(அன்னது சரதமே)
அன்னது சரதமே அறிதிர் ஆதலால்
இன்னமும் மொழிகுவன் இயற்று நோன்பென
முன்னுறு காசிப முனிவன் செப்பலும்
நன்னய மாயவள் நகைத்துக் கூறுவாள். ......
1(மறைதெரி முனி)
மறைதெரி முனிவநீ வாய்மை யாகிய
உறுதியை மொழிந்தனை உயர்ந்த வீடுறும்
அறிவுடை முனிவரர்க் கன்றி நாமருள்
சிறுவருக் கித்திறஞ் செப்ப லாகுமோ. ......
2(நன்பெருஞ் செல்வ)
நன்பெருஞ் செல்வமும் நவையில் கொற்றமும்
இன்பமும் அழிவிலா திருக்கும் ஆயுளும்
மன்பெருஞ் சீர்த்தியும் மறுவில் வாழ்க்கையும்
அன்புடை யினையவர் அடைதல் வேண்டுமால். ......
3(காதலால் அவை)
காதலால் அவையெலாங் கடிதிற் பெற்றிட
மாதவ முனிவர வகுத்தி யென்றலும்
ஈதுகொ லோவுன தெண்ணம் நீயவர்க்
காதகும் இயல்பினை அறைதி யென்னவே. ......
4(மாயவள் தன்சிறார்)
மாயவள் தன்சிறார் வதனம் நோக்கியே
தூயவிம் முனிவரன் சொற்ற துண்மையே
ஆயினும் உங்களுக் காவ தன்றவை
நீயிர்கள் கேண்மென நெறியிற் கூறுவாள். ......
5(மாற்படு புந்தியின்)
மாற்படு புந்தியின் மறுவில் சேதனம்
பாற்படும் உயிர்க்கெலாம் பவத்தின் மாண்பயன்
நூற்படு கல்வியின் நுவல்வ ளத்தினின்
மேற்படு கின்றதில் விழுமி தில்லையே. ......
6(திருமைகொள் வள)
திருமைகொள் வளனொடு தீதில் கல்வியாம்
இருமையின் ஒன்றினை எய்தி டாதெனின்
அருமைகொள் அவ்வுயிர் அதனின் ஆற்றவும்
பெருமைய துடையது பேயின் தோற்றமே. ......
7(பிறந்தநல் லுயிர்)
பிறந்தநல் லுயிர்க்கெலாம் பெருமை நல்கிய
இறந்ததோர் பொருண்மைய திரண்டின் வன்மையும்
அறிந்தவர் தெரிவரேல் அரிய கல்வியில்
சிறந்தது திருவெனச் செப்ப லாகுமால். ......
8(சொற்றரு கலை)
சொற்றரு கலையெலாந் தொடர்ந்து பற்பகல்
கற்றவ ராயினுங் கழிநி ரப்பினால்
அற்றவ ராவரே ஆக்கம் வேண்டியே
பற்றலர் தம்மையும் பணிந்து நிற்பரால். ......
9(அளப்பருங் கல்வி)
அளப்பருங் கல்வியும் ஆக்கம் யாவையுங்
கொளப்படு தன்மையிற் குறைவு றாதவை
வளர்த்தலின் மேதக வனப்புச் செய்தலிற்
கிளத்திடின் மேலது கேடில் செல்வமே. ......
10(நூலுறு கல்வியை)
நூலுறு கல்வியை நுனித்து நாடியே
வாலறி வெய்திய வரத்தி னோர்களும்
மேலுறு திருவொடு மேவு றாரெனின்
ஞாலமங் கவர்தமை நவையுள் வைக்குமால். ......
11(அளப்பரும் விஞ்சை)
அளப்பரும் விஞ்சையே அன்றி மேன்மையும்
உளப்படு தருமமும் உயர்ந்த சீர்த்தியுங்
கொளப்படு கொற்றமும் பிறவுங் கூட்டலால்
வளத்தினிற் சிறந்தது மற்றொன் றில்லையே. ......
