயைகள் செய்தேம். ......    248

(அந்தமில் மாயைகள்)

அந்தமில் மாயைகள் ஆற்றிய தற்பின்
     முந்தை யுணர்ச்சியை முற்றுற நல்கித்
          தந்தை யுடன்தமர் தந்திட நென்னல்
               இந்த மடந்தையை யாமணஞ் செய்தேம். ......    249

(அவ்விடை மாமண)

அவ்விடை மாமண மாற்றி அகன்றே
     இவ்விவள் தன்னுடன் இம்மென ஏகித்
          தெய்வ வரைக்கணொர் சில்பகல் வைகி
               மைவிழி யாய்இவண் வந்தனம் என்றான். ......    250

(என்றிவை வள்ளி)

என்றிவை வள்ளி இயற்கை அனைத்தும்
     வென்றிடு வேற்படை வீரன் இயம்ப
          வன்றிறல் வாரண மங்கை வினாவி
               நன்றென ஒன்று நவின்றிடு கின்றாள். ......    251

வேறு

(தொல்லையின் முராரி)

தொல்லையின் முராரி தன்பால் தோன்றிய இவளும் யானும்
     எல்லையில் காலம் நீங்கி யிருந்தனம் இருந்திட் டேமை
          ஒல்லையில் இங்ஙன் கூட்டி யுடனுறு வித்த உன்றன்
               வல்லபந் தனக்கி யாஞ்செய் மாறுமற் றில்லை என்றாள். ......    252

(மேதகும் எயினர்)

மேதகும் எயினர் பாவை விண்ணுல குடைய நங்கை
     ஓதுசொல் வினவி மேனாள் உனக்கியான் தங்கை யாகும்
          ஈதொரு தன்மை யன்றி இம்மையும் இளைய ளானேன்
               ஆதலின் உய்ந்தேன் நின்னை அடைந்தனன் அளித்தி என்றாள். ......    253

(வன்றிறல் குறவர்)

வன்றிறல் குறவர் பாவை மற்றிது புகன்று தௌவை
     தன்றிருப் பதங்கள் தம்மைத் தாழ்தலும் எடுத்துப் புல்லி
          இன்றுனைத் துணையாப் பெற்றேன் எம்பிரான் அருளும் பெற்றேன்
               ஒன்றெனக் கரிய துண்டோ உளந்தனிற் சிறந்த தென்றாள். ......    254

(இந்திரன் அருளும்)

இந்திரன் அருளும் மாதும் எயினர்தம் மாதும் இவ்வா
     றந்தரஞ் சிறிது மின்றி அன்புடன் அளவ ளாவிச்
          சிந்தையும் உயிருஞ் செய்யுஞ் செயற்கையுஞ் சிறப்பு மொன்றாக்
               கந்தமு மலரும் போலக் கலந்துவே றின்றி யுற்றார். ......    255

(இங்கிவர் இருவர்)

இங்கிவர் இருவர் தாமு மியாக்கையும் உயிரும் போலத்
     தங்களில் வேறின் றாகிச் சரவண தடத்தில் வந்த
          புங்கவன் தன்னைச் சேர்ந்து போற்றியே ஒழுக லுற்றார்
               கங்கையும் யமுனை தானுங் கனைகட லுடன்சேர்ந் தென்ன. ......    256

(கற்றையங் கதிர்வெண்)

கற்றையங் கதிர்வெண் டிங்கள் இருந்துழிக் கனலிப் புத்தேள்
     உற்றிடு தன்மைத் தென்ன உம்பர்கோன் உதவு மானும்
          மற்றைவில் வேடர் மானும் வழிபடல் புரிந்து போற்ற
               வெற்றியந் தனிவேல் அண்ணல் வீற்றிருந் தருளி னானே. ......    257

(கல்லகங் குடைந்த)

கல்லகங் குடைந்த செவ்வேற் கந்தனோர் தருவ தாகி
     வல்லியர் கிரியை ஞான வல்லியின் கிளையாய்ச் சூழப்
          பல்லுயிர்க் கருளைப் பூத்துப் பவநெறி காய்த்திட் டன்பர்
               எல்லவர் தமக்கு முத்தி இருங்கனி உதவும் என்றும். ......    258

(பெண்ணொரு பாக)

பெண்ணொரு பாகங் கொண்ட பிஞ்ஞகன் வதனம் ஒன்றில்
     கண்ணொரு மூன்று வைகுங் காட்சிபோல் எயினர் மாதும்
          விண்ணுல குடைய மாதும் வியன்புடை தன்னின் மேவ
               அண்ணலங் குமரன் அன்னார்க் கருள்புரிந் திருந்தான் அங்கண். ......    259

(சேவலுங் கொடிமான்)

