(தொல்லையில் வதுவை)
தொல்லையில் வதுவையந் தொழில்ந டாத்திட
ஒல்லுவ தெற்றையென் றுளங்கொண் டாய்வுழி
நல்லன யாவும்அந் நாளில் நண்ணலும்
எல்லையில் உவகைமிக் கேம்பல் எய்தினான். ......
1(அண்ணலுக் கிப்பகல்)
அண்ணலுக் கிப்பகல் அணங்கை ஈவனென்
றுண்ணிகழ் ஆர்வமோ டுளத்தில் தூக்கியே
விண்ணவர் யாவரும் விரைந்து செல்லிய
துண்ணென ஒற்றரைத் தூண்டி னானரோ. ......
2(தன்னகர் அணிபெற)
தன்னகர் அணிபெறச் சமைப்பித் தாங்கதன்
பின்னுற முன்னினும் பெரிதும் ஏர்தக
மன்னுறு கோயிலை வதுவைக் கேற்றிடப்
பொன்னகர் நாணுறப் புனைவித் தானரோ. ......
3(கடிவினை புரிதரக்)
கடிவினை புரிதரக் காசின் றாக்கிய
படியறு திருநகர் பைய நீங்கியே
கொடியுறழ் மெல்லிடைக் குமரி பால்வரும்
அடிகளை அணுகினன் அடிகள் போற்றியே. ......
4(அணுகினன் அண்ண)
அணுகினன் அண்ணல்நீ அணைந்து மற்றிவள்
மணநய வேட்கையால் மாது நோற்றனள்
நணுகுதி அடியனேன் நகரின் பாலெனா
நுணுகிய கேள்வியான் நுவன்று வேண்டவே. ......
5(இறையவன் நன்றென)
இறையவன் நன்றென எழுந்து சென்றொராய்
நறைமலர் செறிகுழல் நங்கை யாளொடு
மறல்கெழு மனத்தினான் மனையுற் றானரோ
அறைதரு நூபுரத் தடிகள் சேப்பவே. ......
6(பூந்திரு நிலவிய)
பூந்திரு நிலவிய பொருவில் கோயின்முன்
காந்தியொ டேகலுங் கடவுள் முன்னரே
வாய்ந்ததொ ரெண்வகை மங்க லங்களும்
ஏந்தினர் ஏந்திழை மார்கள் எய்தினார். ......
7(தையலர் மங்கல)
தையலர் மங்கலத் தன்மை நோக்கியே
வையகம் உதவிய மங்கை தன்னுடன்
ஐயனும் உறையுளின் அடைந்து தானொரு
செய்யபொற் பீடமேற் சிறப்பின் வைகினான். ......
8(அன்னது காலையில்)
அன்னது காலையில் ஆற்று நோன்புடைக்
கன்னியை மறைக்கொடி கண்டு புல்லியே
தன்னுறு மந்திரந் தந்து மற்றவள்
பின்னலை மென்மெலப் பிணிப்பு நீக்கினாள். ......
9(சிற்பரை ஓதியின்)
சிற்பரை ஓதியின் செறிவை ஆய்ந்தபின்
பொற்புறு நானநெய் பூசிப் பூந்துவர்
நற்பொடி தீற்றியே நவையில் கங்கைநீர்
பற்பல குடங்கரின் பாலுய்த் தாட்டினாள். ......
10(ஆட்டினள் மஞ்சனம்)
ஆட்டினள் மஞ்சனம் அணிய பூந்தொடை
சூட்டினள் பொற்கலை சூழ்ந்து பல்கலன்
பூட்டினள் எம்பிரான் புடையில் உய்த்தனள்
ஈட்டுறும் உயிர்த்தொகை ஈன்ற ஆய்தனை. ......
11(மணவணி முற்றுறு)
மணவணி முற்றுறு மாது போந்துதன்
கணவன தொருபுடை கலந்த காலையில்
பணைமுத லாகிய பல்லி யங்களும்
இணையற இயம்பின ரியாரும் ஏத்தவே. ......
