(ஏகிய காலையில்)
ஏகிய காலையில் இணையில் மாயவள்
மோகமொ டயலுற முனியை நோக்கியே
போகுவன் யானினிப் புதல்வர்ப் பேணுவான்
நீகவ லேலென நிறுவிப் போயினாள். ......
1(போதலும் முனிவரன்)
போதலும் முனிவரன் புந்தி யுள்ளுறும்
ஆதர வுந்திட அவள்பின் னேகியே
ஏதில னாமென எனைவிட் டேகுதல்
நீதிய தாகுமோ உரைத்தி நீயென்றான். ......
2(ஆயிழை புகலுவாள்)
ஆயிழை புகலுவாள் அழுங்கல் மாதவ
சேயினர் பொருட்டுனைச் சேர்ந்த தன்றியீண்
டேயது நின்னுடன் இருக்க அன்றியான்
மாயவள் அறிகென மறைந்து போயினாள். ......
3(அருவினள் சேறலும்)
அருவினள் சேறலும் அற்பு தத்தவண்
வருபொருள் யாவையும் மறைந்து போயின
வெருவரு முறைபுரி வேந்தை விட்டகல்
திருவொடு பெயர்வதோர் செல்வம் போலவே. ......
4(மாணலன் எய்திய)
மாணலன் எய்திய மாயை தன்னுருக்
காணலன் ஆகிய கமலத் தோன்மகன்
பூணலன் தெளிவினைப் பொருமி ஏங்கியே
ஆணலன் அழிவுற அழுங்கி மாழ்குவான். ......
5(வாவியுந் தடங்களும்)
வாவியுந் தடங்களும் வரையும் ஏனவுந்
தேவருங் காமுறச் செறிந்த அற்புதம்
யாவையுங் காண்கிலான் இரங்கி நின்றனன்
ஆவியில் குரம்பையன் ஆகு மென்னவே. ......
6(மைந்தன துறுதுயர்)
மைந்தன துறுதுயர் மலரின் மேவிய
தந்தைதன் உணர்வினால் தகவின் நாடியே
அந்தர நெறியில்வந் தங்கண் மேவலும்
எந்தைவந் தனன்கொலென் றெழுந்து தாழவே. ......
7(ஆசிகள் செய்துநின்)
ஆசிகள் செய்துநின் னரிய நோன்பொரீஇக்
காசிப மெலிவது கழறு கென்றலும்
பேசினன் நிகழ்ந்தன பிரமன் கேட்டுளங்
கூசினன் அவன்மனங் கொள்ளத் தேற்றுவான். ......
8(வேதமுங் கலைகளும்)
வேதமுங் கலைகளும் உணர்ந்து மேலதா
மூதறி வெய்திய முனிவ நீயொரு
மாதுதன் பொருட்டினால் மையல் எய்தியே
பேதுறு கிற்றியோ பேதை மாந்தர்போல். ......
9(கண்டதோர் நறவமே)
கண்டதோர் நறவமே காம மேயென
எண்டரு தீப்பொருள் இருமைத் தென்பரால்
உண்டுழி அழிக்குமொன் றுணர்வை யுள்ளமேற்
கொண்டுழி உயிரையுங் கொல்லு மொன்றரோ. ......
10(உள்ளினுஞ் சுட்டி)
உள்ளினுஞ் சுட்டிடும் உணருங் கேள்வியிற்
கொள்ளினுஞ் சுட்டிடுங் குறுகி மற்றதைத்
தள்ளினுஞ் சுட்டிடுந் தன்மை ஈதினால்
கள்ளினுங் கொடியது காமத் தீயதே. ......
11(ஈட்டுறு பிறவியும்)
ஈட்டுறு பிறவியும் வினைகள் யாவையுங்
காட்டிய தினையதோர் காம மாதலின்
வாட்டமில் புந்தியான் மற்றந் நோயினை
வீட்டினர் அல்லரோ வீடு சேர்ந்துளார். ......
12(நெஞ்சினும் நினை)
நெஞ்சினும் நினைப்பரோ நினைந்து ளார்தமை
எஞ்சிய துயரிடை ஈண்டை உய்த்துமேல்
விஞ்சிய பவக்கடல் வீழ்த்தும் ஆதலால்
நஞ்சினுந் தீயது நலமில் காமமே. ......
13(ஆதலிற் காமமுற்)
ஆதலிற் காமமுற் றழுங்கல் நீபுணர்
மாதரும் வஞ்சக மாயை யாகுமால்
தீதிவண் இழைத்தனை தீரத் தொன்மைபோல்
நீதவம் புரிகென நிறுவி ஏகினான். ......
14(மாறகல் நான்முகன்)
மாறகல் நான்முகன் வாய்மை தேர்தலுந்
தேறினன் மையல்நோய் தீர்ந்து காசிபன்
ஏறமர் கடவுளை இதயத் துன்னியே
வீறொடு நோற்றனன் வினையின் நீங்குவான். ......
15(ஆண்டவண் அகன்)
ஆண்டவண் அகன்றிடும் அணங்கு தன்சிறார்
மூண்டிடு தீமகம் முயலு மெல்லையில்
வேண்டிய துதவுவான் விமலற் போற்றியே
பூண்டனள் பெருந்தவம் புகரின் ஏவலால். ......
16(காசிபன் மாயை)
காசிபன் மாயையைக் கலந்த வண்ணமும்
ஆசுறும் அவுணர்கள் வந்த வண்ணமும்
பேசினம் அங்கவர் பெற்ற பேற்றினை
ஈசன தருளினால் இனியி யம்புவாம். ......
17ஆகத் திருவிருத்தம் - 2310