(கூடி ஆரமர் இயற்றி)
கூடி ஆரமர் இயற்றினார் தம்வலி குறைந்து
வீடி ஆவிபோய் விளிதலும் அன்னது விரைவின்
நேடி விண்ணிடை நணுகிய தூதுவர் நில்லா
தோடி யாளுடை அவுணர்கோன் முன்புசென் றுரைப்பார். ......
1(துன்றும் ஆயிர மொய்)
துன்றும் ஆயிர மொய்ம்புடை நின்படைத் தொகைஞர்
சென்று சில்லமர் புரிந்தனர் அவனது தெரியா
ஒன்றொர் பாதவம் பறித்தனன் புடைத்தலும் ஒருங்கே
பொன்றி வீழ்ந்தனர் புகுந்தவா றீதெனப் புகன்றார். ......
2(புகன்ற வேலையின்)
புகன்ற வேலையின் அவுணர்கோன் புரையிலோன் வன்மை
புகன்ற வேலையின் வடவையார் அழலெனப் பொங்கி
அகன்ற னன்பெரு மிதத்துடன் ஆணையுந் திறலும்
அகன்ற னன்பெருந் துயர்கொளீஇ யினையன அறைவான். ......
3(உமைய ளித்திடு)
உமைய ளித்திடு சிறுமகன் தூதுவன் ஒருவன்
எமது முன்னம்வந் தவமதி செய்தனன் ஏகி
அமரில் யாரையும் அட்டுநின் றின்னமும் அகலான்
நமது கொற்றமும் நன்றுநன் றாலென நகைத்தான். ......
4(முச்ச கம்புகழ்)
முச்ச கம்புகழ் அவுணர்கோன் முனிவினை முன்னி
யச்செ னக்கிளர்ந் தெழுந்துசென் றவனடி வணங்கி
மெய்ச் சிரங்கள் ஓரையிரு திறலுடை விறல்சேர்
வச்சி ரத்திரு மொய்ம்புடைக் காதலன் வகுப்பான். ......
5(நொய்ய தூதுவன்)
நொய்ய தூதுவன் பொருட்டினால் இத்திறம் நுவறல்
ஐய கேட்கநிற் கியலுமே இறையிவண் அமர்தி
மொய்யில் யான்சென்று மற்றவன் பெருமுரண் முருக்கிக்
கைய கப்படுத் துய்ப்பனால் அன்னது காண்டி. ......
6வேறு(என்ன லோடும் இற)
என்ன லோடும் இறப்பெதிர் உற்றிடா
மன்னன் மைந்தனை நோக்கி மகிழ்வுறா
அன்ன தன்மையை ஆற்றுதி நீயெனப்
பன்னி யேகும் படிபணித் தானரோ. ......
7(விடைபு ரிந்திட)
விடைபு ரிந்திட மெய்வழித் தாதைதன்
அடிவ ணங்கி யகன்றுமன் கோயிலிற்
புடையி ருந்தன போர்ப்படைச் சாலையின்
இடைபு குந்தனன் யாரும் வழுத்தவே. ......
8(அட்டல் இன்றி)
அட்டல் இன்றி அமர்தரு சாலிகை
இட்டு மார்பின் இறுக்கி வயத்தகு
பட்டி கைக்கலன் பாலத் துறுத்தியே
புட்டில் அங்குலி பூண்டு பொருக்கென. ......
9(ஆணி கொண்ட)
ஆணி கொண்ட அயிற்கணை பெய்தபொற்
தூணி கொண்டுபின் தும்பை மிலைச்சியே
நாணி கொண்டு நலந்தரு கார்முகம்
பாணி கொண்டு படைபிற ஏந்தியே. ......
10(கொற்ற மாரமர்)
கொற்ற மாரமர்க் கோலங்கள் உள்ளன
முற்ற வேகொண்டு மூரிவில் வெஞ்சமர்
கற்ற காளை கதுமென நோக்கியே
சுற்று கம்மியர்க் கின்னன சொல்லுவான். ......
11(மிக்க நம்படை)
மிக்க நம்படை வெள்ளத்தி லோர் சில
தொக்க பூசல் தொழிலினை முற்றிய
இக்க ணந்தரு வீர்இவண் என்றலுந்
தக்க தேயெனத் தாழ்ந்தவர் போயினார். ......
12(ஆங்கு நின்றிடும்)
ஆங்கு நின்றிடும் ஏவலர் அப்பணி
தாங்கி யேகத் தகுவர்தங் கோமகன்
நீங்க லின்றுதன் நீழலின் வந்திடும்
பாங்கர் யாரையும் நோக்கிப் பகருவான். ......
