(அன்றுமுன் னாக)
அன்றுமுன் னாகவே அளப்பில் காலமா
ஒன்றுமவ் வேள்வியில் ஓம்பு கின்றிலர்
துன்றிய முனிவருஞ் சுரரும் பார்தனில்
முன்றிகழ் அந்தணர் முதலி னோர்களும். ......
1(ஓர்ந்தனன் அன்ன)
ஓர்ந்தனன் அன்னதை ஊழின் தீநெறி
சார்ந்திடு தக்கன்ஓர் வைகல் தன்முனஞ்
சேர்ந்திடும் இமையவர் திறத்தை நோக்கியே
ஈர்ந்திடு தீயதொன் றியம்பு கின்றனன். ......
2(எடுத்திடு சுருதி)
எடுத்திடு சுருதியின் இயற்கை முற்றுற
வடித்திடு தேவிர்காள் வரம்பில் காலமா
அடுத்திடும் வேள்விய தாற்றல் இன்றியே
விடுத்ததென் அனையது விளம்பு வீரென்றான். ......
3வேறு(எய்யாது வெய்ய)
எய்யாது வெய்ய வினையீட்டு தக்கன் இவைசெப்ப லோடும் இமையோர்
மெய்யார ணத்தன் முதனாள் இயற்று வேள்விக் களத்தில் அவியூண்
ஐயான னத்தர் பெறநல்கல் என்றி அதனாலும் நந்தி யடிகள்
பொய்யாத சாப உரையாலும் யாங்கள் புரியாதி ருத்து மெனவே. ......
4(அந்நாளில் ஈசன்)
அந்நாளில் ஈசன் விடுகின்ற நந்தி அறைகின்ற சாபம் அதனுக்
கிந்நாளும் அஞ்சி மகவேள்வி தன்னில் யாதுஞ்செ யாது திரிவீர்
முன்னாக யானொர் பெருமா மகத்தை முறைசெய்வன் முற்றி இடுமேல்
பின்னாக நீவிர் புரிமின்க ளென்று பீடில்ல வன்பு கலவே. ......
5(நீமுன்னொர் வேள்வி)
நீமுன்னொர் வேள்வி புரிகின்ற தைய நெறியென்றி சைப்ப அவரைப்
போமின்கள் யாரும் எனவேபு கன்று புரிதோறு மேவி மிகவும்
ஏமங்கொள் சிந்தை யுளதக்கன் ஊழின் இயல்பால்அ தற்பின் ஒருநாள்
ஓமஞ்செய் வேள்வி புரிவான்வி ரும்பி உள்ளத்தில் உன்னி முயல்வான். ......
6(தொட்டாம னுத்தொல்)
தொட்டாம னுத்தொல் மயனைத் தனாது சுதரென்ன முன்னம் உதவிக்
கட்டாம ரைக்குள் விதிபோல நல்கு கலைகற்று ளானை விளியா
முட்டாத வேள்வி யதுவொன்று செய்வன் முனிவோர்கள் தேவர் உறைவான்
எட்டாத வெல்லை தனில்இன்றொர் சாலை இயல்பால்வி தித்தி எனவே. ......
7வேறு(இனிதென இறைஞ்சி)
இனிதென இறைஞ்சியே ஏகிக் கங்கையம்
புனனதி அதனொரு புடைய தாகிய
கனகலம் என்பதோர் கவின்கொள் வைப்பிடை
வினைபுரி கம்மியன் விதித்தல் மேயினான். ......
8(பத்துநூ றியோசனை)
பத்துநூ றியோசனைப் பரப்பும் நீளமும்
ஒத்திடும் வகையதா ஒல்லை நாடியே
வித்தக வன்மையால் வேள்விக் கோரரண்
அத்தகு பொழுதினில் அமைத்து நல்கினான். ......
