(நீங்கிய சூர்முதல்)
நீங்கிய சூர்முதல் நெறியின் ஏகியே
யாங்கவர் அடிதொழு தருள்செய் மேலையீர்
யாங்கள்செய் கின்றதென் இசைமின் நீரென
ஓங்கிய காசிபன் உரைத்தல் மேயினான். ......
1(உறுதிய தொன்றி)
உறுதிய தொன்றினை உணர்த்து கின்றனன்
அறைகழல் மைந்தர்காள் அரிய மாதவ
நெறிதனில் மூவிரும் நிற்றிர் அன்னதன்
முறைதனை வாய்மையான் மொழிவன் கேண்மினோ. ......
2(சான்றவர் ஆய்ந்திட)
சான்றவர் ஆய்ந்திடத் தக்க வாம்பொருள்
மூன்றுள மறையெலாம் மொழிய நின்றன
ஆன்றதோர் தொல்பதி ஆரு யிர்த்தொகை
வான்றிகழ் தளையென வகுப்பர் அன்னவே. ......
3(அளித்திடல் காத்திட)
அளித்திடல் காத்திடல் அடுதல் மெய்யுணர்
ஒளித்திடல் பேரருள் உதவ லேயனக்
கிளத்திடு செயல்புரி கின்ற நீலமார்
களத்தினன் பதியது கழறும் வேதமே. ......
4(பற்றிகல் இல்லதோர்)
பற்றிகல் இல்லதோர் பரமன் நீர்மையை
இற்றென உரைப்பரி தெவர்க்கும் என்பரால்
சொற்றிடும் வேதமுந் துணிகி லாஅவன்
பெற்றியை இனைத்தெனப் பேச வல்லமோ. ......
5(மூவகை யெனுந்த)
மூவகை யெனுந்தளை மூழ்கி யுற்றிடும்
ஆவிகள் உலப்பில அநாதி யுள்ளன
தீவினை நல்வினைத் திறத்தின் வன்மையால்
ஓவற முறைமுறை உதித்து மாயுமே. ......
6(பாரிடை உதித்திடும்)
பாரிடை உதித்திடும் பாரைச் சூழ்தரு
நீரிடை யுதித்திடும் நெருப்பில் வாயுவில்
சீருடை விசும்பிடைச் சேரும் அன்னவைக்
கோரிடை நிலையென உரைக்கற் பாலதோ. ......
7(மக்களாம் விலங்கு)
மக்களாம் விலங்குமாம் மாசில் வானிடைப்
புக்குலாம் பறவையாம் புல்லு மாம்அதில்
மிக்கதா வரமுமாம் விலங்கல் தானுமாந்
திக்கெலாம் இறைபுரி தேவும் யாவுமாம். ......
8(பிறந்திடு முன்செலும்)
பிறந்திடு முன்செலும் பிறந்த பின்னர்மெய்
துறந்திடுஞ் சிலபகல் இருந்து துஞ்சுமால்
சிறந்திடு காளையில் தேயும் மூப்பினில்
இறந்திடும் அதன்பரி சியம்ப லாகுமோ. ......
9(சுற்றுறு கதிரெழு)
சுற்றுறு கதிரெழு துகளி னும்பல
பெற்றுள என்பதும் பேதை நீரதால்
கொற்றம துடையதோர் கூற்றங் கைக்கொள
இற்றவும் பிறந்தவும் எண்ணற் பாலவோ. ......
10(கலைபடும் உணர்ச்சி)
கலைபடும் உணர்ச்சியுங் கற்பும் வீரமும்
மலைபடு வெறுக்கையும் வலியும் மற்றது
மலைபடு புற்புத மாகும் அன்னவை
நிலைபடு பொருளென நினைக்க லாகுமோ. ......
11(தருமமென் றொரு)
தருமமென் றொருபொருள் உளது தாவிலா
இருமையின் இன்பமும் எளிதின் ஆக்குமால்
அருமையில் வரும்பொரு ளாகும் அன்னதும்
ஒருமையி னோர்க்கலால் உணர்தற் கொண்ணுமோ. ......
12(தருமமே போற்றி)
தருமமே போற்றிடின் அன்பு சார்ந்திடும்
அருளெனுங் குழவியும் அணையும் ஆங்கவை
வருவழித் தவமெனும் மாட்சி எய்துமேல்
தெருளுறும் அவ்வுயிர் சிவனைச் சேருமால். ......
