(ஒண்ணில வெயிற்றி)
ஒண்ணில வெயிற்றினரொ ராயிரரை அட்டே
எண்ணலன் அவைக்களம் இகந்துபடர் காலைக்
கண்ணினழல் காலும்வகை கண்டுபுடை யாக
நண்ணுசத மாமுகனை நோக்கிநவில் கின்றான். ......
1(ஆறுமுகன் ஆளை)
ஆறுமுகன் ஆளையிவன் ஆயிரரை இங்ஙன்
கோறல்புரிந் தானெனது கொற்றமுழு தெள்ளி
வேறலுடை யோர்களென மேன்மைபல செப்பிச்
சேறல்புரி வான்தவிசும் உம்பரிடை செல்ல. ......
2(ஒட்டியநம் வீரரை)
ஒட்டியநம் வீரரை ஒறுத்தகல் வனேனும்
விட்டதொரு தூதனொடு வெஞ்சமர் இயற்றி
அட்டல்பழி யாகுமவன் ஆற்றலை அடக்கிக்
கட்டிவிரை வால்வருகெ னக்கழற லோடும். ......
3(சூற்குல முகிற்பொரு)
சூற்குல முகிற்பொருவு சூரனடி தாழா
ஏற்கும்விடை பெற்றிசைவின் ஏகுதல் புரிந்தான்
நாற்கடலும் மேவினும் நதுப்பரிய ஊழிக்
காற்கனலின் ஓதைதொடர் காட்சியது மான. ......
4(ஏகுசத மாமுகன்)
ஏகுசத மாமுகன் இலக்கமற வீரர்
பாகம்வர எண்ணில்படை பாணிமிசை பற்றி
வேகமொடு சென்றதனி வேலன்விடு வீர
வாகுவினை எய்தியொரு மாற்றம்அறை கின்றான். ......
5(காவல்பல நீங்கி)
காவல்பல நீங்கிவரு கள்வஉல குள்ளோர்
ஏவரும் வியப்பவரும் எங்களிறை முன்னம்
மேவினை இகழ்ந்துசில வீரருயிர் வௌவிப்
போவதெவன் நில்லுனது போர்வலி அழிப்பேன். ......
6(பட்டிமை உருக்கள்)
பட்டிமை உருக்கள்கொடு பாறல்அரி தாசை
எட்டுள பரப்பதனுள் ஆண்டகல்வை யேனும்
விட்டிடுவ னோவென விளம்பிவெரிந் எய்திக்
கிட்டுதலும் வீரனிது கேட்டனன் எதிர்ந்தான். ......
7வேறு(கொற்ற வேலுடை)
கொற்ற வேலுடை அண்ணல்தன் மொழியினைக் கொண்டிலன் இகழ்ந்தென்னைப்
பற்ற ஆயிரர் தங்களை விடுத்தலும் படுத்தனன் பெயர்காலை
மற்று மீதொரு வயவனை உய்த்தனன் மன்னவன் இவன் ஆவி
செற்று மாநக ரந்தனை அழித்தனன் செல்லுவன் இனியென்றான். ......
8(கருதி இன்னணஞ் சத)
கருதி இன்னணஞ் சதமுகன் எனப்படு காவலன் றனைநோக்கிக்
குருதி வேலுடைப் பண்ணவன் அடிமனங் கொண்டுதிண் டிறல்வாகு
பொருதல் உன்னியே ஈண்டறை கூவினை பொள்ளெனப் படையோடு
வருதி யாலெனத் தெள்விளி யெடுத்தனன் மறலிக்கும் இறைபோல்வான். ......
9(எல்லை யன்னதி)
எல்லை யன்னதிற் சதமுகற் சூழ்தரும் இலக்கரும் எதிரூன்றி
வில்லு மிழ்ந்திடு வெஞ்சரந் தொடுத்தனர் வேற்படை விடுக்கின்றார்
கல்லெ னும்படி நேமிகள் உருட்டினர் கப்பணஞ் சிதறுற்றார்
வல்லை முத்தலைப் படையெழு வோச்சினர் மழுக்கொடே எறிகின்றார். ......
10(அணிகள் பட்டவர்)
அணிகள் பட்டவர் விட்டஇப் படைவகை அண்ணன்மேற் புகலோடுந்
துணிகள் பட்டன நெரிந்தன எரிந்தன துகளுமாய்ப் போயிற்றால்
மணிகள் பட்டிடும் இருஞ்சிறைக் கலுழர்க்குள் வலியன்மேற் படுநொய்ய
பணிகள் பட்டன போன்றன வேறிலை படியெடுத் துரைத்தற்கே. ......
11(இலக்க மாகிமுன்)
இலக்க மாகிமுன் னின்றபேர் ஆண்டகை இவர்செய லினைநோக்கி
இலக்க மாய்முழு துலகமுந் துளக்கியே இராயிரப் பத்தென்னும்
இலக்க மாமுடி கொண்டதோர் சூளிகை இம்மெனப் பறித்தேந்தி
இலக்கமாகியே யெதிர்பொரு தானவர் தங்கள்மேல் எறிந்திட்டான். ......