சேவலுங் கொடிமான் தேருஞ் சிறைமணி மயிலுந் தொன்னாள்
     மேவருந் தகரும் வேலும் வேறுள படைகள் யாவும்
          மூவிரு முகத்து வள்ளல் மொழிந்திடு பணிகள் ஆற்றிக்
               கோவிலின் மருங்கு முன்னுங் குறுகிவீற் றிருந்த மன்னோ. ......    260

(ஆறிரு தடந்தோள் வாழ்க)

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
     கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
          ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
               மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியார் எல்லாம். ......    261

(புன்னெறி அதனிற்)

புன்னெறி அதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம்
     நன்னெறி ஒழுகச் செய்து நவையறு காட்சி நல்கி
          என்னையும் அடியன் ஆக்கி இருவினை நீக்கி யாண்ட
               பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங் கயங்கள் போற்றி. ......    262

வேறு

(வேல்சேர்ந்த செங்கை)

வேல்சேர்ந்த செங்கைக் குமரன்வியன் காதை தன்னை
     மால்சேர்ந் துரைத்தேன் தமிழ்ப்பாவழு வுற்ற தேனும்
          நூல்சேர்ந்த சான்றீர் குணமேன்மை நுவன்று கொள்மின்
               பால்சேர்ந் ததனாற் புனலும்பய னாவ தன்றே. ......    263

(பொய்யற்ற கீரன்)

பொய்யற்ற கீரன் முதலாம்புல வோர்பு கழ்ந்த
     ஐயற் கெனது சிறுசொல்லும் ஒப்பாகும் இப்பார்
          செய்யுற் றவன்மால் உமைபூசைகொள் தேவ தேவன்
               வையத்த வர்செய் வழிபாடு மகிழும் அன்றே. ......    264

(என்னா யகன்விண்)

என்னா யகன்விண் ணவர்நாயகன் யானை நாமம்
     மின்னா யகனான் மறைநாயகன் வேடர் நங்கை
          தன்னா யகன்வேல் தனிநாயகன் தன்பு ராணம்
               நன்னா யகமா மெனக்கொள்கஇஞ் ஞால மெல்லாம். ......    265

(வற்றா அருள்சேர்)

வற்றா அருள்சேர் குமரேசன்வண் காதை தன்னைச்
     சொற்றாரும் ஆராய்ந் திடுவாருந் துகளு றாமே
          கற்றாருங் கற்பான் முயல்வாருங் கசிந்து கேட்கல்
               உற்றாரும் வீடு நெறிப்பாலின் உறுவர் அன்றே. ......    266

(பாராகி ஏனைப் பொரு)

பாராகி ஏனைப் பொருளாய் உயிர்ப்பன் மையாகிப்
     பேரா வுயிர்கட் குயிராய்ப் பிறவற் றுமாகி
          நேராகித் தோன்றல் இலாதாகி நின்றான் கழற்கே
               ஆராத காத லொடுபோற்றி அடைதும் அன்றே. ......    267

ஆகத் திருவிருத்தம் - 10345




*1. பா-ம்: விந்தை.

(எண் = செய்யுளின் எண்)

*1-1. நங்கை - தெய்வயானையம்மை.

*1-2. எயினர் - வேடர்.

*1-3. வள்ளி - வள்ளியம்மை.

*1-3. வதுவை - திருமணம்.

*2. மேற்பாடி - இஃது ஓர் ஊர்.

*4-1. ஆரம் - ஆத்தி.

*4-2. குரவு - ஒரு மரப்பூ.

*4-3. கூவிளம் - வில்வம்.

*5-1. அருவிக்கு நூலும், மேகத்திற்கு தோலும் உவமையாகும்.

*5-2. தோல் - மான்தோல்.

*5-3. நாகம் - மலை.

*6-1. வானதி - ஆகாயகங்கை.

*6-2. நீள்கிரி - இது மாயவனுக்கும் உவமையாம்.

*6-3. திருமாலுக்கும் கங்கைக்கும் முறையே முருகன் மருமகனும் மகனும் ஆதலால், முருகன் வள்ளியுடன் இருத்தலை இருவரும் காண விழைவர் ஆதலின் இங்குத் திருமாலும் கங்கையும் பொருந்துமாறு பொருள்படுதல் காண்க.

*7. பிள்ளைமைத்தொழில் - குழந்தைகள் விளையாடும் விளையாட்டு. இது களவொழுக்கமாகப் பலவேடங்கள் பூண்டு முருகன் விளையாடிய விளையாட்டு ஆகும்.

*8-1. குன்றுவித்து - குன்றிமணி.

*8-2. கழை - மூங்கில்.

*8-3. சையம் - மலை.

*8-4. தாரகாகணங்கள் - நட்சத்திரங்கள்.

*9-1. தவளம் - முல்லை.

*9-2. பொதும்பர் - சோலை.

*10-1. அளி - வண்டு.

*10-2. குண்டு - ஆழம்.

*10-3. பிறங்கள் - மலை.

