(இத்திறம் அமர)
இத்திறம் அமரரொ டிந்தி ரன்மகன்
அத்தலை இருத்தலும் அனையர் யாவரும்
மொய்த்திடு சிறையக முன்கண் டானரோ
வித்தக அறிவனாம் வீர வாகுவே. ......
1வேறு(மாகண்டம் ஒன்பா)
மாகண்டம் ஒன்பான் புகழுந் திறல்வாகு அங்கண்
ஆகண்டலன் மைந்தனை விண்ணவ ராயி னாரைக்
காய்கண்ட கராமவு ணத்தொகை காத்தல் கண்டான்
பேய்கண்ட செல்வந் தனைக்காத் திடும்பெற்றி யேபோல். ......
2(கண்ணோட லின்றி)
கண்ணோட லின்றித் துயர்வேலியிற் காவல் கொண்ட
எண்ணோர் எனைக்கண் டிலராயுணர் வின்றி மாழ்க
விண்ணோர்கள் காணத் தமியேன் செலவேண்டு மென்றான்
மண்ணோர் அடியால் அளக்குந்தனி மாயன் ஒப்பான். ......
3(ஓங்கார மூல)
ஓங்கார மூலப் பொருளாய் உயிர்தோறு மென்றும்
நீங்கா தமருங் குமரேசனை நெஞ்சில் உன்னி
யாங்காகுவ தோரவன் மந்திரம் அன்பி னோதித்
தீங்கா மவுணர் செறிகாப்பகஞ் சென்று புக்கான். ......
4(தாமந்தரும் மொய்)
தாமந்தரும் மொய்ம்புடை வீரன் சயந்தன் விண்ணோர்
ஏமந்தரு வன்சிறைச் சூழலுள் ஏக லோடுந்
தூமந்திகழ் மெய்யுடைக் காவலர் துப்பு நீங்கி
மாமந் திரமாம் வலைப்பட்டு மயங்கல் உற்றார். ......
5(எண்டா னவரிற்)
எண்டா னவரிற் புடைகாப்பவர் யாரும் மையல்
கொண்டார் குயிற்றப் படுமோவியக் கொள்கை மேவத்
தண்டார் அயில்வேற் படைநாயகன் தானை வேந்தைக்
கண்டார் சயந்த னொடுதேவர் கருத லுற்றார். ......
6(ஏமாந் தவுணர்)
ஏமாந் தவுணர் சிறுகாலையின் இன்னல் செய்ய
நாமாண் டனர்போல் அவசத்தின் அணுகு மெல்லை
மாமாண் படைய அருள்செய்தநம் வள்ளல் தூதன்
ஆமாம் இவனென் றகங்கொண்டனர் ஆர்வ முற்றார். ......
7(அன்னார் அமரு)
அன்னார் அமருங் களஞ்சென் றயிலேந்து நம்பி
நன்னா யகமாந் திருநாமம் நவின்று போற்றிப்
பொன்னா டிறைகூர் திருநீங்கிய புங்க வன்றன்
முன்னா அணுகி இருந்தான்அடல் மொய்ம்பின் மேலோன். ......
8(செறிகின்ற ஞான)
செறிகின்ற ஞானத் தனிநாயகச் செம்மல் நாமம்
எறிகின்ற வேலை அமுதிற்செவி ஏக லோடும்
மறிகின்ற துன்பிற் சயந்தன் மகிழ்வெய்தி முன்னர்
அறிகின்றி லன்போல் தொழுதின்ன அறைத லுற்றான். ......
9(தாவம் பிணித்த)
தாவம் பிணித்த தெனுங்குஞ்சித் தகுவ ரானோர்
பாவந் தலைச்சூழ் வதுபோலெமைப் பாடு காப்ப
மாவெம் படரில் இருந்தேங்கண் மருங்கின் ஐய
நீவந்த தென்னை இனிதிங்கு நிகழ்த்து கென்றான். ......
10வேறு(முறையுணர் கேள்வி)
முறையுணர் கேள்வி வீரன் மொழிகுவான் முதல்வன் தந்த
அறுமுக ஐயன் தன்பின் அடுத்துளேன் அவன்தூ தானேன்
விறல்கெழு நந்தி பாலேன் வீரவா கென்பேர் நுங்கள்
சிறைவிடும் பொருட்டுச் சூர்முன் செப்புவான் வந்தேன் என்றான். ......
11(என்னலும் அமர)
என்னலும் அமர ரோடும் இந்திரன் குமரன் கேளாச்
சென்னியின் அமிர்துள் ளூறல் செய்தவத் தயின்ற மேலோர்
அன்னதற் பின்னர் நேமி அமிர்தமும் பெற்றுண் டாங்கு
முன்னுறு மகிழ்ச்சி மேலும் முடிவிலா மகிழ்ச்சி வைத்தான். ......
12(அந்தர முதல்வன்)
அந்தர முதல்வன் மைந்தன் அறைகுவான் ஐய துன்பூர்
புந்தியேங் குறைவி னாதற் பொருட்டினாற் போந்தாய் அற்றால்
இந்தவன் சிறையும் நீங்கிற் றிடரெலாம் அகன்றி யாங்கள்
உய்ந்தனம் பவங்கள் தீரும் ஊதியம் படைத்து மென்றான். ......
