(அன்ன வேலையில் ஆரிட)
அன்ன வேலையில் ஆரிடர் தம்மொடுந்
துன்னி னானொரு தொல்லிறைக் காகவே
முன்ன மாலமர் மூண்டெழ மற்றவன்
தன்னை வென்ற ததீசிஎன் பானரோ. ......
1(கடிது போந்து)
கடிது போந்து கடிமகச் சாலையின்
இடைய தாகி இமையவர் யாவரும்
அடையும் எல்லை அணுகலுங் கண்ணுறீஇக்
கொடிய தக்கன் குறித்துணர் கின்றனன். ......
2(ஆகும் ஆகும்)
ஆகும் ஆகும் அரற்குரித் தல்லன்இப்
பாக மாமகம் பார்க்கும் பொருட்டினால்
ஏகி னானெனக் கஞ்சி எனாநினைந்
தோகை யெய்தி உளங்குளிர்ப் பாகியே. ......
3(வருக ஈண்டென)
வருக ஈண்டென மற்றவன் தன்னிடை
ஒருபெ ருந்தவி சுய்த்தலும் மாதவர்
இரும ருங்கும் இருந்திட ஆயிடைப்
பொருவின் மாதவப் புங்கவன் மேவியே. ......
4(ஆக்கந் தீரும்)
ஆக்கந் தீரும் அயன்புதல் வன்தனை
நோக்கி எம்மை நொடித்ததென் நீயிவண்
ஊக்கி யுற்றதென் ஒல்லையில் யாவையும்
நீக்க மின்றி நிகழ்த்துதி யென்னவே. ......
5(தக்கன் ஆண்டுத்)
தக்கன் ஆண்டுத் ததீசியை நோக்கியே
நக்க னென்பவன் நான்பெறுங் கன்னியை
மிக்க காதலின் வேட்டொளித் தோர்பகல்
உக்க மேலுய்த் துயர்வரை ஏகினான். ......
6(போய பின்னைப்)
போய பின்னைப் புதல்விக்குத் தன்பெரு
மாயை செய்தனன் மற்றவர் தங்களை
ஆயு மாறவ் வகன்கிரி எய்தினேன்
ஏய தன்மை இருவருந் தேர்ந்தரோ. ......
7(அடுத்த பூதரை)
அடுத்த பூதரை ஆங்கவர் கூவியே
தடுத்தி டுங்களத் தக்கனை நம்முனம்
விடுத்தி ரல்லிர் விலக்குதி ராலென
எடுத்தி யம்பினர் ஏயினர் போலுமால். ......
8(இற்று ணர்ந்திலன்)
இற்று ணர்ந்திலன் ஏகினன் பூதர்கள்
நிற்றி நீயென்று நிந்தனை எண்ணில
சொற்ற லோடுந் துணையதில் வெள்ளியம்
பொற்றை நீங்கிப் புரம்புகுந் தேனியான். ......
9(தங்கண் மாநகர்)
தங்கண் மாநகர் சார்ந்தனன் நீங்குழி
எங்கண் மாதும் எனைவந்து கண்டிலள்
மங்கை யென்செய்வள் மற்றவன் மாயையால்
துங்க மேன்மை துறந்தனள் போயினாள். ......
10(அந்த வேலை அரும்)
அந்த வேலை அரும்பெரும் வேள்வியொன்
றெந்தை செய்துழி யான்சென் றரற்குமுன்
தந்த பாகந் தடுத்தனன் அவ்வழி
நந்தி சாபம் நவின்றனன் போயினான். ......
11வேறு(எறுழ்படு தண்ணு)
எறுழ்படு தண்ணுமை இயம்பு கையுடைச்
சிறுதொழி லவன்மொழி தீச்சொற் கஞ்சியே
முறைபடு வேள்வியை முற்றச் செய்திலன்
குறையிடை நிறுவினன் குரவ னாகியோன். ......
12(நஞ்சமர் களன்)
நஞ்சமர் களன்அருள் நந்தி கூறிய
வெஞ்சொலும் என்பெரு விரத முந்தெரீஇ
அஞ்சினர் இன்றுகா றாரும் வேள்வியை
நெஞ்சினும் உன்னலர் நிகழ்த்தும் வேட்கையால். ......