13(குமர வேள்விடு)
குமர வேள்விடு கோற்றொழில் தூதனைச்
சமரில் வென்றொரு தாம்பில் தளைபுரீஇ
இமையொ டுங்குமுன் எந்தைமுன் உய்க்குவன்
அமைதிர் போருக் கனைவிரும் என்றனன். ......
14(பாலன் மற்றிவை)
பாலன் மற்றிவை பன்னலும் நன்கெனா
ஏலு கின்ற இளைஞரும் மள்ளரும்
மேலை வெஞ்சமர் செய்ய விரைந்துபோர்க்
கோல மெய்திக் குழீஇயினர் கொட்புற. ......
15(தாறு கொண்டவன்)
தாறு கொண்டவன் தன்குறிப் பிற்செலும்
நூறு நூறு நொறில்பரி மான்பெறீஇ
வீறு பண்ணமை தேரொன்றின் வெய்தென
வேறி னான்மொய்ம் பிருபது கொண்டுளான். ......
16(தந்தி ரத்துத் தலைவர்)
தந்தி ரத்துத் தலைவர்தம் மைந்தரும்
மந்தி ரத்து மதிஞர்தம் மைந்தருஞ்
சுந்த ரத்துத் தொடர்பினில் சுற்றுறா
எந்தி ரப்பெருந் தேர்களில் ஏறினார். ......
17(ஆன வேலை அரசன்)
ஆன வேலை அரசன் சுதன்விடப்
போன கம்மியர் போர்வினை கூறியே
யானை மேல்கொண் டிரும்பணை எற்றலுஞ்
சேனை தம்முட் சிலதிரண் டுற்றவே. ......
18(ஒருங்கு தாம்பல)
ஒருங்கு தாம்பல ஓடலின் அன்னவை
பரங்கொ ளற்கரி தாகிப் படிமகள்
புரங்கி ழிந்திடு புண்கொண் டரற்றல்போல்
இரங்கும் ஓதைகொண் டேகுவ தேர்களே. ......
19(கருவி வானங் கட)
கருவி வானங் கடலுண்டு செல்லுறும்
வரைக ளாமென வந்துதம் மேலுறீஇ
உருமி னத்தை உகுத்தொலி கேட்டலும்
வெருவி வீழ விரைவன வேழமே. ......
20(கிட்டி நாடு நயன)
கிட்டி நாடு நயனமுங் கேடுசெய்
தொட்ட லார்தம் உளமுஞ் சுழன்றிட
வெட்டு மாதிரத் தெல்லையுஞ் சாரிகை
வட்ட மாகி வருவன வாசியே. ......
21(ஆடல் வேல்கதை)
ஆடல் வேல்கதை ஆழி அலப்படை
பாடு சேர்ந்த பலகைஒள் வாள்சிலை
நீடு சூலம் நெடுமழு ஆதியாக்
கூடு பல்படை கொண்டிடு கையினார். ......
22(இடித்த சொல்லர்)
இடித்த சொல்லர் இமையவர் போர்பல
முடித்த மொய்ம்பர் முரணிய பல்படை
வடித்த கற்பினர் மால்வரை யானவை
படித்த லத்திற் படர்ந்தன்ன காட்சியார். ......
23(விசும்பின் மாலை)
விசும்பின் மாலை மிலைச்சிய குஞ்சியர்
பசும்பொன் வீரமெய்ப் பட்டிகை நெற்றியர்
நிசும்பர் அன்னதொர் நேரலர் சோரியின்
அசும்ப றாத அகன்பில வாயினார். ......
24(தீம டங்கல் திறலி)
தீம டங்கல் திறலினர் தென்புலக்
கோம டங்கலின் கொள்கையர் தங்கிளை
தாம டங்கத் தறிபிளந் தார்த்தெழு
மாம டங்கல் தனைப்பொரும் வன்மையார். ......
25(ஏகும் வெஞ்சமர்)
ஏகும் வெஞ்சமர்க் கென்றலும் பூண்பரீஇ
மாகம் அஞ்ச வளர்ந்தெழு தோளினார்
மோகம் இல்லவர் மொய்ம்பினின் மேலவ
ராகும் வீரர் அளப்பிலர் எய்தினார். ......
26(ஐந்து நூறெனும்)
ஐந்து நூறெனும் வெள்ளம் அழுங்குதேர்
தந்தி யின்குழுத் தானும் அனையதே
உந்து மாக்களொ ராயிரம் வெள்ளமாம்
பந்த மிக்க பதாதி இரட்டியே. ......
27(இத்தொ கைப்படும்)
இத்தொ கைப்படும் ஈரிரு தானையும்
மைத்தி ரைக்கடல் வாரியின் ஆர்ப்புறீஇப்
பத்தி ரட்டி படர்புயத் தண்ணலைத்
தத்த மிற்கலந் தொன்றித் தழீஇயின. ......