12(ஏதி லான்விடு சூளி)
ஏதி லான்விடு சூளிகை சிறகர்பெற் றிறந்துவீழ் மேருப்போல்
மீது சென்றமர் இயற்றியே நின்றிடும் வெய்யவர் மிசையெய்தித்
தாது முற்றவுஞ் சாந்துபட் டொருங்குறத் தனுவெலாஞ் சிதைத்திட்டே
ஓத நீர்முகி லார்ப்பொடு புவிக்கண்வீழ்ந் துடைந்தன உதிராகி. ......
13(கொடிசெ றிந்திடு)
கொடிசெ றிந்திடு சூளிகை தன்னுடன் அவுணர்தங் குழாங்கொண்ட
முடிசி தைந்தன நாசிநீ டலையெலாம் முடிந்தன முடிவில்லா
வடிவ மைந்திடு கன்னகூ டத்தொகை மாய்ந்தன நிலைகொள்ளும்
அடித கர்ந்தன கொடுங்கையும் மாண்டன ஒழிந்தவும் அழிவுற்ற. ......
14(இலக்கர் தம்மை)
இலக்கர் தம்மையுஞ் சூளிகை தன்னுடன் இமைப்பொழு தினில் அட்டு
நிலக்கண் வீரனின் றிடுதலுஞ் சதமுகன் நிரைவிழி கொடுநோக்கிக்
கலக்க நண்ணியே தமரினைக் காண்கிலன் கவன்றனன் தெளிவெய்தி
உலக்கை சூலம்வேல் சக்கரந் தோமரம் ஓச்சுதல் உறுகின்றான். ......
15(உற்ற காலையின்)
உற்ற காலையின் ஒண்டிறல் மொய்ம்பினோன் உருகெழு சினஞ்செய்தோர்
பொற்றை நேர்தரு சிகரியைப் பறித்தனன் பொள்ளென எறிகாலை
மற்றொர் வார்சிலை வணக்கியே வெய்யதீ வாளியா யிரம்பூட்டி
இற்று வீழ்வகை இடைதனில் அறுத்தனன் எறிதரு கதிர்வேலான். ......
16(அறுத்து நூறுகோல்)
அறுத்து நூறுகோல் பின்னரும் ஆங்கவன் ஆகத்தின் நடுவெய்தச்
செறித்த காலையின் வீரவா குப்பெயர்ச் செம்மல்போய் அவன்வில்லைப்
பறித்த னன்முறித் தெறிதலுஞ் சதமுகன் பற்றவீ திடையென்னாக்
குறித்தொ ரைம்பதிற் றிருகரம் ஓச்சியே குரிசிலைப் பிடித்திட்டான். ......
17(பிடித்த தானவ)
பிடித்த தானவத் தலைவனை அண்ணலோர் பெரும்புயங் கொடுதாக்கிப்
படித்த லைப்படத் தள்ளலும் வீழ்ந்துளான் பதைபதைத் தெழுகாலை
அடித்த லத்தினால் உதைத்தனன் அசனியால் அழுங்குறும் அரவம்போல்
துடிப்ப வேயுரத் தொருகழல் உறுத்தினன் சோரிவாய் தொறுஞ்சோர. ......
18(கந்தெ னப்படு)
கந்தெ னப்படு மொய்ம்புடை வெய்யசூர் கட்டுரை முறைபோற்றி
வந்தெ திர்த்திடு சதமுகத் தவுணனை மிதித்திடும் அறமைந்தன்
அந்த கப்பெயர் அசுரனை யாற்றல்பெற் றமர்முய லகன்றன்னைத்
தந்தி யைப்பதம் ஒன்றுகொண் டூன்றிய தாதைபோல் திகழ்கின்றான். ......
19வேறு(மின்னல் வாளெ)
மின்னல் வாளெயிற் றவுணன் மார்பகம் விடரெ னும்படி விள்ளவே
தன்னொர் பாத முறுத்தி மற்றொரு தாளி னைக்கொடு தள்ளியே
சென்னி யாவும் உருட்டி னான்திசை முற்றும் நின்று பரித்திடுங்
கன்ன மார்மத மால்க ளிற்றினும் வன்மை சான்றிடு கழலினான். ......
20(நூறு சென்னியும்)
நூறு சென்னியும் இடறி யாங்கொரு நொடிவரைப் பின்முன் அவுணனை
ஈறு செய்தனன் அதுமு டித்தபின் எல்லை யில்சின மெய்தியே
ஆறு மாமுக வள்ளல் வாய்மை இகழ்ந்து ளான் அவை யத்தைமுன்
ஈறு செய்துபின் நடுவன் இந்நக ரத்தை யென்று நினைந்தனன். ......
21ஆகத் திருவிருத்தம் - 4372