13(ஆனதொர் செயலு)
ஆனதொர் செயலுணர்ந் தையம் ஏற்றிடும்
வானவன் தனக்கவி மாற்றும் பான்மையான்
நானொரு வேள்வியை நடாத்து கின்றனன்
ஏனைய தோர்பயன் யாதும் வேண்டலன். ......
14(அப்பெரு மகந்தன)
அப்பெரு மகந்தனக் கமரர் மாதவர்
எப்பரி சனரும்வந் தீண்டு தொக்கனர்
ஒப்பருந் தவத்தினீர் உமக்கும் இத்திறஞ்
செப்பினன் விடுத்தனன் செயலி தென்னவே. ......
15வேறு(தண்ணளி புரித)
தண்ணளி புரித தீசி தக்கன துரையைக் கேளாப்
புண்ணியம் பயனின் றம்மா பொருளினிற் பவமே யென்னா
எண்ணினன் வினைக ளீட்டு இழிதகன் இயற்கை போலாம்
அண்ணல்தன் செயலும் என்னா அணியெயி றிலங்க நக்கான். ......
16(நக்கதோர் வேலை)
நக்கதோர் வேலை தன்னில் நலத்தகும் ஊழிக் கான்மேன்
மிக்கெழும் வடவை என்ன வெய்துயிர்த் துரப்பிச் சீறி
முக்கணன் அடியான் போலும் முறுவலித் திகழ்ந்தாய் என்னத்
தக்கனீ துரைத்த லோடுந் ததீசிமா முனிவன் சொல்வான். ......
17(மலரயன் முதலே)
மலரயன் முதலே யாக வரம்பிலா உயிரை முன்னந்
தலையளித் துதவு கின்ற தாதையாய் அளித்து மாற்றி
உலகெலா மாகி ஒன்றாய் உயிர்க்குயி ராகி மேலாய்
இலகிய பரனை நீத்தோ யாகம்ஒன் றியற்ற நின்றாய். ......
18(புங்கவர் எவர்க்கும்)
புங்கவர் எவர்க்கும் நல்கும் புவிபுகழ் அவிகொள் வானும்
அங்கியின் முதலும் வேள்விக் கதிபனும் அளிக்கின் றானுஞ்
சங்கரன் தானே வேதஞ் சாற்றுமால் மகத்துக் காதி
இங்கொரு தேவுண் டென்னின் எழுகென உரைத்தி மாதோ. ......
19(மாலயன் முதலோர்)
மாலயன் முதலோர் யாரும் வரம்பிலித் திருவை எய்த
மேலைநாள் அளித்தோன் தானும் விமலனும் இனையர்க் கெல்லாம்
மூலமுந் தனக்கு வேறோர் முதலிலா தவனும் எங்கள்
ஆலமர் கடவுள் அன்றி அமரரில் யாவர் அம்மா. ......
20(தேவதே வன்மா)
தேவதே வன்மா தேவன் சிறப்புடை ஈசன் எங்கோன்
மூவரின் முதல்வன் ஏகன் முடிவிற்கு முடிவாய் நின்றோன்
ஆவியுள் ஆவி யானோன் அந்தண னாதி என்றே
ஏவரை யிசைத்த அம்மா எல்லையில் மறைக ளெல்லாம். ......
21(விதிமுத லாகி)
விதிமுத லாகி உள்ளோர் வியனுயிர்த் தொகையாம் ஈசன்
பதியவன் பணிய தன்றே பரித்தனர் இனையர் எல்லாம்
இதுவுமச் சுருதி வாய்மை இவையெலாம் அயர்த்து வாளா
மதிமயங் கினையால் பேரா மாயையூ டழுந்து கின்றாய். ......
22(அந்தணர்க் காதி)
அந்தணர்க் காதி ஈசன் ஏனையோர்க் கரியே வேதா
இந்திரன் என்று வேதம் இயம்பிய மறையோர் தங்கண்
முந்தையின் முதலை நீத்து முறையகன் றொழுகல் பெற்ற
தந்தையை விலக்கி வேறு தேடுவான் தன்மை யன்றே. ......