9(நாற்றிசை மருங்கினு)
நாற்றிசை மருங்கினும் நான்கு கோபுரம்
வீற்றுவீற் றுதவிய வியன்கொள் நொச்சியில்
ஏற்றிடு ஞாயில்கள் இயற்றி அன்னதை
ஆற்றலை யுடையதோ ரரணம் ஆக்கினான். ......
10(உள்ளுற அணங்கினர்)
உள்ளுற அணங்கினர் உறைதற் கோரிடை
தெள்ளிதின் நல்கியே தேவர் தம்மொடு
வள்ளுறை வேற்கணார் மருவி ஆடுவான்
புள்ளுறை வாவியும் பொழிலும் ஆக்கினான். ......
11(அப்பரி சமைத்துமேல்)
அப்பரி சமைத்துமேல் அமரர் வேதியர்
எப்பரி சனரும்வந் தீண்டி வெஃகின
துய்ப்பதற் கொத்திடு சுவைகொள் தீம்பதம்
வைப்பதோர் இருக்கையும் மரபில் தந்தனன். ......
12(அந்தண ராதியோர்)
அந்தண ராதியோர் அமரர் யாவரும்
வந்துண வருந்துவான் வரம்பில் சாலைகள்
இந்திர வுலகென இமைப்பில் ஈந்தனன்
முந்தையின் மகவிதி முழுதும் நாடினான். ......
13(விருந்தினர் பெற்றிட)
விருந்தினர் பெற்றிட விரைமென் பாளிதம்
நரந்தமொ டாரம்வீ நறைகொள் மான்மதம்
அருந்துறு வெள்ளடை ஆன பாகிவை
இருந்திடு சாலையும் இயற்றி னானரோ. ......
14(ஆனபல் வகையுடை)
ஆனபல் வகையுடை ஆடை செய்யபூண்
மேனதொர் அம்பொனின் வியன்கொள் குப்பைகள்
ஏனைய வெறுக்கைகள் மணிகள் யாவையுந்
தானம தியற்றிடத் தானம் நல்கினான். ......
15(கடிகெழு சததளக்)
கடிகெழு சததளக் கமல மேலுறை
அடிகள்தன் நகர்கொலென் றையஞ் செய்திட
நடைதரு வேள்விசெய் நலங்கொள் சாலைய
திடையுற அமைத்தனன் யாரும் போற்றவே. ......
16(நூறெனும் யோச)
நூறெனும் யோசனை நுவலும் எல்லையின்
மாறகல் சாலையின் வன்னி சேர்தரக்
கூறிய மூவகைக் குண்டம் வேதிகை
வேறுள பரிசெலாம் விதித்தல் செய்தனன். ......
17(மேலொடு கீழ்புடை)
மேலொடு கீழ்புடை வெறுக்கை யின்மிசைக்
கோலநன் மணிகளாற் குயிற்றி வாவியுஞ்
சோலையும் பறவையுந் தோமில் தேவரும்
போலிய ஓவியம் புனைந்திட் டானரோ. ......
18(புண்டரீ காசனம்)
புண்டரீ காசனம் பொருந்து நான்முகன்
தண்டுள வோன்இவர் தமக்கி ருக்கையும்
எண்டிசை வாணருக் கியலி ருக்கையும்
அண்டருக் கிருக்கையும் அருளல் செய்துமேல். ......
19(தொக்குறு முனிவரர்)
தொக்குறு முனிவரர் தொல்லை வேதியர்
ஒக்கலின் மேயினர் உறையி ருக்கையுந்
தக்கனுக் கிருக்கையுஞ் சமைத்து நல்கினான்
வைக்குறு தவிசின்நூன் மரபின் நாடியே. ......
20(தக்கனை வணங்கி)
தக்கனை வணங்கிநின் சாலை முற்றிய
புக்கனை காண்கெனப் புனைவன் செப்பலும்
அக்கண மதுதெரிந் தளவி லாதர
மிக்கனன் மகிழ்ந்தனன் விம்மி தத்தினான். ......
