(மெய்ம்மா தவத்தால்)
மெய்ம்மா தவத்தால் திருத்தக்கு விளங்கு தக்கன்
எம்மான் தனைஎண் ணலன்ஆவி இழப்பன் வல்லே
அம்மா வியாமும் அவன்ஏவலை யாற்று கின்றாம்
நம்மா ருயிர்க்கும் இறுவாய் நணுகுற்ற போலும். ......
1(ஆனால் இனித்த)
ஆனால் இனித்தக் கனைஎண் ணலமாயின் அன்னான்
மேனாள் அரனால் பெறுகின் றதொர் மேன்மை தன்னால்
மானாத சீற்றங் கொடுநம்பதம் மாற்றும் என்னா
வோநாம் இனிச்செய் பரிசென் றிவை ஓர்ந்து சொல்வார். ......
2(ஈசன் கயிலை தனில்)
ஈசன் கயிலை தனில்தக்கன் எழுந்து செல்ல
மாசொன்று சிந்தை கொளத்தேற்றினம் வல்லை யென்னில்
நேசங் கொடுபோய் அவற்காணின் நிலைக்கும் இச்சீர்
நாசம் படலும் ஒழிவாகும் நமக்கும் என்றார். ......
3(வேதா முதலோர்)
வேதா முதலோர் இதுதன்னை விதியின் நாடித்
தீதான தக்கன்றனை மேவிநின் செய்த வத்தின்
மாதா னவளைச் சிவனோடு மறத்தி போலாம்
ஏதா முனது நிலைக்கம்ம இனைய தொன்றே. ......
4(குற்றந் தெரிதல்)
குற்றந் தெரிதல் அஃதேகுண னென்று கொள்ளில்
சுற்றம் மொருவற் கெவணுண்டு துறந்து நீங்கிச்
செற்றஞ் செய்கண்ணும் மகிழ்வுண்டிது சிந்தி யாயேல்
மற்றுன்னை வந்தோர் வசைசூழ்தரும் வள்ள லென்றார். ......
5(முன்னின் றவர்)
முன்னின் றவர்கூ றியபான்மை முறையின் நாடி
என்னிங் கியான்செய் கடனென்ன இறைவி யோடும்
பொன்னஞ் சடையோன் றனைக்கண்டனை போதி என்ன
மன்னுங் கயிலை வரையே கமனம் வலித்தான். ......
6(கானார் கமலத்)
கானார் கமலத் தயன்இந்திரன் காமர் பூத்த
வானாடர் யாரும் அவணுற்றிடும் வண்ண நல்கி
ஆனாத முன்பிற் றுணையோரொ டகன்று தக்கன்
போனான் அமலனமர் வெள்ளியம் பொற்றை புக்கான். ......
7(வெள்ளிச் சயிலந்)
வெள்ளிச் சயிலந் தனில்எய்தி விமலன் மேய
நள்ளுற்ற செம்பொற் பெருங்கோயிலை நண்ணி நந்தி
வள்ளற் குறையுளெனுங் கோபுர வாயில் சாரத்
தள்ளற்ற காவல் முறைப்பூதர் தடுத்தல் செய்தார். ......
8(கடிகொண்ட பூதர்)
கடிகொண்ட பூதர் நிரைதன்னைக் கனன்றி யான்முன்
கொடுக்கின்ற காதல் மடமான்தன் கொழுந னோடும்
அடுக்கின்ற பான்மை இவணாடி அறிவன் நீவிர்
தடுக்கின்ற தென்கொ லெனக்கூறினன் தக்கன் என்போன். ......
9(அவ்வா சகஞ்சொல்)
அவ்வா சகஞ்சொல் கொடியோனை அழன்று நோக்கி
மெய்வாயில் போற்றும் பெருஞ்சாரதர் மேலை ஞான்று
மைவாழுங் கண்டன் றனைஎள்ளினை மற்று நீயீண்
டெவ்வா றணைகின் றனைசால இழுதை நீராய். ......
10(முந்துற்ற தொல்லை எயி)
முந்துற்ற தொல்லை எயின்மூன் றுறை மொய்ம்பி னோர்கள்
நந்துற்ற வையந் தனைவானை நலிவ ரேனும்
எந்தைக்கு நல்லர் அவரன்பில் இறையும் நின்பால்
வந்துற்ற தில்லை எவணோஇனி வாழ்தி மன்னோ. ......
11(இறக்கின்ற வேலை)
இறக்கின்ற வேலை இமையோர்கள்தம் இன்னல் நீக்கிக்
கறுக்கின்ற நீல மிடற்றெந்தை கருணை செய்த
சிறக்கின்ற செல்வ மிசைந்தன்னவன் செய்கை யாவும்
மறக்கின் றனைநீ யெவன்செய்குதி மாயை உற்றாய். ......