23(ஆதலின் எவர்க்கும் மேலாம் ஆதி)
ஆதலின் எவர்க்கும் மேலாம் ஆதியை இகழா நிற்றல்
பேதைமை யன்றி யீதோர் பெருமித மன்றால் ஆற்ற
நோதக உன்னி யாரே நோற்பவர் அனைய நீயே
வேதம தொழுக்கம் நீத்திவ் வேள்வியைப் புரிய நின்றாய். ......
24(விலக்கினை மறையின்)
விலக்கினை மறையின் வாய்மை வேள்விசெய் யினுமுற் றாது
கலக்குமேல் அமல னாணை காண்டியால் அவனுக் கஞ்சா
வலத்தினர் யாவ ருண்டேல் மாய்வரே மறையும் எம்முன்
இலைப்பொலி சூலம் ஏந்தும் ஏகனென் றேத்திற் றன்றே. ......
25(ஆதியு முடிவும்)
ஆதியு முடிவும் இல்லா அமலனுக் கவியை நல்கி
வேதக முறைவ ழாது வேள்விஓம் புவது நாடாய்
தீதுநின் எண்ணம் என்னச் சிவன்தனக் கருள்பா கத்தை
மாதவன் தனக்கு நல்கி மாமகம் புரிவன் என்றான். ......
26(அவ்வுரை கொடி)
அவ்வுரை கொடியோன் கூற அருந்தவ முனிவன் கேளா
எவ்வமீ துரைத்தாய் மேலாய் யாவரும் புகழ நின்ற
செவ்வியர் தமையி ழித்துச் சிறியரை உயர்ச்சி செய்தல்
உய்வகை அன்றா னும்மோ ருயிர்க்கெலா முடிவீ தென்றான். ......
27(ஊறுசேர் தக்கன்)
ஊறுசேர் தக்கன் சொல்வான் உனதுருத் திரனை ஒப்பார்
ஆறின்மே லைந்த வான உருத்திரர் அமர்வார் ஆசை
ஈறுசேர் தருமீ சானர் இருந்தனர் அவர்க்கே முன்னர்
வீறுசேர் அவியை நல்கி வேள்வியை முடிப்ப னென்றான். ......
28(என்னலும் முனிவன்)
என்னலும் முனிவன் சொல்வான் ஈறுசெய் தகில மெல்லாந்
தன்னிடை யொடுக்கி மீட்டுந் தாதையாய் நல்கி யாரு
முன்னருந் திறத்தில் வைகும் உருத்திர மூர்த்திக் கொப்போ
அன்னவன் வடிவும் பேரும் அவனருள் அதனாற் பெற்றோர். ......
29(உருத்திர மூர்த்தி)
உருத்திர மூர்த்தி என்போன் உயர்பரம் பொருளா யுள்ளே
நிருத்தம தியற்று கின்ற நித்தனாம் அவன்தன் பொற்றாள்
கருத்திடை நினைந்தோர் அன்னான் காயமுந் திருப்பேர் தானும்
பரிப்பரால் அனையர் எல்லை பகர்ந்திடின் உலப்பின் றாமால். ......
30(ஆதிதன் நாமம்)
ஆதிதன் நாமம் பெற்றோர் அவனியல் அடையார் கொண்ட
ஏதமில் வடிவும் அற்றே என்னினும் இறைவ ரென்றே
பூதல முழுதும் விண்ணும் போற்றிட இருப்பர் இந்த
வேதனும் புகழு நீரான் மெய்ந்நெறித் தலைமை சார்வார். ......
31(ஈசனை அளப்பில்)
ஈசனை அளப்பில் காலம் இதயமேல் உன்னி நோற்றே
ஆசக லுருவம் பெற்ற அன்பினர் போல்வர் இன்னோர்
வாசவன் முதலோர் போல வரத்தகார் எந்தை பால்நீ
நேசமில் லாத தன்மை நினைந்திலர் போலு மென்றான். ......
32வேறு(என்ற காலை இரு)
என்ற காலை இருந்ததக் கன்னிது
நன்று நாரணன் நான்முகன் நிற்கஈ
றொன்று செய்யும் உருத்திர னாதியாய்
நின்ற தென்கொல் நிகழ்த்துதி யென்னவே. ......