21(பூங்கம லத்தமர்)
பூங்கம லத்தமர் புனிதன் கான்முளை
பாங்கரின் முனிவரில் பலரைக் கூவியே
தீங்கனல் மாமகஞ் செய்ய நூன்முறை
யாங்கனம் வலித்தனன் அவர்க்குச் செப்புவான். ......
22(தருவுறு சமிதைகள்)
தருவுறு சமிதைகள் சாகை தண்ணடை
பரிதிகள் மதலைநாண் பறப்பை பல்பசு
அரணிநன் முதிரைகள் ஆதி யாவிதற்
குரியன உய்த்திரென் றொல்லை ஏவினான். ......
23(ஆனொடு நிதிகளை)
ஆனொடு நிதிகளை மணியை ஐந்தருக்
கானினை அழைத்துநம் மகத்தைக் காணிய
மாநிலத் தந்தணர் வருவர் உண்டியும்
ஏனைய பொருள்களும் ஈமென் றோதினான். ......
24(நல்விடை கொண்டு)
நல்விடை கொண்டுபோய் நவையி லான்முதற்
பல்வகை யவையெலாம் படர்ந்து வீற்றுவீற்
றொல்வதோ ரிடந்தொறும் உற்ற ஆயிடைச்
செல்வதோர் பொருளெலாஞ் சிறப்பின் நல்கவே. ......
25(தனதுறு கிளைஞ)
தனதுறு கிளைஞராய்த் தணப்பி லாததோர்
முனிவரர் தங்களின் முப்ப தாயிரர்
துனியறு வோர்தமைச் சொன்றி ஏனவை
அனைவரும் விருப்புற அளித்தி ரென்றனன். ......
26(மற்றவர்க் கிருதிற)
மற்றவர்க் கிருதிற மாத வத்தரை
உற்றனர் யாவரும் உண்டி அன்றியே
சொற்றன யாவையுந் தொலைவின் றீமென
நற்றவத் தயன்மகன் நயப்புற் றேவினான். ......
27(தீதினை நன்றென)
தீதினை நன்றெனத் தெளியும் நான்முகன்
காதலன் ஓர்மகங் கடிதி யற்றுவான்
வேதியர் விண்ணவர் யாரும் மேவுவான்
தூதரை நோக்கியே இனைய சொல்லுவான். ......
28(நக்கனை யல்லதோர்)
நக்கனை யல்லதோர் நாகர் தங்களை
மிக்குறு முனிவரை வேத மாந்தரைத்
திக்கொடு வான்புவி யாண்டுஞ் சென்றுகூய்
உய்க்குதி ராலென உரைத்துத் தூண்டினான். ......
29(முந்துற வரித்திடும்)
முந்துற வரித்திடும் முனிவர் அவ்வழித்
தந்தனர் மகஞ்செயத் தகுவ யாவையும்
வந்தன நோக்கியே மரபில் உய்த்திரென்
றெந்தைதன் அருளிலான் இயம்பி னானரோ. ......
30(வரித்திடு பான்மை)
வரித்திடு பான்மையின் வழாது போற்றிடும்
இருத்தினர் தமிற்பலர் யாக சாலையுள்
திருத்திய வேதிவாய்ச் செறிபல் பண்டமும்
நிரைத்தனர் பறப்பையும் நிலையிற் சேர்த்தினார். ......
31(அசைவறு வேதியின்)
அசைவறு வேதியின் அணித்தி னோரிடை
வசைதவிர் மதலைகள் மரபின் நாட்டுபு
பசுநிரை யாத்தனர் பாசங் கொண்டுபின்
இசைதரு பூசையும் இயல்பின் ஆற்றினார். ......
32வேறு(நடையிது நிகழும்)
நடையிது நிகழும் வேலை நலமிலாத் தக்கன் நல்கும்
விடைதலைக் கொண்டு போய வியன்பெருந் தூதர் தம்மில்
புடவியின் மறையோர்க் கெல்லாம் புகன்றனர் சிலவர் வெய்யோன்
உடுபதி நாள்கோள் முன்னர் உரைத்தனர் சிலவர் அன்றே. ......