13(பூண்டகு தடந்தோள்)
பூண்டகு தடந்தோள் வீரன் புகலுவான் சூர்மேல் ஒற்றா
ஈண்டெனை விடுத்த வேற்கை எம்பிரான் வலிதே நும்மை
ஆண்டிடு கின்றான் முன்னர் ஆக்கமும் பெறுதிர் பின்னும்
வேண்டிய தெய்து கின்றீர் என்றனன் மேலுஞ் சொல்வான். ......
14(உலமெலாங் கடந்த)
உலமெலாங் கடந்த தோளீர் உன்னுதிர் உன்னி யாங்கு
நலமெலாம் வழிபட் டோர்க்கு நல்கிய குமரன் தன்னால்
தலமெலாம் படைத்த தொல்லைச் சதுர்முகன் முதலாம் வானோர்
குலமெலாம் உய்ந்த தென்றால் உமக்கொரு குறையுண் டாமோ. ......
15(தேவர்கள் தேவன் வேண்ட)
தேவர்கள் தேவன் வேண்டச் சிறைவிடுத் தயனைக் காத்த
மூவிரு முகத்து வள்ளல் முழுதருள் செய்தா னும்பால்
பாவமும் பழியுந் தீங்கும் பையுளும் பிறவு மெல்லாம்
போவது பொருளோ தோற்றப் புணரியும் பிழைத்தீர் அன்றே. ......
16(சீர்செய்த கமல)
சீர்செய்த கமலத் தோனைச் சிறைசெய்து விசும்பி னோடும்
பார்செய்த வுயிர்கள் செய்த பரஞ்சுடர் நும்மை யெல்லாஞ்
சூர்செய்த சிறையின் நீக்கத் தொடர்ந்திவண் உற்றான் என்றால்
நீர்செய்த தவத்தை யாரே செய்தனர் நெடிது காலம். ......
17(சங்கையில் பவங்கள்)
சங்கையில் பவங்கள் ஆற்றுந் தானவர் செறிந்த மூதூர்
இங்கிதின் அறிஞர் செல்லார் எம்பிரான் அருளி னால்யான்
அங்கணம் படர்வோர் என்ன அகமெலிந் துற்றேன் ஈண்டே
உங்களை யெதிர்த லாலே உலப்பிலா உவகை பூத்தேன். ......
18(என்றலும் மகிழ்ச்சி)
என்றலும் மகிழ்ச்சி எய்தி இந்திரன் மதலை யாங்கள்
வன்றளைப் படுமுன் போனார் மற்றெமைப் பயந்தோர் அன்னோர்
அன்றுதொட் டின்று காறும் ஆற்றிய செயலும் அற்றால்
ஒன்றிய பயனும் யாவும் உரைமதி பெரியோ யென்றான். ......
19(வீரனங் கதனை)
வீரனங் கதனைக் கேளா விண்ணவர் கோமான் தொன்னாள்
ஆரணங் குடனே காழி யடைந்ததே எழுவா யாகச்
சீரலை வாயில் அந்நாட் சென்றிடு காறு முள்ள
காரிய நிகழ்ச்சி யெல்லாங் கடிதினிற் கழறி னானே. ......
20(மேதகு தடந்தோள்)
மேதகு தடந்தோள் வீரன் விண்ணவர் கோமான் செய்கை
ஓதலுஞ் சயந்தன் கேளா உரைசெய்வான் அன்னை தன்னைத்
தாதையை யடிகள் தன்னைச் சண்முகத் தனிவேற் செங்கை
ஆதியை யெதிர்ந்தால் ஒத்தேன் ஐயநின் மொழிகேட் டென்றான். ......
21(இறைதரும் அமரர்)
இறைதரும் அமரர் தம்மோ டிந்திரன் புதல்வன் றன்னை
அறிவரில் அறிவன் கண்ணுற் றறுமுகம் படைத்த அண்ணல்
மறையிடை வதிந்த நுங்கள் வன்சிறை மாற்றும் வைகல்
சிறிதிவண் இருத்தி ரென்று பின்னருஞ் செப்பு கின்றான். ......
22(தன்னிகர் இன்றி)
தன்னிகர் இன்றி மேலாய்த் தற்பர வொளியா யாரும்
உன்னரும் பரமாய் நின்ற ஒருவனே முகங்க ளாறும்
பன்னிரு புயமுங் கொண்டு பாலகன் போன்று கந்தன்
என்னு மோர்பெயரும் எய்தி யாவருங் காண வந்தான். ......
23(பங்கய முகங்கள்)
பங்கய முகங்கள் ஆறும் பன்னிரு புயமுங் கொண்டே
எங்கடம் பெருமான் போந்த ஏதுமற் றென்னை என்னில்
செங்கண்மா லுந்தி பூத்தோன் சிறுமையும் மகவான் துன்பும்
உங்கடஞ் சிறையும் நீக்கி உலகெலாம் அளிப்பக் கண்டாய். ......
