(இப்படி பன்னாள்)
இப்படி பன்னாள் யாரும் இவன்தனி ஆணைக் கஞ்சி
அப்பணி இயற்ற லோடும் அம்புய மலர்மேல் அண்ணல்
முப்புரம் முனிந்த செங்கண் முதல்வன தருளால் ஆங்கோர்
செப்பரும் வேள்வி யாற்ற முயன்றனன் சிந்தை செய்தான். ......
1(வேண்டிய கலப்பை)
வேண்டிய கலப்பை யாவும் விதியுளி மரபி னோடு
தேண்டினன் உய்த்துத் தக்கன் செப்பிய துன்னி யானே
மாண்டிட வரினும் முக்கண் மதிமுடிப் பரமன் தன்னை
ஈண்டுதந் தவிமுன் ஈவல் எனக்கிது துணிபா மென்றான். ......
2(இனையன புகன்று)
இனையன புகன்று சிந்தை யாப்புறுத் தேவல் போற்றுந்
தனையர்தங் குழுவைக் கூவித் தண்டுழாய் முகுந்த னாதி
அனைவரும் அவிப்பால் கொள்ள அழைத்து நீர்தம்மின் என்னாத்
துனையவே தூண்டிப் போதன் தொல்பெருங் கயிலை புக்கான். ......
3(கயிலையின் நடுவ)
கயிலையின் நடுவ ணுள்ள கடவுள்மா நகரில் எய்தி
அயிலுறு கணிச்சி நந்தி அருள்நெறி உய்ப்ப முன்போய்ப்
பயிலுமன் பொடுநின் றேத்திப் பணிதலுஞ் சிவன்ஈண் டுற்ற
செயலதென் மொழிதி என்னத் திசைமுகன் உரைப்ப தானான். ......
4(அடியனேன் வேள்வி)
அடியனேன் வேள்வி ஒன்றை ஆற்றுவல் அரண மூன்றும்
பொடிபட முனிந்த சீற்றப் புனிதநீ போந்தென் செய்கை
முடிவுற அருடி யென்ன முறுவல்செய் திறைவன் நந்தம்
வடிவுள நந்தி அங்கண் வருவன் நீபோதி என்றான். ......
5(போகென விடுத்த)
போகென விடுத்த லோடும் பொன்னடி பணிந்து வல்லே
ஏகிய தாதை தக்கன் இருந்துழி எய்தி யேயான்
பாகநல் வேள்வி ஒன்று பண்ணுவன் முனிவர் விண்ணோர்
ஆகிய திறத்த ரோடும் அணுகுதி ஐய என்றான். ......
6(என்னலும் நன்று)
என்னலும் நன்று முன்போய் இயற்றுதி மகத்தை யென்னப்
பொன்னவிர் கமலத் தண்ணல் மனோவதி அதனில் போந்து
செந்நெறி பயக்கும் வேள்விச் செய்கடன் புரிதல் உற்றான்
அன்னதோர் செய்கை மாலோன் ஆதியர் எவருந் தேர்ந்தார். ......
7வேறு(அக்க ணந்தனில் மாய)
அக்க ணந்தனில் மாயவன் இமையவர்க் கரசன்
மிக்க தேவர்கள் முனிவரர் யாவரும் விரைந்து
தக்கன் முன்னுற மேவலும் அவரொடுந் தழுவி
முக்க ணாயகற் கவியினை விலக்குவான் முயன்றான். ......
8(ஏற்றம் நீங்குறு)
ஏற்றம் நீங்குறு தக்கன்அக் கடவுள ரியாரும்
போற்றி யேதனைச் சூழ்தரத் தாதைதன் புரத்தில்
ஆற்றும் வேள்வியில் அணைதலும் அயன்எழுந் தாசி
சாற்றி ஆர்வமொ டிருத்தினன் பாங்கரோர் தவிசின். ......
9(கானு லாவுதண்)
கானு லாவுதண் டுளவினான் அடிகள் கைதொழுதே
ஆன பான்மையி லோர்தவி சிருத்தினன் அல்லா
ஏனை யோருக்கும் வீற்றுவீற் றுதவினன் இடையில்
தானொ ராசனத் திருந்தனன் மறையெலாந் தழங்க. ......
10வேறு(அங்கண் ஞாலம)
அங்கண் ஞாலம தளித்தவன் இவ்வகை அமர்தலும் அதுபோழ்தின்
நங்கை யாளொரு பங்கினன் அருளொடு நந்திதே வனைநோக்கிப்
பங்க யாசனன் வேள்வியிற் சென்றுநம் பாகமுங் கொடுவல்லே
இங்கு நீவரு கென்றலும் வணங்கியே இசைந்தவ னேகுற்றான். ......