33(காவல ராகி வைகுங்)
காவல ராகி வைகுங் கந்தரு வத்த ராதி
ஆவதோர் திறத்தோர்க் கெல்லாம் அறைந்தனர் சிலவர் ஆசை
மேவிய கடவு ளோர்க்கும் விளம்பினர் சிலவர் முப்பால்
தேவர்கள் யாருங் கேட்பச் செப்பினர் சிலவ ரன்றே. ......
34(விண்ணக முதல்வ)
விண்ணக முதல்வ னுக்கு விளம்பினர் சிலவர் ஆண்டு
நண்ணிய தேவர்க் கெல்லாம் நவின்றனர் சிலவர் மேலைப்
புண்ணிய முனிவ ரர்க்குப் புகன்றனர் சிலவர் ஏனைப்
பண்ணவர் முன்னஞ் சென்று பகர்ந்தனர் சிலவர் அம்மா. ......
35(வானவர் முதுவன்)
வானவர் முதுவன் தொல்லை மன்றன்மா நகரத் தெய்திக்
கோனகர் வாயில் நண்ணிக் குறுகினர் காப்போர் உய்ப்ப
மேனிறை காத லோடும் விரைந்தவற் றாழ்ந்து நின்சேய்
ஆனவன் வேள்விக் கேக அடிகள்என் றுரைத்தார் சில்லோர். ......
36(மேனகு சுடர்செய்)
மேனகு சுடர்செய் தூய விண்டுல கதனை நண்ணி
மானிறை கின்ற கோயில் மணிக்கடை முன்னர் எய்திச்
சேனையந் தலைவன் உய்ப்பச் சீதரற் பணிந்து வேள்விப்
பான்மைய தியம்பி எந்தை வருகெனப் பகர்ந்தார் சில்லோர். ......
37(மற்றது போழ்து தன்)
மற்றது போழ்து தன்னில் மாயவன் எழுந்து மார்பூ
டுற்றிடு திருவும் பாரும் உடன்வர உவணர் கோமான்
பொற்றடந் தோள்மேற் கொண்டு போர்ப்படை காப்பத் தன்பாற்
பெற்றனர் சூழத் தானைப் பெருந்தகை பரவச் சென்றான். ......
38(செல்லலும் அதனை)
செல்லலும் அதனை நாடித் திசைமுகக் கடவுள் அங்கண்
ஒல்லையில் எழுந்து முப்பால் ஒண்டொடி மாத ரோடும்
அல்லியங் கமலம் நீங்கி அன்னமேற் கொண்டு மைந்தர்
எல்லையில் முனிவர் யாரும் ஏத்தினர் சூழப் போந்தான். ......
39(மாலொடு பிரமன்)
மாலொடு பிரமன் ஈண்டி வருதலும் மகவான் என்போன்
வேலொடு வில்லும் வாளும் விண்ணவர் ஏந்திச் சூழ
நாலிரு மருப்பு வெள்ளை நாகம துயர்த்துத் தங்கள்
பாலுறை குரவ ரோடு பாகமார் விருப்பில் வந்தான். ......
40(ஆயவன் புரத்தில்)
ஆயவன் புரத்தில் வைகும் அரம்பையே முதலா வுள்ள
சேயிழை மார்கள் யாருந் தேவரோ டகன்றார் எங்கள்
நாயகன் போந்தான் என்றே நலமிகு சசியென் பாளுந்
தூயதோர் மானத் தேறித் தோகையர் காப்பச் சென்றாள். ......
41(எண்டிசைக் காவலோ)
எண்டிசைக் காவலோரும் ஈரிரு திறத்த ரான
அண்டரும் உடுக்கள் தாமும் ஆரிடத் தொகையு ளோரும்
வண்டுளர் குமுதம் போற்றும் மதியமும் ஏனைக் கோளும்
விண்டொடர் இயக்கர் சித்தர் விஞ்சையர் பிறரும் போந்தார். ......