33(விதிசி ரங்கள் வியன்)
விதிசி ரங்கள் வியன்முடி வேய்ந்திடும்
பதிசி வன்தன் பதத்துணை உட்கொடு
மதிசி றந்திட வாலிதின் வைகிய
ததீசி யென்னுந் தவமுனி சாற்றுவான். ......
34(இருவர் தம்மொடும்)
இருவர் தம்மொடும் எண்ணிய தன்மையால்
ஒருவ னான உருத்திர மூர்த்தியைப்
பெரியன் என்று பிடித்திலை அன்னதுந்
தெரிய ஓதுவன் தேர்ந்தனை கேட்டியால். ......
35(ஆதி யந்தமி லாத)
ஆதி யந்தமி லாதஎம் மண்ணலுக்
கோது பேரும் உருவுமொர் செய்கையும்
யாது மில்லையிவ் வாற்றினை எண்ணிலா
வேதம் யாவும் விளம்புந் துணிபினால். ......
36(அன்ன தோர்பரத்)
அன்ன தோர்பரத் தண்ணல்தன் னாணையால்
முன்னை யாரிருள் மூடத்துண் மூழ்கிய
மன்னு யிர்த்தொகை வல்வினை நீக்குவான்
உன்னி யேதன்னு ளத்தருள் செய்துமேல். ......
37(உருவுஞ் செய்கை)
உருவுஞ் செய்கையும் ஓங்கிய பேருமுன்
அருளி னாற்கொண்ட னைத்தையும் முன்புபோல்
தெரிய நல்கித் திசைமுக னாதியாஞ்
சுரர்கள் யாரையுந் தொன்முறை ஈந்துபின். ......
38(ஏற்ற தொல்பணி)
ஏற்ற தொல்பணி யாவும் இசைத்தவை
போற்று செய்கை புரிந்துபின் யாவையும்
மாற்று கின்றது மற்றெமக் காமெனச்
சாற்றி னான்அத் தகைமையுங் கேட்டிநீ. ......
39வேறு(அந்தம் ஆதியின்)
அந்தம் ஆதியின் றாகியே உயிரெலாம் அளிக்குந்
தந்தை யாகிய தனக்கன்றி முழுதடுந் தகைமை
மைந்த ராகிய அமரரான் முடிவுறா மையினால்
எந்தை தன்வயிற் கொண்டனன் ஈறுசெய் யியற்கை. ......
40(அன்று தேவர்கள்)
அன்று தேவர்கள் யாவரும் எம்பிரான் அடியில்
சென்று தாழ்ந்தெமக் கிப்பணி புரிந்தனை சிறியேம்
என்று தீருதும் இப்பரம் என்றலும் எங்கோன்
ஒன்று கூறுதுங் கேண்மினோ நீவிர்என் றுரைத்தான். ......
41(ஆயுள் மற்றுமக்)
ஆயுள் மற்றுமக் கெத்துணை அத்துணை யளவு
நீயிர் இச்செயல் புரிமின்கள் பரமென நினைந்தீர்
தூய வித்தையால் நீறுள தாக்கியே தொழுது
காய மேற்புனைந் தஞ்செழுத் துன்னுதிர் கருத்தின். ......
42(தன்மை யிங்கிவை)
தன்மை யிங்கிவை புரிதிரேல் இத்தொழில் தரிக்கும்
வன்மை யெய்துவீர் அன்றிநங் கலைகணும் மருங்கு
தொன்மை யுள்ளன காட்டிநின் றருளுமால் தொலைவில்
நன்மை எய்துவீர் என்றருள் செய்தனன் நம்பன். ......
43(அன்ன வர்க்கொடே)
அன்ன வர்க்கொடே யெவ்வகைச் செய்கையும் அளித்துப்
பின்னை யுள்ளதோர் செய்கையும் புரியுமெம் பெருமான்
முன்னை வேதங்கள் அவன்தனை ஐந்தொழில் முதல்வன்
என்னும் மற்றிது தேருதி கேட்டியால் இன்னும். ......
44வேறு(உருத்திரன் என்னும்)
உருத்திரன் என்னும் நாமம் ஒப்பிலா அரற்கும் அன்னான்
தரத்தகு சிறார்கள் ஆனோர் தங்கட்கும் அனையன் பாதங்
கருத்திடை உன்னிப் போற்றுங் கணங்கட்கும் அவன்றன் மேனி
பரித்திடு வோர்க்குஞ் செந்தீப் பண்ணவன் தனக்கும் ஆமால். ......
