(மடந்தையொ டிரிந்தி)
மடந்தையொ டிரிந்திடும் வாச வன்முகன்
அடைந்திடு சிறைக்களம் அகன்று வானெறி
நடந்தனன் அவுணர்கோன் நண்ணு கோன்நகர்
இடந்தரு கிடங்கரை இகந்து போயினான். ......
1(அகழியை நீங்கினான்)
அகழியை நீங்கினான் அயுதந் தன்னினும்
மிகுதிகொள் நாற்படை வெள்ளந் தானைகள்
தகுதியின் முறைமுறை சாரச் சுற்றிய
முகில்தவழ் நெடுமதில் முன்ன ரேகினான். ......
2(கான்கொடி கங்கை)
கான்கொடி கங்கைநீர் கரப்ப மாந்தியே
மீன்கதிர் உடுபதி விழுங்கி விட்டிடும்
வான்கெழு கடிமதில் வரைப்பின் முன்னரே
தான்கிளர் கோபுரங் கண்டு சாற்றுவான். ......
3(குரைகடல் உண்டவன்)
குரைகடல் உண்டவன் கொண்ட தண்டினால்
வருபுழை மீமிசை வாய்ப்பத் தாரகன்
பெருவரை நிமிர்ந்திடு பெற்றி போலுமால்
திருநிலை பலவுடைச் சிகரி நின்றதே. ......
4(தூணம துறழ்புய)
தூணம துறழ்புயச் சூரன் என்பவன்
சேணுறும் அண்டமேற் செல்லச் செய்ததோர்
ஏணிகொ லோவிது என்ன நின்றதால்
நீணிலை பலவுடன் நிமிர்ந்த கோபுரம். ......
5(துங்கமொ டிறைபுரி)
துங்கமொ டிறைபுரி சூரன் கோயிலில்
பொங்குசெம் மணிசெறி பொன்செய் கோபுரம்
எங்கணு முடியுநாள் இவுளி வாய்ப்படும்
அங்கிவிண் காறெழும் வடிவம் அன்னதே. ......
6(அண்டமங் கெவற்றி)
அண்டமங் கெவற்றினும் அமர்ந்து நிற்புறும்
விண்டொடர் வரைகளும் மேரு வானவும்
பண்டிதன் மிசையுறப் பதித்த தொக்குமாற்
கொண்டியல் சிகரியுட் கூட சாலைகள். ......
7(மெய்ச்சுடர் கெழுமிய)
மெய்ச்சுடர் கெழுமிய வியன்பொற் கோபுரம்
உச்சியில் தொடுத்திட முழங்கு கேதனம்
அச்சுத னாஞ்சிவன் அளவை தீர்முகத்
துச்சிதொ றிருந்தரா ஒலித்தல் போலுமால். ......
8(திசைபடு சிகரியி)
திசைபடு சிகரியிற் செறிந்த வான்கொடி
மிசைபடும் அண்டமேல் விடாமல் எற்றுவ
பசைபடும் அதளுடைப் பணைய கத்தினில்
இசைபடப் பலகடிப் பெறிதல் போலுமால். ......
9(விண்ணவர் தாமுறை)
விண்ணவர் தாமுறை வியன்ப தத்தொடுந்
திண்ணிலை இடந்தொறுஞ் சிவண வைகினர்
அண்ணலங் கோபுரம் அதனிற் கைவலோன்
பண்ணுறும் ஓவியப் பாவை என்னவே. ......
10(என்பன பலபல இய)
என்பன பலபல இயம்பி ஈறிலாப்
பொன்புனை தோணியம் புரிசைச் சூழலின்
முன்புறு கோபுர வனப்பு முற்றவும்
நன்பெரு மகிழ்ச்சியான் நம்பி நோக்கினான். ......
11(புதவுறு கோபுர)
புதவுறு கோபுரப் பொருவில் வாய்தலுள்
மதவலி உக்கிரன் மயூர னாதியோர்
அதிர்தரு நாற்படை அயுதஞ் சுற்றிடக்
கதமொடு காப்பது காளை நோக்கினான். ......
12(நோக்கிய திறலவன்)
நோக்கிய திறலவன் நொச்சி தாவியே
ஆக்கமொ டமர்தரும் அவுணன் கோயிலுள்
ஊக்கமொ டும்பரான் ஓடி முன்னுறு
மேக்குயர் சூளிகை மிசையிற் போயினான். ......
13வேறு(சூளிகை மீமிசை)
சூளிகை மீமிசை துன்னுபு சூரன்
மாளிகை யுள்ளவ ளந்தனை யெல்லாம்
மீளரி தாவிழி யோடுள மேவ
ஆளரி நேர்தரும் ஆண்டகை கண்டான். ......
14(கண்டதொ ரண்ணல்)
கண்டதொ ரண்ணல் கடுந்திறல் வெஞ்சூர்
திண்டிறல் வாளரி சென்னிகொள் பீடத்
தெண்டகும் ஆணை இயற்றிய செம்பொன்
மண்டபம் வைகுறும் வண்மை தெரிந்தான். ......
15(அருந்தவ வேள்வி)
அருந்தவ வேள்வி அயர்ந்தரன் ஈயும்
பெருந்திரு மிக்கன பெற்றுல கெல்லாந்
திருந்தடி வந்தனை செய்திட வெஞ்சூர்
இருந்திடு கின்ற இயற்கை இசைப்பாம். ......
16(ஐயிரு நூறெனும்)
ஐயிரு நூறெனும் யோசனை யான்றே
மொய்யொளி மாழையின் முற்றவு மாகித்
துய்யபன் மாமணி துஞ்சிவில் வீசி
மையறு காட்சிகொள் மண்டபம் ஒன்றின். ......
17(மேனகை யோடு)
மேனகை யோடு திலோத்தமை மெய்யின்
ஊனமில் காமர் உருப்பசி யாதி
வானவர் மங்கையர் வட்டம் அசைத்தே
மேனிமிர் சீகரம் வீசினர் நிற்ப. ......
18(சித்திர மாமதி)
சித்திர மாமதி செங்கதிர் பாங்காய்
முத்தணி வேய்ந்து முகட்டிள நீலம்
உய்த்து மணித்தொகை உள்ளம் அழுத்துஞ்
சத்திர மாயின தாங்கினர் நிற்ப. ......
19(வெள்ளடை பாகு)
வெள்ளடை பாகு வெளிற்றுறு சுண்ணங்
கொள்ளும் அடைப்பைமென் கோடிகம் வட்டில்
வள்ளுடை வாளிவை தாங்கி மருங்காய்த்
தள்ளரு மொய்ம்புள தானவர் நிற்ப. ......
20(வெம்மைகொள் பானு)
வெம்மைகொள் பானுவை வெஞ்சிறை யிட்ட
செம்மலும் ஏனைய சீர்கெழு மைந்தர்
மும்மைகொள் ஆயிர மூவரு மாகத்
தம்முறை யாற்புடை சார்ந்தனர் வைக. ......
21(பாவ முயன்று)
பாவ முயன்று பழித்திறன் ஆற்றுங்
காவிதி யோர்கரு மங்கள் முடிப்போர்
ஆவதொர் சாரண ராய்படை மள்ளர்
ஏவரும் ஞாங்கரின் எங்கணும் நிற்ப. ......