12(ஈசன் தனது மலர்)
ஈசன் தனது மலர்த்தாளை இறைஞ்சி யாற்ற
நேசங்கொடு போற்றலர் தம்மொடு நேர்தல் ஒல்லா
பாசந் தனில்வீழ் கொடியோய்உனைப் பார்த்தி யாங்கள்
பேசும் படியுந் தகவோபவப் பெற்றி யன்றோ. ......
13(ஆமேனும் இன்னு)
ஆமேனும் இன்னுமொரு மாற்றமுண் டண்ணல் முன்னர்
நீமேவி அன்பிற் பணிவா யெனில் நிற்றி அன்றேல்
பூமே லுனது நகரந்தனில் போதி என்னத்
தீமேல் கிளர்ந்தாலென ஆற்றவுஞ் சீற்ற முற்றான். ......
14(பல்லா யிரவர் பெரு)
பல்லா யிரவர் பெருஞ்சாரதர் பாது காக்கும்
எல்லார் செழும்பொன் மணிவாயில் இகந்து செல்ல
வல்லான் நனிநாணினன் உள்ளம் வருந்தி அங்கண்
நில்லாது மீள்வான் இதுவொன்று நிகழ்த்து கின்றான். ......
15(கொன்னாருஞ் செம்)
கொன்னாருஞ் செம்பொற் கடைகாக்குங் குழாங்கள் கேண்மின்
எந்நாளும் உங்க ளிறைதன்னை இறைஞ்ச லேன்யான்
அன்னா னெனது மருகோனிதறிந்தி லீரோ
இந்நா ரணனும் அயனும்மெனக் கேவல் செய்வார். ......
16(நின்றா ரெவரு மென)
நின்றா ரெவரு மெனதொண்டர்கள் நீடு ஞாலம்
பின்றாது போற்றும் இறையான்பெயர் தக்கன் என்பார்
ஒன்றாய உங்கள் பெரும்பித்தனை ஒல்லை மேவி
இன்றா மரபிற் பணிந்தேதொழு தேத்து கின்றேன். ......
17(நில்லிங் கெனவே)
நில்லிங் கெனவே தடைசெய்த நிலைமை நும்மால்
செல்லும் பரிசோ மருகோனுஞ் சிறுமி தானுஞ்
சொல்லும் படியல் லதுசெய்வதென் தொண்ட ரானீர்
ஒல்லும் படியாற் றுதல்உங்கட் குறுதி யன்றோ. ......
18(தேற்றாமல் இன்ன)
தேற்றாமல் இன்ன வகைசூழ்ந்த நுந்தேவை யாரும்
போற்றாமல் வந்து பணியாமற் புகழ்ந்து மேன்மை
சாற்றாமல் எள்ளல் புரிபான்மை சமைப்பன் என்னா
மேற்றா னிழைத்த வினையுய்த்திட மீண்டு போனான். ......
19வேறு(மீண்டுதன் பதியை)
மீண்டுதன் பதியை எய்தி விரிஞ்சனை யாதி யாக
ஈண்டுபண் ணவரை நோக்கி என்மகள் ஈசன் தன்பால்
பூண்டபே ரார்வத் தொன்றிப் புணர்ப்பதொன் றுன்னித் தங்கண்
மாண்டகு வாயி லோரால் மற்றெமைத் தடுப்பச் செய்தார். ......
20(பின்னரும் பலவுண்)
பின்னரும் பலவுண் டம்மா பேசுவித் தனவும் அவ்வா
றென்னையென் றுரைப்பன் அந்தோ எண்ணினும் நாணுக் கொள்வேன்
அன்னஈங் கிசைப்ப னேனும் ஆவதென் அவர்பாற் போந்தேன்
தன்னைநொந் திடுவ தன்றித் தாழ்வுண்டோ அனையர் தம்பால். ......
21(நன்றுநன் றென்னை)
நன்றுநன் றென்னை எண்ணா நக்கனை உமையை நீவிர்
இன்றுமுன் னாக வென்றும் இறைஞ்சியே பரவு கில்லீர்
அன்றியும் மதித்தீர் அல்லீர் அப்பணி மறுத்தீ ராயின்
மன்றநும் முரிமை இன்னே மாற்றுவன் வல்லை யென்றான். ......
22(கறுத்திவை உரைத்)
கறுத்திவை உரைத்தோன் தன்னைக் கடவுளர் யாரும் நோக்கி
வெறுத்தெமை உரைத்தாய் போலும் மேலுநின் னேவல் தன்னின்
மறுத்தன வுளவோ இன்றே மற்றுநின் பணியின் நிற்றும்
செறுத்திடல் என்னாத் தத்தஞ் சேணகர் சென்று சேர்ந்தார். ......
23ஆகத் திருவிருத்தம் - 8648