45(இன்னலங் கடலுட்)
இன்னலங் கடலுட் பட்டோர் யாரையும் எடுக்கும் நீரால்
உன்னரும் பரம மூர்த்தி உருத்திரன் எனும்பேர் பெற்றான்
அன்னவன் தரவந் தோர்க்கும் அடியடைந் தோர்க்கும் அன்னான்
தன்னுரு வெய்தி னோர்க்குஞ் சார்ந்ததால் அவன்த னிப்பேர். ......
46(செந்தழ லென்ன)
செந்தழ லென்ன நின்ற தேவனுக் குருத்தி ரப்பேர்
வந்தது புகல்வன் கேட்டி வானவர் யாரும் ஈண்டி
முந்தையில் அவுணர் தம்மை முனிந்திட முயன்று செல்ல
அந்தமில் நிதியந் தன்னை அவ்வழி ஒருங்கு பெற்றார். ......
47(பெற்றிடு நிதியம்)
பெற்றிடு நிதியம் எல்லாம் பீடிலால் கனல்பால் வைத்துச்
செற்றலர் தம்மேற் சென்று செருச்செய்து மீண்டு தேவர்
உற்றுழி அதுகொ டாமல் ஓடலுந் தொடர்ந்து சூழ
மற்றவன் கலுழ்த லாலே வந்தது மறையுங் கூறும். ......
48(ஓதுமா மறைகள்)
ஓதுமா மறைகள் தம்மில் உருத்திரன் எனும்பேர் நாட்டி
ஏதிலார் தம்மைச் சொற்ற தீசன்மேற் சாரா வந்த
ஆதிநா யகனைச் சுட்டி அறைந்ததும் பிறர்மாட் டேறா
மேதைசா லுணர்வின் ஆன்றோர் விகற்பம்ஈ துணர்வ ரன்றே. ......
49(ஓங்கிய சுருதி)
ஓங்கிய சுருதி தன்னுள் உருத்திரன் எனுநா மத்தால்
தீங்கன லோனை ஏனைத் திறத்தரை உரைத்த வாற்றை
ஈங்கிவண் மொழியல் எங்கோற் கியம்பிய இடங்கள் நாடி
ஆங்கவன் தலைமை காண்டி அறைகுவன் இன்னும் ஒன்றே. ......
50வேறு(முந்தை யோர்பகன்)
முந்தை யோர்பகன் முனிவர்கள் யாவரு முதலோ
டந்த மில்லதோர் பரம்இவர் அவரென அறைந்து
தந்தமிற் சென்று வாதுசெய் தறிவருந் தகவால்
நொந்து மற்றவர் பிரமனை வினவுவான் நுவன்றார். ......
51(மல்லல் மேருவின்)
மல்லல் மேருவின் முடிதனில் மனோவதி வைகும்
அல்லி வான்கம லத்திடை அண்ணலை அணுகி
எல்லை தீர்ந்திடு பரம்பொருள் உணர்கிலேம் இவரென்
றொல்லை தன்னில்நீ உரைத்தருள் செய்யென உரைத்தார். ......
52(உரைத்த வாசக)
உரைத்த வாசகங் கேட்டலும் நான்முகத் தொருவன்
கருத்தில் இங்கிவை தெளிதர மறைமொழி காட்டி
விரித்து மென்னினுந் தெளிவுறார் மெய்மையால் விரைவில்
தெரித்து மிங்கென உன்னினன் அவர்மயல் தீர்ப்பான். ......
53(நாற்ற லைச்சிறு)
நாற்ற லைச்சிறு மாமகன் தாதைதன் னலஞ்சேர்
தோற்ற முள்ளுற உன்னியே விழிபுனல் சொரிய
ஏற்றெ ழுந்துமீக் கரம்எடா வுருத்திர னென்றே
சாற்றி மும்முறை நின்றனன் தெளிதருந் தகவால். ......