28(துடிவ லம்புரி)
துடிவ லம்புரி துந்துபி சச்சரி
கடிகொள் மொந்தை கரடிகை தண்ணுமை
இடிகொள் பேரி இரலைகள் ஆதியாம்
முடிவி லாவிய முற்று முழங்கிய. ......
29(இற்ற எல்லையின்)
இற்ற எல்லையின் ஈரிரு தானையும்
நெற்றி யேகடை நீடய லிற்செல
மற்று ளார்களும் வந்திட வச்சிரப்
பொற்ற டம்புயன் பொள்ளென வேகினான். ......
30(வல்லி யக்கடு)
வல்லி யக்கடு மான்பொரு மானவர்
செல்லி யக்கமுஞ் செல்லினை மாறுகொள்
சொல்லி யக்கமுந் துண்ணெனத் தொக்கெழு
பல்லி யக்கடல் ஆர்ப்பும் பரந்தவே. ......
31(ஊழி மால்படை)
ஊழி மால்படை ஒல்லென வேயெழப்
பூழி ஈண்டிவிண் பொள்ளென மூடிய
வேழ மால்வரை வீழ்தரு தானநீர்
ஆழி யென்ன அகன்புவி கொள்ளவே. ......
32(திகந்தம் எட்டு)
திகந்தம் எட்டுந் திருநிழல் ஓச்சியே
உகந்த தேர்களின் ஒண்கொடி ஆடுவ
குகன்வி டுத்திடு கொற்றவன் ஆற்றல்கண்
டகன்சி ரங்கள் அசைப்பன போன்றவே. ......
33(ஆகும் எல்லை அவுண)
ஆகும் எல்லை அவுணர்மன் தேர்மிசைப்
பேய்கள் சூழ்ந்து பிணங்கி மலைந்தன
காகம் யாவுங் கழுகும்வெஞ் சேனமுங்
கூகை யோடு குழீஇயிரங் குற்றவே. ......
34(மடித்த வாயுடை)
மடித்த வாயுடை வச்சிர மொய்ம்பினான்
பிடித்த கையிற் பெருஞ்சிலை வீழ்ந்தது
தொடுத்த வெந்நுறு தூணியும் இற்றதால்
துடித்த வால்இடக் கண்களுந் தோள்களும். ......
35(அண்ணல் மைந்தன)
அண்ணல் மைந்தன தாழியந் தேர்மிசைக்
கண்ண கன்கொடி கையற வீழ்ந்தன
விண்ணின் ஏறு விசும்பின்றி ஆர்ப்பன
எண்ணில் தீக்குறி இவ்வகை யுற்றவே. ......
36(உற்ற காலவை)
உற்ற காலவை உள்ளுறக் கொள்கிலன்
செற்ற மேல்கொண்டு சென்னியோர் பத்துளான்
மற்றொர் தூணியும் வார்சிலை யுங்கொளாப்
பொற்ற டங்கை புறந்தனிற் சேர்த்தினான். ......
37(மொய்கொள் வச்சிர)
மொய்கொள் வச்சிர மொய்ம்பன்இத் தன்மையால்
வெய்ய தன்படை வெள்ளமொ டேகியே
செய்ய வேலுடைச் சேவகன் ஏவல்செய்
ஐயன் நின்ற அடுகளம் எய்தினான். ......
38(வண்டு லாந்தொடை)
வண்டு லாந்தொடை வச்சிர வாகுதன்
தண்ட மோடு சமர்க்களஞ் சேர்தலும்
அண்டர் நாயகன் தூதுவன் அன்னவை
கண்டு நின்று கழறுதல் மேயினான். ......
39வேறு(இந்திர ஞால வைய)
இந்திர ஞால வையத் திறைவனே அல்லன் மற்றை
மைந்தரில் ஒருவ னாகும் வருபவன் வருவான் றன்னை
முந்திய தானை யோடு முரணற முருக்கி வீட்டி
அந்திவான் புகுமுன் எந்தை அடிதொழப் போவன் என்றான். ......
40(எறிதிரை அளக்கர்)
எறிதிரை அளக்கர் என்ன ஈண்டுறும் அனிகம் யாவும்
முறைமுறை சாடி வந்த முதல்வனை முடித்து மாலை
உறுதல்முன் விசய மோடும் ஒய்யென மீளேன் என்னின்
அறுமுக ஐயன் தூதன் ஆவனோ அடிய னென்றான். ......
41(எண்டிசை புகழும்)
எண்டிசை புகழும் வீரன் இனையன விளம்பிச் செவ்வேள்
புண்டரீ கத்துப் பொற்றாள் புந்தியால் இறைஞ்சிப் போற்றி
மண்டமர் முயன்று நேமி மறிதர வரைகள் கீற
அண்டமுந் திசையும் வானுங் குலுங்கத்தோள் கொட்டி ஆர்த்தான். ......