22(நாடக நூல்முறை நன்று)
நாடக நூல்முறை நன்று நினைந்தே
ஆட அரம்பைய ராயுள ரெல்லாஞ்
சேடியர் கின்னரர் சித்தர் இயக்கர்
பாடுற வீணைகள் பண்ணினர் பாட. ......
23(ஏகனை ஈசனை)
ஏகனை ஈசனை எந்தையை யெண்ணா
ராகிய தொல்லவு ணக்குழு வென்ன
வேகும் உளத்தினர் கஞ்சுகர் வெங்கண்
மாகதர் சூரல் பிடித்து வழுத்த. ......
24(உள்ளிடும் ஆயிர)
உள்ளிடும் ஆயிர யோசனை யெல்லை
கொள்ளிட மான குலப்பெரு மன்றந்
தள்ளிட வற்ற சனங்கள் மிகுத்தே
எள்ளிட வெள்ளிடம் இன்றென ஈண்ட. ......
25(வச்சிர மெய்வயி)
வச்சிர மெய்வயி டூரியம் ஒண்பல்
உச்சியில் வாலுளை யேயொளிர் முத்தம்
அச்சுறு கண்மணி யாம்அரி மாவின்
மெய்ச்சிர மேந்தும் வியன்தவி சின்கண். ......
26(மீயுயர் நீல வியன்)
மீயுயர் நீல வியன்கிரி உம்பர்
ஞாயிறு காலையின் நண்ணிய வாபோல்
பாயிருள் கீறிய பன்மணி கொண்ட
சேயபொன் மாமுடி சென்னியின் மின்ன. ......
27(கறுத்தவ ராத்துணை)
கறுத்தவ ராத்துணை கண்டிரு வெய்யோர்
உறுப்பிடை கவ்வி யொசிந்து தலைப்போய்
முறுக்கிய வாலொடு முன்கலந் தென்ன
மறுத்தவிர் குண்டலம் வார்குழை தூங்க. ......
28(வீறிய மாமணி)
வீறிய மாமணி வெற்பின் மிசைக்கண்
ஏறிய ஒண்பகல் இந்துவி யற்கை
மாறிய வந்தென மால்வள மாகும்
நீறு செறிந்திடு நெற்றி இலங்க. ......
29(விண்டுமிழ் கின்ற)
விண்டுமிழ் கின்ற வியன்புழை தோறுந்
தண்டுளி வந்தமர் தன்மைய தென்னப்
புண்டரி கம்பொறை போற்றி யுயிர்க்கும்
வண்டர ளத்தொடை மார்பின் வயங்க. ......
30(பங்கமில் சந்தொடு)
பங்கமில் சந்தொடு பாளிதம் நானங்
குங்குமம் ஏனைய கந்திகள் கூட்டி
அங்கம தன்கண் அணிந்தன அண்டம்
எங்கும் உலாவி இருங்கடி தூங்க. ......
31(வான்றிகழ் நீனிற)
வான்றிகழ் நீனிற மாமுகி லின்பால்
தோன்றிய மின்புடை சுற்றிய தென்ன
ஏன்றுள அண்டம் எனைத்தையும் ஆற்றும்
ஆன்றுயர் தோளிடை அங்கதம் மல்க. ......
32(மெய்த்துணை யாமிரு)
மெய்த்துணை யாமிரு வெம்பணி ஞாலம்
பைத்தலை கொள்வ பரம்பொறை யாற்றா
தெய்த்தன பூண்கொடி யாப்புறு மாபோற்
கைத்தல முன்கட கஞ்செறி வெய்த. ......
33(நீலம தாய நெடு)
நீலம தாய நெடுங்கிரி மேல்பால்
வாலிய கங்கை வளைந்திடு மாபோல்
கோல மிடற்றிடை கோவைகொள் முத்தின்
சால்வுறு கண்ட சரங்கள் இமைப்ப. ......
34(வீர மடந்தையர்)
வீர மடந்தையர் மேதக நாளுஞ்
சீரிய தோளிணை செல்கதி யென்ன
ஏரியல் பன்மணி இட்டணி செய்த
ஆர வடுக்கல்பொன் ஆகம் இலங்க. ......
35(அந்தியின் வண்ண)
அந்தியின் வண்ணமும் அத்தொளி யூருஞ்
சுந்தர மாலிடை சுற்றிய வாபோல்
முந்து பராரைகொள் மொய்ம்மணி யாடை
உந்தியின் ஒண்பணி யோடு வயங்க. ......
36(இருபணி பார்முகம்)
இருபணி பார்முகம் இட்டிட வீட்டி
உருமொடு மின்னும் உலப்பில சுற்றிக்
கருமிட றூடு கலந்தென நுண்ணூல்
குரைகழல் வார்கழல் கொண்டு குலாவ. ......
37(மென்மணி மாழை)
மென்மணி மாழையின் வேதன் இயற்றிப்
பன்மணி மீது படுத்திய பல்பூண்
தொன்மணி மெய்புனை சூரபன் மாவோர்
பொன்மணி மாமுகில் போல இருந்தான். ......
38(இருந்திடு கின்ற)
இருந்திடு கின்ற இயற்கை விழிக்கோர்
விருந்தமு தாக வியப்பொடு நோக்கிச்
சுரந்திடு மன்பொடு சூளிகை வைகும்
பெருந்திறல் மாமுகில் இங்கிவை பேசும். ......
39(மூவரின் முந்திய முக்க)
மூவரின் முந்திய முக்கணன் அம்பொற்
சேவடி பேணிய தேவர்கள் தம்முள்
தூவுடை வேலுள சூரபன் மாப்போல்
ஏவர் படைத்தனர் இத்திரு வெல்லாம். ......
40(ஓய்ந்து தவம்புரி)
ஓய்ந்து தவம்புரி வோருள் உவன்போல்
மாய்ந்தவர் இல்லை மறத்தொடு நோற்றே
ஆய்ந்திடின் முக்கண்எம் மையனும் இன்னோற்
கீந்தது போற்பிறர்க் கீந்ததும் இன்றால். ......
41(பாடுறு வேள்வி)
பாடுறு வேள்வி பயின்றழல் புக்கும்
பீடுறும் இவ்வளம் ஆயின பெற்று
நீடுறு மாறு நினைந்திலன் வெய்யோன்
வீடுறு கின்ற விதித்திறன் அன்றோ. ......
42வேறு(மெய்ச்சோதி தங்கு)
மெய்ச்சோதி தங்கு சிறுகொள்ளி தன்னை விரகின்மை கொண்ட குருகார்
கச்சோத மென்று கருதிக் குடம்பை தனினுய்த்து மாண்ட கதைபோல்
அச்சோ வெனப்பல் இமையோரை ஈண்டு சிறைவைத்த பாவம் அதனால்
இச்சூர பன்மன் முடிவெய்து நாளை இதனுக்கொர் ஐய மிலையே. ......
43(மிகையான வீரம்)
மிகையான வீரம் வளமாற்றல் சால மேவுற்று ளோரும் இறையும்
பகையார்க ணேனும் உளராகி வாழ்தல் பழுதன்றி நன்றி படுமோ
மகவானை மங்கை யுடனே துரந்தும் அவர்மைந்த னோடு சுரரை
அகலாமல் ஈண்டு சிறைசெய்த பாவம் அதனால் இழப்பன் அரசே. ......