24(சிறுவிதி வேள்வி)
சிறுவிதி வேள்வி நண்ணித் தீயவி நுகர்ந்த பாவம்
முறைதனில் வீரன் செற்று முற்றவு முடிந்த தில்லை
குறைசில இருந்த ஆற்றாற் கூடிய துமக்கித் துன்பம்
அறுமுகப் பெருமான் அன்றி யாரிது நீக்கற் பாலார். ......
25(தாட்கொண்ட கமல)
தாட்கொண்ட கமல மன்ன சண்முகத் தெந்தை வேலாற்
காட்கொண்ட கிரியி னோடு தாரகற் கடந்த பூசல்
தோட்கொண்ட மதுகை சான்ற சூர்முதல் களைய முன்னம்
நாட்கொண்ட தன்மையன்றோ நறைகொண்ட அலங்கல் தோளாய். ......
26(காலுறக் குனித்து)
காலுறக் குனித்துப் பூட்டிக் கார்முகத் துய்ப்ப ஓர்செங்
கோலினுக் குண்டி யாற்றார் குணிப்பிலா அவுணர் யாரும்
மாலினுக் கரிதாம் அண்ணல் மாமகன் கரத்திற் கொண்ட
வேலினுக் கிலக்க தில்லை விடுப்பது மிகைய தன்றே. ......
27(வாரிதி ஏழும்)
வாரிதி ஏழும் எண்ணில் வரைகளும் பிறவுங் கொண்ட
பாருடன் உலகீ ரேழும் படைத்தபல் லண்டம் யாவும்
ஓரிறை முன்னம் அட்டே உண்டிடும் ஒருவன் செவ்வேல்
சூரனை அவுண ரோடுந் தொலைப்பதோர் விளையாட் டம்மா. ......
28(சுறமறி அளக்கர்)
சுறமறி அளக்கர் வைகுஞ் சூரபன் மாவின் மார்பில்
எறிசுடர் எஃகம் வீசி இருபிள வாக்கின் அல்லால்
சிறையுளீர் மீள்கி லாமை தேற்றியும் பொருநர் செய்யும்
அறநெறி தூக்கி ஒற்றா அடியனை விடுத்தான் ஐயன். ......
29(ஆளுடை முதல்வன்)
ஆளுடை முதல்வன் மாற்றம் அவுணருக் கிறைவன் முன்போய்க்
கேளிதென் றுரைப்பன் அற்றே கிளத்தினுங் கடனாக் கொள்ளான்
மீளுவன் புகுந்த தெல்லாம் விளம்புவன் வினவி எங்கோன்
நாளைவந் திவரை யெல்லாம் நாமற முடிப்பன் காண்டி. ......
30(நீண்டவன் தனக்கு)
நீண்டவன் தனக்கும் எட்டா நெடியதோர் குமரன் செவ்வேல்
ஆண்டிருந் தேயும் உய்த்தே அவுணர்யா வரையுங் கொல்லும்
பாண்டிலந் தேர்மேற் கொண்டு படைபுறங் காத்துச் சூழ
ஈண்டுவந் தடுதல் அன்னாற் கிதுவுமோ ராடல் அன்றே. ......
31(ஈரிரண் டிருமூன்)
ஈரிரண் டிருமூன் றாகும் இரும்பக லிடையே எங்கோன்
ஆரிருஞ் சமர மூட்டி அவுணர்தம் மனிகந் தன்னைச்
சூரொடு முடித்து நும்மைத் துயர்ச்சிறைத் தொடர்ச்சி நீக்கிப்
பேரிருஞ் சிறப்பு நல்கும் பிறவொன்று நினையல் மன்னோ. ......
32(என்றிவை பலவும் வீரன்)
என்றிவை பலவும் வீரன் இமையவர் குழாத்தி னோடுங்
குன்றெறி பகைஞன் மைந்த னுணர்தரக் கூற லோடு
நன்றென உவகை பூத்து நாமவேல் நம்பி யாற்ற
வென்றிபெற் றிடுக வென்று வீற்றுவீற் றாசி சொற்றார். ......
33(எண்டகும் ஆசி)
எண்டகும் ஆசி கூறி இந்திரன் றனது மைந்தன்
அண்டரொ டங்கை கூப்பி அளியரேந் தன்மை யெல்லாங்
கண்டனை தாதை கேட்பக் கழறுதி இவண்நீ யுள்ளங்
கொண்டது முடிக்கப் போதி குரைகழற் குமர வென்றான். ......
34(வயந்திகழ் விடலை)
வயந்திகழ் விடலை அங்கண் மற்றவர் தம்மை நீங்கிக்
கயந்தகு காவ லோர்தங் கருத்தின்மால் அகற்றி யேக
இயந்திர மன்னோர் தேறி இமையவர் குழாத்தி னோடு
சயந்தனைச் சுற்றி முன்போல் தடைமுறை ஓம்ப லுற்றார். ......
35ஆகத் திருவிருத்தம் - 4192