13(சேர்ந்துழிப் பிறவி)
சேர்ந்துழிப் பிறவியுந் தீருந் தொன்மையாய்ச்
சார்ந்திடு மூவகைத் தளையும் நீங்கிடும்
பேர்ந்திடல் அரியதோர் பேரின் பந்தனை
ஆர்ந்திடும் அதன்பரி சறைதற் கேயுமோ. ......
14(ஆற்றலை யுளதுமா)
ஆற்றலை யுளதுமா தவம தன்றியே
வீற்றுமொன் றுளதென விளம்ப லாகுமோ
சாற்றருஞ் சிவகதி தனையும் நல்குமால்
போற்றிடின் அனையதே போற்றல் வேண்டுமால். ......
15(அத்தவம் பிறவியை)
அத்தவம் பிறவியை அகற்றி மேதகு
முத்தியை நல்கியே முதன்மை யாக்குறும்
இத்துணை யன்றியே யிம்மை இன்பமும்
உய்த்திடும் உளந்தனில் உன்னுந் தன்மையே. ......
16(ஆதலிற் பற்பகல்)
ஆதலிற் பற்பகல் அருமை யால்புரி
மாதவம் இம்மையும் மறுமை யுந்தரும்
ஏதுவ தாகுமால் இருமை யும்பெறல்
ஆதியம் பகவன தருளின் வண்ணமே. ......
17(ஒருமைகொள் மாதவ)
ஒருமைகொள் மாதவம் உழந்து பின்முறை
அருமைகொள் வீடுபே றடைந்து ளோர்சிலர்
திருமைகொள் இன்பினிற் சேர்கின் றோர்சிலர்
இருமையும் ஒருவரே எய்தி னோர்சிலர். ......
18(ஆற்றலில் தம்முடல்)
ஆற்றலில் தம்முடல் அலசப் பற்பகல்
நோற்றவர் அல்லரோ நுவலல் வேண்டுமோ
தேற்றுகி லீர்கொலோ தேவ ராகியே
மேற்றிகழ் பதந்தொறும் மேவுற் றோர்எலாம். ......
19(பத்திமை நெறியொடு)
பத்திமை நெறியொடு பயிற்றி மாதவ
முத்திபெற் றரனடி முன்னுற் றோர்தமை
இத்துணை யெனல்அரி திருமை யும்பெறு
மெய்த்தவர் மாலொடு விரிஞ்ச னாதியோர். ......
20(பல்லுயிர் தன்னை)
பல்லுயிர் தன்னையும் மாய்த்துப் பாரினுக்
கல்லல்செய் தருந்தவம் ஆற்றி டாதவர்க்
கில்லையே இருமையும் இன்பம் ஆங்கவர்
சொல்லரும் பிறவியுள் துன்பத் தாழுவார். ......
21(அறிந்திவை உரை)
அறிந்திவை உரைப்பினும் அவனி மாக்கள்தாம்
மறங்கொலை களவொடு மயக்கம் நீங்கலர்
துறந்திடு கின்றிலர் துன்பம் அற்றிலர்
பிறந்தனர் இறந்தனர் முத்தி பெற்றிலார். ......
22(தவந்தனின் மிக்க)
தவந்தனின் மிக்கதொன் றில்லை தாவில்சீர்த்
தவந்தனை நேர்வது தானும் இல்லையால்
தவந்தனின் அரியதொன் றில்லை சாற்றிடில்
தவந்தனக் கொப்பது தவம தாகுமே. ......
23(ஆதலின் மைந்தர்)
ஆதலின் மைந்தர்காள் அறத்தை ஆற்றுதிர்
தீதினை விலக்குதிர் சிவனை உன்னியே
மாதவம் புரிகுதிர் மற்ற தன்றியே
ஏதுள தொருசெயல் இயற்றத் தக்கதே. ......
24வேறு(உடம்பினை ஒறுத்து)
உடம்பினை ஒறுத்து நோற்பார் உலகெலாம் வியப்ப வாழ்வர்
அடைந்தவர்க் காப்பர் ஒல்லார்க் கழிவுசெய் திடுவர் வெஃகும்
நெடும்பொருள் பலவுங் கொள்வர் நித்தராய் உறைவர் ஈது
திடம்பட உமக்கோர் காதை செப்புவன் என்று சொல்வான். ......
25ஆகத் திருவிருத்தம் - 1984