*11-1. சூரியன் முதலோர் - சூரியன் சந்திரன் முதலியோர்.

*11-2. மதலை - தூண்.

*11-3. கண்ணடி - கண்ணாடி.

*12-1. இணர் - பூங்கொத்து.

*12-2. கணி - வேங்கை.

*12-3. வாவி - உலவி.

*12-4. வெள்ளில் - விளாமரம்.

*12-5. வள்ளியர் - கொடையாளி.

*12-6. இங்கு, விளாமரம் மானுடத்தன்மை அற்றார்க்கு இணையாதல் காண்க.

*15-1. நிறை - மன அடக்கம்.

*15-2. விடர் - பிளவு.

*15-3. அளை - குகை.

*18-1. குறிச்சி - சிற்றூர்.

*18-2. கிராதர் - வேடர்.

*18-3. நம்பி - நம்பிராசன்.

*18-4. தெய்வதம் - இஷ்டதேவதை.

*20-1. புல்லாய் - சிறியவாய்.

*20-2. குளப்பு - குளம்பு.

*20-3. மறிப்பிணை - பெண்மான்.

*21-1. நவ்வி - மான்.

*21-2. பிறன்இல் - அயலான் மனைவி.

*21-3. தூர்த்தனின் - காமுகனைப்போல.

*22-1. ஏமத்தின் வடிவு - பொன்போலும் வடிவு; இன்பத்தைத் தரும் உறுப்புமாம்.

*22-2. ஊமத்தம் - ஊமத்தங்காய்.

*22-3. உன்மத்தன் - ஒன்றுந் தோன்றாது மயங்கி இருப்போன்.

*23. கடவுளர் புணர்ச்சி உள்ளப் புணர்ச்சியே அன்றி மெய்யுறு புணர்ச்சி அன்று என்பதை விளக்க 'கடவுளர் புணர்ச்சி யென்ன' என்றார். இருவரிடத்தும் காதல் நேர்ந்துழியெல்லாம் காந்தர்வம் என்பது வேதநூல் முடிபாம். ஆதலால் காட்சியால் இன்பந்துய்த்தல் உண்டு. உள்ளப்புணர்ச்சி என்பது காட்சியால் இன்பந்துய்த்தலைக் காட்டிற்று என்க.

*25-1. மானிடத்தில் வருமைந்தன் - சிவபெருமானிடத்தில் அவதரித்த முருகன்.

*25-2. முந்து - முன்னாளில்.

*25-3. மருமானிடத்தில் - மகனாகிய பிரமனிடத்தில்.

*25-4. மானாகும் - வெள்ளைப் பன்றியாகிய.

*25-5. மான்மகள் - திருமாலின் புதல்வியான சுந்தரி என்பவள்.

*27. ஏனல் - தினை.

*28-1. பிணா - பெண்.

*28-2. எயின் - வேடர்.

*28-3. புலம் - கொல்லை.

*30-1. குறுந்தொடி - சிறுவளையல்.

*30-2. கோல்வளை - ஒருவகை வளையல்.

*33. பைங்கூழ் - பசியபயிர்.

*34. கொடிச்சி - வேடப்பெண்.

*35-1. நந்தா - கெடாத.

*35-2. இந்தா - இங்கு; இவ்விடத்து.

*35-3. சிந்தாகுலந் தீர - மனவருத்தம் நீங்க.

*36. தோள்புடைத்தான் - தோளைத்தட்டினான்; புயன்பூரித்தான் எனினுமாம்.

*37. வயா - கருப்பம்.

*39-1. விடை - கடா.

*39-2. கெண்டி - வெட்டி.

*39-3. தொண்டகம் - குறிஞ்சி நிலப்பறை.

*39-4. குரவை - கைகோத்தாடும் ஒரு கூத்து.

*40-1. கடவுட்பலி - கடவுளான முருகவேள் பூசை.

*40-2. மறி - ஆடு.

*40-3. வேலனை - தேவராளனை.

*42. வள்ளிப்படுகுழி - வள்ளிக்கிழங்குகளையுடைய குழி.

*43-1. தமர் - தம்மைச் சேர்ந்தவர்.

*43-2. முதுவர் - கிழவர்கள்.

*43-3. கொம்மை - திரட்சி.

*44-1. சில்லை - இழிந்தபுல்.

*44-2. தொல்லை தனித்தந்தை தோன்றி அமர்வுற்றதுபோல் - முன்னாளில் தனது தந்தையாகிய கண்ணன் அரசர் குடியில் தோன்றி ஆயர் குடியில் புகுந்ததைப்போல்.

*45. அமுதை - அமுதம் போன்றவளாகிய வள்ளியை.

*46. அட்டு - சமைத்து.

*48-1. அம்மனை - தாய்.

*48-2. வேடர்தம் பெண்மக்கள் மங்கைப்பருவம் அடைந்தவுடன் தினைப்புனங்காத்தல் வேண்டும் என்பது முறையாதலின் 'தங்குலத்தின் முறை' என்றார்.