12(ஆக்கமிங் கொரு)
ஆக்கமிங் கொருவரால் அணுக வேண்டுமேல்
ஊக்கமுண் டாவரேல் உறுவர் அன்னது
நீக்கமில் கொள்கையின் நிற்ப ரேயெனின்
மேக்குறு பெருந்திரு விரைவின் மேவுமால். ......
13(அவ்வளம் பலவகை)
அவ்வளம் பலவகைத் தாகும் ஆங்கவை
எவ்வரும் பெறுகிலர் இயல்பின் யாவையுஞ்
செவ்விதின் நீர்பெறச் சிந்தை செய்யுமின்
உய்வது வேறிலை உறுதி யீதலால். ......
14(எங்கள்பால் நென்ன)
எங்கள்பால் நென்னலின் யாமந் தோன்றலால்
துங்கமா நிருதர்தங் கதியில் துன்னினீர்
உங்களுக் கொன்னலர் உம்பர் யாவருந்
தங்கள்தம் முயற்சியால் தலைமை பெற்றுளார். ......
15(நீவிர்கள் அனையரின்)
நீவிர்கள் அனையரின் நிவந்த கொள்கையர்
ஆவிர்கள் போலுமால் ஆக்க மெய்துவான்
மூவிரும் முயலுதிர் முயலும் பெற்றியை
ஏவிருங் கேட்கயான் எடுத்துக் கூறுகேன். ......
16(ஆனதோர் இத்திசை)
ஆனதோர் இத்திசை ஆலந் தீவெனத்
தானறை கிற்பர்இத் தரைக்கு நேரதாய்ப்
போனதோர் உத்தர பூமி யாயிடை
தானவர் நோற்றிடத் தகுவ தென்பதே. ......
17(அப்புவி யதனிடை)
அப்புவி யதனிடை ஆற்றற் கீறிலா
இப்பரி சனமொடும் ஏகி யாயிடை
ஒப்பறு குண்டமும் ஒழிந்த செய்கையும்
மெய்ப்பட இயற்றுதிர் வேள்வி செய்யவே. ......
18(காரிகொள் இந்தன)
காரிகொள் இந்தனங் கதழ விட்டுமுன்
ஆரழல் மூட்டியே அழலின் பண்டமுஞ்
சோரியும் ஊன்களும் பிறவுந் தூவியே
வீரர்கள் புரிதிரால் வெய்ய வேள்வியே. ......
19(செங்கண்மால் அயன்)
செங்கண்மால் அயன்முதல் தேவர் யாவரும்
எங்கணா யகனென இறைஞ்ச மேதகு
கங்கைவார் சடைமுடிக் கடவுட் போற்றியே
பொங்குதீ வேள்வியைப் புரிதிர் பற்பகல். ......
20(அம்மகம் புரிதிரேல்)
அம்மகம் புரிதிரேல் அருளின் முன்னுறீஇ
மைம்மலி மிடறுடை வான நாயகன்
மெய்ம்மையின் நீவிர்கள் வெஃகி யாங்கெலாம்
இம்மையின் எய்துமா றினிது நல்குமால். ......
21(மூண்டவிவ் வேள்வி)
மூண்டவிவ் வேள்வியை முயல மூவிரும்
ஆண்டுசென் றுற்றுழி அன்ன தற்கவண்
வேண்டிய பொருளெலாம் வேறு வேறதா
ஈண்டுற வுதவுவன் ஏகு வீரென்றாள். ......
22(தந்திர நெறிகளு)
தந்திர நெறிகளுந் தவறில் பான்மையும்
மந்திர முறைகளும் மற்று முள்ளவும்
இந்திர வளனுறும் இயல்பின் மூவர்க்கும்
முந்திர வுதவிய முதல்வி நல்கினாள். ......
23(இன்னதோர் காலையில் ஈன்)
இன்னதோர் காலையில் ஈன்ற மாயவள்
தன்னொடு தந்தையைத் தாழ்ந்து போற்றியே
அன்னவர் விடுத்திட அவுணர் மேலையோன்
பின்னவர் தம்மொடும் பெயர்வுற் றேகினான். ......
24ஆகத் திருவிருத்தம் - 2293