54(அங்கண் நான்முகன்)
அங்கண் நான்முகன் சூளினால் ஆதியம் பகவன்
சங்க ரன்எனக் காட்டியே பொடிப்புமெய் தயங்க
வெங்க னற்படும் இழுதென உருகிமீ மிசைசேர்
செங்கை மீட்டனன் முனிவருக் கினையன செப்பும். ......
55(வம்மி னோவுமக்)
வம்மி னோவுமக் கோருரை மொழிகுவன் வானோர்
தம்மை எங்களை அளித்தனன் மறைகளுந் தந்தான்
மெய்ம்மை யாவர்க்குஞ் செய்பணி உதவினன் மேனாள்
மும்மை யாகிய செய்கைநம் பாலென மொழிந்தான். ......
56(அருளின் நீர்மை)
அருளின் நீர்மையால் ஐந்தொழில் புரிபவன் அநாதி
பரமன் நின்மலன் ஏதுவுக் கேதுவாம் பகவன்
ஒருவர் பாலினும் பிறந்திடான் அருவதாய் உருவாய்
இருமை யாயுறை பூரண னியாவர்க்கும் ஈசன். ......
57(முற்று மாயினான்)
முற்று மாயினான் முடிவிற்கும் முடிவிற்கும் முடிவாய்
உற்றுளான் என்றும் உள்ளவன் அனைத்தையும் உடையோன்
மற்றென் னாலுரைப் பரியதோர் சீர்த்தியன் மலர்த்தாள்
பற்றினோர்க் கன்றி உணரவொண் ணாததோர் பழையோன். ......
58(அன்ன தோர்சிவன்)
அன்ன தோர்சிவன் பரமென மறையெலாம் அறையும்
இன்னு மாங்கவன் நிலையினைக் கண்ணனும் யானும்
உன்னி நாடியுங் காண்கிலம் அவன்பதி ஒழிந்தோர்
மன்னு யிர்த்தொகை யென்றனன் அன்னதொல் மலரோன். ......
59(அருள்பு ரிந்துபின்)
அருள்பு ரிந்துபின் சிவனடி கைதொழு தந்நாள்
மருள கன்றிடு பிதாமகன் இருந்தனன் மற்றப்
பொருளின் நீர்மையைத் தெரிந்துதம் புந்திமேற் கொண்ட
இருளொ ழிந்தனர் மகிழ்ந்தனர் முனிவரர் இசைப்பார். ......
60(தாதை யாய்எமை)
தாதை யாய்எமை அளித்தனை யாங்கள்உன் தனயர்
ஆத லால்எமக் கித்திறம் தேற்றினை அடிகேள்
ஈதலால் இன்று குரவனும் ஆயினை என்றே
பாத தாமரை வணங்கினர் முனிவரர் பலரும். ......
61(அடிவ ணங்கினர்)
அடிவ ணங்கினர் தமைத்தெரிந் தின்றுதொட் டமலன்
வடிவம் உன்னுதிர் அருச்சனை புரிகுதிர் வயங்கும்
பொடிய ணிந்துநல் லஞ்செழுத் தியம்புதிர் புரைசேர்
கொடிய வெம்பவம் அகலுதிர் எனவிடை கொடுத்தான். ......
62(ஆதலால் எங்க ளீச)
ஆதலால் எங்க ளீசனே பரம்பொருள் அல்லா
ஏதி லாரெலாம் உயிர்த்தொகை யாகுமால் இதனைக்
காத லாலுரைத் தேன்அன்று வாய்மையே காண்டி
வேத மேமுத லாகிய கலையெலாம் விளம்பும். ......
63(அன்றி முன்அயன்)
அன்றி முன்அயன் உன்றனக் கரன்புகழ் அனைத்தும்
நன்று கேட்டிட உணர்த்தினன் நீயது நாடி
நின்று மாதவம் புரிந்திது பெற்றனை நினக்குப்
பொன்று காலம்வந் தெய்தலின் மறந்தனை போலாம். ......
64(தந்தை யேமுதல்)
தந்தை யேமுதல் யாவரும் முடிவுறுந் தகவால்
வந்து நின்னவை இருந்தனர் மாயையால் மருண்டாய்
உய்ந்தி டும்படி நினைத்தியேல் அரற்கவி உதவி
இந்த மாமகம் புரிந்திடு வாயென இசைத்தான். ......
65ஆகத் திருவிருத்தம் - 8797