*49-1. கடவுள் மணி - சிந்தாமணி.

*49-2. குருகு - குருவிகள்.

*49-3. பூட்டுசிலைக்கையார் - வேடர்கள்.

*50-1. கேகயம் - மயில்.

*50-2. பொருள்நூல் - பொருள் இலக்கணம்: அஃது அகப்பொருள் ஆகும்.

*52-1. தட்டை - கிளிகடி கருவி.

*52-2. குளிர் - கவண்.

*52-3. தழல் - தீ.

*53-1. எய் - முட்பன்றி.

*53-2. இரலை - கருமான்.

*53-3. மரைமான் - இவை மானின் வகைகள்.

*53-4. குரல் - கதிர்.

*54-1. பூவை - நாகணவாய்ப் பறவை.

*54-2. புறவம் - புறா.

*54-3. ஆலோலம் - இது பறவை முதலியவைகளை நயமாக ஓட்டும் ஒருவகை இன்னோசை.

*55. தணிகைமலை - திருத்தணிகை மலை.

*56-1. சூரல் - பிரம்பு.

*56-2. வாரியும் வடித்து உந்தியும் வரிசையால் உறழ்ந்தும் - வார்தல் வடித்தல் உந்தல் முறையாக உறழ்தல் என்னும் திறத்துடன்; (சிலப் - புகார் - கானல்வரியின் உரையைக் காண்க).

*57-1. வள்ளி மால்வரை - வள்ளிமலை.

*57-2. புளினர் - வேடர்.

*57-3. புளினர்பாவை - வள்ளி நாயகி.

*59-1. மூர்த்தம் ஒன்றில் - நாள் ஒன்றுக்கு.

*59-2. மூன்று பூ - மூன்று செங்காவி மலர்.

*59-3. மலர் - அலர்கின்ற.

*59-4. தீர்த்திகைச் சுனை - தீர்த்தமாகிய சுனை.

*59-5. சிகரம் - தணிகை; மலையுச்சி.

*61-1. மோன நற்றவ முனிவன் - சிவமுனி.

*61-2. இதணில் - பரணின்மேல்.

*62. கையனேன் - சிறியேன்.

*64-1. சென்றி - செல்வாய்.

*64-2. கன்றுதல் - வருந்துதல்.

*65. செவகன் - வீராதி வீரனாகிய குமரவேள்.

*66-1. குஞ்சி - குடுமி.

*66-2. வேட்டுவக் கோலத்தைக்கொடு - வேட்டுவ வடிவத்தை எடுத்து; வேட்டையாடும் அரசர் கோலத்தைக்கொண்டு எனினுமாம்.

*67. கிளவி - மொழியினையுடைய.

*68-1. பிண்டி - மாவு.

*68-2. வைத்த - புதைத்த.

*69-1. மஞ்சு - மேகம்.

*69-2. கடம்பு - ஓர்மலர்.

*70-1. நாந்தகம் - வாள்.

*70-2. புளினர் - வேடர்.

*72. விரகம் - காமநோய்.

*74-1. செய்யவள் - திருமகள்.

*74-2. எய் - முட்பன்றி.

*74-3. உளியம் - கரடி.

*74-4. இரலை - ஊதுகொம்பு.

*75-1. அடிமுதல் - அடிப்பாகம்.

*75-2. சிவநூல் - சிவாகமம்.

*75-3. கவடு - கிளை.

*75-4. வேங்கை - வேங்கைமரம்.

*76-1. கடமான் - ஒருவகை மான்.

*76-2. திற்றிகள் - தின்பதற்குரியன.

*76-3. யாணர் - புதுமையான.

*78-1. கதிர் - சூரிய கிரணத்தை.

*78-2. கணி - வேங்கைமரம்.

*78-3. பராபரை - பெரிய அடிப்பாகத்தை.

*78-4. கணிச்சிதன்னால் - கோடரியால்.

*80. தையல் - வள்ளிநாயகி.

*81. குன்றுவன் - நம்பிராசன்.

*84. கோங்கு - கோங்கரும்பு.

*85-1. மா - மான்; மாவடுவுமாம்.

*85-2. பாவியன் - பாவியென்.

*87-1. கோடு - சிகரங்கள்.

*87-2. நெடுவரை - வள்ளிமலை.

*88. புல்லிது - இழிந்தது.

*90. தாழ்ச்சி - தாழ்மை.

*91. 'புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ' என்னும் பழமொழி இங்கு விளங்குதல் காண்க.

*92. தொண்டகம் - குறிஞ்சி நிலப்பறை.

*94. சைவ நெறி நற்றவ விருத்த வேடம் - சைவ சந்நியாச வேடங்கொண்ட வயோதிக வடிவம்.

*96. பூதி - விபூதி.