12(தூதுவர் உரைகொளீ)
தூதுவர் உரைகொளீஇத் துண்ணென் றேகியே
மாதவன் முதலிய வானு ளோரெலாம்
போதினை வளைதரு பொறிவண் டாமென
ஆதியை அடைந்தனர் அடிப ணிந்துளார். ......
13(வீழ்குறும் இழுதெனும்)
வீழ்குறும் இழுதெனும் வெய்ய நோன்குரல்
காழ்கிளர் திவவுடைக் கடிகொள் யாழினை
ஊழ்கிளர் கின்னரர் உவணர் ஏந்துபு
கேழ்கிளர் மங்கல கீதம் பாடினார். ......
14(கானுறு பஃறலைக்)
கானுறு பஃறலைக் காவு கான்றிடு
தேனுறு விரைமலர் அடிகள் சிந்துபு
வானவர் மகளிர்கள் வணங்கி வாழ்த்துரை
ஆனவை புகன்றனர் அமலை பாங்கரில். ......
15(எல்லைய தாகலும்)
எல்லைய தாகலும் இருந்து தக்கனாங்
கொல்லையின் மறைமொழி உரைத்துத் தன்மனை
வல்லிபொற் சிரகநீர் மரபின் வாக்குற
மெல்லென அரனடி விளக்கி னானரோ. ......
16(விளக்கிய பின்றை)
விளக்கிய பின்றையில் விரைகொள் வீமுதற்
கொளப்படு பரிசெலாங் கொணர்ந்து மற்றவற்
குளப்படு பூசனை உதவி மாதினை
அளித்திட உன்னினன் அமரர் போற்றவே. ......
17(சிற்கன வடிவினன்)
சிற்கன வடிவினன் செங்கை யுள்உமை
நாற்கரம் நல்குபு நன்று போற்றுதி
நிற்கிவள் தன்னையான் நேர்ந்த னன்எனாப்
பொற்கர கந்தரு புனலொ டீந்தனன். ......
18(மூர்த்தமங் கதனிடை)
மூர்த்தமங் கதனிடை முதல்வன் அம்பிகை
சீர்த்திடு மணவணி தெரிந்து கைதொழூஉ
நீர்த்தொகை கதிரொடு நிலவு கண்டுழி
ஆர்த்தென வழுத்தினர் அமரர் யாவரும். ......
19(மாடுறு திசைமுகன்)
மாடுறு திசைமுகன் மணஞ்செய் வேள்வியில்
கூடுறு கலப்பைகள் கொணர்ந்து நூன்முறை
நேடினன் சடங்கெலாம் நிரப்ப மால்முதல்
ஆடவர் இசைத்தனர் அமலன் வாய்மையே. ......
20(அன்னுழி உருவமும்)
அன்னுழி உருவமும் அருவும் ஆவியும்
முன்னுறும் உணர்வுமாய் உலகம் யாவிற்கும்
நன்னயம் புணர்த்தியே நண்ணு நாயகன்
தன்னுறு ஒளித்தனன் அருளின் தன்மையால். ......
21(மறைந்தனன் இருத்த)
மறைந்தனன் இருத்தலும் மகிணன் காண்கிலாள்
அறந்தனை வளர்க்கும்எம் மன்னை நோற்றுமுன்
பெறும்பெரு நிதியினைப் பிழைத்து ளோரெனத்
துறந்தனள் உவகையைத் துளங்கி மாழ்கியே. ......
22(பொருக்கென எழுந்த)
பொருக்கென எழுந்தனள் பூவின் மீமிசைத்
திருக்கிளர் திருமுதல் தெரிவை மாதர்கள்
நெருக்குறு சூழல்போய் நிறங்கொள் தீமுகத்
துருக்கிய பொன்னென உருகி விம்மினாள். ......
23(உயிர்த்தனள் கலுழ்ந்த)
உயிர்த்தனள் கலுழ்ந்தனள் உணர்வு மாழ்கியே
அயர்த்தனள் புலர்ந்தனள் அலமந் தங்கமும்
வியர்த்தனள் வெதும்பினள் விமலன் கோலமே
மயிர்த்தொகை பொடிப்புற மனங்கொண் டுன்னுவாள். ......