44(மன்னுந் திறத்தின்)
மன்னுந் திறத்தின் அமர்சூர பன்மன் மாமக்கள் சுற்றம் நகரம்
முன்னும் படிக்கும் அரிதான செல்வ முடனாளை ஈறு படுமேல்
முன்னென் பவர்க்கு முன்னாகும் ஆறு முகன்நல்கு முத்தி யலதேல்
என்னுண்டு நாளும் வினைசெய் துழன்ற இவன்ஆ ருயிர்க்கு நிலையே. ......
45(என்றித் திறங்கள்)
என்றித் திறங்கள் அருளோடு பன்னி எழில்கொண்ட வேர மிசையே
துன்றுற்ற வீரன் வளனோ டிருந்த சூரன்முன் ஏகல் துணியாக்
குன்றத்தி னின்று மிவரெல்லை போன்று குமரேசன் எந்தை அடிகள்
ஒன்றக் கருத்தினி டைகொண் டெழுந்து நடைகொண் டவைக்கண் உறுவான். ......
46வேறு(நலஞ்செய் சூளிகை)
நலஞ்செய் சூளிகை நீங்கிவிண் ணெறிக்கொடு நடந்து
கலஞ்செய் திண்டிறல் வாகுவாம் பெயருடைக் கடவுள்
வலஞ்செய் வாட்படை அவுணர்கோன் மன்னிவீற் றிருக்கும்
பொலஞ்செய் கின்றஅத் தாணிமண் டபத்திடைப் போனான். ......
47(எல்லை இல்லதோர் பெரு)
எல்லை இல்லதோர் பெருந்திரு நிகழவீற் றிருந்த
மல்ல லங்கழல் இறைவனைக் குறுகிமாற் றலரால்
வெல்ல ருந்திறல் வீரவா குப்பெயர் விடலை
தொல்லை நல்லுருக் காட்டினன் அவைக்கெலாந் தோன்ற. ......
48(ஒற்றை மேருவில்)
ஒற்றை மேருவில் உடையதோர் பரம்பொருள் உதவுங்
கொற்ற வேலுடைப் புங்கவன் தூதெனக் கூறி
இற்றை இப்பகல் அவுணர்கோன் கீழியான் எளிவாய்
நிற்றல் எம்பிரான் பெருமையின் இழிபென நினைந்தான். ......
49(மாயை தந்திடு)
மாயை தந்திடு திருமகன் மன்னிவீற் றிருக்கும்
மீயு யர்ந்திடும் அரியணைக் கொருபுடை விரைவில்
போயி ருப்பது மேலன்று புன்மையோர் கடனே
ஆய தன்றியும் பாவமென் றுன்னினான் அகத்துள். ......
50(இனைய துன்னியே)
இனைய துன்னியே அறுமுகப் பண்ணவன் இருதாள்
நினையும் எல்லையில் ஆங்கவன் அருளினால் நிசியில்
தினக ரத்தொகை ஆயிர கோடிசேர்ந் தென்னக்
கனக மாமணித் தவிசொன்று போந்தது கடிதின். ......
51(நித்தி லப்படு பந்த)
நித்தி லப்படு பந்தருஞ் சிவிகையும் நெறியே
முத்த மிழ்க்கொரு தலைவனாம் மதலைக்கு முதல்வன்
உய்த்த வாறெனக் குமரவேள் வீரனுக் குதவ
அத்த லைப்பட வந்தது மடங்கலேற் றணையே. ......
52(பன்னி ரண்டெனு)
பன்னி ரண்டெனுங் கோடிவெய் யவரெலாம் பரவப்
பொன்னின் மால்வரை திரைக்கடல் அடைந்தவா போல
மின்னு லாவிய பொலன்மணிப் பீடிகை விறல்சேர்
மன்னர் மன்னவன் அவைக்களத் தூடுவந் ததுவே. ......
53(சிவன் மகன்விடு)
சிவன் மகன்விடு பொலன்மணித் தவிசுசேண் விளங்கிப்
புவன முற்றுறத் தன்சுடர் விடுத்தலிற் பொல்லாப்
பவம னத்தொடு தீமையே வைகலும் பயிற்றும்
அவுணர் மெய்யையுந் தெய்வதப் படிவமாக் கியதால். ......
54(அயிலெ யிற்றுடை)
அயிலெ யிற்றுடை அவுணர்கள் அணிகலந் தன்னில்
குயிலு டைப்பல மணிகளுங் குமரவேள் உய்த்த
இயலு டைப்பெருந் தவிசொளி பரத்தலின் இரவி
வெயிலி டைப்படு மின்மினி போல்விளங் கிலவே. ......
55(செக்கர் வானிற மதி)
செக்கர் வானிற மதிக்கதிர் உடுக்களின் திரட்சி
தொக்க பாயிருள் பலவகை எழிலியின் துளக்கம்
மிக்கெ லாஞ்செறி மாலையின் உம்பர்மேல் வெய்யோன்
புக்க தேயெனத் தொலைத்ததால் அச்சபைப் பொலிவை. ......
56(திசைமு கத்தனு)
திசைமு கத்தனுஞ் செயற்கருந் தவிசொளி செறிந்தே
அசைவ ருந்திறற் சூரபன் மாவெனும் அவுணன்
இசைமை தன்னையும் ஆணைதன் னையும்அவ னியாக்கை
மிசைகொள் பேரணிக் கதிரையும் விழுங்கின விரைவில். ......
57(அனைய வான்தவி)
அனைய வான்தவி சவுணன்நேர் இருத்தலும் அதுகண்
டெனது நாயகன் விடுத்தனன் போலுமென் றெண்ணி
மனம கிழ்ச்சியால் அறுமுகப் பிரானடி வழுத்தி
இனைய நாடுவான் இருந்தனன் ஆங்கதன் மிசையே. ......
58(பெருந்த னிச்சுடர்)
பெருந்த னிச்சுடர் எறித்திடு பொன்மணிப் பீடத்
திருந்து மேதகு சிறப்பொடு விளங்கிய ஏந்தல்
விரிந்த பல்கதி ருடையதோர் வெய்யவன் நடுவட்
பொருந்தி வைகிய கண்ணுதற் பரமனே போன்றான். ......
59(மின்னி ருந்தவேல்)
மின்னி ருந்தவேல் அவுணர்கோன் எதிருறும் விடலை
முன்னி ருந்தஆ டகன்றனை அடுமுரட் சீயஞ்
செந்நி ணங்கவர்ந் தலமர அணுகிமுன் றெற்றப்
பொன்னி ருந்தவி சிருந்திடும் வீரனே போன்றான். ......
60(வெம்மைக் காலிருள்)
வெம்மைக் காலிருள் வேலைபோல் மூடிவிண் புவியைத்
தம்முட் சித்தரிற் காட்டலுஞ் சதுர்முகத் தொருவன்
நம்மொத் தாரிலை என்றிடச் சிவன்புகழ் நவிலுஞ்
செம்மைத் தொல்குண மாலுநேர்ந் திருந்தனன் திறலோன். ......
61(இவற்றி யற்கையால்)
இவற்றி யற்கையால் வீரவா குப்பெயர் ஏந்தல்
நிவப்பின் மிக்கதோர் பொன்மணித் தவிசின்மேல் நெஞ்சின்
உவப்பும் வீரமும் மேதக இருத்தலும் உற்ற
அவைக்க ளத்தினர் யாவருங் கண்டனர் அதனை. ......