*97-1. ஆண்டொழில் - ஆண்மைத்தன்மை.

*97-2. அண்ணல் - இங்கு வேட அரசன்.

*97-3. ஈண்டு நும் வரைக்குமரி எய்தி இனிது ஆட வேண்டி - இவ்விடத்திலுள்ள உம் மலையிலுள்ள குமரித் தீர்த்தத்தை அடைந்து ஆட விரும்பி; இவ்விடத்திலிருக்கின்ற உன்னுடைய மலையில் பிறந்த குமரியாகிய வள்ளியை அடைந்து செவ்வனே புணர்தற்கு விரும்பி எனப் பொருள்கொள்ளுதலுமாம். இது சிலேடைப் பொருளாகும்.

*99. அருந்தவன் - தவசி.

*100-1. நலிவது - வருந்துகின்றது.

*100-2. வேனில் - வெய்யில்.

*100-3. உண்ணீர்விடாய் - தண்ணீர்த்தாகம்.

*102-1. பூவையோ: விளி: ஆகுபெயராய் வள்ளி நாயகியை உணர்த்திற்று.

*102-2. புலர்ந்து - நாவுலர்ந்து.

*105. ஈறுஇல் - அழிவற்ற.

*106-1. தவத்தோர் வேடம் - தவவேடம்.

*106-2. ஆலாலம் - விஷம்.

*106-3. ஐயர் - தவ வேடங்கொண்ட வயோதிகர். இங்குப் பால் தவவேடத்திற்கும் விஷம் துர்ச்செயலுக்கும் உவமை ஆகும்.

*107. இச்செய்கைதனை - உமது தகாத செய்கையை.

*108-1. நத்துப்புரைமுடியீர் - சங்கினை ஒத்த வெண்மையான தலைமயிரனையுடையீர்.

*108-2. கொத்துக்கெலாம் - வமிசத்தினர்க்கெல்லாம்.

*108-3. எத்துக்கு - எதற்கு.

*109-1. சேவலாய் - காவலாக.

*109-2. நாவலோய் - அறிவுடையோனே.

*110. தந்தி முகத்து எந்தை - விநாயகக் கடவுள்.

*111. வாரணப் பொருப்பு - மலையனைய யானையாக.

*112-1. நீர் சொற்றபடி செய்வேன் - நீங்கள் கூறியபடி நான் நடப்பேன்.

*112-2. ஒரு பால் சேர்ந்து - தவசியின் ஒருபுறத்தை அடைந்து சேர்ந்து.

*113-1. பிடி - வள்ளிநாயகி.

*113-2. மருப்பு - இங்கு முலைகள்.

*113-3. எறுழ் - வலிமை.

*114-1. கடவுட்களிறு - விநாயகர்.

*114-2. புனைஇழை - வள்ளி.

*115-1. கன்னிதனை - வள்ளி நாயகியை.

*115-2. காவினில் - சோலையில்.

*115-3. கலந்து - கூடிமகிழ்ந்து.

*116-1. கொன் - பெருமை.

*116-2. வை - கூர்மை.

*116-3. விறலோன் - வெற்றியினையுடைய முருகக் கடவுள்.

*117-1. பாரா - தரிசித்து.

*117-2. வியரா - வியர்த்து.

*117-3. ஆராதகாதல் - நிறையாக்காதல்.

*118-1. முயங்காமல் - அணையாமல்.

*118-2. கொன்னே - வீணாக.

*119-1. உம்மை - முன் சனனம்.

*119-2. இம்மை - இப்பிறவி.

*119-3. எங்கள் அம்மை - வள்ளிநாயகி.

*122-1. நாற்றம் - வாசனை. தோற்றம் - உருவம். ஒழுக்கம் - நடத்தை. மாற்றம் - சொல். செய்கை - செயல். மனம் - உள்ளம். இவைகள் பெண்களிடம் வேற்றுமையாதல் காமம் நுகர்ந்தமைக்கு அடையாளங்கள் ஆகும்.

*122-2. தேற்றம் - துணிவு.

*122-3. இகுளை - தோழி.

*125-1. சுளித்து - கோபித்து.

*125-2. ஓர் குற்றமது - ஒரு பழியை.

*127. வேட்டமது அழுங்கிய - வேட்டையால் இளைத்த.

*128-1. பகுவாய் - பிளந்தவாய்.

*128-2. ஒருத்தல் - ஆண் யானை.

*128-3. இவண் - இவ்விடம்.

*129-1. உமக்குநேர் ஒத்துவாழும் நீரருக்கு - உமது வன்மைக்கு ஒப்பாக வாழும் தன்மையினரிடம்.

*129-2. ஏழையேங்களுக்கு - பெண்களாகிய எங்களுக்கு.

*130-1. வேடர்கோலம் - வேடர் பறவை முதலியவற்றை வேட்டையாடும்போது நேரே பாராமல் குறிப்பாகப்பார்க்கும் தன்மை; இது வஞ்சப்பார்வை ஆகும்.