24(புரந்தரன் மாலயன்)
புரந்தரன் மாலயன் புலவர் யாவரும்
நிரந்திடும் அவையிடை நிறுக்கும் வேள்விவாய்
இருந்தனன் மாயையால் இறைவன் துண்ணெனக்
கரந்தனன் ஆதலின் கள்வன் போலுமால். ......
25(எய்தியெற் கொண்ட)
எய்தியெற் கொண்டதோர் இறைவன் தன்னையான்
கைதவ னேயெனக் கருத லாகுமோ
மெய்தளர் பான்மையின் வினையி னேன்இவண்
செய்தவஞ் சிறிதெனத் தேற்றல் இன்றியே. ......
26வேறு(என்றென் றுன்னி)
என்றென் றுன்னி உயிர்த்திரங்கும் இறைவி செய்கை எதிர்நோக்கி
மன்றல் நாறுங் குழல்வேத வல்லி புல்லி மனந்தளரேல்
உன்றன் கணவன் பெறும்வாயில் தவமே இன்னும் உஞற்றுகென
நின்ற திருவும் நாமகளும் பிறரும் இனைய நிகழ்த்தினரால். ......
27(அன்னை வாழி)
அன்னை வாழி இதுகேண்மோ அகில முழுதும் அளித்தனையால்
என்ன பொருளும் நின்னுருவே யாண்டும் நீங்கா நின்கணவன்
தன்னை மறைக்கு மறையுளதோ தவத்தை அளிப்பான் நினைந்தனையோ
உன்னல் அரிதாம் நுமதாடல் முழுதும் யாரே உணர்கிற்பார். ......
28(வாக்கின் மனத்தில்)
வாக்கின் மனத்தில் தொடர்வரு நின்மகிணன் தனையும் உன்றனையும்
நோக்க முற்றோம் தஞ்சமென நுவறல் செய்யா வினையாவும்
போக்க லுற்றோம் தோற்றமுறும் புரையுந் தீர்ந்தோம் போதமனந்
தேக்க லுற்றோம் உய்ந்துமியாஞ் செய்யுந் தவமுஞ் சிறிதன்றே. ......
29(என்னா இயம்பி வாழ்)
என்னா இயம்பி வாழ்த்தெடுப்ப இறைவி அவர்க்கண் டினிதருள்செய்
தன்னார் பொய்தல் ஒருவிப்போய் அருமா தவமே புரிவாளாய்
முன்னா முன்னைக் கடிமாடம் முயன்று போந்தாள் இவ்வனைத்தும்
நன்னா ரணனே முதலானோர் நோக்கி நனிவிம் மிதரானார். ......
30(எங்குற் றனன்கொல்)
எங்குற் றனன்கொல் இறையென்பார் இஃதோர் மாயம் எனவுரைப்பார்
மங்கைக் கொளித்த தென்னென்பார் வாரி காண்டு மேலென்பார்
அங்கித் தகைய பலபலசொற் றலமந் தேங்கி யதிசயித்துக்
கங்குற் போதின் மாசூர்ந்த கதிர்போன் மாழ்கிக் கவலுற்றார். ......
31(நோக்குற் றனைய)
நோக்குற் றனைய பான்மைதனை நொய்தில் தக்கன் நனிகனன்று
தீக்கட் கறங்க வெய்துயிர்த்துச் செம்பொற் கடகக் கைபுடைத்து
மூக்கிற் கரந்தொட் டகம்புழுங்க முறுவல் செய்து முடிதுளக்கி
ஆக்கத் தொடியாம் புரிவதுவை ஆற்ற அழகி தாமென்றான். ......
32(வரந்தா னுதவும் பெற்)
வரந்தா னுதவும் பெற்றியினான் மற்றென் மகடூஉ வயின்வாரா
இரந்தான் அதனை யான்வினவி இயல்பின் வதுவை முறைநாடி
நிரந்தார் கின்ற சுரர்காண நெறியால் நேர்ந்தேன் நேர்ந்ததற்பின்
கரந்தான் யாரு மானமுற நவையொன் றென்பாற் கண்டானோ. ......