42(ஆர்த்திடும் ஓதை கேளா)
ஆர்த்திடும் ஓதை கேளா அமர்குறித் தெழுதேர் மேலோர்
கார்த்திடு தந்தி மேலோர் கவனமாப் புரவி மேலோர்
பேர்த்திடு நிலத்தின் மேலோர் பிறங்குசீ ரவுணர் யாரும்
வேர்த்தனர் திரிந்து சிந்தை வெருவினர் விளம்பு கின்றார். ......
43(வாழிய உலகம்)
வாழிய உலகம் யாவும் மன்னுயிர்த் தொகையு மாய
ஊழியில் தனிநின் றார்க்கும் உருத்திரன் ஆர்ப்போ அன்றேல்
ஆழிகட் கரசன் ஆர்ப்போ அண்டங்கள் நெக்க ஆர்ப்போ
ஏழ்கட லுடைந்த ஆர்ப்போ இத்திறம் ஆர்ப்ப தென்றார். ......
44(செருவலி கொண்ட)
செருவலி கொண்ட சீற்றச் செங்கணான் ஆர்க்கும் ஓதை
மருமலர்த் தொடைய லாக வச்சிர வாகு வென்போன்
இருபது செவியி னூடும் இரவியம் புழைகள் புக்க
உருமெனச் சேற லோடும் உளம்பனித் துரைக்கல் உற்றான். ......
45(ஈரெழு திறத்த)
ஈரெழு திறத்த வான உலகினுள் இன்று காறிப்
பேரொலி கேட்ட தின்றால் பிறந்ததித் துழனி யாதோ
தேருதி ரென்று பாங்கர் உழையரில் செப்பத் திண்டேர்ச்
சாரதி விசய னென்பான் தாழ்ந்திவை புகலல் உற்றான். ......
46(தெற்றென உணர்தி)
தெற்றென உணர்தி மான்தேர் செலுத்திய வலவ னென்றே
மற்றென துரையை எள்ளல் வல்லைமேற் காண்டி எந்தை
அற்றமில் படையி னோடும் அமர்செய வருதல் நாடி
ஒற்றென நின்றோன் போர்வேட் டார்த்திடும் ஒலியீ தென்றான். ......
47(தூதுவன் ஆர்ப்பி)
தூதுவன் ஆர்ப்பி தென்று சொல்லுமுன் உருத்துக் கண்கள்
மீதெரி பொங்க நக்கு வெய்துயிர்த் துரப்பி யான்போய்
ஈதொரு கணத்தின் அன்னான் இகல்முரண் அழித்துப் பற்றித்
தாதைமுன் உய்ப்பன் காண்டி சரதம்இத் தன்மை யென்றான். ......
48(என்றிவை உரைத்துப் போதும்)
என்றிவை உரைத்துப் போதும் எல்லையின் முன்ன மாகச்
சென்றிடும் அவுண வீரர் சேனையை வகுத்துச் சீறித்
தன்றுணைத் தாளுந் தோளுந் தடக்கையும் அனிக மாக
நின்றதோர் வீரன் றன்னை நேமியிற் சுற்றி ஆர்த்தார். ......
49(கைதனில் இருந்த)
கைதனில் இருந்த செம்பொற் கார்முகங் குனித்து வெங்கோல்
எய்தனர் முசலம் நாஞ்சில் எறிந்தனர் தண்டஞ் சூலம்
பெய்தனர் கணிச்சி விட்டார் பிண்டிபா லங்கள் தூர்த்தார்
நெய்தவழ் அயில்வேல் தொட்டார் நேமிகள் உருட்டு கின்றார். ......
50வேறு(தஞ்செனக் கொடுமை)
தஞ்செனக் கொடுமைசெய் தானவப் படைஞர்கள்
வெஞ்சினத் தன்மையால் விடுபடைக் கலமெலாங்
கஞ்சனைச் சிறைசெயுங் காரணன் தூதுவன்
செஞ்சுடர்ப் படிவமேற் செவ்வண்வந் துற்றவே. ......
51(துய்யன்மேல் வெம்படை)
துய்யன்மேல் வெம்படைத் தொகுதிவந் தடைதலும்
மெய்யெலா முற்றதான் மிக்கசோ ரிப்புனல்
மையல்தீர் காலையின் வந்தெழும் பரிதிபால்
பையவே செய்யதண் கதிர்வரும் பான்மைபோல். ......
52(ஆனதோர் காலையெம்)
ஆனதோர் காலையெம் மையன்வெஞ் சினமுறா
மானினம் பலபல மருவியே செறிவுழி
மேனிவந் தேகியோர் வேங்கைபாய்ந் தடுதல்போல்
தானவப் படையினைத் தாக்குதல் மேயினான். ......