62(நோற்றல் முற்றுறும்)
நோற்றல் முற்றுறும் வினைஞர்பால் நொய்தின்வந் திறுத்த
ஆற்றல் சால்வளம் போலவே அரியணை அதன்கண்
தோற்று மேலவன் நிலைமையைக் காண்டலுந் துளங்கி
ஏற்ற அற்புதம் எய்தினர் அவைக்களத் திருந்தார். ......
63வேறு(வாரிலங் கியகழல்)
வாரிலங் கியகழல் மன்னன் முன்னரே
தாரிலங் கியமணித் தவிசின் உற்றுளான்
வீரனும் போலுமால் வினையம் ஓர்கிலேம்
யாரிவன் கொல்லென இயம்பு வார்சிலர். ......
64(முந்திவட் கண்டிலம்)
முந்திவட் கண்டிலம் முடிவில் ஆற்றல்சேர்
எந்தைமுன் இதுபொழு திருத்தல் மேயினான்
நந்தமை நீங்கியே நடுவ ணேயிவன்
வந்ததெவ் வாறென வழங்கு வார்சிலர். ......
65(ஒப்பருஞ் சனங்க)
ஒப்பருஞ் சனங்களோ டொன்றி நம்மெலாந்
தப்பினன் புகுந்தனன் தமிய னென்னினும்
இப்பெருந் தவிசிவண் இருந்த தாற்றவும்
அற்புதம் அற்புத மாமென் பார்சிலர். ......
66(சீயமெல் லணை)
சீயமெல் லணையொடு செம்மல் முன்னரே
ஏயெனும் அளவையின் ஈண்டு தோன்றினான்
ஆய்பவர் உண்டெனின் அறைவன் நம்மினும்
மாயன்இங் கிவனென வகுக்கின் றார்சிலர். ......
67(அறைகழல் ஒருவனை)
அறைகழல் ஒருவனை அவையத் தென்முனங்
குறுகிய விடுத்ததென் குழாங்கொண் டீரெனா
இறையவன் நங்களை யாது செய்யுமோ
அறிகில மெனப்பதைத் தழுங்கு வார்சிலர். ......
68(ஒட்டலன் ஒருவனை)
ஒட்டலன் ஒருவனை ஒறுத்தி டாதிவண்
விட்டதெ னென்றிறை வெகுளு முன்னரே
கிட்டினம் அவன்றனைக் கெழுமிச் சுற்றியே
அட்டனம் வருதுமென் றறைகின் றார்சிலர். ......
69(விளிவிலாத் திற)
விளிவிலாத் திறலுடை வேந்தன் தன்னெதிர்
களியுலா மனத்தொடு கடிதின் உற்றுளான்
தெளிவிலா மாயையின் திறலன் போலுமால்
அளியனோ நுங்களுக் கவனென் பார்சிலர். ......
70(மன்னவன் எதிரு)
மன்னவன் எதிருற வந்து ளான்றனை
அன்னவன் பணியினால் அடுவ தல்லதை
முன்னுற அதனையா முன்னு வோமெனில்
பின்னது பிழையெனப் பேசு வார்சிலர். ......
71(யாரிதை அறிகுவர்)
யாரிதை அறிகுவர் இனையன் இவ்விடைச்
சூருற உன்னியே துன்னி னான்கொலோ
சேரலர் பக்கமாய்ச் சேர்ந்து ளான்கொலோ
ஓருது மேலென உரைசெய் வார்சிலர். ......
72(கடுந்தகர் முகத்தவள்)
கடுந்தகர் முகத்தவள் கையொன் றற்றநாள்
தடிந்தனன் காவலோர் தம்மை மன்னவன்
தொடுங்கழல் இவன்வருஞ் சூழ்ச்சி நோக்கியின்
றடும்பலர் தம்மையென் றச்சுற் றார்சிலர். ......
73(வாசவன் முதலினோர்)
வாசவன் முதலினோர் மருளத் தொல்லைநாட்
தேசுறும் விஞ்சையர் வடிவிற் சேர்வுறீஇ
ஆசிலோர் புன்னிறுத் தாணை காட்டிய
ஈசனே இங்கிவன் என்கின் றார்சிலர். ......
74(ஆயதோர் காசிபன்)
ஆயதோர் காசிபன் அதிதி தங்கள்பாற்
சேயனாய் வந்தொரு சிந்தன் போன்றுலாய்த்
தூயவான் புவியெலாம் அளப்பச் சூழ்ந்திடு
மாயனே இவனென மதிக்கின் றார்சிலர். ......
75(விண்டொடு சூளினை)
விண்டொடு சூளினை விளம்பி விண்புவி
உண்டொரு கணந்தனில் உந்தி காட்டிய
புண்டரி கத்தனே புணர்ப்பின் இவ்வுருக்
கொண்டன னாமெனக் கூறு வார்சிலர். ......
76(மூவரு ளாகுமோ)
மூவரு ளாகுமோ முடிவின் மாதிரத்
தேவரு ளாகுமோ சேணில் வைகிய
தாவரு முனிவரர் தம்மு ளாகுமோ
ஏவரு ளாகுமோ இவனென் பார்சிலர். ......
77(மாலைதாழ் மார்பு)
மாலைதாழ் மார்புடை மன்னற் கின்னமும்
ஆலமார் கண்டனே அருளின் இன்னதோர்
கோலமாய் வரந்தரக் குறுகி னான்கொலோ
மேலியாம் உணருதும் விளைவென் பார்சிலர். ......
78(காற்றுடன் அங்கி)
காற்றுடன் அங்கியுங் கடுங்கட் காலனுங்
கூற்றனும் ஓருருக் கொண்டு வைகிய
தோற்றமி தன்றியிச் சூரன் முன்வரும்
ஆற்றலர் யாரென அறைகின் றார்சிலர். ......
79(குன்றமும் அவுண)
குன்றமும் அவுணனுங் குலைந்து பாடுற
ஒன்றொரு வேலினை ஒருவ னுய்த்தனன்
என்றனர் அன்னவன் ஈண்டு மன்னன்முன்
சென்றன னோவெனச் செப்பு வார்சிலர். ......
80(செற்றிய பன்மணி)
செற்றிய பன்மணிச் செம்பொன் மன்றமும்
முற்றிடும் அவுணரும் ஒளிறு வான்கதிர்
மற்றிவன் அணிகளின் தவிசின் வாள்பட
அற்றது பகற்சுட ராயென் பார்சிலர். ......
81(இருந்திடும் அவுண)
இருந்திடும் அவுணர்கள் யாரும் இத்திறம்
வருந்திறம் நினைகிலர் மறந்தும் இவ்விடை
தெரிந்திடின் இங்கிது திறல்கொள் மன்னனே
புரிந்திடு மாயையின் புணர்ப்பென் பார்சிலர். ......
82(நென்னலின் இறந்து)
நென்னலின் இறந்துயிர் நீத்த தாரகன்
முன்னுறு தன்னுரு முடிய இப்பகல்
இன்னதோர் பொன்னுரு வெடுத்து முன்னைபால்
துன்னினன் கொல்லெனச் சொல்கின் றார்சிலர். ......
83வேறு(சங்க மேவினர் இனை)
சங்க மேவினர் இனையன அளப்பில சாற்ற
அங்கண் ஓரரி மான்றவி சிருக்கையில் அவுணன்
துங்க மெத்துணை அத்துணைச் சிறப்பொடு தோன்றிச்
செங்கை வேலவற் புகழ்ந்துவீற் றிருந்தனன் திறலோன். ......