*130-2. இருவர் மையல் - வள்ளிநாயகி, வேடவடிவுகொண்ட முருகன் இவர்களின் காதல்.

*132-1. பற்று - விருப்பம்.

*132-2. நும் பணிகள் - உங்கள் கட்டளைகளை.

*133-1. மண்ணில் நாட்டவோ - உலகத்தில் நிறுத்தவோ.

*133-2. மறவர் - வேடர்.

*133-3. பெரியவர் - உயர்குலத்தோர்.

*134. சீதரன் தரும் அமிர்தினை - திருமால் பெற்ற மகளான அமிர்தம் போல்பவளை.

*135-1. ஒன்றும் தேர்கிலர் - ஒன்றையும் உணரார்.

*135-2. நெறிப்படுத்து - முறையாக.

*136-1. தோகையோடு - உனது துணைவியாகிய மயில்போன்ற வள்ளிநாயகியுடன்.

*136-2. கிழிதனில் - துணியில்.

*136-3. கோலம் - வடிவு.

*136-4. தீட்டி - எழுதி.

*136-5. மாமடல் ஏறி - பனைமடலால் ஆகிய குதிரைமீது ஏறி.

*137. இம்மாதவித்தருச் சூழலில் - இக்குருக்கத்தி மரச்செறிவினிடத்து.

*138-1. மங்குல் - மேகம்.

*138-2. கண்வளருதல் - படிதல்.

*138-3. பொங்கர் - சோலை.

*139. பிள்ளை காதலும் - இளையோன் காதலும். பிறவும் என்றது மடலேறுவேன் என்று தலைவன் கூறியதை.

*140. அகவும் - கூவும்; ஆடும் எனினுமாம்.

*141-1. கோடல்கள் - காந்தள் மலர்கள்.

*141-2. குற்று - பறித்து.

*142-1. வகை - (பிரிதற்குரிய) வகையினை.

*142-2. தையல் - வள்ளிநாயகி.

*143. வடு - மாவடு.

*144-1. உந்தை - உனது தந்தை. பிறரும் என்றது தோழி முதலியவர்களை.

*144-2. படர்தி - செல்லுவாய்.

*146. நைவளம் - ஒரு பண்.

*148. கணிகளும் சொற்ற - வேங்கைகளும் மலர்ந்து கூறியன.

*150. புங்கவர்க்கு - முருகப்பெருமானுக்கு.

*151. கோவில் வைப்பு - நம்பிவேடனுடைய குடில்.

*152. இற்செறித்தல் - இனிவெளியே போகக்கூடாது என்று ஆணையிட்டு வீட்டில் இருக்கச்செய்தல்.

*154-1. நுடங்குதல் - துவளுதல்.

*154-2. இறைவளை - கை வளையல்.

*154-3. பீர் - பசலை; அச்சமுமாம்.

*154-4. சூர் - தெய்வம்.

*154-5. சூர்ப்பகை தொட்டது ஓரார் - சூரருக்குப்பகையான முருகக் கடவுள் தொட்டதனை அறியாதார்.

*155-1. முந்தையின் - முன்னாளிற்போல்.

*155-2. முதியாள் - தெவராட்டி; இவளைச் சாமியாடி என்பர்.

*155-3. வெறிஅயர்வித்தார் - வெறியாட்டு என்னும் விழவினைச் செய்தார்.

*155-4. வெறியாடல் - தெய்வத்தை அழைத்துக் குறிகேட்டல்.

*157-1. கன்னமூலம் - காதினடத்து.

*157-2. அவசம் - மயக்கம்.

*157-3. செவிலித்தாய் - வளர்ப்புத்தாய்.

*158-1. வனசரர் - வேடர்கள்.

*158-2. இருவி - தினைத்தாள்.

*159. கனம் - மேகம்.

*160-1. குற்றடி - சிறியஅடி.

*160-2. சுவடு - அடையாளம்.

*161-1. நடுநாள் யாமம் - நடு இரவு.

*161-2. புல்லிய - இழிந்த.

*161-3. குரவர் செம்மல் - வேட நம்பி.

*161-4. குரம்பை - குடில்.

*162. கங்குற்போதில் இங்கு வந்திடுவது ஒல்லாது - ஏற்று இழிவு உடைத்தாகிய இம்மலையில் பாம்பு, புலி, கரடி, யானை முதலியவற்றால் ஏதமுண்டாகும்; ஆதலால் இராக்காலத்தில் வருதல் தகுதி அன்று.

*163-1. வவ்வி - கவர்ந்து.

*163-2. சீரிது - நல்லது.

*165. இறைவ - இறைவனே!.

*166-1. மாத்தவ மடந்தை - வள்ளிநாயகி.

*166-2. கையடை - அடைக்கலம்.

*168. சேறி - செல்வாய்.