53(ஆயிரம் ஆயிரம்)
ஆயிரம் ஆயிரம் அவதிசேர் அவுணர்தஞ்
சேயதண் குஞ்சியைச் செங்கையாற் பற்றியே
பாயிருந் தரையினும் பாற்படு கிரியினும்
ஏயெனும் அளவைமுன் எற்றியே எறியுமால். ......
54(எய்யும்வெம் படை)
எய்யும்வெம் படைகளும் எறியும்வெம் படைகளுங்
கையினிற் பற்றியே கனலெழப் பிசைதரு
மொய்யெனப் பதைபதைத் தோலமிட் டுயிருகச்
செய்யபொற் றாள்களால் சிலவரைத் தேய்த்திடும். ......
55(மத்தமால் கரிகளும்)
மத்தமால் கரிகளும் வாம்பரித் தொகுதியுஞ்
சித்திரந் திகழ்மணித் தேர்களும் அவுணர்தங்
கொத்தொடே வீழ்தரக் கோலமால் அடிதனக்
கொத்ததன் றாள்களால் உதைபுரிந் துலவுறும். ......
56(கிடைத்திடுஞ் சிலவரை)
கிடைத்திடுஞ் சிலவரைக் கீண்டனன் நீண்டமெய்
துடித்திடக் கழல்களால் துகைத்தனன் சிலவரை
அடித்தனன் சிலவரை அரைத்தனன் சிலவரைப்
புடைத்தனன் சிலவரைப் புதுமரத் தண்டினால். ......
57(மத்தவெங் கரிபரி)
மத்தவெங் கரிபரி வயவர்தேர் ஆயின
பத்துநூ றொருதலைப் படநெடும் பாணியாற்
குத்திடுஞ் சிகரமேற் கோளரி பாய்ந்தெனத்
தத்தியே திரிதருந் தலைமலைக் குலமிசை. ......
58(தேரெலாம் இற்றன)
தேரெலாம் இற்றன திண்டிறற் கவனமாப்
பேரெலாம் இற்றன பிளிறுமால் கரிகளின்
தாரெலாம் இற்றன தானவத் தலைவர்செய்
போரெலாம் இற்றன புகழெலாம் இற்றதே. ......
59(ஆங்கதோர் பொழுதி)
ஆங்கதோர் பொழுதினில் அவுணருக் கிறைமகன்
பாங்கராய் வந்திடும் பல்பெருங் குமரரும்
ஓங்குநாற் படையொடும் ஒருவனைச் சுற்றியே
தாங்குபல் படையினால் சமர்முயன் றாற்றினார். ......
60வேறு(அன்ன காலையில் வீரவா - 1)
அன்ன காலையில் வீரவா குப்பெயர் அறிஞன்
தன்ன தோர்கரத் திருந்திடு பழுமரத் தண்டான்
முன்னர் வந்துசூழ் மைந்தர்கள் முரட்படை யோடுஞ்
சின்ன மாகியே விளிவுறப் புடைத்தனன் திரிந்தான். ......
61(செய்ய மத்தகம்)
செய்ய மத்தகம் இற்றன இற்றன செழுந்தாள்
கைகள் இற்றன மருப்பிணை இற்றன கரிகள்
வெய்ய காலுடன் எருத்தமும் இற்றன மிலைச்சுங்
கொய்யு ளைத்தலை இற்றன குரகதக் குழுவே. ......
62(தட்ட ழிந்தன)
தட்ட ழிந்தன பாரகம் அழிந்தன சகடு
கெட்ட ழிந்தன கேதனம் அழிந்தன கிளர்ந்த
மொட்ட ழிந்தன பாகினம் அழிந்தன முரண்மாக்
கட்ட ழிந்தன ஒழிந்தன கனைகுரல் பஃறேர். ......
63(கால்க ளுற்றிடும்)
கால்க ளுற்றிடும் வெஞ்சிலை இற்றன கடிய
கோல்க ளிற்றன பரிதிகள் இற்றன கொட்பார்
தோல்க ளிற்றன நாந்தகம் இற்றன தூண்டும்
வேல்கள் இற்றன நாஞ்சில்கள் இற்றன விரைவில். ......
64(நெரிந்த சென்னிகள்)
நெரிந்த சென்னிகள் நெரிந்தன மார்பகம் நெடிது
சரிந்த வெங்குடர் சரிந்தன இழுக்குடைத் தசைகள்
சொரிந்த மூளைகள் சொரிந்தன விரிந்தெழு சோரி
திரிந்த கூளிகள் திரிந்துமாய் வுற்றன சேனை. ......