84(அறிவர் மேலவன்)
அறிவர் மேலவன் தவிசில்வீற் றிருத்தலும் அவுணர்க்
கிறைவ னாங்கது நோக்கியே எயிற்றணி கறித்துக்
கறுவி யேநகைத் துரப்பிமெய் வியர்ப்பெழக் கண்கள்
பொறிசொ ரிந்திடப் புகையுமிழ்ந் தினையன புகல்வான். ......
85(சுற்ற நீங்கியே இலை)
சுற்ற நீங்கியே இலையுண்டு விலங்கெனச் சுழன்று
வற்றன் மாமரக் காட்டகத் திருந்துடல் வருத்துஞ்
சிற்று ணர்ச்சியோர் வல்லசித் தியல்பிது சிறியோய்
கற்று ளாய்கொலாங் காட்டினை நமதுமுன் காண. ......
86(துன்று வார்சடை)
துன்று வார்சடை யோகினோர் அல்லது தொலைந்து
பின்று தேவரும் வல்லரிச் சிறுதொழில் பெரிதும்
ஒன்று மன்னதை இவ்விடைக் காட்டலர் உன்போல்
நன்று நன்றுநீ நம்முனர்க் காட்டிய நடனம். ......
87(சித்த ராயினோர்)
சித்த ராயினோர் செங்கண்மால் முதலிய தேவர்
இத்தி றத்தன காட்டுதற் கஞ்சுவ ரென்முன்
தத்தம் எல்லையிற் புரிந்திடல் அல்லது தமியோய்
பித்த னேகொலாம் நமக்கிது காட்டுதல் பிடித்தாய். ......
88(உரைசெய் இந்நகர்)
உரைசெய் இந்நகர் மகளிருஞ் செய்வரூன் முற்றாக்
கருவி னுள்ளுறு குழவியுஞ் செய்திடுங் கருத்தில்
வரைக ளுஞ்செயும் மாக்களுஞ் செய்யுமற் றதனால்
அரிய தன்றரோ பேதைநீ புரிந்திடும் ஆடல். ......
89(என்னை எண்ணலை)
என்னை எண்ணலை எதிருற இருந்தனை இதனான்
மின்னல் வாட்படை யுறைகழித் தொய்யென வீசிச்
சென்னி வீட்டுவன் நின்செயல் முற்றவுந் தெரிந்து
பின்னர் அத்தொழில் புரிவனென் றேயுளம் பிடித்தேன். ......
90(ஏணுற் றாரெலாம்)
ஏணுற் றாரெலாம் வழுத்திய அவுணரும் யாமுங்
காணக் காட்டினை நீயறி விஞ்சையைக் கண்டாம்
பூணித் தாயென வருமுனக் கித்துணைப் பொழுது
பாணித் தாவியை அளித்தனன் அன்னது பரிசே. ......
91(வாச வன்கரந் தோடி)
வாச வன்கரந் தோடினன் பிறரிது மதியார்
கேச வன்னிது நினைகிலன் மறைகளின் கிழவோன்
ஆசி கூறியே திரிந்திடும் அவர்க்கெலாம் முதலாம்
ஈசன் என்னிடை வருகிலன் யாரைநீ யென்றான். ......
92(தீயன் இத்திறம்)
தீயன் இத்திறம் உரைத்தன கேட்டலுந் திறலோன்
காய மீனெனக் காயமேல் வியர்ப்பெழக் கனன்று
மாயை செய்துழல் வலியிலார் போலெனை மதித்தாய்
ஆய புந்தியை விடுமதி கேளிதென் றறைவான். ......
93(புரந்த ரன்குறை)
புரந்த ரன்குறை அயன்முதல் அமரர்தம் புன்மை
வருந்தும் வானவர் சிறையெலாம் நீக்கிமற் றவர்தந்
திருந்து தொல்லிறை உதவுவான் செந்திமா நகர்வந்
திருந்த ஆதியம் பண்ணவன் அடியனேன் யானே. ......
94(துன்னு தானை)
துன்னு தானைகட் கரசராய் அறுமுகத் தொல்லோன்
பின்னர் வந்துளார் ஒன்பதோ டிலக்கமாம் பெயரால்
அன்ன வர்க்குளே ஒருவன்யான் நந்திபாங் கமர்ந்தேன்
ஒன்ன லார்புகழ் வீரவா கெனும்பெய ருள்ளேன். ......
95(தாரகப் பெயர் இளவ)
தாரகப் பெயர் இளவலைத் தடவரை தன்னை
ஓரி றைக்குமுன் படுத்தவேல் அறுமுகத் தொருவன்
சூரெ னப்படு நின்னிடைத் தமியனைத் தூதாப்
பேர ருட்டிறத் துய்த்தனன் என்றனன் பெரியோன். ......
96(கொடுத்தி டாதவென்)
கொடுத்தி டாதவென் கொண்டவன் உரைத்தசொற் கொடுங்கோல்
நடத்து மன்னவன் கேட்டலும் ஆங்கவன் நம்மேல்
விடுத்த காரணம் என்னையோ விளம்புதி யென்ன
எடுத்து மற்றிவை எம்பிரான் தூதுவன் இசைப்பான். ......
97(மருத்து வன்றனை)
மருத்து வன்றனைச் சசியொடு துரந்துசேண் வதிந்த
புரத்தை ஆரழற் கூட்டியே அனையவன் புதல்வன்
ஒருத்த னோடுபல் லமரரை உவளகந் தன்னில்
இருத்தி னாயென வினவினன் அறுமுகத் திறைவன். ......
98(இந்தி ராதிபர் அயன்)
இந்தி ராதிபர் அயன்முதற் பண்ணவர் யாரும்
வந்து வந்துவேண் டிடுதலும் அவர்குறை மாற்றப்
புந்தி கொண்டுபன் னிருபுயத் தெம்பிரான் புவிக்கண்
அந்த மின்றுறை பாரிடத் தானையோ டடைந்தான். ......
99(தரையின் நண்ணி)
தரையின் நண்ணிநின் இளவலை வரையொடு தடிந்து
நெருந லேவந்து செந்தியின் வைகினான் நினையும்
விரைவின் வந்தட உன்னினான் இன்றுநும் மிசையே
அருள்கொ டேசில புகன்றெனைத் தூண்டினன் அதுகேள். ......
100(நிறையும் இந்துவை)
நிறையும் இந்துவைப் படவராக் கவர்ந்தென நிகளச்
சிறைப டுத்தியே அமரரை வருத்தினை செய்யும்
மறையொ ழுக்கமும் நீக்கினை உலகம்ஆள் மன்னர்
அறமும் அன்றிது வீரர்தஞ் செய்கையும் அன்றால். ......
101(தாதை யாகியோன்)
தாதை யாகியோன் காசிபன் ஆங்கவன் தனயன்
ஆத லாலுனக் கமரரைச் சிறைசெய்வ தறனோ
வேத மார்க்கமும் பிழைத்தனை சிறுபொருள் விழைந்தாய்
நீதி யாலுல களிப்பதே அரசர்தந் நெறியே. ......
102(உலத்தின் மாண்ட)
உலத்தின் மாண்டதோட் சலந்தரன் அந்தகன் ஒருங்கே
கலத்தல் இல்லதோர் புரத்தவ ராதியோர் கடவுட்
குலத்தை வாட்டலின் இமைப்பினில் வீந்தனர் கொடியோய்
நிலத்தின் உம்பரை வருத்துதல் அழகிதோ நினக்கே. ......