33(புனையுந் தொன்மை)
புனையுந் தொன்மைக் கடிவினையைப் புன்மை யாக்கி ஊறுபுணர்த்
தெனையும் பழியின் மூழ்குவித்தே இறையும் எண்ணா தொளித்தானே
அனையுந் தாதை யுந்தமரும் ஆரும் இன்றி அகன்பொதுவே
மனையென் றாடும் ஒருபித்தன் மறையோ னாகில் மயல்போமோ. ......
34(ஆயிற் றீதே அவனி)
ஆயிற் றீதே அவனியற்கை அறிந்தேன் இந்நாள் யானென்று
தீயுற் றெனவே உளம்வெதும்பித் திருமால் முதலாந் தேவர்தமைப்
போயுற் றிடுநும் புரத்தென்று போக விடுத்துப் புனிதன்செய்
மாயத் தினையே யுன்னியுன்னி வதிந்தான் செற்றம் பொதிந்தானே. ......
35(பொன்னார் மேனிக்)
பொன்னார் மேனிக் கவுரிமுன்னைப் பொலன்மா ளிகையிற் போந்துலப்பின்
மின்னார் செறிந்த பண்ணையுடன் மேவி அங்கண் வீற்றிருந்து
பன்னாள் ஈசன் தனையெய்தப் பரிந்து நோற்கப் பண்ணவனோர்
நன்னாள் அதனில் தாபதன்போல் நடந்தான் அவள்தன் இடந்தானே. ......
36(நலனேந் தியவெண்)
நலனேந் தியவெண் டலைக்கலனும் நறிய களப நீற்றணியுங்
களனேந் தியகண் டிகைதொடுத்த கவின்சேர் வடமுங் கடிப்பிணையும்
நிலனேந் தியதா ளிடைமிழற்றும் நீடு மறையின் பரியகமும்
வலனேந் தியசூ லமும்பின்னல் வனப்புங் காட்டி வந்தனனே. ......
37வேறு(வந்துமை முற்பட)
வந்துமை முற்பட வந்த வனைக்கண்
டெந்தை பிராற்கினி யாரிவ ரென்னாச்
சிந்தனை செய்தெதிர் சென்றுகை கூப்பி
அந்தரி போற்றினள் அன்புறு நீரால். ......
38(பற்றொடு சென்று)
பற்றொடு சென்று பராய்த்தொழும் எல்லைப்
பெற்றம் அதன்மிசை பெண்ணிட மன்றி
மற்றுள தொல்வடி வத்தொடு நித்தன்
உற்றனன் அவ்விடை ஒண்டொடி காண. ......
39(பார்ப்பதி யாகிய)
பார்ப்பதி யாகிய பாவை நுதற்கண்
நாற்புயன் என்வயின் நண்ணினன் என்னா
ஏற்புறு சிந்தைகொ டின்னல் இகந்தே
மேற்படும் ஓகையின் வீற்றின ளானாள். ......
40(பன்முறை வீழ்ந்து)
பன்முறை வீழ்ந்து பணிந்து பராவி
என்முனம் முந்தை இகந்தனை இன்றிப்
புன்மையை நீக்குதி போந்தனை கொல்லோ
சின்மய என்றெதிர் சென்றுரை செய்தாள். ......
41(அம்முறை செப்பும்)
அம்முறை செப்பும் அணங்கு தனைக்கூய்
மைம்மலி கண்டன் மலர்க்கரம் ஓச்சித்
தெம்முனை சாடுறு சீர்விடை மேற்கொண்
டிம்மென வேதன் இடத்தினில் வைத்தான். ......
42(நீல்விட மேயினன்)
நீல்விட மேயினன் நேரிழை யோடும்
பால்விடை ஊர்ந்து படர்ந்தனன் வெள்ளி
மால்வரை ஏகினன் மற்றவள் பாங்கர்
வேல்விழி மாதர் விரைந்தது கண்டார். ......