*170. வைகறை விடியல் - விடியற்காலம்; அற்றை நாட்பொழுது எனினுமாம்.

*171-1. சங்கு - சங்குவளையல்.

*171-2. கண்படை கொண்டது - உறங்கியது.

*174. தொடர்தும் - பின்பற்றுவோம்.

*175-1. ஈண்டி - ஒருங்குகூடி.

*175-2. இரலை - ஊது கொம்பு.

*175-3. குறித்தனர் - ஊதினர்.

*176. பட்டிமை நெறி - களவொழுக்கம்.

*178-1. உடம்பிடி - வேல்.

*178-2. வீட்டுதும் - அழிப்போம்.

*178-3. நம்பின் - நம்து பின்புறத்தில்.

*180. ஊதை - வெட்டிச் சுடுகின்ற.

*181-1. பரிதித்தேவை - சூரியனை.

*181-2. எழிலி - மேகம்.

*182. ஒட்டலர் - பகைவர்.

*183-1. சீயம் - சிங்கம்.

*183-2. மரை, மான் - மான் வகைகள்.

*185-1. முன்னையர் - தமையன்.

*185-2. அத்துணைவி - அந்த வள்ளிநாயகி.

*186-1. காண்டல் தொட்டு - கண்டதுமுதல்.

*186-2. அட்டு - கொன்று.

*188-1. விழுப்பம் - சிறப்பு.

*188-2. விசாகன் - முருகக் கடவுள்.

*192-1. நசையால் - ஆசையால்.

*192-2. தீங்கனல் சான்றா - நல்ல ஓமாக்கினி சாட்சியாக.

*192-3. வேட்டு - திருமணம் புரிந்து.

*193-1. மாதுலன் - மாமன்; வேடநம்பி.

*193-2. கோதிலா முனிவன் - இங்கு நாரத முனிவன்.

*196-1. குறிச்சி - மலைநாட்டுச் சிற்றூர்.

*196-2. வேங்கை அதள் - புலித்தோல்.

*197-1. நவிலல் - செய்தல்.

*197-2. முன்னுறு தெய்வக்கோலம் - முன்னே சுந்தரியாயிருந்த காலத்துள்ள அழகு.

*199-1. பாணிதன்னில் - கையில்.

*199-2. தண்புனல்தாரை உய்த்தான் - நீரினால் தாரைவார்த்தான்.

*202-1. கவுரி - உமாதேவியார்.

*202-2. பண்ணவர் - தேவர்கள்.

*204. தேவர்கோமான் - இந்திரன்; தேவர்களும் அவர்களுடைய அரசனான இந்திரனும் எனினுமாம்.

*207-1. விரைமலர் - நறுமணம் உள்ள மலர்.

*207-2. அறுகு தூர்த்தார் - அறுகம்புல்லைத் தூவினார். இங்கு அறுகு அரிசி கலந்த அறுகு. இதனைச் சேஷையிடுதல் என்பர்.

*208-1. இடி - மாவு.

*208-2. கந்தம் - கிழங்கு.

*209-1. கிராதர் - வேடர்.

*209-2. பராபரன் - சிவன்.

*210-1. குனியும் - வளையும்.

*210-2. செருத்தணிவரை - திருத்தணிகைமலை.

*214. செச்சை - வெட்சிமாலை.

*215. இந்தமால்வரை - இத்திருத்தணிகைமலை.

*216. இச்செய்யுள் செருத்தணி என்ற பெயர்க் காரணம் கூறுகிறது.

*217-1. மாநிழல் இறைவர் - மாமர நிழலில் எழுந்தருளிய ஏகாம்பரநாதர்.

*217-2. வடு - தழும்பு.

*217-3. அணுக - சமீபமாக.

*218-1. விரை - மணம்.

*218-2. வரை இடங்களில் - மலை இடங்களில்.

*219-1. கோடு - ஊதுகொம்பு.

*219-2. குரலால் - உரோமத்தால்; இன்னிசையால் எனினுமாம்.

*219-3. தந்திரி - வீணை.

*220. இந்த வெற்பினில் - இத்தணிகைமலையில்.

*221-1. சான்று - சாட்சி.

*221-2. காவி - செங்காவி மலர்க்கொடிகள்.

*223-1. ஆழிநீர் அரசு - வட்ட வடிவான கடல்.

*223-2. தவிரா - தவறாமல்.

*223-3. மாழை - மாவடு.

*224-1. பவம் - பாவம்.

*224-2. நம்பதம் - சாயுச்சியம்.

*225. வெஃகிய - விரும்பிய.

*228. உற்பலவரை - தணிகைமலை. இத்தணிகைமலையில் வாழ்வார் தீங்கினை ஒருபோதும் செய்யார் என்பார் செய்தாலும் என்ற எதிர்மறை உம்மைகொடுத்துக் கூறினார்.