65(கரந்து ணிந்தனர்)
கரந்து ணிந்தனர் புயங்களுந் துணிந்தனர் காமர்
சிரந்து ணிந்தனர் நாசிகள் துணிந்தனர் செழும்பூண்
உரந்து ணிந்தனர் கழலடி துணிந்தனர் உளதொல்
வரந்து ணிந்தனர் வன்மையுந் துணிந்தனர் மைந்தர். ......
66(வாக்கி னாற்சிலர்)
வாக்கி னாற்சிலர் தம்முயிர் உண்டிடும் வன்கைத்
தாக்கி னாற்சிலர் தம்முயிர் உண்டிடுஞ் சமர்செய்
ஊக்கி னாற்சிலர் தம்முயிர் உண்டிடும் உலம்பு
நோக்கி னாற்சிலர் தம்முயிர் உண்டிடு நொய்தின். ......
67(அங்கண் ஓர்சில)
அங்கண் ஓர்சில அவுணரை ஆடல்வெம் பரியை
வெங்கண் யானையை இரதத்தை வாரினன் விரைவின்
மங்குல் வானினுந் தரையினுங் கடலினும் வரைகள்
எங்கு மாகியே வீழ்தர வீரனார்த் தெறிந்தான். ......
68(அன்பு லப்புறு கொடு)
அன்பு லப்புறு கொடுந்தொழில் அவுணர்கள் அமரும்
வன்பு லத்துயிர் கொளவரு மறலிதன் தூதர்
துன்பும் அச்சமும் அணங்குடன் அகன்றுதற் றுதிப்பத்
தென்பு லத்தவன் முன்னுற வீசினன் சிலரை. ......
69(ஒருத லைப்படு)
ஒருத லைப்படுங் கேளிரைத் துன்னுவான் உய்ப்பக்
கருதி னான்கொலோ சிற்சில அவுணர்தங் கணத்தை
நிருதி மாநகர் புகுந்திட வீசினன் நிகரில்
சுருதி நாயகன் ஏவலாற் றியதனித் தூதன். ......
70(நேர்ந்து போர்)
நேர்ந்து போர்புரிந் துயிர்தனை விடாததந் நிலைமை
ஓர்ந்து விண்ணவர் மானங்கள் விடுத்திடா துயர்வான்
சார்ந்த ஞாயிறு பிளந்திடா தாடலின் தன்மை
சேர்ந்து ளார்பெறுந் துறக்கமேல் வீசினன் சிலரை. ......
71(எண்டி சைப்புற)
எண்டி சைப்புறந் தாங்கியே பெயர்கிலா திரக்கங்
கொண்ட வெங்கரிக் கிரையெனச் சிலவரைக் கொடுக்குந்
தெண்டி ரைப்புனல் பருகிய நிரப்பது தீர
உண்டி யாகவே வடவைபால் சிலவரை உய்க்கும். ......
72(ஏந்தல் இன்னபல்)
ஏந்தல் இன்னபல் வகையினால் அடுதலும் இமைப்பின்
வீந்த தானைகள் துணைவரும் பொன்றினர் மிக்கோர்
ஓய்ந்து வானினுங் கடலினுந் திசையினும் உலைந்து
சாய்ந்து போயினர் மானமும் வன்மையுந் தவறி. ......
73(மற்றிந் நீர்மையைக்)
மற்றிந் நீர்மையைக் காண்டலும் வச்சிர வாகு
இற்ற தேகொலாம் நம்பெருந் தானையென் றிரங்கிச்
செற்ற மீக்கொண்டு வலவனை நோக்கியித் தேரை
ஒற்றன் முன்னுற விடுத்தியால் கடிதென உரைத்தான். ......
74(உரைக்கும் வாசக)
உரைக்கும் வாசகங் கேட்டலுந் தொழுதுமுன் னுற்ற
பரிக்கு லங்களின் மத்திகை வீசியே பாகன்
அருக்கன் ஆழியந் திகிரியூர் வலவனும் அஞ்சி
வெருக்கொ ளும்படி தேரினை வீரன்முன் விடுத்தான். ......
75(கொடிய வெஞ்சினந் திரு)
கொடிய வெஞ்சினந் திருகியே சூர்தரு குமரன்
கடிது போர்செய்வான் வருவது மேலையோன் காணா
முடிவி லாமகிழ் வெய்தியே முழுதுல களந்த
நெடிய மாலினும் நெடியன்மற் றிவனென நிமிர்ந்தான். ......
76(நெடிய தாள்புவி)
நெடிய தாள்புவி அளந்திடப் புயங்கள்விண் நெருக்க
முடியெ லாங்கடந் தண்டகோ ளகைதனை முட்ட
வடிவ மைந்திடு திறலினான் பணிபதி மயங்க
அடிபெ யர்ந்துபார் வெடிபட இடிபட ஆர்த்தான். ......