103(மெய்மை நீங்கியே)
மெய்மை நீங்கியே கொலைகள வியன்றுமே லுள்ள
செம்மை யாளரைச் சீறியே அணங்குசெய் தீயோர்
தம்மில் ஆற்றரும் பழிசுமந் தொல்லையில் தமரோ
டிம்மை வீடுவர் எழுமையுந் துயரினூ டிருப்பார். ......
104(இங்ங னந்திரு)
இங்ங னந்திரு நீங்கியே துயருழந் திறப்பர்
அங்ங னம்பெரி தாரிருள் மூழ்குவர் அதற்பின்
உங்ங னம்பிறந் தயருவ ரென்றுமீ துலவார்
எங்ஙன் உய்வரோ பிறர்தமக் கல்லல்செய் திடுவோர். ......
105(தீது நல்லன ஆயிரு)
தீது நல்லன ஆயிரு திறத்தவுந் தெரிந்தே
ஏதி லார்க்கவை செய்வரேல் தமக்குடன் எய்தும்
பேதை நீரையாய் அமரரைச் சிறைசெய்த பிழையால்
மாது யர்ப்படல் அன்றியே இறுதியும் வருமால். ......
106(அண்டர் ஆற்றலை)
அண்டர் ஆற்றலை வவ்விய தாரகன் ஆவி
உண்ட கொற்றவேல் இருந்தது விடுத்திடின் உனையுங்
கண்ட துண்டம தாக்குமால் அறநெறி கருதித்
தண்டம் வல்லையிற் புரிந்திலன் இத்துணை தாழ்த்தான். ......
107(கெடுதல் இல்லதோர்)
கெடுதல் இல்லதோர் அமரர்கள் சிறையிடைக் கிடப்ப
விடுதல் செய்தனை பல்லுகம் அவர்தமை இன்னே
விடுதல் உய்வகை யாகுமால் மறுத்தியேல் விரைந்து
படுத லேநினக் குறுதியாம் முறையுமப் பரிசே. ......
108(ஆண்ட ளப்பில)
ஆண்ட ளப்பில நோற்றனை வேள்விநின் றாற்றி
மூண்ட தீயிடை மூழ்கினோய்க் கெந்தைமுன் னளித்த
மாண்டி டாதபே ராயுளைத் திருவொடும் வாளா
ஈண்டொர் புன்னெறி யாற்றியே இழுக்குவ தியல்போ. ......
109(சைய மேற்படு வள)
சைய மேற்படு வளத்தொடு நீயுநின் தமரும்
உய்ய வேண்டுமேல் அமரர்தஞ் சிறையினை ஒழித்து
வைய மேலறத் தியல்புளி வாழிமற் றிதனைச்
செய்ய லாய்எனின் ஈங்குவந் தடுவனால் திண்ணம். ......
110(என்று மற்றிவை யாவை)
என்று மற்றிவை யாவையும் வரைபக எறிந்தோன்
உன்ற னக்கறை கென்றனன் ஈங்குநீ உம்பர்
வன்ற ளைச்சிறை நீக்கியே அறத்தின்இவ் வளத்தை
நன்று துய்த்தனை நெடிதுநீ வாழ்கென நவின்றான். ......
111(மறம கன்றிடா வீர)
மறம கன்றிடா வீரனிங் கினையன வகுத்தே
அறையும் வாசகங் கேட்டலும் வெகுளிமூ ளகத்தன்
பொறியு மிழ்ந்திடு கண்ணினன் புகையுமிழ் உயிர்ப்பன்
எறியும் அங்கையன் இறந்திடும் முறுவலன் இசைப்பான். ......
112(மேலை யாயிர)
மேலை யாயிரத் தெட்டெனும் அண்டமும் வென்றே
ஏலு கின்றதோர் தனியிறை யாகிய எனக்குக்
கோல வாலெயி றின்னமுந் தோன்றிலாக் குதலைப்
பால னேகொலாம் இனையன புந்திகள் பகர்வான். ......
113(விறலின் மேதகும்)
விறலின் மேதகும் அவுணராம் வலியிலார் மிகவும்
வறிய ராகிய தேவராம் மேலவர் மழலைச்
சிறுவ ராந்தனி முதல்வற்கும் அமைச்சியல் செய்வார்
எறியும் நேமிசூழ் உலகத்து வழக்கம்நன் றிதுவே. ......
114(நறைகொ டார்முடி)
நறைகொ டார்முடி அவுணர்தங் குலத்தினை நலித்து
வறுமை செய்தனர் கடவுளர் அவர்திரு மாற்றிக்
குறிய ஏவலுங் கொண்டனன் ஒழுக்கமுங் கொன்றேன்
சிறையும் வைத்தனன் நங்குடித் தமர்முறை செய்தேன். ......
115(நெடிய மால்மகன்)
நெடிய மால்மகன் உறங்குநாள் ஆணையை நீங்கித்
தொடுபெ ருங்கடல் உலகெலாங் கொள்ளினுஞ் சுரரை
விடுவன் அல்லன்யான் வீடருஞ் சிறையினை விண்மேல்
உடைய அண்டத்தின் உச்சியின் ஒருதலை உய்ப்பேன். ......
116(தப்பல் செய்திடு)
தப்பல் செய்திடு மகபதி முதலினோர் தமையும்
இப்ப திக்கணே கொணர்ந்தனன் சிறைசெய இருந்தேன்
கைப்பு குஞ்சிறை விடுவனோ விடுகிலன் கண்டாய்
ஒப்ப ருந்திறல் சூரனென் றொருபெய ருடையேன். ......
117(மின்னு வச்சிர)
மின்னு வச்சிரப் படிவமும் வேறுபல் வரமும்
முன்னொர் ஞான்றுதன் தாதைஎற் களித்திடு முறையைப்
பின்னர் யாவரே பெயர்ப்பவர் பெருஞ்சமர் இயற்றி
என்னை ஆற்றலால் வென்றிடு நீர்மையோர் எவரே. ......
118(தான மாமுகத் தார)
தான மாமுகத் தாரக எம்பியைத் தடிந்த
மான வேற்படை யவன்மிசை வருவது வலித்தேன்
பானல் வாய்ச்சிறு சேயொடு நீயமர் பயிறல்
ஊன மேயெனத் தடுத்தனர் ஆதலால் ஒழிந்தேன். ......
119(தூங்கு கையுடை)
தூங்கு கையுடைத் தாரக இளவலைத் தொல்லை
ஓங்கல் தன்னொடும் அட்டது நென்னலே உணர்ந்தேன்
பாங்கி னோரையப் பாலன்மேல் உந்தியென் பழியும்
வாங்கு கின்றனன் நாளையே காண்டியான் மன்னோ. ......
120(அரிகள் எண்ணிலர்)
அரிகள் எண்ணிலர் இந்திரர் எண்ணிலர் அல்லாச்
சுரர்கள் எண்ணிலர் அண்டங்க டொறுந்தொறும் இருந்தார்
செருவின் ஆற்றலர் வழுத்தியே போயினர் சிவன்கண்
நெருநல் வந்திடு சிறுவனோ என்னெதிர் நிற்பான். ......