*230. ஐவகை உருவு - சிவசாதாக்கியம், அமூர்த்தி சாதாக்கியம், மூர்த்தி சாதாக்கியம், கர்த்திரு சாதாக்கியம், கன்ம சாதாக்கியம் என ஐந்து வடிவு. ஒன்று என்றது கன்ம சாதாக்கியமாகிய பீடலிங்க வடிவை.

*232. மானம் - தேவ விமானம்.

*233. இந்திரன் மகடூஉ ஆகும் ஏந்திழை - தெய்வயானையம்மை.

*234. வாரண மடந்தை - தெய்வயானை.

*236-1. துணைவியர் - தெய்வயானையம்மை, வள்ளியம்மை.

*236-2. பாவையர் - திருமகள், நிலமகள். திருமால் கருநிறத்தை ஒழித்துப் பவளவண்ணன் ஆனதைக் காஞ்சிப்புராணத்துட் காணலாம்.

*237. அரமகள் - தெய்வயானையம்மை.

*238. கிஞ்சுகம் - முருக்கமலர்.

*239-1. நேமியஞ்செல்வன் - திருமால்.

*239-2. வேண்டி - (தழுவ) விரும்பி.

*240. தொல்லையில் - முன்னாளில்.

*242. பிளவுகொண்ட பிறை - எண்ணாட்டிங்கள்.

*243-1. புறவுடல் - தூலவுடல்.

*243-2. உள்ளின் உற்ற உருவம் - சூக்குமவுடல்.

*246. பயம்பில் - பள்ளத்தில்.

*249. தந்திடல் - தாரைவார்த் தளித்தல்.

*250. தெய்வவரை - திருத்தணிகைமலை.

*252. செய்மாறு - செய்யும் பதில் உபகாரம்.

*254. தௌவை - தமக்கை. இங்குத் தெய்வயானையம்மை.

*255-1. அந்தரம் - பேதம்.

*255-2. கலந்து - அளவளாவி.

*256. தெய்வயானையம்மைக்குக் கங்கையும், வள்ளியம்மைக்கு யமுனையும், முருகக் கடவுளுக்குக் கடலும் உவமையாகும்.

*257. கனலிப்புத்தேள் - அக்கினிதேவன்.

*258-1. கல்லகம் - கிரவுஞ்சமலை.

*258-2. கிரியை - கிரியாசத்தி.

*258-2. ஞானம் - ஞானசத்தி.

*258-3. பவநெறி - சனன மார்க்கம். இங்கு ஞானசத்தி தெய்வயானையம்மை, கிரியாசத்தி வள்ளியம்மை என்க.

*258-4. பவநெறி - பிறவி வழி.

*259. பிஞ்சகன் - தலைக்கோலம் உடையவன்; சிவன்.

*260-1. தேர் - இந்திர ஞாலத்தேர்.

*260-2. தகர் - ஆட்டுக்கடா.

*261-1. குக்குடம் - சேவல்.

*261-2. அடியார் எல்லாம் - வீரவாகு தேவர் முதலிய அடியவர்கள் யாவரும்.

*262-1. புன்நெறி அதனில் - இழிந்த காமவெகுளி மயக்கமாதிகளைத்தரும் பிறமதச் சார்பினில்.

*262-2. நன்னெறி - சைவ மார்க்கம்.

*262-3. காட்சி - சகள நிட்கள வடிவின் காட்சி.

*262-4. நல்கி - உள்ளும் புறமும் அளித்து.

*263. பாவழு - ஆனந்தம் முதலிய குற்றங்கள்.

*264. கீரன் முதலாம் பொய்யற்றபுலவோர் - நக்கீரர் முதலாகிய பொய்யடிமை இல்லாத சங்கப் புலவர்கள்.

*266-1. குமரேசன் வண்காதை - குமாரக் கடவுளின் சரிதம்.

*266-2. காதை - நடந்தவைகளையே கூறுவது.

*267. நின்றான் கழற்கே - நிட்கள வடிவாக நின்ற இறைவன் திருவடிகளுக்கே; நிட்கள சிவமே அடியவர்களை ஆட்கொள்ளச் சகள சிவமாக எழுந்தருளுவர் என்பது சித்தாந்தம்.

தக்ஷகாண்டம் முற்றுப் பெற்றது
கந்த புராணம் முற்றுப் பெற்றது
ஆகக் காண்டம் ஆறுக்குந் திருவிருத்தம் 10,345
கச்சியப்ப சிவாசாரியர் திருவடி வாழ்க



previous padalam   24 - வள்ளியம்மை திருமணப் படலம்   next padalamVaLLiammai thirumaNap padalam

previous kandam   6 - தக்ஷ காண்டம்   next kandam6 - dhaksha kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2017-2030

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact us if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by us (the owners and webmasters of www.kaumaram.com),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
we are NOT responsible for any damage caused by downloading any item from this website.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[xhtml] .[css]