42(சேணிடை மதியி)
சேணிடை மதியி னோடு செறிதரும் உடுக்க ளான
வாணுதல் மகளிர் யாரும் மகிழ்வொடு தந்தை வேள்வி
காணிய வந்தார் ஈது கண்ணுறீஇ அவுணர் கோமான்
சோணித புரத்துக் கேளிர் தொகையொடுந் தொடர்ந்து சென்றான். ......
43(வனைகலன் நிலவு)
வனைகலன் நிலவு பொற்றோள் வாசவன் முதலா வுள்ள
இனையரும் பிறரும் எல்லாம் இருவர்தம் மருங்கும் ஈண்டிக்
கனகல வனத்திற் செய்த கடிமகச் சாலை எய்த
முனிவர ரோடுந் தக்கன் முன்னெதிர் கொண்டு நின்றான். ......
44(எதிர்கொடு மகிழ்ந்து)
எதிர்கொடு மகிழ்ந்து மேலாம் இருவர்தங் களையும் அங்கண்
முதிர்தரு காத லோடு முறைமுறை தழுவி வானோர்
பதிமுத லோரை நோக்கிப் பரிவுசெய் தினையர் தம்மைக்
கதுமெனக் கொண்டு வேள்விக் கடிமனை இருக்கை புக்கான். ......
45(மாலயன் தன்னை)
மாலயன் தன்னை முன்னர் மணித்தவி சிருத்தி வான
மேலுறை மகவா னாதி விண்ணவர் முனிவர் யார்க்கும்
ஏலுறு தவிசு நல்கி இடைப்பட இருந்தான் தக்கன்
காலுறு கடலா மென்னக் கடவுள்மா மறைக ளார்ப்ப. ......
46(அல்லியங் கமல மாது)
அல்லியங் கமல மாதும் அம்புவி மகளும் வேதாப்
புல்லிய தெரிவை மாரும் பொருவிலா உடுவி னோருஞ்
சொல்லருஞ் சசியும் ஏனைச் சூரினர் பிறரும் வேத
வல்லிதன் இருக்கை நண்ணி மரபின்வீற் றிருந்தார் மன்னோ. ......
47(மாமலர்க் கடவுள்)
மாமலர்க் கடவுள் மைந்தன் மகத்தினை நாடி யாருங்
காமுறும் உண்டி மாந்திக் கதுமென மீடும் என்றே
பூமிசை மறையோர் தாமும் முனிவரும் போந்து விண்ணோர்
தாமுறும் அவையை நண்ணித் தகவினால் சார்த லோடும். ......
48(அழைத்திடப் போன)
அழைத்திடப் போன தூதர் அனைவரும் போந்து தக்கன்
கழற்றுணை வணங்கி நிற்பக் கருணைசெய் தவரை நோக்கி
விழுத்தகு தவத்தீர் நீவிர் விளித்தனர் தமிலு றாது
பிழைத்தனர் உளரோ உண்டேல் மொழிமெனப் பேசல் உற்றார். ......
49(அகத்தியன் சனகன்)
அகத்தியன் சனகன் முன்னோர் அத்திரி வசிட்டன் என்பான்
சகத்துயர் பிருகு மேலாந் ததீசிவெஞ் சாபத் தீயோன்
பகைத்திடு புலத்தை வென்ற பராசரன் இனைய பாலார்
மகத்தினை இகழா ஈண்டு வருகிலர் போலும் என்றார். ......
50(மற்றது புகல லோடு)
மற்றது புகல லோடு மலரயன் புதல்வன் கேளா
இற்றிது செய்தார் யாரே முனிவரில் இனையர் தாமோ
நெற்றியங் கண்ணி னார்க்கும் நேயம துடைய ரென்னாச்
செற்றமொ டுயிர்த்து நக்கான் தேவர்கள் யாரும் உட்க. ......
51ஆகத் திருவிருத்தம் - 8732