121(ஓதி என்பல அமரரை)
ஓதி என்பல அமரரை விடுகிலன் உணர்ச்சி
ஏது மில்லதோர் மகவுதன் புன்மொழி ஏற்றுப்
பேதை ஆதலின் ஒற்றனாய் வந்தனை பிழைத்துப்
போதி நின்னுயிர் தந்தனன் யானெனப் புகன்றான். ......
122(அகில மாள்பவன்)
அகில மாள்பவன் இங்கிவை மொழிதலும் ஐயன்
வெகுளி வெங்கனல் சிந்திட வுளஞ்சுட வெகுண்டு
புகையும் அங்கியும் உயிர்ப்புற மயிர்ப்புறம் பொடிப்ப
நகையும் வந்திடச் சிவந்திட விழியிவை நவில்வான். ......
123(உய்ய லாவதோர்)
உய்ய லாவதோர் பரிசினை உணர்வுறா துழலுங்
கைய கேண்மதி கட்செவி மதியொடு கலந்த
செய்ய வார்சடைப் பரம்பொருள் திருநுதல் விழிசேர்
ஐயன் மேதக உணர்ந்திலை பாலனென் றறைந்தாய். ......
124(மானு டத்தரை)
மானு டத்தரைத் தேவென்பர் வானகத் தவரை
ஏனை முத்தொழி லவரென்பர் இருவர்தங் களையும்
நானி லத்தினிற் பரம்பொருள் இவரென நவில்வார்
ஆன சொற்றிறம் முகமனே சரதமற் றன்றால். ......
125(ஆய புல்லிய புகழ்)
ஆய புல்லிய புகழ்ச்சிபோற் கொள்ளலை அறிவோர்
தேய மாவது யார்க்குமெட் டாதது தெளியில்
தூய வீடுபே றருளுவ துபநிடத் துணிவாம்
வாய்மை யாவது புகலுவன் கேளென வகுப்பான். ......
126(மண்ண ளந்திடு)
மண்ண ளந்திடு மாயனும் வனசமே லவனும்
எண்ண ரும்பகல் தேடியுங் காண்கிலா திருந்த
பண்ண வன்நுதல் விழியிடைப் பரஞ்சுடர் உருவாய்
உண்ணி றைந்தபே ரருளினான் மதலையாய் உதித்தான். ......
127(முன்ன வர்க்குமுன் னாகு)
முன்ன வர்க்குமுன் னாகுவோர் தமக்குமுற் பட்டுத்
தன்னை நேரிலா தீசனாந் தனிப்பெயர் தாங்கி
இன்னு யிர்க்குயி ராய்அரு வுருவமாய் எவர்க்கும்
அன்னை தாதையாய் இருந்திடும் பரமனே அவன்காண். ......
128(ஈச னேயவன் ஆட)
ஈச னேயவன் ஆடலால் மதலையா யினன்காண்
ஆசி லாவவன் அறுமுகத் துண்மையால் அறிநீ
பேசில் ஆங்கவன் பரனொடு பேதகன் அல்லன்
தேசு லாவகன் மணியிடைக் கதிர்வரு திறம்போல். ......
129(பூதம் ஐந்தினு)
பூதம் ஐந்தினுட் கீழ்நிலைத் தாகிய புவியுள்
ஓது கின்றபல் லண்டத்தின் ஓராயிரத் தெட்டுங்
கோதில் ஆக்கமும் படைகளும் உனக்குமுன் கொடுத்த
ஆதி ஈசனே அவனெனின் மாற்றுவ தரிதோ. ......
130(ஏத மில்புவி அண்ட)
ஏத மில்புவி அண்டங்கள் பெற்றனம் என்றே
பேதை யுன்னினை சிறிதவன் தன்னருள் பெறுவோர்
பூதம் மைந்தனும் ஏனைய திறத்தினும் புறத்து
மீது மாமண்டம் எவற்றிற்கும் வேத்தியல் புரிவார். ......
131(ஆதி யாகிய குடிலை)
ஆதி யாகிய குடிலையும் ஐவகைப் பொறியும்
வேதம் யாவையுந் தந்திரப் பன்மையும் வேறா
ஓத நின்றிடு கலைகளும் அவ்வவற் றுணர்வாம்
போதம் யாவையுங் குமரவேள் பொருவிலா வுருவம். ......
132(எங்க ணும்பணி)
எங்க ணும்பணி வதனங்கள் எங்கணும் விழிகள்
எங்க ணுந்திருக் கேள்விகள் எங்கணுங் கரங்கள்
எங்க ணுந்திருக் கழலடி எங்கணும் வடிவம்
எங்க ணுஞ்செறிந் தருள்செயும் அறுமுகத் திறைக்கே. ......
133(தாம ரைக்கணான்)
தாம ரைக்கணான் முதலிய பண்ணவர் தமக்கும்
ஏமு றப்படு மறைக்கெலாம் ஆதிபெற் றியலும்
ஓமெ னப்படுங் குடிலையே ஒப்பிலா முருகன்
மாமு கத்துளொன் றாமவன் தன்மையார் வகுப்பார். ......
134(முக்கண் மூர்த்தியும்)
முக்கண் மூர்த்தியும் ஆங்கவன் முண்டகா சனனுஞ்
சக்க ரப்படை அண்ணலும் ஆங்கவன் தானே
திக்குப் பாலருங் கதிர்களும் முனிவருஞ் சிறப்பின்
மிக்க தேவரும் ஆங்கவன் யாவர்க்கும் மேலோன். ......
135(ஈட்டு மன்னுயிர்)
ஈட்டு மன்னுயிர் எவற்றிற்கும் இருவினைப் பயனைக்
கூட்டு வானவன் ஆங்கவை துலையெனக் கூடின்
வேட்ட மேனிலைக் கதிபுரி வானவன் மேலாய்க்
காட்டு வான்முதல் திறமெலாம் ஆங்கவன் கண்டாய். ......
136(சிறுவன் போலுறும்)
சிறுவன் போலுறும் குரவனே போலுறும் தினையில்
குறியன் போலுறும் நெடியவ னாகியுங் குறுகும்
நெறியின் இன்னணம் வேறுபல் லுருக்கொடு நிலவும்
அறிவர் நாடருங் கந்தவேள் ஆடலார் அறிவார். ......
137(சிவன தாடலின்)
சிவன தாடலின் வடிவமாய் உற்றிடுஞ் செவ்வேள்
அவன தாணையின் அன்றியே பெயர்கிலா தணுவும்
எவர வன்றனி ஆற்றலைக் கடந்தவர் இவண்நீ
தவம யங்கினை அவன்தனி மாயையிற் சார்வாய். ......
138(எல்லை இல்லதோர் பொரு)
எல்லை இல்லதோர் பொருளெலாம் ஆகுறு மியாவும்
அல்ல னாகியும் இருந்திடும் அருவமு மாகும்
பல்வ கைப்படும் உருக்கொளும் புதியரிற் பயிலுந்
தொல்லை யாதியாம் அநாதியும் ஆகியே தோன்றும். ......
139(வாரி வீழ்தரும்)
வாரி வீழ்தரும் புன்னுனித் துள்ளிகண் மான
நேரி லாதமர் குமரவேள் நெடியபேர் உருவின்
ஓரு ரோமத்தின் உலப்பிலா அண்டங்கள் உதிக்கும்
ஆர வன்றிரு மேனியின் பெருமையை அறிவார். ......