11(நூற்றுக் கோடிவெங்)
நூற்றுக் கோடிவெங் கணத்தவர் சூழ்தர நொய்தின்அக் கிரிநீங்கி
ஏற்றின் மேல்வரும் அண்ணலை உள்ளுறுத் தேர்கொள்பங் கயப்போதில்
தோற்று நான்முகக் கடவுள்முன் அடைதலுந் துண்ணெ னவெழுந் தன்பிற்
போற்றி யேதொழு திருத்தினன் என்பஓர் பொலன்ம ணித்த விசின்கண். ......
12(நின்ற பாரிடத்)
நின்ற பாரிடத் தலைவர்க்கும் வரன்முறை நிரந்தஆ சனநேர்ந்து
பின்றை நான்முகன் வேள்விய தியற்றலும் பிறங்கெ ரியுற நோக்கி
நன்றி யில்லதோர் தக்கன்அக் கிரியுறை நக்கனுக் காளாகிச்
சென்ற வன்கொலாம் இவனென நகைத்தனன் செயிர்த்திவை யுரைக்கின்றான். ......
13(நார ணன்முத)
நார ணன்முத லாகிய கடவுளர் நளினமா மகளாதிச்
சீர ணங்கினர் மாமுனி கணத்தவர் செறிகுநர் உறைகின்ற
ஆர ணன்புரி வேள்வியில் விடநுகர்ந் தாடல்செய் பவன்ஆளுஞ்
சார தங்களு மோநடு வுறுவது தக்கதே யிதுவென்றான். ......
14(மேவ லாரெயில்)
மேவ லாரெயில் முனிந்ததீ விழியினன் வெள்ளிமால் வரைகாக்குங்
காவ லாளனாம் நந்தியுங் கணத்தருங் கதுமென இவண்மேவக்
கூவி னாரெவ ரோஎன உளத்திடைக் குறித்தனன் தெரிகுற்றான்
தேவர் யாவரும் வெருவுற அயன்தனைச் செயிர்த்தி வையுரைக் கின்றான். ......
15(ஆதி நான்முகக்)
ஆதி நான்முகக் கடவுளை யாகுநீ அழல்மகம் புரிசெய்கை
பேதை பாகனுக் குரைத்தனை அவன்விடப் பெயரும்நந் தியைஎன்முன்
காத லோடுகை தொழுதுநள் ளிருத்தினை கடவதோ நினக்கீது
தாதை ஆதலிற் பிழைத்தனை அல்லதுன் தலையினைத் தடியேனோ. ......
16(இன்னம் ஒன்றியான்)
இன்னம் ஒன்றியான் உரைப்பதுண் டஞ்ஞைகேள் ஈமமே இடனாகத்
துன்னு பாரிடஞ் சூழ்தரக் கழியுடல் சூலமீ மிசையேந்தி
வன்னி யூடுநின் றாடுவான் தனக்குநீ மகத்திடை யவிக்கூற்ற
முன்னை வைகலின் வழங்கலை இப்பகல் முதலவன் றனக்கின்றால். ......
17(அத்தி வெம்பணி)
அத்தி வெம்பணி தலைக்கலன் தாங்கியே அடலைமேற் கொண்டுற்ற
பித்தன் வேள்வியில் அவிகொளற் குரியனோ பெயர்ந்தஇப் பகல்காறும்
எத்தி றத்தரும் மறையொழுக் கெனநினைந் தியாவதும் ஓராமல்
சுத்த நீடவி யளித்தனர் அன்னதே தொன்மையாக் கொளற் பாற்றோ. ......
18(மற்றை வானவர் தம)
மற்றை வானவர் தமக்கெலா நல்குதி மாலையே முதலாக
இற்றை நாண்முதற் கொள்ளுதி இவற்குமுன் ஈகுதி யவிதன்னைக்
கற்றை வார்சடை யுடையதோர் கண்ணுதற் கடவுளே பரம்என்றே
சொற்ற மாமறைச் சுருதிகள் விலக்குதி துணிவுனக் கிதுவென்றான். ......
19(என்ற வாசகங்)
என்ற வாசகங் கேட்டலும் நந்திதன் இருகரஞ் செவிபொத்தி
ஒன்று கொள்கையின் ஆதிநா மந்தனை உளத்திடை நனிஉன்னி
இன்றி வன்சொலுங் கேட்ப உய்த் தனைகொலாம் எம்பிரா னெனைஎன்னாத்
துன்று பையுளின் மூழ்குறா ஆயிடைத் துண்ணென வெகுளுற்றான். ......
20(பண்டு மூவெயில்)
பண்டு மூவெயில் அழலெழ நகைத்திடு பரம்பரன் அருள்நீரால்
தண்ட நாயகஞ் செய்திடு சிலாதனார் தனிமகன் முனிவெய்தக்
கண்ட வானவர் யாவரும் உட்கினர் கனலும்உட் கவலுற்றான்
அண்டம் யாவையும் நடுநடுக் குற்றன அசைந்தன உயிர்யாவும். ......