77(புரம டங்கலுந் தெறு)
புரம டங்கலுந் தெறுகணை போன்றுளான் பொன்னோன்
வரம டங்கலுஞ் சோரிய தடங்கலும் வாணாள்
உரம டங்கலும் உண்டிடத் தறியின்வந் துதித்த
நரம டங்கலும் வெருவர எரியெழ நகைத்தான். ......
78(முச்ச கம்புகழ் திற)
முச்ச கம்புகழ் திறலினான் முறுவலும் முழக்கும்
வச்சி ரத்தட மொய்ம்பினான் கேட்டலும் மறுகி
மெய்ச்சி ரத்தொகை துளக்கி ஆரழலெழ விழித்து
நச்செ யிற்றர வாமெனச் செயிர்த்திவை நவில்வான். ......
79(வீர நன்றுநின்)
வீர நன்றுநின் ஆண்மையும் நன்றுமே தக்க
பேரு நன்றுபே ராற்றலும் நன்றுநீ பெற்ற
சீரும் நன்றுநின் விஞ்சையும் நன்றுசெய் கின்ற
போரு நன்றுநிற் கேற்பதிவ் வார்ப்பெனப் புகன்றான். ......
80(மற்று மோருரை)
மற்று மோருரை புகலுவான் வந்தெதிர் மலைந்த
கொற்ற வீரரைப் படுத்தனம் என்றுளங் கொண்டாய்
அற்றெ லாமினி விடுமதி நின்மிடல் அலைத்துப்
பற்றி எந்தைமுன் விடுப்பனால் உனையெனப் பகர்ந்தான். ......
81(நின்னை வென்றி)
நின்னை வென்றிட முயலுவன் தமியனும் நீயும்
என்னை வென்றிட முயலுதி இருவரும் அதனைப்
பன்னி நிற்பதிற் பயனெவன் கடிதமர் பயிறி
பின்னை வென்றுளார் வெல்லுக என்றனன் பெரியோன். ......
82(என்னு முன்னரே வச்சி)
என்னு முன்னரே வச்சிர வாகுவென் றிசைக்கும்
மன்னன் மாமகன் தனதுகைக் கார்முகம் வாங்கிப்
பொன்னின் நாணொலி கொண்டொரா யிரங்கணை பூட்டி
மின்னு லாந்தனி வேலவன் தூதன்மேல் விடுத்தான். ......
83(விடுத்த ஆயிரம்)
விடுத்த ஆயிரம் பகழியும் விடலைதன் மிசையே
அடுத்த எல்லையிற் காணுறா அங்கையொன் றதனை
எடுத்து முன்னுற ஓச்சியே அங்கவை எனைத்தும்
பிடித்து வல்லையின் நுண்டுகள் பட்டிடப் பிசைந்தான். ......
84(விட்ட வாளிகள் பூழி)
விட்ட வாளிகள் பூழிபட் டிடுதலும் வெகுண்டு
மட்டு வாகைவெஞ் சிலையினைப் பின்னரும் வணக்கி
நெட்டி லைச்சரம் ஒருபதி னாயிரம் நிறத்திற்
பட்டி டும்படி தொட்டனன் அவுணர்கோன் பாலன். ......
85(அசைவி லானது)
அசைவி லானது நோக்கியே முந்துபோர் அகத்தில்
இசைமை நீங்கியே முடிந்திடு தானவர் இட்ட
முசல மாகிய தொன்றினை யெடுத்துமுன் வந்த
விசிகம் யாவையும் புடைத்தனன் திசைதொறும் வீழ. ......
86(வழுவில் வாளிகள்)
வழுவில் வாளிகள் வறிதுபட் டிடுதலு மற்றும்
விழுமி தாகிய ஒருபதி னாயிரம் விசிகம்
பழுது றாதன தூண்டியே ஆண்டகை பரித்த
எழுவை நுண்டுகள் ஆக்கியே பின்னரும் எய்வான். ......
87(தலையி லாயிர)
தலையி லாயிரங் களத்தினில் ஆயிரந் தடந்தோள்
மலையி லாயிரம் உரத்தினி லாயிரம் வயத்தாள்
நிலையில் ஆயிரங் கணைகளாத் தூண்டினன் நீடுங்
கொலையில் ஆயிரங் கூற்றினைப் போலுறுங் கொடியோன். ......
88(கையில் ஏந்திய)
கையில் ஏந்திய பேரெழு முரிந்திடக் காமர்
செய்ய மெய்ம்முழு தீண்டியே பகழிகள் செறிய
ஐயன் நின்றனன் ஓரிறை வருந்தியே அதற்பின்
ஒய்யெ னச்சென்று வெய்யவன் தேரினை உதைத்தான். ......