140(தொலைவி லாவு)
தொலைவி லாவுயிர்த் தொகுதியுந் தொல்லையைம் பூதத்
தலகி லண்டமும் ஏனவும் ஆதியங் குமரன்
நிலைகொள் மேனியின் நிவர்தரும் உரோமத்தின் நின்றே
உலவை யின்றிமுன் னுதித்திடும் இறுதிநாள் ஒடுங்கும். ......
141(ஆவ தாகிய வடிவ)
ஆவ தாகிய வடிவத்தின் அகிலமுஞ் செறிந்து
மேவு மந்நிலை அனையனே அல்லது வேறிங்
கேவர் கண்டனர் அவ்வுரு வியற்கையை எங்கோன்
தேவர் யாவர்க்குங் காட்டிடக் கண்டனர் சிறிது. ......
142(தண்டல் இல்லதோர்)
தண்டல் இல்லதோர் ஒன்றொரு மயிர்நுனித் தலையின்
அண்ட மெண்ணில கோடிகள் கோவைபட் டசையப்
பண்டு மேருவிற் கந்தவேள் கொண்டதோர் படிவங்
கண்டி லாய்கொலாங் கணிப்பிலாப் பவம்புரி கடியோய். ......
143(அன்று கந்தவேள்)
அன்று கந்தவேள் அமைந்ததோர் பெருவடி வதனுள்
ஒன்று ரோமத்தின் இருந்ததற் காற்றிடா துனதாய்த்
துன்றும் ஆயிரத் தெட்டெனும் அண்டமாந் தொகையும்
இன்று நீயது தெரிகிலை சிறுவனென் றிசைத்தாய். ......
144(அளப்ப ருங்குணத் தாதி)
அளப்ப ருங்குணத் தாதியாம் எம்பிரான் அமரர்
தளைப்ப டுஞ்சிறை மாற்றவுஞ் சதுர்முகன் முதலோர்
கொளப்ப டுந்துயர் அகற்றவுங் கொடியரை யறுத்து
வளப்ப டும்பரி சுலகெலாம் போற்றவும் வந்தான். ......
145(வாழி யானநின்)
வாழி யானநின் ஆயுளும் வன்மையும் வரமுங்
கேழில் சுற்றமும் படைகளும் வான்றொடக் கிளர்ந்து
பூழி யாலுயர் மால்வரைச் சூழலிற் புகுந்த
ஊழி மாருதம் போலடும் எம்பிரான் ஒருவேல். ......
146(ஆகை யாலிவை)
ஆகை யாலிவை உணர்ந்திலை இணையிலா தமர்ந்த
ஏக நாயக முதல்வனைப் பாலனென் றிகழ்ந்தாய்
சேகு லாவிய மனமுடைக் கற்பிலாச் சிறியோய்
போக போகயாம் இவ்வொரு தவற்றையும் பொறுத்தாம். ......
147(நொய்ய சொற்களால்)
நொய்ய சொற்களால் எந்தையை இகழ்ந்தனை நொடிப்பின்
வெய்ய நாத்துமித் துன்னுயிர் வாங்குவம் விடுத்த
ஐயன் ஆணையன் றாதலின் அளித்தனம் அதனால்
உய்தி இப்பகல் வேற்படைக் குண்டியாய் உறைவோய். ......
148(உறுதி இன்னமொன்)
உறுதி இன்னமொன் றுரைக்குவம் நீயுமுன் கிளையும்
இறுதி இன்றியே எஞ்சுதல் வேண்டுமேல் இமையோர்
சிறைவி டுக்குதி இகலினைத் தவிருதி செவ்வேள்
அறைக ழற்றுணை அரணமென் றுன்னியே அமர்தி. ......
149வேறு(என்றிவை பலப்பல இகப்)
என்றிவை பலப்பல இகப்பில்பெரு மாயைக்
குன்றெறி படைக்குரிசில் கொள்கைய தியம்பப்
புன்றொழில் படைத்துடைய பூரியன் உணர்ந்தே
கன்றினன் உயிர்த்தினைய கட்டுரைசெய் கின்றான். ......
150(கூரெயி றெழாதகுழ)
கூரெயி றெழாதகுழ விச்சிறுவன் உய்த்த
சாரென நினைந்துனது தன்னுயிர் விடுத்தேன்
பேரலை அவன்பெருமை பின்னுமொழி கின்றாய்
வீரமும் உரைக்குதியென் வெய்யசின முன்னாய். ......
151(கொஞ்சுமொழி கொண்ட)
கொஞ்சுமொழி கொண்டகுழ விச்சிறுவன் மேலாய்
எஞ்சலில தோர்முதல்வ னேயெனினு மாக
அஞ்சிடுவ னோசிறிதும் அண்டநிலை தோறும்
விஞ்சியமர் பண்ணவர்கள் யாவரையும் வென்றேன். ......
152(சேண்புரம தாகியமர்)
சேண்புரம தாகியமர் தேவர்சிறை தன்னை
வீண்படு கனாவினும் விடுக்கநினை கில்லேன்
ஏண்பல பகர்ந்தனை எனக்கெதிர் இருந்தே
காண்பன தெலாமொரு கணத்திலினி யென்றான். ......
153(கொற்றமிகு சூரனி)
கொற்றமிகு சூரனிவை கூறிஅயல் நின்ற
அற்றமறு மானவருள் ஆயிரரை நோக்கி
ஒற்றுமைசெய் தோனுயிர் ஒறுத்தல்பழி வல்லே
பற்றியிவ னைச்சிறை படுத்திடுதி ரென்றான். ......
154(என்னலுமவ் வாயி)
என்னலுமவ் வாயிரரும் ஏற்றெரி விழித்துத்
துன்னுகன லைப்புகை சுலாவுவது மானப்
பொன்னின்மிளிர் பீடிகை அமர்ந்தபுகழ் வீரன்
தன்னைவளை குற்றனர் தருக்கினொடு பற்ற. ......
155(மிடற்றகுவர் சூழ்வர)
மிடற்றகுவர் சூழ்வரலும் வீரனெழுந் தன்னோர்
முடிச்சிகை ஒராயிரமும் மொய்ம்பினொரு கையால்
பிடித்தவுணர் மன்னன்அமர் பேரவை நிலத்தின்
அடித்தனன் நொடிப்பிலவர் ஆவிமுழு துண்டான். ......
156(மார்புடைய மொய்)
மார்புடைய மொய்ம்பொசிய வார்குருதி சோர
ஓர்புடையின் யாவரையும் ஒல்லைதனின் அட்டே
சூர்புடையின் முன்னநனி துன்னும்வகை வீசிச்
சீர்புடைய நம்பியிவை செப்பல்புரி கின்றான். ......
157(எந்தைநெடு வேலு)
எந்தைநெடு வேலுனை இனித்தடிதல் திண்ணம்
மந்தமுறு முன்னமுன தைம்புலனும் வெஃக
வந்தபல துப்புரவும் வல்லைபெரி தார்ந்தே
புந்திதெளி வாய்அமர்தி போந்திடுவ னென்றான். ......
158(சீயவிறல் அண்ண)
சீயவிறல் அண்ணலிவை செப்பியகல் காலை
ஆயவன் இருந்திடும் அரித்தவிசு தானும்
மீயுறவெ ழுந்துவிசும் பிற்றலையின் ஏகி
மாயையென ஒல்லையின் மறைந்துபடர்ந் தன்றே. ......
159ஆகத் திருவிருத்தம் - 4351