21(ஏற்றின் மேயநம்)
ஏற்றின் மேயநம் அண்ணறன் சீர்த்தியில் இறையுமே குறிக்கொள்ளா
தாற்ற லோடவி விலக்கிய தக்கனுக் கஞ்சினம் இசைந்தோமால்
மாற்றம் ஒன்றும் இங்குரைத்திடல் தகாதென மற்றது பொறாதந்தோ
சீற்ற முற்றனன் நந்தியென் றுட்கினர் திசைமுக னொடுமாலோன். ......
22(ஈது வேலையில்)
ஈது வேலையில் நந்திஅத் தக்கனை எரிவிழித் தெதிர்நோக்கி
மாது பாகனை இகழ்ந்தனை ஈண்டுநின் வாய்துளைத் திடுவேனால்
ஆதி தன்னருள் அன்றென விடுத்தனன் ஆதலின் உய்ந்தாய்நீ
தீது மற்றினி உரைத்தியேல் வல்லைநின் சிரந்துணிக் குவன்என்றான். ......
23(இவைய யன்மகன்)
இவைய யன்மகன் உள்ளமுந் துண்ணென இசைத்துமா மகந்தன்னில்
அவிய தெம்பிராற் கிலதென விலக்கினை அதற்கிறை யவன்அன்றேல்
புவன மீதுமற் றெவருளார் அரிதனைப் பொருளெனக் கொண்டாய்நீ
சிவனை யன்றியே வேள்விசெய் கின்றவர் சிரம்அறக் கடிதென்றான். ......
24வேறு(இன்னதொர் சாபம)
இன்னதொர் சாபம தியம்பி ஆங்கதன்
பின்னரும் இசைத்தனன் பிறைமு டிப்பிரான்
தன்னியல் மதிக்கிலாத் தக்க நிற்கிவண்
மன்னிய திருவெலாம் வல்லை தீர்கவே. ......
25(ஏறுடை அண்ணலை)
ஏறுடை அண்ணலை இறைஞ்சல் இன்றியே
மாறுகொ டிகழ்தரு வாய்கொள் புன்றலை
ஈறுற உன்றனக் கெவருங் காண்டக
வேறொரு சிறுசிரம் விரைவின் மேவவே. ......
26(ஈரமில் புன்மனத்)
ஈரமில் புன்மனத் திழுதை மற்றுனைச்
சாருறு கடவுளர் தாமும் ஓர்பகல்
ஆருயிர் மாண்டெழீஇ அளப்பி லாவுகஞ்
சூரெனும் அவுணனால் துயரின் மூழ்கவே. ......
27(என்றுமற் றினையதும்)
என்றுமற் றினையதும் இயம்பி ஏர்புறீஇத்
துன்றிருங் கணநிரை சூழ வெள்ளியங்
குன்றிடை இறைக்கிது கூறிக் கீழ்த்திசை
முன்றிரு வாயிலின் முறையின் மேவினான். ......
28(முன்னுற நந்தியம்)
முன்னுற நந்தியம் முளரி மேலவன்
மன்னுறு கடிநகர் மகத்தை நீங்கலும்
அன்னதொ ரவையிடை அமரர் யாவரும்
என்னிது விளைந்ததென் றிரங்கி ஏங்கினார். ......
29(நந்தியெம் மடிகள்)
நந்தியெம் மடிகள்முன் நவின்ற மெய்யுரை
சிந்தைசெய் தேங்கினன் சிரம்ப னிப்புற
மைந்தன துரையையும் மறுத்தற் கஞ்சினான்
வெந்துயர் உழந்தனன் விரிஞ்சன் என்பவன். ......
30(முடித்திட உன்னியே)
முடித்திட உன்னியே முயலும் வேள்வியை
நடத்திட*
1 அஞ்சினன் நவின்று செய்கடன்
விடுத்தனன் அன்னதை விமலற் கின்னவி
தடுத்தவன் கண்டரோ யாதுஞ் சாற்றலன். ......
31(கறுவுகொள் பெற்றி)
கறுவுகொள் பெற்றியான் கவற்சி கொண்டுளான்
வறியதோர் உவகையான் மனத்தில் அச்சமுஞ்
சிறிதுகொள் பான்மையான் தேவ ரோடெழாக்
குறுகினன் தன்னகர்க் கோயில் மேயினான். ......
32(அலர்ந்திடு பங்கய)
அலர்ந்திடு பங்கயத் தண்ணல் தன்மகங்
குலைந்திட ஆயிடைக் குழீஇய தேவர்கள்
சலந்தனில் நந்திசெய் சாபஞ் சிந்தியாப்
புலர்ந்தனர் தத்தம புரத்துப் போயினார். ......
33ஆகத் திருவிருத்தம் - 8681