43(இக்கென உட்கி)
இக்கென உட்கி இரங்கினர் ஏகித்
தக்கன் இருந்திடு சங்கமுன் ஆகிச்
செக்க ரெனத்திகழ் செஞ்சடை அண்ணல்
புக்கன னால்ஒரு புண்ணிய னேபோல். ......
44(கண்டனள் நின்மகள்)
கண்டனள் நின்மகள் கைதவம் ஓராள்
அண்டினள் சேர்தலும் ஆயவன் வல்லே
பண்டை யுருக்கொடு பாற்பட அன்னாட்
கொண்டுசெல் வான்இது கூறுவ தென்றார். ......
45(பாங்கியர் இன்ன)
பாங்கியர் இன்ன பகர்ந்தன கேளாத்
தீங்கனல் மீமிசை தீயதோர் தூநெய்
ஆங்குபெய் தென்ன அளப்பில செற்றந்
தாங்கி யுயிர்ப்பொடு தக்கன் இருந்தான். ......
46(அக்கணம் வானவர்)
அக்கணம் வானவர் ஆயினர் எல்லாந்
தொக்கனர் வந்து தொழுங்கடன் ஆற்றிப்
பக்கம தூடு பராவினர் வைகத்
தக்கன் அவர்க்கிவை சாற்றுதல் உற்றான். ......
47(என்புகல் வேன்இனி)
என்புகல் வேன்இனி என்மகள் தன்னை
அன்புற வேட்டருள் ஆல மிடற்றோன்
மன்புனை யுங்கடி மன்றல் இயற்று
முன்பு கரந்தனன் முன்னரி தாகி. ......
48(அற்றல தின்றும்)
அற்றல தின்றும் என்ஆடவள் பாங்கில்
கற்றை முடிக்கொள் கபாலி யெனச்சென்
றுற்றனன் என்முன் உறாமல் ஒளித்தான்
பற்றி னன்அன் னவளைப் படர்கின்றான். ......
49(அன்னையும் அத்த)
அன்னையும் அத்தனும் ஆர்வமொ டீய
மன்னிய கேளிர் மகிழ்ந்தனர் வாழ்த்தப்
பின்னர் மகட்கொடு பேர்ந்திலன் ஈன்றோர்
தன்னை மறைத்திது செய்வது சால்போ. ......
50(இங்கிது போல்வன)
இங்கிது போல்வன யாவர்செய் கிற்பார்
சங்கர னேல்இது தான்செய லாமோ
நங்கள் குலத்தை நவைக்கண் உறுத்தான்
அங்கது மன்றியென் னாணையும் நீத்தான். ......
51வேறு(இரந்தனன் சிவனெனும்)
இரந்தனன் சிவனெனும் ஏதம் எங்கணும்
நிரந்தது மற்றது நிற்க இவ்விடை
கரந்தனன் என்பதோர் உரையுங் காசினி
பரந்தது வேறுமோர் பழியுண் டாயதே. ......
52(பண்டொரு பாவை)
பண்டொரு பாவையைப் பரிந்து மன்றல்வாய்
ஒண்டொடிச் செங்கையின் உதக மேவுறக்
கொண்டிலன் என்பதுங் கொள்ளு நீரரைக்
கண்டிலன் என்பதுங் காட்டி னானரோ. ......
53(என்றிவை பற்பல இசை - 2)
என்றிவை பற்பல இசைத்துச் செய்நலங்
கொன்றிடு சிறுவிதி குழுமித் தன்புடைத்
துன்றிய சுரர்தமைத் தொல்லைத் தத்தமூர்
சென்றிட ஏவினன் செயிர்த்து வைகினான். ......
54(கறுவுகொள் நெஞ்)
கறுவுகொள் நெஞ்சொடு கயவன் அன்றுதொட்
டிறைவனை நினைக்கிலன் எள்ளும் நீர்மையான்
உறுதலும் சிலபகல் உயங்கி இச்செயல்
அறிதரும் அயன்முதல் அமரர் தேர்குவார். ......
55ஆகத் திருவிருத்தம் - 8625