89(உதைத்த காலை)
உதைத்த காலையிற் பண்ணுறு பரியெலாம் ஒருங்கே
பதைத்து வீழ்ந்தன பாகனும் உருண்டனன் பட்டான்
கதித்த வையமும் அழிந்தது அன்னது காணா
மதித்து வேறொரு தேரிடைப் பாய்ந்தனன் மறவோன். ......
90(பாய்ந்து வச்சிர)
பாய்ந்து வச்சிர வாகுவாந் தொல்பெயர் படைத்தோன்
தேய்ந்த ஒண்பிறை பணியொடு சேர்ந்தன சிலையின்
ஆய்ந்தொ ராயிரம் அயிற்கணை பூட்டியே அடுபோர்
ஏந்தல் நெற்றியுட் செறித்தனன் அமரர்கள் இரங்க. ......
91(ஆயி ரங்கணை நுதலிடை - 1)
ஆயி ரங்கணை நுதலிடை அழுத்தலும் அடல்வேல்
தூய வன்றிருத் தூதுவன் சூரருள் புரிந்த
தீய வன்தடந் தேரினைச் செங்கையால் எடுத்து
மீயு யர்ந்திடும் விண்ணிடை எறிந்தனன் விடுத்தான். ......
92(விண்ண கத்திடை)
விண்ண கத்திடை எறிந்தபின் வீரவா குப்பேர்
அண்ணல் வச்சிர வாகுவந் தேறுவான் அமைந்து
பண்ணு றுத்திய ஏமமாய் நின்றதேர் பலவுந்
துண்ணெ னப்புடைத் தெறிந்துதைத் தொல்லையிற் றொலைத்தான். ......
93(தொலைக்கும் எல்லை)
தொலைக்கும் எல்லையின் அவுணர்கோன் மதலைதொல் புவிக்கோர்
இலக்கம் யோசனை எல்லையின் காறும்விண் ணேகி
அலக்க ணுற்றமீண் டழிதரு தேருடன் அமரில்
வெலற்க ருந்திறல் அறுமுகன் தூதன்முன் வீழ்ந்தான். ......
94(நிலவ ரைப்புறு)
நிலவ ரைப்புறுஞ் சூர்மகன் எழுந்துதன் நெடிய
சிலைவ ளைத்தமர் செய்திட முன்னலுந் திறலின்
தலைமை பெற்றவன் கண்டுகை ஓச்சியத் தனுவை
வலிது பற்றியே முரித்தனன் பேரொலி மயங்க. ......
95(ஏந்து கார்முகந் தனை)
ஏந்து கார்முகந் தனைமுரித் திடுதலும் எரியிற்
காந்து கண்ணுடை வச்சிர மொய்ம்பனோர் கரத்தின்
வாய்ந்த வாள்கொடே எதிர்தலுந் தன்னுடை மருங்கின்
நாந்த கந்தனை உறைகழித் தறிவன்மேல் நடந்தான். ......
96(நடந்து வச்சிர)
நடந்து வச்சிர வாகுமுன் உய்த்திட நனிதோள்
அடைந்த வாளினை விலக்கியே அறிவரில் அறிவன்
கடந்த போர்வலி கொண்டதன் வாளினாற் கடிது
தடிந்து வீட்டினன் அவுணர்கோன் நாந்தகத் தடக்கை. ......
97(செய்ய தோர்கர)
செய்ய தோர்கரந் துணிபடத் தீயவன் செறுத்தோர்
கையி ருந்திடு தண்டினை எறிதலுங் கண்டு
மையில் கேள்வியன் துணிபடுத் தவுணர்கோன் மதலை
ஐயி ரண்டவாந் தலையையும் வாளினால் அறுத்தான். ......
98வேறு(எந்தைதன் தூதுவன்)
எந்தைதன் தூதுவன் எறிந்த வாளினால்
ஐந்திரு சென்னியும் அற்று வீழ்தலும்
மைந்தியல் வச்சிர வாகு வாகிய
வெந்திறல் அவுணர்கோன் வீடி னானரோ. ......
99(ஆடியல் அவுணர்)
ஆடியல் அவுணர்தம் அண்ணல் தன்மகன்
வீடிய காலையின் வெருவிப் பாங்கரின்
நாடிய அவுணர்கள் நனிபு லம்புறீஇ
ஓடினர் திசைதொறும் உடைந்து போயினார். ......
100(துஞ்சினன் வச்சிர)
துஞ்சினன் வச்சிரத் தோளன் கண்டிது
நெஞ்சகம் மகிழ்ந்திவண் நிற்ப னேயெனின்
வெஞ்சின அவுணர்கோன் வினவில் தீமையென்
றஞ்சினன் கரந்தென அருக்கன் போயினான். ......
101ஆகத் திருவிருத்தம் - 4616